Kanavar Thozha - 6
- Monisha Selvaraj
- Nov 14, 2023
- 8 min read
6
மகேஸ்வரி அடித்துப் பிடித்து விஜயின் வீட்டிற்கு ஓடிச் சென்று பார்க்க, அவனோ தன் குடித்தன அறைக்கு வெளியே இருந்த வெட்டவெளியில் தன்னந்தனியாக அமர்ந்திருந்தான்.
அவ்விடத்தில் காலை வெயில் சுளீரென்று அடித்து கொண்டிருக்க, கால்களை மடித்து அதில் தன் முகத்தை புதைத்திருந்தான் விஜய். அவன் நிலைகுலைந்து அமர்ந்திப்பதை பார்த்த கணமே அவள் உள்ளம் பதறியது.
அவனை நெருங்கி சென்றவள் “விஜி” என்று அவன் தோளை தொட்டதுமே அவன் உடல் பலமாக குலுங்கியது. அவன் அழ ஆரம்பித்துவிட்டான்.
அந்த நொடியே அவன் அருகே சரிந்து அமர்ந்தவள், “என்னடா ஆச்சு... எப்போடா” என்று கேட்க அவன் அவளை நிமிர்ந்து பாராமல்,
“நைட் திரும்பவும் மூச்சு திணறல் அதிகமாகி” என்று மேலே பேச முடியாமல் நிறுத்திவிட்டான்.
“நைட்டேவா... கடவுளே!” என்று வாயை மூடி கொண்டு அழுதவளுக்கு கடைசி கடைசியாக பார்த்த அவரின் புன்னகை முகம் நினைவு வந்தது. எத்தனை மோசமான உடல் நிலையிலும் அவர் புன்னகைத்ததுதான் அவள் பார்த்திருக்கிறாள். தன் வலிகளை மறைத்து கொள்ள அவர் புன்னகைக்கிறாரா அல்லது அதுவே அவருடைய வழக்கமா என்று அவளுக்கு தெரியாது.
ஆனால் அவள் எப்போது யோசித்தாலும் அவள் நினைவில் நிற்பது மலர்ந்த அவர் முகம்தான்.
அவளாலேயே அவரின் இழப்பை தாங்க முடியவில்லை எனும் போது விஜய் எப்படி தாங்கி கொள்ள போகிறான் என்பதை அவளால் யோசித்து பார்க்க கூட முடியவில்லை. அவள் உள்ளம் நடுங்கியது.
நண்பனின் தோளின் மீதிருந்த கையை அழுத்தி, “சரி விஜி எழுந்து வா... இங்கேயே உட்கார்ந்துட்டு இருந்தா என்ன அர்த்தம்... அம்மாவுக்கு செய்ய வேண்டியதெல்லாம் நாம செய்ய வேண்டாமா?” என்று கூற,
“நானே எல்லாம் செஞ்சு முடிச்சிட்டேன்” என்று நிமிர்ந்தவன் முகமெல்லாம் கண்ணீரால் நனைந்திருந்தன. கண்கள் உப்பி சிவந்திருந்தன. அவன் சொன்னதை முழுவதுமாக நம்ப முடியாமல்,
“என்னடா சொல்ற... செஞ்சிட்டியா... எப்போ... யாருக்கும் சொல்லலயா?” என்று அவள் அதிர்வுடன் வினவினாள்.
“யாருக்கு சொல்லணும்... யார் இருக்கா... எங்களுக்கு யாருமே இல்லையே... எனக்கு எங்க அம்மா... எங்க அம்மாவுக்கு நான்... இப்போ அவங்களும் போயிட்டாங்க... இப்போ நான் மட்டும்தான் இருக்கேன்” என்றவன் விரக்தியுடன் பேச அவள் கண்களில் கண்ணீர் நிறைந்து வழிந்தது.
அவன் கரத்தை அழுந்த பற்றி கொண்டவள், “ஏன் இப்படி பேசுற விஜி”
“அதானே உண்மை மகி... எங்களுக்கு யாரும் இல்லைதானே?” என்று சொல்லி அவள் கண்களை அவன் நேராக பார்த்தான். அந்த வார்த்தையும் பார்வையும் அவளையும் சேர்த்து குத்தியதாக உணர்ந்தவள்,
“எனக்கு புரியுது... என் மேல உனக்கு கோபம்... ஆனா அதுக்காக அக்கம் பக்கத்துல கூட யாரையும் கூப்பிடலயா நீ” என்று கேட்டாள்.
“அதான் நான் தெளிவா சொன்னேனே எங்களுக்கு யாரும் இல்லன்னு... எங்களுக்கு யாரும் இல்ல மகி... யாரும்ம்ம்ம்மே இல்ல” என்றவன் சீற்றமாக கத்தி கூச்சலிட,
“சரி சரி விஜி விஜி” அவள் பதட்டத்துடன் அவன் தோளை தட்டி கொடுக்க அவன் அமைதியானான்.
“நீ இவ்வளவு டென்ஷனாகுறனா என்னமோ நடந்து இருக்க... என்னாச்சு என்கிட்ட சொல்லுடா” என்று அவள் அவனை பொறுமையாக விசாரிக்க எதுவும் பேசாமல் அவன் அழுத்தமான மௌனத்துடன்அமர்ந்திருந்தாள்.
“என்னாச்சு விஜி... சொல்லு” என்று அவள் மீண்டும் கேட்டாள்.
தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டவன் மெதுவாக பேச துவங்கினான். “அம்மாவுக்கு மூச்சு திணறல் அதிகமாகவும் நைட்டு ஹாஸ்பெட்டில் கூட்டிட்டு போனேன்... அங்கேயே அவங்க உயிர்” என்று நிறுத்தி தலையை கவிழ்ந்தபடி அழுதவன் மீண்டும் தன்னை தேற்றி கொண்டு தொடர்ந்தான்.
“வண்டில அவங்க உடம்பை வீட்டுக்கு கொண்டு வந்த போது வீட்டு ஓனர் அம்மா உடம்பை வீட்டுல வைக்க கூடாதுன்னு சொல்லிட்டாரு” என, அவள் அதிர்ந்துவிட்டாள்.
“என்ன சொல்ற... இப்படி கூடவா மனுஷங்க இருப்பாங்க... சை”
“அவங்களயும் தப்பு சொல்ல முடியாது மகி... அவங்க பொண்ணுக்கு இன்னைக்கு நிச்சயதார்த்தம்” என, “அட கடவுளே” என்றவள் தலையில் கை வைத்து கொண்டாள்.
“எனக்கு அந்த நிமிஷம் என்ன பண்றதுனே தெரியல... எங்க போவேன்... என்ன செய்வேன்... எங்களுக்கு யார் இருக்கா” என்றவன் சொல்வதை எல்லாம் கேட்டு அவனை இரக்கமாக பார்த்தவள் சட்டென்று,
“ஆமா பூரணிக்கு ஃபோன் பண்ணியா... அவங்களும் உனக்கு சொந்தம்தானே சொன்ன” என்றதும் வேதனையுடன் தலையை அசைத்தவன்,
“அக்கம் பக்கத்துல இருக்கவங்களுக்கு இருந்த பச்சாதாபம் கூட அவங்களுக்கு இல்ல மகி” என்றான்.
“என்னடா சொல்ற? அவங்க என்ன சொன்னாங்க”
“நான் பூரணிக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னதும்... அவ அவங்க வீட்டுல பேசி இருக்கா... ஆனா அவங்க குடும்பத்துல யாரும் இப்பவும் எங்க அம்மாவை ஏத்துக்க தயாரா இல்ல... அம்மா செத்த பிறகும் கூட அவங்கள யாரும் ஏத்துக்க தயாரா இல்ல... அம்மா உடம்பை கூட அங்க எடுத்துட்டு வர கூடாதுன்னு சொல்லிட்டாங்க” என்று அவன் சொன்னதை கேட்டவள் வாயாடைத்து போய் அமர்ந்திருந்தாள்.
என்ன சொல்வதென்றே அவளுக்கு புரியவில்லை. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்றவள் எண்ணி எண்ணி வேதனையுற அவன் மேலும்,
“செத்து போன பிறகு கூட எங்க அம்மாவை மன்னிக்க அவங்க தயாரா இல்ல... அப்படி என்ன எங்க அம்மா தப்பு பண்ணிட்டாங்க மகி... எங்க அப்பாவை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க... ஆனா ஒரே ஒரு வருசம் கூட அம்மா அப்பா கூட வாழல...
தெரியல... எங்க அம்மாவோட கல்யாணம் ரொம்ப பெரிய தப்பான முடிவா இருக்கலாம்... ஆனா அதுக்காக அம்மாவோட செத்த உடம்பை கூட கொண்டு வர கூடாதுனு சொல்றளவுக்கு அம்மா அப்படி என்ன மோசமான தப்பு செஞ்சுட்டாங்க?” என்று கேட்டு உதடுகள் துடிக்க வேதனையும் கோபமுமாக பேசியவன் சட்டென்று அமைதி நிலைக்கு சென்று,
“இதுக்கு மேல யார்கிட்டயும் கெஞ்ச எனக்கு மனசு வரல... எங்க அப்பா இறந்து போன பிறகு எங்க அம்மாதான் என்னை ஒத்த ஆளா தனியா நின்னு வளர்த்தாங்க... அப்பா குடும்பத்துலயும் யாரும் அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணல
அவங்க பாவம் வீட்டு வேலை செஞ்சுதான் என்னை காப்பாத்துனாங்க... ஒரு நாள் கூட அவங்களுக்கு லீவே கிடையாது... ஓய்வில்லாம அவங்க எவ்வளவு உழைச்சாங்கனு எனக்கு தெரியும்... ஆனா எவ்வளவு கஷ்டத்துலயும் அவங்க சுயமரியாதையை விட்டு கொடுத்தது இல்ல
நானும் அதை விட்டு கொடுக்க விரும்பல... அதான் நானே எங்க அம்மா உடம்பை மின் மயானத்துக்கு எடுத்துட்டு போய் எரிச்சுட்டு வந்துட்டேன்” என்று அவன் சொன்னதை எல்லாம் கேட்டு கிரகித்து கொள்ளவே அவளுக்கு சில நொடிகள் பிடித்தது.
மெல்ல தன்னை நிலைப்படுத்தி கொண்டவள் அவன் புறம் திரும்பி, “ஏன்டா... ஏன்... நைட்டே எனக்கு ஒரு ஃபோன் பண்ணி சொல்லி இருக்கலாம் இல்ல” என்று அவள் வருத்தமாக கேட்டாள்.
“அந்த நைட்டு நேரத்துல நான் உனக்கு ஃபோன் பண்ணா உனக்கு என்ன மாதிரி பிரச்சனை வரும்னு எனக்கு தெரியும் மகி” என்று அவனோ நிதானமாக பதில் கூற அவளுக்கு கோபமேறியது.
“என்ன வேணா பிரச்சனை வரட்டும்... நீ எனக்கு நைட்டே கூப்பிட்டு இருக்கணும்... கூப்பிட்டு இருக்கணும்... இப்படினு சொல்லி இருக்கணும்” என்றவள் உக்கிரமாக அவன் சட்டை பிடித்து உலுக்க,
“சொன்னா மட்டும் உன்னால என்ன பண்ண முடியும் மகி” என்று கேட்டான்.
“ஏதாவது பண்ணி இருப்பேன்டா... அம்மாவுக்காக உனக்காக நான் வந்து நின்னு இருப்பேன்... கண்டிப்பா வந்து நின்னு இருப்பன்” என்றவள் ஆவேசமாக பேச,
“அப்போ எங்க அம்மா செத்தாதான் நீ வந்து நிப்ப இல்ல” என்றவன் கேட்ட கேள்வியில் உறைந்து போனவள் கரம் அப்படியே அவன் சட்டை பிடியிலிருந்து தளர்ந்தது. அப்படியே அவன் தோள் மீது சாய்ந்தவள்,
“சாரி விஜி சாரி சாரி சாரி... என்னை மன்னிச்சுடு... நான் உன்கிட்ட சண்டை போட்டிருக்க கூடாது... தப்புதான்” என்று கண்ணீர் விட்டு கதறினாள்.
அவள் தோளை அணைத்து பிடித்து ஆறுதலாக தடவி கொடுத்தவன், “நீ மட்டும் இல்ல... நானும்தான் தப்பு செஞ்சுட்டேன்... பூரணியை காதலிச்சு இருக்க கூடாது... என் தகுதியை மறந்து நான் அவளை காதலிச்சு இருக்க கூடாது” என்று கூறவும் அவள் கண்ணீர் உறைந்து போனது. அவள் அவன் சொன்னதை நம்ப முடியாமல் ஏறிட்டாள்.
இருவரும் தங்கள் பார்வைகளை பரிமாறி கொள்ள அவள் மனம் எங்கோ அவனிடத்தில் நழுவி கொண்டிருந்தது. கடலை போன்ற ஆழமான அகலமான அவன் விழிகளுக்குள் அவள் தொலைய பார்த்து
ஒரு மாதிரி சுதாரித்து கொண்டு தன் பார்வையை திருப்பி கொண்டு, “வெயில் ஜாஸ்தியாகிடுச்சு விஜி... நம்ம உள்ளே போலாம் வா” என,
“இல்ல நான் வரல... அம்மா இல்லாம என்னால அந்த வீட்டுக்குள்ள வர முடியாது” என்று வெகுநேரம் முரண்டியவனை பேசி சமாதானம் செய்து உள்ளே அழைத்து வந்தாள்.
அவன் மிரட்சியுடன் தன் வீட்டிற்குள் அடி எடுத்து வைக்க, “போ முதல நீ குளிச்சிட்டு வா... நான் உனக்கு சூடா டீ போட்டு வைக்கிறேன்” என்றாள்.
“மகி” என்றவன் பதட்டமாக அவளை பார்க்க, “போ விஜி” என்று அவனை குளியலறைக்குள் அனுப்பி விட்டு வந்தவள் வீட்டை மசுத்தமாக பெருக்கி ஈரதுணியால் துடைத்தாள்.
அங்கிருந்த மேஜையின் மீது அம்மாவின் சிறிய படத்தை வைத்து அதற்கு அருகில் விளக்கு ஏற்றி வைத்தவள் கண்களில் கண்ணீரில் சொட்டியது.
‘நான் விஜி மேல கோபமா இருந்தேன்னுட்டு முட்டாள்தனமா உங்களையும் வந்து ஒரு தடவை கூட பார்க்காம போயிட்டேன்... என்னை மன்னிச்சுடுங்கமா’ என்று மன்னிப்பு வேண்டி நிமிர்ந்த போது விஜய் குளியலறையிலிருந்து குரல் கொடுத்தான்.
“மகி கொஞ்சம் டவலும்... ட்ரஸும் எடுத்துட்டு வர்றியா” என,
“ஆ வர்றேன்” என்றவள் அவன் அலமாரியிலிருந்த அவனுடைய பனியன் மற்றும் ஷார்ட்ஸ் எடுத்து சென்று அந்த குளியலறை கதவின் மீது போட்டுவிட்டு தேநீர் தயாரிக்க சென்றாள்.
அங்கிருந்த பாத்திரங்களை திறந்து பார்க்க அதில் பால் இல்லை. கிட்டத்தட்ட எந்த டப்பாவிலும் எதுவுமே இல்லை.
தலையை துவட்டி கொண்டே வெளியே வந்தவன் வீட்டை அவள் துடைத்து வைத்திருப்பதையும் அம்மாவின் சிறிய போட்டைவை வைத்து விளக்கேற்றி வைத்திருப்பதையும் பார்த்தான்.
அவன் மனம் நெகிழ்ந்து போனது. அவன் நன்றியுடன் தோழியை திரும்பி நோக்க அவளோ, “என்ன விஜி பால் இல்ல... சக்கரை இல்ல... எதுவுமே இல்ல” என்றாள்.
“ஆமான்டி இல்ல... இரு நான் போய் வாங்கிட்டு வந்துடுறேன்”
“பரவாயில்ல விடு... கோதுமை மாவு இருக்கு... நான் அதை கரைச்சு தோசை சுட்டு தர்றேன்” என்றவள் கூற,
“ஏய் அதெல்லாம் வேண்டாம்டி” என்றவன் சொல்வதை காதில் வாங்காமல் அவள் கோதுமை மாவை பாத்திரத்தில் கொட்டி கரைக்க,
“மகி வேண்டாம்னு சொல்றேன் இல்ல” என்றான்.
“நீ கொஞ்ச நேரம் கம்னு இரு” என்று சொல்லி விட்டு மாவை கரைத்து தோசை சுடுவதற்கு தயார் செய்து கல்லை வைக்க, அப்போது அவள் செல்பேசி ரீங்காரமிட்டது.
அவள் செய்கையை பார்த்து கொண்டிருந்தவன், “என்ன சத்தம் உன் ஃபோனா அடிக்குது... ரிங்டோன் மாத்திட்டியா” என,
“ஆமா என் ஃபோன்தான்... என் பேக்ல இருக்கு கொஞ்சம் எடுத்துட்டு வாயேன்” என்றதும் அவள் கைப்பையை திறந்து அவள் செல்பேசியை அவளிடம் எடுத்து கொடுத்தான்.
அதில் ஒளிர்ந்த எண்ணை பார்த்ததும், “அட கடவுளே... இந்த டென்ஷன்ல காலேஜ்க்கு லீவ் இன்பார்ம் பண்ண மறந்துட்டேன்” என்று உடனடியாக எடுத்து தான் இன்று வேலைக்கு வர முடியாததற்கான காரணத்தை உரைத்துவிட்டு அழைப்பை துண்டிக்க,
“நீ பேசாம போ மகி... நான் பார்த்துக்கிறேன்” என்றான் விஜய்.
“வாயை மூடுறியா” அவனை அதட்டி விட்டு அவள் தோசையை வார்க்க ஆரம்பிக்க அவள் அருகில் நின்றவன்,
“ஆமா ஏதோ காலேஜ்னு சொன்ன... காலேஜ்லயா வொர்க் பண்ற” என்றான்.
“ஆமா ஏ ஆர் எஸ் காலேஜ்ல... அங்கதான் அட்மினா வொர்க் பண்றேன்”
“சம்பளம் ஓகேவா”
“பெரிய வித்தியாசம் ஒன்னும் இல்ல... ஆனா நேரா நேரத்துக்கு வீட்டுக்கு போயிடலாம்” என்றவள் தட்டில் தோசையை சுட்டு அவனிடம் நீட்ட, “மொத்தமா சுட்டு எடுத்துட்டு வா... இரண்டு பேரும் சாப்பிடலாம்” என்றான்.
“நான் சாப்பிட்டுதான் வந்தேன்”
“பரவாயில்ல எனக்கு கம்பனி கொடு” என, அவள் அதன் பின் இரண்டு தட்டு எடுத்து அவளுக்கு ஒன்றும் அவனுக்கு மூன்று தோசைகளையும் வைத்தாள்.
அதன் பின் இருவருமாக அமர்ந்து கொள்ள மகேஸ்வரி சாப்பிட்டு கொண்டே, “ஆமா உனக்கு கடைல எப்படி போகுது... அந்த சிடுமூஞ்சி சூப்பர் வைஸர் இன்னுமும் உன்கிட்ட பிரச்சனை பண்ணிட்டு இருக்கானா? நான் வேலை விட்டதுல வேற ரொம்ப காண்டுல இருப்பான்” என்று கேட்க,
“அந்த கோபத்தை எல்லாம் என் மேல காண்பிச்சுட்டான்” என்றான்.
“என்ன சொல்ற விஜி”
“என் மேல திருட்டு பட்டம் கட்டி வேலையை விட்டு அனுப்பிட்டான்” என்றவன் சாப்பிட்டு கொண்டே சாதாரணமாக கூற அவள் திடுக்கிட்டாள்.
“திருட்டு பட்டம் கட்டினானா”
“பில்லிங்ல ஐநூறு ரூபாய் குறைச்சு தப்பா கணக்கு காட்டிட்டனு சொல்லி மேலிடத்துல புகார் பண்ணிட்டான்... நான் செய்யலனு எவ்வளவோ சொல்லியும் முதலாளி நம்பல... என்னைய வேலையை விட்டு அனுப்பிட்டாரு”
“பொறுக்கி நாய்... அவனை கொல்ல வேண்டாம்” என்றவள் மனம் பொறுக்காமல், “அவன் எல்லாம் உருப்படவே மாட்டேன்... நாசமாத்தான் போவான்... ஏதேச்சும் குப்ப லாரில இடிச்சு” என்று சபித்து கொண்டிருக்க,
“ஏய் ஏய் நிறுத்து... இதுக்காக போய் அவன் குப்ப லாரில அடிப்பட்டு சாகணுமா... விடுடி... இதெல்லாம் நடந்து ஒரு வாரம் மேலாகிடுச்சு” என்றவன் அவளை சமாதானம் செய்தான்.
இருப்பினும் அவள் இயல்பு நிலைக்கு மாறாமல் முகத்தை உம்மென்று வைத்து கொண்டிருக்க, “மகி தோசை ரொம்ப நல்லா இருக்கு... சாப்பிடு” என,
“எனக்கு ஒன்னும் வேண்டாம்.. நீ சாப்பிடு” என்றவள் தன் தட்டிலிருந்த தோசையையும் அவனுக்கு வைத்தாள்.
“ஏய் என்னால இவ்வளவு சாப்பிட முடியாதுடி” என அவள் சோகமாக சுவற்றில் சாய்ந்து கொண்டாள்.
“மகி... அந்த விஷயத்தை விடு... இந்த வேலை இல்லனா வேற வேலை... அதுவும் இல்லாம இன்னைக்கு நடந்ததை விடவா அது பெரிய இழப்பு” என்று தெரிவிக்க அப்போதும் அவள் மனம் சமாதானம் ஆகவில்லை.
“இல்லடா என்னால தாங்க முடியல.. அதுவும் உன் பேர்ல திருட்டு பட்டம் கட்டி இருக்கான்... பரதேசி... என்னாலதான் அவன் உன்னை அப்படி பழிவாங்கிட்டான்... என்னாலதான் உனக்கு வேலை போச்சு... எல்லாம் என்னாலதான் என்னாலதான்” என்று அவள் குழந்தை போல அழுது தேம்பினாள்.
அவள் முகவாயை பிடித்து தன் புறம் திருப்பியவன், “ஏய் லூசு... நான் உன்னாலனு சொல்ல... உன் மேல இருந்த காண்டுலனு சொன்னேன்... அதுவும் இல்லாம அவனுக்கு என் மேலயும் காண்டுதான்” என்று சொன்ன போதும் அவள் அழுகையை நிறுத்தவில்லை.
“ஏய் நான்தான்டி அழணும்... நீ என்னை சமாதானப்படுத்தணும்... ஆனா எல்லாம் தலை கீழா நடக்குது” என்றவன் கடுப்பாக கூறியதை கேட்டு அவள் அழுகை நின்றுவிட்டது.
“சாரி சாரி நான் அழல... நீயும் அழாத” என்றவள் கூற,
“அப்போ சாப்பிடலாம் வா” என அவள் தலையசைத்து அவனுடன் அமர்ந்து சாப்பிட்டு முடித்து தட்டை கழுவி வைத்தாள். அவன் சுவற்றில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தான்.
நண்பனுக்கு துணையாக அவளும் வந்து அவன் அருகே அமர்ந்து கொள்ள அவன் அவள் தோளில் தலையை சாய்த்து கொண்டான். அவன் பார்வை நேராக தன் அம்மா படுத்திருந்த கட்டிலை வெறித்தன.
“கட்டில இப்போ கூட அம்மா படுத்துக்கிட்டு இருக்க மாதிரியே இருக்க மகி... அதுவும் அவங்க என்னையே பார்த்துட்டு இருக்க மாதிரியே இருக்கு... நான் எப்படி இந்த வீட்டுல தனியா இருக்க போறேன்னு தெரியல” என்றவன் கூற,
“சரியாயிடும் விஜி... எல்லாமே சரியாயிடும்” என்றவள் திரும்ப திரும்ப சொன்ன போதும் எப்படி இது சரியாகும் என்று அவளுக்கும் தெரியவில்லை. வேற என்ன சொல்லி அவனை சமாதானம் செய்வது என்றும் அவளுக்கு புரியவில்லை.
அவனோ திடீரென்று உணர்ச்சிவயப்பட்டவனாக கட்டில் அருகே நகர்ந்து சென்று, “மா மா என்னை விட்டு போயிட்டியே மா... நீ இல்லாம நான் இனிமே என்னமா பண்ணுவேன்... என்னம்மா பண்ணுவேன்” என்று உச்ச நிலைக்கு போய் கதற ஆரம்பித்து விட அவன் செய்கையை பார்த்தவளுக்கு துக்கம் தொண்டை அடைத்தது.
அவன் அருகே வந்து கைகளை பற்றி கொண்டு, “விஜி அழாதே விஜி” என்று அவனை அமைதிபடுத்த முயல,
“அழ கூடாதுன்னு நானும் ரொம்ப முயற்சி பண்றேன்... ஆனா என்னால முடியல... முடியல மகி... அம்மா போயிட்டாங்க மகி... என்னை விட்டு போயிட்டாங்க மகி” என்று திரும்ப திரும்ப சொல்லி அழுது அரற்றினான்.
“விஜி ப்ளீஸ் விஜி அழாதே” என்று அவன் கன்னங்களை பற்றி துடைத்துவிட அவன் அழுகை நிற்கவில்லை. அவள் மடியில் அவன் தலை சாய்த்து கொள்ளவும், அவனாக அழுது தீர்க்கட்டும் என்று எதுவும் பேசாமல் நண்பனின் முதுகை தடவி கொடுத்தாள். வெகுநேரம் அழுது தீர்த்தவனின் விம்மல் ஒலி மெது மெதுவாக குறைந்து தேய்ந்துவிட்டது.
இரவெல்லாம் ஓடி ஓடி அலைந்து திரிந்து அழுது களைத்து போனவனின் உடலும் மனமும் அப்போது கொஞ்சமாக ஓய்ந்திருக்க, அவள் கட்டிலின் மீதிருந்த தலையணையை எட்டி எடுத்து தரையில் ஓரமாக போட்டு அவன் தலையை மெதுவாக தலையணைக்கு இடமாற்றம் செய்ய முயன்றாள்.
ஆனால் அவன் உறக்கம் களைந்துவிட போகிறது என்ற அச்சத்துடன் நிதானமாக அவன் தலையை பற்றி நகர்த்தி தலையணை மீது வைத்து விட்டு நிமிர்ந்து கொள்ள எத்தனிக்கும் போது அவளின் புடவையின் முந்தானை அவன் தலைக்கும் தலையணைக்கும் இடையில் மாட்டி கொண்டிருந்தது.
“கடவுளே” என்று தலையில் அடித்து கொண்டவள் மெது மெதுவாக அதனை எடுக்க முயன்ற கணத்தில் தடுமாறி அவன் முகத்திற்கு நேராக சரிந்தாள். அந்த கணம் அவனை அத்தனை நெருக்கத்தில் பார்த்த போது அவள் உள்ளம் தடுமாறியது.
மிகவும் வசீகரமான முகமைப்பு அவனுடையது. எதிரே இருப்பவர்களை நொடி பொழுதில் ஈர்க்கும் வல்லமை அவனுக்கு உண்டு. அவனை கடந்து செல்லும் பெண்கள் மறுமுறை அவனை திரும்பி பார்ப்பதை கவனித்திருக்கிறாள்.
அவனுடன் அவள் நட்பாக பேசி கொண்டாலும் சிலர் அவனுடன் அவள் நெருக்கமாக இருப்பதில் பொறாமையுடன் அவளை நோக்குவதையும் உணர்ந்திருக்கிறாள்.
ஆனால் அந்த வசீகரமான முகத்தையும் கண்களையும் கடந்த எட்டு வருடத்தில் அவள் சலிக்க சலிக்க பார்த்திருந்த போதும் எந்தவொரு நொடிகளிலும் அவன் மீது அவளுக்கு ஈர்ப்பு ஏற்பட்டதில்லை. ஆனால் இத்தனை நாளில் இல்லாமல் இன்று அவனின் அந்த முகத்தை பார்த்த கணம் அவள் மனம் சலனப்பட்டது.
சில நிமிடங்கள் அப்படியே கண் இமைக்காமல் பார்த்திருந்தவள் தன் மனம் செல்லும் பாதையை உணர்ந்து துணுக்குற்று மெது மெதுவாக அவன் தலைக்கு கீழாக மாட்டியிருந்த முந்தானையை எடுத்து கொண்டு அவனை விட்டு விலகி வந்து அமர்ந்தாள்.
இருப்பினும் அவள் விழிகள் அவனை தவிர வேறு எங்கேயும் நகாவில்லை. கட்டிலில் அப்படியே தலையை மட்டும் சாய்த்து கொண்டு தரையில் படுத்திருந்த அவனை பார்த்தபடியே இருந்தாள்.
யாரோ படிக்கட்டில் நடந்து வரும் சத்தம் கேட்கவும் அவள் கவனம் சிதறியது.
அவள் யாரென்று எட்டி பார்க்க பூரணி வந்து கொண்டிருந்தாள். அவளை பார்த்த கணம் எரிச்சலான மகேஸ்வரி அவளை வீட்டிற்குள் விடாமல் அவசரமாக எழுந்து வந்து,
“இப்போ எதுக்கு வந்திருக்க நீ” என்று தடாலடியாக மறித்து நின்றுவிட்டாள். பூரணியின் முகமும் அழுது சிவந்திருந்தது. அவள் கை குட்டையால் முகத்தை துடைத்து கொண்டே உள்ளே எட்டி பார்த்து,
“நான் விஜயை பார்க்கணும்” என்று கூற,
“எதுக்கு... உன் குடும்பம் பண்ணதெல்லாம் போதாதா... நீ வேற வந்து அவனை பார்த்து டென்ஷன் படுத்தணுமா” என்றாள்.
“என் குடும்பம் செஞ்சதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது... நான் அத்தை மேலயும் விஜய் மேலயும் பாசமாதான் இருந்தேன்”
“உன் பாசத்துனால இங்க யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்ல.. ஒழுங்கா போயிடு” எனவும் பூரணியின் முகம் இறுகியது. அவளும் சீற்றமாக, “அது என்ன நீ சொல்றது... நான் விஜயை பார்க்க போவேன்” என்று கூற மகேஸ்வரி அவளை உள்ளே வர விடாமல் வழியில் நின்று,
“இப்பதான் அவன் அழுது முடிச்சு கொஞ்சம் அமைதியா படுத்திருக்கான்... உன்னை பார்த்தனா திரும்பவும் அழ ஆரம்பிச்சுடுவான்” என்றாள். பூரணியின் முகம் சோர்ந்துவிட்டது. அவனை மீண்டும் வேதனைப்படுத்த வேண்டாமென்று நினைத்தவள்
வீட்டிற்குள் ஏமாற்றத்துடன் மீண்டும் எட்டி பார்த்து விட்டு பின் மகேஸ்வரியை கோபமாக முறைத்து, “இந்த விஷயத்துல நீ என் கூட போட்டி போடணுமா மகேஸ்வரி” என்று கேட்டு வைத்தாள்.
“சீ... என்ன பேசுற... விஜய் என் பிரண்டு... அவன் எப்பவும் எனக்கு பிரண்டா இருப்பான்... இதுக்காக நான் உன்கிட்ட போட்டி போட வேண்டிய அவசியம் எனக்கு இல்ல”
“நீ வெறும் அவனுக்கு பிரண்டுனா நானும் விஜயும் லவ் பண்றதுல உனக்கு என்ன பிரச்சனை... உனக்கு எங்க வலிக்குது”
“ஏய் பூரான்” என்றதும் அவள் பதிலுக்கு,
“ஏ கரன்ட்ல அடிப்பட்ட காகா” என்றாள்.
“சை உன்கிட்ட மனுஷன் பேசுவானா?” என்றவள் கதவை மூட போக,
“நான் தோத்து போக மாட்டேன்... முக்கியமா உன்கிட்ட தோத்து போக மாட்டேன் மகேஸ்வரி... நான் விஜயை கல்யாணம் பண்ணுவேன்” என்றதும் மகேஸ்வரி தலையிலடித்து கொண்டு,
“பைத்தியம் மாதிரி பேசாத... விஜய் அம்மா செத்த பிறகும் கூட அவங்கள ஏத்துக்க முடியாத உன் குடும்பம் உன்னையும் விஜயும் எப்படி ஏத்துக்குவாங்க” என்றாள்.
“அவங்க ஏத்துக்காட்டி போகட்டும்... ஆனா நான் விஜயை லவ் பண்றேன்... விஜயை நான் கல்யாணம் பண்ணுவேன்” என்று கூறிவிட்டு மேலும்,
“விஜய் விஷயத்துல நான் தோத்து போக மாட்டேன்” என,
“இதுல நான் உன் கூட போட்டிக்கு வரல ” என்று மகேஸ்வரி பதில் கூற,
“ஆனா நான் வருவேன்... உன்னையும் விஜயும் நான் பிரிச்சு காட்டுறேன்” என்றவள் சவாலாக கூறி கொண்டே படிக்கட்டில் இறங்கி சென்றுவிட்டாள்.
‘என்ன உளறிட்டு போது இந்த பைத்தியம்’ என்று சொல்லி கொண்டே வீட்டிற்குள் வந்தவள் ஆழ்ந்த உறக்க நிலையில் இருந்த விஜயை பார்த்தாள். பூரணி இறுதியாக சொன்னது அவள் மண்டையை குடைந்தது.
‘அவ ஏதோ லூசு மாதிரி உளறிட்டு போறா... நான் எதுக்கு அதை பத்தி யோசிச்சு கவலைப்படணும்’ என்று அவள் தனக்கு தானே என்ன சமாதானங்கள் சொல்லி கொண்டாலும் அவள் மனம் அதை ஏற்கவில்லை.
விஜயிற்கும் அவளுக்குமான நட்பு எங்கேயோ பாதை மாறிவிட்டதாக உணர்ந்தாள்.
Comments