top of page

Aalangattimazhai 19

௧௯. சிதறி


//காற்றில் அலைந்து, தூறலாக அல்லது சாரலாக மென்மையாகச் சிதறிப் பெய்யும் மழை ‘சிதறி’ எனப் படுகிறது.//


தனலட்சுமியும் சம்பத்தும் ஊரிலிருந்து திரும்பிவந்த பிறகு ரஞ்சனி, வர்ஷிணி, இருவரின் வாழ்க்கையிலும் உண்மையான சோதனைக் காலம் ஆரம்பித்தது.


தொடர்ந்து மீண்டும் மீண்டும் ரஞ்சனிக்குக் கருச்சிதைவு ஏற்பட்டுக் கொண்டிருப்பதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கும் பொருட்டு சிதைந்த கருவின் திசுக்கள் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தன. அதன் முடிவுகளைப் பெற்றுக் கொண்டு, நேரடியாக மருத்துவரைச் சந்திக்க, முன்பே முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. சரியாக அதற்கு முந்தைய தினம் பார்த்து சுற்றுலாவிலிருந்து திரும்பினர் கிருஷ்ணாவின் அம்மாவும் அப்பாவும்.


அதுவும் வானிலை மோசமானதன் காரணமாகக் குறித்த நாட்களுக்குச் சில தினங்கள் முன்கூட்டியே வந்துசேர்ந்தனர்.


அன்று காலை வர்ஷிணியை அழைத்துக்கொண்டு ஶ்ரீதரும், ரஞ்சனியும் மருத்துவமனைக்குச் செல்லலாம் என்றுதான் முடிவுசெய்திருந்தனர்.


பரிசோதனைகள் முடிந்து திரும்ப வந்த பிறகு ரஞ்சனியும் வர்ஷிணியுடனேயே அவர்கள் வீட்டுக்குச் சென்று சில தினங்கள் இருந்துவிட்டு வருவது என்பது பெரியவர்களின் ஒப்புதலுடன் ஏற்கனவே முடிவாகியிருந்தது.


தனமும் சம்பத்தும் பயணக்களைப்பில் ஓய்வெடுக்க, ரஞ்சனியும் வர்ஷிணியுமாக காலை மற்றும் மதியஉணவைச் செய்து முடித்துவிட்டு அரக்கப்பரக்கத் தயாராகினர்.


காலை உணவு முடிந்து கிளம்ப வேண்டியது மட்டுமே பாக்கி. பாக்கியத்தின் அரை கதவைத் தட்டி, “அத்த, சாப்பிட வரிங்களா?” என்று அழைத்துவிட்டு, ஏற்கனவே சாப்பிட அமர்ந்திருந்த கிருஷ்ணாவுக்கும் ஸ்ரீதருக்கும் பரிமாற வந்தாள் ரஞ்சனி. தனம் வந்து அமர, பின்னோடு சம்பத்தும் வந்தார். இருவரின் தட்டிலும் இட்லியை வைத்தாள் ரஞ்சனி.


“என்ன ஸ்ரீதர், ஆபிசுக்கு ரெடியாயிட்டியா” என்றார் சம்பத்.


“இல்லப்பா, ரஞ்சனிய கூட்டிட்டு டாக்டர் கிட்ட போறேன்” என்றான்.


“அதான் நாங்க வந்துட்டோமில்ல, நான் அவளை மிருது கிட்ட கூட்டிட்டு போறேன். நீ ஆபீஸ் வேலையப் போய் பாரு” என்றார் தனம்.


துணுக்குற்றான் ஸ்ரீதர். அம்மா களைப்பில் ஓய்வெடுப்பார் அதனால் இந்த விஷயத்தில் தலையிட மாட்டார் என்று எண்ணி இருந்தான். இதை எதிர்பார்க்கவில்லை. இனிமேல் அவரை சமாளிப்பது கடினம் என்று தோன்றியது. இருந்தாலும், “இல்லம்மா, ஆபீஸ்ல முக்கியமான வேல எதுவும் இல்ல. பொறுமையா போய்க்கலாம்” என்றான்.


“அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல. இந்த கோடிக்கும் அந்தக் கோடிக்கும் அலைய வேணாம். நீ ஆபீஸ் போ. நான் இவளை கூட்டிட்டு போறேன்” என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார். நிமிர்ந்து ரஞ்சனியின் முகத்தைப் பார்க்கக்கூட அவனுக்குச் சங்கடமாக இருந்தது. வேறு வழி இல்லாமல், சாப்பிட்டு முடித்து அலுவலகம் கிளம்பிப் போய் விட்டான்.


அதற்குப் பிறகு குளித்து ஆற அமர நிதானமாகத் தயாராகிக் கிளம்பி வந்தார் தனலட்சுமி. வர்ஷிணி கிளம்பி நின்றதைப் பார்த்ததும், “இவ ஏன் வரணும். மூணு பேரா போனா, போற வேல நல்லபடியா நடக்காது” என ஆரம்பித்தார் தனம்.


அவளுடைய முகம் கூம்பிப் போனது. அதை கவனித்த கிருஷ்ணா, “கிளம்பி நிக்கறவங்கள ஏன் வேணாம்னு சொல்றீங்க? அப்பாவ வேணா கூட கூப்பிட்டு போங்கம்மா, உங்க கணக்கு டேலி ஆயிடும்” என்றான்.


தனம் சொன்னால் சரி என்பதாக சம்பத் மனைவியின் முகம் பார்க்க, அவர் ஒப்புதலாகத் தலையசைத்தார். கிருஷ்ணா இப்படிக் கொக்கி போட்டதில் அவருக்கு எரிச்சல்தான் மூண்டது. ஆனாலும் மறுப்பு சொல்ல இயலவில்லை. அவன் ஏற்கனவே நல்ல மனநிலையில் இல்லை, தன்மீது அதீத அதிருப்தியில் இருக்கிறான் என்பதை அறிவார். மறுத்து ஏதாவது சொன்னால் அவ்வளவுதான், வீட்டை இரண்டாக்கி விடுவான். அந்த பயம்தான்.


சம்பத் உடனே போய் ஒரு சட்டையை மாட்டிக்கொண்டு சட்டென கிளம்பிவிட்டார். கால் டாக்ஸி பதிவு செய்து புறப்பட்டனர்.


சாலை நெரிசலால் வாகனம் ஊர்ந்து ஊர்ந்து சென்றது நேரம் போய்க் கொண்டே இருக்கப் பதற்றமானது ரஞ்சனிக்கு. “ஐயோ, அப்பாயிண்ட்மெண்ட் டைம் ஆயிடுச்சு” என முனகினாள். “ஹாஸ்பிடலுக்கு போன் பண்ணி பரவாயில்லையான்னு கேளுக்கா” என்றாள் வர்ஷிணி.


“அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல. டாக்டர் நம்ம சொந்தக்கார பொண்ணுதான், பார்த்துக்கலாம்” என்று அதற்கு முட்டுக்கட்டை போட்டார் தனம்.


“ஆமாம்மா, மிருதுளா என்னோட அக்கா மருமக. சொந்தமா பெரிய மெட்டர்னிட்டி சென்டர் வச்சு நடத்துறா. நம்ம சசியோட ரெண்டு பிரசவத்தையும் அங்க வச்சுதான் பார்த்தோம். நம்ம வீட்ல யாருக்கு உடம்பு சரியில்லைனாலும் அவகிட்டதான் மொதல்ல கன்சல்ட் பண்ணுவோம். ரஞ்சனிக்கு முதல்ல இருந்தே அங்கதான் பார்த்துட்டு இருக்கோம்” என்றார் சம்பத்.


“ஆமா, அக்கா வீட்டுப் பெரும” என்று நொடித்துக் கொண்டாலும் தனத்துக்குமே பெருமைதான்.


ஒருவழியாக மருத்துவமனைக்குப் போய் பார்த்தால், அங்கே ஒரு பேரிடி இவர்களுக்காகக் காத்திருந்தது.


நல்லவேளையாக அன்று புற நோயாளிகள் அதிகம் இருக்கவே மருத்துவர் மிருதுளா அங்கிருந்து செல்லவில்லை. இவர்கள்முறை வரவும் சம்பத்தும் வர்ஷிணியும் வெளியிலேயே தங்கிவிட, தனமும் ரஞனியும் உள்ளே சென்றனர்.


“வாம்மா ரஞ்சனி, வாங்க சித்தி” என்ற முகமனில் த்ஹொடஙி, “எப்படி இருக்கீங்க, அத்தை நீங்க ஏதோ டூர் போயிருக்கிறதா சொன்னாங்களே” என்று விசாரித்தாள் மிருதுளா..


“நல்லா இருக்கோம்மா. நேத்து சாயங்காலம் தான் டூர் முடிஞ்சு திரும்ப வந்தோம்” என்றார் தனம்.


“ஏன் சித்தி, வந்ததும் வராததுமா நீங்க ஏன் எல்லாத்தையும் இழுத்து உங்க தலையில போட்டுக்கறீங்க? புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரையும் அனுப்பி வச்சிட்டு நீங்க வீட்டுல ரெஸ்ட் எடுக்கலாம் இல்ல?” என்று மிருதுளா கேட்கும்பொழுது அவளின் குரல் மட்டுமல்ல முகமும் இறுகியது.


“அவனுக்கு இதுதான் வேலையா. சொந்தமா ஆபீஸ் வச்சு நடத்துறான் நேரா நேரத்துக்கு போகலன்னா ஒழுங்கா வேலை நடக்குமா? சும்மா இந்த உடம்ப வச்சுட்டு நானும் என்னதான் செய்யப் போறேன்?” எனத் தன் பங்குக்கு இடக்காகவே பதில் சொன்னார்.


“அக்கா அவங்க வரலைன்னா என்ன அதான் துணைக்கு அத்தை வந்திருக்காங்களே, அத விடுங்க. டெஸ்ட் ரிசல்ட் பத்தி சொல்லுங்க. பக்கு பக்குன்னு இருக்கு” என்றாள் ரஞ்சனி. மிருதுளா அருகில் இருந்த செவிலியரை அழைக்க, ரஞ்சனியின் மருத்துவக் கோப்பை எடுத்துக் கொடுத்தார் அவர்.


ரஞ்சனியைப் பரிசோதித்து அவர் எழுதியிருந்த உடல் எடை, பி.பி போன்றவற்றை ஒரு பார்வை பார்த்துவிட்டு அதிலிருந்த பரிசோதனை அறிக்கையை அவள் முன்னால் வைத்தார்.


“சாரி ரஞ்சனி, நான் சொல்லப் போறத கேடடு நீ டென்ஷன் ஆகக் கூடாது. இப்ப இருக்கிற அட்வான்ஸ் மெடிக்கல் டெக்னாலஜிஸ்ல எல்லா பிரச்சனைக்கும் ஒரு பெஸ்ட் சொல்யூஷன் இருக்கு. அதனால மனச திடமா வச்சுக்கோ” என்று எக்கச்சக்க பீடிகை போடவும் எதிரில் அமர்ந்திருந்த இரண்டு பெண்களுக்குமே பதற்றம் கூடியது.


“அய்யய்யோ என்னம்மா சொல்ற? நம்ம ஸ்ரீதருக்கு ஒரு குழந்தை பிறக்குமா பிறக்காதா?” எனப் பதறினார் தனம்.


“இதுக்குத்தான் அத்த, நீங்க ஏன் வந்தீங்கன்னு கேட்டேன். நான்தான் எந்த பிரச்சனையும் வராது சொன்னேனில்ல? இங்க இருக்கீங்களா இல்ல நான் டீடைலா ரஞ்சனி கிட்ட எக்ஸ்ப்ளைன் பண்ணி முடிக்கிற வரைக்கும் வெளியில வெயிட் பண்றீர்களா?” என்று என்று அதட்டலாகவே கேட்டாள் மிருதுளா.


“இல்லம்மா, இல்லம்மா நீ சொல்லு நான் பேசாம இருக்கேன் என்று பணிந்தார் தனம்.


“போன தடவ மிஸ் கேரேஜ் ஆன கருவோட டிஷ்யூஸ் எடுத்து ஜெனிடிக் டெஸ்டிங்க்கு அனுப்பி இருந்தோம் இல்லையா. அதோட ரிசல்ட் பார்த்ததும்தான் உனக்கு இப்படி ரிப்பீட்டடா அபார்ஷன் ஆகறதுக்கான காரணமே தெரிய வந்தது” என்று மருத்துவர் சொன்னதும் எச்சிலைக் கூட்டி விழுங்கினாள் ரஞ்சனி.


“அதாவது ஒரு குழந்தை உருவாக, அம்மா கிட்ட இருந்து 23 குரோமோசோமும் அப்பா கிட்ட இருந்து 23 குரோமோசோமும், ஆக மொத்தம் 46 குரோமோசோம்தான் இருக்கும். ஆனா சில சந்தர்ப்பத்துல இந்த 46 க்கு பதிலா 69, 92ன்னு எக்ஸ்ட்ரா செட்ஸ் ஆஃப் குரோமோசோம்ஸ் இருக்கும். 69 இருந்தா டிரைபிளாயிட் (Triploid) 92 இருந்தா டெட்ராபிளாய்ட் (Tetraploid)னு சொல்லுவோம். இது ஒரு ரேர் ஜெனிடிக் அப்நார்மலிட்டி. இப்ப உன்னோட விஷயத்துல பார்த்தா, உன்னோட அபாஷனுக்கு காரணம் டிரைபிளாயிடினு டயக்னைஸ் பண்ணி இருக்கோம்” என்று விளக்கிக் கொண்டே போனார் மருத்துவர். இடையே ஏதும் பேசக் கூட திராணி இன்றி அமர்ந்திருந்தாள் ரஞ்சனி


“கேட்கும்போதே தலையை சுத்துதே. அப்படி என்ன கோளாறு இது, மிரு? நம்ம ஸ்ரீதர் கிட்ட எந்தக் குறையும் இல்லதான?” என்று பொங்கிக் கொண்டு வந்தார் தனம்.


அவரது எண்ணப் போக்கைப் பார்த்து முகம் சுளித்தாலும், “இந்த எக்ஸ்ட்ரா செட் குரோமோசோம் எண்ணிக்கை அப்பாவோட விந்தணுவுல இருந்து வந்ததா இல்ல அம்மாவோட கருமுட்டைல இருந்து வந்ததான்னு மறுபடியும் ஒரு டெஸ்ட் பண்ணி பார்த்தா தான் தெரியும். அதனால புருஷன் பொண்டாட்டி இரண்டு பேருக்குமே டெஸ்ட் எடுக்கணும். அதுக்கான பெசிலிட்டிஸ் நம்ம ஹாஸ்பிடல்லயே இருக்கு. எழுதிக் கொடுக்கிறேன். ஸ்ரீதரையும் கிளம்பி வர சொல்லி, சாம்பிள்ஸ் கொடுத்துட்டு கிளம்புங்க. ரிசல்ட் வந்ததும் ஃபர்தரா என்ன பண்ணலாம்னு சொல்றேன்” என்று அவருக்கு பதில் கொடுத்துவிட்டு, “ரஞ்சனி, இப்போதைக்கு நீ எதையும் மனசுல போட்டு குழப்பிக்காத. உன்னோட ஹெல்த்ததான் பாதிக்கும். எதுவும் ரிசல்ட் வந்ததுக்கு அப்புறம் பாத்துக்கலாம். சரி செய்ய முடியாததுன்னு எதுவுமே இல்ல. சித்தி, நீங்களும் ஃப்ரியா விடுங்க. இப்போதைக்கு இதை பத்தி யாரும் வீட்ல பெருசா டிஸ்கஸ் பண்ணாதீங்க” என்று சொல்லி, முடித்துக் கொண்டாள் மிருதுளா. உண்மையிலேயே உடைந்துதான் போனாள் ரஞ்சனி. தனலட்சுமியின் முகமே கடினப்பட்டுப் போனது. யார் மீது குறை என்று வெளிப்படையாகத் தெரியாமல், எதுவும் சொல்ல முடியாத சூழ்நிலை உண்டானதால் மேற்கொண்டு எதுவும் பேசாமல் கமுக்கமாக அங்கிருந்து வெளியேறினார்.


மொத்தமாக துவண்டு போயிருந்த ரஞ்சனியை பார்த்ததும் வர்ஷிணி எழுந்து வந்து, “என்னாச்சுக்கா?” என்றபடி அவளின் கையை பற்றிக்கொண்டாள்.


“ஏன் ரெண்டு பேரும் ஒரு மாதிரி இருக்கீங்க? என்ன பிரச்சன? மிரு என்ன சொல்லுச்சு” என்று கேட்டார் சம்பத். “புரியாத பேரெல்லாம் சொல்லி என்னென்னவோ சொல்லுச்சு. இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு. இவ்வளவு பெரிய ஆஸ்பத்திரிய நடத்தறதுக்காக, துட்டு புடுங்க இப்படியெல்லாம் செய்யறாளுகளான்னு புரியல” என தனம் அனைத்தையும் புலம்பி தீர்க்க, மூளை அப்படியே உறைந்து போய் பேச்சே வராமல் வர்ஷிணிக்கு தொண்டை அடைத்தது.


மறுபக்கம், அவர்கள் மூவரும் பரிசோதனை அறையை விட்டு வெளியேறிய அடுத்த நொடியே உச்சபட்ச எரிச்சலுடன் கிருஷ்ணாவை அழைத்த மிருதுளா, “என்ன கிரிஷ், உண்மையிலேயே உங்களுக்கெல்லாம் அறிவிருக்கா இல்லையா” என்று கடித்துத் துப்பினாள்.


“அக்கா ப்ளீஸ், இப்படி லபலபன்னு கத்துறத விட்டுட்டு என்னன்னு முதல்ல சொல்லுங்க” என்றான் அவன் இழுத்துப் பிடித்த பொறுமையுடன்.


“ஏன்டா, ரிப்போர்ட் வாங்க பொண்டாட்டிய கூட்டிட்டு வரக்கூட முடியாத அளவுக்கு உங்க அண்ணன் ஆஃபிஸ்ல அப்படி என்ன முக்கியமான ஆணிய புடுங்கிட்டு இருக்கான்?”


“அக்கா பிளீஸ், என்ன ஆச்சு? மொதல்ல அதை சொல்லுங்க”


பரிசோதனை முடிவு பற்றி சுருக்கமாகச் சொல்லிவிட்டு, “உண்மையாவே உங்க அண்ணிய பாக்க ரொம்ப பாவமா இருந்துச்சு. உங்க அம்மாவோட ரியாக்ஷனே சரியில்ல. அவங்க வராம இருந்திருந்தா பிரச்சனய கொஞ்சம் ஆர போட்டிருக்கலாமில்ல? அவங்களுக்குத் தெரியாமயே ஃபரதர் ட்ரீட்மென்டையும் ப்ரொசீட் பண்ணி இருக்கலாம். இப்ப பாரு மொத்தமா மாட்டிகிட்டு இருக்கீங்க” என்று மிருதுளா சொன்னதும் கிருஷ்ணா தலையை பிடித்துக் கொண்டான். அந்த நொடியில், ரஞ்சனிக்காக வருந்தியதை விட, 'பிரச்சனை அண்ணனிடம் இருக்கக் கூடாது' என்கிற எண்ணமே அவனுக்குள் மேலெழுந்தது.


“இப்படியெல்லாம் நடக்கும்னு எனக்கு எப்படித் தெரியும்? சரி விடுங்க பாத்துக்கலாம்” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.

இங்கெ, ஸ்ரீதரிடம் தகவலைச் சொல்லலாம் என ரஞ்சனி கைப்பேசியை எடுக்க, “ஏன், உனக்கு வெளியில போய் இருக்கிற புள்ளையோட நிம்மதிய மொத்தமா கெடுக்கணுமா? எதுவா இருந்தாலும் அவன் வீட்டுக்கு வந்த அப்புறம் பேசிக்கலாம்” என்று சொல்லிவிட்டார் தனம்.


“என்னென்ன டெஸ்ட் குடுக்கணுமோ நீ மட்டும் கொடுத்துட்டு கெளம்பு. ஸ்ரீதர நாளைக்கு வந்து செஞ்சுக்க சொல்லலாம்” என்று அவர் முடிவாகச் சொல்லிவிட, ஒரு வார்த்தை மறுத்துப் பேசக்கூட ரஞ்சனியால் இயலவில்லை.


எல்லோரும் கால் டாக்ஸியில் வீட்டிற்குக் கிளம்பினர். வர்ஷிணின் கலங்கிய கண்கள் கலங்கினவையாகவே இருந்தன. அவளைப் பார்த்ததும் வயிற்றைப் பிசைந்தது வர்ஷிணிக்கு. “ஒண்ணும் கவலப் படாதக்கா. எல்லாத்துக்கும் இப்ப டிரீட்மென்ட் இருக்கு” என்று அவளைத் தேற்ற முயன்றாள். எதுவும் பேசாமல் தலையை வெடுக்கெனத் திருப்பிக் கொண்டார் தனம். கொஞ்சம் தண்ணீரைப் பருகி நெஞ்சை நனைத்துக் கொண்டு, “இந்த டெஸ்ட் ரிசல்ட் வரவரைக்கும் வேர வழி இல்ல, விடு. இந்த சிச்சுவேஷன்ல நான் இப்ப நம்ம வீட்டுக்கு வரல. பிளான் படி நீ சாயங்காலமே கிளம்பிடு” என்றாள் தங்கையிடம்.


அதற்கு வர்ஷிணி பதில் சொல்லும் முன்பே, “அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நீ மொதல்ல கிளம்பு. ரிசல்ட் வரும்போது திரும்பி வந்தாப் போதும்” என்றார் தனம்.


அதைக் கேட்டதும், ஶ்ரீதரை தவிக்க விட்டுச் செல்வதை எண்ணி ரஞ்சனி இன்னும் அதிகம் சோர்ந்து போனாள். அவளின் உடலில் ஏற்பட்ட நடுக்கத்தை வர்ஷிணியால் உணர முடிந்தது. இந்த சில நிமிடங்களுக்குள்ளாகவே இவ்வளவு ஆத்திரத்தைக் காண்பிக்கிறவர், ரஞ்சனியை என்ன பாடு படுத்துவார் என்று தோன்ற, எந்த நொடியும் வெடிக்கும் உஷ்ணத்திலிருந்தாள் வர்ஷிணி. அவளின் கையை பற்றி அழுத்தி அமைதியாக இருக்குமாறு ஜாடை செய்தாள் ரஞ்சனி.


ஒரு வழியாக அவர்கள் வீடு வந்து சேர்ந்தபோது ஸ்ரீதர் அங்கே இருந்தான். கிருஷ்ணாவும் அங்கேதான் இருந்தான். மிருதுளா கால் செய்ததும், உடனே ஶ்ரீதரை அழைத்துச் சொல்லிவிட்டான். அதனால்தான் அவன் வீட்டுக்கு வந்திருந்தான். ரஞ்சனியைப் பார்த்த நொடியே அவளின் நிலை அவனுக்கு நன்றாகப் புரிந்தது.


“ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வந்திருக்கோம். டெஸ்ட்டெல்லாம் வேற கொடுத்திருக்க. போ, முதலில் போய் குளிச்சிட்டு வேற துணி மாத்திட்டு வந்து சாப்பாடு எடுத்துவெய்” என அவளைப் பணித்தார் தனம்.


வர்ஷிணிக்கு சுறுசுறுவென ஏறியது. ஒரு நொடி கூட அவளை அங்கே நிற்க விடாமல் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அவர்களின் அறைக்குள் சென்றாள் ரஞ்சனி. “இங்கப் பாரு, உன் கோபத்தை எதையும் இப்ப காமிச்சிடாத. இன்னைக்கு சாயங்காலமே வீட்டுக்கு போகப்போற. அமைதியா இரு, உன்னைக் கெஞ்சி கேட்டுக்கறேன்” என்றாள் ரஞ்சனி. அப்படியே தொய்ந்து அமர்ந்து விசும்பினாள் வர்ஷிணி. அப்பொழுது உள்ளே வந்தான் ஸ்ரீதர். மிருதுவாக ரஞ்சனியின் கூந்தலை அவன் வருட, அப்படியே அவன் தோளில் சாய்ந்து தேம்பினாள்.


அவனுக்குமே கண்களில் கண்ணீர் திரண்டது. யாருக்கும் ஆறுதல் சொல்லும் நிலைமையில் யாரும் இல்லை. ஆனாலும் ஆறுதலாயிருக்க முயன்றனர். அதற்குள்ளாகவே, "ஸ்ரீதர்" என்று குரல் கொடுத்தார் தனம். “சரி, நீங்க போங்க. நான் ரெப்ரஷ் பணணிட்டு வரேன்” என்று அவனை அனுப்பி விட்டு குளியல் அறைக்குள் போய் புகுந்து கொண்டாள் ரஞ்சனி. இறுகிப்போய் கட்டிலின் விளிம்பில் அமர்ந்திருந்தாள் வர்ஷிணி. உள்ளே தண்ணீர் விழும் சத்தம் பேரிரைச்சலாகப் பாய்ந்து அவளுடைய மூளையைக் குடைந்தது.

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2026 by KPN Publications

bottom of page