Kanavar Thozha - 11
- Monisha Selvaraj
- Nov 25, 2023
- 9 min read
11
சந்திரசேகரன் சரஸ்வதி தம்பதிகளுக்கு விஜயேந்திரன் உட்பட மூன்று ஆண் பிள்ளைகள் மற்றும் இரண்டு பெண்கள். மூன்று சகோதரர்களும் ஒன்றாக ஒரே வீட்டில்தான் வசிக்கிறார்கள்.
ஆறு வருடம் முன்பு சந்திரசேகரன் உடல்நலக்குறைவால் இறந்துவிட மூத்தவன் அரவிந்தனும் விஜயேந்திரனும்தான் லாரி வியாபாரத்தின் முழு பொறுப்பையும் கையிலெடுத்து கொண்டார்கள். இன்று அவர்கள் குடும்பத்தின் பெயரில் ஐம்பதிற்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் கனராக வாகனங்கள் ஜே.ஸி.பிகள் போன்றவை ஓடி கொண்டிருந்தன.
தமையன்களை விட ஏழு வயது இளையவனான யுகேந்திரன் சிவில் இஞ்சனியருக்கு படித்து விட்டு தன் அண்ணன்கள் உதவியுடன் சொந்தமாக ஒரு கட்டுமான நிறுவனத்தை துவங்கி நடத்தி வருகிறான். அவனுடைய வியாபாரத்தை பொறுத்த வரை லாப நஷ்டங்கள் என ஏற்ற இறக்கங்கள் கொஞ்சம் அதிகம்தான். குடும்ப வியாபாரமான லாரி வியாபாரத்தில் அவர்களுக்கு நல்ல லாபம் வருவதால் இதன் லாப நஷ்டங்கள் அவர்களுக்கு பெரிய விஷயம் இல்லை.
அதுவும் சமீபமாக லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவராக மூத்தவர் அரவிந்தன் தேர்ந்தேடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் குடும்பத்திற்கு இப்போது பணத்துடன் பதவியும் சேர்ந்து கொண்டது.
இவர்களின் இந்த வளர்ச்சிக்கு எல்லாம் மூலாதாரம் சந்திரசேகரனும் அருள்சாமியும் வாங்கிய முதல் லாரிதான்.
அந்த பிணைப்பில்தான் லதாவுடன் விஜயேந்திரனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதும் பின் அது நின்று போனதும். அதன் பிறகு இரண்டாவது மகளான ஸ்ரீதேவியின் நாத்தனார் ராஜலக்ஷ்மியை விஜயேந்திரனுக்கு மணமுடித்து வைத்தார்கள்.
இவர்கள் எல்லோரையும் விடவும் இளையவள் மற்றும் கடைக்குட்டி ஜெயதேவிதான். கடைசி மகளுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளும் ஏகபோகமான அன்பும் அவளுக்கு கிடைத்திருந்தது.
மூத்தவர் அரவிந்தன் எப்போதும் முறைத்து கொண்டிருக்கும் பேர் வழி. அவருக்கு பிறகு பிறந்த ஸ்ரீதேவிக்கு விரைவாக திருமணம் முடிக்கப்ட்டு கணவர் வீட்டிற்கு சென்று விட்டதால் பெரிதாக அக்கா தங்கை பிணைப்பு எதுவும் ஜெயதேவிக்கு இருந்ததில்லை.
யுகேந்திரனும் ஜெயதேவியும் கிட்டத்தட்ட ஒரே வயது கொண்டவர்கள் என்பதால் அவனுடனும் ஜெயதேவிக்கு எப்போதும் சண்டைதான். ஆதலால் ஜெயதேவிக்கு மிக மிக நெருக்கமானவர் விஜயேந்திரன்தான். பார்த்து பார்த்து தங்கை கேட்டதை எல்லாம் அவர்தான் வாங்கி கொடுத்தது செய்தது எல்லாம்.
வியாபாரத்தில் உயர்ந்து அவர்கள் வாழ்க்கை தரமும் உயர்ந்து கொண்டிருந்த சமயத்தில்தான் ஜெயதேவி அழியா கலங்கத்தையும் அவமானத்தையும் தன் குடும்பத்திற்கு தேடி வைத்துவிட்டார். பள்ளி படிக்கும் போதே அவர்கள் நிறுவனத்தில் பணிபுரிந்த லாரி கிளீனர் பையனை இழுத்து கொண்டு ஓடிவிட்டாள். அது கூட அவர்களுக்கு வெறும் செய்தியாக மட்டும்தான் கிடைத்தது.
அவர்கள் மகளை எங்கெங்கோ தேடி பார்த்தார்கள். ஆனால் அவள் கிடைக்கவில்லை. இருவரும் ஏதோ வடமாநிலத்திற்கு சென்று விட்டதாக பின்னர் தெரிய வந்தது. அவர்கள் குடும்பத்தினர் யாரும் வெளியே தலை காட்ட முடியாதளவுக்கு அசிங்கப்பட்டும் அவமானப்பட்டும் போனார்கள். யாராலும் ஜெயதேவி செய்ததை ஜீரணித்து கொள்ளவும் முடியவில்லை. அத்தனை சீக்கிரத்தில் மறக்கவும் முடியவில்லை.
மீண்டும் ஒரு வருடம் கழித்து ஜெயதேவி கணவனை இழந்துவிட்டு கையில் குழந்தையுடன் வந்து நின்ற போது அவளை ஏற்று கொள்ளுமளவுக்கு பெரிய மனது அவர்கள் குடும்பத்தினர் யாருக்கும் இல்லை. அவளாக இழுத்து விட்டு கொண்டதுதானே என்று அவள் மீது அவர்கள் இரக்கப்படவும் இல்லை.
உண்மையில் ஜெயதேவியும் அதை எதிர்பார்க்கவில்லை. தன் தவறு அவருக்கு அப்போது நன்றாகவே புரிந்திருந்தது. இருப்பினும் ஒரு பாதுகாப்பிற்காக தங்கள் குடும்பம் வசிக்கும் பக்கத்து தெருவிலேயே வீடு பார்த்து தங்கினார்.
யாரிடமும் உறவு கொண்டாடாவிட்டாலும் ஒரு வேளை தனக்கு ஏதாவது ஆகிவிட்டால் தன் மகனுக்கு தன் குடும்பத்தினர் இருப்பார்கள் என்ற நப்பாசைதான். வேறென்ன.
அன்பும் பாசமும் அளவுக்கு மீறி கிடைக்கும் போது அதன் அருமை தெரிவதில்லை. அதனை உதாசீனப்படுத்தி உதறி தள்ளிவிட்ட சென்ற பின் அதற்காக என்ன ஏங்கினாலும் மீண்டும் கிடைப்பதில்லை.
ஜெயதேவிக்கும் அப்படித்தான். கை தவறவிட்ட அந்த அன்பும் அரவணைப்பும் மீண்டும் அவருக்கு கிடைக்கவே இல்லை. படிப்பும் இல்லாமல் போனதில் வாழ்க்கையில் சுயமாக நிற்பதற்கும் ஒரு குழந்தையை வளர்பதற்கும் ஜெயதேவி நிறைய சிரமங்களை அனுபவிக்க நேரிட்டது. கிட்டத்தட்ட அவர் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளுமே போராட்டம்தான்.
வீட்டு வேலைகள் சமையல் வேலைகள் செய்து உடலை வருத்தி உழைத்த போதும் வயிற்றுக்கும் வாய்க்கும் பற்றாத நிலைதான். நிறைய நாட்கள் பசி பட்டினியுடனே இருந்ததனாலேயே அவர் உடல் நோய்வாய்ப்பட்டு விரைவாக அவரை மரணமும் தழுவி கொண்டது.
ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தன் குடும்பம் தன்னை மன்னித்து ஏற்று கொள்ளும் என்று எதிர்பார்த்து காத்திருந்தவருக்கு பூரணி அவர்களை தேடி வந்து பேசிய போது அது நடக்கவே நடக்காது என்று ஒருவாறு புரிந்து போனது.
தன் குடும்பம் தன்னை எந்த காலத்திலும் மன்னிக்காது என்பதை உணர்ந்து விட்டவர் விஜய் பூரணி இணைவதை பற்றி யோசிக்கவும் விழையவில்லை.
அதுவும் இல்லாமல் பூரணியை மகன் காதலித்தால் அவனுக்கு தேவையில்லாத சங்கடங்களும் பிரச்சனைகளும் மட்டுமே வரும் என்பதை முன்பே கணித்தவர், மகேஸ்வரிதான் அவனுக்கு சரியான இணை என்பதையும் தீர்மானித்து அந்த எண்ணத்தை அவனுக்குள்ளும் விதைத்துவிட்டு சென்றிருந்தார்.
அவர் போட்ட அந்த விதைதான் விஜயிற்குள் வேர்விட்டு வளர்ந்து இப்போது விருட்சமாக நிற்கிறது. அதுவும் சிரிக்கும் போது சிரித்து, அழும் போது அழுது, தோள் சாய்த்து தேற்றி என்று அவன் சுகதுக்கம் அத்தனையிலும் சகியாக உடன் நின்றவளை சகதர்மினியாக ஆக்கி கொள்வதில் தவறென்ன என்ற எண்ணம் அவனுக்குள் ஆழமாக வலுபெற்றுவிட்டது.
ஆனால் அவள் அதற்கு சம்மதிப்பாளா என்று சந்தேகமும் சிறு தயக்கமும்தான் அவனை அவளை விட்டு தள்ளி நிற்க வைத்தது. மற்றபடி அவன் மனதார அவளை தன் மனைவியாகவே பாவிக்க ஆரம்பித்துவிட்டான். அதற்கு இன்று நடந்த சம்பவமும் தூபம் போட்டிருந்தது.
அவளை உளமார நேசிக்க ஆரம்பித்து விட்ட நிலையில் அவளை விஜயேந்திரன் திட்டமிட்டு அவமானப்படுத்தி இருப்பதை அவனால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. அதற்கு ஒரு வகையில் தானும் காரணம் என்று யோசிக்கும் போதே அவன் உள்ளம் வேதனையில் புழுங்கியது. துடித்தது.
எந்த குடும்பத்துடன் தனக்கு உறவு இல்லை, இனி எப்போதும் எந்த உறவும் வைத்து கொள்ள கூடாது என்று திட்டவட்டமாக தீர்மானித்து ஒதுங்கி நின்றானோ இன்று அவனாகவே அவர்களை எல்லாம் நேருக்கு நேராக சந்திக்க சென்றான். மகேஸ்வரிக்காக!
அவன் உள்ளே நுழைந்த சமயத்தில் அவர்கள் வீட்டிலும் ஒரு முக்கிய முடிவுக்கான சந்திப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது. அந்த முக்கிய முடிவு வேறொன்றும் இல்லை. பூரணியின் கல்யாண பேச்சு.
குடும்பத்தின் அத்தனை நபர்களும் முகப்பறையில் ஒன்றுகூடி பேசி கொண்டிருக்க பூரணி அறைக்குள் அவளுடைய பெரிய அத்தை மகனான சிவாவிடம் புலம்பி கொண்டிருந்தாள்.
“போச்சு சிவா எல்லாம் முடிஞ்சு போச்சு”
“அப்படி மட்டும் சொல்லாத பூரணி... உன்னை மட்டும்தான் நான் மலை போல நம்பி இருக்கேன்”
“மலையா என் சைட்ல இருந்து ஒரு பிடி மண்ணு கூட தேறாது... இன்னைக்கு நடந்த சம்பவம் அந்த மாதிரி”
“என்னதான் நடந்துச்சு... சொல்லி தொலையேன்” என்றதும் அவள் காலையில் விஜய் வீட்டிற்கு சென்றதிலிருந்து நடந்த அத்தனையும் சொல்லி முடித்தவள்,
“எல்லாம் அந்த எதிர் வீட்டு பிசாசால... அவதான் காரியத்தை கெடுத்துட்டா” என,
“உளராத... உங்க அப்பாதான் வந்து காரியத்தை கெடுத்தாரு... அந்த எதிர் வீட்டு பொண்ணு உன்னை காப்பாத்தி இருக்கு... அவ மட்டும் இல்லனா... உன்னோட சேர்த்து அந்த விஜயையும் வகுந்து இருப்பாரு” என்றதும் அவள் முகத்தை சுருக்கி கொண்டு,
“அப்படி எல்லாம் நான் விஜயை விட்டுட வேணா... நான் எங்க அப்பாகிட்ட பேசி இருக்க மாட்டேனா?” என்ற பூரணியால் தன் தோல்வியை அப்போதும் ஒப்பு கொள்ள முடியவில்லை.
சிவா உடனே, “அப்படியா... சரி இப்போ வெளியே போய் உங்க அப்பாக்கிட்ட கல்யாணம் வேணாம்னு சொல்லேன் பார்ப்போம்” என்றதும்,
“இனிமே நான் என்ன சொன்னாலும் அவர் கேட்கவும் மாட்டாரு... என்னை நம்பவும் மாட்டாரு” என்றவள் குரல் ப்யூஸ் போன பல்பாக உள்ளே போய்விட சிவாவும் கிட்டத்தட்ட அப்போது அமைதியாகிவிட்டான். இது அவள் வாழ்க்கை சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமில்லை. அவன் சம்பந்தப்பட்டதும் கூட.
ஏனெனில் அவனுக்கும் அவளுக்கும்தான் அவர்கள் திருமணம் பேசி கொண்டிருக்கிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் விருப்பத்தை கேட்காமல்.
இரண்டாவது மகள் ஸ்ரீதேவிக்கு பிறந்தவன்தான் சிவா. அதுவும் மூன்று பெண் குழந்தைகளுக்கு பிறகு பிறந்தே ஒரே ஆண் குழந்தை அவன்.
அதுவும் அவன் வீட்டில் அக்கா அம்மா என்று எல்லாமே பெண்களின் ராஜ்ஜியம் என்பதால் தான் நினைத்ததை தைரியமாக பேசும் சூழ்நிலையும் இல்லை. சுதந்திரமும் அவனுக்கு இல்லை.
ஸ்ரீதேவி தனது மூத்த மகளை அண்ணன் அரவிந்தன் மகனுக்கு கட்டி கொடுத்திருக்க அடுத்த இரண்டு மகளையும் அசலில் கொடுத்திருந்தார். ஆனால் மகன் விஷயத்தில் பூரணிதான் தன் வீட்டு மருமகள் என்பதில் உறுதியாக இருந்தார்.
அதுவும் பூரணி பிறந்த முதல் நாளிலேயே முடிவு செய்து எல்லோர் மூளைக்குள்ளும் அந்த எண்ணத்தை ஏற்றிவிட்ட போதும் பூரணி சிவாவின் மூளைக்குள் மட்டும் அது ஏறவே இல்லை.
சிவா தன்னுடன் கல்லூரியில் படித்த அனுஷ்யாவை காதலித்தான். ஆனால் வீட்டில் சொல்லும் தைரியம் அவனுக்கு இல்லை. இந்த விஷயம் பூரணிக்கு மட்டும்தான் தெரியும்.
இந்த நிலையில் பூரணி விஜயை பார்த்து காதல் கொண்டதில் அவளை விடவும் அதிகமாக சந்தோஷத்தில் மிதந்தது சிவாதான். அதேநேரம் விஜயிற்கும் அவளுக்கும் இடையில் முட்டி கொண்டதென அறிந்த போது அவர்களை விடவும் அதிக வருத்தம் கொண்டதும் சிவாதான்.
பூரணி விஜயை திருமணம் செய்தால் தன் ரூட் தானாகவே கிளயாராகிவிடும் என்று நினைத்தான். அதனால்தான் விஜயிற்கு வேலை வாங்கி கொடுத்து அவர்கள் காதல் பயிரை வளர்க்க சிவா அத்தனை முனைப்பு காட்டினான்.
ஆனால் அவன் போட்ட திட்டமெல்லாம் மண்ணோடு மண்ணாகி திரும்பியும் கோட்டை எல்லாம் அழித்து முதலிலிருந்து போடுவது போல அவர்கள் நிலை ஆரம்பித்த இடத்திற்கே வந்தது.
“என்ன சிவா சைலன்ட் ஆகிட்ட... இப்போ என்ன பண்றது? ஏதாவது சொல்லு” என்று பூரணி கேட்டு அவன் கவலையை கிளறி விட
“என்னால ஒன்னுமே பண்ண முடியாது பூரணி... எங்க அம்மா நான் சொல்றதை கேட்காது... அது நம்ம கல்யாணத்தை நடத்திட்டுதான் மறுவேலை பார்க்கும்” என்றான்.
“ஹம்... இப்போ எங்க வீட்டுலயும் அதான் நிலைமை” என்று பெருமூச்சு விட்டவள் பின் மீண்டும்,
“நீ உன் ஆளு அனுஷயாகிட்ட பேசி பாரேன்” என்றாள்.
“என்னத்த பேச... ஓடி போயிடலாம் வா ன்னு கூடதான் அவளை நான் கூப்பிட்டு பார்த்துட்டேன்... ஆனா அவ ஒருத்திதான் இந்த உலகத்துலயே பொறுப்பாளி மாதிரி பேசுறா
அவங்க வீட்டுல அவதான் மூத்தபொண்ணாம்.. இரண்டு தங்கச்சிங்க இருக்காங்க... நான் ஓடி போயிட்டா என் தங்கச்சிங்க வாழ்க்கை என்னாகும்னு கேட்குறா”
“சுத்தம் நீ இதுக்கு வேற யாரையாவது காதலிச்சிருக்கலாம்”
“ஏன்... நீ கூடதான் அந்த விஜய்க்கு பதிலா வேற யாரையாவது காதலிச்சிருக்கலாம்... வீட்டுல பேசறதுக்கு ஒரு சின்ன சான்ஸ் கிடைச்சிருக்கும்... ஏற்கனவே சர்ச்சைல இருக்கவனை காதலிச்சு இன்னும் அது சர்ச்சையானதுதான் மிச்சம்”
“எனக்கு இப்பவும் விஜய்தான் வேணும்” என்று முரண்டியவளிடம்,
“ஆமா... நீதான் அவன் வேணும்கிற... ஆனா அவன் ஒன்னும் பிடி கொடுக்குற மாதிரியே தெரியலயே... அதுவும் இல்....லாம அவன் உன் எதிர் வீட்டு எதிரியைதான் லவ் பண்றா.....னோனு எனக்கு ஒரு டவுட் இருக்கு” என்றவன் இழுத்து இழுத்து தன் சந்தேகத்தை சொல்லி முடிக்க அவளுக்கு கோபம் சரமாரியாக ஏறியது.
“போடா டேய்... உன் டவுட்ல டைம் பாமை போட... அப்படி எல்லாம் இல்ல... அவங்க லவ் எல்லாம் பண்ணல... அவங்க ப்ரண்ட்ஸ்... பிரண்ட்ஸ் மட்டும்தான்” என்றவள் ஆணி அடித்தது போல அழுத்தி சொன்னது சிவாவிற்கு இல்லை. தனக்கு தானே.
அதேசமயம் அவளுக்கு வெளியே விஜயின் குரல் கேட்டது.
“என்ன எங்க வீட்டுல விஜய் வாய்ஸ் கேட்குது”
“அது உன் மன...பிராந்தி” என்றான்.
“பிராந்தியா?”
“பிராந்தி இல்லடி... மன..பிராந்தி... இலூஷன் பிரமை” என்றவன் விளக்கம் தர,
“இல்ல எனக்கு அப்படி தெரியல... நான் எதுக்கும் செக் பண்ணிட்டு வரேன்” என்று அறை கதவை திறந்து அவள் மெல்ல எட்டி பார்த்தாள்.
மொத்த குடும்பமும் முகப்பறையில் குவிந்திருக்க, அவர்களுக்கு இடையில் விஜய் நின்றிருந்தான்.
அவனை பார்த்து அதிர்ச்சியுண்டவள் நம்ப முடியாமல் இரண்டு மூன்று முறை கண்களை கசக்கிவிட்டு பார்க்க, “நான் அப்பவே சொன்னேனா மனபிராந்தினு” என்று விஷயம் தெரியாமல் சிவா அவள் காதிற்குள் உளற,
“பிராந்தியும் இல்ல விஸ்கியும் இல்ல... உண்மையிலேயே வந்து இருக்கான்... நம்ம வீட்டாளுங்க இடைல நின்னு பேசிட்டு இருக்கான்” என்று அவள் விழிகள் அகல விரிய கூற,
“உனக்கு மிடில் ஆபலங்கென்டால எதுவும் அடிப்படலயே” என்று நேரம் காலம் தெரியாமல் அவன் அவளை கலாய்த்து கொண்டிருக்கவும், “செருப்பு” என்று கடுப்பானவள்,
“நான் வீடியோ கால் போடுறேன்... நீயே பாரு” என்று அவனுக்கு காணொளி அழைப்பை போட அவனுமே அந்த காட்சியை பார்த்து வியப்புற்றான்.
“இட்ஸ் ரியலி எ மெடிக்கல் மிராக்கில் பூரணி” என்றான்.
அவன் சொன்னது போலவே அங்கே அப்படி ஒரு மிராக்கில்தான் நிகழ்ந்து கொண்டிருந்தது.
அரவிந்தன் மற்றும் விஜயேந்திரன் நடுநாயகமாக சோபாவில் அமர்ந்திருக்க, பாட்டி சரஸ்வதி பக்கவாட்டில் இருந்த அகலமான இருக்கையில் அமர்ந்திருந்தார்.
உடல் பெருத்துவிட்டதில் முன்பு போல வேகமாக எழவும் நடக்கவும் முடிவதில்லை. மற்றபடி பாட்டியின் உடலிலும் தோற்றத்திலும் இன்னும் திடமும் கம்பீரமும் இருந்தது.
அவர்களை தவிர்த்து அங்கிருந்த மற்றவர்கள் எல்லாம் ஓரமாக பிளாஸ்டிக் நாற்காலிகளில் அமர்ந்து கொண்டும் சிலர் நின்று கொண்டும் இருந்தார்கள்.
அந்த வீட்டின் பெரியவர்கள் ஒருவர் விடாமல் அங்கே கூடி இருந்ததை பற்றிய எந்த யோசனையும் இல்லாமல் விஜய் உள்ளே நுழைந்துவிட்டான். அதுவும் அனுமதி இல்லாமல்.
அந்த வீட்டில் பூரணி தவிர யாருக்கும் அவனை தெரியாது. விஜயேந்திரன் கூட இன்று காலையில்தான் அவனை நேருக்கு நேராக பார்த்தார்.
மற்றவர்களுக்கும் அப்படிதான். அவனை யாரென்று தெரியாவிட்டாலும் அவனை பார்த்ததுமே எல்லோருக்குள்ளும் ஒரே மாதிரியான யூகம் வந்தது. அதற்கு காரணம் அவனின் முகச்சாயல்.
சரஸ்வதியும் மற்றவர்களும் அந்த ஆச்சரியமான முகச்சாயலை பார்த்து வியப்பில் இருக்க விஜயேந்திரன் மட்டும் பொங்கி எழுந்து, “எங்க வீட்டுக்குள்ளேயே வந்திருக்க... என்ன தைரியம் உனக்கு வெளியே போடா” என்று சீறினார்.
ஒரே இடத்தில் அவர்கள் அத்தனை பேரையும் பார்த்த நொடி விஜயும் கொஞ்சம் திகைத்துவிட்ட போதிலும் விஜயேந்திரனின் சீறல் அவனை உசுப்பிவிட,
“நீங்க என் வீட்டுக்குள்ள அத்துமீறி நுழையும் போது நான் நுழைய கூடாதா?” என்று நேருக்கு நேராக நின்று அவருக்கு பதிலடி கொடுக்க எல்லோரும் அதிர்வுற்றனர்.
“விஜயா... யார் இவன்... உனக்கு தெரியுமா?” அரவிந்தன் தன் சந்தேகம் சரிதானா என்ற ஆர்வத்தில் கேட்க அவருக்கு முன்னால் முந்தி கொண்டு விஜய் பதில் உரைத்தான்.
“நான் விஜய்” என எல்லோரின் முகமும் வெளிறியது. ‘அவனேதான்’ என்று அவர்கள் மனக்குரல் எல்லாம் ஒன்றாக ஆமோதிக்க விஜய் மேலும்,
“என் பேர் சொன்னதும் உங்களுக்கு நான் யார்னு தெரிஞ்சிருக்கும்... இருந்தாலும் சொல்றேன்... நான்தான் ஜெயதேவியோட மகன்” என்று அழுத்தி கூற சரஸ்வதியின் கண்கள் பேரனை ஆசையுடன் தழுவியது.
ஆனால் மற்றவர்கள் விழிகளில் குழப்பம் வியப்பு என்று ஆளுக்கு தகுந்தார் போல வெவ்வேறு மாதிரியான உணர்வுகள் வெளிப்பட்டன.
ஜெயதேவி மரணித்த பிறகும் கூட அவரை மன்னிக்க முடியாத அவர்கள் குடும்பத்து நபர்கள் அத்தனை பேரும் விஜயை பார்த்த கணத்தில் அந்த வெறுப்பை காட்ட முடியாத நிலையில் நின்றனர்.
அதுவும் அவன் முகத்தை பார்க்கும் வரை இருந்த வெறுப்பும் பகையும் அவனை பார்த்த மாத்திரத்தில் வியப்பாக மாறிவிட்டது.
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடுமே.
விஜய் தொடர்ந்து, “எனக்கு நீங்கெல்லாம் பெரியப்பா சித்தப்பா சித்தி அத்தைனு ஏதோ ஒரு வகை உறவு முறைனு தெரியும்... ஆனா தெளிவா யார் யார் என்னென்ன உறவுமுறைன்னு தெரியாது
பூரணி ஒரு தடவை உங்க போட்டோலாம் காண்பிச்சு சொன்னா... பார்த்திருக்கேன்... என்னைக்காவது ஒரு நாள் உங்களை எல்லாம் நேர்ல பார்த்து அந்தந்த உறவு முறை சொல்லி கூப்பிடணும்னு ஆசைப்பட்டிருக்கேன்
ஆனா என்னைக்கு எங்க அம்மா சாவுக்கு கூட நீங்கெல்லாம் வந்து நிற்கலையோ அன்னைக்கு முடிவு பண்ணேன்... நான் சாகிற வரைக்கும் உங்க யார் மூஞ்சலயும் முழிக்கவே கூடாதுனு
ஆனா இன்னைக்கு வேற வழியே இல்லாம இங்க வந்து உங்க எல்லோர் முன்னாடியும் நிற்குறேனா அது என் பெஸ்ட் பிரண்டு மகேஸ்வரிக்காக” என்றவன் குற்றம் சாட்டும் பார்வையுடன் விஜயேந்திரனை நோக்கி,
“ஏன் அப்படி ஒரு காரியத்தை பண்ணீங்க... நீங்களும் ஒரு பொண்ணுக்கு அப்பாதானே... இதே காரியத்தை உங்க பொண்ணுக்கு யாராவது பண்ணா சும்மா இருப்பீங்களா... அவனை நேரா போய் வெட்டி போட்டுர மாட்டீங்க
ஆனா அப்படியொரு காரியத்தை நீங்களே செஞ்சி இருக்கீங்களே... அது நியாயமா... எவ்வளவு மோசமான மனுஷன் நீங்க” என்று சற்றும் யோசிக்காமல் ஆவேசமாக வெளுத்து வாங்க பதிலுக்கு விஜயேந்திரனும்,
“நான் யாரோட வாழ்க்கையும் கெடுக்கல... யானை தான் தலைல தானே மண்ணை வாரி கொட்டிக்கிட்ட மாதிரி அந்த பொண்ணுதான் அது தலைல மண்ணை வாரி கொட்டிக்கிச்சு” என, விஜய் உக்கிரமானான்.
ஆனால் அங்கிருந்த மற்ற யாருக்கும் அந்த உரையாடலின் சாரம்சமே புரியவில்லை. விஜயேந்திரன் மேலும், “அதுவும் இல்லாம உங்க அம்மா செஞ்ச அசிங்கத்தை விடவா நான் செஞ்சுட்டன்” என்று கேட்டு விஜயை வார்த்தைகளால் தாக்கி அவனை அவமானப்படுத்தினார்.
பேரனின் முகம் இருண்டுவிட்டதை பார்த்த சரஸ்வதி மனம் தாங்காமல், “இப்போ எதுக்கு அதெல்லாம் பேசுற விஜயா” என்று மகனை அதட்ட,
“அவன்தான் தேவை இல்லாம பேசிட்டு இருக்கான் மா” என்று விஜயேந்திரன் கடுகடுக்க,
“விஷயம் என்னனு முதல தெளிவா சொல்லு... இவன் எதுக்கு இங்க வந்து கத்திட்டு இருக்கான்” என்று அத்தனை நேரம் அமைதியாக இருந்த அரவிந்தன் தம்பியிடம் கேட்க அவருக்கு தடுமாறியது.
இப்போது வரை நடந்த விஷயத்தை வீட்டில் யாரிடமும் அவர் சொல்லி கொள்ளவில்லை. தன் மகளின் பெயர் கெட்டு விடும் என்று பயத்தில் எதுவும் சொல்லாமல் இருக்க அதனை ஒருவாறு கணித்துவிட்ட விஜய்,
“அப்போ இங்க யாருக்கும் எந்த விஷயமும் தெரியாதா?” என்று நக்கலாக கேட்டவன்,
“அது என்ன உங்க பொண்ணுனா ஒரு நியாயம்... அடுத்தவன் பொண்ணுனா ஒரு நியாயமா உங்களுக்கு?” என்று கேட்டான்.
“டேய் ஒழுங்கா இங்கிருந்து போயிடு” என்று விஜயேந்திரன் ஏறி போக, “விஜயா” என்று சரஸ்வதி மகன் கரத்தை பிடித்து தடுக்கவும் விஜய் பேசிவிட போகிறான் என்ற பதட்டத்தில்,
“ம்மா இவன் என்ன பண்ணா தெரியுமாமா... இவங்க அப்பன் மாதிரியே அந்த எதிர் வீட்டு பொண்ணு கழுத்துல திருட்டுத்தனமா தாலி கட்டிட்டான்” என்று விட்டார். இதை கேட்டு எல்லோரும் அதிர்ச்சியாயினர்.
அது மட்டும் இல்லாமல் தன் செல்பேசியிலிருந்த வீடியோவை திறந்து காட்டி, “நல்லா பாருங்க இவனோட இலட்சணத்த... நல்ல வேளை இவனையும் இவன் அம்மாவையும் திரும்பி நம்ம சேர்த்துக்கல... இல்லாட்டி மறுபடியும் நம்ம குடும்ப பேரை நாசம் பண்ணி இருப்பாங்க” என்று வாயிற்கு வந்ததை எல்லாம் உளறினார்.
அங்கிருந்து அத்தனை பேரின் முகமும் அசூயையாக மாறியது. அந்த காணொளியை பார்த்த பூரணியோ மனதளவில் உடைந்து நொறுங்கிவிட்டாள். இதை அவள் எதிர்பார்க்கவில்லை.
விஜய் மகேஸ்வரி கழுத்தில் தாலி கட்டிவிட்டானா? ஏன் அப்படி செய்தான்? என்று தனக்குதானே கேட்டு உள்ளுர வேதனையில் புழுங்கி கொண்டிருக்க,
அப்போது அரவிந்தன், “தப்பெல்லாம் நீ செஞ்சுட்டு இங்க வந்து எதுக்குடா கத்திட்டு இருக்க” என்று விஜயிடம் கோபப்பட,
“அந்த வீடியோல நீங்க பார்த்தது இல்ல நடந்தது... உண்மைல நடந்தது வேற” என்றான்.
“என்ன உண்மையிலயே நடந்தது” என்று அரவிந்தன் கேட்க,
“உங்க தம்பிதான் என்னை மிரட்டி மகேஸ்வரி கழுத்துல தாலி கட்ட வைச்சாரு... அதுவும் அவரே தாலி கட்ட வைச்சது இல்லாம அதையும் எங்களுக்கு தெரியாம வீடியோ எடுத்து மகி சொந்தகாரங்களுக்கு எல்லாம் அனுப்பி விட்டாரு”
இதனை கேட்ட அரவிந்தன், “என்ன விஜயா சொல்றான் இவன்” என்று அதிர்ச்சியுடன் தம்பி புறம் திரும்ப,
“அவன் உளறான் அண்ணா” என்றவர் நடந்ததை மறுத்தார்.
“நான் உளறனா... அப்போ எப்படி அந்த வீடியோ உங்க கைல வந்துச்சு... நீங்க எப்படி அதை எடுத்தீங்கனு சொல்லுங்க” என்று விஜய் பேச பேச அவருக்கு படபடப்பானது. அவன் கேள்விக்கு அவரால் பதில் சொல்லவும் முடியவில்லை.
விஜயே தொடர்ந்து, “அவர் சொல்ல மாட்டாரு... நான் சொல்றேன்... நான் எங்க இவர் பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு பயந்து என்னை மிரட்டினாரு... இவர் என்னை ஏதாவது பண்ணிட போறாருனு பயந்துதான் மகேஸ்வரி தாலியை கொடுத்து என்னை கட்ட சொன்னா
ஆனா உண்மையிலயே அந்த தாலியை எடுத்துட்டு வந்தது யார் தெரியுமா” என்றவன் நிறத்தி, “இவர் பொண்ணு பூரணிதான்” என விஜயேந்திரனின் முகம் சிவந்தது.
ஆவேசமாக அவன் மீது பாய்ந்து சட்டை காலரை பிடித்து,
“என் பொண்ணு பேரை சொன்னேனா உன்னை கொன்னுடுவேன்” என்று மிரட்டிய போதும் அவன் தொடர்ந்து பேசினான்.
“காலைல என் வீட்டுக்கு வந்தது உங்க பொண்ணு பூரணிதான்... என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டதும் பூரணிதான்...
ஆனா மகி என்னை காப்பத்துனம்னு ஒரே காரணத்துக்குதான் அந்த தாலி தன்னோடதுன்னும் என்னை காதலிக்குறனும் பொய் சொன்னா” என்றவன் தான் பேச வேண்டியதை எல்லாம் மடமடவென்று ஒப்புவித்துவிட்டான்.
“உன்னை” என்று அவர் அடிக்க கை ஓங்க, “அரவிந்து தம்பியை பிடி” என்று சரஸ்வதி பதறி குரல் கொடுக்க,
“விஜயா வேண்டாம்” என்று அரவிந்தன் தம்பியை தடுத்து இழுத்து பிடித்த போது,
“நீ முதல இங்கிருந்து வெளியே போடா” என்று விஜயேந்திரன் கர்ஜித்தார்.
“போகத்தான் போறேன்... பின்ன உங்க வீட்டுல உட்கார்ந்து விருந்து சாப்பிடவா வந்திருக்கேன்... நல்ல வேளையா இந்த குடும்பத்துல நான் வளரலனா இப்போ நான் ரொம்ப சந்தோஷப்படுறேன்” என்று அலட்சியத்துடன் சொல்லி சட்டை காலரை சரி செய்து கொண்டே விஜய் வெளியேறிவிட அந்த வீடே அமைதி கோலம் பூண்டது.
ஆனால் அந்த அமைதி ஒரு பூகாம்பத்தை தொடங்கி வைக்கும் பயங்கர அமைதியாக இருந்தது. எல்லோர் மனதில் பலவிதமான எண்ணங்கள் கரைபுரண்டோடின.
அந்த அமைதி முதலில் சிதறடிக்கப்பட்டது பூரணியின் அம்மா ராஜியால்.
“பாவி... எப்படி ஒரு காரியத்தை பண்ணி இருக்கடி” என்று மகளை சகட்டு மேனிக்கு அடித்து தள்ள, ஓரகத்திகள் எல்லாம் அவரை தடுத்து பிடித்தார்கள்.
பூரணி அழுது கொண்டே அறைக்குள் ஓடி விட எல்லோர் விழிகளும் அடுத்து என்ன என்பது போல விரிய, “நீ ஏன் விஜயா இப்படி பண்ண... தேவை இல்லாம எதுக்கு அந்த எதிர் வீட்டு பொண்ண இழுத்து விட்ட” என்று அரவிந்தன் ஆரம்பிக்க,
“நான் இழுத்து விடல... அவளாத்தான் வந்து தலையை கொடுத்த” என்று விஜயேந்திரன் அப்போதும் அசட்டையாகவே பதில் சொன்னார். யாருக்கும் அவர் பேசும் விதம் பிடிக்ககவே இல்லை. அரவிந்தன் கடுப்புடன்,
“அப்ப கூட நீ செஞ்சது சரி இல்ல” என்று கூற,
“நான் செஞ்சது சரிதான்... ஜெயதேவி ஒரு பரதேசியை கல்யாணம் பண்ணிக்கிட்டு போன மாதிரி என் பொண்ணும்... எவனோ ஒரு பரதேசியை கட்டிக்க கூடாதுன்னுதான் அப்படி செஞ்சேன்” என்றார்.
“விஜயா” என்று இம்முறை அதிகாரமாக வெளிவந்தது சரஸ்வதியின் குரல். அவர் மேலும், “அவ என்னதான் இருந்தாலும் ஜெயாவோட பையன்... நம்ம ஜெயாவை ஏத்துக்காம போயிருக்கலாம்... ஆனா அவனும் இந்த வீட்டு இரத்தம்தான்டா... அதுவும் அப்படியே அவன் உன்னை உரிச்சு வைச்சு இருக்கான்டா” என்று உரைத்து விட எல்லோரும் திகைப்புடன் அவரை நோக்க விஜயேந்திரனுக்கு கொதித்தது.
“ம்ம்மா என்னம்மா பேசுறீங்க... அவன் போய் நம்ம குடும்ப இரத்தமா?” என்று கேட்டு முகத்தை சுழிக்க,
“அம்மா சரியாத்தான் சொல்றாங்க... அம்மா சொன்ன மாதிரிதான் எனக்கும் தோணுச்சு” என்று அரவிந்தனும் சேர்ந்து கொண்டார். இந்த குழப்பத்தில் தன் மகனின் திருமண பேச்சு தடைப்பட்டு விடுமோ என்ற எண்ணத்தில் ஸ்ரீதேவி,
“அவ பார்க்க எப்படி வேணா இருக்கட்டும்... ஆனா நம்ம வீட்டு பொண்ண இல்ல அசுங்கப்படுத்திட்டு போறான்” என்று ஏற்றிவிட்டார்.
“அவன் பண்ணது அசிங்கம்னா உங்க தம்பி பண்ணது என்ன ஸ்ரீ?” என்று அந்த வீட்டின் பெரிய மருமகளும் அரவிந்தனின் மனைவியான பத்மா பொட்டிலறைந்தது போல கேட்க எல்லோரும் வாயடைத்து போனார்கள்.
மூத்த மருமகளாக பத்மாவின் குரலுக்கு அங்கே அதிக மரியாதை உண்டு. யாரும் அவரை எதிர்த்து பெரும்பாலும் பேச மாட்டார்கள். அதேபோல பத்மா பேசினால் சரியாகத்தான் பேசுவார். அவர் தன் கொழுந்தனாரை ஏறிட்டு,
“நம்மளும் வீட்டுல பொம்பள புள்ளைங்கள வைச்சு இருக்கோம்... அந்த நினைப்பு வேண்டாமா உங்களுக்கு?” என்று கண்டனமாக அவர் சொல்லி கொண்டிருக்கும் போதே,
“அப்போ நான் செஞ்சதுதான் தப்புன்னு சொல்றீங்களா அண்ணி” என்றவர் பல்லை கடித்து தன் கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டு பேசினார்.
“ஆமா... நீங்க செஞ்சதுதான் தப்பு” என்று அடித்து கூறியவர்,
“ஏற்கனவே அந்த குடும்பத்த நம்ம ஏமாத்திட்டோம்கிற பழி இருக்கும் போது... இதுல அந்த பொண்ணு வாழ்க்கையை கெடுத்தோம்கிற பாவத்த வேற சேர்த்துட்டீங்களே நீங்க... அந்த பாவம் நம்ம புள்ளைங்களுக்கே திரும்பாதுனு என்ன நிச்சயம்” என்ற பத்மாவின் கேள்வி எல்லோரையும் அதிர செய்ததது.
அந்த அதிர்ச்சியிலிருந்து அவர்கள் மீள்வதற்கு முன்பாக, “ஐயோ பூரணி” என்று உள்ளிருந்து பயங்கரமான அலறல் சத்தம் கேட்டு எல்லோரையும் திகலடைய செய்தது. யாருக்குமே ஒன்றும் புரியவில்லை.
என்ன ஏதென்று அவர்கள் பதறி கொண்டு சத்தம் வந்த திசைக்கு அடித்து பிடித்து சென்று பார்த்த போது,
“டப்பால வைச்சு இருந்த அத்தையோட தூக்க மாத்திரை எல்லாம் மொத்தமா விழுங்கிட்டு இருக்காங்க” என்று அழுத கதறிய ராஜியின் மடியில் அரைமயக்க நிலையில் கிடந்தாள் பூரணி.


Comments