37. புதிய பரிமாணம்
புதுப்பிக்கப்பட்டு அழகிய பொலிவுடன் திகழ்ந்த மல்லியின் கிராமத்து வீட்டிற்கு அவளை அழைத்துவந்தான் ஆதி.
வீட்டின் உள்ளே அடியெடுத்து வைத்ததும் ஜிவ்வென்ற ஒரு உணர்வு மனதில் எழ உடல் சிலிர்த்தது மல்லிக்கு. மகிழ்ச்சியில் கண்களில் நீர் கோர்க்க ஆதியின் முகத்தைப் பார்த்தாள்.
விரிந்த புன்னகையூடே புருவத்தைத் தூக்கி, “எப்படி!” என்பது போல் அவன் அவளைப் பார்க்க, “மாம்ஸ்!” என்றவாறு அவனது கையில் நெற்றியால் முட்டியவள் அவளது கண்ணீரை அவனது சட்டையிலேயே துடைக்க, அதில் அவளுடைய கண்ணீருடன் சேர்ந்து வகிட்டில் வைத்திருந்த குங்குமமும் அவனது சட்டையில் படிந்தது.
“ஏய்! ஏண்டி இப்படி சட்டையை கறையாக்கற. இதுதான் நீ எனக்குக் கொடுக்கற ரிட்டன் கிஃப்ட்டா? நான் வேற இல்ல எதிர்பார்த்தேன்” என்று கிரக்கமான குரலில் ஆதி சொல்லிக்கொண்டே அவன், கன்னத்தையும், இதழ்களையும் சுட்டிக்காட்ட, நாணம் மேலிட தலை குனிந்தாள் மல்லி.
அப்பொழுது, வீட்டின் ரேழியில் நின்றுகொண்டிருந்த தீபன் அவர்களை நோக்கி ஓடிவந்தான். மல்லியை இடித்துத் தள்ளிவிட்டு, “தேங்யூ மாம்ஸ்” என்றவாறு ஆதியை அணைத்துக்கொள்ள, மல்லியின் காதுகளில் புகை வராத குறைதான்.
“அடப்பாவி தீபா, இங்க ஒருத்தி நிக்கறது உன் கண்ணுக்கு தெரியல? இவங்கள போய் கட்டி பிடிச்சுக்கற. இது டூ மச். இவங்க எனக்கு மட்டும்தான், மாம்ஸ்! இனிமே நீ இவங்கள அத்தான்னே கூப்பிடு” என்று தீபனிடம் சீறினாள்.
“பாருங்க மாம்ஸ் எங்க அக்காவுக்கு எவ்வளவு பொறாமை!” என்ற தீபன் மல்லியிடம் திரும்பி, “நீ போ… அம்மா உனக்காக காத்துட்டு இருக்காங்க. நான் மாமாகிட்ட கொஞ்சம் பேசணும். நீங்க திரும்பபோற வரைக்கும் நான் மாமா கூடவேதான் இருப்பேன்” என்று மேலும் அவளை வெறுப்பேற்றுவதுபோல் சொல்லிவிட்டு, ஆதியின் கையை பிடித்து இழுக்க அவனால் ஆதியை அசைக்கக்கூட முடியவில்லை.
முறைத்துக் கொண்டு நின்றிருந்த மல்லியைப் பார்த்து சிரிப்பை அடக்கவே முடியாமல், “வா மல்லி, உள்ள போகலாம்” என்றவாறு அவளது கையுடன் தனது கையை கோர்த்துக்கொண்டு மற்றொரு கையை தீபனின் தோளில் போட்டவாறு உள்ளே நுழைந்தான் ஆதி. முற்றத்தில் நின்றவாறு இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த ஜெகனின் கண்கள் பனித்தன.
சில தினங்களுக்கு முன்புதான் முத்துராமன் மூலமாக அந்த வீட்டையும், அவர்களது நிலங்களையும் தீபனின் பெயரில் வாங்கியிருந்தான் ஆதி.
மறுக்கவே வழியில்லாமல் அவர்கள் நிரந்தரமாக அங்கேயே வந்துவிடவும் ஏற்பாடு செய்திருந்தான், அனைத்தும் மல்லிக்குத் தெரியாமலேயே.
தீபனை முறைத்துக்கொண்டே மல்லி உள்ளே செல்ல, வீடே பரிமளாவின் கைமணத்தில் கமகமத்துக் கொண்டிருந்தது. உடன் அவளது வசந்தா பெரியம்மாவும் இன்னும் சில பெண்களும் உதவிக்கு இருந்தனர்.
மகளின் மறுவீடு சடங்குடன் சேர்த்து, அவர்கள் அங்கே குடிவந்ததற்காகவும் நெருங்கிய உறவினர்களுக்கு சிறிய அளவில் விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார் பரிமளா.
அடுத்த நாள் அம்முவின் திதி என்பதனால், லட்சுமி வரதன் இருவரும் அங்கே வரவில்லை. உள்ளே மல்லி நுழையவும், அவளிடம் நலம் விசாரித்த பரிமளா காஃபியை அவளிடம் கொடுத்து ஆதிக்கு கொடுக்கச் சொல்லவும், அதை எடுத்துக்கொண்டு கூடத்தில் உட்கார்ந்திருந்த ஆதியை நோக்கிச் செல்ல, அங்கே தீபன் பேசுவது அவளுக்குத் தெளிவாக கேட்டது.
“ப்சு… இல்ல மாம்ஸ் இந்த வீட்ட நீங்க அக்காவோட பேருலயே வாங்கியிருக்கலாம். பணத்துக்காகத்தான் அக்காவ உங்களுக்குக் கல்யாணம் செஞ்சு கொடுத்ததா தப்பான பேச்செல்லாம் வரும், மாம்ஸ். அப்பா, அம்மா ரொம்பவே பயப்படறாங்க” என்று கவலைத் தோய்ந்த குரலில் சொல்லிக்கொண்டிருந்தான்.
“ரொம்ப பெரிய மனுஷன் மாதிரி பேசற, தீபன்” என்று சிரித்துக்கொண்டே சொன்ன ஆதி தொடர்ந்து, “இது நீ ப்ளஸ் டூல நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ணதுக்கு என்னோட கிஃப்ட்னு வச்சிக்கோ” என்றான்.,
“இல்ல மாம்ஸ், இவ்ளோ பெரிய கிஃப்டெல்லாம் எனக்கு வேண்டாம், ப்ளீஸ்! புரிஞ்சிக்கோங்க” என அவன் மறுக்க, “உன் பேர்ல இந்த சொத்தயெல்லாம் நான் வாங்கினதுக்கு முக்கியமான காரணம் இருக்குப்பா. மத்தவங்க பேசறத பத்தி கவலைப்படறத விட்டுட்டு நீதான் அதைச் சரியா புரிஞ்சிக்கணும். உனக்கு எப்படியும் மெடிக்கல் சீட் கிடைக்கும்னு எனக்குத் தெரியும், தீபா. அதுக்கப்பறம் நீ அந்தப் படிப்ப பணம் சம்பாதிக்க பயன் படுத்துவியா, இல்ல சேவையா செய்வியா?” என்று ஆதி கேட்க, ஒரு நொடி திகைத்தவன், “கண்டிப்பா சேவையாத்தான் செய்வேன், மாம்ஸ்” என்றான்.
“அப்ப பணம் சம்பாதிக்க என்ன செய்வ? தினசரி தேவைய கவனிக்கன்னு ஆரம்பிச்சு, அப்பறம் தேவை வளர்ந்துட்டே போகுமே! அதனால உன்னோட அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யவே இதையெல்லாம் உனக்குக் கொடுக்க முடிவு செஞ்சேன்ப்பா. அதனாலதான் சொத்துக்கள உங்க அப்பா அம்மா பேருல கூட வாங்காம உன் பேர்ல வாங்கினேன். ஒரு நல்ல பீடியாட்ரிசியன் ஆகணும், இங்க சுத்தி இருக்கற கிராமத்துல எல்லாம் சேவை செய்யணும்ங்கறதுதான் என் தங்கையோட லட்சியம். ஆனா அவளோட ஆசை நிறைவேறாமலேயே போயிடிச்சு. அதனால நீயாவது அதை செய்யணும்னுதான் நான் இதை செய்தேன்” என்று முடித்தான் ஆதி.
மறுத்து எதோ சொல்லவந்த தீபனை தடுத்த மல்லி, “அதுதான் அத்தான் சொல்றாங்க இல்ல, இனிமே எதுவும் பேசாம ஒழுங்கா படிக்கற வழியை பாரு” என அவனை மிரட்ட, “அக்கா ஓகே கா... நீங்க சொன்னா சரிக்கா” என அவளை வாரினான் தீபன்.
“போ போய் இந்த காஃபியை அம்மாகிட்ட சொல்லி சூடு பண்ணி எடுத்துட்டு வா” என்று அவனை அங்கிருந்து விரட்டியவள், “எதுக்காக மாம்ஸ், இவ்ளோ செய்யறீங்க. நான் உங்களுக்கு என்ன செஞ்சேன். எப்படி உங்களுக்கு என் மேலே லவ் வந்துது. நீங்க இப்படியெல்லாம் செய்யற அளவுக்கு எனக்கு என்ன தகுதி இருக்குன்னே எனக்கு புரியல!” என மல்லி அடுக்கிக்கொண்டே போனாள்.
“ஒண்ணு மட்டும் புரிஞ்சிக்கோ, மல்லி. எல்லாருமே பிறக்கும்போது கைல ஒண்ணும் கொண்டுவறதில்ல. ஆனா போராடி ஒருதங்க வளர்த்துக்கற அவங்க திறமை இருக்கில்ல, அது பிரைஸ்லெஸ். நீ மொதமொதல்லா டிசைன் செஞ்ச புடவைக்கு இப்ப என்ன வரவேற்புன்னு உனக்குத் தெரியுமா? அதனால உன் வேல்யுவ புரிஞ்சிக்காம தேவை இல்லாம இப்படி தாழ்வு மனப்பான்மைய வளர்த்துக்காத! எல்லாத்துக்கும் மேல, உங்கிட்ட இருக்கற மனித நேயம் என்ன ரொம்பவே உன் பக்கம் இழுத்துடிச்சு, மல்லி. அதவிட, நீ என் வாழ்க்கைல வராம போயிருந்தா, என்னோட மனசுல எரிஞ்சிட்டிருந்த தீ என்ன முழுசா கொன்னுருக்கும், புரிஞ்சிக்கடி. இனிமே இப்படி லூசுத்தனமா பேசாத” என மல்லியிடம் பொறுமையாக எடுத்துச் சொன்னான் ஆதி.
அவன் சொன்னவற்றை கேட்டுக்கொண்டு கண்களில் நீர் கோர்க்க நின்றிருந்தவளை, “அக்கா, அம்மா உன்ன கூப்பிடுறாங்க” என்ற தீபனின் குரல் கலைக்க, அவசரமாகச் சுற்றும் முற்றும் பார்த்தவள் ஆதியின் உயரத்திற்கு எழும்பி அவனது கன்னத்தில் அழுந்த தனது இதழைப் பதித்துவிட்டு அங்கிருந்து ஓடிப்போனாள். அவளது செயலில் திகைத்து, அவளைப் பின்தொடர்ந்து உள்ளே சென்றான் ஆதி.
உறவினர்கள் ஒவ்வொருவராய் வந்து சேரவும் அனைவரின் நலம் விசாரிப்பு அரட்டை என நேரம் சென்றது. அவளுடைய பெரியம்மா, அத்தைகள், மற்ற தோழிகள் புடைசூழ புன்னகை முகமாக வீட்டையே இரண்டு படுத்திக்கொண்டிருந்த மல்லியை விட்டு அவனது கண்களை விலக்கமுடியாமலும், காதலில் கட்டுண்டு தவிக்கும் தன் நிலையை அவளிடம் விளக்கமுடியாமலும் தவித்துத்தான் போனான் ஆதி.
பின்பு விருந்து முடிந்து அன்று மாலையே வீடுதிரும்பினார் ஆதி, மல்லி இருவரும். அடுத்த நாள் அம்முவிற்கு படையலுடன் திதி கொடுத்தனர். வழக்கம் போல ஆதியின் சித்தப்பா குடும்பமும் அத்தையின் குடும்பமும் அங்கே வந்து திதியை முடித்துவிட்டுச் சென்றனர்.
திருமணம் ஆகாமல் பெண்கள் இறந்துபோனால் புத்தாடை ஒன்றைப் படைத்தது அவர்களுடைய வயதில் இருக்கும் யாராவது ஒரு பெண்ணிற்கு கொடுப்பது அவர்களது குடும்ப வழக்கம். ஆனால் அதற்கு மேலும், அன்றைய தினத்தில் அம்முவின் பெயரில் நடத்தி வரும் டிரஸ்ட்டின் மூலம் வறுமை நிலையில் இருக்கும் பெண்களின் படிப்பிற்கென உதவி செய்வதை லட்சுமி வழக்கமாக்கியிருந்தார். அதன் படி அந்த வருடம் கோபாலின் மனைவி திலகாவிற்கு செவிலியர் படிப்பிற்கும், குணாவின் மகள் வனிதாவுக்கு பிசியோதெரப்பி படிக்கவும் ஏற்பாடு செய்திருந்தான் ஆதி. மேலும் பலருக்கும் உதவிகள் செய்திருந்தனர்.
இது அனைத்தும் மல்லி கொஞ்சமும் எதிர்பாராதவை. ஆதியிடம் மொத்தமாக உருகிக் கரைந்து பித்தாகிப்போனாள் மல்லி.
***
அனாதை பிணமாக ஜி.ஹெச்சின் பிணவறையில் கேட்பாரின்றி கிடந்தான் கோபால். அவனது உடலைக்கூடப் பெற்றுக்கொள்ள முன்வரவில்லை திலகா.
உயிருள்ள சடலமாக 'குவாட்ரிப்லேஜிக்' நிலையில் கேர் ஃபார் லைஃபில் அனுமதிக்கப்பட்டிருந்தான் வினோத். அவனது இந்த நிலைமைக்குப் பின்னால் ஆதிதான் இருந்தான் என்று சொல்லத் தேவையே இல்லை.
அரசு மருத்துவமனையில் அன்று பணியில் இருந்த சரவணன் அவன் தோழியின் மரணத்திற்கு நீதி செய்துவிட்டான். ஆதியின் வேலையும் சுலபமாக முடிந்திருந்தது.
விபத்தில் இறந்துபோன ரத்தினத்தின் இறுதிச் சடங்குகள் நடந்து முடிந்திருந்தன. தாமரைக்குத் துணையாக ரத்தினத்தின் இறுதிச் சடங்கில் அனைத்துப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டான் ஆதி.
அன்று வினோத் தனக்கு செய்த அதே துரோகச் செயலை தானும் தாமரைக்கு செய்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வில் அவளது கண்களை சந்திக்கமுடியாமல் தவிர்த்து வந்த ஆதி ஒரு கட்டத்தில் அவளிடம் சிக்கிக்கொண்டான்.
“அண்ணா! நீங்க ஏன் அண்ணா எனக்கு முன்னாடி இப்படி தயக்கத்தோட இருக்கீங்க. நீங்க எந்த தப்புமே செய்யலியே!” என்ற தாமரையை ஆதி அதிர்வுடன் பார்க்க, “அப்பா உயிர் போற நேரத்துல எல்லாத்தையுமே என்கிட்ட சொல்லிட்டாங்க. ‘வினோத்தை உனக்குக் கல்யாணம் செஞ்சு வச்சு பெரிய பாவத்த பண்ணிட்டேன்’னு என்கிட்ட மன்னிப்பு கேட்டாங்கண்ணா.
அவரை டிவோர்ஸ் பண்ணிட்டு வேற நல்ல வாழ்க்கையை எனக்கு ஏற்படுத்திக்க சொன்னாங்க. ப்சு.. நெனச்சு நெனச்சு சந்தர்ப்பத்துக்குத் தகுந்த மாதிரி மனசை மாத்திக்க நான் ஒண்ணும் எங்க அப்பாவோ வினோத்தோ இல்லயே. அவரை சட்டத்துக்கு முன்னால நிறுத்த என்ன செய்யணும்னு பார்த்தேன். அதுக்கு வழியில்லன்னு ஆன பிறகு, என்ன செய்யறதுன்னு தெரியல. ஆனா நீங்க என் வேலைய சுலபமாக்கிட்டீங்க அண்ணா அவ்வளவுதான். இப்ப அவர் செஞ்ச பாவங்களுக்கு என்ன பிராயச்சித்தம் செய்யறதுன்னுதான் யோசிச்சிட்டு இருக்கேன். ஏன்னா தெரிஞ்சோ தெரியாமலோ நடந்த எல்லாத்துக்கும் நானும் ஒரு காரணம் ஆயிட்டேனோன்னு என் மனசே என்ன கொன்னுட்டு இருக்கு” என்று தன் மன வேதனையை கொட்டினாள் தாமரை.
“என் ஒரு தங்கைக்கு நடந்த அநியாயத்திற்கு, இன்னொரு தங்கைய பழிவாங்கிட்டேனோன்னு மனசு வலிக்குது தாமர. என்ன மன்னிச்சிடும்மா” என்று அவன் மனதிலிருந்து சொல்லவும், “பெரிய வார்த்தையெல்லாம் பேசாதீங்கண்ணா. ஒரு விதத்துல இது எனக்கு விடுதலை அண்ணா. இல்லனா அந்த பாவி என்னையும் கூறு போட்டுக் கொன்னாலும் ஆச்சரியப்பட ஒண்ணுமில்ல ” என்று அந்தப் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தாள் தாமரை.
மனதிலிருந்த பாரம் நீங்கப்பெற்றவனாய் அங்கிருந்து சென்றான் ஆதி.
***
அடுத்து வந்த நாட்களில் ஆதியின் சித்தப்பா மற்றும் அத்தை என ஒவ்வொருவர் வீட்டிலும் அவர்களை விருந்துக்கு அழைக்கவும் வரதனுக்காக ஆதி மல்லி இருவரும் செல்லவேண்டியதாக ஆகிப்போனது.
மேலும் மல்லியின் உறவினர்கள் வேறு அவர்களை விருந்துக்கு அழைத்திருந்தனர். லட்சுமியின் வற்புறுத்தலால் சிலதினங்கள் முழுமையாக விடுமுறை எடுத்துக்கொண்டு, அய்யங்கார்குளம் வீட்டில் தங்கியிருந்தவாறு எல்லோர் வீட்டிற்கும் விருந்திற்கென சென்றுவந்தனர் ஆதியும் மல்லியும்.
ஒரு நாள் மாலை வானம் மெல்லிய மழைத் தூறல்களை வாரி இறைத்துக்கொண்டிருக்க, விண்ணில் வானவில் தோன்றி மனதைப் பறித்தது.
வாயில் திண்ணையிலிருந்த தூணை கட்டிப்பிடித்தவாறு அமர்ந்து அந்த மழையில் லயித்திருந்த மல்லியின் அருகில் அவளை உரசியவாறு நெருங்கி வந்து ஆதி உட்காரவும், கூச்சத்தில் நெளிந்தாள் மல்லி.
“இது உங்க சீ ஷோர் பங்களா இல்ல, கிராமாந்திரம். யாராவது பார்த்தாக்க முகத்துக்கு நேராவே பேசி நம்மள ஒரு வழி செஞ்சிருவாங்க!” என்றவாறு அவள் அங்கிருந்து நழுவ முயல, நூலிழை கூட இடைவெளி இல்லாமல் அவளது இடையைப் பற்றி அவளால் அங்கிருந்து செல்ல இயலாதவாறு தனது அருகில் நெருக்கிக்கொண்டு, “இருட்ட ஆரம்பிச்சுடுச்சு மல்லி, தூறல் வேற போடுது, இனிமே ஒரு ஈ காக்காய் கூட இங்க வராது” என்று கிரக்கமாகச் சொல்லி விஷமமாகச் சிரித்தான் ஆதி.
பய பந்து மனதில் உருள, பேச்சை மாற்ற எண்ணி, “நாளைக்கு உங்க பர்த்டே இல்ல, மாம்ஸ்? பழசையெல்லாம் மறந்து இனிமேலாவது நாம அதைக் கொண்டாடலாமா?” என்று கேட்டாள் மல்லி.
“சரி கொண்டாடலாம். ஆனா நீ எனக்கு என்ன கிஃப்ட் கொடுக்க போற?” எனத் தீவிரமாய் ஆதி கேட்க, “என்ன வேணாலும் கொடுக்கறேன். உங்களுக்கு என்ன பிடிக்கும் சொல்லுங்க?” என்று அவள் அப்பாவியாய் சொல்லிவிட, “அததான் சொன்னேன், எனக்கு என்ன பிடிக்கும்னு உன்னக் கேட்டா குடுப்பியா மல்லி” என்றான்.
அதில் இருந்த உள்குத்து புரியாமல் மல்லி, “நிச்சயமா கொடுப்பேன் மாம்ஸ்!” எனக்கூற, அவன் அடக்கப்பட்ட சிரிப்புடன், “அப்படியா நிஜமாவே உன்னைக் கேட்டா?” என சொல்லிக்கொண்டே அவன் விடாமல் தனது விரல்களால் அவளது முக வடிவை அளக்க, அவனது செய்கையிலும் வார்த்தையிலும் பேச்சற்றுப் போனாள் மல்லி.
அந்த சமயம் ஒரு பதின் வயதுச் சிறுமி பூ விற்றுக்கொண்டு அங்கே வரவும் பட்டென மல்லியை விட்டு விலகி உட்கார்ந்தான் ஆதி. அவனைப் பார்த்து ‘இது தேவையா?’ என்பது போல் மல்லி சிரித்து வைக்க, “இருக்குடி உனக்கு” என உதடு அசைவில் அவளிடம் சொன்னான்.
எதிர் புறம் இருந்த சிறிய திண்ணையில் தனது பூ கூடையை வைத்துவிட்டு, “அக்கா, மழை வலுக்கும் போல இருக்கு. நான் இங்க நின்னுக்கட்டுமா” என்று அந்தப்பெண் மல்லியிடம் கேட்டாள்.
“அதனால என்ன, மழை விட்டதும் போம்மா பரவாயில்ல!” என்றாள் மல்லி.
“தேங்க்ஸ் கா” என்றவள், “ப்சு… இன்னும் நிறைய பூ இருக்கு. இதுக்கு மேலே யாரு வாங்குவாங்கனே தெரியல. சீக்கிரம் போய் நாளைக்கு டெஸ்டுக்குவேற படிக்கணும்” என அந்தப் பெண் புலம்ப, மல்லியிடம், “நீ வேணா கொஞ்சம் பூ வாங்கிக்கோ மல்லி” என்றான் ஆதி.
“ஜாதி பூ இருக்கா” என அவள் பெயர் தெரியாமல் மல்லி இழுக்கவும், “அனு அதுதான்…க்கா என் பேரு” என்றாள் அவள்.
புரை ஏறியது ஆதிக்கு. மல்லி அவனை எரிக்கும் பார்வை பார்த்துவிட்டு பூ கூடையைப் பார்க்க, அதில் மல்லிகைப் பூ மட்டுமே இருக்கவும், “மல்லிப்பூ மட்டும் தான் இருக்கா?” என்று கேட்டாள். “ஆமாங்கா, மல்லி மட்டும்தான் கொண்டுவந்தேன்” என்றாள் அந்த அனு.
“மொத்தமா எவ்ளோ பூ இருக்கும்?” என ஆதி கேட்கவும், “பத்து பதினோரு முழம் இருக்கும்ணா” என்றாள்.
“முறையையே மாத்தறியேம்மா, அனு. அவ உனக்கு அக்கான்னா நான் அண்ணாவா?” என அவன் கேட்கவும், “அப்ப நான் உங்கள மாமான்னு கூப்பிடவா” என அனு கேட்ட அடுத்த நொடி, “இல்ல, நீ என்ன அண்ணின்னு கூப்பிடு” என்று கூறி விட்டு மல்லி ஆதியை நோக்கி கண் சிமிட்ட, “அடிப்பாவி” எனச் சத்தம் வராமல் சொன்ன ஆதி, “மொத்த பூவும் எவ்ளோன்னு சொல்லு” என்று கேட்டான்.
ஆச்சரியத்தில் விழி விரித்த அனு, “அண்ணா, மல்லிய மொத்தமா நீங்களே எடுத்துக்கப் போறிங்களா என்ன?” என்று கேட்கவும், மல்லியைப் பார்த்துக்கொண்டே, “ஆமாம் இன்னைக்கு மல்லிய மொத்தமா எடுத்துக்கலாம்னுதான் பாக்கறேன்” என்று இரு பொருள்பட ஆதி சொல்ல மல்லியின் முகம் அந்தி வானம் போன்று சிவந்துபோனது.
அதற்குள் மழை நின்றிருக்க அந்தப் பூவிற்கு உண்டான விலையைக் கொடுத்து ஆதி பூவை வாங்கவும் அந்த அனு அங்கிருந்து சென்றுவிட, அவன் சொன்னதுபோலவே மரகதவல்லியை தனது கைகளில் அள்ளிக்கொண்டு வீட்டிற்குள் வந்தவன் அவளைத் தன் இதழ் சிறையில் கைதியாக்கி, அதுநாள் வரை ஆழத்தில் பூட்டி வைத்திருந்த அவனது காதல் உணர்வுகளை விடுதலை செய்து, உயிரென அவளை மொத்தமாக தனக்குள் எடுத்துக்கொண்டான் தேவாதிராஜன். அவன் உயிருடன் இரண்டற கலந்தாள் மரகதவல்லி.
வாழ்க்கை புதிய பரிமாணத்தில் அவர்களுக்காக அழகான தொடக்கத்தை கொடுத்தது.
மல்லிக்கான நிர்வாகப் பயிற்சி, அவளது கனவான பட்டு தறிகள் என ஒரு பக்கம் வேலைகள் நடந்துகொண்டிருக்க, இடையிடையே அவர்களது தேன்நிலவா இல்லை தொழிற்முறைப் பயணங்களா என்று பிரித்தறிய முடியாத வண்ணம் உலகம் முழுதும் சுற்றிவந்தனர் ஆதியும் மல்லியும்.
காலம் தெளிவான நீரோடை போன்று அழகாகச் சென்றுகொண்டிருந்தது.
***
இங்கிலாந்து ரோஸ் பவ்ல் மைதானத்தில் இந்திய தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்த்துக்கொண்டிருந்தான் ஆதி, அருகினில் மல்லி.
ஒருசமயம் விளையாட்டாக அவளை அங்கே அழைத்து வருவதாக அவன் சொல்லிவிட, சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேறு வழியில்லாமல் வந்திருந்தான். காரணம் அப்பொழுதுதான் மல்லியின் வளைகாப்பு முடிந்திருந்தது.
வீட்டில் லட்சுமி, பரிமளா என இருவரின் தடைகளையும் மீறி அவளை அங்கே அழைத்துவந்திருந்தான் அவளது ஆசைக்காக. அழகிய இளஞ்சிவப்பு சல்வாரில் மேடிட்ட வயிற்றுடனும், கைகள் முழுவதும் கண்ணாடி வளையல்களுடனும், உச்சியில் குங்குமம் மின்ன தாய்மையின் பூரிப்புடன் திகழ்ந்த மல்லியை காணக் காண திகட்டவில்லை ஆதிக்கு. சந்தோஷத்தின் உச்சியிலிருந்தான் அவன்.
இந்திய அணி ஆட்டத்தில் பின்னி எடுத்துக்கொண்டிருக்க, விளையாட்டில் லயித்திருந்தவள் தன்னை மீறி அப்படியே அவன்மீது சாய்ந்து உறங்கியிருந்தாள் மல்லி. அவனது கரங்கள் அரணாக அவளை வளைத்திருந்தன.
அம்முவின் கண்கள் மல்லியையே வருடிக்கொண்டிருக்க, அவளது முகம் கைகள் என்று பார்த்துக்கொண்டே இறுதியாக அவளது பார்வை மல்லியின் வயிற்றில் வந்து உறையவும் உடல் சிலிர்த்து எழுந்து உட்கார்ந்தாள் மல்லி.
“மாம்ஸ், அம்மு… அம்மு… என்னையே பார்த்துட்டு இருக்குற மாதிரி ஃபீல் ஆகுது” என மல்லி சொல்லவும் அதிர்ந்தான் ஆதி. நீண்ட நாட்களாக வராமல் இருந்த கனவு மறுபடியும் வரவும் குழம்பித்தான் போனான்.
அங்கே ஒரு பெண்மணி மல்லியையே பார்த்துக்கொண்டிருப்பதை அப்பொழுதுதான் கவனித்தான் ஆதி. புன்னகையுடன் அவர்களை நெருங்கி வந்த அந்த நடுத்தற வயதில் இருந்த ஆங்கிலேயப் பெண்மணி, அவனிடம் எதோ சொல்லவும் அதற்குப் பதில் சொல்லிக்கொண்டிருந்தான். அவர் பேசிய ஆங்கிலம் சரியாகப் புரியாமல் அவர்கள் பேசுவதை பார்த்துக்கொண்டிருந்தாள் மல்லி.
அவர் மல்லியைப் பார்த்து புன்னகைத்து அவளிடம் கை குலுக்கிவிட்டுச் சிரிக்க, அவரது கண்களைப் பார்த்த மல்லியின் உடல் சிலிர்த்தது. அவளது கனவில் அவள் கண்ட அம்முவின் கண்கள்.
அவர் விடை பெற்று அங்கிருந்து சென்றுவிட, ஆதியிடம் அவள் அதைச் சொல்லவும் வியந்தவன், “அவங்க ஒரு கேன்சர் சர்வைவர். அவங்க ஒருதடவ இந்தியா வந்திருந்ததா சொன்னாங்க. உன்ன இதுக்கு முன்னால எங்கயோ பார்த்த மாதிரி இருந்துதாம் அவங்களுக்கு. நீ ரொம்ப அழகா இருக்கன்னு சொன்னாங்க! உனக்கு நல்லபடியா குழந்தை பிறக்க அவங்க கடவுளை பிரார்த்திக்கிறதாக சொன்னாங்க” என்ற ஆதிக்கு ஏதோ யோசனைத் தோன்ற, “மல்லி! ஒரு வேள அம்முவோட கண்கள இவங்களுக்குத்தான் பொருத்தினாங்களோ!” என்று நெகிழ்ந்தான்.
மறுபடியும் அந்தப் பெண்மணியை அவன் தேடிப்பார்க்க, அதற்குள் இந்தியா வெற்றிபெற்று போட்டி முடிந்திருக்கவும் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
அவரை மறுபடி பார்க்காமல் அங்கிருந்து கிளம்ப மனமின்றி ஆதி நின்றுவிட, அடுத்தநாள் அவனது பிறந்தநாள் என்பதினால் அவனுக்குப் பரிசுகள் வாங்கவேண்டுமென அவனை அங்கிருந்து இழுத்துச் சென்றாள் மல்லி.
(பி.கு.உண்மையில் இந்த போட்டி நடந்தது 2019 ஜூன் ஐந்தாம் தேதி. கதை படி ஆதியின் பிறந்தநாள் ஜூன் ஆறு. நான் இந்த கதையை எழுதி முடித்தது நவம்பர் 2018)
***


