top of page

Anbenum Idhazhgal Malarattume! 14

Updated: Apr 6, 2023

அணிமா-14


அந்த ஒலிப்பதிவைக் கேட்கவும் மலரின் தூக்கம் மொத்தமும் காணாமல் போனது. அடுத்த நொடியே ஜெய்யைக் கைபேசியில் அழைத்தவள், "ஜெய்! என்னடா நடக்குது இங்க? என்ன இதெல்லாம்? இப்படி சேலஞ்ச் பண்ணி பேசியிருக்கானே யாரு அவன்?" என்று கேள்விகளாய் அடுக்க,


"பிசியா இருக்கேன் மலர். டைம் கிடைக்கும்போது வீட்டுக்கு வந்து நேர்லயே சொல்றேன். எங்கேயும் போயிடாத" என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான் ஜெய்.


அவள் முகம் கழுவி வரவேற்பறைக்கு வரவும், அங்கே உட்கார்ந்து தொலைக்காட்சியில் ஏதோ நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்த ஜீவிதா மலரிடம் தயக்கத்துடன், "ஏன் மலர் உடனே பதில் சொல்லாம எங்க எல்லாரையும் கஷ்ட படுத்தற? எங்க அண்ணா அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கமாட்டாங்க. அவங்க உன்னைக் கல்யாணம் செய்துக்கணும்னு கேட்டாங்கன்னா அவங்களுக்கு அந்த அளவுக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்குன்னு அர்த்தம்! புரிஞ்சுக்கோ மலரு" என்று நெகிழ்ச்சியுடன் சொல்லி முடிக்க, மெல்லிய புன்னகை அரும்பியது மலரின் முகத்தில்.


ஏனோ அவளால் ஜீவிதவை மரியாதையுடன் அண்ணி என்ற இடத்தில் நிறுத்த முடியாமல் ஒரு சிறிய பெண்ணாக மட்டுமே நினைக்க முடிகிறது.


அவள் அக்கறையுடன் வீட்டில் அனைவரின் மனநிலையையும் பிரதிபலிப்பது போல் பேசவும், மனதினில் அவளை மெச்சியவாறு, "ப்ச், இப்ப அதைப் பத்தின பேச்சு வேண்டாம் ப்ளீஸ்”என மென்மையாகவே தவிர்த்தவள்,


“எனக்கும் கூட உன் மேல கொஞ்சம் வருத்தம் இருக்கு. நீ படிச்ச படிப்பை உபயோகமா பயன்படுத்தாம இப்படி வீணாக்கறது எனக்கு முதல்ல இருந்தே பிடிக்கல. நானே உன்னை ஏதாவது யூஸ்ஃபுல்லா செய்ய சொல்லணும்னு நினைச்சேன். நீ இப்ப கன்ஸீவா இருக்கறதுனால சொல்லாமலேயே விட்டுட்டேன். உனக்கு வரிசையா நல்ல விஷயமெல்லாம் காத்துட்டு இருக்கு. அதனால இந்த நிலைமைல தேவை இல்லாத கவலையெல்லாம் இழுத்து விட்டுக்காம, உன் பாப்பாவை பத்தியும் உன் ஃபியூச்சர் கேரியரையும் பிளான் பண்ணு" என்று அவளுக்குப் பதில் சொல்லி விட்டு அங்கிருந்து சென்றாள் மலர். அவளது பொறுமையான பதிலைக் கேட்டு வியந்துதான்போனாள் ஜீவிதா.


பிறகு காஃபியை கலந்து எடுத்துக்கொண்டு மாடித் தோட்டத்திற்குச் சென்றாள் மலர். அதை ஒட்டி இருக்கும் ஒரு சிறிய அறைக்குள் சென்றவள் அங்கே தூசிப் படிந்திருந்த அவளது கீ-போர்டை சுத்தம் செய்யத் தொடங்கினாள். அதே நேரம் அவளது கைபேசியும் அழைத்தது.


அதில் செங்கமலம் பாட்டியின் எண்ணைப் பார்த்தவள் ‘இவங்க ஏன் இப்ப கால் பன்றாங்க?’ என்ற கேள்வி மேலெழ அந்த அழைப்பை ஏற்றாள்.


"ஓய் தேவசேனா நீ இப்ப ஃபிரீயா" என்று பாட்டி தோரணையுடன் கேட்க, "உங்களுக்கு என்ன ராஜமாதா சிவகாமி தேவின்னு நினைப்பா, என்னை இப்படி மிரட்டுறீங்க" என்ற அவளுடைய கிண்டலான பதிலில்,


"அட பார்றா இவள, நாம சாதாரணமா பேசினதையே மிரட்டுறதா சொன்னால் உண்மையிலேயே மிரட்டினா என்ன சொல்லுவா" என்று சொல்லி சத்தமாகச் சிரித்த பாட்டி, "அதெல்லாம் இருக்கட்டும் உன்னால நம்ம வீட்டுக்கு வரமுடியுமா? உங்கிட்ட கொஞ்சம் நேர்ல பேசணும். முக்கியமா!" என்றார் ஒரு அன்பு கலந்த கோரிக்கையாக.


அதில் நெகிழ்ந்துபோய், "ஓகே பாட்டிம்மா நான் கொஞ்ச நேரத்துல கிளம்பி அங்கே வரேன்" என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள் மலர்.


ஈஸ்வரின் பாட்டி அழைத்ததை அவள் சூடாமணியிடம் தெரிவிக்க, "லஞ்ச் சாப்பிட்டுட்டு, முதல் வேலையாகப் போய் பாட்டியைப் பாரு" என்றார் சூடாமணி.


"இல்ல மா, எனக்குப் பசிக்கல. நான் பாட்டியைப் பார்த்துட்டு வந்து சாப்பட்றேன்" என்று சொல்லிவிட்டு எளிமையாகக் கிளம்பி ஈஸ்வரின் வீட்டிற்குச் சென்றாள்.


***


ஈஸ்வரின் வீட்டிற்குள் மலர் நுழையவும், அந்த நேரத்தில் அவளை அங்கே எதிர்பார்த்திராத சாருமதி முதலில் திகைத்துப் பின் புன்னகையுடன், "வாம்மா!" என்றார் அவளை வரவேற்கும் விதமாக.


பின்பு வேலை செய்பவரை அழைத்தவர் மலருக்குப் பழரசம் எடுத்துவரச் சொல்ல, "பரவாயில்லை மாமி! இப்ப எதுவும் வேண்டாம்" என்று சொல்லிவிட்டு "பாட்டி எங்க இருக்காங்க?" என்று மலர் கேட்கவும்,


"இப்பதான்மா சாப்பிட்டுட்டு அவங்க ரூமுக்குப் போனாங்க" என்று மதி சொல்லிக்கொண்டிருக்கும்போதே காலை தாங்கிப் பிடித்தவாறே அங்கே வந்த பாட்டி அவளது கையைப் பற்றி கிட்டதட்ட இழுத்துக்கொண்டு அவரது அறைக்குள் சென்றார். அதை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார் மதி.


உள்ளே நுழைந்ததும் அவரது கட்டிலில் போய் உட்கார்ந்த பாட்டி அங்கே போடப்பட்டிருந்த இருக்கையில் மலரை உட்காரச் சொல்லிவிட்டு, "எனக்கு மூட்டுவலி கொஞ்சம் அதிகமா இருக்கு. இல்லன்னா நானே அங்க வந்திருப்பேன்" எனக்கூற,


"ஐயோ பாட்டி, நீங்க பெரியவங்க என்னை இப்படி உரிமையோட நீங்க கூப்பிட்டதுதான் சரி" என்றாள் மலர்.


அதில் புன்னகைத்தவர், "எல்லா சூழ்நிலையும் உனக்கு புரியுதுதான் மலர். ஆனாலும் ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கற?" என்று பாட்டி கேட்க, மறுத்து மலர் ஏதோ சொல்ல வரவும், "நான் சொல்ல வந்ததைச் சொல்லி முடிச்சிடுறேன். நீ அப்பறமா பேசு" என்று சொல்லித் தொடர்ந்தார்.


"என்ன காரணத்துக்கா வேணாலும் நீ உன் முடிவைச் சொல்லாம தள்ளிப்போடலாம். ஆனா என்னை சரோஜாவை மாதிரி வயசானவங்களுக்கெல்லாம் இந்த மாதிரி விஷயத்துல பொறுமை கொஞ்சம் கம்மி. அதுவும் என்னைப் பொறுத்தவரை அது ரொம்ப ரொம்ப கம்மி. ஏன்னா நாங்க அந்த அளவுக்கு சுபானு, அதுதான் ஈஸ்வரோட ஒட்டிட்டு அவன் கூடவே பிறந்தவ, அவ விஷயத்துல கொஞ்சம் அதிகமாவே அடி வாங்கிட்டோம். அது இந்தச் சின்ன பொண்னு வாழ்க்கையைப் பாதிக்குமோன்னுதான் எனக்குக் கவலையா இருந்தது" என்று ஜீவிதவைப் பற்றிக் குறிப்பிட்டவர்,


"ஆனா அதுவும் உங்க அண்ணனுக்கு அவளைக் கட்டிக் கொடுத்ததால தீர்ந்துப் போச்சு. ஈஸ்வர் எல்லாத்தையும் சமாளிச்சு மேல வந்தவன். அதனால அவனைப் பத்தி நான் அதிகம் கவலப்படல. ஆனா உனக்குத் தெரிஞ்சிருக்க நியாயமில்ல, இப்ப நீ இப்படி இழுத்தடிக்குறதால அதிகம் பாதிக்கப்பட்டிருக்கறது சாருமதிதான்.


அவளுக்குதான் நேரம் காலம் பார்க்காம உழைச்சிட்டே இருக்குற மகனைப் பத்தி அதிக டென்ஷன். நானு உங்க பாட்டி எல்லாரும் மனசுல இருக்கறத கொட்டி தீர்த்துட்டுதான் மறு வேலை பார்ப்போம். ஆனா மதி அப்படி இல்ல. மனசுலேயே வெச்சிட்டு துன்பப்படுவா.


ரெண்டு நாளா அவ வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூட யார்கிட்டயும் பேசல. அவளுக்கு பீ.பி வேற கொஞ்சம் கூடிப் போச்சு! டாக்டரம்மா வீட்டுக்கே வந்து பார்த்துட்டுப் போனாங்க.


என்னை மாதிரி வயசானவங்களுக்கெல்லாம் வாழற ஒவ்வொரு நாளும் வரம் மாதிரி. உங்களுக்கு இருக்கற கால அவகாசமெல்லாம் எங்களுக்கு கிடையாது இல்லையா?


அதனால நீ உடனே இந்தக் கல்யாணத்துக்குச் சரின்னு சொன்னா அதைவிட வேற நிம்மதி சந்தோஷம் எதுவும் எங்களுக்குக் கிடையாது. இதை சரோஜா, சூடா அப்பா எல்லாருக்கும் சேர்த்துதான் சொல்றேன்.


நீ எந்தத் தப்பான வழிக்கும் போகமாட்டேன்னு எனக்குத் தெரியும். அதனால நீ இப்ப இருக்கற மாதிரியே கல்யாணத்துக்குப் பிறகும் இருக்கலாம். அதாவது வைகுண்ட ஏகாதசி அன்னைக்கு, நடு ரோட்டுல ஒருத்தனை அடிச்சுத் துவைச்சியே அது மாதிரி" என்று சொல்லி சிரித்தவர், உன்னை யாரும் இங்க தடுக்கமாட்டாங்க" என்று தனது மனதில் இருப்பதையெல்லாம் சொல்லி முடித்தார்.


தும்பைப் பூவென வெளுத்த கூந்தல், வயோதிகத்தின் சுருக்கங்களுடன் கூடிய நெற்றி, அதில் வட்டமாய் வைத்திருக்கும் செந்தூரம், பழுப்பேறிய கண்கள் எனப் பருத்தியினால் ஆனப் புடவை உடுத்திக் கையெடுத்துக் கும்பிடும் படியான தோற்றத்தில் இருக்கும் அந்த முதிய பெண்மணி வெளிப்படையாக அனைத்தையும் அவளிடம் சொல்லி அவளது சம்மதத்தைக் கேட்கவும் மனம் நெகிழ்ந்து போனது மலருக்கு.


ஒரு துன்பமான சூழலில் மகனையும் இழந்து, அதிலிருந்து மீண்டு, பேரன் பேத்தி மருமகள் என இவர்களுக்காகச் சிந்திக்கும் அந்த முதியவரின் மனதை சங்கடப் படுத்த இயலாமல் மறுத்து ஏதும் கூறத் தோன்றாமல், "உங்க இஷ்டம் பாட்டி" என்று ஒரே வார்த்தையில் முடித்துக்கொண்டாள் மலர்.


அடுத்த நொடி பாட்டியின் முகம் மகிழ்ச்சியில் பிரகாசித்தது. ‘நம்ம முடிவைச் சொன்னா பத்து நாளுக்குள்ள கல்யாணத்தை முடிக்கச் சொல்லி பாட்டி அவசரப் படுத்துவாங்க. என்னால மறுத்து பேச முடியாது’என்ற ஈஸ்வரின் வார்த்தைகள் மனதில் தோன்ற, தானும் அதே நிலையில் இருப்பதை நினைத்து சிரிப்பு வந்தது மலருக்கு. அதை அவள் அடக்க முற்படவும், "என்னன்னு சொன்னா நானும் உன் கூட சேர்ந்து சிரிப்பேன் இல்ல" என்று பாட்டி சிரித்துக்கொண்டே சொல்லவும்,


'என்ன சொல்வது?' என்று ஒரு நொடி திகைத்த மலர், "இப்படி சென்டியா பேசி என்னை கவுத்துடீங்களே பாட்டி" என்று சொல்லவும், "எப்படி நீ என் பேரனை கவுத்தியே அப்படியா?" என்று வம்புக்கு வந்தார் பாட்டி.


"ஐயோ! ராஜமாதா ஆளை விடுங்க" என்றவள் நினைவு வந்தவளாக "ஆமாம்... நான் அன்னைக்கு அந்த க்ரிமினலை அடிச்சது உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று மலர் கேட்கவும், அன்று நடந்த அனைத்தையும் சொன்ன பாட்டி, "நான் முதல்ல உன்ன ஒரு பையன்னுதான் நெனச்சேன். ஆனா அது பொண்ணுன்னு ஈஸ்வர் அடிச்சு சொன்னான். அது நீதான்னு ஒரு நாள் பேச்சு வாக்குல தமிழ்தான் உளறிட்டான்!" என்று முடித்தார் பாட்டி.


ஈஸ்வரும் அன்று அவளுடைய அதிரடியைப் பார்த்தான் என்பது தெரியவரவும் மிகவும் வெட்கமாய் போனது மலருக்கு. ‘எனக்கு உன்னைப் பிடிக்க உனக்கே தெரியாத பல காரணம் இருக்கு’என்று ஈஸ்வர் சொன்ன வார்த்தைகளும் அவள் நினைவிற்கு வர, 'பல காரணங்களில் இதுவும் ஒரு காரணம் போலும்' என்று எண்ணி வியந்தாள் மலர்.


அதன் பிறகு மருமகளை அழைத்த பாட்டி, "மதிம்மா வசந்தி கிட்ட சொல்லி ஈஸ்வருக்குப் பிடிச்ச பாதாம் அல்வாவைச் செய்யச் சொல்லு!" என்று சொல்ல,


அதில் முகம் பிரகாசிக்க, "என்ன மாமி விசேஷம்?" என்று அதீத எதிர்பார்ப்புடன் மதி கேட்கவும், "அடுத்த முகூர்த்தத்துலயே உன் பிள்ளைக்கு கல்யாணம். இதை விட வேற விசேஷம் இருக்க முடியுமா!?" என்று பாட்டி பதிலுக்குக் கேட்கவும் மகிழ்ச்சியுடன் சமையலறை நோக்கி ஓடினர் மதி.


***


வீதியிலே நிறுத்தியிருந்த ஜெய்யின் அலுவலக வாகனத்தைப் பார்த்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள் மலர்.


மலரால் ஈஸ்வர் வீட்டினில் எல்லோருக்கும் தொற்றியிருந்த மகிழ்ச்சி அவள் அவர்களுடைய வீட்டிற்கு வந்து சேரும் முன்பாகவே அங்கே வேகமாகப் பரவியிருந்தது. அதன் அத்தாட்சியாக சூடாமணி செய்யும் கேசரியின் மணம் வீட்டின் வாயிலியேயே அவளை வரவேற்றது.


போர்டிகோவில் நின்று கொண்டிருந்த ஜீவிதா மலர் பைக்கை நிறுத்துவதைப் பார்த்து அவளை நோக்கி ஓடி வர, "ஐயோ! எதுக்கு இப்படி அவசரமா ஓடி வர!" என்று மலர் அவளைக் கடிந்து கொள்ளவும்,


மலரை அணைத்துக்கொண்ட ஜீவிதா "தேங்க்ஸ் மலர் ரொம்ப தேங்க்ஸ்!" என்று நெகிழ்ச்சியுடன் சொல்ல,


"ஆஹான்! நான் உங்க பாட்டி சொன்னதுனாலதான் இதுக்கு சம்மதிச்சேன். அதனால அவங்களுக்குச் சொல்லு உன் தேங்க்ஸ்ஸ!" என்று சொல்லிவிட்டு,


"ஓய், உங்க அண்ணாவை கல்யாணம் செஞ்சுக்க போறேன். அதனால இனிமேல் மரியாதையோட என்னை அண்ணின்னே கூப்பிடு என்ன ஜீவி!" என்று கெத்தாகச் சொல்லிவிட்டு உள்ளே சென்றாள் மலர்.


உள்ளே நுழைந்தவுடன் சூடாமணி, வெங்கடேசன், சரோஜா பாட்டி, தாத்தா, பிரபா என அனைவரும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்து அவளை ஒரு வழி செய்தனர்.


அதைப் பார்த்துக்கொண்டிருந்த ஜெய், "இங்க ஒருத்தன் வந்து அரைமணி நேரமா உட்கார்ந்துட்டு இருக்கானேன்னு யாருக்காவது அக்கறை இருக்கா?" என்று அலுத்துக்கொள்ள,


சுடச்சுடக் கேசரியைக் கொண்டு வந்து அவனிடம் கொடுத்த சூடாமணி "உனக்குதான் கண்ணு முதல்ல. மத்தவங்களுக்கெல்லாம் பிறகுதான்" என்று சொல்ல,


"பார்ரா" என்ற மலர் தனக்கும் ஒரு கிண்ணத்தில் கேசரியை எடுத்துவந்து, "ஜெய்! மாடிக்குப் போறேன் வா!" என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.


"ஐயோ இவ மாறவே மாட்டாளாடா!" என்று ஜெய்யிடம் அலுத்துக்கொண்டார் சூடாமணி.


"சான்ஸே இல்ல அத்தை, சான்ஸே இல்ல" என்று நக்கலாகச் சொல்லி சிரித்தவாறே மலரைப் பின் தொடர்ந்து சென்றான் ஜெய்.


"சொல்லு ஜெய்! என்ன நடந்தது. உனக்கு எப்படி அந்த ஆடியோ கிடைச்சுது?" என்று தெரிந்துகொள்ளும் ஆவலுடன் கேட்டாள் மலர். நடந்தவற்றை அவளிடம் விளக்கத் தொடங்கினான் ஜெய்.


அந்தக் கொலைகள் தொடர்பாக ஏதாவது துப்பு கிடைக்காதா என ஜெய் மற்றும் அவனது குழுவினர் அனைவரும் அலைந்து கொண்டிருக்க, அதே போன்ற மற்றொரு கொலை வண்டலூர் கேளம்பாக்கம் பகுதியில் நடந்திருப்பதாக முந்தைய நள்ளிரவு வேளையில் அவர்களுக்குத் தகவல் வந்தது.


ஜெய் அவனது குழுவினருடன் அங்கே விரைய, காருடன் பாதி எறிந்த நிலையில் ஒரு ஆண் பிணம் அங்கே இருந்தது. முன்னமே அந்தப் பகுதியின் காவல்துறை ஆய்வாளர் அங்கே வந்திருந்தார். அந்த காரிலோ அந்த இறந்து கிடந்தவரிடமோ எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. மோப்ப நாயின் உதவியுடன் அந்தப் பகுதி முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட, அந்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளியிருந்த பேருந்து நிறுத்தத்தில் ஒரு சிறுவன் மயக்க நிலையில் பாதுகாப்பாக படுக்கவைக்கப் பட்டிருக்க அவனுக்கு அருகில் நவீன இரக கைப்பேசி ஒன்று இருந்து.


அவன் அங்கே இருக்கும் அரசுப் பள்ளியில் படிக்கும் சிறுவன். அருகில் உள்ள ஊனமாஞ்சேரி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவன். இரு தினங்களுக்கு முன்பு பள்ளிச் செல்வதாக கிளம்பிச் சென்றவன் பள்ளிக்கும் செல்லாமல் வீட்டிற்கும் திரும்பாமல் காணாமல் போயிருந்தான்.


தினக்கூலியாக வேலை செய்யும் அவனது பெற்றோர் பிள்ளையைக் காணாமல் முந்தைய தினம்தான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர். அவனைத் தேடும் பணியில் இறங்கியிருந்தது காவல்துறை.


ஜெய்யிடம் அனைத்தையும் சொல்லி முடித்தார் அந்தப் பகுதியின் காவல் துறை ஆய்வாளர். அதன் பின் அந்தச் சிறுவனின் பெற்றோருக்குத் தகவல் கொடுத்துவிட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


பிறகு ஜெய் அந்தக் கைபேசியை ஆராய அது இரு தினங்களுக்கு முன்பு இறந்துபோன ஸ்ரீ துர்கா என்ற பெண்ணுடையது என்பது தெரியவந்தது, அதில் பதிவாகியிருந்த அவளது படத்தின் மூலமாக.


அதில்தான் அந்தக் கொலைகாரன் அவனது குரலைப் பதிவு செய்திருந்தான். அதனைத் தொடர்ந்து துறை ரீதியான நடவடிக்கைகள் அனைத்தும் முடிய அடுத்த நாள் காலை வரை ஆனது. பிறகுதான் மலருக்கு அந்த ஒலிப்பதிவை அனுப்பினான். அனைத்தையும் மலரிடம் சொல்லி முடித்தான் ஜெய்.


"எனக்கு என்னவோ இது சாதாரண கேஸா தெரியல மலர். குழந்தைகள் கடத்தலுக்கும் செத்தவனுக்கும் தொடர்பு இருக்கும் போல இருக்கு. செத்தவன் யாரும் நல்லவனா இருக்க வாய்ப்பே இல்ல. அதே மாதிரி கொலைகாரன் கெட்டவனா இருக்க கொஞ்சம் கூட வாய்ப்பே இல்ல. அவன் ஏதோ பெரிய அளவுல பாதிக்கப்பட்டிருக்கான்" என்றான்.


அவன் முகத்தையே யோசனையுடன் பார்த்தவள், "அவன் நல்லவனா இருக்கற பட்சத்துல நீ என்ன செய்ய போற ஜெய்?" என்று தீவிரமாகக் கேட்கவும், "நீயே சொல்லேன்!" என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்.


"நான் இந்த கேஸ்ல மாட்ட கூடாதுன்னு எவ்ளோ ட்ரை பண்ண. அதே மாதிரி இவனுக்கும் ஹெல்ப் பண்ணு ஜெய்!" என்றாள் மலர் மனதிலிருந்து.


"அவனை அப்படியே விட்டாலே போதும் மலர், பல பேர் மாட்டுவான். அதனால எல்லாத்தையும் அப்படியே வேடிக்கை பார்க்கப் போறேன்.


இது வரைக்கும் மேலிடத்து ப்ரெஷர்ல எதுவும் செய்ய முடியாம வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன். இனிமேல் என்னால செய்ய முடிஞ்சாலும் சும்மா வேடிக்கை பார்க்கப் போறேன்" என்றான் ஜெய் மனநிறைவுடன்.


அதே நேரம் மலருடைய கைப்பேசி இசைக்கவே அவள் அதை எடுத்து பார்க்கவும் முழு மதி போல் இருந்த அவளது முகம் இளம் சூரியனைப் போல் சிவந்தது.


அதைக் கண்டுகொண்டவன் 'முழு மதி அவளது முகமாகும்' என சத்தமாக சீழ்க்கை அடித்துக்கொண்டே அங்கிருந்து கீழே இறங்கிச்சென்றான்.



0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page