top of page

Kanavar Thozha - 4

Writer's picture: Monisha SelvarajMonisha Selvaraj


4

விஜயிடம் பேசி மகேஸ்வரியே ஒரு வாரமாகிவிட்டது. அவன் வருவதற்கு முன்பாகவே இரயிலில் ஏறி சென்றவிட வேண்டியது. வேலையின் போதும் முகத்தை திருப்பி கொள்ள வேண்டியது. அவனுடைய கைப்பேசி அழைப்பு குறுந்தகவல்கள் என்று அனைத்தையும் முற்றிலுமாக நிராகரிப்பது என்று எப்படி எல்லாம் முடியுமோ அப்படி எல்லாம் விஜயை தவிர்த்தாள். காயப்படுத்தினாள்.


இருப்பினும் வேதாளம் விகர்மாதித்தியன் முதுகில் ஏறி கொள்வது போல தினமும் அவள் முதுகில் ஏறி கொண்டு, “ப்ளீஸ் மகி... பேசு மகி” என்று அசராமல் அவளை துரத்தினான். கெஞ்சினான். தன்னால் முடிந்தளவு அவளை சமாதானப்படுத்த முயற்சி செய்து பார்த்தான். ஆனால் அவள் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.


அன்று அவள் கடைக்குள் வந்து மேல் தளத்திற்கு செல்ல மின்தூக்கியில் ஏற போக, அவன் உள்ளே தனியாக நின்றிருந்தான். தயக்கத்துடன் நின்று விட்டவள் பின் அமைதியாக உள்ளே வந்துவிட மின்தூக்கியின் கதவு மூடி கொண்டது. அவனை பாராதது போல அவள் முகத்தை திருப்பி நின்றிருக்க,


“நான் லவ் பண்ணது ஒரு தப்பா மகி... அதுக்கு போய் என்கிட்ட நீ இப்படி மூஞ்ச திருப்பிட்டு போறது நியாயமே இல்ல” என்று வருத்ததுடன் கூறினான்.


அப்போதும் அவள் அவனை திரும்பி பாராமல், “நீ லவ் பண்ணது தப்பு இல்ல... யாரை லவ் பண்ணங்குறதுதான் பிரச்சனை” என்று பதில் கொடுக்கவும் அவன் பொங்கிவிட்டான்.


“பூரணியை எனக்கு பிடிச்சு இருந்துச்சு... நான் அவளை லவ் பண்ணேன்... அதுல என்னடி தப்பு” என்று குரலை உயர்த்த அவள் அப்போதும் அலட்சியமாக கைகளை கட்டி கொண்டு,


“தப்புதான்... என் பிரண்டா இருந்துட்டு நீ அவளை லவ் பண்ணது தப்புத்தான்” என்று கூற மின்தூக்கியின் கதவு திறந்தது.


“நீ என் பிரண்டுதான்... பெஸ்ட் பிரண்ட்... அதுக்காக நான் யாரை லவ் பண்ணணும் பண்ண கூடாதுன்னு எல்லாம் நீ சொல்ல கூடாது மகி... அது என் வாழ்க்கை” என்று தீர்க்கமாக சொல்லிவிட்டு அவளுக்கு முன்பாக கடந்து சென்றுவிட, அவன் வார்த்தைகள் அவளுக்கு ரொம்பவும் வலித்தது. கண்களில் கண்ணீர் பெருகியது.


மின்தூக்கியிலிருந்து இறங்காமல் அப்படியே நின்றுவிட்டாள்.


அதன் பிறகு அவனும் அவளை சமாதானம் செய்யும் முயற்சியை கைவிட்டுவிட்டான். இருவரும் பேசி கொள்வதே நின்று போய்விட்ட நிலையில் இதை எல்லாம் கவனித்து கொண்டிருந்த கணேசனுக்கு உள்ளுர குளுகுளுவென்று இருந்தது.


‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்று அவன் மனம் துள்ளியது. மகேஸ்வரி வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலிருந்தே அவனுக்கு அவள் மீது விருப்பம் உண்டாகிவிட்டது.


மற்ற பெண்களிடமிருந்து அவள் வித்தியாசமாக தெரிந்தாள். கம்பீரமாக பேசினாள். சிரிக்கும் போது அவள் முகத்தில் படர்கிற ஒளி அவனை வெகுவாக கவர்ந்தது.


அவளை கண்கொட்டாமல் பார்த்து கொண்டே இருக்க வேண்டுமென்று தோன்ற, மிக சிரமப்பட்டே அவன் தன் பார்வையை அவளிடமிருந்து திருப்பி கொள்வான். பல நேரங்களில் அவளை நிற்க வைத்து கோபமாக கடிந்து கொள்வதும் கூட அவளை நேருக்கு நேராக பார்த்து ரசிக்கத்தான்.


இப்படியாக அவளை அவன் தன் பார்வையாலேயே ரசித்து களித்ததை எல்லாம் மகி உணர்ந்ததாலோ இல்லையோ. விஜய் நன்கு உணர்ந்திருந்தான்.


அதனாலேயே மகியை அவன் இம்மியளவும் நெருங்க விடாமல் பார்த்து கொண்டான். அதுவும் ஒட்டி பிறந்த இரட்டை பிறவிகள் போலவே அவளுடன் அவன் இருந்தானே!


எங்கே சென்றாலும் இருவரும் ஒன்றாகவே போவார்கள் வருவார்கள்.


அவளிடம் இயல்பாக பேசவோ பழகவோ கணேசனால் முடிந்ததில்லை. அவன் என்ன முயன்றாலும் விஜய் குறுக்கே வந்து நின்றுவிடுவான். இதெல்லாம் விஜயின் மீது அவனுக்கு வன்மத்தை வளர்த்துவிட்டது.


மனதினோரத்தில் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களோ என்று சந்தேகமும் அவனை அரித்து கொண்டிருந்தது. ஆனால் அவர்கள் பழக்கத்தில் அப்படி எதுவும் தெரிந்ததில்லை. வெறும் நட்பு மட்டும்தான் என்பதாகவே தோன்றியது.


இருப்பினும் ஏதாவது செய்து விஜயை வேலையை விட்டு தூக்க முயற்சி செய்து பார்த்தான். முடியவில்லை. விஜயை கீழ்த்தளத்தில் உள்ள பில்லிங் செக்ஷனுக்கு மாற்ற முயன்றான். அதுவுமே முடியவில்லை.


விஜய் கடைக்கு வராத அன்று உண்மையிலேயே அவனுக்கு அவ்வளவு குதுகலமாக இருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எப்படியாவது மகேஸ்வரியிடம் தன் மன விருப்பத்தை சொல்லிவிட எண்ணி பேச எத்தனித்த போதெல்லாம் ஏதாவது ஒரு வேலை குறுக்கே வந்து அவனை தடுத்துவிட்டது.


இதில் அவள் சீக்கிரம் செல்ல வேண்டுமென்று அனுமதி வேறு கேட்க அவனுக்கு பற்றி கொண்டு வந்தது. அதுதான் அன்று கோபத்தில் செமத்தியாக திட்டிவிட்டான். ஆனால் பிறகு அவள் அழுவதை பார்த்ததும் அவனுக்கு மனம் தாங்கவில்லை. அப்போதும் கூட அவளிடம் சொல்ல எவ்வளவோ முயன்றான். முடியவில்லை.


இறுதியாக எப்படியோ வழியில் பார்த்து சொல்லியும்விட்டான். அவள் காதலிக்கும் ரகம் இல்லை என்று தெரிந்ததாலேயே நேரடியாக திருமணம் பற்றி பேசினான். ஆனால் அதற்கும் அவள் யோசிக்கிறேன் என்று சொன்னது அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது.


அதுவும் இல்லாமல் அவள் கேட்டதற்கு இப்போது வரை அவள் எந்த பதிலும் சொல்லவில்லை. இந்த நிலையில் விஜயும் அவளும் பிணக்கில் இருக்க, இதை விடவும் அவளை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க வேறு நல்ல வாய்ப்பு கிட்டாது என்று எண்ணியவன் அவளிடம் தனியாக பேச ஒரு வாய்ப்பை தானாகவே உருவாக்கினான்.


மகேஸ்வரி மற்றும் சில பணியாளர்களை மட்டும் குறிப்பிட்டு, “ஸ்டாக் எல்லாம் வந்திருக்கு... பழைய ஸ்டாக் புது ஸ்டாக் எல்லாத்தையும் செக் பண்ணி பிரிச்சு வைக்கணும்” என்று ஸ்டாகுகள் வைத்திருக்கும் கீழ் தளத்திற்கு அழைத்து போக,


“பில்லிங்ல நான் இருக்கணும்” என்று மகேஸ்வரி தயங்கினாள்.


“அதான் விஜய் இருக்கான் இல்ல பார்த்துக்குவான்... அதுவும் இல்லாம நீதான் எல்லாம் கொஞ்சம் கரெக்ட்டா நோட் பண்ணுவ மகேஸ்வரி” என்று சமாளிப்பான காரணங்கள் கூறி அவளையும் அழைத்து சென்றான்.


பண்டில் பண்டிலாக இருந்த கட்டுக்குளை பிரித்து பழைய ஸ்டாகுகளை எல்லாம் எண்ணி முடிக்கும் போது மதியம் கடந்துவிட்டது. கணேசனும் ஒவ்வொரு தளத்திற்காக பண்டில்களை அனுப்பும் சாக்கில் ஒவ்வொரு பணியாளர்களாக கழற்றிவிட்டான். இறுதியாக அவனும் மகேஸ்வரியும் மட்டும்தான் தனித்து இருந்தார்கள்.


“காட்டன் ஸாரி டிசைன்ஸ் இவ்வளவுதானா?” என்றவள் கேட்க,


“ஆமா இவ்வளவுதான்” என, “அப்படினா முடிஞ்சிருச்சு” என்று கூறியவள் மூச்சை இழுத்துவிட்டாள்.


“எங்கே காட்டு” என்றவன் அவள் கணக்கிட்ட நோட்டை வாங்கி பார்த்து கொண்டே அவளையும் நோட்டம்விட, அவள் அவன் பார்வையை உணரவில்லை. அவள் அப்போது ரொம்பவும் களைத்து போயிருந்தாள். வலியில் தன் தோள்பட்டையை அவள் பிடித்து அழுத்தி கொள்ள,


“ரொம்ப வலிக்குதா மகேஸ்வரி” என்றவன் கரிசனமாக கேட்கவும்தான் ஏறிட்டவள் அவன் பேச்சும் பார்வையும் மாறி இருந்ததில் “வேலை முடிஞ்சிடுச்சு இல்ல நான் போறேன்” என்று நகர பார்க்க அவன் மறித்து நின்று,


“நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டனா உன்னை நான் ராணி மாறி வைச்சு பார்த்துக்குவேன்... நீ இப்படி எல்லாம் வேலைக்கு வந்து கஷ்டப்படணும்னு அவசியம் இல்ல” என்றான்.


“சார் என்ன பேசுறீங்க” என்றவள் பதட்டமாக அவனை பார்க்க, “நான் உன்கிட்ட கல்யாண விஷயமா பேசினேனே... நீ அதை பத்தி எதுவும் சொல்லலயே மகேஸ்வரி” என்று கேட்கவும், அவள் தடுமாறினாள்.


அவளுக்கும் விஜயிற்குமான சண்டையில் அவள் அது பற்றி மறந்தே போய்விட்டிருக்க அவன் மீண்டும் கேட்கவும் என்ன சொல்வதென்று அவளுக்கு உண்மையிலேயே புரியவில்லை. அதுவும் இல்லாமல் சுற்றும் முற்றும் யாருமே இல்லாததில் அவளை பயம் பற்றி கொள்ள,


“நான் இன்னும் அதை பத்தி யோசிக்கல... அப்புறமா யோசிச்சு சொல்றேன்” என்ற போதும் அவன் விடாமல்,


“ஏன் யோசிக்கணும்... என்கிட்ட என்ன பிரச்சனை மகேஸ்வரி... என்கிட்ட பைக் இருக்கு சொந்த வீடு இருக்கு... நான் உன்னை எந்த குறையும் இல்லாம பார்த்துக்குவேன்” என்றவன் தன் முடிவை அவள் மீது திணிப்பது போல பேசவும் அவள் கையை பிசைந்து கொண்டு நின்றாள்.


அவனை நிராகரித்து விட்டு செல்லவும் முடியவில்லை. அவன் அவளுடைய மேலதிகாரி. பிடிக்கவில்லை என்று நேரடியாக சொல்லி அது அவளுக்கு பிரச்சனையாக முடிந்துவிடுமோ என்ற அச்சம்தான் அவளை நேரடியாக எதுவும் சொல்லாமல் அவளை அப்படி தயங்க வைத்தது.


அவள் மௌனமாக நிற்க அவன் கால்கள் இன்னும் ஒரு அடி நெருங்கி வந்து, “சொல்லு மகேஸ்வரி” என, அவள் மிரண்டு பின்வாங்கிய அதேசமயம்,


“அதான் அவ யோசிக்கணும்னு சொல்றா இல்ல... அப்புறம் வழியை மறிச்சு நின்னுட்டு இப்படி ஏடாகுடமா பேசிட்டு இருந்தா என்ன அர்த்தம்” என்று பின்னிருந்து விஜயின் குரல் அழுத்தமாக ஒலிக்கவும் கணேசன் முகம் இருண்டுவிட்டது.


அவனை பார்த்த கணம் மகேஸ்வரிக்கு அப்படியொரு ஆசுவாசமும் நிம்மதியும் உண்டானது. கணேசனிடம் இருந்து அவள் விலகி வந்து நின்று கொண்டாள்.


விஜயை அங்கே எதிர்பார்க்காத கணேசன், “நீ பில்லிங்ல இல்லாம இங்க என்ன பண்ற” என்று முறைக்க,


“நீங்க என்ன பன்றீங்க... எதுக்கு வேலை முடிஞ்ச பிறகும் மகியை நிறுத்தி வைச்சு பேசிட்டு இருக்கீங்க” என்று விஜய் பதில் கேள்வி கேட்க அவன் முகம் இருண்டது.


“நான் மகேஸ்வரிகிட்டதானே பேசிட்டு இருக்கேன் உனக்கு என்னடா பிரச்சனை... போய் உன் வேலையை பாரு” என்று எரிந்து விழ, விஜயின் பார்வை நேராக தன் தோழியின் பக்கம் திரும்பியது.


“மகி வா போலாம்” என்றான்.


அவள் என்ன செய்வதென்று யோசித்து விட்டு பின்னர் நகர்ந்து செல்ல எத்தனிக்க கணேசன் மீண்டும், “மகேஸ்வரி எனக்கு பதில் சொல்லிட்டு போ” என்று முன்னே வந்து நிற்க அவளுக்கு அவன் செயல் எரிச்சலை கிளப்பியது,


விஜயோ, “பிடிக்கலன்னு சொல்லிட்டு வாயேன்டி” என்று அதிரடியாக உரைக்க கணேசனுக்கு தாறுமாறாக கோபமேறிவிட்டது.


“அதை என்னடா நீ சொல்றது” என்று அவன் விஜயிடம் ஏறி கொண்டு போக பதறி போன மகேஸ்வரி,


“சார் சார் இருங்க” என்று அவர்கள் இடையில் வந்து நின்றாள்.


விஜய் அப்போது, “கொஞ்சம் கூட நாகரிகமே இல்லாம நடந்துக்கிறான்... இவன் கூட போய் பேசிக்கிட்டு இருக்க... வா போலாம்” என்று கூறி அவள் கரத்தை பிடித்தான். இப்போது மகேஸ்வரியின் கோபம் நண்பனின் புறம் திரும்பிவிட்டது.


“விஜி கையை விடு... கையை விடுங்குறன்” என்றவள் சீற்றத்துடன் அவன் கையை உதறிவிட்டு,


“நான் யாரை கல்யாணம் பண்ணிக்கணும் பண்ணிக்க கூடாதுன்னு எல்லாம் நீ என்னடா சொல்றது... நீ மட்டும் என்ன நான் சொல்றதெல்லாம் கேட்குறியா... உன் வாழ்க்கைல நீதானே முடிவு எடுக்குற... அப்படி என் வாழ்க்கைல நான்தான் முடிவு எடுப்பேன்” என்றாள். அவனுக்கு புரிந்துவிட்டது. அவள் பூரணி விஷயத்தை குத்திகாட்டுகிறாள் என்று.


ஆனால் அவள் அதோடு விடாமல் கணேசனிடம் திரும்பி, “என் அண்ணன் அருளோட நம்பர் கொடுக்குறேன் நோட் பண்ணிக்கிகுங்க சார்... நீங்க அவன்கிட்ட பேசுங்க... அவன் ஓகே சொன்னானா எனக்கும் ஓகேதான்” என்று விட்டாள்.


விஜய் அதிர்ந்து நிற்க கணேசனின் முகம் பிரகாசமானது. அவனுக்கு அருளின் கைப்பேசி எண்ணை கொடுத்து விட்டு அவள் அங்கிருந்து வெளியே வந்துவிட அவன் விஜயை இளக்காரமாக ஒரு பார்வை பார்த்து வைத்தான்.


விஜயால் தாங்க முடியவில்லை. தோழியின் பின்னோடு வந்து அவளை மறித்து நின்று,


“ஏய் அவனுக்கு உன்னை விட பத்து வயசு கூட இருக்கும்டி” என்றான்.


“இருக்கட்டுமே... அது என் பிரச்சனை... உன் பிரச்சனை இல்லை” என்றவள் அவனை திரும்பி பார்த்து அசட்டையாக கூற விஜயின் முகம் விழுந்துவிட்டது.


“உன் மேல இருக்க அக்கறைலதான் நான் பேசிட்டு இருக்கேன்” என்று அவன் வருத்தத்துடன் பேச,


“ஆமா ஆமா ரொம்பத்தான் அக்கறை” என்றவள் பதிலுக்கு உதட்டை சுழித்தாள்.


“நம்ம இத்தனை வருஷம் பிரண்ட்ஷிப்பை நீ இவ்வளவு மோசமா அசிங்கபடுத்த வேண்டாம் மகி” என்றான்.


“யாரு... நான் அசிங்கப்படுத்தனனா?” என்றவள் திரும்பி முறைக்க,


“ஆமா நீதான்” என்றவன் மேலும், “பூரணி விஷயமும் இதுவும் ஒன்னு இல்ல... முதல அதை புரிஞ்சிக்கோ” என்று அவன் தெரிவிக்க, அவள் சீற்ற்மானாள்.


“ஏன்டா ஒன்னு இல்ல... எல்லாம் ஒண்ணுதான்” என்று பதிலடி கொடுத்தவள் மேலும், “நீ லவ் பண்ற அந்த விடியா மூஞ்சிக்கு இந்த சூப்பர்வைஸர் சிடுமூஞ்சி எவ்வளவோ தேவல” என்று விட்டு போக அவனுக்கு தலையில் அடித்தி கொள்ளலாம் போலிருந்தது. இவ்வளவு சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறாளே!


மகேஸ்வரி விஜயை தூக்கி எறிந்து பேசிவிட்டாலே ஒழிய அதை அவள் விரும்பி செய்யவில்லை. அவளுக்குள் இருந்த கோபமும் வெறுப்பும் அப்படி பேச வைத்துவிட்டது. ஆனால் பேசிவிட்டு அவள்தான் அதிகமாக வருத்தப்பட்டாள். மனம் நொந்து அழுதாள்.


அந்த மனவேதனைகளுடன் அவளால் வேலையை தொடர முடியாமல் போக,


“சார் எனக்கு தலை வலிகுத்து... வேலை செய்ய முடியல... நான் ஹாஃப் டே லீவ் எடுத்துக்கட்டுமா?” என்று கணேசனிடம் அனுமதி கேட்டதுதான் தாமதம். அவள் திருமணத்திற்கு சம்மதித்துவிட்ட சந்தோஷத்தில் அவனும் அனுமது வழங்கிவிட்டான்.


அன்று அவள் விரைவாக வீட்டிற்கு வந்ததில் வியப்பான லதா, “என்னடி பொண்ணே சீக்கிரம் வந்துட்டே” என்று விசாரிக்க,


“என்னால முடியலமா தலைவலிச்சுது அதான் வந்துட்டேன்” என்றாள்.


“மாத்திரை எடுத்து தரவா... இல்ல தைலம் ஏதாவது தேய்ச்சு விடட்டுமா” என்று பரிவாக கேட்ட தாயிடம்,


“இல்லமா கொஞ்ச நேரம் படுத்து தூங்குணா சரியாயிடும்” என்றவள் படுக்கையில் விழ, “அப்போ கதவை தாப்பா போட்டு படுத்துக்கோ... எனக்கு கொஞ்சம் கடைல வேலை இருக்கு நான் முடிச்சிட்டு வந்துடுறேன்...


ஆ ஃபோனை பக்கத்துல வைச்சுட்டு படுத்துக்கோ... நான் அருள்கிட்ட உனக்கு ஃபோன் பண்ண சொல்றேன்” என்று விட அவள் கதவை மூடிவிட்டு அமைதியாக படுக்கையில் சாய்ந்தாலே ஒழிய உறக்கமே வரவில்லை. விஜயின் முகம்தான வந்தது.


‘போயும் போயும் அந்த பூரானையா?’ என்று சொல்லி உள்ளுர புழுங்கியவளின் கவனம் அலமாரியில் வைத்திருந்த தன் கோல டைரியின் மீது விழ அதனை எடுத்து திறந்தாள்.


அதில் அவள் சில நாட்கள் முன்பு ஆசையாக வரைந்து வைத்திருந்த மெகந்தி டிசைன்கள் இருந்தன. அதிலிருந்த ஒரு டிசைனை பார்க்கும் போது கண்கள் கலங்கியது. ஏன் இதை வரைந்து வைத்தோம் என்று அவளுக்கு புரியவில்லை. ஆனால் இப்போது பார்க்கும் போது மனதை என்னவோ செய்ததது. கண்களில் கண்ணீர் முட்டி கொண்டு வந்தது. என்ன முயன்றும் அவளால் அழாமல் இருக்க முடியவில்லை.


அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டு முகத்தை அவசரமாக துடைத்து கொண்டு வந்து கதவை திறக்க அருள் நின்றிருந்தான்.


“உனக்கு ஏதோ உடம்பு சரி இல்லனா அம்மா ஃபோன் பண்ணி சொன்னாங்க” என்று கேட்டு கொண்டே நுழைய,


“கொஞ்சம் தலைவலியா இருந்துச்சு... அதான் சீக்கிரமா கேட்டுட்டு வந்துட்டேன்” என்று அவள் பதில் கூறினாள்.


“அதெப்படி நீ கேட்டதும் விட்டான் அந்த சிடுமூஞ்சி சூப்பர்வைஸர்” என்றதும் அவள் தோள்களை குலுக்கி, “ஏதோ நல்ல மூட்ல இருந்திருப்பான்” என்று கூறும் போது அருள் அவள் கண்கள் உப்பி சிவந்திருந்ததை கவனித்தான்.


“என்னடி அழுத மாதிரி மூஞ்செல்லாம் சிவந்திருக்கு... ரொம்ப முடியலயா... ஜுரம் ஏதாவது அடிக்குதா என்ன?” என்றவன் தங்கையை நெருங்கி வந்து நெற்றியில் தொட்டு பார்க்க,


“அதெல்லாம் ஒன்னும் இல்ல... நல்லாதான் இருக்கேன்” என்றவள் மேலும், “டீ குடிக்கிறியா... இல்ல டிபன் சாப்பிடுறியா” என்று கேட்டாள்.


“இல்ல வேணா அம்மா வரட்டும்”


“அவங்க எங்க இப்போ வருவாங்க... பொங்கல் சீசன் இல்ல” என்று கூறி கொண்டே, “நான் டீ போட்டு குடிக்க போறேன்... உனக்கு வேணுமா வேண்டாமா? அதை மட்டும் சொல்லு” என்று அவள் மீண்டும் அவனிடம் வினவவும்,


“சரி போடு” என்றான்.


அவன் உடை மாற்றி கொண்டிருக்க அவள் உள்ளே சென்று சமையலறையில் பாலை அடுப்பில் வைத்து விட்டு திரும்பி அங்கிருந்த சிங்கில் முகத்தை கழுவி கொண்டிருந்தாள்.


“ஆமா நீ உண்மையிலேயே தலைவலில அழுதியா” என்று கேட்டபடி அருள் பின்னே வந்து நிற்கவும் திகைப்படைந்தவள் அவனிடம் திரும்பி,


“பின்ன வேற எதுக்கு அழுவாங்க” என, அவன் அவளை தன் விழிகளால் அளவெடுத்தான்.


“ஏன் அப்படி பார்க்குற” என்றவள் கேட்கும் போதே பால் பொங்கிவிட்டது. அவள் அடுப்பை குறைத்து விட்டு திரும்பும் போது அவன் தன் கையிலிருந்த டைரியை காட்டினான்.


அதனை பார்த்ததும் அவள் சற்று அதிர்ந்தாலும் தன் உணர்வுகளை முகத்தில் காட்டி கொள்ளவில்லை. இயல்பாக பேசுவது போல பாலில் டீ தூளை போட்டு கொண்டே,


“அது என் கோல டைரி அதை எதுக்கு எடுத்த... உள்ளே எடுத்துட்டு போய் வை” என்றாள்.


“எனக்கும் இது கோல டைரினு தெரியும்... ஆனா கோல டைரில என்னது இது?” என்று கேட்டு அந்த பக்கத்தை காண்பிக்க அவள் முகம் மாறியது.


“அது ஒன்னும் இல்ல... மெகந்தி டிசைன்” என்றவள் அப்போதும் இயல்பாகவே பதில் கூற அவளை ஏறஇறங்க பார்த்தவன்,


“அது வெறும் மெகந்தி டிசைன் இல்ல... விஜயோட முகத்தை வைச்சு நீ வரைஞ்ச மெஹந்தி டிசைன்” என்றதும் அவள் முகம் பதட்டத்தை நிரப்பியது. ஆனால் ஒரு மாதிரி தன்னை சமாளித்து கொண்டு,


“என் பிரண்ட் ஒருத்தி அந்த மாதிரி முகத்தை வைச்சு ஒரு டிசைன் போட்டிருந்தா நான் அதை விஜய் பேஸ் வைச்சு ட்ரை பண்ணேன்... அவ்வளவுதான்” என, அவனோ அவள் சொன்ன காரணத்தை நம்பாமல் சந்தேகமாக பார்த்தான்.


அவளோ தேநீரை தயாரித்து, “இந்தா டீ குடி” என்று டம்ளரை நீட்ட,


“உன் மனசுல என்ன இருக்கு மகேஸு” என்று அருள் கேட்டு அவளை கூர்ந்து பார்க்க அவள் அசட்டையாக,


“என்ன இருக்கு... ஒன்னும் இல்லை... இதெல்லாம் பார்த்துட்டு நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்காத... முதல உன் டீயை பிடி” என்றவள் அவன் கையில் தேநீர் டம்ளரை திணித்துவிட்டு அந்த டைரியை வாங்கி கொண்டு படுக்கையறைகுள் சென்றுவிட்டாள்.


அதற்கு மேல் தங்கையை கட்டாயப்படுத்தி எதுவும் கேட்க அவனுக்கு மனம் வரவில்லை. ஆனால் அடுத்த நாள் கணேசன் அருளுக்கு அழைத்து திருமணம் பற்றி பேசவும் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.


இரவு வீட்டிற்கு வந்ததும் அம்மா இல்லை என்பதை அறிந்து கொண்டவன் தங்கையிடம்,


“ஆமா யார் அது கணேசன்... உன் கூட வேலை பார்க்குறானாம்... அவன் ஃபோன் பண்ணி உன்னை பொண்ணு பார்க்க வர்றதை பத்தி பேசுறான்” என்று நிதானமாக விசாரிக்க அவள் திருதிருவென்று விழித்தாள். எதுவுமே பேசவில்லை.


“இப்போ நீயா வாயை திறந்து என்ன விஷயம்னு சொல்றியா... இல்ல நான் அம்மாகிட்ட இது பத்தி பேசட்டுமா?” என்றதும் மிரண்டவள்.,


“வேண்டாம் அருள்” என்றவள் விஜய் பூரணி காதலில் ஆரம்பித்து அத்தனையும் சொல்லி முடித்தாள். அதனை கேட்டு சத்தமாக சிரித்த அருள்,


“போயும் போயும் அந்த எதிர் வீட்டு லூசையா அந்த விஜய் லவ் பன்றான்” என்று கேலியாக பேச அவள் முகம் வாடியது.


“நீ வேற சிரிக்காத... எனக்கு பத்திக்கிட்டு வருது”


“அவன் அந்த லூசை லவ் பண்ணா உனக்கு ஏன் டி பத்திக்கிட்டு வரணும்”


“அவன் என் பெஸ்ட் பிரண்டு... ஆனா இந்த பூரான் என்னோட எனிமி.. என் எனிமியும் என் ஒரே பெஸ்ட் பிரண்டும் லவ் பண்ணா கடுப்பாகதா?” என்று அவள் சொன்னதை கேட்டு மீண்டும் சிரித்தவன்,


“ஆகும்தான்... ஆனா அதுக்காக நீ அந்த விஜய்கிட்ட ஒரேடியா பேசாம இருக்குறதும்... இந்த சிடுமூஞ்சி சூப்பர்வைஸர்கிட்ட கல்யாணத்தை பத்தி பேச சொல்லி ஃபோன் நம்பர் கொடுத்ததும் தேவையில்லாத சீன்னு” என்றவன் எள்ளல் செய்ய அவள் முகம் சுண்டிவிட்டது.


“நீ இப்படிதான் பேசுவ... உனக்கு என் பிரச்சனை புரியாது” என்றாள்.


“நீ டைரில வரைஞ்சு வைச்ச மெகந்தி டிசைனை பார்த்ததுமே எல்லாம் புரிஞ்சு போச்சு” என்று அவன் சுட்டி காட்ட அவள் முகம் மாறியது.


“நீ நினைக்குற மாதிரி இல்ல அருளு இது”


“நான் என்ன நினைக்குறேன்” என்றவன் அவளை திருப்பி கேட்கவும்,


“நான் விஜயை லவ் எல்லாம் பண்ணல... ஆனா அதேநேரம் வேறு யாருக்கும் என்னால அவனை விட்டு கொடுக்க முடியல” என்றதும் அவன் விழுந்து விழுந்து சிரித்தான். பின் அவள் தலையில் தட்டி,


“பைத்தியமே அதுக்கு பேர்தான்டி லவ்வு” என்றான்.


“அது ஒன்னும் லவ்வு எல்லாம் இல்ல” என்றவள் பிடிவாதமாக கூற அவளை முறைத்து பார்த்து,


“அப்ப என்னடி அது?” என்று கேட்டான்.


“பிரண்ட்ஷிப்தான்... அவன் என் நண்பன்தான்... ஆனா அவன் அந்த பூரானை லவ் பண்றது என்னால ஏத்துக்கவே முடியல” என்று அதையே கூறினாள்.


“அதுக்கு எவனோ மூஞ்சி முகரை தெரியாதவன் கிட்ட எல்லாம் என் நம்பர் கொடுப்பியா... நான் என் மேனஜர் கூட மீட்டிங்ல இருக்கும் போது அந்த ஆளு ஃபோன் பண்ணி உங்க வீட்டுக்கு பொண்ணு பார்க்க வரட்டுமானு கேட்குறான்... லூசு” என்று கடுப்பாக நடந்ததை சொல்லி,


“அது சரி... இப்போ நான் அவனுக்கு என்ன பதில் சொல்றது” என்றான்.


“ஜாதகம் அனுப்ப சொல்லு... அப்புறம் இரண்டு நாள் கழிச்சு ஃபோன் பண்ணி ஜாதகம் ஒத்து போகலனு சொல்லிடு”


“இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்டி” என்றவன் அலுத்து கொள்ள அவள் முகத்தில் புன்னகை அரும்பியது.


“என்னை என்ன பண்ண சொல்ற... அந்த ஆளுகிட்ட மறைமுகமா சொல்லி பார்த்தேன்... எனக்கு இதுல இஷ்டம் இல்லனு... ஆனா அவன் விடாம நச்சரிச்சான்... எனக்கும் வேற வழி தெரியல”


“உனக்கு வழி எல்லாம் தெரியும்... ஆனா நீயேதான் தேவை இல்லாம போய் முட்டு சந்துல முட்டிக்கிட்டு நிற்குற”


“என்னடா உளற”


“நீ அந்த விஜயை லவ் பண்ற... அதை அவன்கிட்ட சொல்ல முடியாம இப்படி ஏடாகுடமா ஒரு காரியத்தை செஞ்சி வைச்சு இருக்க”


“இல்லவே இல்ல நான் விஜயை லவ் பண்ணல”


“அப்படியா... அப்படினா இந்த வேலையே விடு”


“வேலையை விட்டுட்டு”


“எங்க ஓனருக்கு சொந்தமான காலேஜ் ஒன்னு இருக்கு... அங்க அட்மின் வேலைக்கு ஆள் தேடிட்டு இருக்காங்க... உன் ரெஸ்யூமை கொடு... நான் அங்க உனக்கு வேலை வாங்கி தரேன்” என்று அருள் சொல்ல அவள் அதிர்ந்து நின்றாள்.


“அங்க வேலைக்கு போனா அதிகபட்சம் ஏழு மணிக்குள்ள வீட்டுக்கு வந்துடலாம்... என்ன? போயிட்டு வரதான் ஒரு மணி நேரம் ஆகும்” என்றவன் மேலும் சொல்ல அவன் சொல்வதை மௌனமாக கேட்டிருந்தாலே ஒழிய பதில் சொல்லவில்லை.


“என்ன மகேஸு? எதுவும் பேச மாட்டுற” என்றவன் அவளை உறுத்து பார்க்க,


“நான் யோசிச்சு சொல்றேன்” என்றவள் அந்த பேச்சை கத்தரித்து விட்டு அறைக்குள் சென்றுவிட்டாள்.


விஜயிடம் அவளுக்கு என்ன கோபம் வருத்தம் இருந்தாலும் அவனை பார்க்காமல் இருப்பதை பற்றி அவளால் யோசிக்க கூட முடியவில்லை.


அப்படி எனில் தான் அருள் சொன்னது போல விஜயின் மீது காதல் கொண்டிருக்கிறோமா? அவளால் அப்படியும் அவர்கள் உறவை யோசித்து பார்க்க முடியவில்லை. இத்தனை வருடத்தில் ஒரு முறை கூட அவள் அப்படி யோசித்ததும் இல்லை.

0 comments

Yorumlar

5 üzerinden 0 yıldız
Henüz hiç puanlama yok

Puanlama ekleyin
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page