top of page

Kanavar Thozha - 12

12

மகேஸ்வரி வேலை செய்யும் கல்லூரிகளில் வெள்ளிகிழமை என்றால் விரிவுரையாளர்கள் அலுவலக பணியாளர்கள் என எல்லோரும் கல்லூரி புடவையில்தான் வர வேண்டும். அது அவர்களுக்கான சீருடை.


மற்ற நாளாக இருந்தால் ஒரு சுடிதாரை எடுத்து மாட்டி கொண்டோமா? கிளம்பினோமா என்று இருப்பாள். புடவை என்றால் அதற்கு ஏற்றார் போல காதணி வளையல் முதற்கொண்டு தேர்வு செய்து அணிய வேண்டும்.


எல்லாவற்றிற்கும் மேல் சிவப்பும் வெள்ளையுமான வழவழப்பான அந்தச் சீருடை புடவையை மடிப்பு வைத்து கட்டுவதே பெரும்பாடு. கழன்று விடாமல் இருக்க கிடைக்கும் இடத்தில் எல்லாம் பின்னை குத்தி அதை உடம்போடு ஒட்ட வைத்தது போல கட்டிவிடுவாள்.


லதா இருந்திருந்தால் பின்புறம் பின் குத்தி புடவையை சரி செய்து விட்டிருப்பார்.


இப்படி ஒவ்வொரு வேலைக்கும் அம்மா இருந்திருந்தால்... அம்மா இருந்திருந்தால்... என்று மகி லதாவை பற்றி யோசித்து புலம்பி கொண்டே வேலை செய்தாள்.


அம்மாவிற்கு அழைத்து பேச வேண்டும் என்று திரும்ப திரும்ப தோன்றியது. ஆனாலும் அவள் அதை செய்யவில்லை. தான் செய்த வேலைக்கு அருளே இந்தளவு கோபப்படுகிறான் என்றால் அம்மா எப்படி பேசுவார் என்று நினைக்கவே அச்சமாக இருந்தது. அவர் ரொம்பவும் மனம் உடைந்து பேசிவிட்டால் அதை அவளால் நிச்சயம் தாங்க முடியாது.


அம்மாவின் நினைப்புடனேயே புடவையை கட்டி முடித்தவள் கண்களினோரம் கசிந்த நீரை துடைத்து கொண்டு முகத்தை துடைத்து சிறிதாக ஒரு பொட்டை வைத்தாள்.


தலை குளித்திருந்ததால் ஈரமான கூந்தலை அப்படியே இருபக்கமும் முடிகற்றைகளை எடுத்து கிளப் செய்து முடிந்து கொண்டு அவசர அவசரமாக கதவை மூடி கொண்டு அவள் வெளியே வந்து பைக்கை எடுக்கும் போது பக்கத்து வீட்டு பாட்டி,


“மகேஸ்” என்று குரல் கொடுத்து கொண்டே வந்தார்.


“என்ன பாட்டி?” என்றவள் திரும்ப,


“என்னடி கோலம் கூட போடாம போற?” என்று விசாரிக்க, ‘ஆமா இருக்குற வேலைல கோலம் போடதான் டைம் இருக்காக்கும்... அப்ப அதைதான் ஒரே வேலையா செய்வேன்... இப்போ’ என்று மனதிற்குள் புலம்பி கொண்டவள்,


“இல்ல பாட்டி டைம் இல்ல... அம்மா ஊருக்கு போயிருக்காங்க... எனக்கே ஏகப்பட்ட வேலை” என்று பாஃர்வட் மோடில் பேசி கொண்டே பைக்கில் பையை மாட்டிவிட்டு அவசரத்தில் சாவியை மறந்து விட்டு மீண்டும் அடித்து பிடித்து வீட்டை திறந்து சாவியை எடுத்து கொண்டு அவள் ஓடி வர,


“உங்க அம்மா ஊருக்கு எல்லாம் போக மாட்டாளே எங்கடி போனா?” என்று அப்போதுதான் பாட்டி நிறுத்தி நிதானமாக கேள்வி கேட்டு கொண்டிருந்தார். அவளுக்கு கடுப்பானது.


“அண்ணன் கூட போய் இரண்டு நாள் இருந்துட்டு வர போயிருக்காங்க” என்று சொல்லி கொண்டே அவள் பைக்கை இயக்க இன்று பார்த்து அது இயங்காமல் மக்கார் செய்தது.


பைக்கை கிக் செய்து இயக்கிவிட்டவள், “அப்பாடா” என,


“நேத்து என்னாச்சு தெரியுமா? பூர... ” என்று பாட்டி ஆரம்பிக்கும் போதே,


“நேத்து என்னாச்சுனு நான் நாளைக்கு கேட்குறேன் பாட்டி” என்றவள் அடுத்த நொடியே பைக்கில் பறந்து விட்டாள். பழக்க தோஷத்தில் அவள் பைக் நேராக விஜய் வீட்டின் வாசலில் நின்றது.


‘இருக்குற பிரச்சனைல இங்க ஏன் வந்தோம்’ என்று தலையிலடித்து கொண்டவள் கிளம்பி போய்விடலாம் என்று திருப்பிய போது விஜய் நேற்று வேலை கிடைத்து விட்டதை பற்றி சொன்னது நினைவு வந்தது.


‘எப்படி போவான்... கைல காசு வைச்சு இருக்கானோ என்னவோ... பக்கத்தில இருக்க ஏ ஆர் எஸ் ஹாஸ்பெட்டில்தானே... இந்த வெயில நடந்தே போய் முதல் நாள் அதுவும் வேர்த்து ஒழுக நிற்பான்’


இந்த எண்ணம் வந்த பிறகு அவள் எங்கே செல்ல. தன் வேலைக்கு தாமதமானாலும் பரவாயில்லை என்று வண்டியை ஓரம் கட்டிவிட்டு மாடியேறி சென்றாள்.


“விஜி” என்று குரல் கொடுத்து கொண்டே செருப்பை கழற்றிய போது பலமாக பாட்டு சத்தம் கேட்டது. அதுவும் ஸ்பீக்கரில் பாடி கொண்டிருக்க,


“இன்னும் கிளம்பாம பாட்டு கேட்டுட்டு இருக்கானா? பக்கி” என்று கடுப்படித்து கொண்டே நுழைந்தவள் அவனை திட்டலாம் என்று வந்த போது உள்ளே ஆளே இல்லை.


“விஜி” என்றவள் அழைத்தது அந்த ஸ்பீக்கர் சத்தத்தில் கேட்கவே இல்லை. அதனை அவள் அணைத்து விட்டு திரும்பிய போது அவன் குரல் மெலிதாக கேட்டது.


‘எங்க இருக்கான்’ என்று யோசித்தவளுக்கு குளியலறையில் இருந்து அவன் பாடும் சத்தம் கேட்டது. ஸ்பீக்கரில் பாட்டு நின்று போனது கூட தெரியாமல் அவன் பாடுவதில் மும்முரமாக இருக்க அவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது. வாயை மூடி சிரித்து கொண்டே அவன் என்னதான் பாடுகிறான் என்று குளியலறை வாசலில் காது வைத்து கேட்டாள்.


‘இளம் பிறையினை இதழிடையினில் யார் சூட்டினார்


சிரித்திடும் சிலையை காட்டினார்


எறும்புகள் சுமந்து போகுதே


சர்க்கரைப் பாறை ஒன்றினை


இருதயம் சுமந்து போகுதே


இனிக்கிற காதல் ஒன்றினை


என் சின்ன நெஞ்சின் மீது


இன்ப பாரம் ஏற்றி வைத்ததார்!’


என்று ரசித்து லயித்து பாடியவன் குரலில் தாளலயமே இல்லாவிட்டாலும் அந்த பாடலின் உணர்வு அவன் குரலில் குழைந்து வந்தது.


அதனை கேட்கும் ஆர்வத்தில் அவள் கதவில் சாய்ந்து காதை வைக்கவும், அவன் கதவை திறக்கவும் சரியாக இருந்தது. அவ்வளவுதான்.


“ஏய் ஏய்” என்று தடுமாறி அவள் கதவோட சாய போக விழாமல் கைதாங்கலாக அவளை தாங்கி கொண்டவன் உடலில் ஈரம் சொட்டியது. துண்டை மட்டுமே இடையில் கட்டி இருந்தவன், “மகி” என, அவளுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. உதட்டை கடித்து கொண்டாள்.


இப்படி நடக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அவனுமே எதிர்பார்க்கவில்லை. அவன் நினைத்து ரசித்து பாடி கொண்டிருந்த அவனவளே இப்படி வந்து அவன் கைக்குள் சரிவாள் என்று.


அதுவும் பக்கவாட்டில் சரிந்தவளை விழாமல் பிடிக்க அவன் அவள் இடையை பற்ற நேரிட்டு விட்டதில் அவள் தவித்து போக, அவனோ தன்னை மறந்தான்.


அதுவும் அன்று பார்த்து அவள் புடவையில் இயல்பை விடவும் அதிக அழகாய் தெரிந்ததில் அவன் பிடியும் விலகவில்லை. பார்வையும் சில நொடிகளுக்கு அகலவில்லை. அவன் மூளைக்குள் அந்த பாடல் இன்னும் சத்தமாக ரீங்காரமிட்டது.


‘உடையால் மூடி வைத்தும் இமைகள் சார்த்தி வைத்தும் உன் அழகால் என்னை கொல்கிறாய்


அருவி கால்கள் கொண்டு ஓடை இடை என்றாகி கடலாய் நெஞ்சம் கொள்கிறாய்’ என்ற வரிகளின் கிறக்கத்துடன் அவன் அவளையே பார்த்திருந்ததை அவள் உணரவில்லை.


அவனை அந்த நிலையில் நிமிர்ந்து பார்க்க அவளுக்கு என்னவோ போலிருந்ததால் தலையை தாழ்த்தியபடி சுதாரித்து எழ முயலவும் மனமே இல்லாமல் தன் கைகளிலிருந்து அவளை விடுவித்துவிட்டு,


“எங்கிருந்துடி வந்து விழுந்த நீ” என்று கேட்டவன் முகமெல்லாம் புன்னகை பூசி கொள்ள அவன் தன்னை நக்கல் செய்கிறான் என எண்ணி பதிலுக்கு,


“நீ பாடினியே பாட்டு... அந்த பாட்டுலதான் மயங்கி வந்து விழுந்துட்டேன்” என்று திருப்பி கொடுத்தாள்.


“ஓ... என்னுடைய பாடலை கேட்க ஓடோடி வந்து இப்படி பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டாயோ மகேஸ்வரி?” என்று அவளை கலாய்த்து அவன் குலுங்கி குலுங்கி சிரிக்க,


“போடா” என்று அவன் தோளில் அடித்தாள். அடித்து விட்ட பின்னர்தான் அவன் மேலாடை இன்றி இருந்த வெற்று உடம்பில் அடித்து விட்டதில் முகத்தை சுருக்கி உதட்டை கடித்து தன் நாணத்தை மறைத்து கொள்ள தலையை திருப்பி கொண்டாள்.


பின் அந்த பேச்சையும் மாற்றி, “பாட்டு பேச்செல்லாம் போதும்... கிளம்பு நேரமாவுது... இன்னைக்கு பர்ஸ்ட் டே போய் ஜாயின் பண்ண வேண்டாமா?” என்றாள்.


“ஆமா ஜாயின் பண்ணனும்தான்... ஆனா நீ எதுக்கு வந்த... நானே போயிட மாட்டேனா... பக்கத்துலதானே”


“பரவாயில்ல... கிளம்பு... நான் ட்ராப் பண்றேன்”


“நேத்து அவ்வளவு நடந்த பிறகும் என்னை ட்ராப் பண்ண வந்திருக்கன்னா உனக்கு ரொம்ப மனதைரியம்டி” என்று அவன் சொல்லி கொண்டே துவைத்த துணிகளை வைத்திருந்த பக்கெட்டை எடுத்து கொண்டு காய வைக்க செல்ல,


“நேத்து என்ன நடந்துச்சு” என்று கேட்டாள்.


“நேத்து எதுவுமே நடக்கலயா?” என்று அவன் நின்று அவளை ஆழமாக பார்க்க அவள் உதட்டை பிதுக்கி தோள்களை குலுக்கினாள். அவன் முகம் இறுகியது.


அவளோ துணி பக்கெட்டை அவனிடமிருந்து வாங்கி கொண்டு,


“லேட்டாக போகுது... நீ போய் ட்ரஸ் பண்ணு... நான் காய வைக்கிறேன்” என்றாள்.


“இல்ல இல்ல வேண்டாம்... கொடு... அதுல என் இன்னர்ஸ் எல்லாம் இருக்கு” என்ற அவனிடம், “இதுல என்ன இருக்கு... நான் எங்க அண்ணன்து எல்லாம் கூட காய வைப்பேன்... போ... நீ போய் கிளம்பு” என்று சாதாரணமாக சொல்லி அவனை துரத்திவிட்டு துணிகளை காய வைக்கும் வேலையில் இறங்கினாள்.


உள்ளே சென்றவன் உடையை எடுத்து அணிந்து கொண்டு கண்ணாடியில் தலையை சீவும் போதுதான் அவனுக்கு கடைசியாக அவள் சொன்ன வார்த்தை தலையில் கொட்டியது.


‘அண்ணனு சொன்னாளா... இல்ல இல்ல... அப்படி சொல்லல... அண்ணன்த காய வைக்கிற மாதிரின்னு சொன்னா... ஆனா அது கூட அப்படி அர்த்தம் ஆகுமா...


ஒரு வேளை அவ அண்ணன்கிட்ட பழகுன மாதிரி என்கிட்ட பழகுறனு சொல்லிட்டானா... ஆ... கடவுளே... அப்படி மட்டும் அவ சொல்லிட கூடாது... சொல்லிடவே கூடாது’ என்று மேலே பார்த்து கை கூப்பி கண்களை மூடி கெஞ்சி கொண்டிருக்க,


“டேய் லூசு... கண்ணாடி முன்னாடி என்ன பன்ற” என்று கேட்டதில் அதிரடியாய் கண் விழித்தவனுக்கு உள்ளுர இன்னும் தடதடத்து கொண்டிருந்தது. அவள் அப்படிதான் தன்னை நினைத்து கொண்டிருப்பாளா என்று.


அவளோ சிரித்து கொண்டே, “மர கழன்றுச்சா உனக்கு... காலைல இருந்து ஏடாகுடமா என்னன்னமோ பண்ணிட்டு இருக்க” என,


‘உன்னை காதலிகிறனே... கழலாம என்ன செய்யும்’ என்று மனதிற்குள் கவுன்டர் கொடுத்தாலும் வெளியே சொல்லவில்லை. முகத்தை மட்டும் தூக்கி வைத்து கொண்டான்.


அவள் அண்ணன் என்று சொன்னது சுருக் சுருக் என்று உள்ளே முள்ளாக குத்தி கொண்டிருக்க, ‘அப்படி மட்டும் இருக்க கூடாது’ என்று மீண்டும் மனதிற்குள் ஜபித்தான்.


அவளோ சம்மேளம் போட்டு கட்டிலில் அமர்ந்தபடி, “எவ்வளவு நேரம் கிளம்புவ... லேட்டாகுதுடா” என்று அவனை அவசரப்படுத்தி கொண்டிருக்க,


“உனக்கு லேட்டாகுதுனா கிளம்பேன்டி... எனக்காக யார் உன்னை வெயிட் பண்ண சொன்னது” என்று அவன் இருந்த மனநிலைக்கு சுள்ளென்று விழுந்தான்.


அந்த நொடியே அவள் முகம் சுருங்கி விட, “உனக்காகதானே வந்தேன்... இப்படியா மூஞ்சி காட்டுவ... போ... நான் போறேன்” என்று ரோஷமாக கிளம்பி போக எத்தனித்தவள் கரத்தை பற்றி நிறுத்தி,


“சாரி சாரி... நான் ஏதோ டென்ஷன்ல... நீ இரு... நாம ஒண்ணா போலாம்” என்றான். அவனின் அந்த பிடியிலும் பார்வையிலும் அவள் மனம் மொத்தமாக கரைந்துவிட்டது. அவள் முகச்சுணக்கம் காணாமல் போய்விட,


“சரி சரி நீ கிளம்பி வா... நான் வெயிட் பண்றேன்... இன்னைக்கு ஒரு நாள்தானே... பர்மிஷன் கேட்டுக்கலாம்” என்று அமைதியாக அமர்ந்து கொண்டவள்,


“ஆமா டிபன் என்ன சாப்பிடுவ” என்று கேட்க,


“அது பரவாயில்ல... பார்த்துக்கலாம்” என்றவன் செல்பேசியை எடுத்து பாக்கெட்டில் நுழைத்து கொள்ள,


“இருடா... நான் டிபன் செஞ்சு தர்றேன்” என்றாள்.


“வேண்டாம்டி கிளம்பலாம்” என்றவன் சொல்ல சொல்ல கேட்காமல் முந்தானையை முன்புறம் எடுத்து சொருகி கொண்டு சமையல் மேடை முன் நின்றவளிடம்,


“மகி... வேண்டாம்... உனக்கும் லேட்டாகுது” என்று அவன் என்ன சொல்லியும் கேட்காமல் அவள் பாட்டுக்கு பாத்திரங்களை உருட்ட ஆரம்பித்து விட்டாள்.


“நேத்து நான் வாங்கி வந்த பொருள் எல்லாம் எங்க” என்றவள் கேட்க,


“வேண்டாம்னு சொன்னா கேட்குறியா?” என்றவன் சொன்னாலும் அவள் கேட்டதை எடுத்து கொடுத்தான். அவள் ஒரு நொடி யோசித்து விட்டு பின் என்ன செய்வதென்று முடிவுடன் வேலையை ஆரம்பிக்க,


“என்னடி உப்புமா செய்ய போறியா? அதுக்கு நான் டிபன் சாப்பிடாமலே போவேன்” என்று அவன் சலித்து கொண்டான்.


“உப்புமாதான் ஈஸி வேலை... டைம் சேவ் பண்ணும்... எங்க அம்மா ஏன் தினமும் உப்புமா செய்றாங்கனு இன்னைக்குதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன் தெரியுமா?” என்றாள்.


“இதிலிருந்து தாங்கள் சொல்ல வரும் கருத்து என்னவோ” என்று சிறு நகைப்பும் நக்கலுமாக அவன் கேட்க,


“உப்புமா நல்லது... நானும் அதான் காலைல சாப்பிட்டேன்... இப்போ நீயும் அதான் சாப்பிடணும்” என்றாள்.


“எவ்வ்வ்வவ்வ்வ்ளவு நல்ல எண்ணம்டி உனக்கு” என்றவன் இழுத்து சிரித்து பேசி கொண்டிருக்கும் போதே அவள் தன் வேலையை ஆரம்பித்து பாதி முடித்து விட, அவனோ பின்னிருந்து அவளையே கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தான்.


இதே போல் அவள் பலமுறை தன் வீட்டில் சமையல் செய்திருக்கிறாள். ஆனால் இன்று அவள் உடையும் செய்யும் விதமெல்லாம் பார்க்க புதிதாக மணந்த மனைவியை பார்ப்பது போன்ற உணர்வு.


‘தாலிதான் மிஸ்ஸிங்’ ஏக்க பெருமூச்சுடன் அவள் கழுத்தை பார்த்தவன்,


‘கிராதகி உண்டியல போட்டா’ என்று உள்ளுர வசமாக அவளை திட்டி கொண்டிருக்கும் போதுதான் வாசனை வித்தியாசமாக வந்தது.


“இது உப்புமா வாசனை இல்லயே” என்றான்.


“உப்புமாவுக்கு வாசனை வேறயா” என்று நொடித்து கொண்டவள், “இது உப்புமா இல்ல... கேசரி... உன் பர்த்டேவே செலிபிரெட் பண்ணவே இல்யில்ல... அதான் தோணுச்சு... நேத்து பாயசம் செய்ய வாங்கிட்டு வந்தத எல்லாம் வைச்சு கேசரி செஞ்சுட்டேன்” என்றவள் சூடான அந்த கேசரியை கிண்ணத்தில் கொட்டி தட்டில் கவிழ்த்து,


“இதை நீ கேக்னும் நினைச்சுக்கலாம்... கேசரின்னும் நினைச்சுக்கலாம்” என்றவள் சொல்லி அந்த தட்டை அவன் முன்னே நீட்ட, அவன் கண்கள் பனித்தது.


“எப்படிறி... எப்படிறி... நீ இப்படி இருக்க” என்று கேட்டவன் மனதிற்குள் அப்படியே அவளை மானசீகமாக வாரி அணைத்து கொண்ட போதும் வெளியே அவளிடம்,


“தேங்க்ஸ் மகி” என்று சிறு புன்னகையை மட்டுமே தந்தான்.


“பிரண்டுக்கு எதுக்குடா தேங்க்ஸ் லூசு” என்று எதார்த்தமாக அவன் தலையில் தட்டியவள் ஸ்பூன் எடுத்து அவனுக்கு அந்த கேசரியின் முதல் வாயை எடுத்து ஊட்டிவிட,


‘பிரண்டு... பிரண்டுனு சொல்லியே சாவடிக்குறாளே’ என்று மனதிற்குள் புலம்பி கொண்டே அதனை விழுங்கினான்.


அவள் கண்கள் அவளை ஏக்கத்துடன் பார்த்ததை அவள் உணரவில்லை. மனம் திறந்து அவளிடம் தன் காதலை எப்படி சொல்வது என்று அவனுக்கும் தெரியவில்லை. அதன் பின் இருவருமாக அந்த கேசரியை பகிர்ந்து சாப்பிட்டு முடிக்க,


“சரி நீ வீட்டை பூட்டிட்டு வா... நான் கீழே போய் பைக்கை எடுக்கிறேன்” என்று இறங்கி விட்டாள்.


அவன் கதவை பூட்டி கொண்டே, ‘சான்ஸ இல்ல... அவ என்னை அண்ணன் மாதிரி எல்லாம் பார்க்கல’ என்று விட்டு படிக்கட்டில் இறங்கும் போது ஒருமுறை,


‘அப்படிதான் பார்த்தனு ஒரு வேளை சொல்லிட்டானா... இல்ல இல்ல இருக்கவே இருக்காது... நான் ஒத்துக்க மாட்டேன்’ என்று உள்ளுர நொந்து வெந்து இறுதியாக தன்னை ஒருவாறு தேற்றி கொண்டபடி கீழே வந்தான்.


அப்போது மகியை அவன் வீட்டு உரிமையாளர் பெண்மணி நிறுத்தி வைத்து ஏதோ கேட்பதையும் அவள் பதில் சொல்ல முடியாமல் திணறுவதையும் தூரத்திலிருந்தே கவனித்துவிட்டவன் விரைவாக கீழே இறங்கி வந்து,


“என்னம்மா என்ன விஷயம்?” என்று விசாரிக்க இருவரையும் மாறி மாறி பார்த்தவர்,


“இல்ல உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிட்டதா” என்று தயக்கத்துடன் நிறுத்தினார். அந்த கணமே அவள் முக வாட்டத்தின் காரணம் அறிந்தவன்,


“அப்படி எல்லாம் எதுவும் இல்லமா” என்றவன் அவளிடம்,


“லேட்டாகுது இல்ல நீ போய் பைக்கை எடு மகி” என்று அனுப்பி விட்டு மீண்டும் அவரிடம் திரும்பி,


“என்னமா இத்தனை வருஷமா உங்க வீட்டுல குடி இருக்கன் எனக்கு கல்யாணம்னா உங்களுக்கு சொல்லாம இருப்பேனா? அதுவும் இல்லாம எங்க அம்மா போன பிறகு... எனக்கு அம்மா அப்பா ஸ்தானத்துல இருக்குறது நீங்களும் சாரும்தானே” என்றதும் அவர் அப்படியே தழைந்துவிட்டார்.


“அது எனக்கு தெரியும் விஜய்... ஆனா சில பேர் பேசிக்கிட்டத வைச்சு அப்படி இருக்குமோனு” என்று இழுக்க,


“அப்படி எல்லாம் இல்லமா” என்று உறுதியாக கூற,


“அப்படி மட்டும் இருந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் விஜய்” என்றதும் அவன் ஆச்சரியத்துடன் அவரை நோக்க அவர் தொடர்ந்து,


“உங்க அம்மாவோட விருப்பமும் அதுதான் விஜய்... சமீபமா ஒரு தடவை உனக்கும் மகேஸ்வரிக்கும் கல்யாணம் பண்ணி வைச்சுட்டா நிம்மதியா இருக்கும்னு அவங்க சொன்னாங்க... எனக்கும் அதுதான் சரின்னு தோணுது... நீ மகேஸ்வரியை கல்யாணம் பண்ணிக்கணும் விஜய்... உனக்கு அம்மா ஸ்தானத்துல நான் முன்னாடி நின்னு எல்லாம் செய்வேன்” என்றார்.


அவனுக்கு பேச வார்த்தைகளே வரவில்லை. நெகிழ்ச்சியாக அவரை பார்த்து தலையை மட்டும் அசைத்து விட்டு நகர்ந்தான். அவனுக்கும் இப்போது அதுதானே ஆசை. ஆனால் அவள் மனதில் என்ன இருக்கிறதோ? தெரியவில்லையே.


முகத்தை பார்த்து கண்டுபிடிக்கவும் முடியவில்லையே என்று நினைத்து கொண்டே பைக்கில் ஏற,


“அந்தம்மாகிட்ட என்னடா கதை அடிச்சுட்டு இருந்த... டக்குனு அதெல்லாம் ஒன்னு இல்லனு சொல்லிட்டு வர வேண்டியதுதானே” என்றவள் சொல்லவும் அதற்கு பிறகு எதுவும் பேச வேண்டுமேன்று கூட அவனுக்கு தோன்றவில்லை. அவள் மனதில் தான் என்ன நிலையில் இருக்கிறோம் என்று பல மாதிரியாக அவன் சிந்தித்து கொண்டே வர, பைக் நின்றது.


நின்ற இடத்தை பார்த்தவன், “ஏன்டி கோவில நிறுத்தி இருக்க” என,


“முதல் நாள் வேலைக்கு போற... சாமி கும்பிட்டு போலாம் வா” என்றவள் சொல்ல,


“நீ போய் கும்பிட்டு வா... நான் வரல” என்றான்.


“விஜி”


“எனக்கு மனசு ஒரு மாதிரி இருக்கு... நீ போ... நான் இங்கேயே நின்னு கும்பிட்டுக்கிறேன்” என்றவன் செல்ல அதற்கு மேல் அவனை கட்டாயப்படுத்தாமல்,


“நான் பேகை வண்டிலயே வைச்சுட்டு போறேன்... பார்த்துக்கோ” என்று விட்டு அவள் உள்ளே செல்ல அப்போது முதிய பெண் ஒருவர் கம்பை ஊன்றி கொண்டு வந்து அவனிடம் பிச்சை கேட்டார்.


தன் பர்சை எடுத்து திறந்தவன் அதில் அநாதையாக இருந்த ஒற்றை ஐம்பது ரூபாய் நோட்டை பாவமாக பார்த்து விட்டு, “பாட்டி உன்கிட்ட இருக்குற அளவுக்கு காசு கூட என்கிட்ட இல்ல... நீதான் என் மேல பரிதாபப்பட்டு ஏதாவது கொடுக்கணும்” என அந்த பாட்டி அப்போதும் அங்கிருந்து நகரவில்லை.


“நேத்துல இருந்து எதுவும் சாப்பிடல தம்பி” என்றதும் சட்டென்று மனதை ஏதோ செய்ய யோசித்தவன் மகேஸ்வரியின் பை பைக்கில் மாட்டியிருந்ததை பார்த்து,


“ஒரு நிமிஷம்” என்று அதனை எடுத்து திறந்த போது உள்ளே ஐந்து ரூபாய் சில்லறைகள் இருந்தன. அதனை எடுத்து கொடுத்து அவரை அனுப்பி விட்டவன்,


‘கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைச்ச கதைதான் நம்ம கதை’ என்று சொல்லி கொண்டே அவள் பையை மூட எத்தனித்த போதுதான் அவன் கட்டிய தாலி உள்ளே பத்திரமாக இருப்பதை கண்டான்.


அவன் கண்கள் வியப்புடன் விரிந்தன.


‘நேத்து உண்டியல போட போறன்னு சொன்னா... போடலயா’ என்று அவன் எண்ணி கொண்டிருக்கும் போதே அவள் கோவிலிலிருந்து வெளியே வருவதை பார்த்துவிட்டு அவசரமாக பையை பழைய இடத்திலேயே மாட்டி வைத்தான்.


“இந்தா பிரசாதம்” என்று அவள் தன் உள்ளங்கையை நீட்ட அதிலிருந்த விபூதி குங்குமத்தை நெற்றியில் எடுத்து பூசி கொண்டே,


“மகி... அந்த தாலியை உண்டியல போடணும்னு சொன்னியே போட்டியா? ஒரு வேளை போடலனா இங்கயே போட்டுடு” என்று அவன் சொல்லவும் அவள் போடுகிறாளா பார்க்கலாம் என்றுதான் அவன் அப்படி சொன்னான்.


அவள் முகம் சட்டென்று மாறியது. புருவங்கள் சுருங்கின. அவளுடைய இந்த தவிப்பை ஆர்வத்துடன் அவன் பார்த்திருக்க அவள் இறுதியாக தன் பையை பார்த்து விட்டு பின், “போட்டேனே... நேத்து ஐயப்பன் கோவில் போனே... அங்கே போட்டேன்” என்றாள்.


அதன் பிறகு அவனை நேராக பார்க்க முடியாமல் அவள் தவித்ததை பார்த்தும் அவன் உள்ளம் துள்ளியது. பொய் சொல்கிறாளா? மனதில் ஒன்றை வைத்து கொண்டு வெளியே வேறு முகம் காட்டுகிறாளா?


அப்போது மகேஸ்வரி பைக்கில் ஏறிவிட்டு, “ஏறிட்டியா விஜி” என்று கேட்க,


“ம்ம்ம் ஏறிட்டேன்” என்று அவள் பின்னே அமர்ந்தவன் விழிகள் அவளை ஆசையுடன் தழுவின. பைக்கை அவள் வேகமாக ஓட்ட காற்றில் பறந்த அவள் கூந்தல் அவன் மார்பின் மீது மோதி விளையாடியதை ரசித்து கொண்டே வந்தவனுக்கு அவள் வண்டியை நிறுத்தியது கூட தெரியவில்லை.


“விஜி என்ன இறங்கு... ஹாஸ்பெட்டில் வந்திருச்சு” என்று சொல்ல அவன் பெருமூச்செறிந்து, “வந்திருச்சா?” என்று விட்டு இறங்கும் போது அவள் கை முட்டியில் லேசாக இடித்து விட்டான்.


“ஆ ஆ” என்றவள் வலியுடன் முனக,


“லேசாதானேடி கை பட்டுச்சு” என்றவன் புரியாமல் பார்க்க, “அது இல்ல” என்றவள் தன் காயத்தை தூக்கி காட்டி,


“நேத்து பைக்ல இருந்து விழுந்துட்டேன்” என்றாள்.


“அடிப்பாவி... என்னடி இப்படி அடிப்பட்டு இருக்கு... மருந்து எதுவும் போடலயா?”


“அதெல்லாம் எதுக்கு... தானாகவே சரியாகிடும்” என்றவள் அசட்டையாக கூற,


“லூசு லூசு” என்று திட்டியவன், “வண்டிய ஓரமா நிறுத்திட்டு வெயிட் பண்ணு” என்று சொல்லி கொண்டே அவன் உள்ளே சென்றான்.


“டேய் எங்க போற... நான் கிளம்பனும்... லேட்டாகுது” என்று சொல்ல, “வந்திடுறேன் இங்கேயே வெயிட் பண்ணு” என்று அங்கிருந்த மருந்தகத்திற்கு ஓடினான்.


தன்னிடமிருந்த அந்த ஒற்றை ஐம்பது ரூபாயையும் செலவு செய்து அவளுக்கு மருந்து வாங்கி வந்து, “கையை காட்டு” என,


“இந்த காயத்துக்கு போயா மருந்து வாங்க ஓடின” என்றவள் அவனை ஆச்சரியத்துடன் பார்க்க,


“காட்டுனு சொன்னேன்” என்று அவனே அவள் கரத்தை தூக்கி பிடித்து மருந்தை போட்டுவிட்டு,


“இந்த மருந்தை பைல வைச்சுக்கோ.. அப்பப்போடு... சீக்கிரம் சரியாகிடும்” என்றான்.


“சரி கொடு” என்று அலுப்பாக அதனை வாங்கி பையில் வைத்தவள் அவனை பார்த்து, “சரி நான் கிளம்புறேன்... நீ உள்ளே போ சீக்கிரம்... ஆல் தி பெஸ்ட்” என்று கை நீட்ட,


“எதுக்குடி ஆல் தி பெஸ்ட்” என்று சொல்லி நகைக்க,


“கைய கொடுறா” என, “சரி ஓகே” என்று அவன் அவள் கையை பற்றி குலுக்கிய போது அதில் ஐநூறு ரூபாய் பணமிருந்தது.


“மகி எதுக்கு” என்று சொல்லும் போதே, “வைச்சுக்கோ செலவுக்கு பை” என்றவள் அடுத்த கணமே பைக்கில் பறந்துவிட்டாள். அவன் கொடுத்தால் வாங்கி கொள்ள மாட்டான் என்று தெரிந்து கை கொடுப்பது போல வைத்து விட்டாள் என்பதை புரிந்தவன் மனம் அவள் சென்ற திசையிலேயே நகர்ந்தது.


திகைப்புடன் என்ன பெண் இவள்? எதற்கு இவள் இந்தளவு தனக்கு செய்கிறாள் என்று யோசித்து யோசித்து அயர்ந்து போனவனுக்கு அது நட்பு காதல் என்று எதுவாக இருந்தாலும் அவள் தனக்கே தனக்கு வேண்டுமென்று தோன்றியது.


‘பொக்கிஷம்டி நீ... உன்னை யாருக்காகவும் எதுக்காவும் விட்டு கொடுக்க மாட்டேன்டி... இன்னைக்கு இல்லாட்டியும் ஒரு நாள் நான் உனக்கு நிறைய செய்வேன்... பணமா சொத்தா சந்தோஷமா எல்லாத்தையும் போதும் போதுமென்றளவுக்கு உனக்கு கொடுப்பேன்... உனக்கே உனக்குனு கொடுப்பேன்... ஆனா உன்னை மட்டும் எனக்கே எனக்குன்னு வைச்சுப்பேன்’ என்று மனதிற்குள் சொல்லி அவளுக்காக ஏங்கி தவிக்கும் தனது காதலை பத்திரமாக மூடி கொண்டுவிட்டு அந்த மருத்துவமனை வளாகத்திற்குள் சென்று தன்னுடைய முதல் நாள் வேலையை வெற்றிகரமாக துவங்கினான்.


அவனுக்கு பயிற்சி தருவதற்கு அங்கே பணியில் இருக்கும் இளைஞன் கூடவே சுற்றி என்னென்ன செய்ய வேண்டுமென்று சொல்லி கொடுத்தான். அதேநேரம் அவன் அமரும் இடம் மற்றும் கணனியையும் காட்டி அவனுடைய பணிகளை விவரிக்க அவனோ அந்த இளைஞன் சொன்னதை எல்லாம் புன்னகை முகமாகவே கேட்டான்.


வந்ததிலிருந்து அவனது விரிந்த உதடுகள் மில்லி அளவுக்கு கூட குறையாததை பார்த்து அதிசயித்து, “எப்பவுமே நீங்க இப்படிதான் சிரிச்ச முகமா இருப்பீங்களா விஜய்” என,


“அப்படி எல்லாம் இல்ல” என்றான்.


“அப்புறம் இன்னைக்கு என்ன ஸ்பெஷல்”


“இன்னைக்கு என்னோட நாளை தொடங்கி வைச்சவங்கதான் ஸ்பெஷல்” என்று சொல்லும் போதே அவன் முகத்தில் வழிந்த புன்னகையை புரிந்தவனாக,


“ரைட்டு புரிஞ்சு போச்சு” என்று தோளில் தட்டியவன்,


“ஆனா இது பிரைவட் ஹாஸ்பெட்டில் விஜய்... சிரிச்சுக்கிட்டே நீங்க கொடுக்குற பில்லை பார்க்குறவன் காண்டாயிடுவான் பார்த்துக்கோங்க” என்றான்.


“அது சரிதான்” என்று இருவருமாக பேசி சிரித்து கொண்டே வர அவனை சட்டென்று ஒரு அறை வாசலில் நிறுத்தி,


“ஆ விஜய்... இன்னைக்கு இந்த பேஷன்ட் டிஸ்சார்ஜாவங்க... இந்த பில் ரிப்போர்ட்ஸ் எல்லாம் அவங்க கிட்ட கொடுக்கணும்” என்று சொல்லி அந்த இளைஞன் காட்டிய அறையிலிருந்த பெண்ணை பார்த்த விஜயின் புன்னகை அந்த நொடியே சிதலமடைந்தது.


அவன் காட்டிய அறையில் பூரணி சோர்ந்த நிலையில் படுத்திருக்க அவளது குடும்ப உறுப்பினர்கள் சிலர் உள்ளே நின்றிருந்தார்கள்.


விஜய் பதட்டத்துடன், “என்னாச்சு என்ன பிரச்சனை?” என்று அருகே நின்றவனிடம் விசாரிக்க,


“சூசைட் கேஸ்... தூக்க மாத்திரை சாப்பிட்டாங்க... நைட் வந்து அட்மிட் பண்ணாங்க... இப்போ ஒன்னும் பிரச்சனை இல்ல” என்றவன் அதன் பிறகு பேசியது எதுவும் விஜய் காதில் விழவே இல்லை.


பிரகாசமாக ஒளி வீசிய வானத்தில் திடீரென்று சூழும் மழை மேகங்கள் போல அந்த செய்தியை கேட்ட விஜயின் முகத்தில் ஒளிர்ந்த பிரகாசமும் புன்னகையும் சட்டென்று மறைந்து மொத்தமாக இருண்டு விட்டது.


0 comments

Commentaires

Noté 0 étoile sur 5.
Pas encore de note

Ajouter une note
© KPN NOVELS COPY PROTECT
bottom of page