top of page

Anbenum Idhazhgal Malarattume 26

அணிமா-26


அன்றே சுபாவைப் பெங்களூருக்கு அழைத்து வந்து விட்டான் அசோக்.


சில தினங்களுக்குள்ளாகவே, அவளுடைய கைப்பேசி எண், வங்கிக் கணக்கு அனைத்தையும் புதிதாக மாற்றினான்.


சமூக வலைத் தளங்கள் எதையும் உபயோகிக்க விடாமல், அவளைத் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தான்.


எந்த ஒரு நிலையிலும் அவள் பிறந்த வீட்டினரைத் தொடர்பு கொள்ளக் கூடாது என்பதில் தெளிவாக அவன் இருப்பது நன்றாகவே புரிந்தது அவளுக்கு.


அவளை மிரட்டி திருமணம் செய்து, இந்த நிலையில் கொண்டுவந்திருந்தாலும், தொடர்ந்த நாட்களில், அவளிடம் அன்பாகவே நடந்துகொண்டான்.


வீட்டின் நினைவில், அவள் வாடுவதைக் கண்டும் காணாமல் இருந்துவிடுவான். மற்றபடி, அவளது தேவைகள் அனைத்தையும் கவனித்துச் செய்தான். அதேபோல், அவளிடமான அவனது எல்லா தேவைகளையும், நன்றாகவே நிறைவேற்றிக்கொண்டான், கெஞ்சலும் மிஞ்சலுமாக!


அவர்கள் நிறுவனத்தில், முன்பே பேசி, அவள் வேலையில் தொடர வழி செய்தவன், ஒரே மாதத்தில், இருவரும் ஒன்றாக அமெரிக்கா செல்வதற்கும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தான்.


அனைத்தும் முன்பே திட்டமிட்டு அவன் செய்திருப்பது நன்றாகவே புரிந்தது சுபாவுக்கு.


மொத்தத்தில் அசோக்குடைய விரல் நுனியில், நூலில் ஆட்டி வைக்கும் பொம்மையாய் அவள் மாறிப்போயிருந்தாள், சிந்திக்காமல் அவள் செய்த தவறுகளால்!


***


அமெரிக்கா வந்த பிறகு, இருவருக்கும் ஒரே இடத்தில் வேலை, கணிசமான வருமானம், அந்த நாட்டிற்குத் தகுந்தாற்போன்ற ஒரு வாழ்க்கை முறை என நாட்கள் சென்றுகொண்டிருந்தன.


அசோக்கைப் பொறுத்த மட்டும், அவன் அந்த வாழ்க்கை முறையை, ரசித்து அனுபவித்து வாழ்ந்து கொண்டு இருந்தான் என்றுதான் சொல்லவேண்டும்.


ஆனால் சுபாவிற்கோ, மகிழ்ச்சி, துக்கம், என எந்த ஒரு உணர்வும் இன்றி, இயந்திர கதியில் வாழ்க்கை அவளை இழுத்துச்செல்வதுபோல் தோன்றியது.


ஆறு மாதங்கள் கடந்த நிலையில், அசோக் அறியாமல், அலுவலகத்திலிருந்து, சுஜாதாவைத் தொடர்பு கொண்டு, ஆவளுடைய குடும்பத்தினர் பற்றிய விவரங்களை அறிந்து சொல்லும்படி, சுபா கேட்டுக்கொள்ள, சில தினங்களில் அவளைத் தொடர்பு கொண்டாள் சுஜாதா.


அவர்களுடைய குடும்பம், கிராமத்தை விட்டு சென்னைக்கே சென்றுவிட்டதையும், மூன்று மாதங்களுக்கு முன் அவளுடைய அப்பா பரந்தாமன் இறந்து போன தகவலையும் சொன்னவள், அசோக்கின் மிரட்டலுக்குப் பணித்து, அவளுடைய திருமணம் நடந்த தினம் அவளிடம் அப்படிப் பேசியதாகவும் சொன்னாள்.


அதற்கு பிராயச்சித்தமாகவே, இந்த தகவல்களை அறிந்து சொன்னதாகக் கூறியவள், அவளுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதால், மேற்கொண்டு தன்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும், அவள் சுபாவிற்கு உதவியது தெரிந்தால், அவன் ஏதாவது பிரச்சனை செய்வான் என்பதினால், இந்த விஷயங்கள் அசோக்கிற்குத் தெரிய வேண்டாம் என்றும் சொல்லி முடித்துக் கொண்டாள் சுஜாதா.


பட்ட துயரங்களுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போன்ற தந்தையின் மரணம் பற்றிய செய்தியில், மனம் உடைந்து போனாள் சுபா.


தேற்றுவதற்கு ஆள் இன்றி, அவள் தனிமைபட்டுபோய் இருக்க, அந்த நிலையிலிருந்து அவளை மீட்பதற்காகவே அவள் கருவில் வந்து உரு கொண்டான் ஜீவன்.


குழந்தை பிறந்ததும், ஜீவிதாவின் பெயரையும், ஜெகதீஸ்வரனின் பெயரையும் இணைத்து ஜீவனேஸ்வரன் என்று குழந்தைக்கு பெயர் வைத்தாள் சுபா.


சுபா கருவுற்றதற்கோ, அல்லது குழந்தை பிறந்ததற்கோ, எதற்குமே பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை அசோக். அலுவலக நண்பர்களின் கேள்விகளுக்குப் பயந்தே, அவளை எச்சரிக்கையுடன் பார்த்துக்கொண்டான். அதை எதிர்பார்த்தே இருந்ததால், அது அவளைப் பெரிதும் பாதிக்கவில்லை.