top of page

Anima - 30

அணிமா-30


அங்கே கூடி இருந்த அனைவருமே நெகிழ்ச்சியில் உறைந்துபோயிருந்தனர். அந்த உறைநிலையை ஜெய்தான் கலைத்தான் தன் உரை மூலமாக.


"கிட்டத்தட்ட இருபது நாளுக்கு முன்னாடி இராத்திரி தூங்கும்போது சில மர்ம நபர்களால இந்தக் குழந்தைக் கடத்தப்பட்டாள்!


புடவை முந்தானைய குழந்தையோட கைல முடிச்சுப் போட்டுட்டுதான் தூங்கினதா, சரசம்மா விசாரணையின்போது எங்கிட்ட சொன்னாங்க!


குழந்தை காணாம போனதைப் பத்தி அவங்க இதுவரைக்கும் ஒரு புகார் கூட கொடுக்கலங்கறதுதான் வேதனையான விஷயம்!


எங்க டிபார்ட்மென்ட் மூலமா இந்தக் குழந்தையோட பெத்தவங்கள தேட பலவித முயற்சிகள் எடுத்துட்டு இருந்தோம்.


இந்த நயன்தாரா பாப்பா வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூடப் பேசாத சூழ்நிலைல எங்களுக்கு ஒரு க்ளூ கூடக் கிடைக்கல!


அந்தச் சமயத்துலதான் மலர் மேம் இந்தப் பாப்பாக்கூட பேசும்போது இவ பதில் பேச ஆரம்பிச்சா!


தொடர்ந்து அவங்கப் பேச்சுக் கொடுத்துப் பார்த்ததுல இவ சொன்ன சில அடையாளங்கள வெச்சு, இவளோட பேரன்ட்ஸ் பிளாட்ஃபார்ம்ல வசிக்கறவங்களோன்னு ஒரு சந்தேகம் வந்தது.


அவங்கள கண்டுபிடிக்க எங்க டிப்பார்ட்மென்டுக்கு மிஸ்டர் ஜெகதீஸ்வரன் அதிகம் உதவி செஞ்சிருக்கார்.


ஒரு சில்ரன் கேர் என்.ஜி.ஓ கூட கூட்டு சேர்ந்து அவரோட இரசிகர்கள் மற்றும் சில தனியார் துப்பறியும் நிறுவனங்களையும் இந்தத் தேடுதல் வேட்டைல ஈடுபடுத்தி இவ்வளவு குறுகிய நாட்களுக்குள்ள இந்தக் குழந்தைய அவளோட பெத்தவங்ககிட்ட சேர்த்திருக்கார். அவருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்!" என்று அனைத்தையும் விளக்கி முடித்தான் ஜெய்.


"இன்னும் சில குழந்தைகள் பெற்றோரிடம் சேர்க்கப்படாமல் இருக்காங்களே அவங்க நிலைமை என்ன?" என்று ஒரு நிருபர் கேள்வி எழுப்ப,


"அந்தக் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்துல பத்திரமா இருக்காங்க. அவங்க எல்லாருமே வேறு மாநிலத்தைச் சேர்ந்த குழந்தைகள். அவங்களைப் பற்றின தகவல்களை எல்லா இடங்களுக்கும் அனுப்பியிருக்கோம். இதைப் பத்தி மேற்கொண்டு எதுவும் சொல்ல இயலாத நிலைமைல இருக்கேன். ஸோ, கைன்ட்லி எக்ஸ்க்யூஸ் மீ!" என்று கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து நயன்தாரா மற்றும் அவளது பெற்றோருடன் அங்கிருந்து சென்றான் ஜெய்.


அவன் சென்றதும் ஒரு நிருபர் ஈஸ்வரை நோக்கி "எல்லாரும் நமக்கென்னன்னு போயிட்டு இருக்கும்போது உங்களுக்கு இப்படிப்பட்ட ஒரு மிகப்பெரிய செயல்ல ஈடுபடற ஆர்வம் எப்படி வந்தது?" என்று கேட்டார்.


"கண் முன்னாடி பார்த்த பிறகும் எப்படிச் சார் நம்ம வேலையை மட்டும் பார்த்துட்டுப் போக முடியும்? நம்ம நாட்டோட பொக்கிஷங்கள் சார் நம்ம குழந்தைகள்! போயும் போயும் பணத்துக்காக, அவங்களைப் பெத்தவங்க கிட்டயிருந்து பிரிச்சு உலகத்தோட ஏதோ ஒரு மூலைக்குக் கடத்தறாங்க!”


”மொழி கூடத் தெரியாத ஒரு புது இடத்துல விட்டுப் பிச்சை எடுக்க வெக்கறாங்க. கொத்தடிமைகளா நம்மளால நினைச்சுக்கூடப் பார்க்கமுடியாத வேலைல எல்லாம் ஈடுபடுத்தறாங்க! பெண் குழந்தைகளின் நிலைமை இன்னும் மோசம்.”


”ஈரான்ல நடந்த ஒரு தற்கொலை படை தாக்குதல்ல குழந்தைகளை உபயோகப்படுத்தி பாம் வெடிக்க வெச்சிருக்காங்க! இதையெல்லாம் கேள்விப்படும்போது உயிர் வரைக்கும் வலிக்குது. அப்பறம் எப்படிச் சும்மா இருக்க முடியும்?" கொதிப்புடன் வந்தன ஈஸ்வரின் வார்த்தைகள்.


"என்னதான் நீங்க ஒரு பிரபல நடிகராக இருந்தாலும், இது மாதிரி பிரச்சினைகளை உங்க ஒருத்தரால சரி செய்ய முடியுமா?" என்று மற்றொருவர் கேட்கவும்,


"தெரியல பட் முயற்சி செஞ்சா தப்பில்லைனு தோணுது! ஏன்னா நம்ம ஆட்சியாளர்களை நம்பிட்டு நாம சும்மா இருந்தா குழந்தையா காணாம போனவங்க கிழவர்களா கூடக் கிடைக்கமாட்டாங்க!" என்று சொல்லிவிட்டு,


இறுதியாக, "இதோட முதல் கட்டமா, நயன்தாரா பாப்பா மாதிரி கேட்பாரின்றி இருக்கும் குழந்தைகளுக்கு ஒரு நல்ல ஷெல்டர் ஏற்படுத்திக் கொடுக்க 'அன்னை ஜீவன்'ங்கற பேர்ல ஒரு தொண்டு நிறுவனத்தைத் தொடங்கப் போறேன்!" என்று பொதுவாக ஒரு அறிவிப்பைக் கொடுத்து தனது பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துக்கொண்டான் ஜெகதீஸ்வரன்.


அனைத்தும் முடிந்து உணவு உண்டு வீடு வந்து சேரும் வரையிலும் கூட ஏதும் பேசவில்லை அணிமாமலர். அந்த அளவிற்கு உள்ளுக்குள்ளே மொத்தமாக நெகிழ்ந்து போயிருந்தாள்.


இருவரும் அறைக்குள் நுழையவும் என்ன பேசுவது என்று புரியாமல் தயக்கத்துடன் மலர் ஈஸ்வருடைய முகத்தைப் பார்க்க, அடுத்த நொடி அவனுடைய வலிய கரங்களில் கட்டுண்டிருந்தாள் மலர்.


"என்ன மேடம் நொடிக்கு நூறு வார்த்தை பேசுவீங்க இப்ப சொல்ல ஒரு வார்த்தை கூடக் கிடைக்கலையா?" என்றான் ஈஸ்வர் கிண்டல் தொனிக்க.


அவன் மார்பினில் தலை சாய்த்தவாறு, "ஹாஸ்பிடல்ல அந்த நயன்தாரா பாப்பாவ பார்க்க போனோமே, அன்னைக்கு அவ அம்மாவைப் பார்க்கணும்னு சொல்லி அழுதப்ப, எப்படியாவது அவங்க அம்மாவைக் கண்டுபிடிக்கணும்னு தோனுச்சு. ஆனா அதை நீங்க இவ்வளவு சீக்கிரம் செஞ்சுமுடிப்பீங்கன்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கல! அதையும் தாண்டி என்னென்னவோ செஞ்சிருக்கீங்க! நீங்க உண்மையிலேயே ஹீரோதான் ஹீரோ!" என்றாள் மலர் குரல் தழுதழுக்க.


"என்னோட அதிரடி பூக்காரி இப்படிலாம் எமோஷனலா பேசினா எனக்கு ரொம்ப டவுட் வருதே? உண்மையிலேயே நீ அணிமாமலர்தானா? இல்ல வேறு யாராவது மாறி வந்துட்டாங்களா?" என்று அதற்கும் ஈஸ்வர் அவளை வாறினான்.


அதில் இயல்பு நிலைக்குத் திரும்பியவளாக மலர், "ம்ஹும் வேணா என் ஸ்டைலில் ஒரு குங்ஃபூ பன்ச் ஒண்ணு கொடுக்கட்டுமா நான் யாருன்னு ப்ரூவ் பண்ண?" என்று அதிரடியாய் கேட்க,


"நீ செஞ்சாலும் செய்வ தாயே!" என்று பயந்தவன் போல் சென்ன ஈஸ்வர் "ப்ரூவ் பண்ண நீ பன்ச்செல்லாம் கொடுக்க வேண்டாம் நச்சுன்னு ஒரு இச் கொடு அது போதும் எனக்கு!" என்றான் கிறக்கமாக.


அதன் பிறகு இச்-சத்தத்தைத் தவிர வேறு எச்சத்தமும் கேட்கவில்லை அங்கே!


***


அடுத்த நாளே பதினைந்து நாள் படப்பிடிப்பிற்கென பிரான்ஸ் சென்றான் ஈஸ்வர். சகோதரியுடன் இருக்கவேண்டுமென பிறந்த வீட்டிற்கு வந்திருந்தாள் ஜீவிதா பிரபாவுடன்.


அவர்களைப் பார்த்த நொடி முதல், "சித்தி! சித்தப்பா!" என்று அவர்களுடன் பசைப் போட்டது போல் ஒட்டிக்கொண்டான் ஜீவன். அதனால்தானோ என்னவோ ஈஸ்வரைக்கூட அதிகம் தேடவில்லை அவன்.


ஆனால் அவனுக்குப் பதிலாக ஈஸ்வரின் நினைவால் அதிகம் பாதிக்கப்பட்டது மலர்தான். அவன் இல்லாமல் அவளது நாட்கள் மிகவும் வெறுமையாகிப்போனது போல் தோன்றியது அவளுக்கு.


வழக்குகள் காரணமாக அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்ல இயலவில்லை ஈஸ்வரால்.


சூடாமணி வெங்கடேசன் இருவரும் மலருடைய ராசா, ரோசாவை அழைத்துக்கொண்டு சுற்றுலாவிற்குச் சென்றிருந்தனர். அதனால் பிறந்த வீட்டிற்கும் செல்லவில்லை மலர்.


வீட்டில் அனைத்து வேலைகளுக்கும் ஆட்கள் இருந்ததால் என்ன செய்வதென்று புரியாமல் தவித்துதான் போனாள்.


ஈஸ்வர் இல்லாமல் இரண்டு நாட்களைக் கூட கடத்த முடியவில்லை அவளால். இந்த நிலையில் இருந்து தப்பிக்கும் பொருட்டு, ஜெய்யை நேரில் காண அவனுடைய அலுவலகத்திற்கு வந்திருந்தாள் மலர்.


அவனுடைய பிரத்தியேக அறையில் குளிர்பானத்தைப் பருகியவாறே, "என்ன மேடம்! உங்க ஹீரோ ஊர்ல இல்லன்னதும்தான் எங்க ஞாபகமெல்லாம் வருதா உனக்கு?" என்ற ஜெய்,


"போடி போய் வேற வேலை இருந்தா பாரு. நான் ரொம்ப பிஸி. உன்கூடல்லாம் பேச எனக்கு டைம் இல்ல" என்றான் கடுப்பாக.


அதில் முகம் மாறியவள், "ஏண்டா நீ கூட என்னைப் புரிஞ்சிக்காம எல்லாத்துக்கும் நான் மட்டும்தான் காரணம்கற மாதிரி பேசற. நீயும்தான பிஸி. இப்ப கூட நான்தான உன்னைப் பார்க்க வந்திருக்கேன்" என்று சொல்லிவிட்டு,


“நான் ஈஸ்வர் மாமாவுக்குத் தெரியாம என்னென்னவோ செஞ்சு வெச்சிருக்கேன். எல்லாத்தையும் ஒண்ணு விடாம அவர் கிட்ட சொல்லிட்டேன் ஜெய். ஆனா அதைப் பத்தி ஒரு வார்த்தை கூட கேக்கல. இருந்தாலும் சுபா அண்ணிய நினைச்சு அவங்க மனசுக்குள்ள ரொம்பவே வருத்தம் இருக்கும். உட்கார்ந்து ஆறுதலா பேசலாம்னா இன்னும் ரெண்டு கொலைகள், நயன்தாரா பாப்பா விவகாரம், ஷூட்டிங்ன்னு நேரமே கிடைக்கல. போறாத குறைக்கு அவங்கபாட்டுக்கு பிரான்ஸ்ல போய் உக்காந்துட்டு இருக்காங்க" என இயலைமையுடன் புலம்பித்தள்ளும்.


அவளது குரல், அவளுடைய மனதில் இருக்கும் ஆதங்கத்தை வெளிப்படுத்தவும், தான் மலரிடம் பேசிய விதத்தை நினைத்து, நொந்து கொண்டான் ஜெய்.


உடனே, அவளுடைய மனதை மாற்றும் பொருட்டு, "ஹேய் இப்ப அங்க மார்னிங் சிக்ஸ் தான ஆகியிருக்கும்? நீ அண்ணா கிட்ட பேசினியா?" என்று கேட்ட ஜெய், அவளுடைய பதிலை எதிர்பார்க்காமல், தனது மடிக்கணினியில் ஈஸ்வரை, வீடியோ கால் மூலமாக அழைத்தான்.


திரையில், காஃபி கோப்பையைக் கையில் ஏந்தியவாறு ஈஸ்வர் தோன்றவும், "குட் மார்னிங்ணா! எப்படி இருக்கீங்க?" என்று அவனை நலம் விசாரித்தான் ஜெய்.


"டூ டேஸ் முன்னால எப்படி இருந்தேனோ, அப்படியேதான் இருக்கேன் நோ சேஞ்ஜஸ்" என்று சொல்லிச் சிரித்தான் ஈஸ்வர்.


"ஆனா, உங்கள பார்க்காம ரெண்டு நாளைக்குள்ளாகவே இங்க ஒருத்தி, துரும்பா இளைச்சிப் போயிட்டாண்ணா!" என்று கிண்டலாகச் சொல்லியவாறே, கணினியை அவள்புறமாகத் திருப்பினான் ஜெய்.


அவனை அடிக்க நீண்ட கையைச் சூழ்நிலை கருதி இழுத்துக்கொண்டவள், "அப்படிலாம் இல்ல ஹீரோ! இவன் சும்மா நம்மள கலாய்க்கறான்" என்று நாணத்துடன் மலர் சொல்லவும்,


அதை ரசித்தவாறு, "நீ விடு ஹனி! மாமா நேர்ல வந்ததும் அவனை நல்லா கவனிக்கறேன்!" என்று சொல்லி தனது சட்டையின் கையை மடித்துவிட்டுக்கொண்டான் ஈஸ்வர்.


"அடப்பாவிகளா! புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேருமா சேர்ந்து போலீஸ்காரனையே மிரட்றீங்களா?" என்று சிரித்தான் ஜெய்.


"அதெல்லாம் இருக்கட்டும் எதுக்கு கூப்பிட்ட ஜெய் எனி திங் இம்பார்ட்டண்ட்? மலர் வேற இங்க இருக்கா?" என்று தீவிரமாக ஈஸ்வர் கேட்கவும்,


"நத்திங் அண்ணா! அவ சும்மா என்னைப் பார்க்கதான் இங்க வந்தா" என்று சொல்லிவிட்டு,


"உங்களுக்கு ஷூட்டிங் இல்லையா?" என்று கேட்டான் ஜெய்.


"இல்ல ஜெய்! இங்க செம்ம மழை. ஸோ! ஷூட்டிங்கை கேன்சல் பண்ணிட்டாங்க. ஜிம்முக்குப் போலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்" என்றான் ஈஸ்வர்.


அப்பொழுது மலரின் முகத்தைப் பார்த்தவன், "நீ ஃபீல் பண்ணிட்டு இருந்த இல்ல பேசாம வீட்டுக்கு போய் அண்ணாவோட பேசு" என்று மலரிடம் சொன்ன ஜெய், ஈஸ்வரிடம் மலர் புலம்பியவற்றைச் சொன்னான்.


அதற்குள் குழந்தைகள் காப்பகத்திற்குச் செல்ல நேரமாகிவிட கிளம்ப வேண்டிய கட்டாயத்தில், "நீ வேணா, வீட்டுக்குப் போய் கண்டினியூ பண்ணு மலர், நான் அப்பறமா பேசறேன்?" என்று ஜெய் சொல்லவும்,


மலரிடம் தொடர்ந்து பேசும் எண்ணம் இருந்தாலும் அதை மறைத்துக்கொண்டு, "பரவாயில்ல ஜெய், நீ மலரையும் உன்னோட அழைச்சிட்டுப் போ. அவளும் அந்தக் குழந்தைகளைப் பார்க்கணும்னு சொல்லிட்டு இருந்தா" என்று ஈஸ்வர் சொல்லிவிட, ஜெய்யுடன் அந்தக் காப்பகத்திற்குச் சென்றாள் மலர்.


அங்கே இருந்த சிறுவர்களின் உடல்நிலைப் பற்றி அந்த விடுதியின் காப்பாளரிடம் விசாரித்துவிட்டு நேரில் சென்று அவர்களைச் சந்தித்தனர் இருவரும்.


முன்பு இருந்ததை விடக் கொஞ்சம் தெளிவான மனநிலையிலிருந்தனர் அந்தச் சிறுவர்கள். அதிலிருந்த இரண்டு சிறுவர்கள் ஒரிஸாவைச் சேர்ந்தவர்கள் என்பதும் ஒரு சிறுமி ஆந்திராவைச் சேர்ந்தவள் என்பதும் மட்டுமே தெரிந்த நிலையில், அவர்களுடைய இருப்பிடம் பற்றிய எந்தத் தகவலையும் கண்டுபிடிக்கமுடியவில்லை.


ஏனென்றால் அவர்கள் காணாமல்போனது பற்றிக் காவல்துறைக்கு எந்தப் புகாரும் இதுவரை பதிவாகவில்லை.


அந்தக் குழந்தைகளுக்கும் அவர்களுடைய கிராமத்தின் பெயரைச் சொல்லத் தெரியவில்லை.


இதுபோன்ற காரணங்களை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுதான் இந்த நிலையில் இருக்கும் குழந்தைகள் அதிகம் கடத்தப்படுகிறார்கள் என்பதைச் சொன்னான் ஜெய்.


அதன் பின்பு, அங்கே இருக்கும் தெலுங்கு பேசுபவரை அருகில் வைத்துக்கொண்டு கூகுள் உதவியுடன் ஆந்திர எல்லையில் அமைந்திருக்கும் பின்தங்கிய கிராமங்களின் பெயர்களை ஒவ்வொன்றாக மலர் ஒரு சிறுமியிடம் சொல்லிக்கொண்டே வரவும், 'ஸ்ரீபுரம்' என்ற பெயரை அவள் சொல்லும்பொழுது ஆமாம் என்பதுபோல் தலை அசைத்தாள் அந்தக் குழந்தை.


அதன்பின் அவர்களுடைய அலுவலகம் வந்த ஜெய் 'ஸ்ரீபுரம்' கிராமத்தை உள்ளடக்கிய காவல்நிலையத்தைத் தொடர்புகொண்டு பேச, அந்தக் குழந்தையைப் பற்றிய தகவல்கள் ஏதும் அங்கே கிடைக்கவில்லை.


ஆனால் அதே ஊரில், ஒரு வருடத்திற்கு முன்பாக, 'டிப்பு' என்ற பதிமூன்று வயது சிறுவன் காணாமல் போனதற்கான புகார் அளிக்கப்பட்டிருப்பதும் அவன் கிடைக்காத துயரத்தில் அவனுடைய அன்னை சக்ரேஸ்வரி என்பவர் காவல்நிலையத்தின் வாயிலில் தீயிட்டுத் தற்கொலைக்கு முயன்றதும் அவனுக்குத் தெரியவந்தது.
Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page