Aalangattimazhai - 20
- Krishnapriya Narayan
- 5 days ago
- 6 min read
20. வருள் மழை
(வருள் மழை என்பது மிக மெல்லியதாகக் காற்றில் அலைந்து பெய்து, நிலத்தில் தேங்கும் தன்மை கொண்ட ஒரு வகை மழையாகும். இது தூறலை விட மென்மையாகவும், பெரிய மழைத் துளிகள் இல்லாமல், தொடர்ந்து காற்றில் மிதந்து வருவதாகவும் இருக்கும்.)
“ஒரு டூர் போனோமா, சாமி கும்பிடோமான்னு ஒரே ஒரு மாசம் கூட முழுசா நிம்மதியா இருக்க முடியல. மேல மேல சிக்கல் மேல மேல பிரச்சன. எந்த நேரத்துல உன் கரிநாக்கால இவள புள்ள பெத்துக்காதன்னு சொன்னியோ, அப்படியே நடந்துருச்சு. விஷ நாக்கு” எனச் சரமாரியாக்க வர்ஷணியைத் திட்டிக் கொண்டிருந்தார் சித்ரா.
“அம்மா, அவள விடுமா. ஏதோ தெரியாம ஒரு வார்த்தை சொல்லிட்டா, அதையே இப்ப வரைக்கும் புடிச்சு தொங்கிட்டு இருக்க நீ. என்னோட நேரம் சரி இல்லன்னா இவ என்ன செய்வா” எனத் தங்கைக்குப் பரிந்து வந்தாள் ரஞ்சனி.
“ம்கும்… உன் நேரம் மட்டுமா சரி இல்ல, நம்ம குடும்பத்துல எல்லாருக்குமே நேரம் சரி இல்ல” எனத் தங்கள் அறைக்குள் போய் புகுந்துகொண்டார் சித்ரா. ரஞ்சனியின் முகமே செத்துவிட்டது.
அம்மா பேசுவது அர்த்தமற்றது எனப் புரிந்தாலும், அக்காவைப் பார்த்து வர்ஷிணிக்கு மனம் தாங்கவில்லை. உண்மையில் அன்று அவள் பேசிய வார்த்தை மிக மிகத் தவறானதுதான். இதெல்லாம் ஒரு தனி மனித உணர்வுகள் சம்பந்தப்பட்ட நாசூக்கான விஷயம். அதைக் காயப்படுத்தியிருக்கக் கூடாது. இதிலெல்லாம் தலையிடுவதற்கு யாருக்குமே உரிமை இல்லை. தலையிடுவது அறமும் இல்லை. முதிர்ச்சியற்று அறியாமல் சொல்லியிருந்தாலும், மிகவும் குற்ற உணர்ச்சி கொண்டாள்.
அக்கா, ஸ்ரீதர் யாரிடம் பிரச்சனை என்றாலும் பாதிக்கப்படப்போவது அக்கா மட்டுமே. ஸ்ரீதருக்கு இதனால் பெரிதாக பாதிப்பு ஏற்படாது என்று தோன்றியது. அதுவும் சிக்கல் அக்காவிடம் இருந்தால் அவ்வளவுதான். பெரும் பூகம்பமே வெடிக்கும். இதற்கு எப்படித் தீர்வு காண்பது என்றுதான் அவளின் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.
பொழுது புலர்ந்தது, இருண்டது. ஒவ்வொரு நாளும் நத்தை போல ஊர்ந்தது. குடும்பத்தில் ஒருவராலும் நிம்மதியாக உண்டு உறங்க முடியவில்லை. புயலுக்கு முன் வரும் அமைதி போன்று அப்படி ஒரு அமைதி. எந்நேரமும் வெடிக்கத் துடிக்கும் எரிமலையின் குமுறல். அப்படி இப்படி என்று, பிரச்சனை ரஞ்சனியிடம்தான் என்பதைச் சொல்லிக் கொண்டு மருத்துவ அறிக்கையும் வந்தது.
எதையும் மூடி மறைக்க வழியின்றி, ஜெகன், சித்ரா, தனம், ஸ்ரீதர், கிருஷ்ணா, வர்ஷிணி உள்ளிட்ட ஒட்டுமொத்தக் குடும்பமும் மருத்துவர் மிருதுளாவின் கன்சல்டன்சி அறை வாசலில் கூடியிருந்தது. கிருஷ்ணாவையும் ஸ்ரீதரையும் முறைப்பதைத் தவிர மிருதுளாவாலும் வேறொன்றுமே செய்ய இயலவில்லை.
ஒட்டு மொத்தக் குடும்பமும் வந்திருப்பதை அறிந்து தானே வெளியில் வந்தவள், ஸ்ரீதரும் ரஞ்சனியும் மட்டும் உள்ளே வந்தால் போதும் எனத் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டு மறுபடியும் உள்ளே சென்று விட்டாள்.
முடித்து, அவர்கள் வெளியில் வரும் வரை கொந்தளித்துக் கொண்டிருந்தார் தனம். பீதியிலிருந்தனர் சித்ராவும் வரதனும். அண்ணனிடம் குறை இருக்கக் கூடாது, மற்றபடை எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்கிற மனநிலையில் கிருஷ்ணா இருக்க, மரத்துப்போயிருந்தாள் வர்ஷிணி.
“சாரி டு சே திஸ், ரஞ்சனி. மனச திடமா வச்சுக்கோ. பிரச்சனை உன்னோட எக்லதான் இருக்கு. இது ஒரு ரேர் ஜெனிடிகல் அப்னார்மலிட்டி. உன்னோட இயற்கையான கருமுட்டையில இந்த பிரச்சனையை சரி செய்ய முடியாது. ஆனா இந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல சொல்யூஷன் இருக்கு. அதுக்கு நீங்க ரியாலிட்டிய அக்சப்ட் பண்ணிட்டா போதும்” என்று மருத்துவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ரஞ்சனியின் விழிகளில் நீர் நிறைந்துவிட்டது. உடல் அதிர்ந்து நிலைதடுமாறிப்போனாள்.
“ரஞ்சு… ரஞ்சு, ப்ளீஸ்… பதட்டப்படாத. எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம்” என ஶ்ரீதர் அவளுடைய கையைப் பிடிக்க, கிட்டத்தட்ட மயக்க நிலைக்குப் போய்க் கொண்டிருந்தாள் ரஞ்சனி. உடனே செவிலியரை அழைத்து அங்கேயே இருந்த கட்டிலில் படுக்க வைத்து அவளைப் பரிசோதித்தாள் மிருதுளா. ரத்த அழுத்தம்தான் கூடிப்போயிருந்தது. அதை சமன் செய்ய ஒரு ஊசியை செலுத்திவிட்டு, “இவ இப்ப கொஞ்ச நேரம் அப்சர்வேஷன் ரூம்ல இருக்கட்டும். நார்மலுக்கு வந்த அப்புறம் மத்ததை டீட்டெயிலா பேசிக்கலாம்” என்றாள் ஸ்ரீதரிடம்
“சிஸ்டர், வீல் சேர் கொண்டு வரச் சொல்லுங்க?” என்று சொல்ல, “பரவாயில்ல அண்ணி, நான் மெதுவா நடந்தே போயிடுறேன்” என முணுமுணுத்தாள் ரஞ்சனி.
பிறகு செவிலியர் கூட வர, ஸ்ரீதர் அவளைத் தாங்கிப் பிடித்து வெளியில் அழைத்துவந்தான். பதற்றமும் பயமும் சேர்ந்த கலவையான உணர்ச்சியுடன் மொத்த குடும்பமும் ஸ்தம்பித்துப்போய் பார்க்க, “ஒன்னும் இல்ல, டென்ஷன்ல கொஞ்ச நாளாவே சரியா சாப்பிடாம வீக் ஆகிட்டா. லேசா மயக்கம் வந்துருச்சு. யாரும் பயப்பட தேவையில்ல” என்று விளக்கம் சொல்லிவிட்டு அங்கேயே அருகிலிருந்த அறைக்கு அவளை அழைத்துப் போய் படுக்க வைத்தான்.
பின்னோடே ஓடிவந்த குடும்பத்தினரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை மிருதுளா. ஸ்ரீதருடனும் எதுவும் பேச முடியாமல்போக எல்லோருக்கும் கலவரம். வர்ஷிணிக்கோ, அக்காவின் நிலைமையே, சிக்கல் என்ன என்பதைச் சொல்லாமல் சொன்னது.
சோதனைக் குழாய் முறை கருத்தரித்தல் ஒன்றே தீர்வு என்பதை அவள் ஏற்கனவே கணித்திருந்த்தாள். அதற்கும், வேறு யாரோ ஒரு பெண்ணிடமிருந்து கருமுட்டையை தானமாக பெறவேண்டிய கட்டாயம்தான். இது தெரிந்தால் யார் யார் என்னென்ன ஆட்டம் ஆட போகிறார்களோ என உள்ளுக்குள்ளே பதைத்தது. நல்லவேளை, பிரச்சனை ஶ்ரீதரிடமிருந்திருந்தால் இன்னும் சிக்கலாகிப் போயிருக்கும் என்றும் ஆறுதல் பட்டுக்கொண்டாள்.
சில நிமிட ஓய்வில் ரஞ்சனி தெளிவு பெற, சொல்ல வேண்டிய விஷயத்தைக் கட்டாயம் சொல்லியே தீர வேண்டிய நிலை மிருதுளாவுக்கு. இருவரையும் அந்த அறையிலேயே சென்று சந்தித்துப் பேசினாள். ரஞ்சனி அந்த கட்டிலிலேயே படுத்திருக்க, அவளுக்கு அருகில் ஒரு நாற்காலியைப் போட்டு அமர்ந்து தான் சொல்ல வேண்டியதை சொல்லத் தொடங்கினாள்.

“பயப்படுற அளவுக்கு ஒன்னும் இல்ல, ரஞ்சனி. தெளிவா இரு. டெஸ்ட் டியூப் பேபிதான் இப்ப நமக்கு இருக்கற ஒரே ஆப்ஷன். நாம எக் டொனேஷன்க்கு போகலாம். இத்தன தடவை ஆன மாதிரி, மிஸ் கேரேஜ் ஆக வாய்ப்பே இல்ல. அந்த பயமும் இப்ப உனக்குத் தேவையில்ல. மத்தபடி குடும்பத்துக்குள்ள உன் வீட்டு ஆளுங்களும் சரி, ஸ்ரீதர் வீட்டு ஆளுங்களும் சரி, என்ன பேசினாலும் அதை புத்திக்கு கொண்டு போகாத. இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுட்டு, மனசையும் உடம்பையும் திடமா வச்சிட்டு, பாப்பாக்கு ட்ரை பண்ற வேலைய மட்டும் பாரு. நல்லதே நடக்கும்” என்றாள்.
பிறகு ஸ்ரீதரிடம் திரும்பி, “உன் வைஃப்க்கு சொன்னது தான் உனக்கும், புரிஞ்சுதா? நீ ஸ்ட்ராங்கா இருந்தா, உங்க வீட்டு ஆளுங்க இவளை எதுவும் பேச மாட்டாங்க. அதையும் நினைப்புல வச்சுக்கோ” என்று சொல்லிவிட்டு, “கவுன்சிலர மீட் பண்ணி ஃபர்தரா என்ன பண்ணலாம்னு கேட்டு தெரிஞ்சுக்கிட்டு வீட்டுக்கு கிளம்புங்க. எப்ப மென்ட்டலி பிரிப்பர் ஆகுறீங்களோ அப்ப மறுபடியும் வாங்க” என்று சொல்லி அவர்களை அனுப்பினாள்.
அறையை விட்டு வெளியில் வந்ததும் வராததுமாக ஒவ்வொருத்தரும் கேள்வி மேல் கேள்வி கேட்டு இருவரையும் குடைந்தனர். “எதுவாயிருந்தாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம்” என்று ஸ்ரீதர் சொல்ல, “யார் வீட்டுக்கு?” என்று விவகாரமாகக் கேள்வி கேட்டார் தனம்.
“மா, என்ன பேச்சு இது?” என்று கிருஷ்ணா இடை புக, “பிரச்சன இவகிட்ட இருந்தா, நாம எதுக்குடா டென்ஷனை இழுத்து விட்டுக்கணும். எதுவா இருந்தாலும் அவங்க பிறந்த வீட்டுல பார்த்துப்பாங்க” என்று கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் மொழிந்தார். கொந்தளித்துப் போனார் வரதன். அவர் ஏதும் பேசிவிடும் முன் அவர் கையைப் பற்றித் தடுத்தார் சித்ரா.
அவர் ரஞ்சனியை ஏறிட, அவளோ செய்வதறியாது கண்ணீருடன் ஸ்ரீதரைப் பார்த்தாள். இந்த சூழ்நிலையில் அவள் தங்கள் வீட்டிற்கு வந்தால் அம்மா இன்னும் நோகடிப்பார் என்பது தெரிந்து, “பரவால்ல ரஞ்சு, நீ உங்க வீட்டுக்குப் போ, பிரச்சனைய ஆற போட்டுட்டு, பொறுமையா பேசிக்கலாம்” என்றான் ஸ்ரீதர்.
‘இது என்ன உங்க வீடு எங்க வீடுன்னு மாமா இப்படி பேசுறாரு?’ என்று சுருக்கெனத் தைத்தது வர்ஷிணிக்கு.
அண்ணனிடம் குறை இல்லை என்பது புரிந்து ஒரு சிறு ஆசுவாசம்தான் கிருஷ்ணாவுக்கு. அம்மா பேசியதில் குத்தவும் செய்தது. மேலும் பரிந்து பேசி ரஞ்சனியைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துப் போனாலும் அம்மா அவரை குத்திக் கொண்டே இருப்பார் என்பதனால், “ஆமாம் அண்ணி, ஶ்ரீதர் சொல்றது சரிதான். நீங்க இப்போதைக்கு உங்க வீட்டுக்குப் போங்க. எதுவாயிருந்தாலும் பொறுமையா பேசி முடிவு செஞ்சுக்கலாம்” என்று சொல்லிவிட்டு, “ஶ்ரீதர், நீ அண்ணிய கூட்டிட்டு அவங்க வீட்டுக்குப் போ. நான் அம்மா அப்பாவ நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு போய்கறேன். நீ ரெஸ்ட் எடுத்துட்டு பொறுமையா திரும்பி வந்தா போதும். அண்ணிய இப்படியே விட்டுட்டு ஆபீசுக்கும் போகாத” என்று சொல்லிவிட்டு அம்மாவின் கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டான் கிருஷ்ணா. அட பரவாயில்லையே என்றுதான் வர்ஷிணிக்குத் தோன்றியது
சித்ராவும் வரதனும் சொல்லச் சொல்லக் கேட்காமல், மருத்துவமனையின் மூச்சுத்திணறும் சூழ்நிலையிலிருந்து அவர்களை வெளியே கொண்டுவர அனைவரையும் ஒரு உணவகத்திற்கு அழைத்துப் போனான் ஸ்ரீதர். மதிய உணவை அங்கேயே முடித்துக் கொண்டு பிறகுதான் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
அங்கே போன பிறக்கும் கூட யாரும் எந்தக் கேள்வியும் கேட்க இடம் கொடுக்காமல் ரஞ்சனியை நேராகப் படுக்கை அறைக்குள் அழைத்துக் கொண்டுபோய் கதவை அடைத்துக் கொண்டான்.
வரதன் சோர்ந்து போய் அப்படியே அமர்ந்துவிட, சித்ரா மட்டும் முணுமுணுத்துக் கொண்டே இருந்தார். மன அழுத்தம் குறையவும், தடைப்படாத உறக்கத்துக்கும் மருத்துவர் ரஞ்சனிக்கு மாத்திரைகள் பரிந்துரைத்திருந்தார். அவற்றைக் கொடுத்து அவளை அணைத்து அமைதிப்படுத்தி அவள் உறங்கிய பிறகுதான் அறையை விட்டு வெளியில் வந்தான் ஸ்ரீதர்.
வர்ஷிணி கொண்டுவந்து கொடுத்த காபியை பருகியபடி உள்ள நிலைமையை மூவருக்கும் விளக்கியவன், "ரொம்பல்லாம் கவலப் படாதீங்க. இதுதான் கடைசி முயற்சியா இருக்கும். கண்டிப்பா சக்ஸஸ் ஆயிடும். உங்க எல்லாரோட மனக்கவலையும் தீர்ந்துடும்" என்று முடித்தான்.
"என்னமோ மாப்பிள, நீங்க இந்த அளவுக்கு பேசறதே அவ்வளவு ஆறுதலா இருக்கு. ஆனாலும் இதே மாதிரி உங்க அம்மா, அப்பாவும் இத நல்லபடியா புரிஞ்சிக்கணுமே" என்றார் வரதன்.
அது நடக்காத கதை என்பதை உணர்ந்து, "நான் அவங்ககிட்ட பேசிப் பாக்கறேன், மாமா” என்றான் சுரத்தே இல்லாமல்.
"இதெல்லாம் டெம்பரரி கஷ்டம்த்தான, மாமா. அக்கா நல்லபடியா கன்சீவ் ஆகி பாப்பா பொறந்துட்டா எல்லாருமே நிம்மதி ஆயிடுவாங்க. இவ்வளவு நாள் பிரச்சன எங்கன்னு தெரியாம இருந்துது. இப்பதான் தெரிஞ்சிடுச்சே. கண்டிப்பா இந்த தடவ சக்ஸஸ் ஆகும். அதனால நீங்களும் நிம்மதியா இருங்க" என்றாள் வர்ஷிணி. உண்மையில் வர்ஷிணியின் வார்த்தைகள் சித்ராவுக்கு அப்படி ஒரு தெம்பை அளித்தது. நெஞ்சை நீவிவிட்டுக்கொண்டார்.
"சரிம்மா, உங்கக்காவ கொஞ்சம் கவனமா பார்த்துக்கோ" என்றான் ஶ்ரீதர்.
"இத நீங்க சொல்லணுமா மாமா" என்று அவள் பதில் கொடுக்கவும் அவர்களிடம் விடைபெற்றுக் கிளம்பினான்.
"உன் வாய் சும்மாவே இருக்காதா, வர்ஷிணி? அவர் ஒண்ணு சொன்னா சரின்னு கேட்டுக்கிட்டாதான் என்ன? பதிலுக்கு பதில் பேசிட்டு. எவ்வளவு பட்டும் உனக்கு புத்தியே வரமாட்டேங்குது இல்ல?" என வரதன் அவளைக் கொத்தினார் .
'இதெல்லாம் சாகுற வரைக்கும் என்ன துறந்திட்டேதான் இருக்கப்போகுது. அக்காவுக்கு பாப்பா பொறந்தாக் கூட இவங்க இதை சொல்லிக் காமிசுட்டேதான் இருக்கப்போறாங்க' என சலித்துப் போனது வர்ஷிணிக்கு.
“இவ தெளிவாதான் பேசறா, நீங்க ஏன் இப்ப தேவயில்லாம இவள திட்டிட்டு இருக்கீங்க” என சித்ரா அவளுக்குப் பரிந்து வரவும், “நீயா பேசின, ரஞ்சனிதான் எழுந்து வந்துட்டான்னு ஒரு செகண்ட் நினைச்சுட்டேன்” என்றார் வரதன்.
“இவ சொன்ன மாதிரி எல்லாமெ நல்லபடியா முடிஞ்சா போதுங்க. எதுக்கு கோவப்பட்டு இவளையும் நோகடிக்கணும்” எனச் சித்ரா சொல்ல, ‘என்னடா நடக்குது இங்க, இது நிஜம்தானா’ என தன் கையையே கிள்ளிப்பார்த்துக்கொண்டாள் வர்ஷிணி.
இங்கே இவர்கள் ஒருவிதமாக நம்பிக்கையைப் பற்றிக்கொள்ள, அங்கே ஸ்ரீதரின் வீட்டிலோ வேறு விதமாக பூகம்பம் வெடித்தது.
எதையும் மறைக்க வழி இல்லாமல் ஶ்ரீதர் உள்ளதைச் சொல்லிவிட, "இதெல்லாம் வேலைக்கே ஆகாது, பேசாம அவளை டைவர்ஸ் பண்ணிட்டு, வேற ஒரு ஆரோக்கியமான பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிட்டு கொழந்த குட்டிய பெத்துக்கற வழியப் பாரு" என மல்லுக்கு நின்றார் தனம்.
வழக்கம் போல, மனைவிக்கு எதிராகச் சம்பத் திருவாய் மலர்ந்து ஒரு வார்த்தையைக் கூட உதிர்க்கவில்லை.
ஸ்ரீதர்தான், "அம்மா, நீ எப்படிம்மா இவ்வளவு பெரிய விஷயத்தை எல்லாம் படபடன்னு சொல்லி முடிச்சுடுற? குழந்தைக்காக இதுவரைக்கும் அவ எவ்வளவோ உடம்ப வருத்திக்கிட்டா. இன்னும் ஒரே ஒரு தடவ செய்ய மாட்டாளா. இல்ல ஒன்னு ரெண்டு மாசம் நீதான் கொஞ்சம் பொறுத்துப் போக மாட்டியா" எனக் கெஞ்சினான்.
"ஆமாமா... மகாராணி யாருக்காகவோ உடம்ப வருத்திகிட்டா இல்ல?" என்று நொடித்துவிட்டு, "இப்ப அது இல்ல பிரச்சன. அவ கருமுட்டையிலேயே குழந்த உருவானா நான் பொறுத்துட்டு காத்திருப்பேன். ஆனா அதுக்குதான் வழி இல்லன்னு ஆயிடுச்சே" என்றார் தனம்.
"அதனால என்ன? கருமுட்டை தானம் வாங்கி செய்யப்போறோம். அதுல என்ன குறைஞ்சு போச்சு. உனக்கு தேவை என் உயிரணுவுல ஒரு பிள்ளை. அதான் கிடைக்குதில்ல?" என்று அவன் கேட்ட கேள்விக்கு தனம் சொன்ன விளக்கம் மனித மனங்களில் மண்டிக்கிடக்கும் ஜாதிய அழுக்குக்கு ஆகச் சிறந்த உதாரணம்.
"நாம ஜாதியில நம்ம சொந்தக்கார பொண்ணு யாரும் கருமுட்டைய தானமா கொடுக்க முன் வருமா? அதுவும், அறிவான அழகான பொண்ணு! அப்படி யாராவது கிடைச்சா, அதுவும் காலங்கடத்தாம உடனே கிடைச்சா எனக்கு ஓகேடா. மிரு கிட்ட கேட்டு சொல்லு" என அவர் சொன்னதில் ஆடிப்போனது ஸ்ரீதர் மட்டுமல்ல, அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்த கிருஷ்ணாவும்தான்.
"அம்மா, என்ன சொல்ற நீ" என ஒரே குரலில் கத்திவிட்டனர் இருவரும்.
"என்னடா இப்ப தப்பா சொல்லிட்டேன்? எதுக்குடா உங்களுக்கு நம்ம சாதி சனத்துலயே, கண்ணுக்கு அழகா… தேடித் தேடி பொண்ண கட்டி வெக்கறது. நம்ம குலப்பெருமை குறையாம இருக்கணும்னுதான. நம்ம குலத்துலயே, அழகோடவும் அறிவோடவும் வாரிசு வரணும்னுதான. நான் இப்ப இப்படி நினைக்கறதுல என்ன தப்ப கண்டீங்க ரெண்டு பேரும். சோடா புட்டி கண்ணாடி போட்டுட்டு இருந்தாக்கூட பளிச்சுன்னு இருக்காளேன்னு, சொத்துப்பத்து இல்லன்னா கூட பரவால்ல, கூட பொறந்த பொறப்புன்னு ஒரு அண்ணனோ தம்பியோ ஆம்பள புள்ளன்னு ஒன்னு இல்லன்னா கூட பரவால்லந்னு இந்தப் பொண்ண உனக்கு கட்டி வெச்சதுக்கு என்ன காரணம் சொல்லு?” என அவர் தன் நிலையை விட்டு நகராமல் நின்றார்.
இதற்கு மாறி மாறி மகன்கள் கொடுத்த அறிவியல் விளக்ககங்கள் எதுவும் அவரின் செவிகளில் ஏறவே இல்லை. புரியவைக்க முயன்று தோற்று, பிறகு பார்த்துக்கொள்ளலாமென அவரவர் வேலையைப் பார்க்கப்போய்விட்டனர் இருவரும்.
ரஞ்சனி விழித்தெழுந்து ஶ்ரீதருக்குக் கால் செய்தபொழுதும்கூட, அவளிடம் பரிவாகப் பேசினானே ஒழிய, இதையெல்லாம் அவன் சொல்லிக்கொள்ளவில்லை.
ஆனால் விடுவேனா என, அடுத்த நாளே மகன்களுக்குக் கூடத் தெரியப்படுத்தாமல் கணவரைத் துணைக்கு அழைத்துக்கொண்டு ரஞ்சனியின் வீட்டில் போய் நின்றார் தனம்.
*****
(ஒரு முக்கிய விளக்கம்: சாதி அடிப்படையில் கருமுட்டை வழங்குநரை (Egg Donor) தேர்ந்தெடுப்பது இந்திய சட்டப்படி அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும் இது நடைமுறையில் உள்ளது. மேலும் தகவலுக்கு...


