2
இரயில் நிலையத்தின் நடை மேடையில் நின்றிருந்த மகேஸ்வரியின் விழிகள் தண்டவாளத்தில் இரயில் வருகிறதா என்று பார்ப்பதை விடவும் பின்னே ஆட்கள் வரும் பாதையில் அவளுடைய நண்பன் விஜய் வருகிறானா என்றுதான் அதிகமாக பார்த்தன.
அவனுக்காக காத்திருந்ததில் எட்டு மணி இரயிலை தவற விட்டுவிட்டாள். ஆனால் அவன் வரவில்லை. நேற்றும் அவன் வரவில்லை என்று காத்திருந்து அவன் செல்பேசிக்கு அழைத்து போது, “அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்ல மகி... ஹாஸ்பெட்டில் கூட்டிட்டு போயிட்டு மதியம் போல வரேன்” என்று விட்டு பிறகு வரவே இல்லை.
“அம்மாவுக்கு ரொம்ப முடியலயாடா... நான் வேணா வரட்டுமா?” என்று அவள் மாலை மீண்டும் அழைத்து கேட்ட போது
“இல்ல மகி... நல்லாத்தான் இருக்காங்க... நான் பார்த்துக்கிறேன்... நீ அந்த சிடுமூஞ்சி சூப்பர்வைஸர்கிட்ட மட்டும் கொஞ்சும் சொல்லிடு” என்று தெரிவித்தான். ஆனால் இன்றும் அவன் வராதது என்னவோ ஏதோ என்று அவளை பதட்டப்படுத்த, அவன் செல்பேசிக்கு அழைத்தாள். அவன் எடுக்கவில்லை.
கைகளை பிசைந்து கொண்டு நின்றவள் அடுத்த வந்த எட்டேகால் இரயில் வருவதை பார்த்ததும் ஏறுவதா வேண்டாமா என்று ஒரு நொடி குழம்பினாள். அவளும் விடுப்பு எடுத்துவிட்டால் அவர்கள் தளத்தில் பில்லிங் பிரச்சனையாகிவிடும்.
அதுவும் அந்த சூப்பர்வைஸர் கணேசனுக்கு விஜய் மீது கடுப்பு. இப்போது தான் சென்று எதுவும் காரணம் சொல்லி சமாளிக்கவில்லை என்றால் நிர்வாகியிடம் சொல்லி அவனை வேலையை விட்டே தூக்கி விட கூட செய்துவிடுவான் என்ற பயத்தில் வேறு வழி இல்லாமல் எட்டே கால் இரயிலில் ஏறுவது என்று முடிவு செய்து முன்னே செல்ல, அதில் கூட்டம் அலைமோதியது. ஏறவும் முடியாமல் இறங்கவும் முடியாமல் மக்கள் தத்தளித்தனர்.
விஜய் இருந்திருந்தால் எப்பேர்ப்பட்ட கூட்டத்தையும் தள்ளி கொண்டு அவளை ஏற வைத்த கையோடு அமர்வதற்கு இடமும் பிடித்து கொடுத்து விடுவான். பல நேரங்களில் அவளுக்கு இடம் பிடித்து தருவதற்காக அவன் பெரும் சண்டையே நிகழ்த்தி இருக்கிறான்.
“விஜி வேணாம்... நான் நின்னுக்கிறேன்” என்றால் கூட விடமாட்டான்.
எப்படியாவது சண்டை போட்டு அவளுக்கு இடம் பிடித்து தந்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பான். இன்று உண்மையில் அந்த கூட்டத்தில் அவன் இல்லாமல் எப்படி ஏற போகிறோம் என்று அவளுக்கு ஆயாசமாக இருந்த போதும் வேறு வழி இல்லை. அவள் ஏறித்தான் ஆக வேண்டும். எப்படியோ அடித்து பிடித்து உள்ளே ஏறி நின்றுவிட்டாள்.
ஆனால் அந்த கம்பார்ட்மென்ட் முழுக்க ஆண்களாக இருந்தார்கள். அந்த நொடி உண்மையிலேயே விஜய் இல்லாததை எண்ணி வருத்தமாக இருந்தது.
அவன் ஒருவன் அருகில் இருந்தால் எதை பற்றியும் அவள் கவலைப்பட தேவை இருக்காது. அவள் ஏறினாலும் இறங்கினாலும் எந்த ஆணின் கையும் தவறி கூட அவள் மீது படாத வகையில் அரணாக அவளை மறித்து நின்று கொள்வான்.
முந்தைய வாரம் அப்படிதான் ஒருவன் அவளை இடித்து தள்ளி கொண்டு ஏற அவ்வளவுதான். விஜய் எகிறி கொண்டு அவனை அடிக்க போய்விட்டான்.
“வேணாம் விஜி... வா... வாங்குறேன் இல்ல... டேய் வாடா” என்றவள் அவனை விலக்கி இழுத்து வருவதற்குள் அவளுக்கு போதும் போதுமென்று ஆகிவிட்டது.
அதை எல்லாம் யோசித்து கொண்டே வந்தவளுக்கு அவன் இல்லாத அந்த பயணம் கொஞ்சம் கூட பிடிக்கவே இல்லை.
கிட்டத்தட்ட இருவருக்குமான நட்பு ஏழிலிருந்து எட்டு வருட காலம் இருக்கலாம். அவர்கள் வீட்டின் பக்கத்து தெருவில்தான் அவன் வசிக்கிறான். பத்தாம் வகுப்பு வரை அருகருகே இருந்த அரசு பள்ளியில்தான் இருவரும் படித்தார்கள். ஆனால் அப்போது கூட பெரிதாக பார்த்து கொண்டதோ பேசி கொண்டதோ இல்லை.
ஆனால் அவள் பதினோராம் வகுப்பு சேர்ந்த போது விஜயின் நண்பன் ராஜேஷ் அவளை காதலிக்கிறேன் பேர் வழி என்று போகும் இடமெல்லாம் பின்தொடர்ந்து வந்து அவளை கடுப்பேற்றினான்.
அம்மாவிடம் சொல்லவும் அவளுக்கு தயக்கமாக இருந்தது. அவள் தமையன் அருள்நம்பியோ கல்லூரியில் படித்து கொண்டே பகுதி நேர வேலை செய்து கொண்டிருந்தான். அவனும் வாரம் ஒரு முறைதான் வீட்டிற்கு வருவான். ஆதலால் அவனிடமும் அவளால் இதை பற்றி பேச முடியவில்லை.
இந்த நிலையில்தான் ஒரு நாள் அவள் பள்ளியிலிருந்து தனியாக வீட்டிற்கு நடந்து செல்லும் போது ராஜேஷும் அவன் நண்பனும் மறித்து நின்று பிரச்சனை செய்தார்கள்.
“வழி விடு... நான் போனும்” என்றவள் படபடப்பானாள். முந்தி கொண்டு அவர்களை கடந்து செல்ல முயன்றாள். ஆனால் ராஜேஷ் வழி விடாமல்,
“என்னை பிடிச்சிருக்கா பிடிக்கலயானு சொல்லிட்டு போ” என்று வீம்பு பிடித்தான்.
அவளுக்கு கோபமேற, “பிடிக்கல.. சுத்தமா பிடிக்கல” எனவும் அவன் முகம் சிறுத்து போனது. அந்த நொடியே பெருங்கோபத்துடன், “அடிங்க... ஏன்டி பிடிக்கல” என்றவன் அவளை அடிக்க கை ஓங்கி கொண்டு வரவும் அவள் மிரண்டு விட்டாள்.
ஆனால் அதற்குள் ராஜேஷின் நண்பனான விஜயே அவன் கரத்தை பிடித்து தடுத்து, “அவளுக்கு பிடிக்கலனா விட்டுடுறேன்னுதானே சொன்னேன்... இப்ப என்ன அடிக்க போற” என்று கேள்வி கேட்க,
“அதெப்படி அவ என்னை பிடிக்கலனு சொல்லுவா” என்று ராஜேஷ் அடாவடியாக பேச விஜய் நிதானமாக, “பிடிக்கல பிடிச்சிருக்குங்குறது எல்லாம் அவ இஷ்டம் ராஜேஷ்... அதுக்கு மேல அவளை நீ கட்டாயப்படுத்த கூடாது” என்று கூற அதை ராஜேஷ் ஏற்கவில்லை. நண்பர்களுக்கு இடையில் இதனால் பலத்த சண்டை வந்துவிட்டது. அவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.
அவளோ நடப்பதை எல்லாம் பார்த்து நடுக்கத்துடன் நின்றிருக்க விஜய் ராஜேஷை அடித்து கீழே தள்ளி விட்டு, “நீ ஏன் இன்னும் நிற்குற... போ” என்று அவளை விரட்டினான். அப்போதுதான் சுயநினைவு பெற்றவளாக அங்கிருந்து ஓட்டம் பிடித்து வீடு வந்த சேர்ந்தளுக்கு இதயம் அதிவேகமாக அடித்து கொண்டது. அந்த வயதில் அவள் எதிர்கொண்ட மிக பதட்டமான தருணம் அதுதான்.
ஆனால் அப்போதும் வீட்டில் இந்த பிரச்சனையை பற்றி அவள் தெரிவிக்கவில்லை. ஒரு வேளை மீண்டும் ராஜேஷ் பிரச்சனை செய்தால் பார்த்து கொள்ளலாம் என்று நினைத்தாள்.
ஆனால் அதன் பிறகு ராஜேஷும் அவளை பின்தொடர்ந்து வரவில்லை. சில முறைகள் அவனை வழியில் பார்த்த போதும் எந்த பிரச்சனையும் செய்யாமல் அவனாகவே ஒதுங்கிவிட்டான். அதற்கு ஒரு வகையில் விஜய்தான் காரணம் என்று அவளுக்கு பின்னரே தெரிய வந்தது.
அவள் போகும் போதும் வரும் போதும் பாதுக்காப்பாக அவன் பின்தொடர்ந்து வருவதை அறிந்தவள் ஒரு நாள் அவனை வழியில் நிறுத்தி,
“ஆமா நீ ஏன் எப்பப்பாரு என் கூட வர்ற” என்று கேட்டு வைக்க,
“ராஜேஷ் உன் மேல கோபமா இருக்கான்... உன்னை ஏதாவது பண்ணிட்டானா?” என்று உரைத்தவனை அவள் விசித்திரமாக பார்த்து விட்டு பின்,
“அது ஒன்னும் உன் பிரச்சனை இல்ல... நீ போய் உன் வேலையை பாரு... என்னை எனக்கு பார்த்துக்க தெரியும்” என்றாள்.
“யாருக்கு உனக்கா... அன்னைக்கு அவன் அடிக்க வந்த போது... ஓட கூட செய்யாம பே...ன்னு நின்ன” என்றவன் குத்தலாக சொன்னதில் அவள் முகம் இருண்டுவிட்டது. இருப்பினும் அவள் சமாளிப்பாக,
“அது... அப்போ... நான் பயத்துல என்ன பண்றதுனு தெரியாம” என்று விட்டு மேலும், “அதுக்காக நான் ஒன்னும் பயந்தாகோலி எல்லாம் கிடையாது... சரியா” என்றாள்.
அவன் உதடுகள் விரிய, “நான் ஒன்னும் அப்படி சொல்லல” என அவன் தன்னை கிண்டல் செய்கிறானோ என்று குறுகுறுவென்று பார்த்து வைத்தவள்,
“எனக்கு ஒன்னும் உன் ஹெல்ப் வேணா... உன் வழியை பார்த்துட்டு போ” என்றாள்.
“நான் என் வழிலதான் போறேன்... இந்த பக்கம்தான் என் வீடும்” என்றவன் கூற, “இந்த பக்கம்னா எங்க” என்று அவள் கேட்க, “போஸ் தெரு இல்ல... அங்கதான்” என்றான்.
“ஓ” என்று அவள் வியப்பாக, அவர்கள் உரையாடலும் நட்பும் அங்கேதான் தொடங்கியது. இயல்பாக வளர்ந்தது. எதிர்பார்ப்பின்றி நகர்ந்தது.
பள்ளி முடித்தவர்கள் அவர்கள் அறியாமலே ஒரே கல்லூரியில் ஒரே பட்ட படிப்பில் இணைந்தார்கள். படிப்பை முடித்த கையோடு இருவரும் வெவ்வேறு இடத்தில்தான் வேலைக்கு சேர்ந்தனர்.
விஜயிற்கு பைக் ஷோ ரூமிலும் மகேஸ்வரிக்கு டீ நகரில் உள்ள ஒரு பிரமாண்டமான துணி கடையில் பில்லிங்கிலும் வேலை கிடைத்தது. ஆனால் விஜயால் அந்த வேலையில் இரண்டு வாரம் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை. சம்பளமும் குறைவாக இருந்தது.
அப்போதுதான் மகேஸ்வரி வேலை பார்த்த கடையில் காலியாக இருந்த மற்றொரு பில்லிங்கில் அவனை சேர்த்து விட்டாள். தற்சமயம் இருவரும் ஒரே தளத்தில் அருகருகே அமர்ந்துதான் வேலை பார்க்கின்றனர்.
அவன் இல்லாத சமயங்களில் அவன் வேலையை அவளும், அவள் இல்லாத சமயங்களில் அவள் வேலையை அவனும் கவனித்து கொள்வார்கள்.
இருவரும் அப்படி கூட்டாக ஒருவருக்காக ஒருவர் விட்டு கொடுத்து வேலை செய்வதால் இந்த இரண்டு வருடத்தில் ஒரு பிரச்சனை கூட வந்ததில்லை. வேலையிலும் வந்ததில்லை. அவர்களுக்கு இடையிலும் வந்ததில்லை.
அதுமட்டுமின்றி வேலைக்கு ஒன்றாகவே பயணித்து செல்வதில் துவங்கி எடுத்து வந்த உணவை பகிர்ந்து கொள்வது வரை அவர்கள் தங்களுடைய நாட்களின் பெரும்பாலான நேரங்களை அவர்கள் இருவருடன் மட்டும்தான் செலவழித்தார்கள்.
தங்கள் குடும்ப சூழ்நிலைகள் பிரச்சனைகள் என்று அத்தனையும் பகிர்ந்து கொள்ளவும் செய்தார்கள்.
அவனுக்கும் அவளை போல அப்பா இல்லை. கூட பிறந்தவர்கள் என்று யாரும் இல்லை. அவன் அம்மா ஓடி போய் திருமணம் செய்து கொண்டதால் குடும்ப உறவுகள் எல்லாம் அவர்களை இன்று வரையில் சேர்த்து கொள்ளவில்லை.
மகேஸ்வரி விஜய் நட்பு பற்றி விஜயின் அம்மாவிற்கு தெரியும். ஆனால் மகேஸ்வரி தன் அம்மா லதாவிடம் சொல்ல முயன்றதில்லை. கல்லூரி படித்த சமயத்தில் விஜயுடன் அவள் பழுகுவதை அறிந்து லதா அவளை கண்டித்தார்.
அதன் பின் அவள் தங்கள் நட்பை லதாவிடம் ரகசியமாக வைத்து கொண்டாள். ஆதலால் சாலையில் போகும் போதும் வரும் போதெல்லாம் விஜயிடம் பேசுவதை தவிர்ப்பாள். பெரும்பாலும் இரயில் நிலையத்திற்கு வந்த பிறகுதான் இருவரும் பேசி கொள்வார்கள். அதேபோல கல்லூரியில் பேசுவார்கள். இப்போது அலுவலகத்தில். செல்பேசியில் கூட விஜி என்றுதான் அவன் பெயரை பதிய வைத்திருக்கிறாள்.
லதாவிற்கு விஜியை தெரியுமே தவிர அவன்தான் விஜய் என்று தெரியாது. ஆனால் சகோதரன் அருள்நம்பிக்கு தெரியும். முதலில் அவனுக்கு கொஞ்சம் அவர்கள் பழக்கத்தின் சந்தேகம் ஏற்பட்டதுதான். ஆனால் அவனாகவே அவர்கள் நட்பை புரிந்து கொண்டான்.
இந்த நிலையில் விஜயின் அம்மாவுக்கு ஒருமுறை ரொம்பவும் உடம்பு முடியாமல் போய்விட, அப்போது அவருக்கு உடை மாற்றுவது துவங்கி அவர் உடனிருந்த அத்தனை பணிவிடைகளும் செய்தது மகேஸ்வரிதான்.
அன்று அவன் நெகிழ்ச்சியுடன் தோழியின் கைகளை பற்றி கொண்டு, “நீ இல்லாம நான் என்ன பண்ணி இருப்பனு தெரியல மகி” என்று கண்ணீர் வடித்ததோடு அல்லாமல், “அம்மாவுக்கு ஏதாவது ஆகிட்டா என்னால தாங்கவே முடியாது” என்று அவன் அன்று கதறிய கதறல் இப்போதும் அவள் நினைவில் ஆழமாக நின்றிருந்தது. மனதை உலுக்கியது.
ஒரு வேளை அவன் அம்மாவிற்கு ஏதாவது ஆகிவிட்டதோ என்று உள்ளுர பயந்தவளுக்கு அன்று முழுக்க விஜயின் நினைப்பில் வேலையே ஓடவில்லை. நிமிடத்திற்கு ஒரு முறை அவன் ஏதாவது குறுந்தகவல் அனுப்பி இருக்கிறானா என்று தன் செல்பேசியை எடுத்து பார்த்து சோதித்தாள். அதேநேரம் கிடைக்கும் சிறு சிறு இடைவெளிகளில் எல்லாம் அவனுக்கு அழைத்து பார்க்க, அவன் ஒருமுறை கூட எடுத்து பேசவில்லை. அது இன்னும் இன்னும் அவளை கலவரப்படுத்தியது.
அந்த கவலையுடன் சூப்பர்வைஸரிடம், “சார் நான் இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் போகட்டுமா?” என்று கேட்டு பார்க்கவும் அவன் உக்கிரமாகிவிட்டான்.
“ஏற்கனவே உன் பிரண்டு வரல... இதுல நீ வேற போனோமா” என்று ஆரம்பித்து அவளை வைத்து செய்துவிட்டான்.
அவளால் அதற்கு மேல் ஒன்றுமே செய்ய முடியவில்லை. தன் உணர்வுகளை கட்டுப்படுத்த இயலாமல் மேல் தளத்தில் பொருட்கள் வைத்திருந்த படிக்கட்டில் வந்து ஓரமாக அமர்ந்து அப்படியே தலையை பிடித்து தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள்.
அந்த சமயம் யாரோ அவள் பின்னோடு வந்து நிற்கும் அரவம் கேட்டதில் கண்களை துடைத்து கொண்டு அவசரமாக அவள் திரும்பி பார்க்க அந்த சூப்பர்வைஸர் கணேசன்தான் நின்றிருந்தான். அவள் கண்களில் இருந்த கண்ணீர் தடங்களை பார்த்து, “ஏய்... என்னாச்சு மகேஷ்வரி? ஏன் அழுற... நான் சாதாரணமாதான் பேசுனேன்... அதுவும் இல்லாம பொங்கல் சீசன் வேற... இந்த நேரத்துல பில்லிங்ல ஆள் இல்லன்னா ஓனர் எப்படி கத்துவாருனு உனக்கு தெரியாதா?” என்று அவன் தன் பக்க நியாயத்தை விளக்க,
“இல்ல... நான் அதை பத்தி எல்லாம் யோசிச்சு அழல... விஜய் போனே எடுக்க மாட்டுறான்... அவங்க அம்மாவுக்கு வேற உடம்பு சரி இல்லன்னு சொன்னான்... அதான் ஏதாவது பிரச்சனையா இருக்குமோனு” என்றவள் தன் கவலையை அவனிடம் பகிர்ந்து கொள்ளவும் அவன் மூச்சை இழுத்துவிட்டான்.
அவன் தன்னால் அழவில்லை என்று கொஞ்சம் நிம்மதியடைந்தவன், “ஓஒ அப்படியா... நான் கூட நான் திட்டனதுக்குதான் அழுதுட்டிருக்கியோனு நினைச்சேன்” என்று விட்டு,
“ஒன்னும் இருக்காது... நீ கவலைப்படாத” என்று சமாதானமாக பேச, அவள் மனம் அமைதியடையவில்லை. இருப்பினும் கண்களை துடைத்து கொண்டு, “சரி சார்... நான் போய் பில்லிங் பார்க்கிறேன்” என்று விட்டு அவனை கடந்து செல்ல பார்க்க,
“மகேஸ்வரி ஒரு நிமிஷம்” என்று அழைத்து நிறுத்த அவள் அவனை திரும்பி நோக்கினாள்.
“நீ அந்த விஜய்க்காக இவ்வளவு ஃபீல் பண்றது பார்த்தா... ” என்று இழுக்கவும் அவன் கேட்ட விதத்தில் கடுப்பாகிவிட்டவள், “பிரண்டுக்காக பீல் பண்ண கூடாதா சார்” என்று முறைத்தாள்.
“பண்ணலாமே... கண்டிப்பா பண்ணலாம்” என்று அசடு வழிந்தான். அவனை ஏறஇறங்க விசித்திரமாக பார்த்து விட்டு மீண்டும் தன் இடத்தில் வந்து அமர்ந்து வேலையை தொடர்ந்தவளுக்கு முடிப்பதற்கு இரவு பத்திற்கும் மேலாகிவிட்டது.
அவள் பையை எடுத்து கொண்டு கிளம்பி வெளியே வந்த போது யாரோ பின்தொடரும் உணர்வு ஏற்படவும் அவள் துணுக்குற்று திரும்ப கணேசன் தன் பைக்குடன் நின்றிருந்தான்.
“என்ன சார்?” என,
“இல்ல ரொம்ப லேட்டாகிடுச்சே... அதான் உன்னை ட்ராப் பண்ணலாம்னு” என்று கேட்கவும், “இல்ல வேண்டாம்... நான் போயிடுவேன்” என்று விட்டு அவள் பாட்டுக்கு முன்னே நடந்தாள்.
“எங்க வீட்டுல எனக்கு பொண்ணு பார்க்குறாங்க” என்றபடி பைக்கை இயக்கி வந்து அவள் அருகே நிறுத்தி சொல்ல, இதை எதற்கு அவன் தன்னிடம் சொல்கிறான் என்று புரியாமல் பார்த்தாள்.
“இல்ல... அது” என்று திக்கி திணறிவிட்டு பின், “எனக்கு உன்னை பிடிச்சிருக்கு மகேஸ்வரி... நானும் ரொம்ப நாளா உன்கிட்ட சொல்லணும்னு நினைச்சிட்டு இருந்தேன்” என அவள் விழிகள் பெரிதாக விரிந்தன.
அவன் தொடர்ந்து, “உனக்கு சம்மதம்னா சொல்லி... நான் எங்க அம்மா அப்பாகிட்ட சொல்லி உங்க வீட்டுல பேச சொல்றேன்” என, அவள் இதை எதிர்பார்க்கவில்லை. என்ன பதில் சொல்வதென்று அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
‘அந்த சூப்பர் வைஸர்க்கு உன் மேல ஒரு கண்ணு’ என்று விஜய் ஒரு முறை சொல்லியதும், ‘அப்படி எல்லாம் இல்லடா’ என்றவள் மறுத்ததும், ‘எனக்கு அப்படிதான் தோணுது... நீ அவனிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இரு’ என்று விஜய் எச்சிரிக்கை செய்ததும் இப்போது அவள் நினைவில் வந்து குதிக்க அவள் மௌனமாக நின்றுவிட்டாள்.
“மகேஸ்வரி” என்று அவன் குரல் உலுக்கியதில் நிமிர்ந்தவளுக்கு நெருக்கமாக அவன் பார்த்த பார்வை அந்த இரவு நேரத்தில் சங்கடப்படுத்தியது.
“நான் யோசிச்சு சொல்றேன்” என்றவள் அதன் பின் அங்கே நிற்காமல் அடித்து பிடித்து அங்கிருந்து நகர்ந்து இரயில் நிலையம் வந்து சேர்ந்தாள்.
Comments