top of page

Thirudiya Idhyathai Thirupi Koduthuvidu

Public·5 members

12. மூன்றாவது முடிச்சு

ஒரு மாதத்திற்கு முன்பு பார்த்ததை விட, தேவா கொஞ்சம் மெலிந்திருந்ததுபோல் மல்லிக்குத் தோன்றியது . அதிக நேரம் ஜிம்மிலேயே செலவு செய்திருப்பான் என்பது அவன் அருகில் வரவும்தான் அவளுக்குப் புரிந்தது. முன்பைவிட அவ்வளவு பிட்டாக இருந்தான் .


அவள் பேசத் தொடங்கும் முன்பே “எதுவா இருந்தாலும், உள்ள போய் பேசிக்கலாம்” என கிசுகிசுத்தவாறு அவளின் கையைப் பற்றியபடி அவனது அலுவலக அறை நோக்கி நடக்கத் தொடங்கினான்.


உள்ளே நுழைந்த நொடி கோபமாக கையை உதறினாள். “நான் உங்கள எப்படி சார் கூப்பிடுறது? தேவா! ஆதி! இல்ல, இது இல்லாம வேற பேரு எதாவது மிச்சம் இருக்கா?” என்று வெடித்தாள்.


“உன் இஷ்டம். வாடா போடான்னு சொல்லாம, நீ எப்படி கூப்ட்டாலும் எனக்கு ஓகேதான். மாமான்னு கூப்ட்டா டபிள் ஓகே” என்றான் தேவா கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல். அப்பொழுதுதான், அவன் என்ன சொல்ல வருகிறான் என்று பல்பு எரிந்தது மல்லிக்கு.


“என்ன ஆனாலும் நீங்க கொஞ்சம் ஓவராத்தான் போறீங்க தேவா. நான் கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா கொஞ்சமும் புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க” என்று எகிறினாள்.


“யாருக்கு? எனக்கா புரியல? இன்னும் உனக்குத்தான் என்ன பத்தி சரியா புரியல. இன்னும் ரெண்டே நாள்ல கல்யாணத்த வெச்சுட்டு பேசற பேச்சையா நீ பேசிட்டு இருக்க, ம்ம். ஒழுங்கா கல்யாணத்துக்கு ரெடியாகற வழியப் பாரு. அதோட, முக்கியமா சந்தோஷமா எல்லா சடங்குகள்லயும் கலந்துக்கணும். வந்திருக்கறசொந்தக்காரங்க முன்னாடி இப்டி அழுதுவடியக் கூடாது” என மிரட்டலாகவே சொன்னான் ஆதி.


“நீங்கதான் ஆதியாச்சே! என்ன வேணாலும் செய்வீங்க எப்டி வேணாலும் மிரட்டுவீங்க. ஆமா, நீங்கத்தான அந்த வீராவோட கையை உடைச்சது?”


'ஆமாம்! நான்தான்! அப்பறம் வேற என்ன செஞ்சிருக்கணும்னு நெனைக்கற. அடிக்காம, திட்டாம குணமா சொல்லியிருக்கணுமா?”


சிரிப்பு வந்துவிட்டது மல்லிக்கு. “ப்சு.. தே.. வா.. ஆஆஆ… அதுக்காக கையை உடைக்கறதெல்லாம் கொஞ்சம் ஓவர்”


“நல்ல வேள, அவன் விறல் நுனி கூட உன் மேல படாம அவனைத் தடுத்து, நீதான் அவன காப்பாத்திட்ட. இல்லன்னா அவன் கையை வெட்டியிருப்பேன். பொண்ணுங்ககிட்ட வீரத்த காமிக்கறவனுக்கு இதெல்லாம் கம்மி தண்டனதான்” என்ற ஆதியின் கோவமான வார்த்தைகளில் கொஞ்சம் அடங்கித்தான்போனாள் மல்லி.


“எல்லாம் சரிதான். ஆனா, இந்தக் கல்யாணம் மட்டும் இப்ப வேணாமே. ப்ளீஸ்!” என மல்லி கெஞ்சலுடன் திரும்ப அங்கேயே வந்து நின்றாள்.


“இப்ப வேணாம்னா வேற எப்ப?” என அவன் கேட்கவும் அதில் உறுத்து விழித்தவள், “அம்முவ கண்டு பிடிச்ச அப்பறம்” என்றாள்.


“ஒரு வேள, நீ என்ன கல்யாணம் பண்ணிக்கறது அவளுக்கு பிடிக்கலன்னா, இத அப்படியே விட்டுடலாமா? அதனால இப்படி லூசு மாதிரி ஒளர்ரத விட்டுட்டு ஒழுங்கா ரெடி ஆகற வழிய பாரு மல்லி” என அவன் சொல்லிக் கொண்டிரும்போதே கதவைத் தட்டப்படும் ஒலியுடன் “மே ஐ கம் இன்?” என்ற சுமாவின் குரல் இடை புகுந்தது.

அவளை உள்ளே வரும்படி பணித்தவாறு அவனுடைய இருக்கையில் போய் அமர்ந்தான் ஆதி.


“மேம்க்கு ஸ்பால எல்லாம் ரெடியா இருக்கு, சார். அத சொல்லத்தான் வந்தேன்” என்று சொல்லிவிட்டு சென்றாள் சுமா.


அதை வியந்து பார்த்திருந்த மல்லி, “என்ன, சுமா என்ன மேம்னு சொல்லறாங்க?” என்று கேட்டாள்.


“அவங்க என்னோட பர்சனல் செக்ரட்ரி. அதனால அப்படிதான் கூப்பிடுவாங்க. நீ இதுக்கெல்லாம் கொஞ்சம் பழகிக்கணும் மல்லி” என்றான்.

“அப்படினா விஜித் அண்ணா இவங்களோட ஹஸ்பண்ட் இல்லையா? பின்ன எப்படி ஒரே வீட்ல இருக்காங்க? நீங்க செய்யறதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் கூட நல்லாவே இல்ல ஆமாம்” என முகம் சுளித்தாள்.


“ஸ்டாப் இட் மல்லி! உனக்கு எக்ஸ்ப்ளயின் பண்ணியே நான் ஒருவழி ஆயிடுவேன் போல இருக்கு. இதுக்கு மட்டும் இப்ப பதில் சொல்றேன். இதுக்கு மேல என்ன எந்தக் கேள்வியும் இப்போதைக்கு கேட்காத. கல்யாணம்” என அவன் தொடரவும் அவனை முறைத்தாள் மல்லி.


எப்படியும் அவளால் இந்தத் திருமணத்தை நிறுத்த முடியாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் அதனால், “கல்யாணம் கட்டாயம் நடக்கும். வேணாம்னு நீ நெனச்சா நீயே எதாவது சொல்லி நிறுத்திக்கோ. நான் நிறுத்த மாட்டேன்” என்ற திட்டவட்டமாக சொல்லிவிட்டு தொடர்ந்தான் ஆதி.


“விஜித், என்னோட பர்சனல் பாடிகார்ட். நம்ம ஆஃபிஸ்ல வெச்சே இவங்க இரண்டுபேருக்கும் காதல் பத்திக்கிச்சு. அவங்க ஒண்ணும் உன்ன மாதிரி லூசு இல்லையே. டைம் வேஸ்ட் பண்ணாம கல்யாணம் செஞ்சுட்டாங்க. அப்படினா ஒரே வீட்டுலதானே இருப்பாங்க? தட்ஸ் ஆல், நோ மோர் க்வஸ்டியன்ஸ். நீ இப்ப ஃபேசியல் செஞ்சுக்க கிளம்பு” என்று முடித்தான்.


மல்லி எதோ சொல்ல வரவும் விட்டால் அவள் பேசிக் கொண்டே இருப்பாள் என்பதை உணர்ந்தவன், “மொதல்ல நீ இங்க இருந்து கெளம்பு. இல்லன்னா உனக்குத்தான் பிரச்சன” என்றவனின் குரல் கிறங்கியது. பார்வை அவளின் அதரங்களை அளவெடுக்க, அதில் முகம் சிவந்துபோய் அவசரமாக அங்கிருந்து ஓடினாள் மல்லி.

“ஹேய், பார்த்து கொஞ்சம் மெதுவா போம்மா! இதுக்கு மேல உன்னால எங்கிட்ட இருந்து ஓடி ஒளிய முடியாது” என கேலியுடன் தொடர்ந்த அவனுடைய குரல் அவளை கூசி சிலிர்க்கச் செய்தது.


அதன்பின், ஃபேசியல், ஹேர் ஸ்பா, பெடிக்யூர் மேனிக்யூர், கைகள், கால்களுக்கெல்லாம் மெஹந்தி எனப் பல மணிநேரங்கள் எடுத்துக் கொண்டது.


மல்லிக்குத்தான் எதிலும் மனம் ஒட்டவே இல்லை. அன்றைய நாள் முழுவதும், அங்கேயே இருப்பதுபோல் தோன்றியது. அனைத்தும் முடிந்து நேராக வீட்டிற்குத்தான் வந்தாள் மல்லி. அதற்குப் பின் ஆதியைச் சந்திக்கும் வாய்ப்பு அவளுக்குக் கிடைக்கவே இல்லை.


வாட்ஸாப்பில் அவள் அனுப்பிய குறுந்தகவல்கள் எதுவும் ஆதியால் படிக்கப்படவேயில்லை. அவளது அழைப்பையும் அவன் ஏற்கவில்லை.


திருமணம் முடியும்வரை அவனை எந்த விதத்திலும் தன்னால் அணுக முடியாது என்பது நன்றாகவே புரிந்துபோனது மல்லிக்கு.


‘சாரிடி அம்மு! என்னால ஒண்ணுமே செய்ய முடியலடி!’ என மனதிற்குள் அம்முவிடம் மன்னிப்புக் கேட்டு கொண்டே இருந்தாள்.


கைகளில் மருதாணி போட்டிருந்ததால், அவளுக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்தார் பரிமளா. மகள் தங்களைப் பிரிந்து போவதை நினைத்து அந்தத் தாயின் கண்கள் கலங்கின.


“மல்லி சீக்கிரம் தப்பிச்சு ஓடிடு. டாம் உடையப் போகுது” என்ற தீபனை புரியாத பார்வைப் பார்த்தனர் இருவரும்.

“அம்மா டாமை திறக்கப் போறாங்க” என்று அவன் விளக்கவும், அருகில் இருந்த தலையணையை தூக்கி அவன்மேல் எறிந்த பரிமளா, “உனக்கு என்ன பாத்தா கிண்டலா இருக்கா? நானே இவள பிரிஞ்சு எப்படி இருக்கப் போறனோ தெரியல” என வருந்தினார்.


“ப்சு அக்கா எங்கமா போகப்போறா. இதே ஊருலதானே கட்டிக் கொடுக்கப் போறோம். எங்க இருந்தாலும் போன் பண்ணியே நம்ம எல்லாரையும் ஒரு வழிப் பண்ணத்தான் போறா. நீங்க ரொம்பலாம் பீல் பண்ணாதிங்க” என்று சொன்னவன், “மல்லியின் தோள்களில் சாய்ந்து கொண்டு அப்படித்தானே..கா” என்றான்.


அவள் தலையில் மூட்டிவிட்டு, “போன்ல எல்லாம் இல்ல, தினமும் நேர்லயே வந்து, உன் தலைல ரெண்டு கொட்டு வெச்சுட்டுத்தான் போவேன். இல்லனா எனக்கு தூக்கமே வராது” என மல்லி சொல்லவும் சிரித்துவிட்டார் பரிமளா.


விளையாட்டாகப் பேசிக்கொண்டிருந்தாலும் தீபனும் மனம் வருந்திக் கொண்டுதான் இருந்தான், மல்லியின் பிரிவை நினைத்து. அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ஜெகனுடைய கண்களும் கலங்கியிருந்தன.


வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு மல்லியின் நகைகளை எடுத்து ஒரு புதிய நகைப் பேட்டியில வைத்துக் கொண்டிருந்தார் பரிமளா. மருதாணியைச் சுத்தம் செய்துவிட்டு அங்கே வந்து உட்கார்ந்தாள் மல்லி.


“நேரத்தோட போய் தூங்கு மல்லி. விடிய காலைலயே நாம ஊருக்கு கிளம்பனும். நாளைக்கு சாயங்காலம் நலங்கு வைக்க எல்லா ஏற்பாடும் செய்ய வேண்டியிருக்கும்” என்றார் பரிமளா.


“என்ன மொத்தமா பேக் பண்றதுல உனக்கு எவ்ளோ சந்தோஷம்மா” என சாலித்தாள் மல்லி.


“ப்சு… இப்படி பேசறத நீ விடமாட்டியா மல்லி?” என அவர் கடுமையாக் கேட்கவும், “சாரிம்மா சும்மாதான் சொன்னேன்” என்றாள்.

“உண்மையாவே, ஒரு நல்ல இடத்துல கட்டி கொடுக்கறதால சந்தோஷமாத்தான் இருக்கோம், மல்லி. எதையும் குழப்பிக்காம நீயும் சந்தோஷமா இருக்கணும், சரியா?” என்று நெகிழ்ந்தார் பரிமளா.


சட்டென நினைவு வந்தது போல, “மல்லி இந்த மோதரத்த பாரேன். உனக்கு ஆக்சிடென்ட் ஆனப்ப அந்த ஹாஸ்பிடல்ல உன்னோட மத்த நகைங்க கூட சேர்த்து இதையும் கொடுத்தாங்க. அன்னைக்கு இருந்த டென்ஷன்ல நான் இத கவனிக்கல. இன்னைக்குதான் பார்த்தேன். வெள்ள கல்லு வெச்சுருக்கு. வேற யாரோடதயோ மாத்தி கொடுத்துட்டாங்க போலிருக்கு” என்று அதைக் காண்பித்தார்.


அதைப் பார்த்த மல்லிக்கு அப்பொழுதுதான் அந்த மோதிரத்தைத் தேவா அவளுக்கு அணிவித்தது நினைவில் வந்தது.


இதைப் போய் எப்படி அம்மாவிடம் சொல்ல முடியும்?

“அது சுமாவோட மோதரம்மா. எங்கிட்ட கொடுங்க. நானே அவங்ககிட்ட கொடுத்துடறேன்” என்று சமாளித்த மல்லி அதை வாங்கித் தன் விரலில் போட்டுக் கொண்டாள்.


***


அடுத்து வந்த இரண்டு நாட்களும் இறக்கை கட்டிக்கொண்டு பறந்தன.


பூவரசந்தாங்கலில் குலதெய்வ வழிபாடு, பிறகு முத்துராமன் பெரியப்பா வீட்டில் மணப்பெண்ணுக்கு நலங்கு வைத்தல் என அனைத்தும் முடிந்து, ஐயங்கார்குளம் வந்தனர்.


மணப்பெண் அழைப்பு மற்றும் அடுத்த நாள் திருமணம் என எல்லாவற்றையும் அங்கேயே ஏற்பாடு செய்திருந்தார் வரதராஜன்.


அய்யங்கார்குளத்தில் உள்ள மிகப் பழமை வாய்ந்த சஞ்சீவிராயர் கோவிலில் இருந்து மணப்பெண் அழைப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பின்பு அங்கே இருந்த அவர்களது வீட்டிலேயே திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், ஆரத்தி சுற்றி மல்லியை அங்கே அழைத்து வந்தனர்.


அப்பொழுதுதான் அங்கே, ஆதிக்கு நலங்கு வைத்துக் கொண்டிருந்தனர். பட்டுவேட்டி சட்டையில், கன்னங்கள் மற்றும் கைகளில் சந்தனம் பூசப்பட்டு, கல்யாணப் பொலிவுடன், முகம் நிறைந்தப் புன்னகையுடன் அட்டகாசமாக இருந்தான் ஆதி.


என்னதான் அரைகுறை மனதுடன் அந்தத் திருமண சடங்குகளில் அவள் ஈடுபட்டிருந்தாலும், அவனை அப்படிக் கண்டவுடன் தனது சொந்தம், ஆதியின் சொந்தம் என அங்கே கூடியிருந்த அத்தனை மக்களுக்கு நடுவில், அவனை நிமிர்ந்து பார்க்கவும் முடியாமல், பார்க்காமல் இருக்கவும் முடியாமல் தவித்துத்தான் போனாள் மல்லி.


அவனும் அவளைத்தான் பார்த்திருந்தான்.


மாம்பழ நிறத்தில் பச்சை சரிகையிட்ட, அவளுக்காகவே பிரத்யேகமாக நெசவு செய்யப்பட்டிருந்த காஞ்சிப் பட்டில், தாய்வீட்டுச் சீரான அளவான நகைகளுடனும், ஒப்பனையுடனும், மூக்கில் வைர மூக்குத்தி மின்ன தலைநிறைய மல்லிகையைச் சூடி, எழிலோவியமாக இருந்தவளை, கொஞ்சமும் தயக்கமே இல்லாமல் பார்வையால் பருக்கிக்கொண்டிருந்தான்.


அவனுக்கு அருகில் இருந்த சசி அவனைக் குறுகுறு வெனக் கிண்டலுடன் பார்க்கவே, வேறு எங்கோ பார்ப்பது போல் பார்வையை மாற்றிக்கொண்டான்.

அடுத்து மல்லிக்கு அங்கே மீண்டும் நலங்கு வைத்து முடித்துவிட்டு அனைவரும் உணவருந்தச் சென்றனர்.


***


அடுத்த நாள் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பான பிரும்ம முஹுர்த்தத்தில் திருமண சடங்குகள், அரசாணிக்கால் நடுவதிலிருந்து தொடங்கின.


அதைத் தொடர்ந்து தீபன் குடை பிடிக்க, அமர்தலாக வேட்டி, சட்டையில் தேவா நடுநாயகமாக வர, காசியாத்திரை தொடங்கியது.


சசிகுமார் மற்றும், திருமணத்திற்கு அழைக்கப் பட்டிருந்த ஒரு சில நண்பர்களும் ஆதியுடைய தாய்மாமாவின் மகன்கள், மகள்கள் மாப்பிள்ளைகள், மல்லியின் உறவில் இளசுகள் என அங்கே கிண்டல்களுக்கும், சிரிப்பிற்கும் பஞ்சமில்லாமல் இருந்தது.


அரக்கு நிறத்தில் கட்டமிட்ட பருத்தியினால் ஆன அவர்கள் சம்பிரதாயக் கூரைப் புடவையில், பின்னல் ஜடையுடன் ஒற்றை நெற்றிச்சுட்டி அணிந்து, காதுகளில் ஜிமிக்கி நடனமிட, நெற்றியில் அரக்கு நிறத்தில் பொட்டிட்டு, மேலும் புகுந்த வீட்டுப் பரிசான வைர நகைகள் மின்ன, குழப்ப முகத்தை மறைக்க தலை குனிந்தவாறு, மணமேடைக்கு அழைத்துவரப்பட்டாள் மல்லி.


அதன் பிறகு பெற்றோருக்கு பாதபூஜை, தொடர்ந்து காப்புக் கட்டுதல் என சடங்குகள் தொடர, பின்பு ஹோமம் வளர்த்து தாலி முடிவதற்காக மணமகனின் சகோதரியை ஐயர் அழைத்தார்.


நாத்தனார் முடிச்சு போடுவதற்காக தயாராக இருந்த அவனது ஒன்றுவிட்ட சித்தப்பாவின் மகள், சரியாக மேடை ஏறும் பொழுது மயங்கிச் சரியவும் அருகில் இருந்தவர்கள் அவளை அவசரமாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.


பரிமளா மகிழ்ச்சியும், அதனால் உண்டான கண்ணீருமாக, அருகில் நின்றுகொண்டிருக்க, குதூகலத்துடன் மருமகளின் ஜடையை லட்சுமி தூக்கிப் பிடிக்க, ஆதியே மொத்தமாக மூன்று முடிச்சுகளையும் போட்டு, மல்லியை தன் வாழ்க்கையில் உரிமையுடன் இணைத்துக் கொண்டான்.


அவளது தோள்களில் உரசிய தன்னவனுடைய கரங்களின் ஸ்பரிசத்தை உணர்ந்த அதே தருணம் சில்லிட்ட இரு கரங்கள் அவளின் தோள்களை தழுவியதை உணர்ந்தாள் மல்லி. அடுத்த நொடியே அவளின் இரு கன்னங்களும் மாறி மாறி சில்லிட்டாது. என்னவென்று புரியாத நிலையில் அவள் ஆதியைப் பார்க்க அவனும் அவளையேதான் பார்த்துக்கொண்டிருந்தான்.


அந்த நொடி அவனது கண்களில் கலந்தவளின் மனதில் இருந்த சஞ்சலங்கள் அனைத்தும் கரைந்து காணாமலே போனது.


என்னவோ அம்முவே அவளுக்கு அருகினில் இருப்பதுபோல் முழுவதுமாக உணர்ந்தாள் தேவாதிராஜனின் மரகதவல்லி.

8 Views

Members

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2026 by KPN Publications

bottom of page