top of page

Kanavar Thozha - 3

Updated: Nov 10, 2023

3

மகேஸ்வரி இரயிலில் ஏறியதிலிருந்து லதா, “எங்க இருக்கு எப்போ வருவ... இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்” என்று கேள்வி மேல் கேட்டு அவளை படுத்தி எடுத்துவிட்டார். கடையிலிருந்து தாமதமாக கிளம்பும் போதெல்லாம் இது வழக்கமாக நடக்கும் கதை.


எப்போதும் அவள் வீட்டிற்கு வரவே பத்தரையாகிவிடும். ஆனால் இன்று பதினொன்றுக்கும் மேலாகிவிடவும்தான் லதா பயந்துவிட்டார்.


விஜய் இருந்திருந்தால், “நான் பார்த்துக்கிறேன் நீ போ” என்று சீக்கிரமாகவே அவளை அனுப்பி வைத்திருப்பான். ஆனால் அவனும் இன்று இல்லை.


எந்த பக்கம் யோசித்தாலும் எதை பற்றி யோசித்தாலும் அவன் வந்த அவள் நினைவிற்குள் குதித்தான்.


‘ஃபோனை எடுத்து பேச முடியாதளவுக்கு என்ன பிரச்சனையாம் இருக்கும்... கொஞ்சம் சீக்கிரமா கிளம்பி இருந்தாலாவது என்ன ஏதுன்னு அவன் வீட்டுக்கு போய் பார்த்திருக்கலாம்... இந்நேரத்துல எங்க போறது... எல்லாம் அந்த சிடுமூஞ்சி சூப்பர்வைஸரால... திடீர்னு ஏன் அந்த லூசு கல்யாணத்தை பத்தி பேசுச்சு’


இப்படியெல்லாம் அவள் மனதிற்குள் யோசித்து குழம்பி கொண்டிருக்கும் போதே அவள் செல்பேசி ரீங்காரமிட்டது. மீண்டும் அவள் அம்மாதான். கடுப்புடன் அதனை எடுத்தவள்.


“பக்கத்துல வந்துட்டேன் ம்மா... படுத்தாதமா... வந்திடுவேன் ம்மா... ஃபோனை வை” என்று அவரை பேச கூட விடாமல் அழைப்பை துண்டித்த போது அவள் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்துவிட்டது.


அவள் இருக்கையிலிருந்து எழுந்து வந்து இறங்கி நடந்து வரும் போது தமையன் அருள்நம்பி அவளுக்காக நடைமேடையில் காத்திருந்ததை பார்த்தாள். இதுவும் அவள் அம்மா லதாவின் வேலைதான் என்று புரிந்து கொண்டாள்.


செல்பேசி தொடர்பிலேயே அவர் இவ்வளவு கடுப்பேற்றி இருக்கும் போது வீட்டிலிருந்த அவனை அவர் எந்தளவு படுத்தி எடுத்திருப்பார் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடியாது.


அருளின் பரிதாபகரமான நிலையை எண்ணி அவள் யோசித்து சிரித்து கொண்டே வந்து,


“என்ன... இன்னைக்கு உனக்கு செக்யூரிட்டி வேலையா தம்பி... சரி சரி இந்தா பேகை பிடி... பிடிச்சிட்டு அப்படியே என் பின்னாடியே நடந்து வா” என்றவள் தன் கைப்பையை கழற்றி அவனிடம் நீட்ட,


“அங்க அம்மா உனக்காக பயந்துட்டு இருக்காங்க... நீ என்னடானா ஜாலியா சிரிச்சிட்டு வர... கொழுப்புடி உனக்கு” என்று கோபமாக அவள் பின்மண்டையில் தட்டினான்.


“எருமை... தலைல ஏன் அடிக்குற” என்று அவள் திரும்பி முறைக்க,


“பின்ன போனா போகுதுன்னு தனியா வருவியேனு வந்தா என்னையே கலாய்க்குற” என்றதும் அவள் அசட்டையாக முகத்தை திருப்பி கொண்டு,


“எனக்கு பயமா இருக்கு... துணைக்கு வாடான்னு நான் என்ன... உன்னை கூப்பிட்டனா?” என்றாள்.


“நான் ஒன்னும் உனக்காக வரல... அம்மாக்காக வந்தேன்” என்றவன் மேலும், “நீ கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி வந்தாதான் என்ன” என்று கேட்க,


“நான் என்னவோ வேணும்டே லேட்டா வந்த மாதிரி பேசுற... இன்னைக்கு வேலை... அதுவும் இல்லாமல் விஜயும் வரல” என்றாள்.


“ஆமால... நானே இப்பதான் கவனிக்கிறேன்... விஜயை காணோம்... ஆமா ஏன் விஜய் வரல” என்று அவன் விசாரித்தபடி அவளுடன் நடந்தான்.


“அவங்க அம்மாவுக்கு உடம்பு சரி இல்ல... அதான் வரல” என,


“ஓ என்ன அவங்க அம்மாவுக்கு”


“தெரியல அவன் காலையில இருந்து ஃபோனையும் எடுக்கல... என்னவோ ஏதோன்னு எனக்கு பயமா இருக்கு... அவனுக்கு பாவம் அவங்க அம்மா மட்டும்தான்” என்று சொல்லும் போது அவள் முகத்தில் படர்ந்த வேதனையை கவனித்த அருள், “ஏய் எதுக்கு நீ எடாகுடமா யோசிக்குற... அதெல்லாம் அவங்க அம்மாவுக்கு ஒன்னும் இருக்காது” என்றான்.


அவள் அதன் பின் எதுவும் பேசவில்லை. மௌனமாக நடக்க அருள் அவளிடம், “இனிமே அவன் வரலனா... எனக்கு ஃபோன் பண்ணி நான் வந்து கூட்டிட்டு போறேன்... தனியா இந்த இரத்திரி நேரத்துல நடந்து வராதே” என்றான்.


“அதெல்லாம் ஒன்னும் பயம் இல்ல... எத்தனை லேடீஸ் போறாங்க வராங்க” என்றாள்.


“ஃபோன் பண்ணுனா பண்ணேன்டி... இன்னைக்கு என்னவோ அம்மா ரொம்ப தொல்லை பண்ணவும்தான் வந்தேன்... இல்லனா எப்பவும் போல அந்த விஜய் உன் கூட வந்திருவானு நினைச்சு நான் கொஞ்சம் அசட்டையா இருந்திருப்பேன்” என,


“வருவான்... நாளைல இருந்து அவன் கண்டிப்பா வந்துருவான்” என்றாள். அது அவனுக்காக சொன்ன வார்த்தை இல்லை. அவளுக்கு அவளே சொல்லி கொண்ட சமாதானம்.


அது ஒரளவுக்கு அருளுக்கு புரிந்து போக, “எப்பவுமே அவன் உன் கூட வர முடியாது மகேஸு... அதனால நீ அவனை நம்பி இருக்கிறதை கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுக்க பாரு... முக்கியமா இந்த வேலையை விடு... இவ்வளவு லேட்டா போயிட்டு வர்றது ஒன்னும் செட்டாகுது” என்று அவன் அத்தனை நாளாக சொல்ல எண்ணியதை அன்று அவளிடம் வெளிப்படையாக சொல்லிவிட, அவன் முகம் சிவந்தது.


அடுத்த அடி எடுத்து வைக்காமல் அப்படியே நின்று அவனை படுஉக்கிரமாக முறைத்தாள்.


“முறைக்காதடி... உன் நல்லதுக்குதான் சொல்றேன்... அம்மா வேற உனக்கு மாப்பிளை பார்க்குறதை பத்தி பேசிட்டு இருந்தாங்க” என்றவன் மேலும் சொல்லவும் அவள் வெடித்துவிட்டாள்.


“அதுக்கு... நான் என் வேலையை விட்டுரணும்... என் பிரண்டை விட்டிரனும்... எல்லாத்தையும் விட்டுட்டு எங்கேயாவது ஊர் பேர் தெரியாதவனை நம்பி அவன் வீட்டுக்கு போயிடனும்... என்னை துரத்தி விட்டு அதுக்கு அப்புறம் நீ சந்தோஷமா இருக்கலாம்... அப்படிதானே” என்றவள் சாலை என்றும் பாராமல் அவனிடம் கத்திவிட்டாள்.


“இது ரோடுடி பைத்தியம்” என்றவன் மெதுவாக சொல்ல,


“இது ரோடா இருக்க தொட்டுதான் நீ தப்பிச்சா... வீடா இருந்தது உன்னை பொலி போட்டிருப்பேன்” என்று எச்சரித்துவிட்டு சென்றாள்.


அவள் சத்தமிட்டுவிட்டு போனது சரியாக அவர்கள் வீட்டு வாயிலில் நின்றுதான். யாராவது இந்த காட்சியை பார்த்துவிட்டார்களோ என்று அருள் திரும்பி பார்க்க வசதியாக தன் வீட்டுச்சுவரில் சாய்ந்து நின்றிருந்தாள் பூரணி.


‘ஐயோ இந்த பைத்தியமா’ என்று அவளை பார்த்தும் பார்க்காமல் தன் வீட்டிற்குள் செல்ல எத்தனிக்க,


‘அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை அதில் தீபம் அன்றோ’ என்ற பூரணி தன் செல்பேசியின் மூலமாக இப்பாடலை ஒலிக்கவிட்டாள்.


கடுப்புடன் திரும்பியவன், “உனக்கு எல்லாம் வேற புழைப்பே இல்லயா... எங்க வீட்டுல என்ன நடக்குதுன்னு எட்டி பார்த்துட்டே இருப்பியா?” என்று கேட்டு வைக்க,


“நடுரோட்ல நின்னு உங்க தங்கச்சி கதாகாலட்சபம் பண்ணிட்டு போது... இதெல்லாம் நாங்க எட்டி வேற பார்க்கணுமாக்கும்... அதெல்லாம் எங்க வீட்டு உள்ள இருந்து பார்த்தாலே தெரியுது” என்றவள் பதலடி கொடுத்தாள்.


“அவ எது பண்ணா உனக்கு என்ன... சும்மா அவகிட்ட எதுக்கு வம்புக்கு போற நீ... இனிமே அவகிட்ட வம்பு பண்றதை பார்த்தனா அவவ்ளவுதான் சொல்லிட்டேன்” என்று எச்சரித்துவிட்டு அவன் மீண்டும் உள்ளே நடக்க போக,


“என்ன தவம் செஞ்சிப்புட்டோம் அண்ணன் தம்பி ஆகிபுட்டோம்” என்று அடுத்து ஒரு பாட்டை போட்டு விட்டு அவனை உச்சபட்சமாக வெறுப்பேற்றி வைக்க,


“அடிங்க இவளை” என்று கீழே கிடந்த கல்லை எடுத்து தூக்கி அடிக்கவும் பூரணி தலையை குனிந்து கொள்ள அது அவர்கள் வீட்டின் சுவரின் மேல் பட்டு தெறித்தது.


“என்ன அங்க சத்தம்” என்று பூரணி வீட்டின் உள்ளிருந்து ஒரு ஆடவனின் அதிகார கேட்கவும் அருள் அடித்து பிடித்து தன் வீட்டிற்குள் ஓடி வந்துவிட்டான். மகன் எதிர் வீட்டின் மீது கல் எடுத்து எரிந்ததை பார்த்துவிட்ட லதாவோ அதிர்ந்து,


“என்னடா நீயும் உன் தங்கச்சி மாதிரி அந்த பொண்ணுகிட்ட வம்பு பண்ணிக்கிட்டு இருக்க... அதுவும் கல்லை விட்டு எரியிற... அவங்க அப்பன் பார்த்தனா என்னடா ஆவுறது... அவனே சரியான ரவுடி பையன்” என்று பயந்து பயந்து வெளியே எட்டி பார்த்து கொண்டே கூற


அருள் அலமாரியிலிருந்து தன் லுங்கியை எடுத்து மாற்றி கொண்டே, “நான் இல்லமா அந்த பைத்தியம்தான் வெறுப்பேத்துச்சு” என்றான்.


அந்த சமயம் பார்த்து மகேஸ்வரி, “யாரை இப்போ பைத்தியம்கிற” என்று சீறியபடி நைட்டியை மாற்றி கொண்டு படுக்கையறை கதவை திறந்தாள்.


“உன்னை சொல்லல... உன்னை மாதிரியே எதிர்க்க வீட்டுல இருக்கே... அந்த பைத்தியத்தை சொன்னேன்” என்றவன் வாலன்டியராக வம்பை விலை கொடுத்து வாங்கிவிட்டான்.


அவ்வளவுதான் மகேஸ்வரியின் கோபம் உச்சத்திற்கு ஏறிவிட்டது. அவளுக்கு கோபம் உச்சத்திற்கு ஏறினால் அவன் உச்சி முடியை பிடித்து ஆட்ட ஆரம்பித்து விடுவாள்.


“உன்னை” என்று அவள் அதை செய்ய அவன் மீது பாய வர, “ம்மா திரும்பவும் முடியை பிடிக்க வர்றாமா” என்று அம்மாவின் முதுகின் பின்னே சென்று ஒளிந்து கொண்டான் அருள்நம்பி.


“என்னை அந்த பூரான் கூட சேர்த்து வைச்சு பேசுறியா... உன்னை விட மாட்டேன்டா” என்று அவளும் விடாமல் தன் அம்மாவை சுற்றி அவனை பிடிக்க வர அவனோ தப்பிக்க எதிர்புறமாக சுற்றி வந்தான்.


கடுப்பாகி விட்ட லதா, “அடச்சை நிறுத்துங்க... காலைலயும் சண்டை... இராத்திரி படுக்கும் போது சண்டையா... வேற புழைப்பே இல்லையா இரண்டு பேருக்கும்” என்று அதட்டினார்.


மகேஸ்வரி பார்வையாலேயே தமையன் மீது உஷ்ணத்தை கக்க, “ம்மா என்னை முறைக்குறா மா” என்று புகார் வாசித்த மகனை பார்த்து தலையிலடித்து கொண்ட லதா,


“ஒழுங்கா ஆளுக்கொரு மூலையில உட்காருங்க... அப்பத்தான் தோசை சுட்டு எடுத்துட்டு வருவேன்” என்றார்.


தோசை என்றதும் வயிற்றை பிடித்து கொண்டவள், “ஆமாமா பசிக்குது... கொஞ்சம் சீக்கிரம் எடுத்துட்டு வாயேன்” என்று மகேஸ்வரி அதன் பின் சமத்தாக அமர்ந்து கொள்ள, “ம்மா எனக்குதான் முதல” என்று அருள்நம்பி அதற்கும் போட்டிக்கு வர,


“அதெல்லாம் இல்ல எனக்குதான்” என்றாள் அவள்.


சமையலறைக்குள் சென்ற லதா ரிவர்ஸ் கியர் போட்டி தோசை கரண்டியுடன் திரும்பி வரவும் இருவரும் வாயை பொத்தி கொண்டார்கள்.


ஆனால் தோசை வந்த பிறகு மீண்டும் எனக்கு உனக்கு என்று ஒரு சண்டையை போட்டு முடித்த பிறகே இருவரும் படுக்க சென்றார்கள். ஒரு மணி போலதான் அந்த வீடு அமைதி கோலம் பூண்டது.


படுக்கையறையிலிருந்து கட்டிலில் லதாவும் மகேஸும் படுத்து கொள்ள அருள் பாயை விரித்து முகப்பறையில் படுத்து கொண்டான். மகேஸ்வரி தவற இருவருமே படுத்ததும் உறங்கிவிட்டார்கள்.


அவளுடைய உடலும் களைத்து உறக்கத்தை நாடிய போதும் மனம் ஏதேதோ யோசித்து குழம்பி அவளை உறங்க விடாமல் செய்தது.


விஜயை பார்க்காதது பேசாதது துவங்கி அந்த சூப்பர்வைஸர் கணேசன் திருமணத்தை பற்றி பேசியது இறுதியாக அண்ணனின் பேச்சுக்கள் என எல்லாமே அவள் மனநிலையை ரொம்பவும் பாதித்திருந்தன.


இந்த நாள் ஆரம்பித்தே சரி இல்லை என்று தோன்றியவளுக்கு காலையில் வெறுப்பேற்றிய பூரணியின் முகம்தான் நினைவு வந்தது.


‘எல்லாம் அந்த பூரானால... சரியான விடியா மூஞ்சி... இனிமே அது முகரையைவே பார்க்கவே கூடாது... ஒன்னும் உருப்படாது’ என்று பொறுமி கொண்டவள் எப்போது உறங்கி போனால் என்று அவளுக்கே தெரியாது.


காலை வெகுசீக்கிரமாக எழுந்து கொண்டவள் கோலம் போடும் தன் தினந்தோர பணியை அன்று செய்ய விழையவில்லை. அந்த பூரணி வந்து வம்பிழுப்பாள் என்ற கடுப்பில் வீட்டின் பின்புறம் அமர்ந்து அமைதியாக அம்மா எடுத்து வைத்திருந்த ப்ளவுஸ்களில் எல்லாம் கொக்கி போட்டு கொண்டிருந்தாள்.


லதா மகளின் செய்கையை வியப்புடன் பார்த்து, “என்னடி நான் சொல்லாமலே செய்ற... அது சரி வாச பெருக்கி கோலம் போட்டியா” என,


“நான் போடல... நீயே போட்டுக்கோ” என்றாள்.


“அதிசயமா இருக்கு... நான் போடுறன்னு சொன்னா கூட நீதான் போடுவன்னு சொல்லுவ”


“நான் போட்டாலும் பிரச்சனை... போடலனாலும் பிரச்சனையா உனக்கு... இனிமே நான் கோலம் போட மாட்டேன்... நீயே போட்டுக்கோ” என்று விட்டு மீண்டும் தைப்பதில் முனைப்பாக,


“சரியான பைத்தியத்தை பெத்து வைச்சுக்கிறேன்” என்று அவரே அன்று வாயிலை பெருக்கி கோலம் போட சென்றுவிட்டார்.


இவர்களின் உரையாடல் சத்தத்தில் எழுந்து கொண்ட அருள்நம்பி தங்கை பொறுப்பாக ஊக்கு தைத்து கொண்டிருந்ததை பார்த்து கண்களை கசிக்கி கொண்டான்.


“என்னடி அதசியமா இருக்கு... கோலம் போட போலையா நீ” என்று எழுந்து அவளிடம் கேட்டதோடு நிறுத்தாமல், “நேத்து மயிலு வரைஞ்ச மாதிரி இன்னைக்கு ஏதாவது குயிலு வரைஞ்சுட்டு வர வேண்டியதுதானே” என்று சொல்லி அவளை மேலும் வெறுப்பேற்ற வேறு செய்தான்.


அவள் பல்லை கடித்து கொண்டு, “ஒன்னும் தேவை இல்ல... அப்புறம் அந்த குயிலை பார்த்துட்டு அந்த குருட்டு முண்டம் குரங்குன்னு சொல்லும்” என்றதும் அருள் விழுந்து விழுந்து சிரிக்க அவள் அருகே இருந்த கத்திரிகோலை கையிலெடுத்து,


“மவனே ஓடிடு” என்று மிரட்டவும் அவன் சிரித்து கொண்டே அங்கிருந்து அகன்று பல்துலக்கி முகம் கழுவி விட்டு வர அவள் இன்னும் தன் தைக்கும் வேலையில் இருந்தாள்.


இம்முறை அமைதியாக தங்கை அருகே அமர்ந்தவன், “ஏ மகேஷு நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என,


“நேத்து மாதிரி கல்யாணம் கில்யாணம்னு ஆரம்பிச்ச... கொன்னுடுவேன்” என்றாள்.


“அதில்லடி... நம்ம பேசாம ஒரு டூ வீலர் வாங்கிட்டா என்னனு யோசிக்கிறேன்... நீயும் ஸ்டேஷன் போயிட்டு வர்ற ஈஸியா இருக்கும் இல்ல” என்றதும் அவள் முகம் பிரகாசமாக மாறியது.


“ஆமா ஆமா இருந்த நல்லா இருக்கும்” என்று அவள் உற்சாகமாக கூற,


“அம்மாகிட்ட பேசி பார்க்கலான்டி” என்றான்.


“ஆனா அம்மா ஒத்துக்கணுமே”


“இரண்டு பேருமா பேசி கன்வின்ஸ் பண்ணா ஒத்துக்குவாங்க...நம்ம பேசி பார்ப்போம்?” என்று அவன் சொல்லி கொண்டிருக்கும் போதே இருவருக்கும் டம்ளரில் தேநீர் எடுத்து வந்த லதா,


“என்னடா நடக்குது இங்க... எப்பவும் அடிச்சுனு பிடிச்சுனு இருப்பீங்க... இப்ப என்னவோ அமைதியா பேசிட்டு இருக்கீங்க” என்றதும் மகேஸ்வரியும் அருளும்,


“ஒன்னும் இல்லையே... சும்மாதான் பேசிட்டு இருந்தோம்” என்று ஒரே போல சொல்லி சமாளிக்க லதாவின் சந்தேகம் இப்போதுதான் அதிகமானது. அவர்கள் இருவரையும் குறுகுறுவென்று பார்த்து வைக்க, .


“ம்மா நான் மூணு ப்ளவுஸுக்கு கொக்கி போட்டேன்... உள்ளே வைச்சுடுறேன்” என்று மகேஷ் தன் டீ டம்ளரை எடுத்து கொண்டு உள்ளே ஓடி விட,


“என்னடா பேசிட்டு இருந்தீங்க” என்று அவர் மகனிடம் விசாரிக்க அவனோ தன் தேநீரை அவசரமாக குடித்து விட்டு, “ம்மா நான் சீக்கிரமா கிளம்பணும்... கொஞ்சம் சீக்கிரமா சாப்பாடு கட்டி வைச்சுடு” என்று விட்டு அவனும் உள்ளே ஓடிவிட்டான்.


‘இரண்டும் திருட்டு கொட்டுங்க... என்னவோ எனக்கு தெரியாம பேசிட்டு இருந்திருக்கு... இருக்கட்டும் என்னனு கண்டுபிடிக்கிறேன்’ என்று யோசித்த லதா அதன் பின் தன் சமையல் பணிகளை எப்போதும் போல பரபரப்பாக துவங்கி வேகமாக முடித்தும் விட்டார்.


முதலில் அருள் கிளம்பி தன் அலுவலகத்திற்கு புறப்பட்டு விட அடுத்து கிளம்பிய மகேஸ்வரியோ நேராக பக்கத்து தெருவிலிருந்து விஜய் வீட்டிற்கு சென்றாள்.


அந்த தெருவின் உயரமான கட்டிடத்தின் மேல் மாடியில் இருக்கும் சிறிய போஷனில்தான் விஜயும் அவன் அம்மாவும் வசிக்கிறார்கள். அந்த வீட்டில் ஒரு சிறிய முகப்பறையும் கழிவறையும் மட்டும்தான். சமையலறை கூட தனியாக இல்லை. அந்த முகப்பறை ஓரமாக அமைக்கப்பட்ட சிறு மேடைததான் சமையலறை.


மாடி ஏறி சென்ற மகேஸ்வரி அவன் அம்மாவிற்கு பெரிதாக எதுவும் இருந்துவிட கூடாதே என்று வேண்டி கொண்டே சென்றாள். ஆனால் அவள் வாசலில் செருப்பை கழற்றும் போதே உள்ளே சில பல சிரிப்பு சத்தங்கள் கேட்டன.


ஒரு குரல் விஜயுடையது. மற்றொரு குரல் அவன் அம்மாவுடையது. நல்ல வேளையாக அவன் அம்மாவிற்கு ஒன்றும் இல்லை என்று நிம்மதி பெருமூச்செறிந்தவள் இவர்கள் சிரிப்பலையில் இணைந்திருந்த இன்னொரு பெண்ணின் குரல் யாருடையது என்ற ஆவலில் அவள் கதவை தள்ளி கொண்டு நுழைய, அதர்ச்சி தரும் விதமாக அவள் பார்வைக்கு நேர் எதிராக அவள் எதிரி பூரணி நாற்காலியில் அமர்ந்திருந்தாள்.


‘இந்த பூரான் இங்க என்ன பண்ணுது’ என்றவள் அதிர்ந்த அதேநேரம் வாயிலில் நின்று இவளை பார்த்த பூரணி தன் சிரிப்பை நிறுத்திவிட்டு முறைக்க ஆரம்பித்தாள்.


அடுத்த கணமே, “யாரு” என்று எட்டி பார்த்த அந்த உயரமானவன் வேறு யாருமில்லை. விஜய்தான்.


அவளை பார்த்துவிட்டு “மகி” என்ற விளித்தவன் குரல் தானாகாவே சுருதி இறங்கிவிட்டது. அவன் முகத்தில் படர்ந்த அதிர்ச்சி அவள் வருகையை அவன் எதிர்பார்க்கவில்லை என்பதை விட அப்போதைக்கு விரும்பவில்லை என்பதாகவே இருக்க, அவள் உள்ளே வராமல் அப்படியே தேங்கி நின்றுவிட்டாள்.


அவன் கொஞ்சம் சுதாரித்து, “மகி வா... உள்ளே வா” என்று அழைக்கவும்,


“இல்ல அம்மாவுக்கு உடம்பு சரி இல்லன்னு சொன்ன இல்ல... அதான் பார்க்கலாம்னு... ஆமா நேத்து எல்லாம் ஃபோனை எடுக்கல... ஏன்” என்று கேட்டபடி உள்ளே வந்தவள் பார்வை ஒரு பக்கமாக பூரணியை முற்றுகையிட்டது.


அதேநேரம் விஜய் அவள் கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக, “அது என் ஃபோன்ல கொஞ்சம் பிரச்சனை... யாரோட ஃபோனையும் அட்டென்ட் பண்ணவே முடியல... கால் பண்ணவும் முடியல” என்றான்.


“உன் ஃபோன்ல இருந்து பண்ண முடியலன்னு வேற யாராவது நம்பர்ல இருந்து பேசி இருக்கலாம் இல்ல... ஒரே ஒரு கால் போடுறதுல என்ன பிரச்சனை உனக்கு... நான் எவ்வளவு டென்ஷனாயிட்டேன் தெரியுமா?” என்றவள் உரிமையாக நண்பனிடம் சண்டையிட,


“சாரிடி நான் நினைச்சேன்... அப்புறம் அப்படியே மறந்துட்டேன்” என்று அவன் சொல்லவும் கொஞ்சம் அமைதியானவள் திரும்பி சுவற்றோரமாக இருந்த கட்டிலில் சாய்ந்தபடி அமர்ந்திருந்த விஜயின் அம்மா ஜெயதேவியிடம்,


“எவ்வளவு ஈஸியா பேசுறான் பாருங்க ம்மா... நான் ரொம்ப பயந்துட்டேன்” என்று அவரிடமும் குற்றப்பத்திரிகை வாசிக்க அவர் அவளை பார்த்து மிதமாக புன்னகைத்தார். பின் அவள் அவர் உடல் நிலையை பற்றியும் விசாரித்தாள்.


இத்தனைக்கு இடையிலும் மகேஸ்வரி பூரணியை ஒரு ஆளாக கூட கருதவில்லை. ஏன் ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை.


கண்களில் மின்னிய கோபத்துடன் மகேஸ்வரியை பார்த்திருந்த பூரணி அதற்கு மேல் அங்கே நிற்க பிடிக்காமல், “சரிங்க அத்தை நான் கிளம்புறேன்” என்று ஜெயதேவியிடம் சொல்ல,


“என்னம்மா அதுக்குள்ளே கிளம்பிட்ட... இருந்து எதாச்சும் சாப்பிட்டு போலாம் இல்ல” என்றார் அவர்.


“இல்ல அத்தை கிளம்பணும்... லேட்டாகுது” என்று மழுப்பலாக புன்னகைத்த பூரணி மகியை முறைத்தபடி தன் பையை மாட்டி கொண்டு, “விஜய் ஒரு நிமிஷம் வெளியே வா” என்றாள்.


அவன் மகேஸ்வரியை தயக்கத்துடன் பார்த்து விட்டு பூரணியின் பின்னோடு நடக்க, இவளுக்கு தாங்கவில்லை.


“என்னம்மா நிற்குற... உட்காரு” என்று ஜெயதேவி மகேஸிடம் பேச,


“இல்ல ஆன்டி எனக்கும் ட்ரயினுக்கு லேட்டாகுது... உங்களுக்கு உடம்பு சரி இல்லனு விஜய் சொன்னதாலதான் உங்களை பார்த்துட்டு போலாம்னு வந்தேன்... இப்போ எப்படி இருக்கீங்க... ஒன்னும் பிரச்சனை இல்லைதானே” என்று கூற,


“ஆமா ம்மா நேத்து எல்லாம் ஒரே மயக்கம் தலை சுத்தல்... ஆனா இப்போ பரவாயில்ல” என்று தன் உடல் நிலையை பற்றி அவர் விவரித்தவற்றை எல்லாம் கேட்டவளின் பார்வை வெளியே பேசி கொண்டிருந்த விஜய் பூரணியின் மீதே நிலைத்திருந்தது.


“ம்மா யாரு அந்த பொண்ணு?” என்று அவள் மெதுவாக கேட்க,


“என் அண்ணன் பொண்ணு” என்றவர் பதில் கூறவும் அவள் புருவங்கள் நெறிய, “எது? அண்ணன் பொண்ணா” என்று வாயை பிளந்தாள்.


“ஆமாமா... ஆனா அவங்க யாரும் வந்து போறது இல்ல... இந்த பொண்ணு மட்டும் கொஞ்ச நாளா வந்து போகுது” என்றார்.


“கொஞ்ச நாளா வந்து போகுதா?” என்றவளுக்கு உள்ளுர கொதித்தது. எத்தனை முறை இவளை பற்றி விஜயிடம் கழுவி கழவி ஊற்றி இருப்பாள். ஆனால் ஒருமுறை கூட விஜய் தன்னிடம் இவள் தன் உறவுக்கார பெண் என்று சொன்னதில்லையே என்று கடுப்பாகிவிட,


“சரிங்க மா உடம்பை பார்த்துக்கோங்க... நான் கிளம்புறேன்” என்று அவரிடம் சொல்லி விட்டு வெளியே வரும் போது பூரணி படிக்கட்டில் இறங்கி கொண்டிருந்தாள்.


மகேஸ்வரி திரும்பி விஜயை முறைத்து, “அந்த பூரான் உங்க அம்மாவுக்கு அண்ணன் பொண்ணாமே” என்று கேட்க,


“அது... ஆமா” என்று தயங்கி தயங்கி பேசியவன் மேலும்,


“எங்க ம்மா அவங்க அப்பாவோட தங்கச்சி... ஓடி வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டதால அவங்க எங்களை சேர்த்துக்கல” என்ற விவரங்களை கூற,


“நீ இதை பத்தி என்கிட்ட சொல்லவே இல்ல” என்று இன்னும் தீவிரமாக முறைத்தாள்.


“ஆறு மாசத்துக்கு முன்னாடிதான் எனக்கே தெரியும் மகி... அதுவும் பூரணி சொல்லித்தான் தெரியும்... அவ எங்க அம்மா போட்டோவை அவங்க வீட்டு ஆல்பம்ல பார்த்து இருக்கா... நானும் அம்மாவும் ஒரு தடவை வெளியே போன போது எதேச்சையா கண்டுபிடிச்சு பேசுனா... எங்க அம்மாவும் அப்பதான் அவங்க குடும்பத்தை பத்தியே என்கிட்ட சொன்னாங்க... அதுவும் எல்லாம் பக்கத்து தெருவுல இருக்காங்கனு”


அவன் சொன்னதை எல்லாம் கேட்டுவிட்டு, “எவ்வளவு பெரிய விஷயத்தை என்கிட்ட மறைச்சு இருக்கடா நீ” என்று அவள் அவனிடம் ஏறு என்று ஏறிவிடவும்,


“ஆமா தப்புதான் சாரி... சொல்லி இருக்கணும்... ஆனா சொல்லல... உனக்கு டென்ஷன் ஆகும் வேண்டாம்னு நினைச்சேன்” என்று அவன் இறங்கி வந்து கெஞ்சவும் அவள் மனம் இறங்கிவிட்டது.


“சரி அந்த கதையை விடு... நீ இன்னைக்கு கடைக்கு வர்றியா இல்ல” என்று கேட்கவும்,


“வரேன் அம்மாகிட்ட சொல்லிட்டு வந்துடுறேன்” என்றவன் உள்ளே சென்று தன் பையை எடுத்து கொண்டு வர இருவரும் ஒன்றாக இரயில் நிலையம் வந்தார்கள்.


“போயும் போயும் அந்த பூரானுக்கு சொந்தக்காரனாடா நீ” என்று வார்த்தைக்கு வார்த்தை புலம்பி கொண்டே அவள் வந்ததில் அவனுக்கு எரிச்சலானது. ஆனாலும் எதுவும் பேசாமல் அவன் மௌனமாகவே நடந்தான்.


ரயிலில் ஏறி ஒரு வழியாக இருவரும் இடம் பிடித்து அமர்ந்து விட்ட பிறகு மீண்டும் அவள், “காலைல அந்த பூரான் முகத்துல முழிக்க கூடாதுனுதான் நான் கோலம் கூட போட போல தெரியுமா... ஆனா என் தலையெழுத்து உன் வீட்டுல வந்து அந்த விடியா மூஞ்சியை பார்க்கணும் ஆகிடுச்சு” என்று அவளை வசைப்பாட,


“மகி போதும்... இதுக்கு மேல அவளை பத்தி பேசாத... முக்கியமா பூரான் பூரானு கூப்பிடாத... கேட்கவே நல்லா இல்ல” என்று விஜய் பட்டென்று கூற முதலில் அதிர்ச்சியானவள் பின் அலட்சியமாக உதட்டை சுழித்து,


“ஏன் அவ உன் சொந்தக்காரினா பெரிய இவளா? நான் அவளை எப்பவும் பூரானுதான் கூப்பிடுவேன்... இனிமேயும் அப்படிதான் கூப்பிடுவேன்” என்று அவள் வீம்பாக கூற அவனுக்கு டென்ஷனாகிவிட்டது.


“மகி ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்” என்று நிறுத்தியவன் மேலும்,


“நான் அவளை லவ் பண்றேன் மகி... நீ அவளை அப்படி கூப்பிடாதே இனிமே” என்று அதிரடியாக கூறிவிட அவள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டாள்.


அவன் சொன்னதை உள்வாங்கி புரிந்து கொள்ளவே அவளுக்கு சில நொடிகள் பிடித்தது. ஆனாலும் நம்ப முடியாமல், “இப்போ என்ன சொன்ன?” என்று மீண்டும் கேட்க,


“நான் பூரணியை லவ் பண்றேன்” என்றவன் தயங்கிய பார்வையுடன் கூற, மகியின் முகம் இருண்டுவிட்டது. அவள் உணராமலே கண்களில் கண்ணீர் பெருகிவிட அடுத்து ஒரு வார்த்தை பேசாமல் ஜன்னல் புறம் தன் பார்வையை திருப்பி கொண்டாள்.


“மகி” என்றவன் அழைக்க அவள் பதில் பேசவில்லை. அவன் புறம் திரும்பவும் இல்லை.


“மகி சாரி மகி... நான் இதை உன்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கணும்” என்றவன் பேச பேச அவளுக்கு பற்றி கொண்டு வந்தது. தாங்கவே முடியவில்லை.


“மகி நான் சொல்றதை கேளேன்” என்று விஜய் மேலும் விளக்கம் கொடுக்க எத்தனிக்கவும் அவனை திரும்பி உஷ்ணமாக பார்த்தாள். அவள் விழிகளின் தீவிரத்தை எதிர்கொண்டவன் அதன் பின் எதுவும் பேச முடியாமல் அப்படியே மௌனமாகிவிட்டான்.

0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page