top of page

Kanavar Thozha - 7

7

அந்த இரவின் அமைதியை கிழித்து கொண்டு கேட்டது மகேஸ்வரியின் செல்பேசியிலிருந்து ஒலித்த கிளங் என்ற அந்தச் சத்தம்.


லதா படுத்ததுமே ஆழ்ந்த உறக்கத்திற்கு போய்விட்டதால் அவளை அந்தச் சத்தம் இம்மியளவும் பாதிக்கவில்லை. ஆனால் போர்வைக்குள் உறங்க முடியாமல் புரண்டு கொண்டிருந்த மகேஸ்வரி அந்த சத்தத்தில் பதறி எழுந்து ஜன்னல் திண்டின் மீதிருந்த செல்பேசியை எட்டி எடுத்து திறந்தாள்.


“மகி தூங்கிட்டியா” என்ற விஜயின் குறுந்தகவல் வந்திருந்தது.


அவள் மீண்டும் படுத்து கொண்டே, “இல்ல” என்று தட்டச்சு செய்து அனுப்பினாள்.


“ஏன்?” என்றவன் கேட்க,


“தூக்கம் வரல” என்றவள் பதில் அனுப்ப,


“எனக்கும் தூக்கம் வரல... அம்மா ஞாபகமா இருக்கு” என்று அவன் பதிலை பார்த்ததும் அவள் மனம் தவிப்புற்றது. அவன் அம்மா இறந்து இரண்டு வாரம் முடிய போகிறது.


இருப்பினும் அவனுடைய மனநிலை இம்மியளவும் மாற்றம் பெற்றதாக தெரியவில்லை.


அதேநேரம் இத்தனை பெரிய இழப்பிலிருந்து அவன் விரைவாக மீண்டு வர வேண்டுமென்று எதிர்பார்ப்பதும் சாத்தியமில்லை. தினமும் அவனை காலையும் மாலையும் சென்று சந்தித்து பேசி வருகிறாள்.


அவனை தனியாக விட கூடாது என்று முடிந்தளவு செல்பேசியில் அவனுடன் தொடர்பில் இருக்கிறாள். பல நேரங்களில் குறுந்தகவல் மூலமாக. சில நேரங்களில் அழைப்புக்கள் மூலமாக.


இந்த உரையாடல்கள் எதுவும் முன்பை போல நட்பு ரீதியாக மட்டும் இல்லை என்பதை அவள் மனம் உணர்ந்த போதும் அவன் உணர்ந்தானா என்பது கேள்வி குறிதான். அவனை தேற்றவும் ஆறுதல் படுத்தவும் அவள் பேசுவதாக எண்ணினாலும் உணர்வு ரீதியாக அவளின் உரையாடல்கள் நட்பு என்ற எல்லை கோடுகளை தாண்டிவிட்டிருந்தன.


அவள் சத்தமில்லாமல் தன் செல்பேசியை எடுத்து கொண்டு படுக்கையறையிலிருந்து வெளியே வந்தாள். பின்கதவை திறந்து வசதியாக சாய்ந்து அமர்ந்து கொண்டு விஜயின் செல்பேசிக்கு அழைத்தாள்.


அடித்ததுமே அழைப்பை ஏற்றவன், “என்னடி இந்நேரத்துல கால் பண்ற... உங்க அம்மா பார்த்திர போறாங்க” என்று அவன் பதறவும் அவள் சாதாரணமாக,


“அவங்க அசந்து தூங்குறாங்க... இப்போதைக்கு எழுந்துக்க மாட்டாங்க... அதான் உனக்கு கூப்பிட்டேன்” என்றாள்.


“ஓ” என்றவன் மேலும், “நீ ஃபோன் பண்ணதும் நல்லதா போச்சு... எனக்கு கூட உன்கிட்ட பேசணும் போல இருந்துச்சு” என அவள் முகம் மலர்ந்தது.


அவன் தன்னை அதிகமாக தேடுகிறான் என்பதை அவள் இன்பமாக உணர்ந்தாள். அவனுடைய வாழ்வின் ஒரே தேடலாக தான் மட்டுமே இருக்க வேண்டுமென்று அவள் மனம் அப்போது விரும்பியது.


மிதமாக வீசும் இரவின் குளிர்ந்த காற்றில் அமர்ந்தபடி மெல்லிய குரலில், “உனக்கு என்னலாம் தோணுதோ பேசு விஜி... எனக்கு தூக்கம் வர வரைக்கும் கேட்டுட்டு இருக்கேன்” என


“வேண்டாம் மகி நீ போய் படுத்துக்கோ... காலைல எழுந்து நீ வேலைக்கு வேற போகணும்” என்றான்.


“அதெல்லாம் பரவாயில்ல... நீ பேசு” என்றவள் கூற அவன் மல்லாந்து படுத்து கொண்டு வானத்திலிருந்த நட்சத்திரங்களை பார்த்தான். கண்கள் பனித்தன. குரல் வலியுடன் ஒலித்தது.


“என்னால வீட்டுக்குள்ள தனியா படுக்கவே முடியல மகி” என்றான்.


“இன்னுமா?”


“ம்ம்ம்”


“வெளியே படுத்துருக்கியா?”


“ம்ம்ம் ஆமா... ஆனாலும் தூக்கம் வரல... என்னன்னவோ ஞாபகத்துக்கு வருது”


“என்ன ஞாபகத்துக்கு வருது”


“எனக்கு பத்து வயசு இருக்கும் மகி... அப்போ ஒரு கனவு வந்துச்சு... அம்மா ஸ்டவை பத்த வைச்சு அதுல இருந்த பம்பை அடிச்சுட்டு இருக்காங்க... திடீர்னு அதுல நெருப்பு பெருசா எரிய ஆரம்பிச்சுடுச்சு... நான் என்னனு உணர்றதுக்குள்ள அது வெடிச்சுடுச்சு


நான் அடிச்சு பிடிச்சு எழுந்து பார்த்த போது அம்மா பக்கத்துல படுத்திருந்தாங்க... எனக்கு அப்பத்தான் மூச்சே வந்துச்சு... ஆனா அந்த கனவு வந்த பிறகு என்னால தூங்கவே முடியல... இராத்திரி பூராவும் அழுதிட்டே இருந்தேன்


அந்த கனவு உண்மையாகிடுமோனு பயந்துட்டே இருந்தேன்.. அந்த கனவுனால ஏற்பட்ட பாதிப்பும் பயமும் என்னை விட்டு ரொம்ப நாள் போகவே இல்ல தெரியுமா...


ஆனா நான் அம்மாகிட்ட அந்த கனவை பத்தி சொன்னதே இல்ல... ஒரு தடவை கூட சொன்னது இல்ல... அந்த கனவு உண்மையா நடந்திருமோனு எப்பவுமே எனக்கு ஒரு பயம் உள்ளாற அரிச்சுட்டே இருக்கும்


ஆனா இப்போ எனக்கு என்ன தோணுது தெரியுமா... இதெல்லாம் கூட ஒரு பெரிய கனவா இருக்க கூடாதா... அந்த கனவுல திடீர்னு முழிச்சு எழுந்துக்க கூடாதா... அன்னைக்கு போலவே அம்மா உயிரோட என் பக்கத்துல இருக்க கூடாதானு எல்லாம் தோணுது” என்றவன் பேசி கொண்டிருக்கும் போதே அவன் குரல் கம்மியது.


“விஜி... அழுறியா”


“இல்லையே” என்றவன் தன் கண்களினோரம் கசிந்த நீரை துடைத்துவிட்டபடி தொடர்ந்தான்.


“நான் சும்மா என் மனசுல தோணினதை சொன்னேன்... மத்தபடி இது கனவு இல்லன்னு எனக்கு தெரியும் மகி... இனிமே அம்மா இல்லாமதான் நான் வாழ்ந்தாகணும்னு எனக்கு தெரியும்... நான் அதுக்காக முயற்சி செய்றேன்... ஆனா என்னால முடியல... முடியுமான்னும் தெரியல” என்றவன் வருத்தமாக பேச,


“முடியும் விஜி” என்றவள் திடமாக கூறவும் அவன் பதில் பேசாமல் மௌனமாகிவிட்டான். அவள் தொடர்ந்து,


“நீ எனக்கு நடந்தது யோசிச்சு பாரேன்... ஸ்கூலுக்கு ஜாலியா போய் பிரண்டோட அரட்டை அடிச்சுட்டு இருந்த என்னை திடீர்னு மிஸ் கூப்பிட்டு எங்க அண்ணன் கூட வீட்டுக்கு அனுப்பி விட்டாங்க


அப்போ என்ன பிரச்சனைனு எனக்கு தெரியாது... என்னனு நான் யோசிக்க கூட இல்ல... என்னை பொறுத்த வரைக்கும் நான் மேக்ஸ் ஹோம் வொர்க் செய்யல... சார்கிட்ட அடிவாங்காம தப்பிச்சுட்டோம்னு ஜாலியா வீட்டுக்கு கிளம்பிட்டேன்... ஆனா வீட்டுக்கு போன பிறகுதான் எனக்கு தெரியும்


எங்க அப்பா ஆக்ஸிடென்ட்ல செத்துட்டார்னு... அதுவரைக்கும் நான் எங்க அப்பா இல்லாத உலகத்தை கற்பனை கூட பண்ணி பார்த்தது இல்ல... ஒரு பத்து வயசு பொண்ணா நான் என்ன மாதிரி உணர்ந்தேனு எனக்கு சொல்ல தெரியல


ஆனா அதுக்கு அப்புறம் வருஷம் போக போக எல்லாமே மாறிடுச்சு... இப்பலாம் ஹாலில் ஓரமா பூ போட்டு மாட்டி இருக்க அப்பாவோட போட்டோவை பார்க்கும் போதுதான் அப்பா ஞாபகமே வருது” என்றதும் அவன் மேலே ஒளிரும் நட்சத்திரங்களை பார்த்து கொண்டே,


“நீ சொல்றது ரொம்ப எதார்த்தமான ஏத்துக்க வேண்டிய உண்மைதான் மகி” என்றான்.


“ஆமா விஜி... போக போக எல்லாமே மாறிடும்” என்று அவளும் கூற,


“எல்லாமேனா நீ நான் கூட மாறிடுவோமா மகி” என்று அவன் கேட்கவும் அந்த கேள்வியை அவன் ஏன் கேட்டான் என்று புரியாமல் திகைத்தவள் பின்,


“ஏன் விஜி அப்படி கேட்ட?” என்று அவனிடமே கேட்டாள்.


“இல்ல... தோணுச்சு... இப்ப நீ மட்டும்தானே என் கூட இருக்க... நீயும் நாளைக்கு கல்யாணம் ஆகி போயிட்டா... எனக்கு யார் இருப்பான்னு யோசிக்கிறேன்”


“திடீர்னு நீ ஏன் இப்போ என் கல்யாணத்தை பத்தி பேசுற”


“இல்ல எங்க ஹவுஸ் ஓனர் பொண்ணு நிஷாவுக்கும் உனக்கும் ஒரே வயசுதான் இருக்கும்... அவங்க இன்விடேஷன் வைக்க வந்தாங்க... ரொம்ப வருஷம் அம்மா அவங்க வீட்டுலதான் வேலை பார்த்தாங்க... அதான் அன்னைக்கு நடந்ததுக்கு ரொம்ப வருத்தப்பட்டு பேசுனாங்க


அவங்க போன பிறகு அந்த இன்விட்டேஷனை பார்த்தேனே... உன் ஞாபகம் வந்திருச்சு எனக்கு... ஒரு வேளை நீ கல்யாணம் ஆகி போயிட்டா” என்றவன் சொல்லும் போதே இடையிட்டவள்,


“அதென்ன நான்தான் கல்யாணம் ஆகி போயிடுவேனா... ஒருவேளை எனக்கு முன்னாடி நீ கல்யாணம் ஆகி போயிட்டா” என்றவள் கூற அவன் சிரித்தான்.


“எது எனக்கா... வேலை இல்ல... சரியான வீடு இல்ல... சொந்த பந்தம்னு யாரும் இல்ல... நானெல்லாம் கல்யாணம் மெட்டீரியலே இல்ல” என்று அவன் சிரித்து கொண்டே சொல்லி முடிக்க அவள் எரிச்சலானாள்.


“பைத்தியம் மாதிரி பேசாத... இன்னைக்கு இருக்க மாதிரியே நம்ம வாழ்க்கையும் நிலைமையும் இருக்கணும்னு அவசியம் இல்ல... நான் சொன்ன மாதிரி எல்லாம் மாறும்... நீ நான் மட்டும் இல்ல... நம்ம வாழ்க்கையும் மாறும்... அது நல்ல மாதிரியா மாறும்னு நம்புவோம்” என்றதும் அவன் ஆழ்ந்த அமைதிக்குள் போய்விட்டான்.


“டேய் விஜி... என்ன தூங்கிட்டியா?” என்றவள் கேட்கவும், “இல்ல இல்ல” என்று சொல்லி சிரித்தவன்,


“நீ இப்ப பேசுனது எல்லாம் கேட்டு யாராலாவது தூங்க முடியுமா மகி... அஞ்சு ஹார்லிக்ஸ் பத்து பூஸ்ட் குடிச்சு மாதிரி பயங்கர எனர்ஜிடிக்கா இருக்கு எனக்கு” என்று விட்டு மீண்டும் சிரித்தான்.


“எருமை என்னை கலாய்க்குறியா?”


“பின்ன” என்றவன் மீண்டும் சிரிக்கவும் அவள் கடுப்புடன்,


“நடுராத்திரில உட்கார்ந்து என் தூக்கத்தை எல்லாம் கெடுத்துட்டு உனக்கு ஆறுதல் சொல்லிட்டு இருந்தா என்னைய கல்யாக்குற நீ... போ நான் ஃபோனை வைக்கிறேன்” என்றவள் முறுக்கி கொள்ள,


“மகி மகி வைச்சுடாதே உனக்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்” என்றான்.


“நாளைக்கு ஒரு இன்டர்வியூ போகணும்... ஏ ஆர் ஆபிஸ் இல்ல... அங்க போன் பண்ணி என்னை இன்டர்வீயூவுக்கு கூப்பிட்டு இருக்காங்க” என்றதும் அவள் உடனே, “அங்கயா... சூப்பர்டா... ஆமா இன்டர்வியூ எத்தனை மணிக்கு?” என்று கேட்டாள்.


“ஒன்பது மணிக்கு”


“அப்படினா சரி... நானே வந்து கூட்டிட்டு போறேன் உன்னை”


“அதெல்லாம் வேணாம்டி... நானே போயிடுவேன்... உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்... அதான் சொன்னேன்... சரி நீ போய் படுத்துக்கோ” என்றதும் அவள்,


“அதெல்லாம் இல்ல... நான் வந்து கூட்டிட்டு போறேன்... நீ ரெடியா இரு” என்றாள்.


“மகி வேணாம்” என்றவன் சொல்லி முடிப்பதற்குள்,


“சரி சரி நீ படுத்துக்கோ... உனக்கும் நாளைக்கு இன்டர்வியூ இருக்கு இல்ல” என்று விட்டு அவன் பேசுவதை கேட்காமல் அழைப்பை துண்டித்து அறையில் வந்து அவள் படுக்கும் போது லதா அந்த சின்ன சத்தத்தில் விழித்து எழுந்து தூக்க கலக்கத்துடன்,


“மகேஸ் எங்க போயிட்டு வர” என்றார்.


“தண்ணி குடிக்க போனேமா” என்றவள் அவருக்கு தெரியாமல் தன் செல்பேசியை மறைத்து கொண்டு அவசரமாக படுத்து முகம் வரை போர்வையால் மூடி கொண்டாள்.


லதா மகளை சந்தேகமாக பார்த்தார். மகள் தன்னிடம் எதையோ மறைக்கிறாள் என்று உள்மனதிற்கு தோன்றியது. கடந்த வாரத்தில் இருந்தே அவளிடம் தெரியும் சில மாற்றங்களை அவர் கவனித்து கொண்டுதான் இருந்தார். ஆனால் அது என்ன மாதிரியான மாற்றம் என்றுதான் அவரால் கணிக்க முடியவில்லை.


வயிற்றில் கப்பென்று ஒரு பயம் உண்டானது லதாவிற்கு. ஆனால் மகேஸ்வரியோ படுத்ததும் ஆழ்ந்த உறக்கத்திற்கு போய்விட்டாள். அதேநேரம் காலையில் விரைவாக எழுந்து தயாராகி விட்டு வந்து, “ம்மா லஞ்ச் பாக்ஸ் எங்கம்மா? இன்னும் கட்டலயா” என்று அவசரப்படுத்த,


“ஒன்பது மணிக்குதானேடி காலேஜ்... நீ ஏன் டி இப்ப எல்லாம் ஏழு மணிக்கே கிளம்புற” என்றவர் கேட்டு சந்தேகமாக பார்த்து வைக்கவும் மகிக்கு திக்கென்றானது.


தினமும் விஜயை பார்த்து அவனிடம் பேசிவிட்டு செல்வதால் அவள் விரைவாகவே கிளம்பிவிடுகிறாள்.


“ம்மா இந்நேரத்துக்கு கிளம்புனாதான் சென்னை ட்ராபிக்ல போய் சேரவே முடியும்” என்று ஒரு மாதிரி சமாளித்தவள் அவளாக தட்டை எடுத்து கடாயிலிருந்து உப்புமாவை வைத்து அவசர அவசரமாக உள்ளே தள்ள லதா அவளை விசித்திரமாக பார்த்தார்.


மகேஸ்வரி தொண்டை அடைத்து விக்கவும், “பொறுமையா சாப்பிடுறி” என்று தண்ணீர் எடுத்து கொடுக்க அவள் அப்போதும் அதே அவசரத்துடன் தட்டிலிருந்ததை விழுங்கிவிட்டு மதிய உணவு டப்பாவை பையில் போட்டு கொண்டு மின்னலென மறைந்துவிட்டாள்.


‘என்னதான் பிரச்சனை இவளுக்கு’ என்று யோசித்த லதா, ‘அருள்கிட்ட முதல இவளை பத்தி பேசணும்’ என்று தன் செல்பேசியை தேடி எடுத்து மகனுக்கு அழைத்த அதேநேரம் மகேஸ்வரி விஜயின் அடுக்குமாடி வீட்டின் முன்னே தன் பைக்கை நிறுத்த போக அங்கே இடமே இல்லை.


அவர்கள் வீட்டில் கல்யாணத்திற்காக வந்த உறவினர்களின் வண்டிகள் அந்த சாலை முழுவதுமாக மறித்திருந்தன. எப்படியோ கிடைத்த ஒரு சிறிய இடைவெளியில் அவள் வண்டியை நிறுத்திவிட,


“மகேஸ்வரி” என்று மிகவும் தெரிந்த குரல் பின்னோடு நின்றபடி ஒலிக்க, அவள் தன் நெற்றி வியர்வையை துடைத்து கொண்டு திரும்பினாள். அந்த வயது முதிர்ந்த பெண்மணி அம்மாவிடம் துணி தைப்பவர். அடிக்கடி அம்மாவை பார்த்து துணி கொடுத்து விட்டு போக வீட்டிற்கு வருவார்.


அவள் மூச்சை இழுத்து விட்டு கொள்ள, “நீ எங்க மகேஸ்வரி இங்க?” என்று கேள்விகள் கேட்க,


“இல்லை இல்ல... நான் மேலே இருக்க என் பிரண்டை பார்க்க வந்தேன்... அவ பேரு விஜி” என்றாள்.


“ஓ அப்படியா?”


“ஆமா நீங்க எங்க ஆன்டி இங்க?”


“கல்யாண பொண்ணு நமக்கு ரொம்ப நெருங்கின சொந்தம் இல்ல” என்றதும் தலையசைத்து கேட்டு கொண்டவள் எப்படியோ அவரை கழற்றி விட்டு மாடியேறி வந்துவிட அங்கே விஜயோ இன்னும் ஷார்ட்ஸ் பனியனில்தான் இருந்தான்.


“டேய் எருமை இன்னும் குளிச்சு கிளம்பலயா?”


“ஏ குளிக்க எல்லாம் குளிச்சிட்டேன் டி... ஆனா நேத்து நைட் இன்டர்வியூ போறதுக்காக இருந்த ஒரே நல்ல பேண்டை எடுத்து துவைச்சு போட்டேன்... ஆனா அது இன்னும் காயவே இல்ல” என்று முகத்தை தொங்க போட்டு கொண்டான்.


“உன்கிட்ட இந்த பேண்டை தவிர வேற நல்ல பேண்டே இல்லையா?”


“நம்ம கடைக்கு போட்டுட்டு போற யுனிபார்ம் பேன்ட் இருக்கு... அது ஆல்ரெடி வெளுத்து போச்சு... அப்புறம் ரெண்டு ஜீன்ஸ் இருக்கு... அதை போட்டுட்டு இன்டர்வூயூ போக முடியுமா?” என்றான்.


அவள் அந்த கொடியில் காய்ந்து கொண்டிருந்த பேன்ட்டை தொட்டு பார்த்து விட்டு, “என்னடா இவ்வளவு ஈரமா இருக்கு... இதை எப்படிடா போட்டுக்கிறது” என,


“நானும் அதானே சொன்னேன்” என்றான்.


“தோய்ச்சு போட்டியே... ஒழுங்கா பிழிஞ்சு போட்டியா”


“போட்டேன்டி.. ஆனாலும் காயல”


“டைமாகுது விஜி”


“சரி பரவாயில்ல... நீ காலேஜக்கு கிளம்பு... நான் பார்த்துக்கிறேன்” என்றவன் சொல்ல, “எனக்கு இல்ல உனக்கு” என்று விட்டு தீவிரமாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவள்,


“சரி பரவாயில்ல... நீ வேற பேன்ட் போட்டுட்டு வா... கிளம்பலாம்” என்றாள்.


“மகி”


“சொல் பேச்சை கேளு... போடா” என்றாள். சலித்து கொண்டவன் தோழி சொன்னதற்காக தன்னிடமிருந்து ஒரளவு சுமாரான பேன்ட்டையும் மேற்சட்டையையும் போட்டு வர,


“இதை போட்டுட்டு போனா... எனக்கு வேலை இல்ல... என்னை இன்டர்வியூவுக்கு உள்ளே கூட விட மாட்டாங்க” என்றவன் சோர்வுடன் பேசி கொண்டே சட்டை பொத்தான்களை மாற்றி மாற்றி போடுவதை கவனித்து,


“இந்த பேன்டுக்காக உன்னை உள்ளே விடுறாங்களோ இல்லையோ... நீ இப்படி தப்பு தப்பா பட்டனை போட்டுட்டு போனா சத்தியமா உன்னை உள்ளயும் விடமாட்டாங்க... உனக்கு வேலையும் கொடுக்க மாட்டாங்க” என்று சொல்லி கொண்டே அவனை நெருங்கி அவளே சட்டை பட்டனை கழற்றி மாற்றி போட்டுவிட்டாள்.


அத்தனை நேரம் புலம்பி கொண்டிருந்தவன் அவள் உரிமையுடன் நெருங்கி நின்று பொத்தான்களை கழற்றி சரியாக போடுவதை கண்டு திகைப்படைந்துவிட்டான்.


“இப்போ சரியா இருக்கு” என்று நிமிர்ந்தவள் அவன் பார்வை அவளை ஆழமாக துளையிடுவதை உணர்ந்து சட்டென்று கைகளை விலக்கிகொண்டு தள்ளிவந்தாள். அவனும் கொஞ்சம் சுதாரித்து தன் பார்வையை மாற்றி கொண்டான்.


“நீ சீக்கிரம் வீட்டை பூட்டிட்டு வா... நான் பைக் எடுத்துட்டு பக்கத்துல இருக்க சந்துக்குள்ள வெயிட்டு பண்றேன்” என்றவள் கூறவும்,


“ஏன் சந்துக்குள்ள?” என்றவன் கேட்டு கொண்டே வீட்டு சாவியை எடுக்க போக,


“அம்மாவுக்கு தெரிஞ்ச ஆன்டி கீழ உங்க ஓனர் வீட்டுக்கு வந்திருக்காங்க... அதனால நான் முன்னாடி போறேன்... நீ பின்னாடி வா... ஆனா சீக்கிரம் வா” என்றவள் அவசரமாக இறங்கி அந்த அம்மாவின் கண்களில் படாமல் சமார்த்தியமாக பைக்கை எடுத்து தள்ளி வந்து காத்திருக்க விஜயும் அவள் பின்னே வந்து அமர்ந்தான்.


ஹெல்மெட்டை அணிந்து கொண்டவள், “அந்த ஆன்டி பார்க்கிறதுக்குள்ள நம்ம ஓடிடுவோம்” என்றவள் எட்டி பார்த்து விட்டு தன் பைக்கை இயக்க,


“நம்ம இரண்டு பேரும் பிரண்ட்ஸ்தானே... எதுக்கு நம்ம இப்படி பயப்படணும்” என்று அவன் கேட்க,


“பிரண்ட்ஸ்தான்... ஆனா பிரண்டுனு சொல்லி பாரு எவனும் நம்ப மாட்டான்... ஏன்? அந்த சூப்பர் வைஸர் கணேசன் கூட எப்பவும் நம்மள சந்தேக கண்ணோடவே பார்த்திட்டு இருப்பான்தானே” என்றாள்.


“அவன் உன்னை லவ் பண்ணான்டி”


“எது அவன் பண்ணதுக்கு பேர் லவ்வா?”


“அதுக்கு பேர் லவ் இல்லனா அப்ப எது லவ்வு?” என்றவன் கேட்க முன் கண்ணாடியில் அவன் முகத்தை பார்த்தவள்,


“என்னை ஏன் டா கேட்குற... முன்ன பின்ன நான் லவ் பண்ணி இருக்கேனா என்ன? நீதான் அந்த பூரானை... சாரி சாரி பூ.... ரணியை லவ் பண்ண” என்று இழுத்து சொல்லவும் அவன் சிரித்து விட்டு,


“அது கூட லவ்வானு எனக்கு தெரியல மகி... ஆனா எனக்கு பூரணியை பிடிச்சு இருந்துச்சு” என்றதும் அவள் முகம் சுண்டிவிட்டது. அதற்கு பின் அந்த உரையாடலை அவள் தொடரவில்லை. அவள் பைக் ஒரு துணி கடையின் முன்னே நிற்க,


“இங்கே எதுக்கு கொண்டு வந்து நிறுத்துன” என்றவன் கேட்கும் போதே பைக்கை நிறுத்திவிட்டு, “உள்ளே வா” என்று கடைக்குள் விரைந்துவிட்டாள்.


அவள் நேராக சட்டை பேன்டுகள் இருக்கும் இடத்தில் சென்று அதில் தொங்கி கொண்டிருந்த உடைகளை பார்க்க, “மகி சொல்றதை கேளு... எனக்கு வேணாம்... போலாம் வா” என்றவன் மறுத்த போதும் அவள் அவன் அளவுக்கான உடையை எடுத்து கொடுத்து,


“இத போட்டு பாரு” என்றாள்.


“மகி”


“போடா போய் போட்டு பாரு” என்று அவனை உடை மாற்றும் அறைக்குள் வம்படியாக தள்ளி விட்டு வந்தாள். அதுவும் இல்லாமல் அவனுக்கு தெரியாமல் இன்னொரு செட் உடைகளை அவள் பில் போட்டு வாங்கி கொள்ள,


“ஒன்னு வாங்குன சரி... எதுக்கு இன்னொன்னு... நீ பண்றது சரியே இல்ல மகி” என்றவன் அவளை முறைக்க,


“இப்ப எதுக்கு முறைக்குற... உனக்கு வேலை கிடைச்சதும் இந்த காசை எனக்கு திருப்பி கொடுத்துடு” என்றாள்.


அப்போதும் அவன் அவளை கடுப்புடன் பார்க்க, “சரி வேண்டாம்... நீயும் எனக்கு டிரஸ் வாங்கி கொடுத்துடு” என்றதும் அவன் ஒரு மாதிரி சமாதானமாகி பைக்கில் அவள் பின்னோடு அமர்ந்து கொண்டான்.


அவனை அந்த அலுவலகத்தில் வாசலில் நிறுத்தியவள், “ஆல் தி பெஸ்ட்” என்று கை குலுக்கி வாழ்த்த அவன் படபடப்புடன் உள்ளே சென்றான்.


இது போன்ற பெரிய நிறுவனங்களில் நேர்காணல்களை எதிர்கொள்ள கூட அவனுக்கு படபடப்பாக இருக்கும். அவன் படித்த அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆங்கிலம் ஒரு பாடமாக இருந்தது. அவ்வளவுதான். ஆனால் அதனை பேசுவதில் அவனுக்கு எப்போதுமே சிரமம்தான்.


அங்கே வந்து நின்றவன் தயக்கத்துடன் தனக்கு வந்து அழைப்பை பற்றி சொல்லி காத்திருக்க, ஒரு இளைஞன் வந்து அறிமுகம் செய்து அவனை அழைத்து சென்றான்.


“என் பேர்தான் சிவா நான்தான் உங்களுக்கு ஃபோன் பண்ணேன்”


“ஓ நீங்கதான்” என்று பரஸ்பரம் தன்னை பற்றி அறிமுகம் செய்து கொண்ட விஜய் மேலும், “எனக்கு இங்கிலீஷ் சுமாராதான் சார் பேச வரும்” என,


“அது ஒன்னும் பிரச்சனை இல்ல... இங்க நம்மோட க்ளைன்ட்ஸ் எல்லாம் தமிழ்நாட்டுல இருக்கவங்கதான்... நீங்க தமிழ்லயே பதில் சொல்லுங்க... கொஞ்சம் தைரியமா தன்னம்பிக்கையா பேசுனா போதும்” என்றதும் விஜயிற்கு ஆசுவாசமாக இருந்தது.


சில நிமிடங்களில் அவனை அங்கிருந்த ஒருவர் நேர்காணல் செய்து முடிக்க, அவன் வெளியே வந்து காத்திருந்தான். அப்போது சிவா வந்து,


“நாளைல இருந்து நீங்க வேலைக்கு வந்து ஜாயின் பண்ணிக்கலாம் விஜய்... ஜாயினிங் லெட்டர்ல நாளைக்கு கொடுப்பாங்க... நீங்க நாளைக்கு வரும் போது உங்க ஒரிஜனல் செர்டிபிக்கேட்ஸ் எல்லாம் எடுத்துட்டு வாங்க” என்றவன் மேலும் அவன் சம்பளத்தை பற்றி தெரிவிக்க,


“நிஜமாவா சார்” என்று வியப்பாக,


“ஆமா” என்றவன் மேலும், “ஆனா என்னை சாருனு எல்லாம் கூப்பிடாதீங்க... விஜய்... ஒரு வகைல நாம அண்ணன் தம்பி முறை” என்றான்.


“என்ன?” என்றவன் விஜய் புரியாமல் பார்க்க,


“நான் உங்க அம்மா ஜெயதேவியோட அக்கா ஸ்ரீதேவி மகன்... பூரணிதான் என்கிட்ட சொல்லி உங்களுக்கு வேலை வாங்கி தர சொன்னா?” என அவன் முகம் இருண்டு போனது.


“பூரணியா?” என்றவன் அவனை அழுத்தமாக பார்க்க,


“ஆமா உங்களை ரொம்ப லவ் பண்றா விஜய்... நீங்க ஃபோன் பண்ணா கூட எடுக்கலயாம்... ரொம்ப வருத்தப்பட்டு பேசுனா” என்றவன் பேசி முடித்த மறுகணம்,


“எனக்கு இந்த வேலை வேண்டாம் சிவா” என்றான் விஜய்.


“என்ன? வேண்டாமா”


“நான் அந்த குடும்பத்து ஆளு இல்ல... நீங்களும் சொந்த பந்தம்னு எதுவும் எனக்கு செய்ய வேண்டிய அவசியமும் இல்ல... இதை பூரணிக்கிட்டயும் சொல்லிடுங்க” என்று கூறிவிட்டு அவன் திரும்பி செல்ல,


“விஜய் நில்லுங்க” என்று சிவா அவன் பின்னோடு சென்றான்.


“வீட்டு பெரியவங்க செய்றதுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இலல் விஜய்”


“என்னை தப்பா நினைச்சிக்காதீங்க சிவா.. எனக்கு வேண்டாம்... அந்த குடும்பத்துல யாரோட இரக்கமும் பச்சாதபமும் எனக்கு வேண்டாம்... எனக்காக நீங்க உங்க நேரத்தை ஒதுக்கி இவ்வளவு பண்ணி இருக்கீங்க... அதுக்கு ரொம்ப நன்றி” என்றவன் ஒரு கும்பிடு போட்டுவிட்டு அந்த அலுவலகத்தை விட்டு அக்ன்றுவிட்டான்.


சிவா அவன் செல்வதை பார்த்து விட்டு பூரணிக்கு அழைத்து தகவல் கூறவும் அவள் ரொம்பவும் வருத்தமானாள். அவள் வீட்டில் அவனுடன் தொடர்பில் இருக்க கூடாது என்று கண்டித்து சொல்லிவிட்டார்கள். அதை மீறி அவள் முந்தைய முறை பார்க்க வந்த போது அவள் வீட்டினரிடம் மாட்டி கொண்டாள்.


அதற்கு மேல் அவனிடம் செல்பேசியில் உரையாடுவதும் பிரச்சனையாகிவிட்டது. அப்படியே அழைத்தாலும் விஜய் அவன் எண்ணை பார்த்துவிட்டு ஏற்க மறுத்தான்.


வேறு யாராவது எண்ணிலிருந்து போட்டாலும் அவள் குரல் கேட்டதும் துண்டித்து விடுகிறான். அவனிடம் எப்படி தொடர்பில் இருப்பது என்று அவள் யோசித்த போதுதான் சிவாவிடம் பேசி அவனுக்கு வேலை வாங்கி தர சொன்னாள்.


ஆனால் அதுவும் இப்போது நடக்காமல் போய்விட்டது. அவள் என்ன செய்வது என்று புரியாத அழுத்தத்தில் இருக்க வீட்டிற்கு சென்று சேர்ந்த விஜய் உடையை களைந்து கட்டிலில் சோர்வுடன் விழுந்து கண்களை மூடி கொண்ட போது அவன் அம்மாவின் முகம் வந்தது.


“இப்ப எல்லாம் மகி நம்ம வீட்டுக்கு வர்றது இல்ல... ஏன் விஜய்” என்ற ஜெயதேவி இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பாக கேட்க அவன் பதில் சொல்ல முடியாமல் திணறிவிட்டு பின் பூரணியை காதலித்தது தொடங்கி அவனுக்கும் மகிக்கும் இடையிலான சண்டையை குறித்து மொத்தமாக சொல்லி இருந்தான்.


“என்னடா பண்ணி வைச்சு இருக்க... ஏன் டா நம்ம மகேஸ்வரியை விட நேத்து வந்த பூரணி உனக்கு முக்கியமா போயிட்டாளா” என,


“நான் எப்போம்மா மகி முக்கியம் இல்லன்னு சொன்னேன்” என்றவன் கேட்க,


“நீ செஞ்ச காரியம் அப்படிதான்டா இருக்கு... அந்த பொண்ணு உன் மேல கோபப்பட்டு சண்டை போட்டதுல ஒன்னும் தப்பு இல்ல” என்றார்.


“அப்போ மகி பண்ணது கரெக்ட்ங்குறியா?”


“பின்ன”


“ம்மா... இல்ல ம்மா அவ”


“நீ எதுவும் பேசாத... நான் சொல்றதை கேளு”


அவன் அமைதியாக அவரை பார்க்க, “நல்ல வேலை தேடிக்கோ... கொஞ்சம் காசு பணம் சேர்த்து வைச்சுக்கோ... மகேஸ்வரி வீட்டுல போய் நான் முறையா பேசுறேன்” என்றதும் அவன் அதிர்ந்து,


“ம்ம்மா என்னம்மா பேசுற நீ... மகி என் பிரண்டு ம்மா” என்றான்.


“அவதான் உனக்கு பொருத்தமா இருப்பா”


“அப்படி எல்லாம் பேசாத ம்மா... சத்தியமா அவளை என்னால அப்படி யோசிச்சு கூட பார்க்க முடியாது... அவளும் அப்படித்தான்... நீ இப்படி பேசுனனு தெரிஞ்சாலே அவ ரொம்ப காண்டாயிடுவா... இனிமே இப்படி எல்லாம் பேசி வைக்காத” என்றவன் அன்று அவரிடம் கண்டனமாக சொன்னதை இப்போது யோசித்தால் வேறு மாதிரியாக தோன்றியது.


மகேஸ்வரி சொன்னது போல எல்லாமே மாற்றம் பெறலாம். மனிதர்கள் மனங்கள் நம் சிந்தனைகள் எல்லாம் மாறலாம்.


அப்போது விஜயின் சிந்தனையை களைக்கும் விதமாக அவன் செல்பேசி ரீங்காரமிட அதனை எடுத்து பார்த்தான். மகேஸ்வரிதான் அழைத்திருந்தான்.


‘நூறு வயசுடி உனக்கு’ என்று சொல்லி கொண்டே அழைப்பை ஏற்று காதில் வைக்க,


“இன்டர்வியூ என்னாச்சு?” என்று விசாரித்தவள், சில நொடிகள் அமைதி காத்தவன் பின், “கிடைக்கல” என்று கூற,


“சரி விடு பார்த்துக்கலாம்... ஆமா சாப்பிட்டியா?” என்றாள்.


“இல்ல”


“ஒழுங்கா எழுந்து போய் சாப்பிடு... சோகமா பீல் பண்ணிட்டு படுத்திருக்காத... இது இல்லனா வேற வேலை” என்றவள் சமாதானம் கூற,


“ம்ம்ம்ம்” என்றான்.


“சரி சரி போய் சாப்பிடு... நான் ஃபோனை வைக்கிறேன்... சாய்ந்திரமா கூப்பிடுறேன்” என்று விட்டு அழைப்பை துண்டித்தாள்.


அவனுக்கு சாப்பிட தோன்றவில்லை. மீண்டும் கண்களை மூடி படுத்து கொண்டான். ஆனால் இப்போது அவன் அம்மாவின் முகம் வரவில்லை. இமைகளுக்கு இடையில் மகேஸ்வரி வந்து நின்றாள்.

0 comments

コメント

5つ星のうち0と評価されています。
まだ評価がありません

評価を追加
© KPN NOVELS COPY PROTECT
bottom of page