Kanavar Thozha - 5
5
மகேஸ்வரி புது வேலையில் சேர்ந்து ஒரு மாதம் கடந்துவிட்டது. ஒரளவு அந்த வேலையும் இடமும் பழகிவிட்ட போதும் விஜயை பார்க்காமல் பேசாமல் இருப்பது அவளுக்கு என்னவோ போலிருந்தது. அவளுடைய தேகத்தின் ஒரு பாகத்தை இழந்துவிட்டது போல உணர்ந்தாள்.
தனக்கு அவன் மீதிருப்பது வெறும் நட்பு மட்டும்தானா? தமையன் எழுப்பிய இந்த கேள்விக்கு அவளுக்கு இப்போது வரை பதில் கிடைக்கவில்லை. அவர்கள் உறவை குறித்து இப்படியொரு சந்தேகம் எழுந்த விட்ட பின் அவனை இயல்பாக பார்க்க முடியுமென்று தோன்றவில்லை.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அதற்காகவே அவள் அந்த வேலையை விட்டு வந்தாள். அவனை பார்க்காமல் பேசாமல் இருக்க வேண்டுமென்று முடிவெடுத்தாள். தமையன் சொன்ன கல்லூரி வேலையில் அலுவலக பொறுப்பில் சேர்ந்தாள்.
அந்த கல்லூரிக்கான பயணமும் இப்போது இரயிலில் இல்லை. பேருந்தில்தான். ஆதலால் அவனை தப்பி தவறி கூட பார்க்கும் சூழல் அவளுக்கும் அமையவில்லை. ஆனால் பூரணியை அப்படி பார்க்காமல் எல்லாம் அவளால் தவிர்க்க முடியாது.
அப்படியாக ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளும் சந்தரப்பங்கள் வாய்க்கும் போதெல்லாம் இருவருமே எவ்வளவு முடியுமோ அவ்வளவு வெறுப்பை பரிமாறி கொண்டார்கள். வாய்சண்டைகள் போட்டு கொள்ளாவிட்டாலும் கண்களிரண்டும் உஷ்ணத்தை கக்கின. அதுவும் முன்பிருந்த பகை கோபம் வெறுப்பை விடவும் பன்மடங்கு அதிகமாக.
ஆனால் இவர்கள் இருவரின் பகையுணர்வில் நேரடியாக பாதிக்கப்பட்டது என்னவோ விஜய்தான்.
எப்போது மகேஸ்வரி அவனுக்கும் பூரணிக்குமான காதலை அறிந்தாலோ அன்றிலிருந்து அவனுக்கும் பூரணிக்கும் இடையிலான உறவில் விரிசல் விழ ஆரம்பித்திருந்தது.
இந்த நிலையில் அவனுக்கு விடுப்பிருந்த நாளில் பூரணி கடற்கரைக்கு வர சொல்லி அழைத்திருக்க, அவனும் சென்றிருந்தான். ஆனால் அவன் மனம் சுற்றியிருந்த சூழ்நிலையிலும் சரி. பூரணியிடமும் சரி. ஒன்றமுடியாமல் தவித்தது.
அவனுடைய நினைப்பு சிந்தனை முழுவதும் மகி மட்டுமே நிறைந்திருந்தாள். அவனின் உணர்வுகளை நினைப்பை அனைத்தையும் அவனை அறியாமலே அவள் ஆளுமை செய்தாள்.
ஆதலால் பூரணியின் காதல் சம்பாஷனைகள் எதிலும் அவன் ஆர்வமாக கலந்து கொள்ளவில்லை.
“நான் இங்க முக்கியமா பேசிட்டு இருக்கேன்... நீங்க என்ன யோசிச்சுட்டு இருக்கீங்க” என்றவள் அவனை கண்டனமாக கேட்கவும்.
“மகியை பத்தி” என்று தன் எண்ணத்தை வெளிப்படையாகவே கூறிவிட அவள் முகம் சிவந்தது.
“இப்போ எதுக்கு அவளை பத்தி” என்று கேட்கும் போதே,
“நான் மகியை பார்த்து பேசியே இரண்டு மூணு வாரத்துக்கு மேல இருக்கும்... அவ எனக்கு கால் பண்ணல... நான் கால் பண்ணாலும் எடுக்க மாட்டுறா” என்று அவன் தன் மனக்குமறலை கொட்ட ஆரம்பித்ததில் பூரணி உச்சபட்ச எரிச்சல் நிலைக்கு தள்ளப்பட்டாள்.
அதுவும் இல்லாமல் அவன் மகியை பற்றி பேசுவது இது ஒன்றும் முதல் முறை இல்லை. தனியாக அவர்கள் பார்த்து பேசும் நேரங்களில் அவன் பேசும் பத்து வார்த்தைகள் ஒரு வார்த்தை மகியாக இருப்பாள். அவள் இல்லாத ஒரு உரையாடல் என்று ஒன்று நிகழ்ந்ததே இல்லை.
அதுவும் தனக்கு அவளை பிடிக்காது என்று தெரிந்தும் பேசுகிறான் என்பதுதான் அவளின் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தியது. இருந்தும் அவன் மீது கொண்ட காதலுக்காக அவள் அதை எல்லாம் பொறுத்து கொண்டாள். ஆனால் இன்று அவளது பொறுமை சுக்குநூறாக நொறுங்கி போக,
“உங்களுக்கு நான் முக்கியமா இல்ல... அவளா விஜய்?” என்று அவள் தன் மனம் எண்ணத்தை நேரடியாகவே கேட்டும் விட்டாள். அந்த கேள்வியில் சீற்றமானவன்,
“இது என்ன முட்டாள்தனமான கேள்வி பூரணி” என்று பதிலுக்கு கேட்டு முறைத்து வைக்க,
“எனக்கு பதில் வேணும் விஜய்... அதுவும் இப்பவே... சொல்லுங்க உங்களுக்கு நான் முக்கியமா இல்லை அவளா?” என்றவள் பிடிவாதமாக இருந்தாள்.
அவன் பதில் பேசாமல் எதிரே இருந்த கடலலைகளை பார்த்தபடி பார்வையை திருப்பி கொண்டான்.
“விஜய் நான் உங்ககிட்டதான் கேட்டுட்டு இருக்கேன்” என்றவள் அவன் கரத்தை பிடித்து கொள்ள அவன் அவள் கரத்தை உதறிவிட்டான். மேலும் கோபத்துடன்,
“நானும் மகியும் எட்டு வருஷத்துக்கும் மேல பிரண்ட்ஸா இருக்கும்... என்னுடைய எவ்வளவு மனகஷ்டங்களிலும் பிரச்சனைகளிலும் அவ கூட இருந்திருக்கா... அவ மட்டும்தான் என் கூட இருந்திருக்கா
அப்படிப்பட்டவளை முக்கியம் இல்லன்னு சொல்வேன்னு நீ எப்படி எதிர்பார்க்குற பூரணி?” என்று வெடித்துவிட பூரணியின் முகம் இருண்டுவிட்டது.
கண்களினோரம் கண்ணீர் கசிய, “புரியுது விஜய்... உங்களுக்கு அவதான் முக்கியம்... என்னை விட அவதான் முக்கியம்” என்று விட்டு எழுந்து தன் கரத்திலிருந்த மணலை தட்டி கொண்டே, “இதுக்கு மேல இந்த உறவுக்கு அர்த்தமே இல்லை விஜய்... பை” என்று சென்று விட அவன் அமைதியாக அமர்ந்திருந்தான். அதிர்ச்சியாகவும் இல்லை. அவளை தடுக்கவும் முயலவில்லை.
இந்த உறவு இப்படிதான் முடியுமென்று அவனுக்கு தெரியும். பூரணி அவன் அம்மாவை பார்த்து அடையாளம் கண்டு கொண்டது அதற்கு பின் அடிக்கடி அவரை பார்க்க வீட்டுக்கு வந்தது எல்லாம் அவளுடன் அவன் பழுகுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தன.
மகேஸ்வரி சொன்னது போல பூரணி ஒன்றும் அத்தனை மோசமான நபர் இல்லை என்று தோன்றியது. அப்படியாக பூரணியை பார்க்கும் சந்தர்ப்பங்களில் அவள் மீது அவனுக்கு ஈர்ப்பு உண்டானது எல்லாம் விதி வசம் நிகழ்ந்தவை.
அதன் பின் பூரணி செல்பேசியில் அவனிடம் உரையாட துவங்கிய போது அவனுக்கு அவள் மீதொரு இனம் புரியாத நெருக்கத்தை உண்டுபண்ணியிருந்தது. அதே போன்று அவளுமே உணர்ந்ததாக சொன்ன போது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
அவள் ஒரு நாள் இதே போல கடற்கரைக்கு அழைத்து காதலை சொன்னதை அவனால் முதலில் நம்ப முடியவில்லை. ஆனால் அன்று அந்த நொடி அவன் மனதில் எழுந்த அபரிமிதமான களிப்பும் சந்தோஷமும் அவள் காதலை அவனை ஏற்று கொள்ள வைத்தது.
ஆனால் பூரணியை அவன் காதலித்த ஒரே காரணத்திற்காக மகேஸ்வரி விட்டு சென்ற போதுதான் நெருக்கமான ஒரு உறவை இழப்பதன் வலி எப்படி இருக்கும் என்பதை ஆழமாக உணர்ந்தான்.
மறுகணம் விஜயிற்கு காதலென்று மாயைத் திரை விலகிவிட்டது. தன் அம்மா அவள் அப்பாவின் மீது கொண்ட காதலுக்காக தன்னுடைய அத்தனை உறவுகளையும் இழந்து இன்று வரையில் தனித்து வாழ்கிறாள். பூரணி தன்னை காதலித்து மணந்தால் ஒரு வகையில் அவளுக்கும் அதே நிலைதான் உருவாகும் என்று யோசித்த போதே அவளை விட்டு விலகிவிடுவது என்று முடிவெடுத்தான்.
இன்று கிட்டத்தட்ட அவன் நினைத்தது நடந்துவிட்டது. அவளாகவே அவனை விட்டு மொத்தமாக விலகி சென்றுவிட்டாள். ஆசுவாசமாக மூச்சை இழுத்து விட்டு கொண்ட போதும் அவன் கண்களில் கண்ணீர் துளிகள் விழுந்தன.
அப்போதும் கூட விசித்திரமாக அவனுக்கு மகியின் நினைப்புதான் வந்தது. தன்னுடைய இந்த வருத்தத்தை பகிர்ந்து கொள்ள தன்னுடன் தன் தோழி இல்லையே என்றுதான் நினைத்தான்.
அவன் தோழியை நினைத்து கொண்டது போல அவளுமே தன் தோழனை பற்றிதான் நினைத்து கொண்டிருந்தாள். தினமும் கல்லூரியிலிருந்து புறப்பட்டால் ஆறு ஆறரை மணிக்கு எல்லாம் வீட்டிற்கு வந்து விடுவாள்.
அதற்கு பிறகு ஒன்பது மணி வரை வீட்டில் யாருமே இருக்க மாட்டார்கள். தமையனும் அம்மாவும் வரும் வரை அந்த வீட்டின் தனிமை அவளை கொலையாக கொல்லும்.
தொலைக்காட்சியின் அத்தனை சானல்களையும் ஒரு இருபது முப்பது முறையாவது திருப்பி திருப்பி பார்த்துவிட்டு இறுதியாக எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்க பிடிக்காமல் அதனை அணைத்துவிட்டு எழுந்து தன் கோல டைரியை எடுத்து வரைய ஆரம்பித்துவிடுவாள். இதுதான் அவளுடைய சமீபத்திய வழக்கம்.
ஆனால் இன்று அவள் மனம் எதிலுமே லயிக்கவில்லை. விஜயை பற்றிய நினைப்பு அதிகமாக வர தன் செல்பேசி எடுத்து அவனுக்கு அழைக்க முற்பட்டாள். ஆனால் இத்தனை நாள் பேசாமல் இருந்து விட்டு அதுவும் அவன் அழைத்த போதெல்லாம் ஏற்காமல் தவிர்த்து விட்டு திடீரென்று அவனை அழைத்து பேசுவது எப்படி சரியாக வரும் என்று குழம்பியபடி தன் செல்பேசியிலிருந்த விஜி என்ற பெயரையே உற்று பார்த்து கொண்டிருக்கும் போது, அருள் வந்துவிட்டான்.
அந்த நொடியே விஜயிற்கு அழைக்கும் எண்ணத்தை கைவிட்டு தன் செல்பேசியை கீழே வைத்து விட்டாள். இதழ் விரிந்த புன்னகையுடன் உள்ளே வந்த அருள்
தங்கையை பார்த்து, “மகேஸு... இன்னைக்கு செம செம சந்தோஷமா இருக்கேன்” என்றாமன்.
அவள் வியப்புடன், “ஏன்... அப்படி என்ன நடந்தது” என்றவள் ஆர்வமாக கேட்க,
“சொல்றேன் சொல்றேன்... அம்மா வரட்டும்” என்று விட்டு, “நைட்டுக்கு ஏதாவது சமைச்சியா” என்று கேட்டான்.
“இல்ல இனிமேதான் சட்டினி அரைக்கணும்” என்றவள் சலிப்பாக சொல்ல,
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்... நான் வெளியே இருந்து வாங்கிட்டு வரேன்” என்றதும் அவனை ஆச்சரியத்துடன் பார்த்து,
“டேய் என்னடா விஷயம் என்கிட்டே சொல்லேன்” என்று அவள் என்ன துருவியும் அவன் சொல்லவில்லை.
“அம்மாவும் வரட்டும்... அப்பத்தான் சொல்வேன்” என்றவன் உறுதியாக கூறிவிட்டு அவளிடம்,
“சரி உனக்கு என்ன சாப்பிடணும்னு சொல்லி நான் வாங்கிட்டு வரேன்” என்று கேட்டதுமே அவள், “பிரியாணி” என்றாள்.
“சரி ஓகே... நான் வாங்கிட்டு வந்துடுறேன்” என்று சென்றவன் அரைமணி நேரம் கழித்து லதாவையும் கையோடு அழைத்து கொண்டு வர,
“என்னடா அருளு... என்ன அது சந்தோஷமான விஷயம்” என்று அவருமே அவனிடம் கேட்டு கொண்டு வந்தார்.
“என்னை மேனஜரா ப்ரொமெட் பண்ணி இருக்காங்கம்மா... இப்ப வாங்குறதை விட சம்பளம் பத்தாயிரம் அதிகம்” என்று கூற லதாவின் முகம் பெருமையுடன் மின்னியது. மகனை அணைத்து கொண்டு கண்ணீர் பெருக்க,
“ஏ சூப்பர்டா காங்கிராட்ஸ்” என்று அந்த செய்தி கேட்டு மகி வாழ்த்தினாள். ஆனால் இந்த செய்தியோடு அவன் கூடுதலாக, “என்னை கோயமுத்தூர் பிரேஞ்சுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணி இருக்காங்க” என அவர்கள் இருவர் முகங்களிலும் அத்தனை நேரமிருந்த சந்தோஷமெல்லாம் மொத்தமாக வடிந்துவிட்டது.
“இதான் உனக்கு சந்தோஷமான விஷயமா? போ... எனக்கு உன் பிரியாணியும் வேணாம் ஒன்னும் வேணாம்” என்று மகேஷ் முகத்தை திருப்பி கொண்டு அறைக்குள் சென்றுவிட,
“பாருமா... எனக்கு ப்ரோமோஷன் வந்திருக்குனு சொல்றேன்... அதை பத்தி யோசிச்சு சந்தோஷப்படாம... கோயமுத்தூர் போறனு சொன்னதுக்கு மூஞ்சை திருப்பிட்டு போறா” என்று அருள் தன் அம்மாவிடம் குறைப்பட்டான்.
“எனக்கும் கஷ்டமாதான் இருக்கு அருள்” என்ற லதாவின் முகமும் வாடிவிட,
“பேசாம எல்லோரும் கோயமுத்தூர் போயிடலாம்... இங்க நமக்கு என்ன இருக்கு... இந்த பழைய ஓட்டு வீடை தவிர” என்று அருள் கூறியதை உள்ளிருந்து கேட்ட மகேஸ்வரி சீறி கொண்டு எழுந்து வந்து,
“இருக்கு... எங்களுக்கு இருக்கு... உனக்கு எதுவும் இல்லன்னு போ... எங்களை விட்டு போகணும்னு முடிவு பண்ணிட்டு இல்ல... அப்புறம் என்ன போ” என்று பாட்டாசு போல பொரிந்து தள்ளிவிட்டு மீண்டும் அறைக்கு சென்று கதவை அறைந்து மூடிவிட்டாள்.
“இப்போ எதுக்கு இவ இவ்வளவு டென்ஷனாகுற... நான் என்ன தப்பா சொல்லிட்டேன்” என்றவன் கேட்க,
“நீ இங்கிருந்து போக போறன்னு சொன்னதை அவளால் தாங்க முடியல அருளு” என்று லதா கூற அவன் கடுப்புடன்,
“ஆமா ஆமா அப்படியே என் மேல பாசம் பொங்கி வழியுதாமா உன் பொண்ணுக்கு” என்று கடுப்புடன் கேட்டானே ஒழிய அவனுக்கு தெரியும். அவள் தன் மீது கொண்ட அன்பும் அவன் அவள் மீது கொண்டிருக்கும் பாசமும்.
ஆதலால்தான் அவன் கோயமுத்தூர் புறப்படுவதற்கு முன்பாக அவள் விரும்பிய மாடல் மற்றும் கலரில் பைக் வாங்கி வீட்டு வாசலில் கொண்டு வந்து நிறுத்தினான். இந்த விஷயம் லதாவிற்கே ஆச்சரியம் என்றால் மகேஸ்வரிக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
“பிடிச்சிருக்கா மகேஷு” என்று அவன் கேட்டதுமே தமையனை கட்டி கொண்டவள் அப்போதும், “நீ எங்கேயும் போகாத அருளு... நீ வீட்டுல இல்லனா எனக்கு நிச்சயமா பைத்தியமே பிடிச்சுடும்” என்று அழுது கொண்டே கூற,
“எனக்கு மட்டும் உன்னையும் அம்மாவையும் விட்டு போகணுமா என்ன... ஆனா யோசிச்சு பாரு... இப்படி ஒரு வாய்ப்பு தேடி வரும் போது எப்படி விட்டு கொடுக்குறது... நீயே சொல்லு” என்று கேட்க அதெல்லாம் அவள் மூளைக்கு புரிந்துதான். ஆனால் மனதிற்குத்தான் புரியவில்லை.
ஏற்கனவே விஜயை பிரிந்து அனுபவிக்கும் துயரங்களை அவளால் தாங்க முடியாத நிலையில் தமையனை பிரிவது இன்னும் இன்னும் அவள் மனநிலையை மோசமாக்கிவிடும் என்று பயந்தாள்.
அவள் பயந்தது போலவேதான் நடந்தது. தமையன் கிளம்பிவிட்ட ஒரு வாரத்தில் அவளுக்கு பைத்தியமே பிடித்துவிட்டது போலிருந்தது. விஜயாயவது சென்று பார்த்து பேசிவிட்டு வரலாம் என்று பலமுறை யோசித்த போதும் ஏனோ அதை அவள் செய்யவில்லை. எது அவளை தடுக்கிறது என்று அவளுக்கே தெரியவில்லை.
ஆனால் ஒரு நாள் காலை எப்பொழுதும் போல அவள் கல்லூரிக்கு கிளம்பி பாதி வழியில் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது விஜயிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்திருந்தது. அவளுக்கு வியப்பானது.
இத்தனை நாட்கள் கழித்து அவன் தன்னை மீண்டும் அழைத்திருப்பதை நம்ப முடியாமல் பார்த்தவள் உடனடியாக வண்டியை ஓரங்கட்டி நிறுத்தி விட்டு அவன் அழைப்பை ஏற்றாள்.
ஆனால் என்ன பேசுவது என்று அவளுக்கு புரியவில்லை. அவனாக பேச ஆரம்பிக்கட்டும் என்று அவள் மௌனமாக இருக்க “மகி” என்று விளித்தவன் குரலின் வேதனை நிரம்பி இருந்தது.
அவன் குரலை வைத்தே அவன் மனநிலையை துல்லியாக படித்தவள், “என்னாச்சு விஜி... ஏதாவது பிரச்சனையா” என்று கேட்க, பதிலுக்கு அவன் ஓங்காரமாக அழும் சத்தம்தான் கேட்டது.
“விஜி என்ன... என்னாச்சு... சொல்லுடா... டேய் சொல்லுடா” என்றவள் கண்களும் அப்போது கண்ணீர் நிறைந்து விட,
“மகி” என்றவன் அப்போது விசும்பி மூச்சு வாங்கி கொண்டே “அம்மா” என்று இழுத்து, “தவறிட்டாங்க” என்று முடிக்கவும் அவள் அதிர்ந்தாள். அவள் இதை எதிர்பார்க்கவில்லை. நிச்சயமாக இப்படியொரு மோசமான சூழ்நிலையில் தாங்கள் மீண்டும் சந்திக்கவிருப்போம் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
கண்களில் வழிந்தொடிய கண்ணீரை துடைத்து கொண்டவள், “நீ காலை கட் பண்ணு... இதோ வரேன் நான்” என்று கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தவள் வண்டியை அவன் வீட்டின் பாதைக்கு திருப்பினாள்.
பலநேரங்களில் நாம் செல்லும் பாதைகளை நாம் தீர்மானிப்பதில்லை. நம் சூழ்நிலைகள்தான் தீர்மானிக்கின்றன. நாம் போய் சேர வேண்டிய இடத்தையே அவை மாற்றி அமைக்கின்றன.