//நாகரிகம் மாறுவதற்கு முன்பு பள்ளிக்கோ கல்லூரிக்கோ இப்படிப் போன போது எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை… இது வரலாறு//
எந்த மகான் சொன்னது இது?
என்னிடமும் ஒரு வரலாறு இருக்கிறது. 1990களில் தொடர்ந்து நடந்துகொண்டிருந்த ஒரு அவலம் அது!
நடந்தது எதோ ஒரு அத்துவான காட்டிலெல்லாம் இல்லை! நான் வசித்த, சென்னை மாநகரின் மிக முக்கியப் பகுதியான மாம்பலத்தில்தான். கோதண்டராமர் கோயில் தெரு… அங்கேதான் நான் படித்த பள்ளி இருக்கிறது (இன்று வரை அங்கே பெண்களுக்கு பாவாடை தாவணிதான் பள்ளிச் சீருடை). நான் படித்த பள்ளிக்கு மட்டுமில்லை, அங்கே இருக்கும் பல பள்ளிகளில் படித்த மாணவிகளும் அந்த வீதியைத்தான் அதிகம் பயன்படுத்துவார்கள். அன்றைய காலகட்டத்தில்,பெரும்பாலும் எல்லா பள்ளிகளிலுமே பாவாடை தாவணிதான் சீருடையாக இருந்தது.
அங்கே, எல்லை அம்மன் கோவில் தெரு, ஜோதி ராமலிங்கம் தெரு போன்ற பகுதிகளில் வசிப்பவர்களெல்லாம் அரங்கப்ப ரெட்டித் தெருவில் இருக்கும் ‘ட’ வடிவ குறுக்கு சந்தை உபயோகிப்பது வழக்கம் (பிரபல சித்தி தொடர் அந்த வீதியில்தான் படமாக்கப்பட்டது). எல்லோருமே கும்பலாக பேசிக்கொண்டே அந்த சந்தைப் பயன்படுத்தி வந்து செல்வதுதான் வழக்கம். அவர்கள் மட்டுமல்ல, மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன், தி.நகர் பஸ் ஸ்டான்டில் வந்து இறங்குபவர்களும் இந்த வழியாகத்தான் நடந்து வருவார்கள்.
பள்ளி நேரங்களில் பரபரப்பிற்கும் கூட்டத்திற்கும் பஞ்சமே இருக்காது. மாலை நேரங்களில் இந்த பரபரப்புக்கிடையில் தான், அந்த சந்தில், திரும்பும் இடத்தில் வெறிபிடித்த நாயைப் போன்று சைக்கோ மிருகம் ஒன்று நாக்கைத் தொங்கப்போட்டபடி நின்றுகொண்டிருக்கும்.
ஓரமாக வரும் பெண் பிள்ளைகளின் தாவணி மறைக்காத இடது மார்பகத்தை… (இதற்கு மேல் எழுதவே அசிங்கமாகத்தான் இருக்கிறது) கண்ணிமைக்கும் நொடிக்குள் பறந்து போய்விடுவான். ஒரு முறை கூட அவன் யார் கையிலும் சிக்கியதில்லை.
இதில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் ஏராளம். இந்த அசிங்கமெல்லாம் ஒன்றுக்குள் ஒன்றாகப் பழகும் தோழியர் அனைவருக்கும் தெரிந்தே இருக்கும். உள்ளுக்குள்ளே அழுது குமைவார்களே தவிர அதற்கு மேல் வேறேதும் செய்ததே இல்லை. எல்லோருமே கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காவல்துறை வரை யாருமே சென்றதில்லை.
துடைத்துப்போட்டுவிட்டு அப்படியே போய்விடக்கூடிய அவமானமா இது? ஆனால் துடைத்துப்போட்டுவிட்டுப் போவதைத் தவிர வேறு வழி இல்லையே!
பள்ளிப்பையை அணைத்துப்பிடித்து, பெரிய நோட்டுப் புத்தகத்தை கவசமாக்கி அதீத முன்னெச்சரிக்கையுடன் அந்த வழியே சென்ற நாள்கள் இயல்பாகத்தான் போனது. அதை இன்று நினைக்கும்போது அப்படி ஒரு ஆத்திரம் மூளுகிறது.
வீட்டிற்குள்ளேயே பதினாறு கஜம் புடவையைச் சுற்றிக்கொண்டு படி தாண்டாமல் வாழ்ந்த பெண்கள் எல்லோருமே பாதுகாப்பாகத்தான் உணர்ந்தார்களா என்று யாருக்காவது தெரியுமா?
குடும்பத்துக்குள்ளேயே இருந்துகொண்டு தங்கள் சொந்தக் குடும்பத்துப் பெண்களுக்கே பாலியல் தொந்தரவுகள் கொடுத்த ஆண்கள் இங்கே இல்லையா?
போய் உங்கள் அம்மா, பாட்டி, அத்தை என யாரிடமாவது கேட்டுப் பாருங்கள்… ஏட்டில் எழுதப்படாத இதுபோல ஒரு கதை அவரவர் காலகட்டத்துக்குத் தகுந்தபடி எல்லோரிடமும் ஒன்று இருக்கும். யாரிடமும் சொல்லிக்கொண்டெல்லாம் இருக்கமாட்டார்கள்.
சில நாள்களுக்கு முன்பு கூட, சென்னை கூடுவாஞ்சேரி அருகில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டு (ஆண்) ஆசிரியர்கள் யூ.கே.ஜி படிக்கும் ஒரு பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த செய்தி ஊடகங்களில் வெளிவந்ததே… அந்தப் பிள்ளையின் மீதான் இந்த வன்கொடுமைக்கு அவள் அணிந்திருந்த உடைதான் காரணமா? இதே போன்றதொரு சம்பவம் 2023 ஜூன் மாதம் நடந்தது. ஆனால் அதில் பாதிக்கப்பட்டது எழுந்து நடக்கக் கூட முடியாத நிலையில், வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருந்த 92 வயது முதிய பெண்மணி.
இந்த இரண்டு சம்பவங்களும் எடுத்துக்காட்டுகள் மட்டுமே. அன்றாடம் இதுபோல பல சம்பவங்கள் ஆங்கங்கே நடந்துகொண்டேதான் இருக்கின்றன. அவற்றுள் எவ்வளவு வெளிச்சத்திற்கு வருகிறது என்பதே கேள்விக்குறிதான். ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்து அவளுடைய தாய்ப்பாலைக் குடித்துத்தான் எல்லா ஆண் பிள்ளைகளும் வளர்க்கிறார்கள். ஆனால் ஏன் ஒரு பெண்ணை பாலியல் பிண்டமாக மட்டுமே பார்க்கிறார்கள்? இதற்கெல்லாம் பின்னால் இருக்கும் காரணம் என்ன என என்றாவது சிந்தித்திருக்கிறோமா?
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கலாச்சாரம், கற்புநெறி என பிறந்தது முதல் இறக்கும் வரை இங்கே எல்லா அறிவுரைகளும் பெண்களுக்கு மட்டும்தானா?
ஆண்களுக்கென்று இந்த சமூகம் எந்த நெறிமுறைகளையும் வகுக்கவில்லையா? இல்லை, இது ஆண்களால் கட்டமைக்கப்பட்ட சமூகம் என்பதால் இது போன்ற நெறிகளை ஆண்களுக்காக வகுக்கவே யாரும் விரும்பவில்லையா? அடூஉ குணங்கள் எனும் ஆண்களுக்கான நெறிகளைப் பற்றி நாம் எங்காவது கேள்விப்பட்டிருக்கிறோமா?
பெண் கடவுளரை துதிக்கும்போது கூட இங்கே அவளது இடையைப் பற்றியும் மார்பகங்களைப் பற்றியும் அல்லவா முக்கியமாக வர்ணிக்கப் பட்டிருக்கிறது! (உதாரணத்துக்கு, கம்பரின் கலைமகள் துதி, ஆண்டாள் துதி)
பெண்களின் சவுந்தர்ய லாவண்யங்களை அக்குவேறு ஆணிவேறாக வர்ணித்து அவளைப் போகப்பொருளாக ஆண்களின் மனதில் பதிய வைக்கும் விஷயத்தில் கதைகள், கவிதைகள், காப்பியங்கள், இலக்கியங்கள், இன்றைய நவீன சினிமா என எதுவும் சளைத்ததில்லை. கூடவே சுலபமாக கைக்குள் வந்து சேரும் ஆபாசப் படங்கள் வேறு. இதையெல்லாம் பார்த்தபின்னும் ஒருவன் புத்தனாக வாழ்வானா அல்லது பித்தனாகப் பிறழ்வானா?
அதுவும் தன்னம்பிக்கைக் குன்றி பல்வேறு காரணங்களால் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியின் பிடியிலிருக்கும் ஒருவன், இதுபோன்ற காட்சிகளைப் பார்க்கும்பொழுது மனப்பிறழ்ச்சிக்கு ஆளாகிறான். கூடவே மதுவும் போதைப்பொருட்களும் சேர்ந்துகொண்டால்? தன்னை எதிர்த்துப் போராட இயலாத இடத்திலிருக்கும் குழந்தையோ, கிழவியோ அல்லது அவனது பலத்தை யாரிடம் காண்பிக்க முடியுமோ அவர்களைத் தேர்ந்தெடுத்து தன் வெறியைத் தீர்த்துக்கொண்டு சுலபமாகக் கொலையும் செய்துவிட்டுப் போய்விடுகிறான்.
இதைத் தனியாகச் செய்யும் துணிவில்லாதவன் அவனைப் போன்றே இருக்கும் சிலரைத் துணையாகச் சேர்த்துக்கொண்டு இதைச் செய்கிறான்.
தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தைத் தொட்டிருக்கும் இன்றைய நவீன யுகத்திலும்கூட இத்தகைய காரணங்களால்தான் பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகளும் உச்சத்தைத் தொட்டிருக்கின்றன.
இது போன்ற பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி ஒரு பக்கம் தங்கள் உயிரையே பறிகொடுப்பதும், மறுபக்கம் பள்ளியில், பணியிடங்களில் அக்கம்பக்கத்தில் என ஆண்கள் கொடுக்கும் பாலியல் தொல்லைகளால் உடலளவிலும் மனதளவிலும் பாதிப்புக்கு உள்ளாகி வாழ்நாள் முழுவதும் நரகத்தை அனுபவித்துக்கொண்டு வாழ்வதும் என பெண் இனமே அழிவுப்பாதையில் பயணிக்க ஆண் பிள்ளைகள் சரியாக வழிநடத்தப்படாததே காரணம்.
ஒரு ஆண் மகனுக்கு அவனுடைய பாலியல் தேவைகளை எப்படிக் கையாளுவது என்கிற வழிகாட்டுதல் நம் சமுதாயத்தில் எங்காவது இருக்கிறதா? ஒரு பெண் பூப்படையும்பொழுது அவளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் எதுவும் பருவம் எய்தும் ஆண் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படுகிறதா? புவி வெப்பமயமாதலில் தொடங்கி பல்வேறு காரணங்களால், பெண்குழந்தைகள் சீக்கிரமே பூப்படைவதுபோல ஆண் பிள்ளைகளுக்கும் பன்னிரண்டு பதிமூன்று வயதிலேயே ஹார்மோன் மாற்றங்கள் உண்டாகிவிடுகின்றது. அப்பொழுதிலிருந்தே அவர்களுக்கு பாலியல் உந்துதல்கள் ஏற்படத் தொடங்குகின்றன.
இதையெல்லாம் உணர்ந்து – கடந்து சரியான மனப்பக்குவத்திற்கு அவர்கள் வரும் வரை ஆண் பிள்ளைகளைச் சரியானபடி வழிநடத்தும் கடமை பெற்றோருக்கும், சமுதாயத்திற்கும் இருக்கிறது. ஒருவன் துணிந்து பாலியல் குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க, சரியான சட்டங்களை இயற்றி இதுபோன்ற குற்றங்களைத் தடுக்கும் கடமை அரசாங்கத்துக்கு இருக்கிறது.
பெண் இனத்தை அழிவிலிருந்து பாதுகாப்பது ஆண்களுடைய தலையாய கடமை என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
ஆண் பிள்ளைகள் சரியானபடி வழிநடத்தப்படவில்லை என்றால் அடுத்த தலைமுறையை உருவாக்கும் பொறுப்பிலுள்ள பெண்ணினம் வலுவிழந்து தோற்றுப்போகும். எதிர்காலத்தில் வீரியமான சந்ததிகள் உருவாகாமல் இந்த சமுதாயம் அழிந்துபோகும். முதலில் நம் வீட்டு ஆண் பிள்ளைகளுக்குப் பெண்களை சக மனுஷியாய் பார்க்கச் சொல்லிக்கொடுப்போம். அதை விடுத்து, பெண்களில் பிரச்னைகள் புரியாத யாரோ ஒரு மூடர் தயாரித்த இதைப் போன்ற பகிர்வுகளை திரும்பத் திரும்ப சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, இதுதான் உண்மை என்கிற கற்பிதத்தை பரப்புரை செய்யாதீர்கள்.
இங்கே இதையெல்லாம் புனிதப் படுத்துவதை விட ஆண் – பெண் பாலியல் உணர்சிகளை புரிந்துகொண்டு அந்தப் புரிதலை அடுத்த தலைமுறைக்கு கடத்த முற்படுவதே நன்மை பயக்கும்!