top of page

Kanavar Thozha - 9

9

மகேஸ்வரி வாசலில் வந்து நின்ற சமயத்தில் விஜயிற்கும் பூரணிக்கும் இடையில் பலத்த வாக்குவாதம் நிகழ்ந்து கொண்டிருந்தது. முதலில் என்ன ஏதென்று அவளுக்கு புரியவில்லை.


“அடம் பிடிக்காத பூரணி... நான் சொல்றதை கேளு” என்று விஜய் சொல்ல பூரணியோ முடியவே முடியாது என்று மறுக்கிறாள். அவன் என்ன சொல்கிறான் இவள் எதை மறுக்கிறாள் என்று ஆரம்பத்தில் ஒன்றும் புரியவில்லை மகேஸ்வரிக்கு. போக போகத்தான் அவர்கள் உரையாடல் திருமணத்தை பற்றியது என்று விளங்கியது.


“எனக்கும் உங்க குடும்பத்துக்கும் எந்த உறவும் வேண்டாம்னு நான் இருக்கேன்” விஜயின் குரல் உயர்ந்தது.


“நீங்க வேண்டாம்னு சொல்லிட்டா அத்தைக்கும் எங்க குடும்பத்துக்கும் இருக்க உறவு இல்லாம போயிடுமா” அவளுமே சத்தமிடுகிறாள்.


“இப்ப அந்த உறவை வைச்சுட்டு என்ன பண்றது” விஜயின் கேள்வி நியாயமானது. ஆனால் அதற்கு பூரணியின் பதில் மகேஸ்வரியை பதற வைத்தது.


“கல்யாணம் பண்ணிக்குவோம் விஜய்... இன்னைக்கு இங்கேயே நம்ம கல்யாணம் பண்ணிக்கிறோம்... நான் தாலி எல்லாம் கூட வாங்கிட்டு வந்துட்டேன்... அப்புறமா கூட நம்ம ரெஜிஸ்டர் பண்ணிக்கலாம்... நீங்க என் கழுத்துல இப்பவே தாலி கட்டுங்க... இதோ அத்தை படம் இருக்கு.. இங்கேயே நின்னு நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றவள் தான் வைத்திருந்த நகை டப்பாவில் மஞ்சள் கயிற்றில் பிணைத்திருந்த தாலியை கையில் எடுத்து காட்டவும் அவனுக்கு தூக்கிவாரி போட்டது.


“ஏய் என்னது இது” என்று விஜய் மிரள மகேஸ்வரி கண்களும் அப்போது அதிர்ச்சியில் விரிந்தன. இவள் ஒரு முடிவுடன்தான் வந்திருக்கிறாள்.


பூரணி அவர்கள் குடும்பத்தில் கடைசி வாரிசு. செல்ல வாரிசு. விஜயேந்திரனுக்கு ஆறு வருட காலம் குழந்தையே இல்லாமல் பிறந்த ஒற்றை வாரிசு.


தான் என்ன நினைத்தாலும் நடக்க வேண்டுமென்ற பிடிவாதம். அதேபோல அவள் விருப்பத்தை எல்லாம் கேட்டதும் நிறைவேற்றி வைக்கும் அப்பா சித்தப்பா சித்தி பாட்டி அத்தை என்று ஒரு பெரிய குடும்ப பட்டாளமே அவளுக்காக இருந்தது. ஆனால் விஜய் விஷயத்தில் ஒட்டு மொத்த குடும்பமே அவளுக்கு எதிராக நின்றதைதான் அவளால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.


அதுவும் அவனை காதிலிக்கிறேன் கல்யாணம் செய்து கொள்ள விருப்படுகிறேன் என்று கூட அவள் இன்னும் அவர்களிடம் தெரிவிக்கவில்லை. அதற்குள்ளாகவே அவனை பார்க்க கூடாது பேச கூடாது என்ற நிபந்தனைகள் வேறு.


அவளுக்கோ நினைத்தது நடந்தே தீர வேண்டுமென்ற பிடிவாதம். விஜயிடம் கோபித்து கொண்டு அவள் பிரிந்து சென்றது கூட அவனாகவே தன்னை தேடி வந்து கெஞ்சி சமாதானம் செய்வான் என்ற எதிர்பார்ப்பில்தான். ஆனால் அவள் நினைத்தது எதுவும் நடக்கவில்லை.


நேருக்கு மாறாக விஜயின் அம்மா இறந்ததும் மீண்டும் மகேஸ்வரியும் விஜயும் ஒன்றிணைந்ததும் நடந்தது. அதுதான் இப்போது அவளின் உச்சபட்ச பயத்திற்கான காரணமும்.


அதுவும் விஜயை முதல் முறை பார்த்ததுமே அவனுடைய வசீகர தோற்றமும் ஆளுமையான உயரம் ஈர்க்கும் விழிகள் அத்தனையும் பச்சக்கென்று அவள் மனதிற்குள் ஒட்டி கொண்ட பின் அவனை எதற்காகவும் யாருக்காகவும் அவள் விட்டு கொடுக்க விழையவில்லை. முக்கியமாக மகேஸ்வரிக்காக.


உண்மையில் பூரணிக்கு மகேஸ்வரி எந்த வகையிலும் சமம் இல்லை. அவளுக்கு கிடைத்திருக்கும் ஆடம்பரம் அன்பு உறவுகள் என்று எதிலுமே மகேஸ்வரிக்கு பாதி கூட கிடைத்தது இல்லை.


இருப்பினும் மகேஸ்வரியை பூரணி எதிரியாக பாவித்ததும் தன்னை விட ஒரு படி கூட அவள் எதிலும் அதிகமாக இருக்க கூடாது என்று நினைப்பதும் முழுக்க முழுக்க அவளுடைய ஈகோவை பூர்த்தி செய்யும் நோக்கத்தில்தான்.


எல்லாம் தாண்டி விஜய் அவளுக்கு உறவும் மற்றும் உரிமையானவன். அவனை போய் மகேஸ்வரியிடம் விட்டு கொடுத்துவிடுவதா? என்ற எண்ணம்தான் அவளை எந்த எல்லைக்கும் போக வைத்தது.


பூரணி கையிலிருந்த தாலியை பார்த்த விஜய் முதலில் அதிர்ச்சியானான். பின்னர் அவனுக்கு அது உச்சபட்ச முட்டாள்தனமாகவே தெரிய,


“நிறைய தமிழ் சினிமா பார்ப்பியா நீ... தாலி ஒன்னு கட்டிட்டா அதுக்கு பேர் கல்யாணம்னு உனக்கு யார் சொன்னது” என்று நக்கலாக கேட்க அவள் முகம் இறுகியது.


“உங்க அம்மா அப்பா கல்யாணமும் இப்படிதான் நடந்துச்சுன்னு அத்தை என்கிட்ட சொன்னாங்க... அப்போ அவங்களுக்கு நடந்ததும் கல்யாணம் இல்லன்னு நீங்க சொல்லிடுவீங்களா?” என்று கேட்டு அவனை மடக்க ஒரு நொடி திகைத்தவன் பின்,


“அதல்லாம் அப்போ... இப்போ அப்படி எல்லாம் கிடையாது” என்றான்.


“அப்போ இப்போன்னு எல்லாம் இல்ல... எல்லா டைம்லயும் தாலி தாலிதான்... தாலி கட்டுனா கல்யாணம்தான்” என்று பூரணி அவனிடம் விதாண்டாவாதம் செய்து கொண்டிருக்க விஜய் சலித்து போய் தலையை பிடித்து கொண்டு,


“மகி உன்னை எப்பவும் அரைலூசுனுதான் சொல்லுவா... அப்ப கூட நீ அப்படிதான்னு நான் நினைக்கல... இப்ப எனக்கும் அப்படிதான்னு தோணுது” என, அவள் முகம் சூடாகி போனது.


“என்னை லூசு பைத்தியம்னு நீங்க என்ன வேணா சொல்லிக்கோங்க... ஆனா அவ பேரை மட்டும் சொல்லாதீங்க” என்றவளுக்கு அப்போது அவளை திட்டியது கூட பெரிதாக தெரியவில்லை. மகி என்ற பெயரை சொன்னதுதான் கடுப்பை கிளப்பியது.


“சாரி பூரணி... நீ என்ன சொன்னாலும் நம்ம கல்யாணம் நடக்க போறதில்ல” விஜய் தீர்மானமாக கூறிவிட்டு, “முதல இங்கிருந்து போ” என அவள் நகரவில்லை.


“நீங்க என் கழுத்துல தாலி கட்டலனா நேரா நான் ரயில்வே ட்ரேக்லதான் போய் நிற்பேன்” என்று அதிரடியாக மிரட்டல் ஆயுதத்தை கையில் எடுத்தாள் .


“ஏய் என்ன பேசுற... பைத்தியம் மாதிரி” என்று கோபப்பட்ட விஜயின் குரலில் உணர்ச்சியும் கோபமும் கலந்திருந்தது.


“நான் சொன்னதை செய்வேன் விஜய்... நான் என்ன பண்ணனும் இப்போ நீங்கதான் முடிவு பண்ணனும்” என்று தான் நினைத்ததை எப்படியாவது சாதித்து விட வேண்டுமென்ற பூரணியின் பிடிவாதத்தின் முன் விஜயின் கோபம் கொஞ்சமும் எடுபடவில்லை.


அதற்கு மேல அவளிடம் என்ன பேசுவதென்றும் அவனுக்கு புரியவில்லை. விஜய் குரல் அமிழ்ந்துவிட்டதில் மகேஸ்வரியின் மனம் கலங்கியது. இதற்கு மேல் இங்கே நின்று இவர்கள் பேச்சு வார்த்தைகளை கேட்டு வேதனைப்பட அவள் விரும்பவில்லை.


அவன் பிறந்த நாளுக்காக ஆசையாக சமைக்க வாங்கிய பொருட்களை அங்கேயே ஓரமாக வைத்து விட்டு படிக்கட்டில் இறங்க, அவள் கால்கள் வலுவிழுந்து விட்டது போலிருந்தது. நடக்க முடியவில்லை.


இனி தன் வாழ்வில் விஜய் இல்லை என்பதை யோசித்து பார்க்கவே மனம் வலித்தது. கட்டுப்படுத்த முடியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. கண்ணீர் பாதையை மறைக்கவும் நின்று அவற்றை துடைத்து கொண்டு அவள் இறங்க, அப்போது கீழிருந்த படிக்கட்டில் விஜயேந்திரனும் அவருடன் மூவர் முரட்டுத்தனமான தாடியும் நீண்ட முடியுமாக மேலே ஏறி வந்து கொண்டிருந்தனர்.


அவர்களை கண்ட மகேஸ்வரி திடுக்கிட்டாள். காலையில் அவள் சண்டையிட்ட போது பூரணியின் தந்தையை வீட்டில் பார்த்த நினைவு வந்தது.


‘பூரணியோட அப்பா இங்க எதுக்கு வந்திட்டு இருக்காரு’ என்றவள் யோசித்து அதன் காரணத்தை அவள் மூளை உள்வாங்கி புரிந்து கொண்ட போது அவள் சர்வாங்கமும் ஆடியது.


அத்தனை நேரம் நடக்க முடியாமல் தடுமாறியவள் அப்போது நான்கு எட்டில் மாடியேறி தடலடியாக விஜய் வீட்டிற்குள் நுழைந்து அவர்கள் இருவருக்கும் இடையில் வந்து நின்றாள்.


விஜய் எதிர்பாராத சங்கடத்துடனும் பூரணி வெறுப்புடனும் மகேஸ்வரியை பார்த்து தங்கள் உணர்வுகளை முழுவதுமாக வெளிப்படுத்தி முடிப்பதற்குள்ளாக,


“ஏய் லூசு உங்க அப்பா வந்துட்டு இருக்காருடி” என்று ஒரு வெடிகுண்டை போட பூரணி நம்பவில்லை.


“எங்க அப்பாவா... அவர் ஏன் இங்க வர போறாரு... எதாச்சும் உளறாத” என்று அவள் மகேஸ்வரியை சாடும் போது படிக்கட்டில் சிலர் ஏறி வரும் காலடி சத்தங்கள் கேட்டன.


“கேட்டுச்சா” என்றபடி பூரணியை முறைக்க, “எங்க அப்பாவா... இங்க... எப்படி” என்று நிலைமையின் தீவரத்தை அவள் உணர்வதற்கு முன்பாக விஜயேந்திரன் தன்னுடன் வந்த ஆட்களை வெளியே நிறுத்திவிட்டு அவர் மட்டும் உள்ளே நுழைந்திருந்தார்.


அவர் பார்வை உள்ளிருந்த மூவரின் மீதும் படிந்தது. அதேநேரம் மகளின் மீது ஆழமாக அழுத்தமாக விழுந்தது. இங்கே அவர் அவளை எதிர்பார்க்கவில்லை.


“நீ எக்ஸாம் எழுத போலையா... என்கிட்ட பொய் சொன்னியா?”


“அப்பா” என்று அவள் மாட்டி கொண்ட பதட்டத்தில் சிறுபிள்ளைத்தனமாக விழித்து கொண்டு நின்ற அதேநேரம் அவர் மகேஸ்வரியையும் பார்த்து,


“ஆமா நீ லதாவோட பொண்ணு இல்ல...காலைல எங்க வீட்டு முன்னாடி சண்டை போட்டுட்டு இருந்த... வேலைக்கு போறன்னு கிளம்பிட்டு இங்க நின்னு என்ன பண்ணிட்டு இருக்க” என்று கேட்டு அவளையும் திணறடித்தார்.


“அது நான் வந்து” என்று அவள் தடுமாற விஜய் அப்போது,


“இரண்டு பேரும் என் பிரண்ட்ஸ்... எனக்கு இன்னைக்கு பர்த் டே விஷ் பண்ண வந்தாங்க” என்று சூழ்நிலையை சமாளிக்க முயல விஜயேந்திரன் விழிகள் இப்போது அவன் புறம் திரும்பியது.


முதல் முறையாக தங்கை மகனை நேருக்கு நேராக எதிர்கொள்கிறார். அவனின் தோற்றம் பேச்சு எல்லாம் ஒரு கணம் அவரின் இளம் வயதை நினைவுப்படுத்திவிட்டது.


தங்கை மகன் தன்னை போலவே இருக்கிறானோ என்று உள்ளுர எட்டி பார்த்த யோசனையை தட்டி வைத்தார். இவன் தன் குடும்பத்தை அவமானப்படுத்திவிட்டு போனவளின் மகன் என்று எண்ணத்தை மனதில் நிறுத்தி கொண்டவர்,


“ஏன் உனக்கு ஆம்பள பசங்கள பிரண்ட்ஸ் கிடையாதா... பொம்பள புள்ளைங்க கூடதான் பழுகுவியோ?” என்று கேட்டு அவனை கேவலமாக பார்க்க,


அந்த கேள்வியில் அவன் உட்பட மற்ற இரு பெண்களும் திகைத்து விட அவர் மேலும் மகேஸ்வரியிடம், “உங்க அம்மாவுக்கு விஷயம் தெரியுமா... நீ இவன் பிறந்த நாள கொண்டாடிட்டு போக இங்க வந்தது” என்று எடக்கான பார்வையுடன் கேட்க பதில் சொல்ல முடியாமல் அவள் தலையை தாழ்ந்தது.


விஜய் அதற்குள், “அதெல்லாம் உங்களுக்கு தேவை இல்லாத விஷயம்... நீங்க உங்க பொண்ணை கூட்டிட்டு போங்க” என்று அலட்சியமாக கூற அவருக்கு கோபமேறியது.


தன் மகள் விஷயத்தில் இனி அவன் தலையிட கூடாது என்று மிரட்டத்தான் வந்தார். ஆனால் இங்கே அவர் மகள் திருட்டுத்தனமாக அவனை பார்க்க வந்திருக்கிறாள்.


விஜயேந்திரன் கண்கள் விஜய் மீது வெறுப்பை உமிழ்ந்த அதேநேரம் மகளை எரிப்பது போல பார்த்து,


“என்ன வாழ்த்து சொல்லிட்டியா... போலாமா?” என்று கேட்க அவள் அவசரமாக தலையசைத்தாள். அந்த நொடியே அவர் மகள் கையை பிடித்து இழுத்து செல்ல பார்த்த போது ஏதோ அவர் கையில் குத்துவது போல உணரவும், அப்படியே அவள் கையை உயர்த்தி பார்த்தார். அவள் தன் விரல்களை இறுக்கமாக மூடி வைத்திருக்க,


“பூரணி கைல என்ன காட்டு” என்று கேட்க, அவள் நடுநடுங்கி போனாள். ஆனால் கையை திறக்கவில்லை. அவராகவே அவள் கையை பிரித்து பார்த்து அரண்டுவிட்டார்.


அடுத்த கணம், “என்னது இது... இதுதான் பிறந்த நாள் பரிசா?” என்ற அவர் உறும மூவருமே திகலடைந்தனர்.


மகளை சீறலாக பார்த்தவர் விழிகள் அடுத்த நொடி விஜய் புறம் கொலை வெறியுடன் திரும்பியது.


அந்த நொடியே அவன் சட்டையை பிடித்து சுவற்றில் தள்ளி, “உங்க அப்பன் என் தங்கச்சி மனசை கெடுத்து கூட்டிட்டு போன மாதிரி நீ என் பொண்ணு மனசை கெடுத்து கூட்டிட்டு போலாம்னு பார்க்குறியா” என்று கோபமாக வெடிக்க, அடுத்த கணம் அவருடைய ஆட்கள் மூவரும் உள்ளே வந்துவிட்டார்கள்.


பூரணி தன் முட்டாள்தனத்தை எண்ணி தலையை பிடித்து கொள்ள, உள்ளே நுழைந்த அந்த முரட்டு ஆட்களை பார்த்த மகேஸ்வரி மிரண்டாள்.


“உன்னை கொன்னு இங்கேயே புதைச்சாலும் எவனும் என்னை கேட்க முடியாதுடா” என்று விஜயேந்திரன் கர்ஜிக்க,


“சொல்லுங்க அண்ணே... கூட்டிட்டு போய் முடிச்சு விட்டிரலாம்” என்று அவருடைய ஆட்கள் ஒத்து ஊதினர். விஜய் அவர் இரும்பு பிடியிலிருந்து நகர முடியாமல் சிக்கி தவிக்க,


“அவன் சட்டைல இருந்து கையை எடுங்க” என்ற அலறலும் அதட்டலுமாக வந்தது மகேஸ்வரியின் குரல்.


விஜயிற்காக அப்போது பேசுவதற்கு யாருமே இல்லை என்ற உணர்வுதான் அவளை அப்படி குரலை உயர்த்த வைத்தது. ஆனால் விஜயேந்திரன் அசைந்து கொடுக்கவில்லை.


“ஒழுங்கா உன் வேலையை பார்த்துட்டு போ... நீ இப்படி ஒரு ஆம்பள வீட்டுக்கு வந்து போறது... பிரண்டுனு பழகுறது எல்லாம் உங்க அம்மாவுக்கு தெரிஞ்சா நாண்டுகுவா” என்று அவள் அம்மா பெயரை சொல்லி அவளை அடக்க பார்த்தார்.


“மகி நீ போ நான் பார்த்துக்கிறேன்” என்று விஜய் சிரமத்துடன் பேச அவனை இரக்கமாக பார்த்தவள் விஜயேந்திரனிடம்,


“பூரணியும் விஜயும் லவ் பண்ணல” என்றாள். அவர் அவளை குழப்பத்துடன் நோக்கவும், “நானும் விஜயும்தான் லவ் பண்றோம்... எங்க அம்மா எங்க கல்யாணத்த ஒத்துக்க போறதில்லன்னு எனக்கு தெரியும்... அதான் நாங்களே கல்யாணம் பணிக்கலாம்னு முடிவு பண்ணோம்... அந்த தாலி உங்க பொண்ணோடது இல்ல... என்னோடது... பூரணி எங்க கல்யாண்த்துக்காக வாங்கிட்டு வந்தது... அவ்வளவுதான்” என்று சமார்த்தியமாக நடந்த கதையை திரித்து சொல்லி முடிக்கும் போது விஜயேந்திரன் கரம் விஜய் மீதிருந்து அகன்றிருந்தது.


அவர் கண்கள் மகேஸ்வரியை கூர்மையாக நோக்கிய அதேசமயம் விஜய் வார்த்தைகளின்றி மகியை நோக்கி கொண்டிருந்தான். அவள் தன்னை காப்பாற்ற சொல்லும் பொய் என்று தெரிந்த போதும் அவன் மனம் அதுவே உண்மையாக இருக்க கூடாதா என்று ஏங்கியது.


பூரணிக்கோ திருடனுக்கு தேள் கொட்டிய கதை. அவளால் எதுவும் பேச முடியவில்லை. இவள் விஜயை காப்பாற்ற பேசுகிறாளா இல்லை சமயம் பார்த்து காலை வாரி விடுகிறாறாளா என்றுதான் அவளுக்கு புரியவில்லை.


அதேநேரம் விஜயேந்திரன் பார்வை எதிரே இருந்த மகேஸ்வரியை தீவிரமாக முற்றுகையிட்டது. ‘அவங்க அம்மாவோட திமிரு தலைகனம் அப்படியே இருக்கு’


பல வருடங்கள் முன்பாக அவருக்கும் லதாவுக்கும் இடையில் நடந்த உரையாடல் அப்போது கண் முன்னே வந்து போனது.


“நம்ம அப்பனுங்க இரண்டு பேரும் அடிச்சுட்டு சாவனுங்களே ஒழிய நமக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டாங்க லதா... பேசாம நீ என் கூட வா... நான் உன்னை ஏதாவது கோவில வைச்சு தாலி கட்டி கல்யாணம் பண்ணிக்கறேன்” என்று விஜயேந்திரன் அவர்கள் திருமணம் நின்றுவிட்ட ஆதங்கத்தில் லதாவை தனியாக சந்தித்து பேச,


“நான் வரமாட்டேன்... என் குடும்பத்தை ஏமாத்தி அசிங்கப்படுத்துன உன் குடும்பத்துல நான் வாழ வர மாட்டேன்... செத்தாலும் வாழ வரமாட்டேன்” என்று லதா உறுதியாக மறுத்தார். ஆனால் விஜயேந்திரன் அவள் கையை பிடித்து,


“எங்க அப்பன் பண்ணதுக்கு நான் என்ன பண்ணுவேன் லதா” என்று கெஞ்சி கதறினார். ஆனால் லதா மனம் இறங்கவில்லை.


“என் அப்பா யாரை கை காட்டுறாரோ அவரைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்குவேன்” என்று திடமாக சொல்லி அவர் கையை உதறி விட்டு சென்றாள். இப்போதும் அந்த நாளும் அந்த நிராகரிப்பு ஏற்படுத்திய வலியும் அழுத்தமாக அவர் நினைவில் நின்றிருந்தது.


தன்னை அன்று லதா நிராகரித்தற்காக இன்று வரையில் மானசீகமாக அவரை தாண்டிக்கிறார். அவர் கணவன் இறந்த போது கூட, ‘என்னையா வேண்டாமென்று சொன்னாய்... உன் நிலைமையை பார்’ என்று எதிர் வீட்டிலேயே இருந்து கொண்டு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பார்வையால் குத்தி கிழிக்கிறார்.


ஆனால் அவர் நினைத்தது போல லதா ஒரு நாளும் தான் தோற்றுவிட்டதாகவோ துவண்டுவிட்டதாகவோ காட்டி கொண்டதே இல்லை. தன் வாழ்க்கை இப்படியாகிவிட்டது என்று சோர்ந்து சுருண்டதில்லை. எவ்வளவு கஷ்டத்திலும் தளராமல் போராடுகிறார். அன்று பார்த்த அதே கர்வம் திமிருடன்தான் இன்றும் லதா இருக்கிறார்.


இந்த நொடி மகேஸ்வரி சொன்னவற்றை எல்லாம் கேட்டதும் விஜயேந்திரன் கண்கள் குரூரத்துடன் மின்னியது. லதாவை கூனி குறுகி போக செய்ய இதைவிடவும் அற்புதமான ஒரு வாய்ப்பு அவருக்கு கிடைக்கவே கிடைக்காது என்று வஞ்சகமாக எண்ணியவர் விஜயை பார்த்து,


“இவ சொன்னது எல்லாம் உண்மையா?” என்று கேட்க அவனுக்கு சில நொடிகள் என்ன சொல்வதென்று புரியவில்லை.


மகி சொன்னதை மறுத்தால் பூரணியை சிக்க வைப்பதாகிவிடும். அதேநேரம் மகியையும் விட்டு கொடுத்தாகிவிடும் என்ற எண்ணம் எழ, “ஆமா உண்மைதான்” என்று விட்டான். பூரணியின் கண்களில் கண்ணீர் சுரந்தது.


ஆனால் அவள் உணர்வை அப்போது யாருமே மதிக்கவும் இல்லை. கவனிக்கவும் இல்லை.


லதா பேசியதை எல்லாம் மனதில் ஓட்டி பார்த்த விஜயேந்திரன் மூளைக்குள் ஒரு மோசமான யோசனை உதித்தது. அவர் உடனே பூரணியிடம், “நீ வீட்டுக்கு போ” என்றார்.


“அப்பா” என்றவள் தவிப்புடன் நோக்க, “போன்னு சொன்னேன்” என்று ஆவேசமாக கத்த, “பா விஜயை எதுவும்” என்று சொல்லும் போதே அவர் முறைத்து பார்க்க அவள் கிளம்பிவிட்டாள்.


தன் ஆள் ஒருவனை அவள் பின்னோடு அனுப்பி விட்டவர் மற்ற இருவரிடம் ஏதோ ரகசியம் போல பேசிவிட்டு மீண்டும் திரும்ப, விஜய் அவரை புரியாமல் பார்த்தான்.


விஜயேந்திரன் தன் கையிலிருந்த தாலியை எடுத்து நீட்டி,


“இவ கழுத்துல கட்டு” என்றார் விஜயிடம். அவன் அதிர மகேஸ்வரிக்கு தூக்கி வாரி போட்டது. இது அவள் எதிர்பார்க்காதது.


அவர் நீட்டிய தாலியை விஜய் வாங்கவில்லை.


“என்ன விளையாடுறீங்களா?” என்று கேட்டு அவரை கடினமாக பார்த்தவன்,


“உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல... இனி உங்க பொண்ணுக்கும் எனக்கும் கூட எந்த சம்பந்தமும் இல்லனு வைச்சுக்கோங்க


உங்க திசைக்கே ஒரு கும்பிடு... இனிமே நான் அந்த பக்கம் கூட வரமாட்டேன்... ப்ளீஸ் கிளம்புங்க...” என்று படபடவென்று பேசி முடித்து வாசலை காட்ட விஜயேந்திரன் நிதானமாக,


“அப்படினா இவ்வளவு நேரம் இவ பேசுனது எல்லாம் பொய்... இப்படி ஒரு பொய் சொல்லி என்னை சமாளிச்சு அனுப்பி விட்டுட்டு... நாளைக்கு என் பொண்ண தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணலாம்னு பார்க்குற” என்றார்.


“நான் அப்படி எல்லாம் பண்ண மாட்டேன்” என்றவன் கோபமாக கத்த,


“உங்க அம்மா அப்பா பண்ணதை நீ செய்ய மாட்டியா என்ன?” என்று அவரும் பதிலுக்கு கத்தினார்.


“எங்க அம்மா அப்பா பத்தி நீங்க பேச தேவை இல்ல”


“உங்க அம்மா அப்பாவால என் குடும்பம் அசிங்கப்பட்டுச்சு... திரும்பியும் அதே போல ஒரு அசிங்கத்தை நான் நடக்க விடமாட்டேன்” என்றவர் வெறியாக அவனை நெருங்கி வர மகேஸ்வரி உடனே,


“அப்படி எல்லாம் எதுவும் நடக்காது” என்றாள்.


“இனிமே யார் சொல்றதையும் நான் நம்ப தயாரா இல்ல... எனக்கு இந்த பிரச்சனையை இங்க இப்பவே முடிக்கணும்” என்று விட்டு,


“நீதானே சொன்ன...நீங்க காதலிக்கிறீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்கன்னு... இப்ப இங்க என் கண் முன்னாடி பண்ணிக்கோங்க... அவன் உன் கழுத்துல தாலி கட்டணும்... நான் அதை பார்க்கணும்... அப்போதான் நான் இங்கிருந்து போவேன்... இவனை உயிரோட விட்டுட்டு போவேன்” என்று மிரட்ட ஆரம்பித்தார்.


மகேஸ்வரி மிரட்சியடைய விஜயோ, “என்ன மிரட்டுறீங்களா... உங்க மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்... உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோங்க” என்று திட்டவட்டமாக கூறிவிட்டு அவன் திரும்பி கொள்ள விஜயேந்திரன்,


“டேய் நேத்து முளைச்சவன் உனக்கு இவ்வளவு இருக்கும்னா எனக்கு எவ்வளவு இருக்கும்” என்ற விஜயேந்திரன் தன் ஆட்களை பார்த்து,


“இவனை கட்டி இழுத்துட்டு வாங்க” என்றதும்,


“ப்ளீஸ் வேண்டாம்” என்று கெஞ்சினாள் மகேஸ்வரி. அவர்கள் அவள் சொல்வதை பொருட்படுத்தாமல் விஜயை நெருங்கி வரவும்,


“அந்த தாலியை கொடுங்க” என்று மகேஸ்வரி தன் கரத்தை நீட்டினாள்.


விஜயேந்திரன் அவளை ஆழமாக பார்க்க, “விஜய் இப்போ என் கழுத்துல தாலி கட்டுனா நீங்க நம்புவீங்க இல்ல... இங்கிருந்து போயிடுவீங்க இல்ல... கொடுங்க” என்று கேட்க,


“போயிடுவோம்” என்றார். அவள் உடனே, “சரி கொடுங்க” என்று அவர் கையிலிருந்த தாலியை வாங்கி விஜயிடம் நீட்டி, “இந்தா விஜய் கட்டு” என, விஜய் தயங்கினான்.


“மகி இது ஒன்னும் விளையாட்டு இல்ல... அந்த ஆள் ஏதோ மிரட்டுறானு” என்று அவன் பேசி கொண்டிருக்கும் போதே அவன் கையில் அந்த தாலியை வைத்து,


“இப்போ நீ இதை என் கழுத்துல கட்டலனா தேவை இல்லாத பிரச்சனை... பேசாம கட்டிடு” என்றாள்.


“சீரியஸாதான் சொல்றியா?”


“ஆமா சீரியஸாதான் சொல்றேன்” என்றதும் விஜய் ஏறிட்டு அவள் விழிகளை பார்த்த நொடி அவன் மனமும் கூட அவள் சொன்னதை ஆமோதித்தது.


அப்போதைய சூழ்நிலை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் மறந்து மனம் முழுக்க பொங்கி ததும்பிய ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்புடன் அந்த தாலியை அவள் கழுத்தில் கட்டிவிட்டான்.


விஜயேந்திரன் அடுத்த வார்த்தை பேசாமல் அங்கிருந்து அகன்று விட விஜயும் மகேஸ்வரியும் மட்டுமே அங்கே அப்போது தனித்துவிடப்பட்டனர்.


இருவருமே சில நொடிகள் எதுவுமே பேசி கொள்ளவில்லை. அடுத்து என்ன என்பது போல விஜய் அவளை பார்த்து வைக்க அவர்களுக்கு இடையில் நிலவிய அந்த கனமான மௌனத்தை களைத்தாள் மகேஸ்வரி.


“நான் காலேஜ்க்கு கிளம்புறேன் விஜி... எனக்கு லேட்டாகுது” என,


“எது?” என்று தலையை உலுக்கி கொண்டவன் ஏதோ தூக்கத்திலிருந்து விழித்தவன் போல அவளை குழப்பமாக பார்த்து,


“ஏய் என்னடி... நான் இன்னும் ஷாக்ல நின்னுட்டு இருக்கேன்... நீ என்னடானா காலேஜ் கிளம்புறேன்னு சாதாரணமா சொல்ற... இங்க நடந்தது எதுவும் உன்னை கொஞ்சம் கூட பாதிக்கலயா?” என்று கேட்டான்.


“என்ன இதுல பாதிக்கிறதுக்கு இருக்கு... அந்த ஆளு மிரட்டுனதால நீ என் கழுத்துல தாலி கட்டுன” என அவன் கடுப்புடன் அவளை பார்த்து,


“நானா கட்டுனனா? நீ கட்ட சொன்ன நான் கட்டுனேன்” என்றான்.


“ஆமா நான்தான் கட்ட சொன்னேன்... அவன் அடிச்சு கிடிச்சு உன் கை கால எல்லாம் உடைச்சு வைச்சுட்டானா யாருடா உன்னை பார்த்துக்குவா... யார் இருக்கா இப்போ உனக்கு


அந்த மாதிரி எதுவும் நடந்திர கூடாதுன்னுதான் தாலி கட்ட சொன்னேன்... நீயும் கட்டுன... அதோட இந்த பிரச்சனை முடிஞ்சு போச்சு... இதை கழட்டி தூக்கி தூர போட்டுட்டு என் வேலையை நான் பார்க்கிறேன்... உன் வேலையை நீ பாரு” என்றாள்.


அவள் சொன்னதை எல்லாம் கேட்ட விஜயின் விழிகள் அவளை ஏமாற்றமாக பார்த்தன. எல்லாம் பொய்தானா? நடந்த நிகழ்விற்கு எந்த அர்த்தமும் இல்லையா?


அப்போதைக்கு தடுமாறும் தன் உணர்வுகளை ஒதுக்கிவிட்டு சமன்படுத்தி கொண்டவன் அவளிடம்,


“நீ சொல்றது எல்லாம் சரிதான்... ஆனா பூரணியோட அப்பன் நடந்தது எல்லாம் உங்க அம்மா கிட்ட சொல்லிட்டா” என்று அவன் கேட்க,


“ஆமா... அது ஒரு பிரச்சனை இருக்கு” என்று தலையை பிடித்து கொண்டு தீவிரமாக யோசித்தவள் பின்னர் நிமிர்ந்து அதற்கும் ஒரு வழியை கண்டுபிடித்தாள்.


“அந்த ஆளா சொல்றதுக்கு முன்னாடி நான் என் அண்ணன்கிட்ட நடந்த விஷயத்தை சொல்லிடுறேன்... அவன் எப்படியாவது எங்க அம்மாகிட்ட பேசி புரிய வைப்பான்” என அவன் அவள் பேச்சை செய்கைகளை நம்பாமல் பார்த்தான்.


இவள் எப்படி இப்படி நடந்ததை இவ்வளவு சாதரணமாக கடந்து போகிறாள் என்று அவன் குழம்பி தவிக்கும் போது,


“சரி விஜி நான் கிளம்புறேன்” என்று விட்டு வாயிலை தாண்டி வந்த போது அவனுக்காக சமைக்க வாங்கி வந்த பொருட்கள் நிறைந்த பை வாசிலில் இருப்பதை கண்டாள்.


அவளோ அப்போது தலையில் தட்டி கொண்டு, “மறந்து போயிட்டேன்... ஹாப்பி பர்த்டே விஜி” என்று திரும்பி அவனிடம் கை நீட்ட,


“இவ்வளவு நடந்த பிறகும் பர்த்டே விஷ் பண்றியா நீ எனக்கு” என்று வலியுடன் அவளை பார்த்தான்.


“நடந்தது எல்லாம் நடந்து போச்சு... இனிமே நடக்க போறது எல்லாம் நல்லதா நடக்கும்னு நினைப்போம்... நடந்ததெல்லாம் மறந்துட்டு ஏதாவது கோவிலுக்கு போயிட்டு வா” என்றவள் மேலும்


“நான் இன்னைக்கு என்னன்னவோ ப்ளேன் பண்ணிட்டு வந்தேன் விஜி... ப்ச் எல்லாம் அந்த பூரானால நாசமா போச்சு” என்று சொல்லி கொண்டே அந்த பையை அவனிடம் எடுத்து கொடுத்து,


“இதுல இருக்க பொருள் எல்லாம் உள்ளே எடுத்து வை... நான் இன்னொரு நாள் உனக்கு செஞ்சு தர்றேன்” என்றாள்.


அவள் சொன்னதற்கு எல்லாம் புரிந்தும் புரியாமல் தலையசைத்து கொண்டே அவள் கழுத்தில் தொங்கி கொண்டிருந்த தாலியை பார்த்து, “நீ இதை கழுட்டவே இல்ல” என,


“நான் ஏதாவது கோவில் போய் கழட்டி அங்க இருக்க உண்டியல போட்டுடுறேன்... என்னதான் இருந்தாலும் தாலிகுனு சில சென்டிமென்ட்ஸ் இருக்கு இல்ல” என்றவள் சொன்னதற்கு ஏளனமாக உதட்டை சுழித்தான்.


‘இவ்வளவு நேரம் எந்த சென்டிமென்ட்டும் இல்லாம பேசிட்டு இப்போ திடீர்னு தாலி சென்டிமென்ட் பத்தி பேசுறா இவ’ என்றவனுக்கு சிரிப்புதான் வந்தது. அவளோ படிக்கட்டில் இறங்கி திரும்பி கூட பார்க்காமல் போய்விட்டாள்.


உள்ளே வந்து அந்த பையை ஓரமாக தூக்கி வீசியவன் மனம் துண்டு துண்டாக அப்போது சிதறி போனது. சொல்ல முடியாத வேதனை. நெஞ்சை கசக்கி பிழியும் வலியுடன் சமையல் மேடை அருகே வந்தான்.


அங்கே தண்ணீரில் அவன் போட்டு வைத்திருந்த ரோஜா பூக்கள் அழகாக புன்னகை செய்தன. மகிக்கு ரொம்பவும் பிடித்த மலர் அது. சிவப்பு ரோஜாக்களை அவளுக்கு அவ்வளவு பிடிக்கும். தன் பிறந்த நாளுக்கு அவள் வாழ்த்து சொல்ல வரும் போது இந்த பூக்களை அவளிடம் கொடுத்து காதலை சொல்ல எண்ணினான். கூடவே தனக்கு வேலை கிடைத்த தகவலையும் சொல்லி அவளை சந்தோஷப்படுத்த நினைத்தான். ஆனால் அவன் நினைத்தது எதுவுமே நடக்கவில்லை.


யார் நினைத்ததுமே நடக்கவில்லை. அவள் கடைசியாக உணர்ச்சியே இல்லாமல் பேசி விட்டு போனதை எண்ணிய போது ஏதோ அவனுக்குள் உடைந்தது.


அவளுக்கு எந்த நிலையிலும் தன் மீது காதல் வர வாய்ப்பே இல்லை என்ற முடிவுக்கு வந்தவன் அந்த ரோஜா பூக்களை ஜன்னல் வழியாக வெளியே வீசிவிட்டு உடைந்து அழுதான்.

0 comments

댓글

별점 5점 중 0점을 주었습니다.
등록된 평점 없음

평점 추가
© KPN NOVELS COPY PROTECT
bottom of page