top of page

Kanavar Thozha - 8

8

அருள் கோயமுத்தூரில் வேலைக்கு சென்று கிட்டத்தட்ட ஒரு மாதம் முடிந்திருந்து. அந்த வார ஞாயிற்று கிழமை அவன் வீட்டிற்கு வருவதாக சொன்னதிலிருந்தே லதா உற்சாகமானார்.


மகேஸ்வரிக்கு தமையன் வரும் தகவல் சந்தோஷத்தை கொடுத்தாலும் அம்மாவின் அதீத ஆர்வம் அவளை கொஞ்சம் கடுப்பேற்றவே செய்தது.


அவன் சொன்னது போலவே அந்த ஞாயிற்று கிழமை விடியற் காலையிலேயே வந்து சேர்ந்து விட, லதாவோ மகனை வரவேற்றதோடு அல்லாமல் அன்று அவனுக்கு பிடித்தமான உணவுகளை எல்லாம் சமைத்து கொடுத்து அசத்தினார்.


காலை உணவிற்கே ஈரல் சூப்பு, மட்டன் தொக்கு தோசை என்று அவர் சமைத்து வைக்க, அருளும் ஏதோ காணததை கண்டது போல அவற்றை எல்லாம் விழுங்கி கொண்டிருந்தான்.


“ம்மா இன்னொரு தோசை” என்று அவன் பத்தாவது முறையாக சொல்லவும் மகேஸ்வரி வாயை பிளந்தாள்.


‘என்னால மூணாவாதே முழுசா சாப்பிட்டு முடிக்க முடியல... இவன் என்ன பத்தாவது கேட்டுட்டு இருக்கான்’ என்று தன்னால் சாப்பிட முடியாத கடுப்பிலும் அவன் எப்படி சாப்பிடுகிறான் என்று கேள்வியிலும் குறுகுறுவென்று அவன் தட்டையும் வாயையும் பார்த்தவள் மெல்லிய குரலில், “டேய் அண்ணா... நீ என்ன இந்த ஒரு மாசமா சாப்பிடவே இல்லயா?” என்று கேட்டு வைக்க,


“இல்லையே சாப்பிட்டேனே” என்று அவன் தட்டிலிருந்து பார்வையை எடுக்காமலே பதிலுரைத்தான். அவள் தலையிலடித்து கொண்டு,


“அநியாயமா இருக்குடா... வீட்டுல கூடவே இருக்க எனக்கு ஒரு நாள் இப்படி செஞ்சு கொடுக்கல... ஆனா நீ எங்கயோ வேலைக்கு போயிட்டு வரவும் அம்மா பாரு... பார்த்து பார்த்து மட்டன் தொக்கு சூப்புன்னு பயங்கரமா சமைச்சு வைச்சு இருக்கு... இதுல மதியத்துக்கு மீன் வேற” என்று சொல்லி பெருமூச்செறிந்தவள்,


“நானும் பேசாம வேற ஏதாவது ஊருக்கு வேலைக்கு போயிருக்கலாம்” என்ற போது லதா அங்கே வந்துவிட்டார். அதோடு நொட்டென்று மகள் தலையில் கொட்டியும் வைக்க,


“ம்மா வலிக்குது ம்மா” என்று மகேஸ்வரி சிணுங்கினாள்.


“எங்கேயோ வேலை பார்க்குறான் புள்ள... அவனுக்கு அங்கே வீட்டு சாப்பாடு கிடைக்குதோ என்னவோனு செஞ்சு போட்டா ஓவரா பேசுற நீ?” என்றதும் அருளும் இணைந்து கொண்டு,


“ஆமா மா வீட்டு சாப்பாடு சாப்பிடாம நாக்கு செத்து போச்சு” என்று அவனும் அம்மவுடன் சேர்ந்து ஜிங்ஜாங் அடித்தான்.


லதா அந்த பக்கம் சென்றதும் மகேஸ்வரி அண்ணன் அருகே தள்ளி வந்து அமர்ந்து, “டேய்... பொய் சொல்லாதே... அங்க நல்ல சாப்பாடு கிடைக்கல உனக்கு... பூரி பொங்கல் பரோட்டானு வெளுத்து கட்டி இருப்பியே” என்று ரகசியமாக கேட்க ஆர்வமாக தலையசைத்தவன் அதே ரகசிய குரலில்,


“ஆமா ஆமா... நான் தங்கிர இடத்துக்கு பக்கத்துல கார்த்திகா மெஸ்னு ஒன்னு இருக்கு... நிறைய வெரைட்டி கிடைக்கும்... அதுவும் நாட்டு கோழி வறுவல் ஒன்னு கொடுப்பான் பாரு” என்று சப்புக்கொட்ட அவள் முகம் கூம்பிவிட்டது.


“எருமை எருமை அங்கயும் நல்லா தின்னுட்டு இங்கயும் வந்து வெளுத்து கட்டுறியா” என்று தன்னுடைய காலி தட்டாலேயே அவன் தலையில் நங்கு நங்கு என்று அடித்து வைத்தாள்.


“ம்மா ம்மா அடிக்குறா ம்மா” என்று அருள் கத்தவும் லதா ஆபந்தபாந்தவனாக மகனை காப்பபாற்ற சமையலறையிலிருந்து ஓடி வந்தார்.


“ஏய் ஏய்” என்று அவள் கையிலிருந்த தட்டை பிடுங்கி கொண்டவர், “தோசை வேணும்னா இரண்டு வாங்கிக்கோயேன்... அதுக்கு ஏன் டி அவனை அடிக்குற” என,


“எனக்கு ஒன்னும் வேணாம்... அவனுக்கே நொட்டு” என்று விட்டு அவள் எழுந்து கை கழுவி கொள்ள அவனோ இன்னும் சாப்பிட்டு கொண்டிருந்தான். அவள் கோபத்துடன் மீண்டும் எகிற வர, “ஏய் ஏய் அடிக்காதடி... நீ வேணா என் கூட கோயமுத்தூர் வா... நான் உனக்கு பிடிச்சதெல்லாம் வாங்கி தரேன்” என்று தங்கையிடம் சமாதான உடன்படிக்கை பேச,


“ஆமா ஆமா இந்த நாட்டு கோழிக்கோசரம் நான் லொங்கு லொங்குன்னு அங்கே வந்து போகணுமாக்கும்... வேற வேலை வெட்டி இல்ல எனக்கு” என்று கூறி அவள் நொடித்து கொள்ள,


“அந்த நாட்டு கோழிக்காக எல்லாம் நாட்டையே தாண்டி வரலாம்டி... நீ என்ன தோ இருக்க கோயமுத்தூர் வர மாட்டியா?” என்று அவளை மேலும் வெறுப்பேற்றி கொண்டே தோசைகளை விழுங்கிய வண்ணம் இருக்க,


“உன்னை எல்லாம் அண்ணன்னு வைச்சு இருக்கன் பாரு” என்று அவன் சாப்பிடுவதை கடுப்புடன் பார்த்து கொண்டே சுவற்றில் சாய்ந்தபடி அமர்ந்தவள்,


“அங்கயும் நல்ல சாப்பாடு... இங்கயும் நல்ல சாப்பாடு... வாழுறடா நீ” என்றவளுக்கு தாங்கவே இல்லை.


“வேணும்னா வாங்கி சாப்பிட வேண்டியதுதானேடி... என் தட்டை பார்த்து ஏன் டி இப்படி பொறாமைல பொசுங்குற” என்றவன் கூற முகத்தை தொங்க போட்டு கொண்டவள்,


“பின்ன... பொசுங்காம... நீ பாட்டுக்கு ஊருக்கு போயிட்ட... நான்தானே இங்க கஷ்டப்படுறேன்” என்று விரக்தியாக பேசினாள். அவன் புரியாமல்,


“அப்படி என்னடி கஷ்டம் உனக்கு” என்று கேட்க,


“கஷ்டமா கொடுமை... வாரத்துல ஆறு நாளும் உப்புமாவே செஞ்சு போடுது இந்த அம்மா... அதுவும் நைட் மாவு இல்லன்னு திரும்பியும் உப்புமா... ரிப்பீட்டு” என்று பரிதாபமாக பேசிய தங்கையின் துயரத்தை கேட்டவன் விழுந்து விழுந்து சிரித்தான்.


அவனுடைய பயங்கரமான சிரிப்பு சத்தத்தை கேட்ட லதா, “என்னடா நடக்குது அங்க” வடிவேல் கணக்காய் குரல் கொடுத்து கொண்டே எட்டி பார்த்தார். அவன் அப்போதும் தன் சிரிப்பை நிறுத்தாமல் தொடர,


“எதுக்குடா இப்படி சிரிக்குற... என்னை பத்தி உன் தங்கச்சி ஏதாவது சொன்னாளா?” என்று லதா சரியாக கணித்துவிட,


‘மாட்டி விட்டுடாத’ என்று மகேஸ்வரி ஜாடை செய்தாள். அருளும் ஒருவாறு தன் சிரிப்பை அடக்கி கொண்டு, “ஒன்னும் இல்லம்மா” என இருவரையும் ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு லதா மீண்டும் தன் தோசை சுடும் வேலைக்கு சென்றுவிட்டார்.


மகேஸ்வரி ரகசியமாக அண்ணன் அருகே வந்து, “சிரிச்சு சிரிச்சு அந்த உப்புமாவுக்கும் சேர்த்து வெட்டு வைச்சுட்டு போயிடாத பக்கி... அப்புறம் உப்புமாவுக்கு பதிலா அடுத்த வாரம் புல்லா சேமியா கிளறி கொடுக்கும்... அது இன்னும் மோசம்” என்றாள். அவ்வளவுதான். அவன் மீண்டும் சிரிக்க ஆரம்பித்து விட,


“ஐயோ சிரிக்காத எருமை... திரும்பியும் வந்திர போறாங்க” என்று அவன் வாயில் தோசையை வைத்து அழுத்திவிட்டாள்.


“ம்ம் ம்ம்ம்” என்றவன் திக்கி திணற அதன் பின் அவளாகவே அவனுக்கு தண்ணீர் எடுத்து கொடுத்தாள். தங்கையை முறைத்து கொண்டே தண்ணீரை குடித்து ஆசுவாசப்படுத்தி கொண்டவன் நிதானமாக அவளை பார்த்து,


“இந்த ஒரு மாசமா உன்னோட இந்த சேட்டையை நான் ரொம்ப மிஸ் பண்ணேன்டி” என்றான்.


“ரீல் ஒட்டாத... நீ அங்க நல்லா ஜாலியா இருந்திருப்ப”


“போன புதுசுல... கொஞ்சம் அப்படி இருந்துச்சுதான்... ஆனா அப்புறம் அப்புறம் உன்னை பார்க்காம... உன் கூட சண்டை போடாம ரொம்ப ஒரு மாதிரி ஆகிடுச்சு” என்று கூற,


“எனக்கும்தான்” என்று அவளும் அவன் சொன்னதை ஏற்று தலையசைத்தாள்.


“நிஜமாவா... அப்புறம் ஏன் நீ சரியா என்கிட்ட போன்ல கூட பேசல... அம்மாதான் ஒரு நாளைக்கு இரண்டு மூணு தடவையாதான் பேசுவாங்க” என்று அருள் கேட்டதுமே அவளுக்கு பதட்டமானது. விஜயிடம் அவள் மீண்டும் பேசுவது பழுகுவதை குறித்து அருளுக்கு தெரிய கூடாது என்று எண்ணியதால் தானாகவே அவனிடம் பேசி மாட்டி கொள்ள போகிறோம் என்ற பயத்தில் அவனிடம் பேசுவதையே தவிர்த்தாள்.


அருள் இந்த கேள்வியை எழுப்பவும் உள்ளுர பயம் பற்றி கொள்ள அவள் சமாளிக்கும் விதமாக, “எனக்கு எங்க ஃபோன் பேச எல்லாம் டைம் இருக்கு... காலேஜ் போயிட்டு வர்றதே டயடாகிடுது” என,


“அப்படியா... அப்போ ஏன் நான் எப்போ கால் பண்ணாலுமே உன் ஃபோன் பிஸியா இருந்துது” என்று அவன் அடுத்த கேள்வி கேட்க அவள் எரிச்சலானாள்.


“நீ ஒரு இரண்டு தடவை கூப்பிட்டு இருப்ப... பிஸியா இருந்திருக்கும்... அதுக்கு எப்பாவுமே பிஸியா இருந்துதுனு அர்த்தமா?” என்று அவனிடம் ஏறி விட்டு அவன் வேறு எதுவும் குடைவதற்கு முன்பாக அவள் லாவகமாக அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.


அருளுக்கு தங்கையின் மீது சந்தேகம் இல்லாவிட்டாலும் தன் அம்மா அவள் செய்கையில் சந்தேகம் இருப்பதாக சொன்னது தற்போது அவள் காட்டிய முகபாவத்தில் பிரதிபலித்ததாக தோன்றியது.


அப்போதைக்கு மகேஸ்வரி தப்பித்து கொண்டாலும் மீண்டும் அன்று மதிய உணவின் போது அதே பேச்சு வார்த்தை துவங்கியது. அதனை மீண்டும் அவள் திசை மாற்ற முயன்றதில் விஷயம் அவள் திருமணத்தை பற்றிய பேச்சாக மாறியது.


“நான் மேட்ரிமோனில ரெஜிஸ்டர் பண்ணதுல உனக்கு ரொம்ப பொருத்தமா இரண்டு ப்ரோபைல் பார்த்தேன்... அதை பத்தி பேசலாம்னுதான் நான் உனக்கு கால் பண்ணேன்” என்றவன் சொன்னதில் அவள் திகைப்புற அவனை தொடர்ந்து லதா,


“அண்ணா ஃபோன்ல போட்டோ காண்பிச்சான்... இரண்டு பேருமே பார்க்க நல்லா இருக்காங்க மகேஸு... நல்ல படிப்பு


ஜாதகம் கூட பொருந்துற மாதிரிதான் இருக்கு” என்று தன் பக்க கருத்தை சொல்ல மகேஸ்வரி பேச்சற்று அமர்ந்திருந்தாள்.


“இதுல இருக்க போட்டோ டீடையில் பார்த்துட்டு உன் முடிவை சொன்னா மேல பேசலாம்” என்று விட்டு அருள் தன் செல்பேசியில் இருக்கும் மாப்பிளையின் விவரங்களை காட்ட, லதா ஓரமாக நின்று மகள் என்ன சொல்ல போகிறாள் என்று எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்.


அண்ணன் காட்டிய விவரங்களை பொறுமையாக பார்த்து முடித்த மகேஸ்வரியின் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லை.


“மகேஸ் என்ன சொல்ற?” என்று அருளாகவே கேட்க,


“உஹும் எனக்கு பிடிக்கல” என்று விட்டு அவன் செல்பேசியை திருப்பி கொடுத்தாள்.


“அந்த மாப்பிளைகிட்ட என்னடி குறைகண்ட நீ” என்று லதா அந்த நொடியே மகளிடம் ஏற ஆரம்பித்து விட அவரை திரும்பி நோக்கிய மகேஸ்வரி,


“என் விருப்பம் என்னனு கேட்டீங்க... சொன்னேன்... அவ்வளவுதான்... இல்ல என் விருப்பம் முக்கியம் இல்லன்னு நினைச்சீங்கனா உங்க இஷ்டப்படி யாரையாச்சும் முடிவு பண்ணி கொண்டு வந்து நிறுத்துங்க... நான் கழுத்தை நீட்டுறேன்” என்று அவள் சாதாரணமாக கூறுவது போல அவரை வசமாக குத்த,


“மகேஸு” என்று லதா மகளை கோபமாக அதட்டினார்.


அதற்குள் அருள் தன் அம்மாவின் தோள்களை பற்றி அமைதிப்படுத்தி கொண்டே, “மகேஸ் நீ உள்ளே போ” என, அவள் தப்பித்தால் போதுமென்று அறைக்குள் சென்றுவிட்டாள்.


அதன் பின் அருள் தன் அம்மாவை பின்புற வாசலுக்கு அழைத்து வந்து, “ம்மா பொறுமையா இருங்க... நான் அவகிட்ட பேசிக்கிறேன்” என,


“இல்லடா அவ வேற என்னமோ மனசுல வைச்சுட்டுதான் இப்படி பேசுறா” என்றவருக்கு மகளை பற்றிய கவலை அதிகரித்தது.


“சரிம்மா நான் என்னனு கேட்குறேன்... நீங்க டென்ஷனாகாதீங்க”


“எவனையாவது காதலிக்கிறேன்னு கீதலிக்கிறேன்னு சொல்லிட போறாளோனு பயமா இருக்குடா” என்றவர் குரல் கம்மியது. கண்கள் கலங்கின.


“ம்மா அவ அப்படி எதுவும் சொல்லலயே... அதுக்குள்ள நீங்களா முடிவு பண்ணிக்குறீங்க” என்றவன் அவர் கண்களை துடைத்து விட்டு சமாதானம் செய்யவும்,


“இல்லடா... அவ சரி இல்ல... நீ எதுக்கும் அவ ஃபோன் எடுத்து பாரு” என்றார்.


“ம்மா அதெல்லாம் தப்பும்மா... நானே அவகிட்ட நேரடியா பேசி என்ன ஏதுன்னு விசாரிக்கிறேன்” என்றான்.


“சரி கேளு... ஆனா எவனாயாவது காதலிக்கிறேனு சொன்னானுவை நான் உயிரோடவே இருக்க மாட்டேன்டா” என,


“ம்மா என்னம்மா இப்படி எல்லாம் பேசுறீங்க” என்று அருள் அதிர்ந்தான்.


“உங்க அப்பா போன பிறகு நான் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு உங்களை வளர்த்திருக்கனு உனக்கு தெரியும் அருளு... என் கஷ்டத்த எல்லாம் ஒன்னும் இல்லாம பண்ணிடாதீங்க... நம்ம உறவுக்காரங்க முன்னாடி எல்லாம் என்னால அசிங்கப்பட்டு நிற்க முடியாது” என்று லதா உணர்ச்சிவசப்பட்டு பேசியதை எல்லாம் நிதானமாக கேட்டு கொண்ட அருள்,


“மகேஸ் அப்படி எல்லாம் பண்ணாதும்மா” என்று கூறி அப்போதைக்கு அவருக்கு நம்பிக்கை தந்தாலும் அவனுக்கே தங்கை மீது கொஞ்சம் நம்பிக்கை இல்லை.


“சரி எனக்கு கடைல கொஞ்சம் வேலை இருக்கு... நீ தங்கச்சிகிட்ட பேசி வை... நான் இருந்தா அவ எதுவும் சொல்ல மாட்டா” என்று விட்டு லதா சென்றுவிட அருளுக்குதான் மகேஸ்வரியிடம் இதை பற்றி பேச சங்கடமாக இருந்தது.


இருப்பினும் அவனுக்கு வேறு வழி இல்லை. செல்பேசியை கையில் வைத்து ஏதோ தட்டச்சு செய்து கொண்டிருந்த தங்கை முன்னே சென்று நின்றவன்,


“மகேஸ்” என்று விளிக்க அவள் நிமிர்ந்து அவனை பார்த்தாள். ஆனால் எப்படி எங்கிருந்து ஆரம்பிப்பது என்று அவன் தயங்கினான்.


“என்ன... கல்யாணத்தை பத்தி அம்மா பேச சொல்லுச்சா உன்கிட்ட” என்று அவளாக ஆரம்ப பேச்சை துவங்கினாள்.


“ஆமா... ஆனா அம்மா சொல்றது நான் சொல்றது எல்லாம் விடு... நீ என்ன யோசிக்கிறனு சொல்லு... இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு நினைக்குறியா?” என்றவன் தெளிவாக கேட்க,


“நான் வேண்டாம்னு சொன்னா அம்மா மாப்பிளை பார்க்குறதை நிறுத்திடுமா?” என்ற அவளது பதில் ஏறுக்கு மாறாக வந்தது.


அவன் பெருமூச்செறிந்து, “அது என்னால உறுதியா சொல்ல முடியாது... ஆனா இப்போ வேணாங்குறதுக்கு நீ ஏதாவது நியாயமான காரணம் இருந்தா சொல்லு மகேஸ்... நான் அம்மாகிட்ட பேசி புரிய வைக்கிறேன்” என்றான்.


“காரணம் எல்லாம் எனக்கு தெரியல அருளு... ஆனா இப்போ வேணாம்னு தோணுது... அவ்வளவுதான்”


“சரி இப்போ வேணாம் விடு... ஒரு வருஷம் பொறுத்து பார்க்கலாமா... அப்போ நானும் அம்மாவும் பார்க்குற மாப்பிளையை நீ ஓகே பண்ணுவியா?” என்றவன் கேட்ட கேள்வியில் ஒரு நொடி திகைப்புற்றாள்.


அவள் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்த அருள், “நீ யாரையாச்சும் மனசுல வைச்சுட்டு இருக்கியா மகேஸ்” என்றதும் அவள் பதட்டமானாள்.


உடனடியாக விஜயின் முகம் கண் முன்னே வந்து நின்றது. ஆனாலும் அவனை தான் காதலிப்பதாகவோ திருமணம் செய்து கொள்வது குறித்தோ அவள் இப்போது வரை யோசிக்கவில்லை.


ஆதலால் தமையன் கேள்விக்கு மறுப்பாக தலையசைத்து, “அப்படி எல்லாம் எதுவும் இல்ல... எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேணாம்னு தோனுச்சு... அவ்வளவுதான்” என்று விட்டாள்.


“சரி அப்படினா நான் அம்மாகிட்ட பேசுறேன்” என்று அவனும் அவள் பதிலை ஏற்று அமைதியாக அறையை விட்டு வந்துவிட்டான். அவன் அம்மா வந்ததும், “அவ யாரையும் காதலிக்க எல்லாம் இல்ல... இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு சொல்றா... விட்டுடுங்க... ஒரு வருஷம் போகட்டும்... அப்புறம் பார்த்துக்கலாம்” என்று கூற,


“டேய் ஜோசியர் இப்பதான் அவளுக்கு குரு பலன் வந்திருக்குன்னு சொன்னாரு” என அருள் கடுப்பாகிவிட்டான்.


“ம்மா கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துறது ஜோசியரா இல்ல அவளாமா?” என்று கேட்டு அவரை முறைத்து வைக்க,


“டேய் எல்லா பொண்ணுங்களும் கல்யாண பேச்சை ஆரம்பிச்சா வேண்டாம்னுதான்டா சொல்லுவாங்க” என்று லதா தன் முடிவிலிருந்து அத்தனை சீக்கிரத்தில் இறங்கி வருவதாக இல்லை.


“ம்மா மகேஸ் மத்த பொண்ணுங்க மாதிரி எல்லாம் இல்ல... அவ வேண்டாம்னு சொன்னா வேண்டாம்தான்... அவளை தொல்லை பண்ணாதீங்க விட்டுடுங்க... இப்ப என்ன அவளுக்கு பெருசா வயசாகிடுச்சு... ஒரு வருஷம் போகட்டுமே” என்று அருள் பேசியதில் அவருக்கு முழு உடன்பாடில்லை.


அவன் ஊருக்கு சென்ற கையோடு மீண்டும் அம்மாவுக்கும் மகளுக்கும் இடையில் திருமண விஷயமாக முட்டி கொண்டது.


இந்த எல்லா குழப்பத்திற்கு இடையிலும் மகேஸ்வரி தவறாமல் விஜயை சென்று பார்த்து வந்தாள். அதேநேரம் மும்முரமாக உருண்டு புரண்டு அவனும் வேலை தேடி கொண்டிருந்தான். ஆனால் ஒன்றுமே அமையவில்லை.


இந்த நிலையில் அவனுடைய பிறந்த நாள் வர, மகேஸ்வரி அதன் காரணமாக அரைநாள் விடுப்பு எடுத்திருந்தாள். அவனை நேரில் சென்று வாழ்த்திவிட்டு அவனுக்கு பிடித்த உணவை சமைத்து கொடுக்கவும் அவள் திட்டமிட்டு இருந்தாள்.


அந்த மனநிலையுடன் ரொம்ப நாட்கள் கழித்து மிக அழகான கோலம் ஒன்றை தன் வீட்டு வாயிலில் வரைந்துவிட்டு அதனை ஒரு பத்து முறையாவது சுற்றி வந்து ரசித்தது மட்டும் அல்லாமல் கிளம்பும் போது தன் செல்பேசியில் அதனை படம் பிடித்து விஜயிடம் காட்ட வேண்டுமென்று எண்ணியபடி வீட்டிற்குள் வர,


“ஏன்டி நம்ம வீட்டு வாசலுக்கு மட்டும் கோலம் போட்டியா... இல்ல மொத்த தெருவுக்குமே போட்டியா” என்று லதா கோலம் போட போன மகள் அப்படியே தொலைந்து விட்டாலோ என்று கடுப்பில் கலாய்க்க அவள் முகம் சுண்டிவிட்டது.


“போ ம்மா உனக்கு ரசனையே இல்ல... வெளியே போய் பாரு... நான் எவ்வளவு அழகா கோலம் போட்டிருக்கேனு” என்று அவள் பெருமையடித்து கொள்ள லதாவிற்கு கடுப்பேறியது.


“காலங்கத்தால என்னை டென்ஷன் படுத்தாதே... போயி வேலைக்கு கிளம்புற வழியை பாரு” என்று கூற,


“போயிட்டேன்... போயிட்டேன்” என்று மகேஸ்வரி மாற்று உடையை எடுத்துவிட்டு குளிக்க போனாள். அதன் பின் தனக்கு பிடித்தமான புடவை ஒன்றை உடுத்தி இயல்பை விடவும் கொஞ்சம் அதிகமாக அலங்கரித்து கொள்ளவும் செய்தாள்.


காலை உணவு உண்ண வந்த மகளின் உடையலங்காரங்களை விசித்திரமாக பார்த்த லதா, “காலேஜ்க்குதானேடி போற நீ” என்று கேட்டு வைக்க,


“ஆமா ம்மா... காலேஜ்ல இன்னைக்கு ஒரு பங்க்ஷன் ம்மா” என்று வாயிற்கு வந்த பொய்யை சொல்லி அம்மாவை சமாளித்து விட்டு கிளம்பி வெளியே வந்த மகேஸ்வரி வெறுமையாக கிடந்த வாசலை பார்த்து அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றாள்.


அவள் காலை பார்த்து பார்த்து வரைந்த கோலம் மொத்தமாக தண்ணீர் ஊற்றி கலைக்கப்பட்டிருந்தது.


மகளை வழியனுப்ப வந்த லதா, “என்னடி இங்கேயே நிற்குற” என்று கேட்க அவள் முன்னே கை நீட்டி காண்பித்தாள். அதனை பார்த்து அவரும் அதிர மகேஸ்வரிக்கு கோபம் உச்சத்திற்கு ஏறியது. அவள் நேராக எதிர் வீட்டு வாசலில் சென்று நின்று,


“ஏ பூரணி பூரணி” என்று சத்தமிட ஆரம்பித்தாள்.


“மகேஸ் வேணாம்... வேலைக்கு போற நேரத்துல எதுக்குடி” என்று லதா தடுத்தும் அவள் கேட்கவில்லை.


“பூரணி” என்று அவள் என்ன கத்தியும் பூரணி வெளியே வரவில்லை. அவள் அம்மா ராஜலக்ஷ்மி வெளியே வந்து, “பூரணி இல்லையேமா இப்பதான் கிளம்புனா?” என்று சாவகாசமாக பதில் கூற, அவளுக்கு பற்றி கொண்டு வந்தது.


“உங்க பொண்ணு என்ன வேலை பண்ணி வைச்சு இருக்கா பாருங்க”


“என்ன பண்ணா?”


“நான் போட்ட கோலம் மொத்தத்தையும் தண்ணி ஊத்தி அழிச்சு வைச்சு இருக்கா?” என்றதும் வெளியே வந்து எட்டி பார்த்த பூரணியின் அம்மாவும் அதிர்ந்துவிட்டார்.


‘அடிப்பாவி... இதுக்குதான் கிளம்பி போறதுக்கு முன்னாடி பக்கட் நிறைய தண்ணி பிடிச்சாளா?’ என்று யோசிக்கும் போதே,


“நான் எப்போ கோலம் போட்டாலும் உங்க பொண்ணு இப்படிதான் பண்ணிட்டு இருக்கா... இன்னைக்கு மொத்தம் கோலத்தையும் சுத்தமா அழிச்சு வைச்சு இருக்கா” என்று அவள் சீறி கொண்டு நின்றாள்.


“நான் அவ வந்தா பேசுறேன்” என மகேஸ்வரியின் மனம் அமைதியாகவே இல்லை.


“ராஜி அங்க என்ன பிரச்சனை?” என்று கேட்டு கொண்டே பூரணியின் தந்தை வெளியே வரவும்,


“மகேஸ் நீ முதல வேலைக்கு கிளம்பு... கிளம்புனு சொன்னேன்” என்று மகளை கட்டாயப்படுத்த இழுத்து கொண்டு வந்த லதா,


“எதுவா இருந்தாலும் அப்புறமா பேசிக்கலாம்” என்று எப்படியோ மகளை சமாளித்து அனுப்பிவிட அப்போது பூரணியின் அம்மா ராஜி,


“ஏன் இந்த பொண்ணு இப்படி பண்ணுச்சுனு தெரியலக்கா... நான் வந்ததும் அவகிட்ட பேசுறேன்” என்று லதாவிடம் அமைதியாக பேசினார். ஆனால் லதாவாலுமே பூரணி செய்ததை ஏற்க முடியவில்லை.


“இதெல்லாம் உங்க குடும்ப புத்திதானே” என்று காட்டமாக பதிலடி கொடுக்க ராஜி அதிர்வுடன் ஏறிட்ட அதேசமயம்,


“எது எங்க குடும்ப புத்தி?” என்று அதுவரையில் நடந்த சம்பாஷணைகளை கேட்டிருந்த பூரணியின் தந்தை விஜயேந்திரன் சீறி கொண்டு வெளியே வந்து நின்றார்.


“அழிக்கிறது நாசமாக்கிறது எல்லாம் உங்க குடும்ப புத்தின்னு சொன்னேன்?” என்று இன்னும் அழுத்தமாக ஒலித்தது லதாவின் குரல். மனதிற்குள் அடக்கி பூட்டி வைத்திருந்த கோபமும் வெறுப்பும் சட்டென்று அவரை பார்த்ததும் வெடித்துவிட,


“ஓஒ நாங்க நாசமாக்கிற குடும்பம்... நீங்க ரொம்ப நல்ல குடும்பமோ?” என்றவர் நக்கலாக கேட்க லதாவின் கண்களில் கனலேறின.


“எங்க குடும்பத்தை பத்தி பேசுற அருகதை கூட உங்க யாருக்கும் கிடையாது” என்றதும் விஜயேந்திரன் முகம் சிவந்தது. உதடுகள் துடித்தன. ஆனால் அவர் அடுத்த வார்த்தை பேசுவதற்குள் லதா உள்ளே சென்றுவிட,


“என்னங்க... பிரச்சனை வேண்டாம்... உள்ளே வாங்க” என்று ராஜியும் கணவனின் கையை பிடித்து இழுத்து வந்து விட்டார்.


“நீங்க இப்படி உட்காருங்க... தண்ணி எடுத்துட்டு வரேன்” என்று ராஜி உள்ளே செல்ல விஜயேந்திரன் கொதிப்பு அடங்கவே இல்லை. இன்று நேற்றைய கோபம் இல்லை.


அவன் அப்பா காலத்தில் ஆரம்பித்த பிரச்சனை.


லதாவின் தந்தை அருள்சாமியும் விஜயேந்திரனின் தந்தை சந்திரசேகரனும் நண்பர்கள். நண்பர்கள் என்றால் சாதாரணமான நண்பர்கள் இல்லை. அப்படியொரு நெருக்கமான நட்பு. அங்காளி பங்காளி உறவுமுறை போல அத்தனை நெருக்கமாக பேசவும் பழகவும் செய்தார்கள்.


இருவர் குடும்பமும் ஒரு சாதாரண நடுத்தர குடும்பம்தான். தங்கள் நட்பு காலத்திற்கும் தொடர வேண்டுமென்று எதிர் எதிரே நிலம் வாங்கி வீடு கட்டி கொண்டவர்கள்.


ஆனால் எதிர்காலத்தில் இத்தனை மோசமான எதிரிகளாக மாறி போவார்கள் என்று அவர்கள் அப்போது யோசித்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.


இருவருமாக சேர்ந்து காசு போட்டு புதிதாக வாங்கிய லாரியும் அதன் வியாபாரமும் நன்றாக சூடு பிடிக்க துவங்கிய போதுதான் அவர்கள் நட்பும் அடிவாங்க துவங்கியது. லாபத்தை எல்லாம் சந்திரசேகரன் அனுபவித்தார். லாரியில் கோளாறுகள் ஏற்படும் போதெல்லாம் அதை அருள்சாமியின் தலையில் கட்டினார். கிட்டத்தட்ட ஐந்து வருடத்திற்கு மேல் லாபத்தின் பெரும் பகுதியை சந்திரன் சுருட்டி கொண்டு வருவது அருளுக்கு பின்னரே தெரிய வந்திருந்தது.


தெரிய வந்த போது எல்லாம் கையை மீறி போயிருந்தது. விஜயேந்திரனுக்கும் லதாவிற்கும் திருமணம் முடிக்க ஏற்பாடு செய்திருக்க, மகளின் திருமணத்தில் எந்த பிரச்சனையும் வேண்டாம் என்று அருள் அமைதி காத்தார்.


ஆனால் அந்த சமயம் பார்த்து லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் பெரிய நஷ்டத்தை அவர்கள் சந்திக்க நேர்ந்தது. அப்போது சந்திரன் அந்த மொத்த நஷ்டத்தையும் மீண்டும் அருளின் தலை மீதே போட்டார்.


அருள்சாமியின் பொறுமை சுக்குநூறாகிவிட நண்பனிடம் அவர் நியாயம் கேட்டார். அது பெரும் சண்டையாக வலுத்து ஏற்பாடு செய்த திருமணம் நின்றுவிட்டது.


அதன் பின் இருவரும் வியாபாரத்தில் தங்கள் பங்கை பிரித்து கொள்வது என்று முடிவு செய்தார்கள். ஆனால் மீண்டும் அருள்சாமியால் அந்த வியாபாரத்தை தொடர்ந்து நடத்த முடியவில்லை. வியாபரம் ஆரம்பிப்பதற்கு முன்பிருந்த நிலைமையை விட இன்னும் மோசமான பொருளாதார நெருக்கடியில் தள்ளப்பட அவர் குடும்பமே நொடிந்து போனது.


ஆனால் நேருக்கு மாறாக சந்திரன் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி மேலே மேலே வளர்ந்தார். அதேநேரம் கல்யாணம் நின்றதால் வெகுநாட்கள் திருமணமாகாமல் இருந்த லதாவை தன்னிடம் ஓட்டுநராக பணிப்புரிந்த சோமுவுக்கு மணம் முடித்தார் அருள்சாமி. சோமு நல்ல மனிதராகவே இருந்த போதும் லதாவின் வாழ்க்கை அவர் நினைத்தபடியாக அமையவில்லை.


ஒரு வகையில் அதற்கு விஜயேந்திரன் குடும்பம்தான் காரணம் என்ற கோபமும் பகையும் லதாவின் மனதில் இப்போதும் கனலாக எரிந்து கொண்டுதான் இருந்தது. இருப்பினும் அந்த பகைமையை அவர் தன் பிள்ளைகளிடம் கொண்டு சென்றதில்லை.


அருள்சாமி இறந்த பிறகு அவர்கள் குடும்பத்திற்கு இடையிலான பகைமை தொடரவில்லை. பேச்சு வார்த்தையும் இல்லை.


இருப்பினும் அவர்கள் தாத்தாக்களின் குடும்ப பகையை தெரிந்தும் தெரியாமல் கருவிலேயே சுமந்து வந்தவர்களாக மகேஸ்வரியும் பூரணியும் இன்றும் முட்டி கொண்டு நின்றார்கள். அவர்கள் சண்டைக்கு பெரிதாக காரணமே இல்லாவிட்டாலும் அந்த பகைமை அவர்கள் இரத்தத்திலேயே ஊறி இருந்தது.


அங்கே சண்டையிட்டு விட்டு அதே கோபத்துடன் கிளம்பிய மகேஸ்வரி விஜயின் பிறந்த நாளை பற்றிய எண்ணம் வரவும் தன்னை அமைதிப்படுத்தி கொண்டாள்.


பால் பாயசம் துவங்கி அவனுக்கு பிடித்த உணவுகளை எல்லாம் சமைக்க தேவையான பொருட்களை எல்லாம் பட்டியல் போட்டு அங்கிருந்த கடைகளில் வாங்கி கொண்டு அவன் வீட்டிற்கு செல்ல, அவள் சற்றும் எதிர்பாராமல் உள்ளே பூரணி நின்று விஜயிடம் பேசி கொண்டிருந்தாள்.


கோலத்தை கலைத்ததற்கு உள்ளே சென்று பூரணியின் கன்னத்தில் பளாரென்று அறைய வேண்டுமென்று மகேஸ்வரிக்கு உள்ளுர கோபம் கொப்பளித்தாலும் அவள் விஜயிடம் என்ன பேசுகிறாள் என்று கேட்கும் ஆர்வத்தில் அப்படியே வாயிலிலேயே நின்றுவிட்டாள்.


அவள் பேசியதை எல்லாம் கேட்ட மகேஸ்வரியின் கனவு கோலம் அப்போது மிச்சம் மீதி இல்லாமல் மொத்தமாக களைந்து போயிருந்தது.

0 comments

Comentarios

Obtuvo 0 de 5 estrellas.
Aún no hay calificaciones

Agrega una calificación
© KPN NOVELS COPY PROTECT
bottom of page