31. பிடிவாதம்
ராயல் அமிர்தாஸில் வேலை செய்பவர்களுக்கான தனிப்பட்ட வாயிலின் வழியாக மல்லியை தனது கைகளில் தூக்கி வந்த ஆதி, தனது காரிலேயே அவளை கேர் ஃபார் லைஃப்பிற்கு கொண்டுசென்றான். உதவிக்காக சுமாயாவும் அவனுடன் வந்தாள்.
தனது கைகளிலேயே அவளைத் தூக்கிவந்தவன், நேராகத் தாமரையின் கன்சல்டன்சி அறை நோக்கிச் சென்று, அங்கே நோயாளிகளைப் பரிசோதிக்கவென போடப்பட்டிருந்த படுக்கையில் மென்மையாக அவளை படுக்கவைத்தான்.
அவன் அங்கே வந்து சேருவதற்கு, முன்பாகவே தாமரையை அழைத்து, ஒரு பெண்ணை அங்கே அழைத்துவருவதாக சொல்லியிருக்கவே அவளுமே தயாராக காத்திருந்தாள். அவளிடம் நடந்த அனைத்தையும் விளக்கினான் ஆதி.
அவன் கூட அவள் ஏதோ உடல்நிலை சரியில்லாமல்தான் மயங்கி விழுந்தாள் என்று எண்ணியிருந்தான். ஆனால் மல்லியை பரிசோதித்த தாமரையின் முகத்தில் குழப்ப ரேகை படர்ந்தது.
“என்ன தாமர, என்ன ஆச்சு இவளுக்கு. ஏதாவது பெரிய பிரச்சனையா?” என்று பதறினான்.
“இல்ல…ணா, இந்த பொண்ணு ஜூஸ் மாதிரி எதாவது குடிச்சாளா?” என்று சந்தேகத்துடன் வினவினாள் தாமரை.


