14
அத்தனை கோபத்துடன் பூரணி வீட்டிற்குள் சென்ற லதா திரும்பி வரும் போது மொத்தமாக அணைந்து போன ஸ்விட்ச் போலதான் வந்தார். முகத்தை சுருக்கி கொண்டு வீட்டிற்குள் நுழைந்தவர் நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்து தீவிர யோசனையில் ஆழ்ந்து விட,
“என்னம்மா என்னாச்சு... ஒரு மாதிரி இருக்கீங்க... ஏதாவது ஏடாகுடமா பேசிட்டாங்களா” என்று அருள் பதட்டத்துடன் விசாரித்தான்.
அவர் மூச்சை இழுத்து விட்டு, “அப்படி எல்லாம் எதுவும் பேசல அருளு” என்று ஒற்றை வரியில் சாதாரணமாக கூறிய போதும் அவர் முகம் காட்டிய பாவம் வேறாக இருந்தது.
“ம்மா தெளிவா சொல்லுங்க என்னாச்சு” என்று அவன் குரலில் அழுத்தம் கொடுத்து கேட்க மகனை அப்போதே ஏறிட்டவர்,
“நல்ல விதமாகத்தான் பேசுனாங்க... மன்னிப்பு கேட்டாங்க” என, அந்த நொடியே அவன் முகம் கோபத்தில் சிவந்தது.
“எது... மன்னிப்பு கேட்டாங்களா? அந்த ஆளு செஞ்ச காரியம் என்ன மன்னிக்கிற மாதிரி காரியமா? அவங்க இரண்டு பேரையும் பயமுறுத்தி மிரட்டி தாலி கட்ட வைச்சதோட நிறுத்தாம அதை வீடியோ எடுத்து நம்ம சொந்தகாரங்களுக்கு அனுப்பிச்சு நம்மள அசிங்கப்படுத்தி இருக்கான்... எப்படி அந்த ஆளை மன்னிக்க முடியும்மா... அவனை எல்லாம்” என்று பொங்கி எழுந்த மகனின் சீற்றத்தை,
“இப்போ எதுக்கு கத்தி டென்ஷனாகிட்டு இருக்க... எல்லா பிரச்சனைக்கும் சண்டையும் கோபமும் மட்டுமே தீர்வாகாது” என்று சொல்லி தண்ணீர் தெளித்து அணைத்து விட்டார். அருளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
அவ்வளவு கோபத்துடன் சென்று விட்டு இப்போது இத்தனை அமைதியாக அவர் பேசுவதை கண்டு குழம்பி நின்றவன்,
“அங்க என்னதான் நடந்துச்சு... அவங்க என்ன பேசுனாங்க... அதை சொல்லுங்க முதல” என்று நிதானமாக நடந்ததை கேட்க அவரும் விவரித்தார்.
“நான் அங்க போய் சத்தம் போட்டதுமே பூரணியோட பாட்டி முன்னாடி வந்து என் கையை பிடிச்சுக்கிட்டு மன்னிப்பு கேட்டு அழுதாங்க...
எங்க அப்பாவுக்கு பண்ணதெல்லாம் தப்புனு பழைய விஷயத்துக்கும் சேர்த்து மன்னிப்பு கேட்டாங்க... இந்த பாவத்த எல்லாம் எங்க போய் தொலைக்க போறன்னு தெரியலனு அவ்வளவு வயசான மனுஷி என் கையை பிடிச்சு அழும் போது... எனக்கு அதுக்கு மேல என்ன பேசறதுனே புரியல
திரும்பி வந்துடலாம்னு பார்த்தேன்... ஆனா அவங்க அம்மா அண்ணி எல்லாம் சேர்ந்துட்டு மகேஸ்வரிக்கு நடந்தது ரொம்ப பெரிய அநியாயம்... அதை சரி பன்றதுக்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கனு கேட்டாங்க” என,
“சரி பண்ணுவாங்களா... அது எப்படி?” என்று அருள் கேட்க லதாவின் கண்கள் மகேஸ்வரியை நோக்கி விட்டு பின்,
“அரவிந்தன் பத்மாவோட கடைசி பையன்... சதீஷ்... வெளிநாட்டுல வேலை பார்க்குறானே... அவனுக்கு மகேஸ்வரியை கேட்குறாங்க” என்றதும் அருள் ஆடி போய்விட்டான். மகேஸ்வரியோ அதிர்ந்து நிற்க லதா தொடர்ந்து,
“எனக்கு என்ன சொல்றதுனு தெரியல... நான் யோசிச்சு சொல்றனு சொல்லிட்டு வந்துட்டேன்” என்றார்.
“யோசிச்சு சொல்றீங்களா... அப்போ மகேஸ்க்கும் விஜய்க்கும் நடந்த கல்யானம்” என்று அருள் கேட்டுவிட கோபமாக நிமிர்ந்த லதா,
“உன் தங்கச்சி செஞ்ச முட்டாள்தனத்துக்கு பேர் கல்யாணம்னு சொல்றியா... இல்ல அதை கல்யாணம்னு ஒத்துக்கிட்டு அந்த பையனோடவே வாழ வைக்கணும்னு சொல்றியா?” என, அருள் பார்வை நடப்பதில் தனக்கு எதுவும் சம்பந்தமே இல்லை என்பது போல நின்ற தங்கையை திரும்பி முறைத்தது.
ஆனால் அப்போதும் அவள் எந்த கருத்தும் சொல்லாமல் அமைதியாக நிற்க அருள் மீண்டும், “நீங்க சொல்ற மாதிரி அவங்க செஞ்சதை முட்டாள்தனமாகவே இருந்தாலும் அது கல்யாணம் இல்லனு சொல்லிட முடியாது இல்லமா” என்று பொறுமையாக கூற லதாவால் அவன் வாதத்தை ஏற்க முடியவில்லை.
லதா எழுந்து நின்று அண்ணன் தங்கை இருவரையும் ஆழமாக பார்த்து விட்டு பின், “சரி அருளு நீ சொல்றதை பத்தி நான் யோசிக்கிறேன்... ஆனா அந்த பையனை நேர்ல வந்து என்கிட்ட பேச சொல்லு... அப்பத்தான் நடந்தது கல்யாணமா இல்லையா... இவங்க இரண்டு பேரும் எந்தளவு புரிஞ்சிக்கிட்டு அந்த கல்யாண முடிவை எடுத்தாங்க இல்ல ஏதோ போற போக்குல அவசரத்துல எடுத்தாங்களானு தெரியும்” என்று விட்டு செல்ல அப்போதும் மகேஸ்வரி எதுவும் பேசாமல் உணர்வற்ற நிலையில் அறைக்குள் சென்று முடங்கினாள்.
அம்மா குளிக்க சென்றதை பார்த்த அருள் அறைக்குள் வந்து கோபத்துடன்,
“உனக்காக நான் அம்மாகிட்ட பேசிட்டு இருக்கேன்... ஆனா நீ அப்படியே அமுக்கினி மாதிரி நின்னுட்டு இருக்க” என்று தங்கையிடம் கடுகடுத்தான். ஆனால் அவள் சோர்ந்த முகத்துடனே,
“இப்போ இருக்க நிலைமைல நான் என்ன பேசினாலும் அம்மாவுக்கு கோபம்தான் வரும்... அதான் பேசல” என்றாள்.
“சரி விடு... நீ விஜய்க்கு ஃபோன் பண்ணி வீட்டுல வந்து பேச சொல்லு”
“நான் அவன்கிட்ட பேச மாட்டேன்”
“பேச மாட்டியா... ஏன்?”
“தேவை இல்லாம என்கிட்ட மூஞ்சை காட்டிட்டான்... அந்த பூரான் தற்கொலை பண்ணிக்குற முடிவு எடுத்ததுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்”
“எது தற்கொலை முடிவு எடுத்தாளா? இது எப்போ”
“முந்தா நேத்து நைட்டு ஏதோ தூக்கு மாத்திரை சாப்பிட்டாளாம்.. ஹாஸ்பெட்டில் கூட்டிட்டு போனதா பக்கத்து வீட்டு பாட்டி சொல்லுச்சு... ஆனா இப்போ நல்லாத்தான் இருக்கா”
“ஓ” என்று தீவிர பாவத்துடன் அவளை பார்த்து, “அவ தற்கொலை பண்ணிக்கிட்டுதுக்கு நீதான் காரணம்னு விஜய் உனக்கிட்ட சண்டை போட்டானா?” என்று வினவ,
“அப்படி எல்லாம் நேரடியா சொல்லல... ஆனா அவன் காட்டின கோபம் அப்படிதான் இருந்துச்சு” என்றாள்.
“எல்லாத்தையும் நீயே முடிவு பண்ணிக்குவியா லூசு... அவன்கிட்ட நேரடியா என்ன பிரச்சனைனு கேட்க மாட்டியா?” என்று கேட்டு பல்லை கடிக்க,
“எதுக்கு நான் கேட்கணும்.. சொல்லணும் தோனுச்சுனா சொல்லட்டும் இல்லாட்டி போட்டும்” என்றாள்.
“அறிவுகெட்டவளே... உன் ஈகோவை காட்டுற நேரமாடி இது.. அம்மா விஜயை பார்க்கணும்னு சொல்லி இருக்காங்க... அவன் வந்து பார்த்து பேசுனாதானே அம்மா உங்க இரண்டு பேர் விஷயத்துல ஒரு முடிவுக்கு வருவாங்க” என்று கடுப்புடன் பேச,
“நாங்களே இன்னும் எங்க இரண்டு பேர் விஷயத்துல ஒரு முடிவுக்கு வரலயே... அதுவும் இன்னும் விஜய் மனசுல பூரணி இருக்காளோனு எனக்கு சந்தேகமா இருக்கு” என்ற தங்கையை அவன் விசித்திரமாக பார்த்து வைத்து,
“பைத்தியமாட்டும் உளறாத... அவன் மனசுல பூரணி இருந்திருந்தா தாலியை தூக்கி அவன் ஏன் உன் கழுத்துல கட்டுறான்... அவ கழுத்துல கட்டி இருக்க மாட்டானா?” என
“கட்டி இருந்தானா பூரணி அப்பன் அவனை வெளுத்து இருப்பாரு?” என்றாள்.
“அதனாலதான் அவன் பூரணி கழுத்துல கட்டாம உன் கழுத்துல கட்டினானுக்கும்”
“பின்ன... அவங்க அப்பா அடிப்பன் கொல்லுவனு மிரட்டினாரு... வேற வழி இல்லாம அந்த சமயத்துல நானும் அவனை காப்பாத்த அந்த தாலியை எடுத்து கட்ட சொன்னேன்... அவன் கட்டினான்”
“இத்தனை வருஷத்துல உன் பிரண்டை நீ இவ்வளவுதான் புரிஞ்சு வைச்சு இருக்கியா?” என்று அழுத்தம் திருத்தமாக கேட்டவன்,
“அவங்க அப்பன் மிரட்டினதாலயோ இல்ல நீ அவன்கிட்ட தாலியை கட்ட சொன்னாதாலயோ அவன் கட்டல... உன் கழுத்துல கட்டுணும்னு முடிவு பண்ணதாலதான் கட்டினான்.. அந்த இடத்துல நீ நின்னுட்டு இருந்ததால மட்டும்தான் கட்டுனான்
ஒரு வேளை அந்த இடத்தில வேற பொண்ணு இருந்தாலோ இல்ல அவன் உன்னை பிரண்டா மட்டும் நினைச்சுட்டு இருந்தானாலோ... சத்தியமா கட்டி இருக்க மாட்டான்... என்ன மாதிரியான இக்கட்டான சூழ்நிலைலும் தாலி கட்டி இருக்க மாட்டான்” அருள் தெளிவாக விளக்க மகேஸ்வரி பேச்சற்று அமர்ந்திருந்தாள்.
“என்ன இப்பயாச்சும் உன் ட்யூப் லைட் மூளை எரிஞ்சுதா இல்லையா?” என்றவன் கேட்க அவளுக்கு குழப்பமாக இருந்தது. மனம் அருள் சொன்னதை ஏற்க நினைத்தாலும் விஜய் மனதிலும் அதுதான் இருக்கிறதா என்ற கேள்வி ஒரு மாதிரி இன்னும் அரித்து கொண்டிருந்தது.
“எனக்கு காலேஜ்க்கு லேட்டாகுது நான் கிளம்பணும்” என்று விட்டு அந்த பேச்சை மேலும் வளர்க்காமல் மாற்று உடையை எடுத்து கொண்டு சென்றவளுக்கு அருள் சொன்னது மூளைக்குள் ஓடி கொண்டே இருந்தது.
கல்லூரிக்கு புறப்பட்டு வந்தவள் தன் வேலைக்கு இடையில் கிடைத்த அந்த கொஞ்சம் நேரத்தில் விஜயிடம் பேசலாம் என்று அவனுக்கு அழைக்க அவன் எடுக்கவில்லை.
மாலை வீட்டிற்கு திரும்பும் போது அவனை நேரில் சென்று பார்த்து பேசலாம் என்று மனம் அடித்து கொண்டாலும் அம்மாவிடம் சொல்லாமல் மீண்டும் அது போன்ற தப்பை செய்ய வேண்டாமென்று நினைத்து வந்துவிட்டாள்.
வீட்டில் அருள் தன் துணிகளை எல்லாம் எடுத்து வைத்து கொண்டு கிளம்பி தயாராகி கொண்டிருக்க, “என்னடா இன்னைக்கே போறியா... நாளைக்கு சண்டேதானே இருந்துட்டு போலாம் இல்ல” என்று வாஞ்சையுடன் கேட்க,
“இல்ல நாளைக்கு நான் ஆபிஸ்ல இருக்கணும்... மண்டே ஆடிட்டிங்” என்று கூறி அவன் துணிகளை அடுக்கி பையை மூடி வைத்து விட்டு கவலை ரேகைகள் படர்ந்திருந்த அவள் முகத்தை பார்த்தான்.
“விஜய்கிட்ட பேசுனியா?” என்று அவள் மனநிலையை புரிந்து கேட்க,
“கால் பண்ணேன் எடுக்கல... நேர்ல போலான்னா... அம்மாவுக்கு தெரியாம திரும்பியும் அங்க போக போய்... அதான் வேண்டாம்னு வந்துட்டேன்” என்றாள் வருத்ததுடன்.
அவன் தன் செல்பேசியில் நேரத்தை பார்த்துவிட்டு, “எனக்கு டிரயினுக்கு இன்னும் டைம் இருக்கு மகி... நான் வேணா போய் பார்த்துட்டு வரட்டுமா?” என்று கேட்க அவள் சரியென்று தலையசைத்தாள்.
அருள் சென்று விட்டு வந்து என்ன சொல்வான் என்று ஆவலாக காத்திருக்க, “அவன் வீட்டுல இல்ல மகேஸ் என்னால பார்க்க முடியல” என, அவள் மனம் அல்லாடியது. அவனை உடனே பார்த்து பேச வேண்டுமென்று தோன்றிய போதும் அது நடக்கவில்லை.
அருகே இருக்கும் போதெல்லாம் பேசாமல் விட்டுவிட்டு இப்போது பேச எண்ணும் போது, அவனை பார்க்கவும் முடியாமல் பேசவும் முடியாமல் போவதில் அவள் தவித்து போனாள்.
அன்று இரவு அருளும் புறப்பட்டு சென்றுவிட அவளுக்கு இருப்பு கொள்ளவில்லை. ‘கால் மீ’ என்று குறுந்தகவல் அனுப்பினாள். ஆனால் அவனிடமிருந்து பதிலே வரவில்லை.
அடுத்த நாள் ஞாயிற்று கிழமை அவளுக்கு கல்லூரி விடுப்பு என்பதால் வீட்டில்தான் இருந்தாள்.
“எனக்கு கடைல வேலை இருக்கு... நான் மதியம் சாப்பிடுறதுக்கு கூட வரமாட்டேன்... நீ படுத்துகிறதா இருந்தா கேட்டை எல்லாம் பூட்டிடு” என்று லதா எப்போதும் போல சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
லதா பழையபடி இயல்பாக பேசாவிட்டாலும் ஏதோ பேசவாவது செய்கிறார் என்று அவளுக்கு ஆறுதலாக இருந்தது. ஆனால் மனம் விஜயை பற்றியே யோசித்தது.
அவனை வீட்டில் சென்று பார்த்து விட்டு வரலாமா என்று ஒரு யோசனை அவ்வப்போது எட்டி பார்த்து கொண்டே இருந்தது. ஆனால் ஏனோ அவளால் முடியவில்லை.
இந்த யோசனைகள் குழப்பத்துடன் அவள் தனித்து அமர்ந்திருக்கும் போது திடீரென்று யாரோ கேட்டை தட்டும் சத்தம் கேட்டு விஜயோ என்று ஆர்வமாக எட்டி பார்த்தாள். ஆனால் அவள் சற்றும் எதிர்பாராமல் பூரணி வந்து நின்றிருந்தாள்.
‘இவ ஏன் வந்திருக்கா’ என்பது போன்ற ஆராய்ச்சி பார்வையுடன் மகி நோக்க,
“உன்கிட்ட கொஞ்சம் பேசணும் மகேஸ்வரி” என்றாள்.
எதிர் வீட்டிலேயே இருந்தாலும் இதுநாள் வரை ஒருவர் வீட்டிற்கு மற்றவர் சென்றதே இல்லை. அவள் புரியாமல் பார்த்து விட்டு, “நீ எதுக்கு என்கிட்ட பேசணும்... நாம பேசிக்கிறதுக்கு என்ன இருக்கு” என்று கேட்டை திறக்காமல் வெளியே நிறுத்தியே பேச,
“இருக்கு... ப்ளீஸ் கதவை திற” என்று பூரணி கெஞ்சலாக கேட்க மகேஸ்வரி யோசித்து விட்டு பின் கதவை திறந்து அவளை உள்ளே வர விட்டு,
“என்ன பேசணும்” என்றாள்.
“நீ விஜயை லவ் பண்றியா?” என்று அவள் சுற்றி வளைக்காமல் நேரடியாக கேட்டு விட,
அவளை ஏறஇறங்க கடுப்புடன் பார்த்தவள், “அது உனக்கு தேவை இல்லாத விஷயம்” என,
“இல்ல அது எனக்கு தேவையான விஷயம்தான்... எங்க வீட்டில விஜய்க்கும் எனக்கும் கல்யாணம் பண்ணி வைக்க சம்மதிச்சிட்டாங்க... விஜய்கிட்ட பேச முடிவு பண்ணி இருக்காங்க” என்றதும் மகேஸ்வரியின் முகம் சுருண்டுவிட்டது.
“நீயும் விஜயும் லவ் பண்ணலனு எனக்கு கன்பர்மா தெரிஞ்சுக்கிட்டா நான் அவங்கள போய் பேச சொல்வேன்... இல்ல நீங்க லவ் பண்றீங்கனா நான் அமைதியா இதுல இருந்து ஒதுங்கிக்கிறேன்” என்றதும் மகேஸ்வரி சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டு,
“நேத்து வரைக்கும் என் கூட எல்லாத்துக்கும் போட்டி போட்டுட்டு... இப்போ என்ன புதுசா... ஒதுங்கிக்கிறனு எல்லாம் சொல்ற” என்று எகத்தாள பார்வையுடன் கேட்டாள்.
“எங்க தாத்தா உங்க தாத்தாவை ஏமாத்திட்டாராம்... அதனாலதான் உங்க குடும்பம் ரொம்ப கஷ்டத்துல இருக்குறதா பாட்டி சொன்னாங்க” என்று அவள் சொன்னதை கேட்ட மகேஸ்வரி உதட்டை சுழித்து,
“இந்த கதை எல்லாம் கேட்டதும் உனக்கு என் மேல பச்சாதபம் வந்திருச்சா... அப்படி எல்லாம் பச்சாதாபப்பட்டு நீ எதுவும் எனக்கு விட்டு கொடுக்க தேவை இல்ல” என்றாள்.
“நான் விட்டு எல்லாம் கொடுக்கல... விஜயும் நீயும் லவ் பண்றீங்கனா நான் இடைல வர விரும்பல... என் தாத்தா செஞ்சதை நான் செய்ய மாட்டேன்... ஒருத்தருக்கு உரிமையானதை நாம பறிச்சுக்குறது தப்பு” என்றாள்.
மகேஸ்வரி அவளை நக்கலாக பார்த்து, “திருந்திட்டியா... அப்படி எல்லாம் சீக்கிரம் திருந்தாத மா... இந்த உலகம் தாங்காது” என,
“நான் திருந்திறளவுக்கு தப்பெல்லாம் எதுவும் செய்யல”
“அப்படியா”
“என்ன நக்கலா?”
“நக்கல எல்லாம் இல்ல... நீ இனிமே என்கிட்ட சண்டை போட மாட்டங்குறதை என்னால நம்ப முடியல”
“அப்படி எல்லாம் நான் சொல்லவே இல்லயே... இப்போ கூட நீ போட்ட கோலம் எனக்கு பிடிக்கலனா நான் தண்ணி ஊத்தி அழிப்பேன்” என்றவள் அலட்சியமாக கூற,
“உன்னை கொல்லுவேன்” என்று மகி சீற்றமாக,
“முடிஞ்சா செய்” என்று அசட்டையாக சொல்லி கேட்டை தாண்டி சென்று கொண்டே, “விஜய்கிட்ட பேசிட்டு என்கிட்ட சொல்லு” என்றதும் மகேஸ்வரி பலமாக மூச்சை இழுத்து விட்டு கொண்டு,
‘அவன் எங்க... என்கிட்ட பேசுனாதானே... கால் போட்டாலும் எடுக்க மாட்டுறான்’ என்று தனக்கு தானே புலம்பிவிட்டு அதற்கு மேல் பொறுக்க முடியாமல் பைக்கை எடுத்து கொண்டு அவன் வீட்டு வாசலில் இறங்க அங்கே நின்றிருந்த வீட்டுகாரம்மா,
“விஜய் வீட்டுல இல்லையே ம்மா... இரண்டு நாலா கதவை பூட்டிதான் இருக்கு” என்றார்.
‘எங்கதான் போய் தொலைஞ்சான்... சொல்லாம கொல்லாம’ என்று வாயில் வந்த வார்த்தை எல்லாம் சொல்லி வழியேற திட்டி கொண்டே வீடு வந்து சேர்ந்தாள்.
ஆனால் அடுத்த ஒரு வாரமும் அவளால் விஜயை பார்க்கவே முடியவில்லை. அவனுக்கு சில முறைகள் செல்பேசியில் அழைத்து விட்டு பின் அவன் அழைப்பதில்லை என்று அவளும் அழைப்பதை நிறுத்திவிட்டாள்.
இதற்கிடையில் அருள் அழைத்து, “விஜய் வந்து அம்மாகிட்ட பேசலயா... அம்மா என்கிட்ட கேட்டுட்டே இருக்காங்க” என்றான்.
அவளுக்கு என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியவில்லை.
இதற்கிடையில் மேலும் ஒரு வாரம் கடந்துவிட்டது. அவள் அன்று எப்போதும் போல கல்லூரிக்கு சென்றிருந்தாள்.
முதல்வர் அவளை அறைக்கு வர சொல்லி அழைத்திருக்க, அவளும் அனுமதி கேட்டு உள்ளே நுழைந்த போது ஓர் இனிய அதிர்ச்சி அவளுக்கு காத்திருந்தது.
“மகேஸ்வரி... இதுதான் விஜய்... மரியா ரிலீவ் ஆகிட்டாங்க இல்ல... அவங்க போஸ்டிங்க்கு வந்திருக்காரு” என்று அறிமுகம் செய்விக்க அவள் விழிகள் ஆச்சரியத்துடன் அவனிடம் நிலைகுத்தி நின்றன.
அவன் எந்த உணர்ச்சியும் காட்டாமல் சிறு புன்னகையுடன் அவளை எதிர்கொள்ள அவளுக்கு வந்த கோபத்திற்கு அவனை பளார் என்று அறைய வேண்டும் போல ஆத்திரமாக வந்தது. அதேநேரம் அவனும் தானும் ஒன்றாக பணிபுரிய போகிறோம் என்று எண்ணிய போதும் மனதில் இன்ப ஊற்று ஒன்று சுரந்தது.
“இவங்க கிட்ட என்னென்ன வேலை செய்றது எப்படி என்னனு கேட்டுக்கோங்க விஜய்” என்று முதல்வர் அறிவுறுத்த அவன், “ஓகே மேடம்” என்று பவ்வியமாக தலையசைக்க,
“என்ன மகேஸ்வரி அப்படியே நிற்குறீங்க... அவரை கூட்டிட்டு போங்க... என்னனு வொர்க் எல்லாம் சொல்லுங்க” என்றதும் அவள் தன் இன்ப அதிர்ச்சி நிலையிலிருந்து மீண்டு,
“ஓகே மேடம்” என்று அவசரமாக தலையசைத்தாள்.
அவனுடன் வெளியே வந்த மகேஸ்வரி உடனடியாக விஜயிடம் திரும்பி, “இங்க எப்படிறா வந்த... நீ இன்டர்வியூ வந்ததை கூட நான் பார்க்கல” என,
“பிரின்ஸ்பில் மேடம் எனக்கு கொடுத்த முதல் அட்வைஸ் காம்பஸ்குள்ள பெஸ்னல் டாக் எதுவும் வைச்சுக்க கூடாதுன்னுதான்” என்று இறுக்கமான முகத்துடன் கூறினான்.
“அதெல்லாம் அவங்க நிறைய சொல்லுவாங்க... ஆனா அதெல்லாம் யாரும் இங்க கேட்குறது இல்ல”
“நீ இப்படி சொல்றனு அப்படியே நான் போய் அவங்கிட்ட சொல்றேன்”
“ஏதே”
“வேலை சொல்றத விட்டு பின்ன இப்படி கதை அடிச்சுட்டு இருந்தா”
“எதுக்குடா ஓவரா நடிக்குற”
“எனக்கு நடிக்க எல்லாம் தெரியாது... வேலை பார்க்கத்தான் வந்திருக்கேன்... வேலை மட்டும்... அதனால நம்ம வேலையை பத்தி பேசுவோமா மகேஸ்வரி” என்ற இறுகிய முகத்துடன் பேசியவனை மேலும் கீழுமாக பார்த்தவள்,
“உன்னை அப்புறமா வைச்சுக்கிறேன்” என்று முறைத்து கொண்டே முன்னே செல்ல, ‘வைச்சுக்கோ’ என்று அவன் மெலிதாக வாயிற்குள் முனங்கியதை கேட்டு திரும்பியவள்,
“இப்போ என்ன சொன்ன” என்று கேட்கவும், “ம்ம்ம்... நான் எதுவும் சொல்லலயே” என்று உதட்டை பிதுக்கி தோள்களை குலுக்கினான். அவனை மேலும் கீழுமாக அளவெடுத்துவிட்டு பின் அலுவலக அறையை காட்டி அனைத்தையும் விளக்க,
“இது என்ன மகேஸ்வரி... அது என்ன மகேஸ்வரி” என்று வார்த்தைக்கு வார்த்தை மகேஸ்வரி என்று கூப்பிட்டு அவளை வெறுப்பெற்றினான்.
“இப்போ எதுக்கு மகேஸ்வரி மகேஸ்வரினு என் பேரை ஏலம் விடுற” என்றவள் இடுப்பில் கை வைத்து கொண்டு அவனை முறைத்து பார்க்க,
“ஏலம் விடுறனா... அதுவும் உன் பேரையா... எவன் ஏலம் எடுப்பான்” என்றவன் கிண்டலாக கேட்க மேஜை மீதிருந்த கணக்கு எழுதும் பெரிய நோட்டு புத்தகத்தை எடுத்து,
“பக்கி” என்று அவன் தலையில் தட்டி வைத்தாள்.
“ஆ மகேஸ்வரி வலிக்குது” என்று மீண்டும் ஒரு மகேஸ்வரியை போட்டு அவளை மீண்டும் வெறுப்பெற்றி வைக்க திரும்பவும் அவனை அடிக்க நோட்டு புத்தகத்தை கையில் எடுக்க,
“நான் இப்பவே போய் பிரின்ஸ்பல் கிட்ட சொல்லிடுவேன்” என்றான்.
“போ... போய் சொல்லிக்கோ” என்று அவள் அதன் பின் அமைதியாக அமர்ந்து தன் வேலையில் கண்ணும் கருத்துமாக இறங்கிவிட அவனுமே தனக்கான வேலைகளை பார்க்க துவங்கினான். அவ்வப்போது முதல்வர் அழைப்பில் மகேஸ்வரி அவருடைய அறைக்கு ஓடி விட்டு திரும்பினாள்.
அதன் பின் மும்முரமாக தன் கணனியில் வேலை பார்க்க துவங்கியவள் வெகுநேரத்திற்கு நிமிரவே இல்லை. அவன் அப்போது தன்னை மறந்து அவளையே பார்த்திருக்க சட்டென்று அவள் நிமிர்ந்ததும் தட்டுதடுமாறி தன் பார்வையை மாற்றி கொள்ள,
“இதான் நீங்க வேலை பார்க்குற இலட்சணமா விஜய்?” என்று கேட்டாள்.
“ஆமா நான் வேலைதான் பார்க்குறேன்... ஏன் உங்களுக்கு எப்படி தெரியுது மகேஸ்வரி” என,
“தெரியுது... நீ என்ன பன்றனு என்னனு எல்லாம் தெரியுது” என்றான்.
“அப்படியா? என்ன பார்த்தாலும் எனக்கு ஒன்னும் தெரியலயே” என்று அவன் ஏடகுடமாக பேசியதை கேட்டு, “பக்கி” என்று மீண்டும் அந்த நோட்டு புத்தகத்தை அவன் தலையில் தட்டி வைத்தாள்.
“ஆ... அம்மா” என்று வலியில் துடித்தவன், “இவ கூட வேலை பார்க்கும் போது ஹெல்மெட் போட்டுட்டுதான் வேலை செய்யணும் போல” என்று அவனின் புலம்பலை கேட்டு சிரித்தவள் அதன் பின் மீண்டும் முதல்வர் அறைக்கு சென்று விட்டாள்.
ஒரு வழியாக அவள் வேலை முடிந்து கிளம்பி பைக்கை எடுக்க போக விஜய் அதன் மீது கை கட்டி சாய்ந்து அமர்ந்து கொண்டு, “போலாமா மகேஸ்வரி” என,
“உன்னை யாருடா கூட கூட்டிட்டு போறா... ஒழுங்கா என் பைக்கை விட்டு எழுந்திரு... எழுந்திருன்னு சொன்னேன்” என்று அவள் மிரட்டி கொண்டே பைக்கில் அமர்ந்து சாவியை நுழைக்க,
“அப்ப என்னை கூட்டிட்டு போக மாட்ட” என்று அழுத்தமாக கேட்டான்.
“மாட்டேன்... நீ நடந்து வா... இல்ல பஸ்ல வா” என்று அவள் சொல்லிவிட்டு பைக்கை இயக்க, “முடியாது நான் உன் கூடதான் வருவேன்” என்று வம்படியாக அவள் பின்னே அமர்ந்தான்.
“ஒழுங்கா இறங்கிடு... இறங்குனு சொல்றேன்” என்றவள் அதட்டும் போதே, “மகி பிளீஸ் ப்ளீஸ்ஸ்” என்று அவன் ப்ளீஸ்கள் எல்லாம் அவள் காதோரம் கிசுகிசுத்ததில் அவள் உடல் சிலிர்த்தது.
திரும்பி அவள் முறைத்து பார்க்கவும், “ப்ளீஸ்ஸ்ஸ்டி” என்று மீண்டும் இழுக்க அவள் ஹெல்மெட்டை மாட்டி கொண்டு பைக்கை இயக்கினாள்.
“ஏய் மகி... நான் எப்போ இன்டர்வியூக்கு வந்தனு கேட்க மாட்டியா?” என்றவன் அவள் முதுகுப்புறம் நெருக்கமாக வந்து மெல்லிய குரலில் கேட்க அவளுக்கு மயிர்கூச்செறிந்தது.
“இல்ல கேட்க மாட்டேன்”
“ஏன் இங்க வேலைக்கு வந்தனு கூட கேட்க மாட்டியா”
“கேட்க மாட்டேன்”
“சரி ஒரு வாரமா ஏன் போனை எடுக்கலனாச்சும் கேளேன்”
“மாட்டேன்”
“எதுவுமே கேட்க மாட்டியா?”
“ஆமா எதுவும் கேட்க மாட்டேன்”
“அவ்வளவு கோபமா?”
“கோபமும் இல்ல ஒரு மண்ணும் இல்ல”
“கோபம் இல்லனா வேற என்ன இருக்கு மகி” என்று ரகசியம் பேசுவது போல அவன் காற்றோடு பேச அவள் முகம் சூடாகி போனது.
“வேற என்ன?”
“வேற எதுவும் இல்லயா மகி” மீண்டும் அவன் குரலின் உரசல்.
“நீ என்ன கேட்குற” அவள் அவதியுற,
“நான் என்ன கேட்குறனு உனக்கு புரியலயா மகி” என்றவன் விடாமல் அவள் உணர்வுகளை உசுப்பி விட வண்டியை நிறுத்திவிட்டு திரும்பி அவனை முறைத்தவள்,
“என்னடா பிரச்சனை உனக்கு?” என,
“என்ன... ஒன்னும் இல்லயே” என்றான்.
“வாயை மூடிக்கிட்டு சைலன்டா வரலனா உன்னை இறக்கிவிட்டுட்டு போயிட்டே இருப்பேன்”
“அவ்வளவுதானே... சைலன்டா வர்றேன்” என்றவன் நல்ல பிள்ளை போல ஒற்றை விரலால் வாயில் கை வைத்து கொள்ளவும் அவள் மீண்டும் பைக்கை இயக்கினாள். அவன் சொன்னது போல எதுவும் பேசாமல் அமைதியாக வந்தாலும் அவன் கண்கள் சேட்டை செய்தது.
பக்கவாட்டு கண்ணாடியில் தெரியும் அவள் பிம்பத்தை அவன் விழிகள் அங்கிங்கு நகராமல் பார்த்தபடியே வர, அவனை கவனிக்க கூடாது என்று சில நொடிகள் அவள் கண்ணும் கருத்துமாக வண்டியை ஓட்டினாள்.
ஆனால் என்ன முயன்றும் அவள் பார்வை அவளையே அறியாமல் அவனிடம் சென்று நிற்க அவன் பெரிதாக விரிந்த உதடுகளுடன் கண்ணடித்து வைக்க,
“டேய் விஜி” என்று அதட்டினாள்.
“சொல்லுடி மகி” என்றவன் மூச்சு காற்று இப்போது மிக நெருக்கமாக அவள் முதுகுபுறத்தில் தொட்டு உரசியது. உடல்முழுவதும் சிலிர்பபோடி அடங்க அதற்கு மேல் முடியாமல் அவள் வண்டியை ஓரங்கட்டி நிறுத்திவிட்டாள்.
“என்னாச்சு மகி”
“நான் வண்டி ஓட்டிட்டு இருக்கேன்டா” என்று முகத்தை சுருக்கி சொல்ல,
“நான் எதுவுமே பண்ணலயே.... தள்ளிதான உட்கார்ந்துட்டு இருக்கேன்... பாரு எவ்வளவு கேப் இருக்கு” என்று அவர்களுக்கு இடையில் இருந்த இடைவெளியை காட்டினான்.
அவன் சொன்னது போல எதுவும் செய்யவில்லைதான் உடலளவில். ஆனால் அவனுடைய பார்வையும் பேச்சும் அவள் உணர்வுகளை தொட்டு உலுக்கி கொண்டிருந்ததை அவன் அறியானா என்ன?
மூச்சை இழுத்து விட்டு கொண்டவள், “விஜி நான் எங்கயாச்சும் தாறுமாறா வண்டியை ஓட்டி கொண்டு போய் முட்டிட்டனா இரண்டு பேரும் சேர்ந்து பரலோகம் போயிடுவோம்டா” என்றாள்.
“ஐய்யயய்யோ வேண்டாம்” என்று பதறியவன் மேலும், “நம்ம சேர்ந்து இந்த பூலோகத்துல செய்றதுக்கு நிறைய வேலை இருக்கு” என அவனை விழிகள் இடுங்க பார்த்தவள்,
“நீ சரிப்பட்டு வர மாட்ட... இறங்கு” என்றாள்.
“மகி நடுரோட்ல என்னை இறக்கி விட்டா நான் எப்படிறி போவேன்... என்னை பார்த்தா பாவமா இல்லையா உனக்கு”
“நடிக்காத இறங்கு”
“இறங்குடா” அவன் இறங்கி விடவும் அவள் தன் ஹெல்மெட்டை கழற்றி கொடுத்து, “நீ ஓட்டு... நான் பின்னாடி உட்கார்ந்து வரேன்” என்றாள்.
“அதானே... என்னை விட்டு போக உனக்கு மனசு வராதே”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல... பாதி வழில இறக்கி விட்டு போக வேண்டாம்னு” என்றவள் கூற அவன் ஹெல்மெட்டை அணிந்து முன்னே அமர அவள் பின்னே அமர்ந்தாள்.
அவன் வண்டியை இயக்கி கொண்டே, “நீ என் தோள் பட்டையை பிடிச்சிட்டு சாய்ஞ்சு உட்கார்ந்துக்கலாம்... எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல” என,
“சீ போ” என்றதோடு அவன் முதுகிலும் வசமாக கிள்ளி வைக்க,
“ஆ... பாவி... நகத்தை வெட்டுடி முதல” என்றான்.
“மாட்டேன்... நீ ஏதாவது பேசுன... கிள்ளுவேன்”
“கிராதகி... திட்டம் போட்டுதான் என்னை முன்னாடி உட்கார வைச்சியா” என, “ஆமா ஆமா” என்றவள் சொல்லி சிரிக்க அவனும் பதிலுக்கு சிரித்தான்.
ஒரு வழியாக இருவரும் எந்த சேதாரமும் இல்லாமல் வீடு வந்து சேர, “சரி சரி இறங்கு” என்று அவசரமாக இறங்கி அவனையும் இறக்கிவிட்டு முன்னே அமர்ந்து கொள்ள,
“எங்க கிளம்பற வீட்டுக்கு வா” என்றான். “இல்ல நான் வரல... நீ போ” என்றவள் சொல்ல,
“நீ வருவ” என்று விட்டு அவன் முன்னே போக, “வரமாட்டேன்” என்றவள் சொல்லிவிட்டு குனிந்த போது பைக்கில் சாவியை காணவில்லை.
“டேய் பக்கி... சாவி” என்று கேட்க அவன் சிரித்து கொண்டே அதனை எடுத்து கொண்டு ஓடிவிட்டான்.
கடுப்பாக மூச்சை இழுத்து விட்டு கொண்டவள் பைக்கை ஸ்டான்ட் போட்டு நிறுத்தி விட்டு, “டேய் சாவியை கொடுத்துட்டு போடா.... நான் வீட்டுக்கு போறேன்...டா அம்மா திட்டுவாங்க” என்று எவ்வளவு சொல்லியும் காது கொடுத்து கேட்காமல் அவன் மாடியேறிவிட்டான்.
அவள் மேலே வந்து நிற்கவும் அவன் பூட்டை திறந்து உள்ளே சென்றிருக்க அவள் வாசலிலேயே நின்று, “விஜி சாவியை கொடு... நான் வீட்டுக்கு போனும்” என்றாள்.
“உள்ள வந்து வாங்கிக்கோ” என்று அவன் சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டு அந்த சாவியை கைகளில் தூக்கி காட்ட,
“இன்னைக்கு உன் பார்வை பேச்சு எதுவும் சரி இல்ல... நான் உள்ள வர மாட்டேன்... நீ ஒழுங்கா வந்து சாவியை கொடுத்துட்டு போ”
“மாட்டேன்... நீ உள்ளே வா... நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்” என்று அவன் நின்ற இடத்திலிருந்தே அவளை அழைக்க அவனை ஆழ்ந்து பார்த்தபடி அவளும் வெளியேவே நின்றாள்.
“உள்ளே வரமாட்டியா?” என்றவன் ஏக்கமாக கேட்க,
“எத்தனை தடவை உன்னை நான் தேடிட்டு வந்தன் தெரியுமா? எத்தனை தடவை உனக்கு கால் பண்ணேன் தெரியுமா?”
“தெரியும்”
“தெரிஞ்சும் என்னை அவாயிட் பண்ண இல்ல நீ”
“அவாயிட் எல்லாம் பண்ணல”
“அப்புறம்”
“நீ பக்கத்துல இருந்தா என்னால வேற எதையும் யோசிக்க முடியல... எதுவும் செய்ய முடியல... உன்னையே பைத்தியகாரன் மாதிரி என் மனசு சுத்தி வருது... அதான் கொஞ்ச நாளைக்கு உன்னை பார்க்காம பேசாம இருந்தேன்” என்றவன் சொன்னதை கேட்டு அவள் திகைப்படைந்தாள். வார்த்தைகள் வராமல் அவனை அவள் கூர்ந்து பார்க்க,
“உள்ள வா மகி... உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்” என்றவன் மெல்லிய குரலில் மீண்டும் இறைஞ்சுதலாக அழைக்கவும் அவள் இறுக்கம் தளர்ந்தது. மெதுவாக உள்ளே நடந்தவள் அவன் நின்றிருந்த சுவற்றிற்கு எதிர்புறம் வந்து கை கட்டி கொண்டு,
“என்ன சொல்லணும்... சொல்லு?” என்றாள்.
அவன் தன் அலமாரியிலிருந்த தட்டையான கலர் பேபர்களால் மூடியிருந்த ஒரு பொருளை அவளிடம் எடுத்து கொடுக்க, “என்ன இருக்கு இதுல” என்று கேட்டாள்.
“திறந்து பார்த்தா தெரிய போகுது” என்றவன் சொல்ல அவள் அதன் மீதான கவர்களை கிழிக்க, அதில் அவளும் விஜயும் பதின் பருவத்தில் முகமெல்லாம் புன்னகை வழிய சேர்ந்து நிற்பது போன்ற கருப்பு வெள்ளை ஓவியம் இருந்தது.
அதனை அவள் ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு நிமிரும் போது, “இது நம்ம நட்போட அடையாளம் மகி... எட்டு வருஷ அழகான நட்போட அடையாளம்” என்றான்.
அவள் மனம் ஒரு நொடி அந்த எட்டு வருட கால நினைவுகளில் ஏறி இறங்கி வர அவன் தொடர்ந்து,
“நம்ம பேசனது... சிரிச்சது... சேர்ந்து சாப்பிட்டது... துக்கம் வந்த போது... ஒருத்தருக்காக ஒருத்தர் அழுதது... சண்டை போட்டது சமாதானமானதுனு... இப்படி இந்த எட்டு வருஷத்துல நம்மோட உறவுல இருந்த நட்பு நாளுக்கு நாள் அதிகமாகி இருக்கே ஒழிய கொஞ்சம் கூட குறைல...
எனக்கு இந்த நட்பு வாழ்க்கை பூரா வேணும் மகி... கொஞ்சம் கூட குறையாம வேணும்... ஆனா அது நட்பா மட்டுமே வேண்டாம்... நட்போட இணைஞ்ச காதலா வேணும்... என்னோட எல்லாத்தையும் உன்கிட்ட ஷேர் பண்ணிக்கிட்ட மாதிரி என் வாழ்க்கையையும் உன்கூட சரிபாதியா ஷேர் பண்ணிக்க நான் ஆசைப்படுறேன் மகி” என்றவன் பேசி முடிக்கும் போது அவள் இன்ப ஊற்றாக வழிந்த கண்ணீருடன் தன் கையிலிருந்த அந்த ஓவியத்தை மார்போடு அணைத்து கொண்டபடி தலையை அசைத்து அவனுக்கு தன் சம்மதம் கூற,
“நான் இவ்வளவு பெரிய டயலாக் பேசி இருக்கேன்... நீ வெறும் தலையை மட்டும் அசைக்கிற” என்று கேட்டபடி அவன் அவளை நெருங்கி வந்தான்.
“எனக்கு என்ன பேசுறதுனு சத்தியமா தெரியல... சந்தோஷத்துல வார்த்தை வராதுங்குற மாதிரி எனக்கு வார்த்தை வரல விஜி” என்றவள் குரல் தழுதழுத்தது.
“வார்த்தைலதான் சொல்லணும்னு இல்ல” என்றவன் கரங்கள் அவளது இரு புறமாக அணையிட்டு நிற்க,
“உதை வாங்குவ... கையை எடுறா” என்றாள்.
“மாட்டேன்”
“எங்க அம்மா உன்னை வந்து பார்க்கக் சொன்னாங்க... முதல நீ அவங்கள போய் பார்க்கணும் பேசணும்... சம்மதிக்க வைக்கணும்” என்று கூற,
“அதெல்லாம் பார்த்தேன்... பேசுனேன்... சம்மதிக்கவும் வைச்சேன்” என்றதும் ஆச்சரியத்துடன் விழிகள் விரித்தவள்,
“இது எப்போ நடந்துச்சு” என்றாள்.
“இரண்டு நாள் முன்னாடி நீ வேலைக்கு போயிருந்த போது நான் அவங்கள வீட்டுல போய் பார்த்தேன்”
“என்ன சொன்னாங்க”
“நீ இருக்க நிலைமைல என் பொண்ணை கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்த முடியுமானு கேட்டாங்க”
“ஓ”
“காதல் மட்டுமே கல்யாணம் பண்ணிக்க ஒரே தகுதி இல்ல... எங்க அம்மா அப்பா செஞ்ச தப்பை நான் செய்ய மாட்டேன்... இப்போதைக்கு என்னால சொந்த வீடு வாங்க முடியாட்டியும் ஒரளவு உங்க பொண்ணு எந்த குறையும் இல்லாம பார்த்துக்கிறளவுக்கான நிலைமைக்கு நான் வந்த பிறகு எனக்கு கட்டி கொடுங்கனு சொன்னேன்”
“இப்படியே சொன்னியா?”
“ஆமா இப்படியே சொன்னேன்”
“அதுக்கு என்ன சொன்னாங்க”
“சரின்னு சம்மதிச்சு தலை அசைச்சாங்க” என்றதும் அவள் சந்தோஷம் எல்லையை கடந்தது. அந்த கணமே அவனை இறுக அணைத்து கொண்டு, “ஐ லவ் யூ விஜி” என அவனுமே, “லவ் யூ டி” என்று அவளை தன்னுடன் அணைத்து கொண்டான்.
பின் மெல்ல அவனை விலகியவள், “இந்த இரண்டு வாரமா உன்னை பேசாம பார்க்காம தவிச்சு போயிட்டேன் தெரியுமா?” என,
“எனக்கு தெரியும்... ஆனா உன் முன்னாடி வரும் போது கொஞ்சமாச்சும் நம்பிக்கையோட வந்து என் மனசுல இருக்கிறதை சொல்லணும்னு நினைச்சேன்” என்ற போது அவள் இதழ்கள் விரிய,
“நீ இந்தளவு எனக்காக யோசிப்பனு நான் நினைக்கவே இல்ல.... அதுவும் இப்படி எல்லாம் நீ பேசுவனு” என்றவள் வியப்புடன் கூற,
“உனக்காக பேசாம வேற யாருக்காகடி... நீ எனக்கு செஞ்சதுல நான் பாதி கூட செய்யல... ஆனா செய்யணும்... உனக்கு நிறைய செய்யணும்னு மனசு முழுக்க அவ்வளவு ஆசை வைச்சு இருக்கேன்
ஒவ்வொன்னா அத்தனையும் செய்வேன்”
“நீ எனக்கு இதை செய்யணும் அதை செய்யணும்னு நான் எதுவுமே எதிர்பார்க்கல விஜி... வாழ்க்கை முழுசுக்கும் நீ என் கூட இப்படியே இருந்தா போதும்... ஒரு நல்ல பிரண்டாவும் அன்பான புருஷனாவும்”
“பேராசையா இருக்கே... இரண்டுமாவா?” என்று கேட்டு அவன் புருவங்கள் நெறிய,
“ஆமா இரண்டுமா” என்றாள்.
“சரி எப்போ புருஷனா இருக்கணும்... எப்போ பிரண்டா இருக்கணும்” என்று கல்மிஷமாக கேட்டவனிடம்,
“போடா... நான் வீட்டுக்கு கிளம்ப போறேன்” என்றவள் அவன் பார்வை உணர்ந்து நழுவி கொள்ள பார்க்க அவன் கரங்கள் அவளுக்கு வழி விடவில்லை. அவள் கலவரத்துடன் பார்க்க,
“ஒரே ஒரு முத்தம் கொடுத்துக்கட்டுமா?” என்று கேட்டான்.
“உஹும் கூடாது” என்று வேகமாக தலையசைத்து மறுத்த போதும் அவன் இதழ்கள் அவள் இதழ்களை நெருங்கியது.
“விஜி வேண்டாம்” என்று அவள் அவனை தடுப்பதற்காக அவசரத்தில் அவன் இதழ்களில் கையை வைத்து மூடிவிட அப்படியே அவன் அதரங்கள் அவள் இதழ்கள் மீது படிந்தன.
அவள் கரம் இருவரின் இதழ்களுக்கு இடையிலும் வசமாக மாட்டி கொண்டிருந்ததில் எதுவும் செய்ய முடியாத இயலாமையுடன் அவள் விழிகள் படபடத்தாள்.
அவன் விழிகளோ காதலோடு அவளை கிறங்கிய நிலையில் நோக்க அந்த பார்வை அவள் மனதிற்குள் புகுந்து ஏதோ செய்தது. அவன் இதழ்களோ சில நிமிடங்களுக்கு அப்படியே அவள் கரங்கள் மூடிய அவள் இதழ்களின் மீது அழுந்தி கிடந்தன.
உணர்வுகள் பொங்கி தளும்பிய நாணத்துடன் முகம் சிவந்தவளை விழிகளால் ஆசை தீர பருகி விட்டு அவன் விலகி வர அந்த கணமே அவளும் அவன் இதழ்கள் மீதான தன் கரத்தை எடுத்துவிட்டு தள்ளி வந்தாள். அதேநேரம் அவனை நேர்கொண்டு பார்க்க முடியாமல் தலை தாழ்ந்தாள்.
அவன் சாவியை எடுத்து நீட்டி, “சரி நீ வீட்டுக்கு போ” என, அவனை நிமிர்ந்தும் பாராமல் அதனை வாங்கி கொண்டவள் எதுவும் பேசாமல் பேச முடியாமல் அங்கிருந்து அகன்றாள்.
கிறக்கமா மயக்காம என்று அறிய முடியாத நிலையில் வீடு வந்து சேர்ந்தவளின் உடலும் மனமும் இன்னும் உணர்ச்சிகளுக்குள் சிக்குண்டு தவித்தது. காதலனின் சிறு தீண்டல் கூட இந்தளவு மாயம் செய்யுமா? அவளுக்கு தெரியவில்லை. அனுபவித்திராத அந்த புது மாதிரியான உணர்வில் தொலைந்து போயிருந்தவளின் மனம் மீண்டு வர விருப்பமே இல்லாமல் கிடந்தது.
எறும்புகள் சுமந்து போகுதே
சர்க்கரைப் பாறை ஒன்றினை
இருதயம் சுமந்து போகுதே
இனிக்கிற காதல் ஒன்றினை
என் சின்ன நெஞ்சின் மீது
இன்ப பாரம் ஏற்றி வைத்ததார்
コメント