Mathini-Yamini 4
மாயா-4
ஏற்கனவே மார்கழி அதிகாலை குளிர் அந்த கிராமத்து வீட்டின் முற்றம் வழியாகத் தடையின்றி உள்புகுந்து அவளை நடுங்கச் செய்ய, ஏனோ ஒரு நொடி தோன்றிய ஜெய்யின் நினைவால் அவளது உடல் சிலிர்த்தது.
"பாட்டி!" என குழப்பத்துடன் அழைத்தவள், "கல்யாணம்னு சொன்ன உடனே ஒருத்தரோட ஞாபகம் வந்தா அவரை நமக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னுதானே அர்த்தம்! ஒரு வேளை இதுதான் லவ்வா பாட்டி!" என அவள் கேட்க,
வாயை கையால் மூடிக்கொண்டு அதிர்ந்த சாந்தா பாட்டி, "உங்க பேத்தி என்ன கேள்வி கேக்கறா பாருங்க!" எனத் தாத்தாவைப் பஞ்சாயத்துக்கு அழைக்கவும், "அப்படி யாரு கண்ணு உன் ஞாபகத்துல வந்தவன்" என தாத்தா வேடிக்கையாகவே கேட்பதுபோல் கேட்க, கொஞ்சமும் தயங்காமல் சொன்னாள் மாதினி, "நம்ம ஜெய்தான் தாத்தா!" என்று.
"என்ன ஜெய்யா?" என வியப்புடன் பேத்தியின் முகத்தைப் பார்த்தவர், "இந்த லவ்வு ஜவ்வு இதையெல்லாம் பத்தி எங்ககிட்ட கேட்டா என்ன தெரியும் கண்ணு, உங்க அம்மா அப்பாவைதான் கேக்கணும்.
அவங்கதான காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க!" என்று எதார்த்தமாகத் தாத்தா சொல்ல,
"போங்க தாத்தா! இங்க பக்கத்துப் பக்கத்து வீட்டுல இருந்துகிட்டு, அவங்க லவ் பண்ணதுல என்ன த்ரில்.. ம்?
ஏற்கனவேதான் நீங்க ஒரு சம்மந்தம் வேற பண்ணியிருக்கீங்க.
அதுவும் அவங்க உங்க கிட்ட வந்து சொன்ன உடனே; என்ன ஏதுன்னு கூட கேக்காம உடனே கல்யாணத்தை பண்ணி வெச்சுடீங்க;
கொஞ்சம் கூட ஸ்வாரசியமே இல்ல. ம்ப்ச்.. ரொம்ப போர்!" என மாதினி அலுத்துக்கொள்ள,
அனைத்தையும் கேட்டவாறே, அவளுடைய அப்பாவின் கையில் காஃபீ அடங்கிய டபரா டம்பளரை கொண்டுவந்து கொடுத்த மாதினியின் அம்மா ஸ்வர்ணலட்சுமி, "சொல்லுவடி சொல்லுவ! நம்ம ஜெய்யாமே! நம்ம ஜெய்!
முதல்ல உனக்குத்தானே அவரை பார்த்தோம்! பெருசா அப்ப வேண்டாம்னு சொல்லிட்டு எல்லாம் முடிஞ்சுபோன பிறகு இப்ப வந்து இப்படி சொல்ற!
போறாத குறைக்கு எங்க லவ்வை வேற கிண்டல் பண்ணிட்டு இருக்க!"" எனப் பொரிய,
"ப்ச்.. இப்ப என்ன முடிஞ்சுபோச்சுங்கற ஸ்வர்ணா எதுவுமே முடியல! பாப்பா இப்பத்தான வீட்டுக்குள்ள நுழையறா! அதுக்குள்ள சண்டைக்கு கிளமபரியேம்மா நீ!
அவ சொல்ல வர விஷயத்தை சொல்லி முடிக்கட்டுமே!" எனப் பேத்திக்குப் பரிந்தவாறே காஃபியை ஆற்றி அதைக் கொஞ்சம் டபராவில் ஊற்றி மாதினியிடம் கொடுத்தார் சிவராமன் தாத்தா.
அதை வாங்கிக்கொண்டு ஊஞ்சலிலிருந்த புகைப்படங்களை எல்லாம் ஒரு பக்கமாக ஒதுக்கித் தள்ளிவிட்டு அதில் உட்கார்ந்தவள், காஃபியை சுவைத்துவிட்டு நாக்கை நீட்டி அவளுடைய அம்மாவிடம் பழிப்பு காட்டிவிட்டு, "தாத்தா எனக்கும் புரியல தாத்தா, இந்த போட்டோவை எல்லாம் பார்க்கும்வரைக்கும் எனக்கும் அப்படி ஒரு எண்ணம் இல்ல.
ஆனா பார்த்ததுக்கு அப்பறம் என்னால அவரை நினைக்காம இருக்க முடியல தாத்தா.
அவர் ஒரு ஸ்வீட் பெர்சன்!" என அவள் சொல்ல, அப்பொழுது, "எந்த ஸ்வீட் பர்சனை பத்திடா பேசிட்டு இருக்கு நம்ம வக்கீலாம்மா!" எனக் கேட்டுக்கொண்டே அங்கே ரத்தினம் வர அவரை பின்தொடர்ந்து கனகா பாட்டியும் அவளுடைய பெரியம்மா தங்கமும் அங்கே வந்துவிட, வீடே களை காட்டியது.
"ஒண்ணும் இல்லடா ரத்னம்! மாது குட்டிக்கு நம்ம யாமிக்கு நிச்சயம் பண்ணோம் இல்ல அந்த பையன் ஜெய்யைத்தான் பிடிச்சிருக்காம்! அவனைப் பத்திதான் சொல்லிட்டு இருக்கா!" என்றார் சிவராமன்.
லேசான அதிர்ச்சி தெரிந்தது ரத்தினத்திடம். தாடையைத் தடவியவாறே, "ஜெய் நல்ல பையன்தான். ஆனா இது ஒத்து வருமா சிவா!" எனத் தயக்கமாகவே வினவினார் அவர்.
"மார்கழி முடியட்டும் நாம ஜெய் அப்பா கிட்ட பேசுவோம். ஒண்ணும் தப்பில்லை. நடப்பது நடக்கட்டும். ஏன்னா மாது இதுவரைக்கும் வேணும்னு கேட்ட விஷயம் எல்லாமே ரொம்ப நியாயமானதாத்தான் இருந்திருக்கு" என்றார் சிவராமன்.
"அவ போக்கிலேயே போய்.. போய்தான் எல்லாரும் அவளைக் கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கி வெச்சிருக்கீங்க!
இப்ப கல்யாண விஷயத்துலையுமா?" என கனகா படபடக்க, "அப்படி சொல்லுங்க அத்தை!" என அவருக்குப் பின் பாட்டுப் பாடினாள் ஸ்வர்ணா.
"ஏய் உங்களுக்கு ஏண்டி இவளவு காண்டு!" என அவர்கள் மீது பாய்ந்த சந்தா பாட்டி, "அவ தெளிவா இருக்கும்போது நாம அவ போக்குல போனா என்ன தப்பு; என்ன தப்புன்னு கேக்கறேன்?
இதோ பாருங்க ரத்தினம் அண்ணா, மார்கழி முடியற வரைக்கும் எல்லாம் காத்திருக்க வேணாம்! நான் இன்னைக்கே அகிலாவை போன்ல கூப்பிட்டு பேசி சீக்கிரமா ஒரு முடிவைச் சொல்ல சொல்றேன்!
பொங்கல் முடிஞ்சதும் நிச்சயதார்த்தம் வெச்சுக்கலாமா இல்ல கல்யாணத்தையே முடிச்சிடலாம்னு எல்லாரும் யோசிக்கற வழியை பாருங்க!' என ஒரே பேடாகப் போட்டு அந்த பேச்சை முடித்தார் வழக்கம்போல யாமினிக்கு பரிந்துகொண்டு.
அனைவரும் அமைதியாக அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிட, வீட்டின் தோட்டத்திற்கு வந்தாள் மாதினி.
இரண்டு வீட்டிற்கும் பொதுவாக இரண்டு குடும்பங்களுக்கும் பாலமாக இருப்பதுபோல் பருத்து வளர்ந்திருந்தது அந்த மகிழ மரம்.