15
காதலின் ஓவ்வொரு நாள் காத்திருப்பும் அழகானது. விஜய் கல்லூரியில் வேலை பார்த்து கொண்டே அரசு வேலைகளின் தேர்வுகளுக்கு படித்தான்.
அந்த ஒரு வருடத்தில் வந்த தேர்வுகளில் சிலவற்றை அவனும் முயன்று எழுதினான். ஏதோ பெயருக்கு என்று அவன் அதை செய்யவில்லை. அதற்கான முழு முயற்சியையும் உழைப்பையும் கொடுத்திருந்தான்.
தேர்வு நெருக்கத்தில் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் தூக்கத்தை எல்லாம் கெடுத்து கொண்டு அவன் படிப்பதை பார்க்க மகிக்கே பாவமாக இருக்கும். ‘ரொம்ப உடம்பை கெடுத்துக்காதடா’ என்று அவள் எவ்வளவோ சொல்லி பார்த்தும் அவன் கேட்பதாக இல்லை.
அவன் மனதிலிருந்தது ஒன்றே ஒன்றுதான்.
மகியின் அம்மாவிடம் சொன்னது போல தன் தகுதியை எப்பாடுப்பட்டாவது உயர்த்தி கொண்டு அவளை திருமணம் செய்ய வேண்டும். தன்னவளாக மாற்றி கொள்ள வேண்டும்.
ஆனால் ஆரம்பத்தில் தேர்வு முடிவுகள் அவனுக்கு சாதகமாக வந்திருக்கவில்லை. முயற்சிகள் வீணாகி விட்டதென வேதனையாக இருக்கும். வலிக்கும்.
அவளோ, “பரவாயில்ல விஜி அடுத்த எக்ஸாம்ல பார்த்துக்கலாம்” என்று ஆறுதல் கூறுவாள். அவளின் அந்த வார்த்தைகள் அவனுக்கு கொடுக்கிற உத்வேகமே தனி. இவளுக்காக... இவள் ஒருத்திக்காக எதையும் செய்யலாம்... சாதிக்கலாம் என்ற உத்வேகமும் உற்சாகமும் தோல்விகளை திடமாக அவனை கடந்து வர வைத்தது.
அவன் தன் முயற்சியை கைவிடவில்லை. தொடர்ந்து முயற்சித்தான். அந்த வருட இறுதியில் அறிவிக்கப்பட்ட முடிவுகளில் சார் பதிவளார் அலுவலகத்தில் அவனுக்கு போஸ்டிங் வந்திருந்தது.
மகிக்கும் கூட ஆச்சரியம்தான். அவன் நன்றாக படிக்கும் மாணவன்தான் என்றாலும் அவனுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மையே அவனுடைய மதிப்பெண்கள்களை குறைத்துவிடும்.
ஆரம்பத்தில் இருந்தே அவள் அதனை அவனிடம் சுட்டிக்காட்டி இருந்த போதும் அவன் தன்னை மாற்றி கொள்ளவே முயலவில்லை. ஆனால் இன்று முற்றிலுமாக மாறி அள்ள அள்ள குறையாத நம்பிக்கையுடன் அவன் இருக்க ஒரே காரணம் அவள்தான். அவள் காதல்தான்.
அவன் வாழ்வில் அவள் இல்லாமல் போயிருந்தால் இந்தளவு முயன்று இருக்கவே மாட்டான். தனக்கு இதெல்லாம் வராது என்று அமைதியாக ஒதுங்கி நின்றிருப்பான். முயற்சி கூட செய்திருக்க மாட்டான்.
அவளுக்காக எனும் போது எதையும் செய்யலாம் என்று ஏற்பட்ட மனஉறுதி அவனை வெல்ல வைத்தது. விஷயமறிந்து லதாவும் மகிழ்ந்து போனார்.
ஆனால் விஜயை அவர் முதல் முறை பார்த்த போது அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லைதான். காரணம் அந்த முகச்சாயல். அது அவர் வாழ்க்கையின் மிக மோசமான இழப்பை அவருக்கு நினைவுப்படுத்தியது.
இவன் எப்படி தன் மகளை சந்தோஷமாக பார்த்து கொள்வான் என்று சந்தேகம் எட்டி பார்த்தது. ஆனால் விஜய் அவரிடம் பேசிய விதமும் சொன்ன வார்த்தைகளும் அவரை ஆச்சரியப்படுத்தின. அவன் வயதிற்கும் அதிகப்படியான முதிர்ச்சியை அவன் பேச்சிலும் பார்வையிலும் அவரால் உணர முடிந்தது.
எல்லாவற்றிற்கும் மேல் அவன் ஜெயதேவியின் மகன் என்பது அவன் மீது கொஞ்சமே கொஞ்சம் இரக்கத்தையும் வரவழைத்தது. அவன் கேட்கும் வாய்ப்பை கொடுத்துதான் பார்ப்போம் என்றுதான் சம்மதித்தார்.
ஆனால் அடுத்தடுத்து வந்த நாட்களில் வீட்டின் பண்டிகைகள் விழாக்கள் என விஜய் வந்து போக இருந்தான். அவனுடன் பழகி பார்த்த பிறகு அவனை லதாவிற்கு ரொம்பவும் பிடித்து போனது. மெது மெதுவாக அவர்கள் குடும்பத்தின் ஆளாகவே அவன் மாறியும் போய்விட்டான்.
ஒரு வேளை அவனுக்கு இந்த அரசு வேலை கிடைத்திராவிட்டாலும் மகளை அவனுக்கு மணமுடிப்பதில் அவருக்கு எந்த தயக்கமும் இருந்திருக்காது. ஆனால் அவர் எதிர்பாரா வண்ணம் அவன் தான் சொன்னதையும் செய்து காட்டி இருந்தான். அதற்கு பிறகு எந்த தயக்கமும் இல்லாமல் உறவினர்களை அழைத்து கோவிலில் எளிமையாக மகி விஜியின் திருமணத்தை நடத்தி முடித்திருந்தார்.
திருமணம் முடிந்த கையோடு தங்கள் வீட்டை இடித்து புதிப்பித்து கட்ட வேண்டுமென்று அருள் விரும்ப லதா சம்மதிக்கவில்லை.
வியாபாரத்தில் அகலக் கால் வைத்து எழ முடியாதளவுக்கு அவர் தந்தை வீழ்ந்ததன் வலி இன்னும் அவர் மனதில் ஆறா ரணமாக கடந்தது. மகனும் அப்படி அகலக் கால் வைத்து காலத்திற்கும் கடனாளியாக ஆகிவிட போகிறானோ என்று பயந்த நிலையில் விஜயும் மகியும் அவனுக்கு உதவியாக இருப்பதாக சொன்னார்கள். அவருக்கும் தைரியம் கொடுத்தார்கள்.
அதற்கு பிறகுதான் வீடு கட்டும் பணி துவங்கப்பட்டது. ஆரம்பக்கட்ட செலவுகளில் சேமிப்பு எல்லாம் கரைந்து கடன் வாங்கிய போதும் செலவு இழுத்து கொண்டே போனது. மகி தன் திருமணத்திற்கு வாங்கிய நகைகளை எல்லாம் தமையனிடம் கொடுத்தாள்.
அதேநேரம் அவள் வேலைக்கும் சென்று கொண்டு, அம்மாவிற்கு உதவியாக தையல் கடையில் துணி தைத்து கொடுக்கவும் செய்தாள். முன்பை விடவும் நிறைய வாடிக்கையாளர்கள் வந்தார்கள். செலவோடு செலவாக இரண்டு தையல் இயந்திரங்களை வாங்கி போட்டு அருகே இருந்த பள்ளியின் சீருடை ஆர்டர்களை எல்லாம் வாங்கி முடித்து கொடுத்ததில் ஒரளவு நல்ல வருமானம் வந்தது.
அதன் பின் வீடும் மளமளவென்று வளர்ந்தது. எப்படி எல்லாம் விரும்பினார்களோ அதே போன்று கட்டி முடித்து வீட்டின் முழுமை வடிவத்தை பார்த்த போது லதா பூரித்து போனார். தான் பார்ப்பது என்ன கனவோ என்றுதான் முதலில் அவருக்கு தோன்றியது.
உண்மையில் கனவில்தான் இது போன்ற வீட்டில் தான் வாழ்வோம் என்று எண்ணி இருக்க அது நிஜத்தில் நடந்ததில் அவர் என்ன மாதிரியாக உணர்ந்தார் என்று அவருக்கே தெரியவில்லை. சந்தோஷத்தில் வார்த்தைகளே வரவில்லை.
பருவ வயது வரை அவர் வாழ்வில் இருந்த சந்தோஷமெல்லாம் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து காணாமல் போனது. குழந்தைகளும் இல்லாமல் போயிருந்தால் வாழ்க்கையில் அவருக்கு பிடிப்பே இல்லாமல் போயிருக்கும்.
அருளும் மகேஸ்வரியும்தான் அவரின் நம்பிக்கையின் ஒளி. இன்று அந்த ஒளி பிரகாசமாக மின்னியது.
வண்ண விளக்குகளால் புதுமனை புகுவிழாவிற்கு தயாராகி அழகும் கம்பீரத்துடன் மிளிர்ந்த அவரது வீட்டையும் அதன் வாயிற் சுவருகளில் லதா இல்லம் என்று மின்னிய தங்க பலகையையும் பார்த்து நெகிழ்ச்சியில் உணர்வுகள் தளும்ப கண்ணீரில் அப்படியே நின்றுவிட்டார்.
“அம்மா உள்ளே வாங்க” என்று அருள் அவர் தோள் மீது கை வைத்து அணைத்து பிடித்து வீட்டிற்குள் அழைத்து சென்றான். கல்லும் செங்கலுமாக பார்த்த அவர்கள் வீடு வண்ண பூச்சுக்கள் அடித்து உயிர் பெற்று நின்றது. அழகாய் இருந்தது. அற்புதமாக காட்சியளித்தது.
விஜய் வீட்டின் சுவர்களில் பூக்களை கோர்த்து சரம் சரமாக தொங்கவிட்டு அலங்கரித்து கொண்டிருக்க,
“விஜய் நான் வரட்டுமா?” என்று கேட்டான் அருள்.
“இல்ல முடிச்சுட்டேன்” என்றவன் இறுதியாக ஜன்னல்களையும் அலங்கரித்து முடித்துவிட்ட பிறகு கோலம் போட சென்ற மனைவியை காணவில்லை என்று எண்ணத்தில் வெளியே வந்து,
“இன்னுமா கோலம் போடுற” என்று கேட்டு கொண்டே வெளியே வந்தான். ஆம் இன்னுமும் போட்டு கொண்டிருந்தாள்.
சாதாரண நாட்களிலேயே அத்தனை சீக்கிரத்தில் கோலம் போட்டு முடிக்க மாட்டாள். இன்று அவர்கள் வீட்டின் புதுமனை புகுவிழா வேறு. எப்படி போடு போடு போடுவாள் என்று சொல்லவா வேண்டும்.
அந்த சிமெண்ட் தரையை அவள் வண்ண பூந்தோட்டமாக மாற்றி இருந்தால் என்று சொன்னால் அது மிகையாகாது. அவ்வளவு அழகாகவும் வண்ணமயமாகவும் மின்னிய அந்த கோலத்தை ஆச்சரியத்துடன் விழிகள் விரித்து பார்த்தவன் விழிகள் அந்த பூந்தோட்டத்திற்கு இடையில் நின்ற மனைவியையும் ரசிக்க தவறவில்லை.
புடவையை தூக்கி சொருகி இருந்தவள் அவ்வப்போது நெற்றியில் சரியும் துண்டு முடிகளை முழங்கையால் தள்ளிவிட்டு கொண்டே தம் விரல்களால் அக்கோலத்திற்கு வண்ணம் தீட்டியதை பார்க்க அத்தனை ரசனையாக இருந்தது.
ஆனால் அந்த அழகை சில நொடிகளுக்கு கூட ரசிக்க விடாமல் அருள் வந்து கத்த துவங்கினான்.
“ஏன் டி இன்னுமா டி கோலம் போட்டு முடிக்கல” என்று காய்ந்தவன் மேலும் அவர்கள் சாலை முழுவதுமாக பரவி கிடந்த அந்த கோலத்தின் பிரம்மாண்டத்தை கண்டு,
“ஆமா நீ எல்லோரையும் வரவேற்க கோலம் போடுறியா... இல்ல யாருமே உள்ள வந்திர கூடாதுன்னு கோலம் போடுறியா” என்று கேட்க,
“டேய் போடா வேலைய பார்த்துக்கிட்டு” என்று அவனை நிமிர்ந்து கூட பாராமல் பதிலுரைத்தாள்.
“இவகிட்டலாம் மனுஷன் பேசுவானா... சொல்றதை காது கொடுத்து கேட்குறாளா பாரு... நான் சொல்றதைதான் கேட்க மாட்டுறா... நீயாவது சொல்லேன்டா” என்று அருள் விஜயிடம் சொல்ல,
“மகி” என்று வாயை திறந்த மறுகணம், “ஒழுங்கா ஓடிடுங்க இரண்டு பேரும்... கண்ணுல கோலப்பொடி போட்டுடுவேன்” என்றாள்.
“நானே பரவாயில்ல” என்று அருள் வாயை மூடி சிரித்து விட்டு விஜயையும் வாரி விட்டு செல்ல,
“உங்க அண்ணன் முன்னாடிதான் என் மானத்தை வாங்குனாமா நீ... அவன் எப்படி சொல்லிட்டு போறான் பாரு” என்றவன் கடுப்புடன் கேட்க அவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“யாரு அவனா? அவன் வாங்குன அடில பாதி கூட நீ வாங்கி இருக்க மாட்ட” என்றதும் கொஞ்சும் மனதிற்கு ஆறுதலாக இருந்தது.
“எனக்கு அடிலாம் வேணாம் தாயே... நான் உன் கோலத்தை பார்த்து ரசிக்கத்தான் வந்தேன்... எவ்வளவு அழகா போடுறடி நீ” என்று அவன் மனைவிக்கு ஐஸ் மூட்டையாக வைக்க அவள் அசராத பார்வையுடன்,
“டேய் டேய் நீ கோலத்தை பார்க்குறியா இல்ல எதை பார்க்குறனு எனக்கு தெரியாது?” என்று நிமிரவும் அவன் சூசகமாக பார்த்து கண்ணடித்து சிரிக்க,
“எழுந்து போடா” என்றாள்.
“ஏதாச்சும் உதவி கிதவி”
“ஆணியை புடுங்க வேணாம்” என்றவள் சொல்ல,
“வேணாமா?” என்று இழுக்க,
“வேணவே வேணாம்... நீ ஒழுங்கா எழுந்து போ” என்றவள் சொல்ல ஏக்க பெருமூச்சுடன் எழுந்து அவன் உள்ளே வந்தாள்.
“மகி எங்கே தம்பி” என்று லதா கேட்டார்.
“அவ கோலம் போடுறா... இல்ல இல்ல கோலத்து கூடவே குடும்பம் நடத்திட்டு இருக்கா” என்று போகிற போக்கில் வத்தி வைத்து விட்டு போக, அவ்வளவுதான். லதா வாயிலுக்கு சென்று சாமியாடிவிட்டார்.
எப்படியோ அவளுக்கு கோலத்தை முடித்து உள்ளே வந்தாள். அதன் பின்பு குளித்து தயாராகி என்று அந்த நாள் அவர்களுக்கு பூஜையும் புகையுமாக வெகுசீக்கிரமாகவே துவங்கிவிட்டது.
ஹோமத்தை முடித்ததும் பாலை காய்ச்சி அது பொங்கி வழிய எல்லோரும் ஆரவாரித்து சந்தோஷமாக அந்த வீட்டின் முதல் நாளினை சிறப்பாகவும் செழிப்பாகவும் அதேநேரம் அன்பும் சந்தோஷமும் பொங்கி வழிய வேண்டுமென்ற வேண்டுதலுடன் துவங்கினார்கள்.
அதன் பின்பாக வீடு நிறைய உறவினர்கள் கூட்டம் குவிந்தது. வந்தவர்களை எல்லாம் வரவேற்று மாடியில் அழைத்து சென்று உணவு பரிமாறினார்கள்.
மகி ஒரு நிலைக்கு மேல் முடியாமல் உள்ளிருந்த அறையில் வந்து ஓய்ந்து களைத்து போய் சாய்ந்து கொள்ள, “ஏய் மகி... மகி... உன்கிட்ட” என்று விஜய் வந்து நின்றான்.
“ஐயோ முடியலயே” என்று அவள் கால்களை மடக்கி முகத்தை அதில் மூடி கொண்டு,
“என்னால இனிமே எந்த வேலையும் செய்ய முடியாது.... போ தூக்கம் தூக்கமா வருது... டயடா இருக்கு” என்று கண்களை மூடி கொண்டாள்.
“பின்ன டயடாகாம.. ஒரு கோலத்தை ஒரு மணி நேரம் போடலாம்... ஒரேடியா பத்து மணி நேரமா போடுவாங்க”
“எப்பப்பாரு என் கோலத்தை கிட்டயே வருவானுங்க” என்று அவள் அந்த தூக்க கலக்கத்திலேயே அவனை திட்டி வைக்க,
“நான் வரல... ஆனா வந்தவங்க எல்லாம் அது மேலதான் ஏறி வந்தாங்க” என்று பதிலுக்கு கலாய்க்க அவள் அவன் சொன்னதை காதில் வாங்காமல் கண்களை மூடி தூக்கத்திற்கு போய்விட்டாள்.
“ஏய் ஏய் தூங்காதடி உனக்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” அவளை மீண்டும் உலுக்கி எடுத்து தூக்கத்தை கலைக்க,
“என்னடா வேணும் உனக்கு” என்று அயர்ந்து போய் அவள் நிமிர,
“நான் இப்போ சொன்ன விஷயத்தை கேட்டனா உனக்கு தூக்கம் போய்டும்” என்றான்.
“என்ன விஷயம் சொல்லு... தூக்கம் போகுதா பார்க்கலாம்”
அவன் அப்போது அவள் காதில் நெருங்கி அந்த தகவலை சொல்ல, அது உண்மையிலேயே வேலை செய்தது. பெரிதாக விழிகளை விரித்தவள், “நிஜமாவா?” என்று கேட்க,
“எனக்கு அப்படிதான் தோணுது” என்றான்.
“இருக்காது... நீ ஏதோ உளற?” என்றவள் மீண்டும் கண்களை மூடி கொள்ள,
“ஏய் தூங்காதடி... எழுந்து வா... நீயே வந்து பாரு” என்று அவளை எழுப்பி தரதரவென்று மாடிக்கு அழைத்து செல்ல அவளே நேருக்கு நேராக அந்த காட்சியை பார்த்தாள். சந்தேகமாக இருந்தாலும், “இருக்காதுடா அவன் கூட சும்மா வேலை பார்க்குற பொண்ணு” என,
“அப்படியா சரி வா பேசுவோம்” என்று அவன் இழுத்து வந்து அருளுக்கும் அவன் பேசி கொண்டிருக்கும் பெண்ணுக்கும் இடையில் கொண்டு வந்து மகியை சட்டமாக நிறுத்திவிட சங்கடமாக நெளிந்தவள் கணவனை முறைக்க,
“ஹாய்... நீங்க நம்பியோட சிஸ்டர்தானே” என்று கேட்டாள் அருளின் தோழியா காதலியா என்று அப்போதைக்கு தெரியாதவள்.
‘எது நம்பியா?’ என்று உதட்டை சுழித்து கொண்டே அண்ணனை பார்க்க அவன் பார்வை அப்படியும் இப்படியுமாக அலைபாய்ந்தது.
தங்கையை பார்த்து லேசாக தடுமாறி கொண்டே அவன் அந்த பெண்ணிடம், “ஆமா... இவ என் தங்கச்சி மகேஸ்வரி... அப்புறம் அவ ஹஸ்பென்ட் விஜய்” என்று அறிமுகம் செய்ததும் அவள் இருவருக்கும் பொதுவாக புன்னகைத்து ஹாய் சொல்லி வைக்க,
“ நீங்க அண்ணா கூட வேலை பார்க்குறீங்களா” என்று கேட்டாள் மகி.
“இல்ல” என்று அந்த பெண்ணும் அருளும் சேர்ந்து ஒரே சமயத்தில் ஒரே போல உரைக்க மகி இருவரையும் ஒரு மாதிரியாக பார்த்தாள்.
அதன் பின் அருள் முந்தி கொண்டு, “அவங்க டாக்டர்... கிளினிக் வைச்சு இருக்காங்க” என,
“டாக்டரா?” என்று அப்பட்டமாக தன் அதிர்ச்சியை காட்டிவிட்டு கணவனையும் ஒரு முறை பார்க்க அவளுடைய முகபாவத்தை பார்த்த அந்த பெண்,
“டாக்டர்னா எதாவது பிரச்சனையா?” என்று கேட்டாள். விஜய் உடனே,
“பிரச்சனை டாக்டர்ங்குறது இல்ல... டாக்டராங்குறதுதான்” என்று புரிந்தும் புரியாமல் கமல் போல வசனம் பேசியவனை ஞே என்று சுற்றி இருந்த மூவரும் பார்த்து வைத்தார்கள். அதன் பின் அருள் அந்த டாக்டர் பெண்ணை சமாளித்து கீழே அனுப்பி விட்டு அவனுமே நழுவி கொள்ள எத்தனிக்க மகேஸ்வரி தமையனை நிறுத்தி பிடித்து,
“என்னடா அவ... நம்பி... துரும்பி பிடிச்சு கம்பின்னு எல்லாம் உன்னை கூப்பிட்டு போற... ஒன்னும் சரி இல்லையே” என்று தீவிர விசாரணையை துவங்கினாள்.
“இதுல என்ன சரி இல்ல அருள்நம்பிங்குற என் பேரை சுருக்கி நம்பினு சொல்றா” என்றதும் விஜய் ஆர்வத்துடன், “உங்க பேர் அருள்நம்பியா... இவ்வளவு நாளா எனக்கே இது தெரியாதே” என்று இதுதான் சமயம் என்று அவன் பங்குக்கு ஏற்றிவிட அருள் கடுப்பாகி,
“ஏன் டா நேரம் பார்த்து நீயும் காலை வார” என்றதும்,
“நாங்க காலை வாரல... நீங்க எங்க காலை வாரி அந்த டாக்டரை கரெக்ட் பண்ணீங்க” என்று பதிலுக்கு கேட்டாள்.
“க்ரெக்ட் எல்லாம் பண்ணல... ஜஸ்ட் நாங்க பிரண்ட்ஸ்தான்” என்று திக்கி திணறி பதில் சொன்னவனை மகி ஏற இறங்க பார்த்து, “பிரண்ட்ஸா... எங்ககிட்டயவே” என்றாள்.
அருள் மூச்சை இழுத்துவிட்டு, “சரி டி லவ்தான் பண்றான்.. அம்மா முன்னாடி எதுவும் சொல்லி வைக்காத... நானே பொறுமையா அப்புறம் பேசுறேன்” என,
“யாரை கேட்டு நீ டாக்டர் பொண்ணு எல்லாம் லவ் பன்ற... இதெல்லாம் செட்டாகாது... நான் ஒத்துக்க மாட்டேன்பா” என்று விட்டு கீழே சென்று விட்டாள்.
அருள் முகம் வாடி போனது. “டேய் என்னடா உன் பொண்டாட்டி இப்படி சொல்லிட்டு போறா”
“அவ சொன்னா சொன்னதுதான்... இதுல நான் சொல்றதுக்கு ஒன்னும் இல்ல” என்று விஜயும் கையை விரிக்க,
“டேய் உங்க இரண்டு பேர் லவ்க்காக நான்தான் எங்க அம்மாகிட்ட பேசுனேன்... நன்றி மறப்பது நன்றன்று டா” என்றதும் விஜய் கொஞ்சம் மனமிறங்கி,
“சரி நான் சொல்ற மாதிரி செய்யுங்க” என்றான்.
“என்ன?”
“உங்க ஆளுக்கிட்ட போய் கோலம் நல்லா இருக்கு யார் போட்டது கேட்டு கொஞ்சம் தூக்கலா பாராட்ட சொல்லுங்க... உங்க தங்கச்சி கவுந்துடுவா” என்றான்.
அருள் யோசித்து விட்டு, “வொர்க் அவுட் ஆகுங்குற” என,
“ஆகும் ஆகும்” என்றான். அதன் பின் அருள் கீழே போனதும் அவன் சொன்ன யுக்தியை அப்படியே கையாள அது வெகுசிறப்பாக வேலை செய்தது. மகி சிரித்து அந்த பெண்ணிடம் பேச ஆரம்பித்துவிட்டாள்.
அருள் ஒரு வழியாக நிம்மதி பெருமூச்சுவிட்டு நிமிரும் போது பூரணி கை குழந்தையுடன் வர, “உன் எதிரி” என்று விஜய் மகியின் காதில் ஓதினான்.
பூரணியின் உறவினர்கள் எல்லாம் காலையிலேயே வந்து விட்டு சென்றிருந்தார்கள். முன்பு போல மனவருத்தங்கள் சண்டைகள் எல்லாம் இப்போது அவர்களுக்கு இடையில் இல்லை.
விஜய் மகி திருமணம் நடப்பதற்கு முன்பாகவே பூரணி திருமணம் ஏற்பாடு செய்யப்பட, அந்த விசேஷத்திற்கு அவர்கள் வீட்டிலிருந்து லதா வீட்டிற்கு அழைப்பு வந்திருந்தது. விஜயையும் தனியாக அழைத்திருந்தார்கள். அந்த திருமண விழாவில்தான் பழைய பகை எல்லாம் மறந்து ஒன்று கூடினார்கள்.
அதன் பின் விஜய் மகி திருமணத்தில் ஒரளவு நட்பாக நெருங்கி விட்டிருக்க, இன்று பூரணியும் தன் கணவனுடன் அவர்கள் வீட்டின் விழாவிற்கு கொஞ்சம் தாமதமான போதும் ஆஜராகிவிட்டாள்.
அவள் கணவன் வேறு யாரும் இல்லை. சிவாதான். இருவருக்கும் திருமணமாகி ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது.
ஒரு பக்கம் சிவா அனுஷ்யா காதல் கை கூடாத நிலையில் மீண்டும் முதலிலிருந்து கோட்டை அழித்து பூரணி சிவாவின் கல்யாண பேச்சை துவங்க இம்முறை இருவருமே அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தும் மனநிலையில் இல்லை.
சில காதல்கள் திருமணத்திற்கு முன்பு மலரும். சிலவை திருமணத்திற்கு பின்பாக உணரப்படும். அவர்கள் இரண்டாம் ரகம். சிவாவும் பூரணியும் மணமுடித்த சில நாட்களில் இருவரும் மனம் ஒத்து தங்கள் வாழ்வை துவங்க அவர்களது காதலின் ஆதாரமாக பெண் மகள் பிறந்திருந்தாள்.
இந்த ஒன்றரை வருடத்தில் நிறைய மாறிவிட்ட போதும் பூரணி மகியின் போட்டியும் பகையும் கொஞ்சமும் மாறவில்லை.
“பார்த்தியா நான்தான் முந்திக்கிட்டேன்” என்று வந்ததும் வராததுமாக தன் குழந்தையை காட்டி மகியை வெறுபேற்றிவிட்டுதான் மறுவேலையே பார்த்தாள். இரண்டுமே எப்போதுமே சண்டை கோழிகள்தான்.
ஒரு வழியாக விழா முடிந்து உறவினர்கள் எல்லாம் களைந்து சென்ற களைப்பு தீர உறங்கி எழுந்த மகி இருள் சூழவும் மாடியேறி அங்கே சாய்ந்து நின்று அமைதியாக நட்சத்திரங்களை ரசித்து கொண்டிருந்தாள்.
“என்னடி பண்ணிட்டு இருக்க இங்க தனியா?”
“நம்ம வாழ்க்கையை பத்தி யோசிச்சுட்டு இருக்கேன்” என்றதும் அவனுக்கு சிரிப்பு பொங்கி கொண்டு வர அதனை அடக்கி கொண்டவன்,
“ஏதாவது தத்துவம் சொல்ல போறியா மகேஸ்வரி... அப்படின்னா சொல்லிடு... நான் கீழே ஓடிடுறேன்” என்று கிண்டலடித்த கணவனை கடுப்புடன் முறைத்து,
“ஓடி போ” என்றாள்.
“ஏய் கோச்சுக்கிட்டியா... சும்மா சொன்னேன்டி... உன்னை விட்டு நான் எங்கடி ஓடி போறது... வேணா நீயும் வா... நாம ஒண்ணா ஓடி போவோம்” என்று சொல்ல, “போடா” என்று அவள் முகத்தை திருப்பவும் அவன் தோள்களை இறுக்கமாக வளைத்து பிடித்து அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.
“டேய் விஜி” என்று நாணி முகம் சிவந்தவளை இன்னும் இன்னும் நாணப்பட செய்த அவள் நாயகன் தொடர் முத்த தாக்குதலில் ஈடுப்பட்டான்.
அவர்களின் நட்பென்ற வானத்தில் காதலானது நட்சத்திரமாக எங்கெங்கும் மின்னியது. என்றாவது நட்சத்திரங்கள் மேகங்ளுக்கு இடையே ஒளிந்து கண்ணாமூச்சி ஆடலாம். ஆனால் வானம். அது என்றுமே மாறாது. மறையாது. அவர்களின் ஆழமான நட்பு போல.
புரிதலுடன் கூடிய அவர்கள் தாம்பத்யமும் கூட அப்படிதான். எத்தனை சண்டைகள் பூசல்கள் வந்த போதும் தப்பென்று தெரிந்து விட்டால் ஈகோ இல்லாமல் அவர்கள் மன்னிப்பு கேட்டு கொள்வார்கள். அதே போல காதல் பெருகிய சமயங்களில் தங்களை மறந்து ஒருவருக்குள் ஒருவர் புதைந்து போவார்கள்.
தோழமைகள் எல்லாம் காதலாவது இல்லை. அதேபோல எல்லா காதல்களிலும் தோழமைகள் இருப்பது இல்லை. ஆனால் இரண்டும் இணைந்திருக்கும் பந்தங்களின் சிறப்பே தனி.
இனி வரும் காலங்களிலும் சிறப்பான அவர்கள் உறவு அழகாய் மலர்ந்து அன்புடன் கலந்து நட்பின் பாதையில் மேன்மேலும் செழித்து வளரும்.
இந்த கதையை படித்த வாசகர்களுக்கு நன்றிகள். மறவாமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
************************சுபம்*********************
nice liked it
Etho onnu missing
Feel good story read pana start pana fulla padikama vaika mudila