top of page

Konchum Elil Isaiye

அத்தியாயம் 4:


அவள் கையேட்டிலிருந்து...


நித்யாகிட்ட பேசின அந்த நாளுக்குப் பிறகு அவனைப் பத்தி நான் யோசிச்சதே இல்லை.


நான் காலேஜ் லாஸ்ட் இயர் படிச்சிட்டு இருந்தப்ப வேறொரு காலேஜ்ல நடந்த சிம்போசியம்க்கு பேப்பர் பிரசன்டேஷன்காகப் போனேன்.


அப்பலாம் என் க்ளாஸ்லயே என் கூடவே படிச்சிட்டிருந்த எழில்லாம் எனக்கு யாரோ ஓர் ஆளு போலத் தான். அப்பப்ப நோட்ஸ் வாங்கிக்கிறது டவுட்ஸ் க்ளியர் பண்ணிக்கிறதுக்கு மட்டும் தான் எழில் என்கிட்ட பேசிருக்காங்க. எழில் லாஸ்ட் பெஞ்ச் ஆளு. அரியர் இல்லாம எல்லாமே க்ளியர் செஞ்சிருந்தாலும், க்ளாஸ்ல அவ்ளோ அடென்ட்டிவ்வா இருக்க மாட்டாங்க. ஃப்ரண்ட்ஸ்சோட எங்கையாவது சுத்திட்டு தான் இருப்பாங்க.


அதனால இந்தச் சிம்போசியம்க்கு அவர் வரலை.  நானும் நித்யாவும் தான் எங்க க்ளாஸ்ல இருந்து போனோம். 


எங்க காலேஜ் மினி வேன்லயே அந்தக் காலேஜ்க்கு எங்களைக் கூட்டிட்டு போறோம்னு சொன்னதால தான் அப்பாவும் போக அனுமதி கொடுத்தாங்க.


அந்த மினி வேன்ல அவனும் வந்தான். 


அவனும் சிம்போசியம்க்கு வரான் போலனு மட்டும் நினைச்சிக்கிட்டேன். 


நானும் நித்யாவும் பேப்பர் பிரசன்டேஷன் செய்யும் போது எல்லாம் இவன் அங்க இருந்தானா இல்லையானு கூட நான் கவனிக்கலை.


அது ரொம்பப் பெரிய காலேஜ். எந்த பக்கம் போனாலும், எக்சிட் எங்கனு தேடி தான் வெளிய வரனும். அப்ப எங்கயுமே தனியா போய்ப் பழகாத ஆளு நானு. எனக்கு இந்த ரேக்கிங்னாலே ரொம்பப் பயம்.  தெரியாத காலேஜ், பசங்கள்லாம் கிண்டல் செய்வாங்களோ! நான் தனியா போய் மாட்டிப்பேனோனுலாம் ரொம்பப் பயம். அதனால ஒருவித பயந்த மனநிலைலயே இருந்தேன். நித்யாகிட்ட என்னை தனியா விட்டுட்டு எங்கயும் போய்டாதடினு சொல்லி அவகூடவே தான் சுத்திட்டு இருந்தேன்.டெக்னிக்கலா நிறையப் போட்டிகள் வச்சிருந்தாங்க. நாங்க எல்லாத்தையும் தேடித் தேடி போய்க் கலந்துக்கிட்டு இருந்தோம்.ரெஸ்ட் ரூம் போன இடத்துல மூடின கதவை திறக்க முடியாம, அதை நான் திறக்க முயற்சி பண்ணிட்டு உள்ளேயே இருக்க, நான் வெளில வந்து எங்கயோ போய்ட்டேன்னு நினைச்சி ரெஸ்ட் ரூம் விட்டு வெளிய வந்து என்னை தேடி போய்ட்டா நித்யா. நான் ஒரு வழியா கதவை திறந்து வந்து வெளிய பார்த்தா அவ இல்லை.ஏற்கனவே கதவை திறக்க முடியாத பதட்டத்துல என் ஹார்ட் பீட் எகிறி துடிச்சிட்டு இருந்துச்சு. இதுல இப்ப இவளும் அங்க இல்லைனு தெரியவும் ரொம்பப் பதட்டமாகி முகமெல்லாம் வியர்க்க ஆரம்பிச்சிடுச்சு. கண்ணுல நீர் எட்டி பார்க்கத் தொடங்கிய நேரம், அவன் என் பக்கத்துல வந்தான்.என்னங்க என்னாச்சு? எனி ப்ராப்ளம்னு என்கிட்ட வந்து கேட்டான்.


அந்த வழியா போனவன், நான் யாரையோ தேடிட்டுப் பதட்டமா போறதை பார்த்துட்டு வந்து இப்படிக் கேட்டிருந்தான்.நான் நித்யாவை காணோம். அவளைத் தான் தேடுறேனு அழுகை குரல்ல சொன்னேன்.அய்யோ இதுக்கு ஏன் அழுறீங்க. உங்க ஃப்ரண்ட் உங்களைத் தேடி எங்கயாவது போயிருப்பாங்களா இருக்கும். வாங்க நான் உங்களை அவங்ககிட்ட சேர்த்துடுறேனு சொல்லி அவன் கூடக் கூட்டிட்டுப் போனான்.அப்ப தான் கொஞ்சம் ஆசுவாசமாச்சு என் மனசு.உங்க பேப்பர் பிரசன்டேஷன் சூப்பர். செம்ம கணீர் போல்ட் வாய்ஸ் உங்களுக்குனு என் பேப்பர் பிரசன்டேஷனை பாராட்டினான்.எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு.உங்க பேரு என்ன? நீங்க எந்தப் போட்டிலலாம் கலந்துக்கிட்டீங்கனு அவனை நான் கேட்டேன்.அட நீங்க வேற... உங்க அளவுக்குப் படிப்ஸ் இல்ல நான். இங்க வந்தா க்ளாஸ் கட் செய்யலாம். ஓடி(On Duty) போட்டுக்கலாம். ஒரு டிரிப் போல என்ஜாய் செய்யலாம்னு வந்தேன்னு சொன்னான்.'என்னது க்ளாஸ் கட் அடிக்கவா' குற்ற பார்வை (ஆம் க்ளாஸ் கட் அடிப்பதெல்லாம் உலக மகா குத்தம் அப்போது எனக்கு) நான் அவனைப் பார்த்து வைச்சேன்.அவன் அந்தப் பார்வையெல்லாம் மதிச்சதா தெரியலை.என் பேரு அனந்தன். உங்க பேரு இசையரசி தானே. இன்னிக்கு பிரசன்டேஷன் போது தான் தெரிஞ்சிதுனு சொன்னான்.அவன்கிட்ட பேசிக்கிட்டே நடந்து வந்து நித்யாவைக் கண்டுபிடிச்சி அவகிட்ட என்னை ஒப்படைச்சிட்டு,Be Safe. Take careனு சொல்லிட்டு Return போறதுக்குக் காலேஜ் பஸ் வராதே! எப்படிப் போவீங்கனு கேட்டான்.அப்பா வருவாங்கனு நான் சொன்னதும்,அப்ப ஓகே. பார்த்துப் பத்திரமா போய்ட்டு வாங்க. Byeனு சொல்லிட்டுப் போய்ட்டான்.அந்தப் பஸ் பையன் இவன் தானானு நித்யா கேட்க, ஆமானு நான் தலை ஆட்டினேன்.ஏன்டி ஆள காணோம்னா இப்படித் தான் அழுது வைப்பியா! உங்க வீட்டுல உன்னைய ஓவரா தான் பொத்தி பொத்தி வளர்த்திருக்காங்க. கொஞ்சம் போல்ட்டா இருக்கப் பழகிக்கோ அரசினு நித்யா நிறைய அட்வைஸ் செஞ்சா அன்னிக்கு.நித்யா எனக்குக் கல்லூரியில கிடைச்ச பொக்கிஷ நட்பு. என் நலனுக்காக ரொம்பவே யோசிக்கும் ஒரு நட்பு.அவளுக்குக் கல்யாணமாகி வெளிநாடு போன பிறகு தொடர்பில்லாம போய்டுச்சு.என் கல்லூரி நினைவுகள் முழுசும் அவ மட்டுமே தான் இருப்பாள்.பின்னாடி நாட்கள்ல நான் அனந்தன் கிட்ட பேசி பழகியது கூட அவளுக்குத் தெரியாது. அப்பவே எங்க நட்பு காலாவதி ஆகிட்டு. நட்புக்கு காலாவதி ஏதுனு நினைக்கலாம்.  கல்யாணமான பெண்கள் அப்பப்ப இப்படி நினைவுகள் மூலமா மீட்டுக்கலாமே தவிர, நிஜத்துல மீட்குறது நடக்காத காரியம் தான்.இந்தச் சிம்போசியத்திற்குப் பிறகு தினமும் பஸ்ல அனந்தனை பார்த்தாலும் அவன் கிட்ட நான் பேசினது, எங்களோட ஃபேர்வெல் நாள்ல தான்.எல்லாப் பரீட்சையும் முடிஞ்ச அந்தக் கடைசி நாள்ல, எல்லா டிபார்ட்மெண்ட்ஸ் லாஸ்ட் இயர் மாணவ மாணவிகளுக்கும் சேர்த்து ஃபேர் வெல் வச்சாங்க.  அந்த ஃபேர் வெல் ஆர்கனைஸ் செஞ்சது ஆல் டிபார்ட்மெண்ட்ஸ் தேர்டு இயர் ஸ்டூடண்ட்ஸ்.ஃபேர்வெல் லேட்டா தான் ஸ்டார்ட் செஞ்சாங்க. அதனால காலேஜ் பஸ்ல கிளம்பும் போதே நைட் எட்டு மணி ஆகிட்டு. எப்பவும் போல என் பஸ்ல அனந்தன் இருந்தான். ஆனா அன்னிக்கு நாங்க ஊருக்கு போற ப்ளான் இருந்தனால அப்பா என்னை பாதில ஒரு இடத்துல இறங்கச் சொல்லிட்டாங்க.நான் டிரைவர்கிட்ட சொல்லி இறங்கின இடம் ரொம்ப இருட்டா இருந்துச்சு. அப்பாவும் அந்த இடத்துக்கு வந்து சேரலை. அப்ப பேசிக் ஃபோன் மாடல் இருந்தாலும் எனக்குனு ஃபோன்லாம் கிடையாது.  அப்பாகிட்ட இறங்குற இடம் பத்தின சேஞ்சஸ் இல்ல வர்றதுக்கு லேட் ஆகும்னு எதைப் பத்தி சொல்லனும்னாலும் காலேஜ் ஸ்டாஃப் கிட்ட போன் வாங்கி அதுல தான் அப்பாகிட்ட பேசுவேன்.அன்னிக்கு ஸ்டாஃப் யாரும் பஸ்ல வராதனால, காலைலேயே அப்பாகிட்ட வழில இறங்கிடுவேன் வந்துடுங்கனு சொல்லிட்டு வந்தனால, காலேஜ் கிளம்பும் போது ஒரு ஸ்டாஃப் கிட்ட போன் வாங்கிக் கிளம்புறதை மட்டும் சொன்னேன்.  அந்த டைம் வச்சி கேல்குட் செஞ்சி வந்துடுறேனு அப்பா சொன்னாங்க.  ஆனா நான் இறங்கும் போது அப்பா இல்லை. ஒரு இரண்டு நிமிஷம் கழிச்சி நான் திரும்பி பார்த்தா அந்த இடத்துல லாரி டிரைவர்ஸ் லாம் லாரியை ஓரங்கட்டி தூங்கிட்டு இருந்தாங்க.எனக்குப் பருத்தி வீரன் படம்லாம் கண்ணுக்கு முன்னாடி வந்து பயமுறுத்திட்டு போச்சு.நான் பயந்து போய் நின்னுட்டு இருக்கும் போது, என்னங்க அப்பா வரலையா இன்னும்னு ஒரு குரல் என் பின்னாடி கேட்க, நான் யாருடா அதுனு பதறி குரல் வந்த திசை திரும்பி பார்த்தேன்.ஹே ரிலாக்ஸ் கூல் கூல். ஏன் இவ்ளோ பயம். நான் தான்னு சொல்லி முன்னாடி வந்து நின்னான் அனந்தன்.வேற யாரோ தான் பஸ்ல இருந்து இறங்குறாங்கனு நினைச்சிட்டு நான் கவனிக்கலை. பஸ் கிளம்பின பிறகு தான் கண்ணாடி வழியா நீங்க நிக்கிறதை பார்த்தேன். தனியா வேற நிக்கிறதை பார்த்ததும் கண்டிப்பா பயப்படுவீங்கனு நினைச்சேன். அதான் டிரைவர் அண்ணாவ நிறுத்த சொல்லி இறங்கி வந்துட்டேன். பயப்படாதீங்க. அப்பா வரவரைக்கும் கூட நான் இருக்கேன்னு சொல்லி எனக்குத் துணையா இருந்தான்.அப்ப இருந்த அந்தப் பதட்ட சூழல்ல எப்படிபட்ட ஆறுதலை அவனோட ப்ரசன்ஸ்(presence) எனக்குக் கொடுத்துச்சுனு அவனுக்கே தெரியாது.அவன் மேல எனக்குப் பெரிய மதிப்பு மரியாதைலாம் வந்த நொடி அது.ஆனா அப்பா பார்த்தா திட்டுவாங்களேனு தான் அந்த ஆறுதலுக்குப் பிறகான ஆசுவாசத்துல எனக்குத் தோணுச்சு. அதுக்காக உதவி செய்ய வந்தவனை எப்படிப் போனு துரத்துறது.ரெண்டும் கெட்டான் மனநிலையில் நின்னுட்டு இருந்தேன் நான்.அப்பாவுமே டிராபிக்ல சிக்கி நான் தனியா நிப்பேனேனு பயந்துட்டே தான் வந்தாங்கனு அவங்க வந்து அவன் கிட்ட தேங்க்ஸ் சொன்னதும் தான் புரிஞ்சிது.அவ தனியா நிப்பாளே, இந்த இடம் சேஃப் வேற இல்லையே, அவகிட்ட ஃபோனும் இல்லயே, இங்க போய் அவளை இறங்க சொல்லிட்டோமேனு ரொம்பவே பயந்துட்டு வந்தேன். உங்களைக் கூடப் பார்த்ததும் மனசுல அவ்ளோ நிம்மதினு அவனைப் பார்த்து அப்பா சொன்னாங்க.இதுல என்னப்பா இருக்கு. பரவாயில்ல. நீங்க கிளம்புங்க.  ரொம்ப நேரமாகிட்டுனு சொல்லிட்டு அவன் கிளம்பிட்டான்.ஆனா அப்பா சொன்ன இந்த வார்த்தைல, அப்பா ஒரு பையனை நம்புறாருங்கிறது தான் என் மைண்ட்ல முதல்ல அச்சடிச்ச மாதிரி நின்னுச்சு. இந்த நம்பிக்கை தான் பின்னாடி நான் அவனை நம்பி அவன் கிட்ட பேச காரணமா இருந்துச்சு.இவன் என் கூடத் தினமும் பஸ் ஏறும் போது அப்பா கவனிச்சிருக்காங்க.  இவனை அப்பாக்குப் பாதுகாப்பானவனா தோணிருக்கு. இப்படிலாம் என் மைண்ட் எங்கெங்கயோ போய்ட்டு இருக்க, அப்பா கூட வண்டியில போயிட்டு இருந்தேன் நான்.அன்னிக்கு எனக்குக் காலேஜோட கடைசி நாள், இதுக்கப்புறம் அவனைப் பார்க்க மாட்டேனு தெரியும்.


அவன் என் வாழ்க்கையில திரும்ப வரனும்னு இருந்தா, எப்படினாலும் அவனைத் திரும்பப் பார்க்க வச்சிடும் இந்த வாழ்க்கை. அப்படி நடந்தா பாத்துக்கலாம்னு நினைச்சிட்டு நான் போய்ட்டேன்.


அதுக்கப்புறம் இரண்டு வருஷம் கழிச்சி நான் ஒரு கம்பெனில சாப்ட்வேர் இன்ஜினியரா வேலை செஞ்சிட்டு இருந்த நேரத்துல, சில வேலைகளுக்காக நாங்க மத்த டீம் காண்டேக்ட் செய்றது மாதிரி இருக்கும். அப்படி நான் காண்டேக்ட் செய்யும் போது ஆன்சைட்ல இருந்து ஒருத்தங்க அந்த இஷ்யூ சால்வ் செய்ய ஹெல்ப் பண்ணாங்க.  இமெயில் மூலமா தான் இஷ்யூவை பத்தி பேசிக்கிட்டோம். இஷ்யூ சால்வ் ஆனதும் ஆபிஸ் ஸ்கைப்ல மெசேஜ் வந்தது.


ஏங்க என்னைய தெரியுதானு மெசேஜ் செஞ்சிருந்தான்.


அவனுக்கு மெயில் செய்யும் போது கூட அவன் பெயரை முழுசா நான் கவனிக்கலை. 


மெசேஜ் செய்யும் போது அவன் பெயரை பார்த்தா, அதுல இருந்தது "அனந்தன் ஆராவமுதன்".


*****


இசையைக் காணும் ஆவலில் இரு இரு படிகட்டுகளாய் தாவி சென்றவன், அவள் காஃபி ஏரியாவில் அமர்ந்திருப்பதைக் கண்டு, அங்குச் சென்று பார்க்க, அங்கொரு மேஜையில் கண்களில் நீருடன் எங்கேயோ வெறித்துப் பார்த்தபடி அமர்நதிருந்தாள் இசையரசி.


எழிலரசன் அவளின் எதிரிலுள்ள நாற்காலியில் அமர, அதையும் கூட உணராது அவளது பார்வை சுவற்றையே வெறித்துப் பார்த்த படி இருந்தது.


இவன் மனதிலோ அவளின் நிலை கண்டு பலவித எண்ணங்கள் சுழலவாரம்பித்தன.


"இசைக்கு என்னை பிடிக்கலையோ? நாளைக்குப் பொண்ணு பார்க்க வர வேண்டாம்னு சொல்ல தான் வந்திருக்காளோ? இவ கூட இவளோட ஃப்ரண்ட்ஸ் வந்திருந்தா இவளை இப்படித் தனியா விட்டிருக்க மாட்டாங்களே! ஒரு வேளை இவ யாரையோ லவ் பண்றாளோ? அதை என்கிட்ட சொல்ல தான் இன்னிக்கு தனியா வந்திருக்காளோ?"கண்டிப்பாக அவள் தன்னை நிராகரித்து, அதற்குரிய காரணத்தை விளக்க தான் வந்திருக்கிறாள். இவ்விஷயமாக வீட்டில் ஏதோ பிரச்சனை நிகழ்ந்திருக்கிறது, அதற்காகத் தான் அழுகிறாள். ஏமாற்றத்தை எதிர்கொள்ளத் தயாராய் இரு எழில் எனத் தனக்குத் தானே ஆறுதலையும் தேறுதலையும் கூறி தனது இதயத் துடிப்பை சீர் செய்தவாறே, "இசை" என அவளை அழைத்தான் எழில்.


அவனின் அழைப்பில் சட்டெனத் திரும்பி பார்த்தவள், கண்களைத் துடைத்து ஒரு புன்னகையை இதழில் தவழ விட்டு, "ஹே எழில்! எப்படி இருக்கீங்க?"  என்றாள்.


அவளின் கவலையை அழுகையைத் தன்னிடம் காண்பிக்க மறுக்கிறாள் என்பதைக் குறித்துக் கொண்டான் எழிலரசன்.


இதழ் சிரித்தாலும், அவளது கண்களில் நீர் தேங்குவதும் அதை அவள் கன்ட்ரோல் செய்வதும் நன்றாகவே தெரிந்தது.


அவனின் மூளை வேலை நிறுத்தம் செய்திருந்தது. அவளின் போலிச் சிரிப்பு கலந்த அழுகை மட்டுமே அவன் கண்களுக்குள் நிழலாடின.


அவள் எழில் எழில் என அழைத்தும் அவனிடம் எதிர்வினை இல்லாதிருக்க, மேஜை மீதிருந்த அவனின் கையைத் தட்டினாள்.


பிரம்மையிலிருந்து வெளிவந்தவன் போல் தலையை உலுக்கியவன், "என்னாச்சு இசை? எதுவும் பிரச்சனையா? ஏன் கண்ணு கலங்கியிருக்கு? ஏன் உன் கலீக்ஸ் இல்லாம தனியா இந்த ஆபிஸ் வந்திருக்க" தன்னையும் மீறி அடுக்கடுக்காய் கேள்விகளாய்க் கேட்டிருந்தான்."அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லங்க. ஏன் என்னைப் பார்த்தா அழுத மாதிரியா தெரியுது" இசையரசி சிரித்துக் கொண்டே கேட்க,"ஹ்ம்ம் உனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லைனா எனக்கு ஹேப்பித் தான். சரி பாலா, பிரபாலாம் எங்க?""அவங்க எங்க ஆபிஸ்க்கு போய்ருக்காங்க. இந்த ஆபிஸ்ல ஒரு அர்ஜன்ட் வேலை இன்னிக்கு இருக்கு. அது க்ளைண்ட் கூடச் சேர்ந்து தான் செய்யனும். அவங்க இரண்டு பேருமே இன்னிக்கு இங்க வர முடியாத சூழல்ல இருந்தனால நான் வந்தேன்"அவளின் குரல் கணீரெனத் தெளிவாய் இருந்தாலும் கண்களிலிருந்து கண்ணீர் எப்போது வேண்டுமானாலும் விழுவேன் என்ற நிலையில் எட்டிபார்த்துக் கொண்டிருந்தன.இதற்கு மேல் அவளின் கவலைக்கான காரணத்தைப் பற்றிக் கேட்க மனமில்லை எழிலுக்கு.  ஆனால் அவளைத் தனியாய் விடவும் மனமில்லை.


"சரி வா! ஸ்ட்ராங்கா ஒரு டீ குடிச்சிட்டு வருவோம். இன்னிக்கு ஃபுல்லா நீ என் கூடத் தான் இருக்கனும் சரியா! என் ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் இன்னிக்கு வர்க் ஃப்ரம் ஹோம் எடுத்துட்டாங்க. அதனால எனக்கு இன்னிக்கு நீ தான் கம்பெனி தரனும் சரியா"அவன் இவ்வாறு கூறும் போது அவனைக் கடந்து சென்ற அவனது அலுவலகத் தோழமைகள், 'நீ நடத்துப்பா நடத்து' என வாயசைத்துச் செய்கைச் செய்து விட்டுச் சென்றனர்.அவர்களைக் கண்டு கொள்ளாது இசையரசியைப் பார்த்தவன், அவளின் பதிலுக்காய்க் கூடக் காத்திராது, "வா இசை போலாம்" எனக் கூறி அவளின் மடிக்கணிணி பையையும் தூக்கிக் கொண்டான்.


"இருக்கட்டும் எழில்" பையை வாங்க அவள் கை நீட்ட,


தனது இருக்கைக்குச் சென்று அங்கு இவளது பையினை வைத்தவன், "வா டீ குடிக்கப் போலாம். எனக்கு ரொம்பத் தலை வலிக்குது" எனக் கூறி அவளை அலுவலகத்தின் வெளியே இருக்கும் டீ கடைக்கு அழைத்துச் சென்றான்.போகும் வழியில் தனது அலுவலக மேனேஜருக்கு, ஒரு முக்கியப் பர்சனல் வேலையில் சிக்கி கொண்டதால், தான் இன்று தாமதமாய் வேலையைத் தொடங்குவேன் என்று குறுஞ்செய்தி அனுப்பி விட்டு இவளுடன் அமர்ந்திருந்தான்.அந்தக் கடையில் அவள் அமர்ந்த பிறகு, அவன் அவள் முகத்தைப் பார்க்க, கண்களில் நீர் தேங்கியதாகவே இருந்தது."இசை, உனக்குத் தெரிஞ்சவங்க யாரும் இறந்துட்டாங்களா?""அய்யோ அப்படிலாம் இல்ல" பதறி அவளின் வாய் கூற, மனமோ 'இல்ல இல்ல அப்படிலாம் எதுவும் அவனுக்கு ஆகியிருக்காது. அவன் நல்லா தான் இருப்பான்' தனக்குத் தானே ஆறுதல் கூறியது."சரி சரி ரிலாக்ஸ். சாரி! கண்ல தண்ணி நின்னுக்கிட்டே இருக்கே!  அதான் அந்த மாதிரி எதுவும் இருக்குமோனு கேட்டேன்"அதன்பிறகு அவளை இயல்பு நிலைக்குத் திரும்பி வர வைக்கும் பொருட்டுத் தங்களது கல்லூரி நாட்களைப் பற்றிப் பேசவாரம்பித்தான்.அது நன்றாகவே வேலை செய்தது.  தனது கல்லூரி அனுபவங்களை அவளும் பகிர்ந்தாள். அந்நேரம் அவளுக்கு எழிலை பற்றி எந்தவிதமான எண்ணங்கள் இருந்தது என்பதெல்லாம் அப்போது அவள் பகிர்ந்து கொண்டாள்.அவளை அவளின் இருக்கை வரை சென்று விட்டு வந்தவன், "சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு வா! லன்ச்க்கு மேல லீவ் சொல்லிடு. நான் உன்னை ஒரு இடத்துக்குக் கூட்டிட்டுப் போறேன்" என்றான் எழிலரசன்."அதெல்லாம் வேண்டாம் எழில்.  அப்பாக்குத் தெரிஞ்சா திட்டுவாங்க" அவள் கூற,"வெளிலலாம் எங்கயும் உன்னை கூட்டிட்டுப் போகலை. இங்க ஆபிஸ்லயே ஒரு இடத்துக்குத் தான் போறோம். நீ லீவ் மட்டும் சொல்லிட்டு வா" கூறி விட்டு சென்று விட்டான்.இவள் இருக்கும் மனநிலையில் யாருடனும் எங்கும் செல்லும் எண்ணமெல்லாம் இல்லை.  தனியாய் கதறி அழ வேண்டும்.  வீட்டிலும் அழ முடியாமல் அலுவலகத்திலும் அழ முடியாமல் கண்ணீரைக் கட்டுபடுத்திக் கட்டுபடுத்தித் தொண்டை வலியுடன் அமர்ந்திருந்தாள்.சரியாய் மதிய உணவு வேளையில் வந்து நின்றான் எழில். "லீவ் சொல்லிட்டியா இசை""இல்லை எழில். எனக்கு இப்ப எங்கேயும் போற மனநிலை இல்லை எழில்" புரிஞ்சிக்கோயேன் என்பது போல் கண்ணைச் சுருக்கி கெஞ்சும் பாவனையில் அவள் கூற,"எனக்காக வாயேன் ப்ளீஸ்" அவளைப் போலே கண்ணைச் சுருக்கிக் கெஞ்சும் பாவனையில் கூறினான் அவன். சற்றாய் சிரிப்பு வந்தது அவளுக்கு."இரு நானே உன் மேனேஜர்கிட்ட பேசுறேன்" அவன் கூற,"அவ்ளோ பெரிய ஆளா நீங்க. நீங்க கேட்டதும் எனக்கு லீவ் கொடுத்துடுவாங்களா?" கேட்டாள் அவள்.இவன் சிரித்துக் கொண்டே அவளது மேலளரின் கண்ணாடி அறைக்குள் சென்றான்.


இவளுக்கு அவன் மேனேஜரிடம் பேசுவது மட்டும் தான் கண்ணுக்கு தெரிந்தது. என்ன பேசினானென்று கேட்கவில்லை. இவன் திரும்பி வந்தததும், "சக்சஸ்" என வெற்றிக் குறி காண்பித்து விட்டு அவளது பையினைத் தூக்கி வைத்துக் கொண்டு வா வா வென அழைக்கவாரம்பித்தான்."எப்படி ஒத்துக்கிட்டாரு? என்ன சொன்னீங்க நீங்க?"


"உண்மையைச் சொன்னேன்" என்றவன் கூற,


"அதர பழசு டயலாக்" அவனை அவள் முறைக்க,


"முதல்ல இங்கிருந்து கிளம்பு. அவரு அப்புறம் லீவை கேன்சல் செஞ்சிட போறாரு" என்றுரைத்தவன் அவளை அழைத்துச் சென்றான்.அவன் தான் முன்னேயே அந்த மேனஜரிடம் இசையைத் தான் மணந்து கொள்ள இருப்பதாகக் கூறியிருந்தானே, ஆகையால் தற்போது சென்று அவளைத் தான் வெளியில் அழைத்துச் செல்ல இருப்பதாகக் கூறியே அவரிடம் அனுமதி பெற்று வந்தான்.இவளிடம் இவற்றைக் கூற முடியாதே ஆகையால் ஏதேதோ கூறிச் சமாளித்து அழைத்துச் சென்றான்.அவர்களின் அலுவலகத்திற்குள்ளேயே இருந்த ஒரு பெரிய ஆலமரத்தின் நிழலில் அமைந்திருந்த சிமெண்ட் மேஜையில் அமரச் சொன்னான்."இங்க வர்ற இந்தக் காத்து மனசை ரொம்ப இதமாக்கும் இசை" என்றவன் கூற,"பெரியவங்களாகிட்டா அழுறதுக்குக் கூட நேரம் காலம்னு பார்க்க வேண்டியது இருக்குல எழில். மனசு சரியில்லனு ஆபிஸ்க்கு லீவ் கூடப் போட முடியாது. நமக்கான வேலைகள் நம்மளை நம்ம கஷ்டத்தை நினைச்சி அழ கூட விடாம இழுத்துட்டு போகுதுல"முந்தைய நாளிலிருந்து அவள் அடக்கி வைத்திருந்த அழுகையின் வெளிப்பாடாய் இவ்வார்த்தைகள் அவள் வாயிலிருந்து வெளிப்பட,


அவள் எதை இவ்வாறு கூறுகிறாள் என இவனுக்கு விளங்காவிடினும்,


"அழனும்னு நினைக்கிறியா இசை? ஆனா சுற்றம் சூழல்னு அழ முடியாம தவிக்கிறியா? அதான் உன் மனசு பலகீனமாகும் போதெல்லாம் கண்ணுல கண்ணீர் எட்டி பார்த்துட்டு போதா? அழுறது தப்பில்லை இசை.  ஆனா ஒரேயடியா அழுது முடிச்சிடனும். அதுக்கு அப்புறம் அழுறதையே நினைக்கக் கூடாது, அடுத்தது என்னனு தான் யோசிக்கனும். இப்ப இங்க இந்த நேரம் யாரும் வரமாட்டாங்க.  மொத்தமா அழுது தீர்த்திடு இசை.  நான் வேணா அங்க தள்ளிப் போய் நிக்கிறேன். அழுது முடிச்சிட்டு சொல்லு" அச்சமயம் தனது மனத்தில் தோன்றியதை உரைத்தான்.


அவளை மீறி கண்ணீர் அவள் விழிகளை நிறைக்க, அந்த இடத்தை விட்டு விலகித் தள்ளி நின்று கொண்டான்.அரை மணி நேர அழுகைக்குப் பின் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவளாய் அவனிடம் சென்று நின்றாள்.


"அழுது முடிச்சாச்சா! இனி அழ மாட்ட தானே"


அவள் மாட்டேன் எனத் தலை அசைக்க, "ஹ்ம்ம் தட்ஸ் மை கேர்ள்" என்றவன்,"உன்னை எதுக்காக லீவ் போட சொன்னேனோ அந்த இடத்துக்கு இப்ப உன்னை நான் கூட்டிட்டு போறேன்" என்றதும்,


"அப்ப இங்க என்னை நார்மல் ஆக்க தான் கூட்டிட்டு வந்தீங்களா?" எனக் கேட்டாள்.


மென்மையாய் சிரித்து ஆமெனத் தலை அசைத்தான்.


அடுத்து அவளை அவர்கள் அலுவலகத்தின் தரை தளத்திற்கு அழைத்துச் சென்றவன்,


"நம்ம வேலை பத்தி தான் உனக்குத் தெரியுமே இசை. அடிக்கடி செம்ம ஹெக்டிக்கா பிரஷ்ஷரா போகும்ல. அந்த மாதிரி நேரத்துலலாம் நான் ரிலாக்ஸ் செஞ்சிக்க இங்க தான் வருவேன்" என்றான்.


அங்கு ஆறு மாதம் முதல் இரண்டு வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் இருந்தனர்.  "இது க்ரீச் இசை. நம்ம ஆபிஸ்ல வேலை செய்றவங்களோட குழந்தைகள் தான் இவங்க" என்றான் எழிலரசன்.


ஆங்காங்கே பல வண்ண ஓவியங்கள் வரைந்திருந்த சுவர்களுக்கு இடையில் சிறிய ஹட் போன்ற வடிவில் அழகாய் இருந்தது அந்த அறை.மூன்று குழந்தைகள் தூளியில் தூங்கிக் கொண்டிருக்க, மற்றவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.அந்தக் குழந்தைகளின் பராமரிப்பாளர்கள் இவனிடம் வந்து பேசிக் கொண்டிருக்க, இவள் சென்று தூளியிலுள்ள குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.அதில் ஒரு குழந்தையின் தூக்கம் சற்றாய் கலைந்து உடலை நெளிக்க, தூளியும் அதற்கேற்றார் போல் ஆட, இவள் மெதுவாய் அக்குழந்தையின் தூக்கம் கலையா வண்ணம் ஆட்டிவிட்டாள். மீண்டுமாய் அக்குழந்தை துயிலுக்குள் சென்றது.


சிறிது நேரம் கழித்து அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து மற்ற குழந்தைகளின் விளையாட்டைக் கவனிக்கத் தொடங்கியவள், சுற்றம் மறந்து அதனுள் மூழ்கிப் போனாள்.


ஒரு மணி நேரம் கழித்துக் கையில் தேநீருடன் வந்த எழில், "இசை இசை" என அழைக்க, அவன் இரு முறை அழைத்த பின்பே, சுற்றத்தை உணர்ந்து அவனைத் திரும்பி பார்த்தாள்.


அவன் கையிலிருந்த தேநீரை வாங்கியவள் தேங்க்ஸ் என்றாள்.


"எதுக்கு? டீ க்கா"


"இல்ல இன்னிக்கு நீங்க என்கூட இல்லனா நான் என்னவாகியிருப்பேன்னு எனக்கே தெரியாது. தேங்கஸ் ஃபார் எவ்ரிதிங்" தேநீரைக் குடித்துக் கொண்டே அவள் கூற,


"சரி நாளைக்கு என்ன ப்ளான்" எனக் கேட்டான்.


அவளுடன் இத்தனை நேரமாய் இருந்ததிலேயே அவளின் பெற்றோர் அவளிடம் தான் நாளை பெண் பார்க்க வர இருப்பதை உரைக்கவில்லை என்பதை அறிந்து கொண்டான்.  இருந்தும் அவள் வாயிலிருந்து அதை அறிய எண்ணியவன் அவ்வாறு கேட்டான்."நாளைக்குச் சனிக்கிழமை. ஆபிஸ் லீவ்வு. அதான் என்ன ப்ளான்னு கேட்டேன்""பெரிசா ஒன்னும் இல்லை எழில். பக்கத்துல இருக்கக் கோவிலுக்குப் போவோம். அவ்ளோ தான்" என்றாள்."சரி அப்பா என்னை கூட்டிட்டு போக வந்துடுவாங்க. நான் கிளம்புறேன். ஒன்ஸ் அகைன் தேங்க்ஸ். என் வாழ்க்கைல மறக்க முடியாத ஃப்ரண்ட் ஆகிட்டீங்க நீங்க.  இன்னொரு நேரம் நான் இங்க வரும் போது மீட் பண்ணலாம். பை பை" எனக் கூறி கிளம்பி விட்டாள்.


போகும் அவளையே பார்த்திருந்தான் எழிலரசன்.'நாளைக்கு அவளை நான் பொண்ணு பார்க்கும் போது அவளோட ரியாக்ஷன் என்னவா இருக்கும். அவளை இம்ப்ரஸ் செய்ய நான் இதெல்லாம் செஞ்சேன்னு அவ நினைச்சிட கூடாதே. என்னை தப்பா நினைச்சிடுவாளோ' பயம் மனத்தை கவ்வ அன்றைய தூக்கத்தைத் தொலைத்தான்.

0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page