top of page

Kanavar thozha - 10

10

மகேஸ்வரி பைக்கை ஓட்டிச் சென்றாலே ஒழிய அவள் கவனம் இம்மியளவு கூட சாலையில் இல்லை. எந்த திசையில் எப்படி போகிறோம் என்று விளங்காமல் வண்டியை எக்குத்தப்பாக திருப்பி எதிரே வந்த ஆட்டோவில் மோதி வண்டியுடன் கீழே சரிந்துவிட்டாள்.


அந்த காட்சியை பார்த்து அவசர அவசரமாக ஓடி வந்த சிலர் பைக்கை தூக்கிவிட்டு பின் அவளுக்கும் கை கொடுத்து எழ உதவினார்கள்.


இடித்த அந்த ஆட்டோகாரர், “என்னம்மா நீ... இப்படியா வந்து முட்டுவா” என்று எரிச்சலுடன் மொழிய,


“சாரி அண்ணா... கவனிக்கல” என்றவள் இறங்கி பேசவும் அவர் அமைதியாகிவிட்டார். இல்லையென்றால் அவள் ஓட்டி வந்த இலட்சணத்திற்கு இரண்டு மூன்று அசிங்கமான வார்த்தைகளாவது விட்டிருப்பார்.


பிரச்சனை ஏதுமில்லை என்றதும் அவளை சுற்றி வேடிக்கை பார்த்த மனிதர்கள் களைந்து செல்ல ஆட்டோவும் நகர்ந்துவிட்டது.


திடீரென்று நிகழ்ந்து விட்ட இந்த விபத்திலிருந்து மீள அவளுக்குதான் சில நிமிடங்கள் பிடித்தது. அவளை தூக்கிவிட்ட நபர், “என்ன ம்மா அடி ஏதாவது பட்டு இருக்கா? வண்டி ஓட்டுட்டு போக முடியுமா?” என்று கரிசனமாக கேட்க,


“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல... நான் பார்த்துக்கிறேன்... தேங்க்ஸ்” என்றாள்.


“எதுக்கும் கொஞ்சம் உட்கார்ந்து இருந்துட்டு போ ம்மா” என்று அந்த நபர் அறிவுறுத்திவிட்டு செல்ல அவளுக்குமே இத்தகைய மனநிலையுடன் வண்டியை ஓட்டி செல்வது நல்லதில்லை என்ற எண்ணம் தோன்றியது.


நேரத்தை பார்த்தாள். விஜயின் பிறந்த நாள் என்று நேற்றே அரை நாள் விடுப்பிற்கு அனுபதி வாங்கி இருந்தாள். ஆதலால் அந்த சொச்ச நேரத்தை எங்கேயாவது அமர்ந்து செலவழித்து விட்டு போக முடிவு செய்து வண்டியை இயக்க எத்தனித்த போதுதான் கை முட்டியில் சிராய்த்து கொண்டு இரத்தம் வழிவதை கண்டாள்.


உடனடியாக தன் பையிலிருந்த தண்ணீர் பாட்டிலை திறந்து இரத்தம் வழிந்த இடத்தின் மீது ஊற்றி கழுவிவிட்டு முகத்தையும் துடைத்து கொண்டாள்.


அதன் பின் எங்கே நிற்கிறோம் என்று அந்த சாலையை உற்று கவனித்தவளுக்கு அந்த தெருவின் மூலையில் ஒரு ஐயப்பன் கோவில் இருக்கும் என்று நினைவு வர நேராக வண்டியை அங்கே ஓட்டி சென்று நிறுத்தினாள்.


விஜய் ஒரு முறை அவளை அங்கே அழைத்து வந்திருக்கிறான். “இந்த கோவில் ஒரு மாதிரி சைலன்டா நல்லா இருக்கும் மகி... இங்க வந்து உட்கார்ந்திருந்தா மனசுக்கு அமைதியா இருக்கும்” என்றவன் சொன்னதை நினைத்து கொண்டே பிரகாரத்திற்குள் நடந்தவள் சாமியை தரிசித்துவிட்டு யார் கவனத்தையும் ஈர்க்காத வண்ணம் பின்புறமிருந்த தூண் ஒன்றின் அருகே அமர்ந்தாள்.


அந்த இடமும் அந்த சூழ்நிலையும் மிகவும் அமைதியாக இருந்தது. கண்களை மூடி அதனை உள்வாங்கினாள்.


சில நிமிடங்களுக்கு முன்பு வரை அவள் கற்பனை கூட செய்திராத சம்பவங்களை எதிர்கொள்ள நேரிட்டதும் அவை எல்லாம் ஏதோ கனவு போல அவசரகெதியில் அரங்கேறிவிட்டதையும் நினைக்க நினைக்க அடங்காத படபடப்புடன் உள்ளம் இன்னும் அடித்து கொண்டிருந்தது.


நடந்ததை எல்லாம் நிதானமாக யோசித்து புரிந்து கொள்வதற்கு அப்போதைக்கு அந்த ஆழ்ந்த அமைதி அவளுக்கு தேவைப்பட்டது.


ஆசுவாசமாக மூச்சை இழுத்து விட்டவள் விஜய் வீட்டிற்கு சென்றதில் துவங்கி நடந்த அத்தனையும் சிந்தித்து பார்த்தாள். நடந்தது எல்லாம் நிஜம்தானா என்று இப்போதும் அவளால் நம்ப முடியவில்லை.


தன் கழுத்திலிருந்த தாலியை தொட்டு பார்த்தவள் சந்தேகமே இல்லாமல் நடந்தவை எல்லாம் நிஜம்தான் என்று ஊர்ஜிதம் செய்து கொண்டாள்.


அப்போது, ‘எல்லா டைம்லயும் தாலி தாலிதான்... தாலி கட்டுனா கல்யாணம்தான்’ என்று பூரணி பேசியதை யோசித்தாள். எதிரியாகவே இருந்தாலும் ஒரு வகையில் அவள் சொன்னது ஏற்க கூடிய ஒன்றுதான்.


ஆனால் அதிலும் ஒரு சிறு திருத்தம் இருக்கிறது. தாலியை யார் கட்டினாலும் அந்த உணர்வு ஏற்படாது. மனதிற்கு மிக மிக நெருக்கமானவன் கட்டும் போதுதான் அது தாலியாகவும் உணர்வுபூர்வமாக நடந்தது திருமணமாகவும் தோன்றும். அவளுக்கு தோன்றியது.


விஜய் அவள் கழுத்தில் கட்டிய போது தோன்றியது. ஆழமாக அந்த உணர்வை அவள் அனுபவித்தாள். அனுபவிக்கிறாள்.


அதுவும் ‘உன்னை நடந்த சம்பவம் பாதிக்கவே இல்லையா?’ என்று விஜய் கேட்ட போது ஆம் பாதித்தது... நடந்த சம்பவத்தை விடவும் நீ என்னை அதிகமாக பாதித்தாய்... என் மனதை என் உணர்வுகளை பாதித்தாய்... ஏன்... என்னுடைய ஒவ்வொரு நாளையும் நிமிடங்களையும் நொடிகளையும் நீ பாதிக்கிறாய்...


தோழனாக மட்டும் இல்லை. என் வாழ்வில் அத்துணையுமாக நீயே வேண்டுமென்றளவுக்கு ஆழமாக அழுத்தமாக என்னை நீ பாதித்திருக்கிறாய் என்று உரக்க கத்தி தன் உணர்வுகளை அவனிடம் வெளிப்படுத்த எண்ணிய போதும் அவள் அதை செய்யவில்லை.


அப்பட்டமாக பொய்யுரைத்துவிட்டாள். உத்வேகத்துடன் பொங்கி ததும்பிய தன்னுடைய உணர்வுகளை அவனிடம் தெரிந்தோ தெரியாமலோ காட்டி விட போகிறோமோ என்று பயந்து கோழையை போல ஓடி வந்துவிட்டாள்.


அவளுக்கு தெரியவில்லை. அவனிடம் எப்படி தன் மணஉணர்வுகளை காட்டுவது என்று அவளுக்கு தெரியவில்லை. நேற்று வரை நட்பு என்று சொல்லிவிட்டு இன்று அந்த உறவின் நிலைக்கு வேறு பெயர் கொடுப்பது சரியாக இருக்குமா என்று அவளுக்கு தெரியவில்லை. அவன் ஏற்பானா என்றும் தெரியவில்லை.


அந்த சூழ்நிலையில் அவனிடம் சொன்னால் என்ன நினைத்து கொள்வான். அதன் பின் தங்கள் நட்பை என்னவாகும்.


எல்லாவற்றிற்கும் மேல் அவன் விரும்பி ஒன்றும் அவள் கழுத்தில் தாலி கட்டவில்லையே. இக்கட்டான சூழ்நிலையில் கட்டபட்ட அந்த தாலியை வைத்து கொண்டு தன் காதலை வெளிப்படுத்தினால் அந்த சந்தர்ப்பத்தை அவள் பயன்படுத்தி கொள்வதாக ஆகிவிடாதா என்று எண்ணி அஞ்சினாள்.


இந்த நினைப்புகளுக்கு இடையில் விஜயேந்திரன் தன் அம்மாவிடம் நடந்ததை சொல்லி இருப்பார் என்று அவள் யோசிக்க கூட இல்லை. அவருடைய கவலை விஜய் பூரணியை திருமணம் செய்துவிட கூடாது என்பதுதானே என்று தவறாக கணக்கு போட்டுவிட்டாள்.


ஆனால் அவர் பின்னே நின்ற தன் ஆட்கள் மூலமாக விஜய் அவள் கழுத்தில் தாலி கட்டியதை வீடியோ எடுக்க சொல்லி இருப்பார் என்று பாவம் அவளுக்கு தெரியாது. அது எந்தளவு அவள் வாழ்க்கையை பாதிக்க போகிறது என்றும் அவளுக்கு அப்போது தெரியாது.


அந்த நினைப்பில் அருளிடம் பிறகு பொறுமையாக பேசி கொள்ளலாம் என்று முடிவெடுத்து விட்டாள். அப்போதைக்கு அவள் மனம் கொஞ்சம் அமைதியடைந்திருக்கவும் கல்லூரிக்கு புறப்பட எழுந்த போதுதான் கழுத்திலிருந்த தாலி நினைவு வந்தது.


விஜயிடம் சொன்னது போல அதனை கழற்றி கோவில் உண்டியலில் போட அவள் விரும்பவில்லை. கழற்றி தன் கை பையை திறந்து உள்ளே வைத்து மூடிவிட்டு கல்லூரிக்கு கிளம்பி செல்ல அவளை பார்த்ததும் உற்சாகமான கல்லூரியின் முதலவர்,


“பரவாயில்ல ஹாப் டே லீவ்னு சொல்லிட்டு சீக்கிரம் வந்துட்ட... சரி இதுல இருக்க டாகுமென்ட் அலைன் பண்ணி பிரின்ட் அவுட் எடுத்து அந்தந்த டிபார்ட்மென்ட்ல கொடுத்துடு” என்று வந்ததுமே அவளுக்கு பரபரப்பாக வேலைகள் கொடுத்தார்.


அப்போதைக்கு நடந்ததை எல்லாம் தன் மூளையிலிருந்து ஒதுக்கி வைத்து விட்டு வேலையில் மூழ்கி போனவள் அவர் சொன்னதை செய்து முடித்து பிரின்ட் எடுத்த பக்கங்களை அடுக்கி எடுத்து சென்று ஒவ்வொரு டிபார்மென்ட்களிலும் கொடுத்து விட்டு திரும்பும் போது மணி மதியம் மூன்றை எட்டி இருந்தது.


அதன் பின்பாகவே மதிய உணவு உண்பதற்கு அமர்ந்தவள் அப்போதுதான் பையில் இருந்த தன் செல்பேசி இருபதுக்கும் மேற்பட்ட முறை அடித்து ஓய்ந்திருப்பதை கவனித்தாள். அத்தனை அழைப்பும் அருளிடமிருந்து வந்திருந்தது.


அப்படியே தலையில் கை வைத்து கொண்டவள் பதட்டமேற அவனுக்கு அழைக்க முதல் ரிங்கிலேயே எடுத்து விட்டவன்,


“என்னடி பண்ணி வைச்சு இருக்க” என்று காட்டமாக கத்த ஆரம்பித்தான்.


அவளுக்கு தடதடத்தது. “அருள்” என அவனோ அவளை பேச விடாமல் ஆவேசமும் கோபமுமாக பேசினான்.


“சத்தியமா நீ இப்படியொரு காரியத்தை பண்ணுவனு நான் எதிர்பார்க்கவே இல்ல மகேஸ்... சத்தியமா எதிர்பார்க்கல”


‘ஐயய்யயோ விஷயம் தெரிஞ்சு போச்சா... பைத்தியம் நான் முதலயே சொல்லி தொலைச்சிருக்கணும்’ என்று தலையிலடித்து கொண்டவள்,


“அருள் நான் சொல்றதை ஒரு நிமிஷம் நிதானமா கேளேன்”என்று மெதுவாக பேச ஆரம்பிக்க,


“நிதானமா கேட்கணுமா... எவ்வளவு நிதானமா... நான் இருபது தடவைக்கு மேல ஃபோன் பண்றேன்... என்னோட ஒரே ஒரு கால கூட எடுக்காம இருந்துட்டு இப்போ நிதானமா பேசணும்னு சொல்றியா... எங்கடி போன... இப்போ எங்கடி இருக்க” என்றவன் குரல் உயர்ந்த விதத்தில் அவள் இதய துடிப்பு ஏறியது.


“நான் காலேஜ்லதான் இருக்கேன்” என்றவள் பதில் கூற,


“பொய் சொல்லாதடி” என்று சீறினான் அவன்.


“இல்ல அருள் நான் காலேஜ்ல தான் இருக்கேன்... பிரின்ஸ்பல் ஒரு வேலை கொடுத்தாங்க... நான் பேகை ஆபிஸ்ல வைச்சுட்டேன்... நீ ஃபோன் அடிச்சது எனக்கு தெரியாது”


“ஓஒ... அப்போ நீ காலேஜ்லதான் இருக்க... கல்யாணம் முடிச்சி நேரா காலேஜ் போயிட்ட...” என்றவன் நக்கலாக கேட்ட விதத்தில் அதிர்ந்தவள்,


“கல்யாணமா... இல்ல... அது அப்படி இல்ல அருள்... நீ நினைக்குற மாதிரி இல்ல... பிரச்சனை வேற... நான் என்ன நடந்ததுன்னு சொல்றேன்” என்றவள் தட்டுதடுமாறி நடந்தவற்றை விவரிக்க முயல அவனுக்கோ அப்போது அவள் சொல்வதை கேட்கும் பொறுமை துளி கூட இல்லை.


“நீ ஏன் அதை சொல்லிட்டு... நான்தான் அந்த காட்சியை கண்ணால பார்த்தேனே... நீ விஜய் கைல தாலியை கொடுத்து கட்ட சொன்னதையும் அவன் உன் கழுத்துல தாலி கட்டனதையும் பார்த்தேனே”


“பார்த்தியா?”


“ஆமா பார்த்தேன்... நான் மட்டும் பார்க்கல... அம்மா பெரியப்பா அத்தைனு நம்ம சொந்தகாரங்க எல்லோரும் அந்த வீடியோவை பார்த்தாங்க”


“எல்லோருமா?”


“ஆமா எல்லோருக்கும் போயிருக்கு இல்ல அந்த வீடியோ... அதுவும் அம்மாதான் அப்படியே பார்த்து பூரிச்சு போயிட்டாங்க... எப்படி எல்லாம் தான் பொண்ணு கல்யாணத்தை நடத்தணும்னு ஆசைபட்டாங்க அவங்க” என்றவன் அவளுக்கு பேசுவதற்கான வாய்ப்பையே கொடுக்காமல் பொரிந்து தள்ளினான்.


அவன் சொன்னதை எல்லாம் உள்வாங்கி புரிந்து கொள்ளவே அவளுக்கு சில நொடிகள் பிடித்தது.


யார் வீடியோ எடுத்தது? ஒரு வேளை பூரணியின் அப்பாவுடன் வந்த ஆட்களா? ஏன் அப்படி செய்தார்கள்? ஏன் தன்னுடைய உறவினர்களுக்கு எல்லாம் அதனை அனுப்பினார்கள்? என்று மனதிற்குள் யோசித்து குழம்பியவள் தலையை பிடித்து கொண்டு,


“இப்படி எல்லாம் நடக்கும்னு நான் நினைக்கவே இல்ல” என்று அதிர்ச்சி நீங்காமல் கூற,


“வேற எப்படி நடக்கும்னு நினைச்சீங்க மேடம்... அலைபாயுதே ஷாலினி மாதிரி கொஞ்ச நாள் மூடி மறைச்சிட்டு இருந்துட்டு... கடைசியா எங்க கழுத்தை அறுக்கலன்னு இருந்தீங்களோ” என்று இரக்கமே பார்க்காமல் தம் வார்த்தைகளால் சரமாரியாக அவளை குத்தி கிழிக்க,


“டேய் என்னடா பேசுற... நான் அப்படி எல்லாம் செய்ய மாட்டேன்டா” என்று அவள் வெதும்பி அழுதாள்.


“அதான் செஞ்சுட்டியே... மொத்தமா... இதுக்கு மேல வேற செய்ய போறியாடி நீ...


அம்மா உன்னை பத்தி சந்தேகப்பட்டு சொன்ன போது கூட நான் நம்பல... அப்ப கூட உனக்கு நான் சப்போர்ட் பண்ணிதான்டி பேசுனேன்... கடைசில அம்மா சொன்னது சரியா போச்சு... உன்னை நம்புன என் மூஞ்சிலதான்டி நீ கரியை பூசிட்ட...”


“அப்படி எல்லாம் சொல்லாத அருளு எனக்கு கஷ்டமா இருக்குடா”


“போதும் உன் நடிப்பை நிப்பாட்டு... எத்தனை தடவை நான் உன்கிட்ட கேட்டேன்... விஜயை லவ் பண்றியா லவ் பன்றியானு... இல்லவே இல்லனு சொன்ன...


ஏன் போன வாரம் கல்யாணத்த பத்தி பேசுன போது கூட உன் மனசுல யாராச்சும் இருக்காங்களானு கேட்டனே... அப்பயாச்சும் சொன்னியா...


அப்பவே நீ சொல்லி இருந்தா கூட நான் அம்மாகிட்ட பேசி இருப்பேன்... சண்டை போட்டாச்சும் நான் உங்க கல்யாணத்தை நல்லபடியா நடத்தி வைச்சிருப்பேன்


ஆனா இப்போ நீ பண்ணி வைச்சு இருக்க காரியம் இருக்கே... துரோகம்டி... பச்ச துரோகம்” என்றவன் உணர்ச்சி பொங்க பேச அவளால் பதில் பேசவே முடியவில்லை.


அவன் கோபத்தில் நியாயம் இருக்கிறது. தான் முன்பே அவனிடம் சொல்லி இருக்க வேண்டும். தனக்கு விஜய் மீது ஏற்பட்டிருக்கும் ஈர்ப்பை பகிர்ந்திருக்க வேண்டும். எதுவுமே சொல்லாமல் இருந்து விட்டு திடீரென்று இப்படியொரு அதிர்ச்சியை கொடுத்தால் யார்தான் தாங்கி கொள்வார்கள்.


“சாரி அருளு” என்றவள் கண்ணீருடன் மன்னிப்பு கோரினாள்.


“உன் சாரியை வைச்சுக்கிட்டு இப்போ நான் என்னடி பண்றது... அம்மா எந்தளவு உடைஞ்சு போயிருக்காங்கன்னு தெரியுமா?”


“நான் போய் அவங்ககிட்ட பேசுறேன்”


“அந்த தப்பை மட்டும் செஞ்சுராத சொல்லிட்டேன்”


“அருள்”


“நான் என் பிரண்டுகிட்ட சொல்லி இருக்கேன்... இன்னும் கொஞ்ச நேரத்துல அவன் அம்மாவுக்கு டிக்கெட் எடுத்து கொடுத்து கோயமுத்தூர் பஸ் ஏத்திவிட்டுருவான்... அவங்க கொஞ்ச நாள் என் கூட வந்து இங்க தங்கி இருக்கட்டும்


ஒரு வேளை அவங்களா சமாதானமாகி பேசுனாங்கனா... நீ பேசு” என்றவன் சொன்னதை எல்லாம் கேட்டவள் நம்ப முடியாமல்,


“அம்மா கோயமுத்தூர் போயிட்டா நான் இங்க தனியா என்னடா பண்ணுவேன்” என்று அவள் கேட்க,


“என்ன புதுசா கேட்குற... கல்யாணம் ஆகிடுச்சு இல்ல... உன் புருஷன் வீட்டுக்கு போய் இரு” என்றவன் அலட்சியமாக பதில் கூற அவள் குமுறி குமுறி அழுதாள்.


“நீ என்ன அழுதாலும் இனிமே உன்னை நான் நம்புறதா இல்ல... ஒரு வேளை அம்மாவே உன்னை மன்னிச்சாலும் நான் உன்னை இந்த ஜென்மத்துல மன்னிக்க போறதில்ல... சொல்லிட்டேன்” என்றவன் படபடவென்று பட்டாசாக வெடித்து சிதறி விட்டு, “அருள்” என்றவள் பேச எத்தனிப்பதற்கு முன்பாக அழைப்பை துண்டித்துவிட்டான்.


சில மணி நேரங்களுக்கு முன்பு வரை கூட இந்த பிரச்சனை இவ்வளவு பூதகரமானதாக மாறும் என்று அவள் நினைக்கவே இல்லை.


விஜயேந்திரன் இத்தனை வருட காலமாக தனக்குள் தேக்கி வைத்திருந்த வன்மத்தை எல்லாம் மகேஸ்வரி மூலமாக லதாவின் மீது கக்கி இருந்தார் என்பதை அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.


நடந்த நிகழ்விற்கான முழு பொறுப்பாளியாக அவள் தன்னையே கருதினாள். குற்றவுணர்வு அடைந்தாள்.


ஒரு வகையில் இன்று நடந்ததில் அவளுடைய தப்பு பெரியளவில் இல்லாவிட்டாலும் விஜயுடனான நட்பை மறைத்ததில் துவங்கி அவன் வீட்டிற்கு சென்று வந்தது என அவள் செய்தது அத்தனையும் தப்புக்கள். சொன்னது அத்தனையும் பொய்கள். அதை எல்லாம் எப்படி நியாயப்படுத்த முடியும் என்று அவளுக்கு தெரியவில்லை.


அந்த கணத்தில் அவள் சொன்ன சிறிய பொய்கள் கூட பயங்கரமானதாக தெரிந்தன. அப்போதைக்கு தமையன் சொன்னது போல அம்மாவிடம் தான் பேசாமல் இருப்பதுதான் சரி என்றும் தோன்றியது.


திறந்த டிபன் பாக்ஸை சாப்பிடாமல் அப்படியே மூடி வைத்து விட்டு தன் வேலையை மீண்டும் தொடர்ந்த போதும் மகேஸ்வரியால் முன்பு போல முழு கவனத்துடன் வேலையில் ஈடுபட முடியவில்லை. அவளது சோர்ந்த முகத்தை பார்த்த கல்லூரி முதல்வரும் உடல் நிலை சரி இல்லையோ என்று எண்ணி அவளை விரைவாகவே வீட்டிற்கு போக சொல்லிவிட்டார்.


வீட்டிற்கு செல்ல வீடு பூட்டி இருந்தது. நல்ல வேளையாக அவளிடமும் ஒரு சாவி இருந்தது. கதவை திறந்து உள்ளே வந்தவளுக்கு அம்மா இல்லாதது என்னவோ போலிருந்தது. என்ன செய்வது ஏது செய்வது என்று எதுவும் புரியாமல் உடையை மாற்றிவிட்டு வந்து முகப்பறையில் அமர்ந்தவள் கண்களில் கண்ணீர் தாரைதாரையாக கொட்டியது.


இந்த பிரச்சனையை எப்படி சரி செய்ய போகிறோம் அம்மாவை எப்படி சமாதானம் செய்ய போகிறோம் என்று என்ன யோசித்தும் அவளுக்கு தீர்வுகள் எதுவும் கிடைக்கவில்லை.


எல்லாவற்றிக்கும் மேல் அந்த தனிமை அவள் வேதனையை பன்மடங்காக பெருக்கியதில் அவள் வெகுநேரம் அழுதாள். ஒரு நிலைக்கு மேல் அழுது அழுது அயர்ந்து போனவள் தரையில் சரிந்து அப்படியே கண்ணயர்ந்து விட்டாள். எழுந்து பார்த்த போது விளக்கு போடாமல் வீடு மொத்தமாக இருண்டு போயிருந்தது.


மின்விளக்குகளை எல்லாம் ஒளிரவிட்டவள் சுவற்றில் ஊக்கு தைக்க அம்மா எடுத்து வைத்திருந்த துணிகளை பார்த்தாள்.


அதனை எடுத்து தைக்க உட்கார்ந்த போது அவளுடைய செல்பேசி ரீங்காரமிட்டது. விஜய்தான் அழைத்திருந்தான்.


“சொல்லு விஜி” என்ற அவள் குரலை வைத்து அவள் துவண்டிருந்ததை உணர்ந்தவன்,


“என்னாச்சு மகி” என்று கேட்க அவள் பதில் சொல்லவில்லை.


“மகி... என்ன... வீட்டுல எதுவும் பிரச்சனையா” என்று கேட்டான்.


“பிரச்சனையாவா?” என்று விட்டு விரக்தியாக சிரித்தவள் அதன் பின் நடந்த அத்தனையும் சொல்லி முடிக்க அவன் சீறலாக,


“வீடியோ எடுத்திருக்கானா... சை! எவ்வளவு கெட்ட புத்தி அந்த ஆளுக்கு” என்று சரமாரியாக விஜயேந்திரனை திட்டு தீர்த்து விட்டு,


“நான் வேணா உங்க அண்ணன்கிட்ட பேசி பார்க்கட்டுமா?” என்று வினவ,


“ப்ளீஸ் டா அந்த மாதிரி எதுவும் பண்ணிடாத” என்று கெஞ்சாத குறையாக சொல்ல அவன் மனம் சங்கடமானது


“சாரி மகி... எல்லாம் என்னாலதான்” என,


“ப்ச்.. உன்னால எல்லாம் இல்லடா” என்றாள்.


“இல்ல என்னாலதான்... எனக்காகதான் நீ இப்படி ஒரு பிரச்சனைல தலையை கொடுத்துட்ட” என்றவன் வருத்தத்துடன் பேச அவள்,


“விடு விஜி... நம்ம எதுவும் ப்ளேன் பண்ணி பண்ணோமா என்ன... எல்லாம் அதுவா நடந்து போச்சு... ஆனா இப்பவும் நான் செஞ்சது தப்புன்னு யோசிக்கல... எனக்கு அந்த நிமிஷம் உனக்கு எதுவும் ஆகிட கூடாதுனுதான் தோணுச்சு... பிரச்சனை வரும்னு தெரிஞ்சும் நான் அந்த முடிவை எடுத்தேன்... இப்போ பிரச்சனை வந்திருச்சு... என்ன பன்றது... பேஸ் பண்றேன்” என்று கூற அவன் உள்ளம் நெகிழ்ந்து போனது.


‘எனக்காக எவ்வளவு தூரம் யோசிக்கிற மகி நீ... வேணும் மகி... நீ எனக்கு வேணும்... கண்டிப்பா வேணும்... என் கூட வந்திரு மகி... உன்னை நான் நல்லா பார்த்துக்கிறேன் மகி... நீ இல்லாம என்னால இனிமே இருக்க முடியும்னு தோணல மகி’ என்று மனதில் பொங்கி தளும்பிய காதல் வார்த்தைகள் எதையும் பேச முடியாமல் உள்ளத்திற்குள் பூட்டி கொண்டவன்,


“உன்னை மாதிரி ஒரு பிரண்ட் கிடைக்க நான் ரொம்ப கொடுத்து வைச்சிருக்கணும் மகி” என்பதாக தன் உணர்வுகளை மாற்றி சொன்னான். அவன் சொன்னதை கேட்டு புன்னகைத்தவள்,


‘நீ எனக்கு ப்ரண்டுக்கு எல்லாம் மேல விஜி’ என்ற அவள் மனதின் மொழியை அவள் உதடுகளும் உதிர்க்கவில்லை. மௌனமாகிவிட்டன.


“ஆமா மகி சாப்பிட்டியா?” என்றவன் கேட்கவும்,


“இப்போ சோறுதான் ரொம்ப முக்கியமாக்கும்” என்றவள் கடுப்பாக சொல்ல, “அப்ப நீ இன்னும் சாப்பிடலையா? சரி மதியமாச்சும் சாப்பிட்டியா” என்று அவன் கேட்டதற்கு,


“சாப்பிடலாம்னு நினைச்ச போதுதான் போன்ல அருள் மிஸ்ட் கால் பார்த்தேன்” என்றாள்.


“அப்போ மதியமும் சாப்பிடலையா?”


“அதுக்கப்புறம் எங்க சாப்பிடுறது... மனசு ஒரு மாதிரி பாரமாகிடுச்சு... சாப்பிடணும்னு தோணல”


“எல்லாம் தோணும்... நீ போய் சாப்பிடு”


“இல்லடா அம்மா வீட்டுல இல்லாதது என்னவோ போலிருக்கு... என்னால இந்த மூடோட எழுந்து சமைச்சு எல்லாம் சாப்பிட முடியாது” என்றதும் அவன், “சரி நீ ஃபோனை வை” என,


“டேய் என்ன” என்றவள் பேசி முடிப்பதற்குள் அழைப்பை துண்டித்துவிட்டான்.


‘இப்போ அவசரமா ஃபோனை வைச்சுட்டு எங்க போறான்’ என்று யோசித்தவள் பின் தன் செல்பேசியை எடுத்து சார்ஜில் இணைத்து விட்டு மீண்டும் ஊக்கு தைக்கும் வேலையை தொடர்ந்த போது யாரோ கேட்டை தட்டும் சத்தம் கேட்டது. அவள் எட்டி பார்க்க விஜய் நின்றிருந்தான்.


பதறி கொண்டு எழுந்து ஓடியவள், “டேய் நீ ஏன் டா இங்க வந்த... யாராவது பார்த்து தொலைக்க போறாங்க” என,


“எவனுக்கும் வேற வேலை வெட்டியே இல்லையா... நம்மளதான் பார்த்துட்டு இருக்க போறானுங்களா?” என்றவன் அலட்சியமாக பேசினான். ஆனால் அவள் பயம் போகவில்லை.


“ஏற்கனவே இருக்குற பிரச்சனை போதும்டா... நீ வேற இங்க வந்து பிரச்சனையை பெருசாக்காத”


“நான் உன் வீட்டுக்குள்ள எல்லாம் வரல... இந்தா பிடி... உனக்கு சாப்பாடு வாங்கிட்டு வந்தேன்... சாப்பிடு”


“நான் உன்னை சாப்பாடு வாங்கிட்டு வர சொன்னேனா?”


“நீ சொன்னதான் வாங்கிட்டு வரணுமா... நீ சொல்லலனா நான் வாங்கிட்டு வர கூடாதா?”


“கடுப்பேத்தாதே விஜி... நான் சாப்பிடுற மூட்ல இல்ல... நீ அந்த பார்சலை எடுத்துட்டு போ”


“மூடு எல்லாம் நம்மலே உருவாக்கிறதுதான்... ஏன் எங்க அம்மா இறந்த அன்னைக்கு என்னை நீ கட்டாயப்படுத்தி சமைச்சு கொடுத்து சாப்பிட வைக்கலயா?”


“அது வேற விஜி”


“ஆமா வேறதான்... எங்க அம்மா திரும்பி வர முடியாத இடத்துக்கு போயிட்டாங்க... ஆனா உங்க அம்மா கோச்சிட்டு தோ இங்க இருக்க கோயமுத்தூருக்கு போயிருக்காங்க...


இரண்டு நாளோ... இல்ல ஒரு வாரத்துலயோ பொண்ணு என்ன பண்ணதோன்னு கவலைல அவங்களே சமாதானமாகி ஓடி வந்துடுவாங்க...


ஸோ எல்லாம் மாறும்... மறந்து போகும்... இதை நான் சொல்லல... மகி மகினு எனக்கு ஒரு பிரண்டு இருக்கா... அவ சொன்னா” என்றவன் சொல்லி முடித்த போது அவள் இதழ்கள் விரிந்து முகம் சிரித்தது.


“இப்பயாச்சும் வாங்கிக்குறியா?” என்றவன் அந்த உணவு பொட்டலத்தை நீட்ட கதவை திறந்து பெற்று கொண்டவள்,


“நீ சாப்பிட்டியா?” என்று கேட்க அவனுமே காலையிலிருந்து சாப்பிடவில்லை. சாப்பிடும் மனநிலையில் இல்லை. ஆனால் அவள் வேதனையில் இருக்கிறாள். சாப்பிடவில்லை என்று அறிந்த கணம் அவனுக்கு எல்லாமும் மறந்து போனது.


நடந்த பிரச்சனை எல்லாவற்றையும் தூக்கி தூர போட்டுவிட்டு அவளுக்காக அடித்து பிடித்து உணவு பொட்டலத்தை வாங்கி கொண்டு ஓடி வந்தான். எல்லாவற்றிற்கும் மேல இதை சாக்காக வைத்து அவளை பார்க்க வந்தான்.


“விஜி என்னாச்சு... சாப்பிட்டியானு கேட்டேன்” என்றவள் மீண்டும் கேட்க எங்கெங்கோ தாவி போன நினைவுகளை கட்டி இழுத்து வந்தவன்,


“இல்ல இனிமேதான்” என,


“சரி அப்போ உள்ளே வா... சாப்பிட்டு போ”


“வேண்டாம் தாயே... இருக்குற பிரச்சனை போதும்... நீ போய் சாப்பிடு... நான் போகும் போது அப்படியே கடைலயே வாங்கி சாப்பிட்டு போயிடுவேன்” என்று விட்டு மேலும்,


“வீட்டை நல்லா பூட்டிட்டு படுத்துக்கோ... எதையும் யோசிச்சு அழுதிட்டு இருக்காத... எல்லாம் சரியாயிடும்?” என்றவன் போகாமல் இன்னும் அங்கேயே நின்று அவளையே கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தான்.


“என்ன கிளம்பு”


“இல்ல உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்”


“என்ன?


“எனக்கு வேலை கிடைச்சிருச்சு... பக்கத்துல இருக்கே ஏ ஆர் ஆர் ஹாஸ்பெட்டில அட்மின் வேலை” என்றதும் அவள் சந்தோஷமாக,


“ஏய்... எப்போ என்கிட்ட நீ சொல்லவே இல்ல” என்று விசாரிக்க,


“எங்க... நம்ம நிலைமை காலைல இருந்து எப்படி இருந்துச்சுனு உனக்குதான் தெரியுமே” என்றான்.


“அது சரிதான்” என்றவள் பெருமூச்செறிய, “சரி நீ போய் சாப்பிடு போ” என்றவன் கூற,


“நான் சாப்பிடுறேன்... நீ கிளம்பு” என்றாள்.


“நீ முதல உள்ளே போய் உட்கார்ந்து சாப்பிடு... அப்புறம் நான் போறேன்” என்றவன் கூற அவள் உதடுகள் விரிந்தன. அத்தனை நேரம் அவள் மனதை அழுத்தி கொண்டிருந்த பாரமெல்லாம் அவனிடம் பேசிய சில நிமிடங்களிலேயே ஒன்றுமே இல்லை என்றாகிவிட்டது.


“சரி ஓகே” என்று தலையசைத்து விட்டு அவள் உள்ளே செல்ல,


“கதவை நல்லா பூட்டிட்டு... படுத்துக்கோ” என, “சரி டா நீ போ” என்றாள்.


“நான் போறேன் நீ உள்ளே போ” என்றவன் அவள் உள்ளே செல்லும் வரை நின்று பார்த்திருந்து விட்டு அதன் பின்பாக பூரணி வீட்டு கதவை ஆவேசமாக தள்ளி கொண்டு நுழைந்தான்.


0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page