மஞ்சக்காட்டு மயிலே
தோகை 4
நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய
நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய
ஹர ஹர சிவனே
அருணாசலனே
அண்ணாமலையே போற்றி
சிவ ஓம் நம சிவாய
அழகனின் நினைவில் சரியாக உறங்காத மயூவை துயில் களைய செய்தது, ஹாலில் காதை கிழிக்கும் அளவில் ஒலித்த பக்தி பாடல். “அம்ம்மா…” எழும் போதே பல்லை கடித்தாள். ஆம்… ‘எழுந்துக்கோ, நேரமாச்சு…’ என்றெல்லாம் கெஞ்சி அல்லது கொஞ்சியோ மக்களை எழுப்ப மாட்டார் நம் பூரணி.
பள்ளி நாள் தொட்டு, சி.டி பிளேயரில் பாடலை அல்லது ரேடியோவை உச்ச வால்யூமில் வைத்து விடுவார். இப்போதெல்லாம் அலெக்ஸா அந்த நல்ல காரியத்தை செய்கிறாள்! படுக்கையறை கதவை திறந்து வைப்பார், அவ்வளவே. அந்த சத்தத்துக்கு பின் உறக்கம் ஏது! தன்னால் விழித்திடுவர் மயூவும், மாறனும். இன்றும் அப்படியான ஒரு விடியல்.
கண்கள் எரிய, சோம்பலாக கட்டிலில் இருந்து இறங்கியவள், நேரே வந்து பாடலின் ஒலியை குறைத்தாலும், அடுப்பங்கரையில் இருந்த பூரியின் குரலில் பாடல் முழுவீச்சில் தடையின்றி தொடர்ந்து ஒலித்தது.
இது அவ்வப்போது வழக்கம் என்பதால், எழுந்தவுடன் அம்மாவிடம் வழக்காடும் மூட் இல்லாததில், குளிக்க போய் விட்ட மையூ மீண்டும் வெளியே வந்த போதோ, வேலை செய்யும் பெண்மணி வந்திருக்க அவரோடு வளவளத்து கொண்டிருந்த அன்னையை கண்டு, சிரிப்பு தான் வந்தது.
பூரி அம்மாவின் வாய்க்கு ரெஸ்ட்டே கிடையாது. பேசுவது, பாடுவது, ஏன் தொலைக்காட்சி பெட்டியில் ஓடும் காட்சிகளுக்கு கூட ரன்னிங் கமெண்டரி தருவார். அது படமோ, சீரியலோ, ஏதோ ஒன்று சொல்லி கொண்டே பார்க்காவிட்டால் அவருக்கு திருப்தியாகாது. உடன் அமர்ந்து பார்ப்பவருக்கு எதுவும் புரியவே புரியாது. அந்த அளவுக்கு பேச்சே என் மூச்சு ரக ஆசாமி!
பார்த்த திரைபடமெனில், குரல் மாடுலேஷன் செய்து கூடவே வசனம் பேசுவார். அமைதிக்கும், பூரணிக்கும் எட்டாம் பொருத்தம். அவர் இருக்குமிடம் வெண்கல கடைக்குள் யானை புகுந்த கலகலப்போடே எப்போதும் இருக்கும்.
“ம்மா…”
“அப்போவே எழுந்தவ, காப்பி குடிக்காம ஏன் குளிக்க போன மையூ?”
“ஏன் இப்போ குடுத்தா என்ன குறையறீங்க?” என்ற மகளை ஒரு கணம் பார்த்து விட்டே, பானத்தை கலக்க துவங்கினார்.
மயூவுக்கு தன் தவறு புரிந்தது. நாட்கள் வேகமாய் நகர்வதில், கூடிய விரைவில் அழகனை எதிர்கொள்ள வேண்டுமே என்ற பதைபதைப்பில் இருப்பவளுக்கு, இரவுகளில் உறக்கம் என்பது குறைந்து போன ஒன்றாகி விட்டது. இப்போதோ, அவளின் இயல்புக்கு மீறி சற்றே எரிச்சல் த்வனியில் பூரிக்கு வெடுக்கென பதில் கொடுத்திருந்தாள்.
“பூ ம்மா, சாரிடா ஏதோ வேலை டென்ஷன். இன்னைக்கு நான் வர லேட்டாகும். கீழ் வீட்டு துளசி ஆன்டியோட கோவிலுக்கு போறதா சொன்னீங்களே… பார்த்து போய்ட்டு வாங்க.”
“நான் வேணா வர்ற வழியில உன் ஹாஸ்பிடலுக்கு வந்துடறேன். நேரமானா, நான் துணைக்கு இருப்பேன்ல?”
“ஐயோ, வேணாம் பூ…” கையெடுத்து கும்பிட்டு அபிநயித்தாள் இளையவள்.
பின்னே, இப்படி வந்து காத்திருக்கும் நேரம், சின்னப்பிள்ளை போல, “இன்னும் எவ்வளவு நேரம் மையூ?” என நொச்சி எடுத்து விடுவார். அந்த அனுபவத்தில் உஷாராக மறுத்து, “நானே வந்துப்பேன் ம்மா,” என்றவள், உண்டு விட்டு கிளம்பினாள்.
இங்கே கால்நடை மருத்துவமனை பளிச் தோற்றத்தில் ஒளிர்ந்தது. எல்லா ஏற்பாடுகளும் கன ஜோராக நடந்து கொண்டிருந்தது. மயூவுக்கு ஓடவும், ஒளியவும் வழியில்லாது போன அவஸ்தை நிலை.
உடன் பணி செய்வோர் ஏதோ ஒரு காரணம் கொண்டு, இல்லை காரணமே இல்லாமல் கூட அமைச்சர் செந்தூர் அழகன் குறித்த பேச்சுக்களை துவக்கி, அலசினார்கள். அந்த சம்பாஷணைகளை கேட்டிருந்தவளுக்கு இத்தனை ஆண்டுகளில் முதல் முறை இப்போது தான் இத்தனை மனவுளைச்சல் எனலாம்.
இதற்கு முன் இப்படி தினமும் தொடர்ந்து அவன் குறித்த தகவல்கள் காதில் விழுந்ததில்லை. இவளாக நினைத்தால் தான் அழகனை குறித்த செய்தியை தொலைக்காட்சியில் கேட்பாள், அல்லது நாளேட்டில் தேடி வாசிப்பாள். இப்போது இன்ஃபர்மேஷன் ஓவர்லோட் நிலை… அவ்வ்வ்!
நித்தமும் அழகனின் வருகையை ‘புலி வருகிறது… புலி வருகிறது’ போல ஒரு பயப்படும் நிகழ்வாக கற்பனை செய்து, தன் உள்ளத்து எண்ணங்களை யாரிடமும் பகிர முடியாமல் துடித்த மயூரியின் தவிப்பும் ஒருவாறு முடிவுக்கு வந்தது.
“அமைச்சர் செந்தூர் அழகன் வாழ்க!” “வேளாண் இளம்சிங்கம் வருகவே!” “விவசாயிகளின் அன்பனே வருக!” “வயல்களின் நண்பன் வாழ்க!” “ஆத்தூர் மண்ணின் மைந்தனே வாழ்க!” “கால்நடைகளின் காவலனே வருக!” “நெல்லையின் இளம் காளையே வாழ்க” “பசுக்களின் பாசறை தலைவனே வாழ்க” “தாமிரபரணி ஈன்றெடுத்த முரட்டுகாளையே வருக!”
இது போன்ற கன்னாபின்னா புகழ் கோஷங்களோடு, வெவ்வேறு போஸ்களில் தோரணையாகவும், கை தொழுத வண்ணமுமாக அழகன் தனியாக மற்றும் கட்சியின் நிர்வாகிகள், கழக தொண்டர்களோடும் நிற்பது, அமர்ந்திருப்பது போன்ற படங்கள் அச்சிடபட்ட வெவ்வேறு அளவிலான வரவேற்பு ஃப்ளெக்ஸ் தட்டிகள், வழியில் பல இடங்களில் பாதுகாப்பான முறையில் கட்சியின் திருவண்ணாமலை தொகுதி, வார்டு, வட்ட, மாவட்ட கழக உடன்பிறப்புகளால் எழுப்பப்பட்டு, பகல் வேளையிலும் வண்ண விளக்கு அலங்காரங்களோடு ஜெகஜோதியாக காட்சியளித்தது.
உற்சாக மிகுதியில் தொண்டர்கள் தொடர்ந்து எழுப்பிய பலதரப்பட்ட பாராட்டு கோஷங்கள் அங்கிருந்தோர் அனைவரின் செவிகளையும் பிளந்தது. அழகனை நெருக்கத்தில் கண்டு விடும் ஆர்வத்தில் முட்டி தள்ளிய கட்சிக்காரர்களின் தள்ளுமுள்ளுகளில் சிக்காமல், சற்றே ஒதுங்கி நின்ற சக அலுவலர்களின் கூட்டத்தோடு கலந்திருந்த மயூரியினால் தனக்கு முன் இருந்த அலை கடல் தொண்டர் மற்றும் ரசிக கூட்டத்தை தாண்டி, அழகனை சரியாக பார்க்க கூட முடியவில்லை.
வளாக திறப்பு விழா, அமைச்சரின் சிறப்பு உரை எல்லாம் நல்ல விதமாக முடிய, மயூரியால் வெகு தொலைவில் இருந்து தான் அழகனை அதுவும் சில நொடிகளே, தரிசிக்க முடிந்தது.
தன் உடன் பணி செய்வோரோடு, ஓர் ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டு, மனதை அழுத்திய விவரிக்க முடியாத ஏமாற்றத்தை மறைத்து கொண்டு, பேருக்கு அவர்களோடு உரையாடும் போர்வையில் மையூ நிற்க, அவர்களை நோக்கி விறுவிறுவென வந்த மையத்தின் தலைமை அதிகாரி, அனைவரையும் சந்திக்க அமைச்சர் விரும்புவதாக தெரிவிக்கவும், அங்கே உற்சாக ஆரவாரம் கிளம்பியது.
அன்றைக்கான நிகழ்ச்சி நிரலில் இடம் பெறாத இந்த புது ஏற்பாட்டினால், இப்போது வயிற்றில் பய பட்டாம்பூசிகள் படபடக்கவும், இதை தவிர்க்கும் மார்க்கம் அறியாத மயூரி, ஏனைய அலுவலக கும்பலின் பின் ஒளிந்து கொண்டாள்.
மயூரியின் கெட்ட நேரம், அனைத்து பணியாளர்களையும் தலைமை அதிகாரி, தனித்தனியே அறிமுகம் செய்ய துவங்க, மையூவுக்கு என்ன செய்ய, முகத்தை எங்கனம் மறைக்க என்று புரியவில்லை.
அதற்குள்ளாக வரிசையில் நின்றிருந்தவர்களிடையேயும் சலசலப்பு கிளம்பியது. “கொஞ்ச முன்னாடி சொல்லியிருந்தா, சும்மா நின்ன நேரம், முகம் கழுவி, பவுடர் போட்டு, பளிச்சுன்னு ஆகியிருக்கலாம்ல!” குறைப்பட்டார் மயூவுக்கு முன் நின்றிருந்த உதவியாள பெண்மணி கலா.
இவர்களுக்கு பின் நின்றிருந்த நர்ஸ் திவ்யாவோ, “இந்த மெரூன் கலர், மயூ மேம் போல ஆளுக்கு ஓகே… எனக்கெல்லாம் நல்லாவே இல்ல. கூட்டத்தோடன்னு சொன்னதால நானும் கண்டுக்கலை. இப்ப… ஒத்தையில மினிஸ்டர் சாரை பார்க்கணும்னா எப்படி? தெரிஞ்சிருந்தா கலர் கோடாவது ஒண்ணாவதுன்னு வேற பளிச் புடவையில வந்திருப்பேன்.” புலம்பினாள்.
இந்த பேச்சுக்கள் கிளப்பிய எரிச்சலோடு, கால்களில் விலங்கிட்டது போல நடை தடைபட, மிக மெதுவே வரிசையில் நகர்ந்தவளின் முறை வரவும், அவள் எதிர்பாரா அதிர்ச்சிகரமான பெருத்த ஏமாற்றம் மங்கையவளை வரவேற்றது.
“இவங்க டாக்டர். மயூரி சிவபாதம்… புது ஜூனியர் ரிசர்ச் அசிஸ்டன்ட். நாட்டு ரக பசுக்களில் இயற்கை முறையில் பால் உற்பத்தியை அதிகரிக்க, அரசு மானியத்தோட ஆராய்ச்சி செய்யறாங்க.”
அவளின் உயர் அதிகாரியின் அறிமுகத்துக்கு, எல்லோரிடமும் காண்பித்த அதே ஓட்ட வைத்த மலர்ந்த முகமாக, கைகளை குவித்து வணக்கம் தெரிவித்த அழகன், “உங்களோட ஆராய்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் டாக்டர்”, என்றதோடு, அடுத்து நின்றவரின் அறிமுகத்துக்கு தயாரானான்.
சில வினாடிகளுக்கு முன் நடந்ததை மயூரியால் நம்பவே முடியவில்லை. அழகனின் கண்களில் அவளை தெரியும் என்பதற்கோ, அவளை அடையாளம் கண்டு கொண்டான் என்பதற்கான எவ்வித குறிப்பையும் அவள் காணவில்லை.
அங்கே இருந்த ஏனையோரை போலவே, தன்னையும் பத்தோடு பதினொன்றாக சம்பிரதாயமாக அழகன் பார்த்தது, பொதுவான ஒரு வாழ்த்தை அதுவும் கடமைக்காக உதட்டளவில் சொன்னதை இன்னமும் மங்கையவளால் ஜீரணிக்க முடியவில்லை.
அழகனின் கண்ணில் விழாமல் ஒளிந்து கொள்ள விளைந்தவளுக்கு அந்த நினைப்பு மறந்து, என்னை தெரியவில்லையா இவனுக்கு என்ற கோபம் எழுந்தது. ‘அவள் எதிர்பார்ப்பு என்ன?’ என்பதில் குழப்பமடைந்தவளாக, நிகழ்ச்சி முடிவடைய, ஒருவித அழுத்தமான மனநிலையில் வீடு வந்து சேர்ந்தாள்.
குளித்து விட்டு, சோர்வாக வந்த மகளிடம், அன்றைய அமைச்சர் விஜயம் குறித்து கேள்விகள் எழுப்பி, எரியும் நெருப்பில், அவரையும் அறியாமல் எண்ணெய் வார்த்த பூரி, மகளின் மனதில் குடையும் காதல் வண்டை பற்றிய பிரக்ஞையற்றவராக அன்றைய அவரின் பொழுதை உற்சாகமாக விவரிக்க, அவளோ… ஆசை மின்னல் கண்களில் வெளிப்படாதவாறு கஷ்டப்பட்டு மறைத்து கொண்டு, கைபேசியை பார்த்து கொண்டிருந்தாள்.
அன்று மொத்த கால்நடை மருத்துவ குழுவும் அமைச்சரோடு ஒரு க்ரூப் போட்டோ எடுத்திருக்க, யாரோ உடன் வேலை செய்யும் புண்ணியவான் அவர்களின் அலுவலக வாட்சப் க்ரூப்பில் அதை அப்லோட் செய்திருக்க, வீட்டுக்கு வந்த நிமிடமாக அந்த படத்தை தான் ஜூம் செய்து மயூரி வெறித்து கொண்டு அமர்ந்திருக்கிறாள்.
மையூ அறியாத விவரம், காரியதரிசி சௌந்தரின் உபாயத்தில், அவனின் மனதை மயக்கிய மயூர சிலையை சில பல நிழல் படங்களாக திருட்டுத்தனமாக அழகன் பதிவு செய்திருந்தான்.
இங்கே இவளோ காண கிடைக்கா அறிய அந்த ஒற்றை க்ரூப் போட்டோவை பெரிதுப்படுத்தி, அழகனின் சிகை, கண்கள், நாசி, உதடுகள் என ஒவ்வொன்றாக உற்று பார்த்து, ஏக்கத்தோடு விரல் கொண்டு நிழலை தடவி கொண்டிருக்க, அங்கோ… இவளை மட்டுமே ஃபோகஸ் செய்து எடுக்கும் படி தான் இட்ட கட்டளையை செவ்வனே செயல்படுத்திய சௌந்தர் எடுத்த அத்தனை புகைப்படங்களையும் நிறைத்த காதல் காரிகையை, தன் மனப்பெட்டகத்தில் பூட்டிக் கொண்டிருந்தான் மன்னவன்.
‘எப்படி? என்னை சுத்தமாக மறந்து விட்டானா? இப்படி மூன்றாம் மனுஷியாக எட்ட நின்று நடக்க முடியுமா? இவன் என்னை காதலித்தது உண்மையா? பொய்யா? வேஷமா, நாடகமா?’ பற்பல சந்தேகங்கள், விடை தெரியா வினாக்கள் முளைக்க, அடுத்த சில நாட்கள் ஓர் தெளிவற்ற மோன நிலையில் அமிழ்ந்தாள் மயூரி சிவபாதம்.
அழகன் எறிந்த கல் அமைதியான அணங்கவளின் பூவிதயத்தில் சலசலப்பை துவக்கியிருந்தது.
மயூ மட்டுமே அந்த சில நொடி அழகனோடான நேர்முக அறிமுகத்தில் திருப்தி இல்லாமல் இருந்தாள். உடன் வேலை செய்வோர், “எனக்கு பெஸ்ட் விஷஸ் சொன்னார் மினிஸ்டர்.” “நான் நீட்டின காஃபி கிளாஸை தான் அமைச்சர் வாங்கினார்.” “போட்டோவுல அவர் பின்ன நிக்கற வாய்ப்பு கிடைச்சது பெரிய பாக்கியம்” இன்னொருவர் சிலாகிக்க… “பக்கவா ஹோம்வர்க் செஞ்சுட்டு வந்துருக்கார்” ஒருத்தரின் கூற்றுக்கு… “அதான், அவரோட சட்டசபை கேள்வி நேரத்து பதில்கள்ல நமக்கு தெரியுமே! எல்லாம் விரல் நுனியில தகவல்களை வெச்சுருப்பார்.”
இப்படி அழகன் புகழ் புராணம் அடுத்த ஒரு வாரம் நாள்தோறும் பணியிடத்தில் செவ்வனே நடக்க… ஒரு கட்டத்தில் “நாம் பிரிந்து விடலாம்” என்றவளே, அவளின் உள்ளம் களவாடிய கண்ணாளனுக்காக ஏங்கி தவித்தவளாக
கண்ணழகா… காலழகா…
பொன்னழகா… பெண் அழகா…
எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா…
என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா…
பாடலை முணுமுணுக்கும் அளவுக்கு சென்றாள்.
******************************************
சில ஆண்டுகளுக்கு முன் மயூரி உதிர்த்த “வேணாம்… இனி என்னை தேடி வராதே. நமக்குள்ள எல்லாம் முடிஞ்சுது. இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல!” என்ற அக்கடுஞ்சொற்களை இப்போது நினைத்த மாத்திரம், காதில் திராவகத்தை வீசிய எரிச்சலை ஒத்த வேதனையை அன்று போலவே இன்றும் செந்தூர் அழகன் அனுபவித்தான் என்பதுவே உண்மை.
கனிய வேண்டிய காதல், துவங்கிய வேகத்தில் கருகியதை ஏற்க மறுத்து மருகியது அழகனின் காதல் மனம். ‘எப்படி உன்னால் இப்படி நம் உறவை முறித்து பேச முடிந்தது என் பொன் மயூரமே? நீ வசிக்கும் என் இதயம் வலித்த வேதனையை, நீ அறிவாயா என் உயிரே?’ அரசு அவனுக்கு கொடுத்திருந்த அமைச்சர் இல்லத்தில் தன் அறையின் தனிமையில் உள்ளம் கவர்ந்த மாதுவிடம் மானசீகமாக கேள்வி எழுப்பினான்.
சௌந்தர் எடுத்த புகைப்படங்கள் ஒன்றை தெளிவாக்கியது. மயூவின் கண்கள் அவனை விட்டு அகலவில்லை. ஓர் தேடலும் தவிப்பும் நிச்சயம் அங்கே தென்பட்டது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
இந்த ஒன்பது ஆண்டுகளாக மயூரியை தொடர அவன் பணித்திருந்த தனியார் டிடெக்டிவ், ‘கடந்த சில நாட்களாக வேலையில் சில கவனகுறைவுகள் ஏற்பட்டு, மயூரி திட்டு வாங்கினார்’ என்று இன்று அனுப்பிய ரிப்போர்ட்டில் எழுதி இருந்தது.
“ஆக… இன்னும் என்னை கண்ட மாத்திரம் உன் உள்ளம் எனக்காக துடிக்கிறது. பிறகு ஏன் தங்க மயிலே, என்னை எட்ட நிறுத்தி, காதல் இல்லை… நீ வேண்டாம் என்று மறுத்து, நீயும் வேதனைப்பட்டு, என்னையும் உயிரோடு எரிக்கிறாய்?”
பதிலறியா கேள்விகள் மட்டுமே அழகனிடம். இரு ஜீவன்களும் அடுத்தவருக்காக உயிர் கொண்டு வாழ, அதை மற்றவர் அறியாமல் மறைத்து தங்களை வாட்டி கொண்டனர்.
**********************************************
அழகன் திருவண்ணாமலை வந்து சென்று முழுதாக ஒரு மாதம்… முப்பது நாட்கள், பறந்தோடி இருக்க, இன்னமும் மயூரி மட்டும் சகஜ நிலைக்கு திரும்பவில்லை.
இரண்டாண்டுகள் காதலித்தவன்… இல்லையில்லை ஒன்பது ஆண்டுகளாக அவளின் உள்ளத்தில் கோலம் கொண்டிருப்பவன், அவளை முற்றிலும் விட்டு விலகி விட்டான் என்ற நினைப்பே கசந்தது.
கடந்த ஏழு ஆண்டுகளாக, ‘எனக்கு அவன் வேண்டாம்’ என தினமும் இவள் செய்த பாராயணம் மங்கையவளுக்கு மறந்து விட்டது. அப்பாவை மறந்து விட்டாள். அவருக்கு செய்த சத்தியம் நினைவிலேயே இல்லை. அழகனின் ஒதுக்கம் மையூவை பெரிதுமே அசைத்து விட்டது என்பதே உண்மை. மனதின் ஏதோ ஓர் மூளையில் கனன்று கொண்டிருந்த அந்த காதல் பொறியை அழகனின் உதாசீனம் ஊதி பெருந்தீயாக வளர்த்து விட்டதை பாவம் அழகன் அறியவில்லை.
“என்னாச்சு பூரி? உன் பொண்ணு முகம் ஒரே டல்லடிக்குது?” வீடியோ காலில் அழைப்பு விடுத்திருந்த மாறன், இந்த சில வாரங்களாக தங்கையின் முகம் சற்று சோபை இழந்து காணப்படுவதை கவனித்திருந்தாலும், பெரிதாக எடுக்கவில்லை.
இப்படி வார கணக்கில் தங்கை முகம் சுணங்கி வளைய வருவது ஆச்சரியமளிக்க, காரணம் எதுவும் புரியாதவனாக, தெரியாதவனாக, பெற்றவளும் கூட தன்னிடம் அது பற்றி குறைபடாதது குழப்பம் தர, அன்று அம்மாவிடம் விசாரணையை துவக்கினான் பொறுப்பான உடன்பிறப்பாக.
“ம்ம்ம்… அவ லவர் கோச்சிக்கிட்டாராம்!” உள்ள நிலைமை அறியாமல், வழமை போல பூரணி அம்மா கிண்டலடித்தார்.
அண்ணன் தங்கை உறவில் இதுவரை ஒளிவு மறைவு இல்லை என்று நம்பி கொண்டிருக்கும் மாறனுக்கு, அன்னையின் கேலியை கேட்டதும், “இவங்களை…” என பல்லை கடித்தவன், “தன் முயற்சியில் சற்றும் தளரா பூரி அம்மாவே! வேணாம்… எங்களுக்கு லவ் வரலே. வரவே வராது… விட்டுடுங்க…” கைப்பேசி திரையில் மாறன் நாடக வசனம் பேச…
“எங்க பிள்ளைகளாடா நீங்க ரெண்டு பேரும்? ஹாஸ்பிடல்ல என்னவோ குழப்பம் நடந்திருக்கணும். லவ் கிலோ எத்தனை விலைன்னு கேட்கற பிள்ளைங்களை இப்போ தான் பார்க்கறேன்.” தன் அலம்பல் புலம்பல்களை விடவில்லை பூரணி.
“அம்ம்மா… எர்த் டு அம்மா… லேண்ட் ஆகுங்க… ப்ளீஸ்ம்மா” வழமையான திசையில் அம்மாவின் பேச்சு பயணிக்க துவங்கவும், அரண்டு விட்ட மகன் கெஞ்சவும்,
“இன்னைக்கு ஏதோ ரிசர்ச் வேலையில சொதப்பிட்டாளாம். வந்ததுல இருந்து லேப்டாப்பும் கையுமா ஏதோ படிச்சுட்டு இருக்கா உன் அருமை தங்கச்சி. கட்டிளம் காளையை சைட் அடிப்பான்னு பார்த்தா, காளை மாட்டை பத்தி மும்முரமா ஆராய்ச்சி பண்றா! இப்படி லேப்ல அடைஞ்சு கிடந்தா எப்படிடா லவ்வு டெவலப் ஆகும்?”
அங்கங்கே படி, வேலைக்கு போ என்னும் பெற்றோர் இருக்க, லவ் வரலியா என்று டார்ச்சர் செய்யும் அன்னையை சமாளிக்க திணறியவனாக, “அவ படிச்ச படிப்புக்கான வேலையை ஒழுங்கா பண்றவளை ஏன்மா இப்படி படுத்தி எடுக்கறீங்க?”
“போடா… சிங்கிள் குமரி பொண்ணை கூட டாவடிக்க தெரியாமல் சிங்கி அடிக்கும் சாஃப்ட்வேர் இன்ஜினியரே” விட்டேனா பார் என அவனையும் அதகளம் செய்த அம்மாவை பாவமாய் பார்த்து வைத்த மாறனிடம், அசராது தொடர்ந்தார்.
“உங்க அப்பா இப்படி இல்ல தெரியுமா? ஏதோ நாங்களும் லவ் செஞ்சோம், கல்யாணம் செஞ்சோம் ஆள் இல்லைடா உன் அப்பா. சாயங்காலம் வேலை விட்டு வந்த உடனே, என் பின்னையே தான் சுத்துவாரு. என் மேல அம்புட்டு இஷ்டம்… பியார்டா மகனே! நீங்களும் இருக்கீங்களே! காலாகாலத்துல ஒரு லவ்வை பண்ணோமா, லவ்வரோட கடலை வறுத்தோமான்னு இல்லாம. யூத்தாடா நீங்க ரெண்டு பேரும்?” இரு பிள்ளைகளையும் வறுத்தெடுப்பதை நிறுத்தவில்லை, கணவரின் மறைவுக்கு பின் பிள்ளைகள் தான் எல்லாம் என வாழும் பூரணி.
மகனும் அயல் நாட்டில் வசிக்க, உடன் இருக்கும் மகளோ தன்னை முழுதும் வேலையில் மூழ்கடித்து கொண்டு, அவரை மேலும் தனிமைப்படுத்தி விட்ட ஆதங்கத்தை இப்படியாக அவருக்கு தெரிந்த வழியில் கொட்டி தீர்த்தார்.
இப்படி மறைந்து விட்ட அப்பாவை எல்லாவற்றுக்கும் இழுத்து பேசினால், அன்னை, மனவழுத்ததில் இருக்கிறார் என அனுபவத்தில் புரிந்தவனாக, “பூரிம்மா… என்னடா?” கனிவு கசிய மாறன் வினவ,
சமீபத்திய அழகனின் வருகைக்கு பின், வேலையை காரணம் காட்டி ஒரு மாதமாக, தனி உலகில் வலம் வந்த மயூவுக்கு தான் செய்வது தவறென தெரிந்தாலும், உள்ளம் அவள் கட்டுப்பாட்டில் இல்லையே.
எந்நேரமும் லேப்டாப்பும் கையுமாக அதில் தலை புதைத்து, அம்மாவின் கேள்விகளில் இருந்து தப்பித்து கொள்பவள், இன்றைய அவர்களின் பேச்சை கேட்ட பின், குற்ற உணர்வில் மனம் குறுகுறுக்க, எழுந்து வந்தாள். தங்கையிடம் கண்களால் அன்னையை சுட்டினான் மூத்தவன்.
“அது சரி, அப்பா மட்டும், உங்க பின்ன சுத்தலைன்னா, கேள்வி கேட்டே அவரை கதற விட்டுற மாட்டீங்க. ‘என்னாச்சுங்க, என் மேல கோபமா? ஏன், ஒரு மாதிரி இருக்கீங்க? தலைவலியா? ‘என்னன்னு சொல்லுங்களேன்’’ அவரை உலுக்கி எடுத்துடுவீங்க. உங்க சரவெடி நான்ஸ்டாப் கேள்வியில இருந்து தப்பிக்கவே, பாவம் அப்பா சகஜமாகிடுவார்ங்கறதை விட நீங்க ஆக்கிடுவீங்க.” மகளின் கேலியில் முகம் மலர்ந்தவர், கணவனின் நினைவில் ஆழ, கிடைத்த இடைவெளியில் அண்ணனும், தங்கையும் பொதுவான விஷயங்களை அலசினர்.
தங்கையின் முகவாட்டத்துக்கு காரணம் அறிய விழைந்தவனின் முயற்சி பூரியின் பக்கம் திசை மாறியதில், அந்த விஷயமும் மாறனின் கவனத்தில் இருந்து பின்னுக்கு போனது.
***********************************
தன் முன் இருந்த காகிதத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்தான் செந்தூர் அழகன். இப்போது அவன் போடவிருக்கும் கையெழுத்து அவனின் தனிப்பட்ட வாழ்வின் தலையெழுத்தை நிர்ணயிக்க வல்ல சக்தி கொண்டது.
டாக்டர். மயூரி சிவபாதத்தின் பணி மாற்று உத்தரவு தான் அது. ஆத்தூர் ஒன்றியத்தை சார்ந்த கால்நடை பராமரிப்பு மையத்தில் வேலை செய்வதற்கான அரசு ஆணை. மயூரி சிவபாதத்தை அவர்களின் சரிதம் துவங்கிய இடத்துக்கே இழுத்து வரும் ஆயுதம்.
அவள் வருவாளா?
அவனறிந்த மயூ அழுத்தக்காரி, உத்தரவை ஏற்று இங்கே வர மாட்டாள். இதை முறியடிக்க பாடுபடுவாள். பணம் கொண்டு எப்பாடுபட்டாவது, இந்த அரசு ஆணையை ரத்து செய்வதற்கு முயலுவாள். இதெல்லாம் நடக்கலாம் அல்ல, நிச்சயம் நடக்கும் என்பதை ஐயமின்றி அறிவான் மயூவின் செவ்விதழின் மதுர புன்னகையில் சிறைப்பட்டிருக்கும் செந்தூர் அழகன்.
மயூவின் முயற்சியை முறியடித்து, தான் நினைத்தது போலவே அவளை இங்கே, அவர்களின் காதல் அரங்கேற துவங்கிய களத்தில் அவளை நேரடியாக சந்தித்து, இந்த அர்த்தமற்ற போராட்டத்தை ஒரு முடிவுக்கு, இல்லை இல்லை சுபமான துவக்கமாக மாற்றி, அவர்களின் திருமணத்தின் மூலமாக அவர்களின் வாழ்வென்னும் நூலில் ஒரு புது அத்தியாயத்தை ஆரம்பிக்க சபதம் எடுத்தான்.
அழகு மயிலை காதல் முறுக்கேறிய இளம் சிங்கம், வென்றதா?
Comments