top of page

Kaattumalli - 11

Updated: Jan 1, 2024


நன்றி, நன்றி, நன்றி... மக்களே! இதைத் தவிர, சொல்ல என்னிடம் வேறு வார்த்தைகள் இல்லை.


சென்ற பதிவுக்கு நீங்கள் கொடுத்த Comments எல்லாமே அருமை.


'வல்லரசு நல்லவனா?' என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. அடுத்த அத்தியாயத்தில் தெரிந்துவிடும்.


அடுத்த episode திங்கள் அன்று கொடுக்கிறேன்.


அந்தப் பதிவு Erotica, Romantica, ஆபாச கன்டென்ட் போன்ற வகையராக்களுக்குள் அடங்காத ஒரு... தரமான 18஋+ update ஆக இருக்க வாய்ப்பிருக்கிறது . Stay Tuned...


இதோ எபி...


மடல் - 11


நகரத்தை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைக்கும் சிறு குன்றுடன் அமைந்த அடர்ந்த காட்டுக்கும் இடையில் அமைந்திருந்தது நன்காட்டூர்.


ஊரை விட்டுச் சற்றுத் தள்ளி இருக்கும் நெடுஞ்சாலையின் எதிரெதிர் திசையில் அமைந்திருந்தது அந்த ஊருக்கான பேருந்து நிறுத்தம். பெயர்தான் பேருந்து நிறுத்தமே தவிர நிழற்குடைகள் போன்று எதுவும் அங்கே கிடையாது. ‘நன்காட்டூர் பேருந்து நிறுத்தம்’ என்கிற வட்டப் பலகை மட்டுமே நின்று கொண்டிருக்கும்.


அதற்கு அருகிலேயே ஒரு சிறிய மளிகைக் கடையும் தேனீர் விடுதியும் இருந்தன. காலையும் மாலையும் பள்ளி நேரம் தவிர அங்கே பெரிதாக ஆள் நடமாட்டம் இருக்காது.


வேலை வெட்டி இல்லாத ஊர் இளசுகளும் பெருசுகளும் மட்டும் அந்த தேனீர் விடுதிக்கு வந்து அரட்டை அடித்தபடி பீடியோ சுருட்டோ புகைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பர்.


அந்தச் சாலையின் எதிர்ப்புறமாகச் சற்றுத் தள்ளி உள்ளே சென்றால், அங்குதான் உள்ளது வல்லரசு சொன்ன அந்த நல்ல தண்ணீர் குளம். அந்தக் குளத்தை ஒட்டி ஒரு பெரிய அரசமரம் இருக்க, அதன் கீழேதான் அமைந்து இருக்கிறது சிறிய விநாயகர் சன்னதி. சின்ன மாடம் போன்ற அமைப்பில் பூட்டுப் போடப்பட்ட கிரில் கேட்டுக்குள் பிள்ளையார் பத்திரமாய் வீற்றிருப்பார்.


வருடம் தோறும் விநாயகர் சதுர்த்தி அன்று மட்டுமே அவருக்குப் பூஜை புனஸ்காரம் எல்லாம். மற்ற நாட்களில் அந்தப் பக்கமாக கடந்து போகும் ஒரு சிலர் மட்டும் தலையில் ஒரு கொட்டுக் கொட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போட்டுவிட்டு நகர்ந்து விடுவர் அவ்வளவுதான்.


பரீட்சை சமயங்களில் மட்டும் தேர்வு பயத்தில் பிள்ளைகள், அவரவர் வசதிக்கேற்ப நூற்றியெட்டுச் சுற்றுச் சுற்றி சன்னதியில் முன் சூடம் கொளுத்தித் தேங்காய் உடைத்து அவரை உண்டு இல்லை என்று செய்வர். மற்றபடி அவருடைய அமைதி கெடவே கெடாது.


அதேபோல பல ஆண்டுகளுக்கு முன் குடிநீர் தேவைக்காக ஊர்ப் பெண்களெல்லாம் அந்தப் பகுதிக்கு படையெடுத்துக் கொண்டிருந்தார்களே தவிர, சமீபமாக பஞ்சாயத்து போர்டு மூலம் பெரிய தொட்டிக் கட்டி ஒவ்வொரு தெருவுக்கும் பொதுக் குழாய் கனெக்ஷன் கொடுத்தப் பிறகு யாரும் அந்தப் பக்கம் எட்டிக் கூட பார்ப்பதில்லை. இதையெல்லாம் நன்றாகப் புரிந்து வைத்திருக்கவேதான் அவளை அங்கே வரச் சொல்லி அழைத்திருந்தான் வல்லரசு.


அன்று காலை எழுந்தது முதலே மல்லியின் மனதில் விவரிக்க இயலாத ஒரு சஞ்சலம் குடிக் கொண்டிருந்தது. அன்றைக்குப் போய் எக்குத்தப்பாக வல்லரசுவிடம் மாட்டிக்கொண்ட பிறகு மீண்டும் ஒரு முறை அது போல் செய்ய அவளுக்குத் துணிச்சல் வரவில்லை. அவன் சொன்னது போல அவனிடம் போய் கதையைக் கேட்பதா வேண்டாமா என மனதிற்குள் ஒத்தையா ரெட்டையா போட்டுக் கொண்டிருந்தவள், ‘அவன் சொன்னதற்காகவாவது ஒரே ஒருமுறை சென்று வந்தால் என்ன? அடுத்த முறை இதுபோல் வர முடியாது என்று சொல்லிவிட்டு வந்துவிடலாம்’ என்பதாக, அவளது வழக்கமான அசட்டுத் துணிச்சல் அவளைத் தூண்டி விட, போகலாம் என முடிவு செய்துவிட்டாள்.


அதைச் செயற்படுத்த எண்ணி மனதிற்குள் பலவாறு ஒத்திகைப் பார்த்துவிட்டு, வழக்கமாகக் கிளம்பும் நேரத்திற்கு அரை மணிநேரம் முன்னதாகவே கிளம்பியவள், பழைய சோறு பானையில் கைவிட்டு சோற்றை அள்ளித் தட்டில் போட்டுக்கொண்டு அதில் எருமைத் தயிரை ஊற்றிப் பிசைந்து கருவாட்டுத் துண்டைத் துணைக்கு வைத்துக்கொண்டு சாப்பிட உட்கார,


"என்னடி மல்லி அதுக்குள்ள சாப்பிட உட்கார்ந்துட்ட" என புரியாமல் கேட்ட அம்மாவிடம்,


"அது இல்லம்மா, அரப் பரீட்ச வரப்போகுது இல்ல, அப்புறம் திருப்புதல் தேர்வெல்லாம் இருக்கு, அதான் கொஞ்சம் பயமா இருக்கு. அரச மரத்தடி பிள்ளையாருக்கு ஒரு சூடம் கொளுத்தி வேண்டிக்கலாம்னு சொல்லிச் சீக்கிரமா கிளம்புறேன்" என அசராமல் தன் கதையை அவிழ்த்து விட,


"சரி, சாமிகிட்ட நல்லா வேண்டிக்கோ. ஆனா அது மட்டும் போறாது, புத்திய செதரவிடாம நீ நல்லா படிக்கணும். அப்பதான் நல்ல மார்க் வரும்" என்றபடி அலமாரியில் ஒரு மர டப்பாவில் போட்டு வைத்திருந்த கற்பூரத்தை எடுத்து, துண்டு காகிதத்தில் மடித்து ஒரு வற்றிப் பெட்டியுடன் மகளின் அருகில் கொண்டு வந்து வைத்தவள், "நீ நேரத்தோட சாமி கும்பிட்டுட்டு பஸ் ஸ்டாப்ல வந்து நில்லு, பிரியாவும் வந்துருவா. சேர்ந்தே போங்க" என மகளுக்கு அனுமதி அளித்தாள்.


தன் மேல் முழுமையாக நம்பிக்கை வைத்திருக்கும் அம்மாவை ஏமாற்றுகிறோமே என, பொய் கூறும் அவளது மனது அவளைச் சுடத்தான் செய்தது.


'இதால பெருசா என்ன ஆயிடப்போகுது? இனிமேதான் நாம இந்த மாதிரி எல்லாம் செய்ய போறது இல்லையே. கவனமா படிச்சு நல்ல மார்க் வாங்கி அம்மாவுக்குப் பேர் எடுத்துக் கொடுக்கணும்" எனத் தன் தவறுக்கு சால்ஜாப்பு சொல்லிக்கொண்டு சாப்பிட்ட தட்டைக் கழுவி வைத்துவிட்டு, அம்மா கொடுத்தப் பொட்டலத்தை மறக்காமல் எடுத்துக்கொண்டு, "போயிட்டு வரேன்ம்மா" என்றபடி பையைத் தோளில் மாட்டிக்கொண்டு வீட்டிலிருந்து கிளம்பினாள் மல்லி.


வேக நடைப் போட்டு முக்கிய சாலைக்கு வந்த பின்னும் கூட மனதிற்குள் ஒரு குறுகுறுப்பு இருந்து கொண்டே இருந்தது. தெரிந்தவர்கள் யாராவது தன்னைப் பார்க்கிறார்களா எனப் பார்வையைச் சுழல விட்டபடி வீதியைக் கடந்து நல்ல தண்ணீர் குளத்தருகில் வந்து நின்றாள்.


அவளுக்கு முன்பாகவே அங்கே வந்து காத்திருந்த வல்லரசுவைப் பார்த்ததும் கொஞ்சம் திக் என்றுதான் இருந்தது. ஆனாலும் முன் வைத்த காலைப் பின் வைக்காமல் அவனை நோக்கி நடந்தாள்.


அவளைப் பார்த்த நொடி அவன் பெரிதாகப் புன்னகைக்கப் பதிலுக்குப் புன்னகைக்கக் கூட முடியாதபடிக்கு அவளது முகம் முழுவதும் பயம் மண்டி கிடந்தது.


குளத்தங்கரைச் சுற்றுச்சுவர் மேல்தான் அவன் உட்கார்ந்திருந்தான்.


அவள் நெருங்கி வந்ததும் அவளை உட்காருமாறு ஜாடை செய்து அவன் சற்றுத் தள்ளி அமர வேகமாக வந்து அமர்ந்து முந்தானையால் தன் முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.


"என்ன உன் முகத்துல கொஞ்சம் கூட சிரிப்பே இல்லை. எதுக்கு இவ்வளவு டென்ஷன்" என அவன் இலகுவாகக் கேட்க என்ன பதில் சொல்வது என்று கூட அவளுக்குப் புரியவில்லை, சொல்லும் நிலைமையிலும் அவள் இல்லை.


அவன் சொன்னதற்காகவேணும், மிகவும் முயன்று அவனைப் பார்த்து அவள் புன்னகைக்க, "தட்ஸ் குட், இப்பதான் உன் முகம் கொஞ்சமாவது பார்க்கறபடியா இருக்கு" என அவளை மெச்சியவன், "பரவால்ல ஷார்ப்பா வந்துட்ட, அந்தக் கதையைக் கேட்க அவ்வளவு ஆர்வம் இல்ல" என்று கேலியாகச் சொல்ல, சற்றுத் தெளிந்தவள் இயல்பாகப் புன்னகைத்தாள்.


"நீ இப்படியே சைலன்ட்டா இருக்குறத பாத்தா உனக்குக் கதை கேட்கிறதுல இன்ட்ரஸ்டே இல்ல போல இருக்கே" என்று அவன் அவளைச் சீண்டி விட,


"ஐயோ அப்படி எல்லாம் இல்ல, கொஞ்சம் பயம், அதான்" என்று துரிதமாக அவள் கொடுத்தப் பதிலில் வாய்விட்டுச் சிரித்தவன், "அப்படின்னா நான் இப்ப அந்தக் கதையை உனக்கு சொல்லியே ஆகணும் அதான" என்று கேட்க


'ஆமாம்' எனத் தலை அசைத்தவள், "நான் எட்டரை பஸ்ஸ வேற புடிக்கணும்" என 'சீக்கிரமாக சொல்லிவிடேன்!' என்பதைச் சொல்லாமல் சொன்னாள்.


"எஸ் எஸ், அப்புறம் உனக்கு ஸ்கூலுக்கு லேட் ஆயிடும் இல்ல" என அவளது நிலையை உணர்ந்தாற்போன்று அதற்கு மேல் இழுத்தடிக்காமல் முந்தைய தினம் ஒளிபரப்பான அந்தத் தொடரின் கதையைப் பார்த்ததுப் பார்த்தபடி அப்படியே அவளுக்குச் செல்லத் தொடங்கினான்.


அந்தக் கதையின் சுவாரஸ்யம் மாறாமல் எல்லா உணர்வுகளையும் குரலிலேயே கொண்டு வந்து ஏற்ற இறக்கங்களுடன் ஒரு சில வசனங்கள் கூட மாறாமல் அவன் சொன்ன விதத்தில் மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பு போல மயங்கிப் போய் உட்கார்ந்திருந்தாள் மல்லி.


கதைக் கேட்கும் ஆர்வத்தில் எப்பொழுது நகர்ந்து வந்து அவனுடைய தோளோடு தோள் உரசி அவள் உட்கார்ந்தாளென்று அவளுக்கே தெரியவில்லை. ஆனால் அவனிடம் மிகவும் நெருங்கி இருந்தாள்.


"குதிரை கனைக்கற சத்தம் மட்டும்தான் கேட்டுது மல்லி, கரெக்டா அந்த நேரமா பார்த்து சரியான சஸ்பென்ஸ் வச்சு தொடரும் போட்டுட்டான்" என அவன் அங்கலாய்ப்பாகச் சொல்லி முடிக்க, அதுவரையில் வாயில் ஈ நுழைவது கூடத் தெரியாத அளவுக்கு ஒன்றிப்போய் அந்தக் கதையை கேட்டுக் கொண்டிருந்தவள் "அய்யய்யோ, அவ்வளவுதானா முடிஞ்சு போச்சா" என ஏக்கத்துடன் கேட்க,


"ஆமாம், அவ்வளவுதான், இதோட வியாழக்கிழமைதான் மீதி கதை தெரியும், ஆனா உனக்கு வெள்ளிக்கிழமை மார்னிங்தான்" இன்று அவன் கிண்டலாகச் சொல்ல,


அப்பொழுதுதான் தான் இருக்கும் நிலையில் உணர்ந்தவள் வேகமாக நகர்ந்து அமர்ந்தபடி, "இல்ல இல்ல, என்னால இனிமேல் இந்த மாதிரி வர முடியாது. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் நான் ஸ்கூல்ல போய் கதைய சொல்லிட்டு, நேத்து நீங்க சொன்ன மாதிரி ஒழுங்கா படிப்புல கவனம் செலுத்தப் போறேன். டீச்சர் கிட்ட கேட்டு மொத பெஞ்சில மாறி உட்கார்ந்துடலாம்னு முடிவு பண்ணிட்டேன்" என்று அவள் தன் எண்ணத்தை வெளிப்படுத்த,


"தென் ஓகே, நல்ல டெசிஷன்… வெரி குட்" எனப் பட்டென, அவள் சொன்னதை ஒப்புக்கொண்டவன், "ஆனா இந்த சீரியலோட ஃபர்ஸ்ட் பார்ட் கதையைக் கூட உனக்குச் சொல்லலாம்னு நெனச்சேன். பட் ஓகே நோ ப்ராப்ளம் நீ படிப்ப கவனி" என அவன் வில்லங்கமாக வீசியத் தூண்டிலில்,


"என்ன நீங்க இந்த நாடகத்தோட ஃபர்ஸ்ட் பார்ட்ட பார்த்திருக்கீங்களா? அந்த நாய் எல்லாம் வரும்னு சொன்னாங்களே அதுவா?" என அழகாக வந்து சிக்கினாள் மல்லி.


"ஆமாம், நான் மெட்ராஸ்ல எங்கப் பெரிய மாமாவுக்குச் சொந்தமான ஃபிளாட்ல தங்கி இருந்துதான படிச்சேன். அங்க டிவி, கேபிள் கனெக்ஷன் எல்லாமே இருக்கே, அந்த சீரியல் பயங்கர இன்ட்ரஸ்டிங்கா இருந்ததுனால, ஒரு எபிசோட் கூட மிஸ் பண்ணாம பார்த்து இருக்கேன்" என அவன் கொடுத்த விளக்கத்தில் அசந்துதான் போனாள்.


"ஓ" என்று அவள் வியக்க, "பயங்கர இன்ட்ரஸ்டிங்கா இருக்கும் மல்லி, ஒரு கோவில்ல நவபாஷாண லிங்கங்கள் இருக்கும், அங்க வர எல்லாருக்கும் எல்லா நோயும் குணமாகும், தப்பு பண்ண நினைக்கிறவங்க ஒவ்வொருத்தரா நாய் கடிச்சுச் செத்துப் போவாங்க" என அவன் அந்தக் கதையை ஒற்றை வரியில் அவளுக்குப் புரிய வைத்து, "ஒருவேளை உன்னால தினமும் இதே மாதிரி வர முடிஞ்சா அந்தக் கதையையும் சொல்லலாம்னு நெனச்சேன், சரி விடு பரவால்ல" என அவன் அதை இலகுவாக எடுத்துக்கொள்ள, அவளுக்குத்தான் இருப்புக் கொள்ளவில்லை.


"இல்ல இல்ல அப்படி இல்ல, நான் ஏதோ ஒரு பயத்துலதான் சொன்னேன்… நாளைக்கும் வந்தா இதே மாதிரி கதை சொல்லுவீங்களா" என்று அவள் அப்பாவியாகக் கேட்க,


"பரவாயில்ல மல்லி, நீ தேவை இல்லாம மனசப் போட்டுக் குழப்பிக்காத. இந்தக் கத கேக்குறது ஒண்ணும் அவ்வளவு முக்கியம் இல்ல. நீ படிப்புல கான்சன்ட்ரேட் பண்ணு. அதுதான் ரொம்ப இம்பார்ட்டன்ட்" என்று அவன் அவளுக்குப் புரிய வைக்க முயல,


"இல்ல இல்ல இதனால எந்தப் பிரச்சனையும் இல்லை, ஒரு அரை மணிநேரம் கதை கேட்கிறதால என் படிப்பு ஒண்ணும் கெடாது. நான் எதையாவது சொல்லிட்டு இந்த மாதிரி வர முயற்சிப் பண்றேன்" என்று அவள் பிடிவாதமாகச் சொல்ல,


"அப்ப சரி உன் இஷ்டம், நாளைக்கு காலையிலேயே இதே மாதிரி நான் வந்து உனக்காகக் காத்துட்டு இருப்பேன். முடிஞ்சா வா, முடியலன்னா உனக்கு ஏதோ சங்கடம்னு புரிஞ்சிட்டு நான் வீட்டுக்குப் போயிடுவேன்" என்று அவளுக்காகவே அவன் பார்த்துப் பார்த்துச் சொல்ல, உண்மையில் உருகித்தான் போனாள் மல்லிகா.


அது, அடுத்த நாள் அவன் அங்கே வருவதற்கும் முன்னதாகவே அவளை அங்கே வரவழைத்து அவனுக்காகக் காக்க வைத்தது.


சாமி விஷயத்தில் பொய் சொல்லக் கூடாது என்கிற பயத்தில் கொண்டு வந்த கற்பூரத்தைப் பிள்ளையார் சன்னதியின் வாயிலில் உள்ள கருங்கல் மேடையில் வைத்துக் கொளுத்தி, கரம் குவித்து கண்மூடி அவரிடம் மன்னிப்பு வேண்டி, ‘பாலும் தெளிதேனும்’ பாடலை முணுமுணுத்த படி நெற்றியில் கொட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டுவிட்டு, சென்று வருகிறேன் என அவனுக்குக் கைக் காண்பித்து ஓட்டமும் நடையுமாக பேருந்து நிறுத்தத்தில் வந்து நிற்க, இன்னும் ஒரு நிமிடம் நீ தாமதமாக வந்திருந்தால் கூட என்னைத் தவறவிட்டிருப்பாய் எனும்படி வந்து நின்றது பேருந்து.


"இன்னும் நீ வரவே இல்லையேன்னு கவலப்பட்டேன்க்கா. நல்லவேளை சரியா வந்து சேர்ந்த" என்றபடி பிரியாவும் அவளுடன் பஸ்ஸில் ஏற, அன்றைய நாள் பள்ளியில் அவளுக்கு வெகு தடபுடலாகவே அமைந்தது.


வல்லரசு சொன்ன கதையை மற்ற பெண்களுடன் சேர்ந்து வாய் கிழிய பேசிப் பேசி அவள் ஓய்ந்து போக, சந்திராவின் முகம்தான் எட்டுக் கோணலாகிப் போனது.


அதைப் பார்த்துப் பார்த்து இரசித்தபடி எப்படியோதான் நினைத்ததைச் சாதித்து விட்ட மகிழ்ச்சியில் இருந்தாள் மல்லி.


புத்தகத்தைப் பிரித்து வைத்தால் படிப்பில் நாட்டமில்லை, சாப்பிட உட்கார்ந்தால் பசி இல்லை, பாய் விரித்துப் படுத்தால் உறக்கமே வரவில்லை. இப்படியும் அப்படியமாக புரண்டு ஒரு வெழியாக நித்திரையின் பிடியில் போக, அப்பா வந்து சன்னமான குரலில் அம்மாவிடம் ஏதோ பேசுவதும் அம்மா அதற்கு ஏதோ கிசுகிசுப்பாகப் பதில் அளிப்பதும், அப்பா அம்மாவை கோபமாக ஏதோ சொல்லித் தள்ளி விட்டுப் போவதும் அரை தூக்கத்தில் கனவு போல குழப்பத்தைக் கொடுத்தது. தொடர்ந்து வெள்ளை குதிரை ஒன்று கனவில் வந்து கனைத்தது. கையில் அருவாளோடு கருப்பசாமி வந்தார். யானை ஒன்று வந்து நிற்க அதற்கு நேராக சூடத்தை ஏற்றினாள் மல்லி. குளத்தங்கரையில் படிக்கட்டில் அமர்ந்து அவளை இழுத்துத் தன் மடியில் கிடத்தியபடி ஏதேதோ கதை சொல்லத் தொடங்கினான் வல்லரசு. அனைத்தையும் தாண்டிய ஏதோ ஒரு ஏக்கம் மனதிற்குள் வந்து முகாமிட்டது.


***


சரியான உறக்கம் இல்லாமல் போக அதிகாலை வழக்கத்தை விட சீக்கிரமாகவே விழிப்பு தட்டிவிட்டது மல்லிக்கு. எழுந்து பல் துலக்கி விட்டு வந்தவள் படிப்பதாகப் பாசாங்கு செய்தபடி புத்தகத்துடன் உட்கார்ந்திருந்தாள். மகள் படிக்கிறாள் என்றால் ராஜம் அவளை ஒரு வேலை கூட செய்ய விடமாட்டாள். பாக்கியமும் இன்னும் விழித்து எழவில்லை என்பதால் அவளை எந்த வேலையும் ஏவவில்லை.


எப்படி நெட்டித் தள்ளினாலும் நேரம் மட்டும் நகர்வதாக இல்லை. அப்படி இப்படி ஆவாட்டியபடி நேரத்தைக் கடத்தி விட்டுப் போய் குளித்து வந்தவள் சீருடையை அணிந்து முந்தைய தினம் போல பழையதை எடுத்து சாப்பிட்டுவிட்டு, இன்னும் சில நிமிடங்கள் முன்னதாகவே பள்ளிப்பையைத் தூக்கிக்கொண்டு, மீண்டும் பரீட்சையை சால்ஜாப்பாகச் சொல்லிவிட்டுப் பிள்ளையாரை நூற்றெட்டுச் சுற்றுச் சுற்றுவதாகக் கிளம்பி விட்டாள்.


யார் கண்ணில் படக்கூடாது என்று நினைத்தாளோ அந்தக் கோகிலா சமயமாகப் பார்த்துக் குப்பையைக் கொட்ட வெளியில் வர, அவளிடம் வகையாக மாட்டிக் கொண்டாள்.


"என்னடி மல்லி, இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்ட, காலை வேளைலயே பள்ளிக்கூடத்துல ஏதாவது ஸ்பெசல் கிளாஸ் வெக்கிறாங்களா என்ன?" என அன்றைய பொழுதிற்கான வம்பை அப்பொழுதே தொடங்க,


"இல்லத்த, அரச மரத்தடி பிள்ளையாருக்கு நூத்தியெட்டுச் சுத்துச் சுத்தறேன்னு வேண்டிகிட்டேன். அதான் நேரத்தோட போய் சாமி கும்பிட்டுப் போலாம்னு" எனப் பதில் கொடுத்துவிட்டு அதற்கு மேல் அங்கே நிற்காமல் தபதபவென அவள் சென்று விட,


"டீ மல்லி, நான் கூட தேங்காய் ஒடைக்கறேன்னு சாமிக்கு வேண்டிட்டு இருக்கேன். அடுத்த தடவ கோயிலுக்குப் போகும் போது சொல்லு. நானும் உன் கூட வரேன்" என அவள் சொல்ல, அதெல்லாம் இவள் காதில் எட்டவே இல்லை.


ஆனால் கோகிலா மட்டும் அவளைக் கேள்வியாகப் பார்த்தபடி யோசனையுடன் சில நொடி நின்று விட்டு அதன் பின்புதான் வீட்டிற்குள்ளேயே சென்றாள்.


அப்படி இப்படி சமாளித்து குளத்தங்கரைப் படிக்கட்டில் வந்து அமர்ந்தவள் வல்லரசுவிற்காகக் காத்திருக்கக் தொடங்கினாள். சில நிமிடங்களுக்கெல்லாம், "பரவால்ல, கதை கேட்க அவ்வளவு ஆர்வம் போல இருக்கு இந்த மல்லிக்கு" என்ற பரிகாசத்துடன் அவனும் அங்கே வந்துவிட, அவனைப் பார்த்து மலர்ந்து புன்னகைத்தாள். முந்தைய தினம் இருந்த கலவரம் எதுவும் அவள் முகத்தில் இல்லாமல் இருக்க அவனுக்குமே அது ஒரு திருப்தியை அளித்தது.


"அப்புறம்… சொல்லு நேத்து ஸ்கூல்ல போய் கத சொன்னியா? அந்தப் பொண்ணுங்க எல்லாம் எப்படி ரியாக்ட் பண்ணாங்க?" என்று தெரிந்து கொள்ளும் ஆவலுடன் அவன் கேட்க,


"எல்லாரும் அசந்து போயிட்டாங்க தெரியுமா, அதுவும் அந்த டிராமாவ நேரா டீவில பார்த்தவங்களே கூட கவனிக்காம விட்ட சீன் எல்லாம் கூட நீங்க சொல்லி இருந்தீங்களா, அதெல்லாம் நான் அப்படியே சொல்லவும் எல்லாருமே ஷாக் ஆகிட்டாங்க. ஆனா சந்திரான்னு ஒருத்தி இருக்கா, அவதான் இன்னும் என் வழிக்கு வரல. ஆனா கூட நான் ஆசைப்பட்ட மாதிரி மத்தவங்க முன்னால அவ மூக்கு உடைஞ்சுதான் போச்சு" என்று மல்லி உற்சாக மிகுதியில் சொல்லிக்கொண்டே போக, அவனுடைய முகத்தில் ஒரு அதிர்வலை உண்டாகி நொடிக்குள் மறைந்துபோனது.


அதன் அர்த்தம் அவளுக்குப் புரியாமல் போக, அதைப் பெரிதாகக் கண்டு கொள்ளவும் இல்லை.


"அந்த ரகசியம் கத சொல்றேன்னு சொன்னீங்க இல்ல, சொல்லுங்களேன்" என அவள் தொடங்கி வைக்க அவன் கதை கதையாகச் சொல்ல, இதே போக்கில் சில பல நாட்கள் கடந்ததே தெரியாமல் கடந்தோடிப் போயின.


***


அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை, பள்ளி விடுமுறை என்பதால் நிதானமாக உறங்கி விழித்த மல்லி, தேநீரை ஊதி ஊதிக் குடித்துவிட்டு, பாவாடையைத் தூக்கிச் சொருகியபடி வீட்டைக் கூட்டத் தொடங்கினாள்.


கோகிலாவின் மாமியார் பொழுது விடியவே டீ தூள் கடன் கேட்டு அங்கே வந்திருக்க, அதை எடுக்க உள்ளே போயிருந்தாள் ராஜம். கிடைத்த இடைவெளிக்குள் புகுந்து பாக்கியத்துடன் அவர் வம்பளக்கத் தொடங்கியிருக்க, அவளையே பார்த்திருந்த பாக்கியம், "ஏ மல்லி" என வீடே அதிரம்படி கூவி அழைக்க,


பதறி கையிலிருந்த விளக்குமாறை கீழே போட்டுவிட்டு அப்படியே பாட்டியின் அருகில் ஓடியவள், "என்னாச்சு பாட்டி?" எனக் குரல் நடுங்கக் கேட்க,


"எங்கடி உன்னோட ஒத்தக் காலு கொலுச காணோம்" எனப் பற்களைக் கடித்த படி அடித் தொண்டையில் சீறினார்.


கை, கால்கள் எல்லாம் வெலவெலத்துப் போனது, அப்பொழுதுதான் அதையே கவனித்த மல்லிகாவுக்கு.


"ஐயோ, தெரியலையே பாட்டி, திருகாணி லூசு ஆகிப் படுக்கையில கழண்டு விழுந்திருக்கும் தேடிப் பாக்கறேன்" என்றபடி அவள் படுத்திருந்த இடத்திற்கு ஓடினாள்.


சின்னவன் இன்னுமே அங்கே உறங்கிக் கொண்டிருந்த காரணத்தால் படுக்கை சுருட்டப்படாமலேயே கிடக்க, அவள் போர்த்தி இருந்தப் போர்வையை உதறித் தேடிப் பார்த்தாள். ஆனால் அந்தக் கொலுசு அகப்படவில்லை.


"கால் கொலுசு கழண்டு விழுந்தது கூட தெரியாத அளவுக்கு ஒரு வயசு பொண்ணுக்கு அப்படி என்ன ஒணக்க இல்லாம போச்சு. பொழுதன்னிக்கும் மந்திரிச்சு விட்ட மாதிரி திரியுது மூதேவி. கேட்டா, படிக்கிறேன் படிக்கிறேன் பேர் பண்ண வேண்டியது. மார்க்காவது நல்லா வாங்கியிருக்கான்னு கேட்டா, அதுவும் அவலட்சணம்தான். நல்லா மினிக்கிடு கோவிலுக்குப் போறேன் கொளத்துக்குப் போறேன்னு ஊர மேயுது. இப்படியே விட்டா எவனையாவது இழுத்துகிட்டு ஊரை விட்டு ஓடிப் போய் குடும்ப மானத்த வாங்க போகுது சனியன்" எனக் கொஞ்சம் கூட நாக்கில் நரம்பில்லாமல் வசை மாறி பொழிந்தவர்,


அருகில் இருந்தப் பெண்மணியிடம், "நகை எல்லாம் போடக் கொடுக்காதன்னு அன்னைக்கே என் மருமக தண்டத்து கிட்ட சொன்னேன். புதுசா அப்படியே வெச்சிருந்தா நாளைக்குக் கல்யாணம் காட்சின்னு முடிவானா போட்டு அனுப்ப வசதியா இருந்திருக்கும்னு நல்லதுக்குச் சொன்னா எங்க கேட்டா மகராசி, வயசு பிள்ளைங்க ஆசைப்படுது போட்டுக்கட்டும், எதுவும் தடை சொல்லாதன்னு மூஞ்சுக்கு நேர சொல்லிடுச்சு. பீத்தல் நகன்னாலும் அவங்க வீட்டுல போட்ட திமுரு" எனப் பேத்தியுடன் சேர்த்து மருமகள் மீதும் புகார் பத்திரம் வாசிக்க, அந்த மகரசியோ இவளைக் கூப்பிட்டு புத்திமதி சொல்கிறேன் பேர்வழியே என ஒரு பிரசங்கமே ஆற்றி முடித்துவிட்டு டீ தூளையும் மறக்காமல் வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.


அந்தப் பெண்மணியின் தலை மறைந்ததும், அவள் தரையில் போட்டுவிட்டு வந்திருந்த விளக்குமாற்றை எடுத்து, அதுவரை அடக்கி வைத்திருந்த ஆத்திரமெல்லாம் தீரும் வரை மல்லியை விளாசி விட்டாள் ராஜம்.


பாக்கியம் சொன்னது போல அரையாண்டு தேர்வில் அவளுடைய மதிப்பெண்கள் எல்லாம் மிகவும் கீழே போயிருக்க ஆங்கிலத்தில் ஃபெயிலே ஆகியிருந்தாள்.


அந்த ஆத்திரமே மனதிற்குள் ராஜதிற்கு குறுகுறுத்துக் கொண்டிருக்க இந்த சம்பவமும் சேர்ந்து எரிகிற தீயில் எண்ணை ஊற்றுவதாக அமைந்து போனது.


மஞ்சள் நீராட்டு விழா முடிந்த பிறகுப் புதிதாகக் கிடைத்திருந்த நகைகளை அணிந்து கொள்ள இரண்டு பெண்களுமே ஆசைப்பட்டுக் கேட்க, மறுக்க மனமில்லை அவளுக்கு. அவளுடைய மாமியார் சொல்வது போல் அந்த நகைகளைப் பெண்களின் திருமணம் வரையில் பத்திரப்படுத்தி வைப்பது என்பது முடியாத காரியம். ஏதாவது அவசர தேவை ஏற்பட்டு விட்டால் முதல் காரியமாக அதைக் கொண்டு போய் அடகு கடையில் வைத்து விட்டுத்தான் மறு வேலை பார்ப்பான் குணா. இதுவரையில் நகைகள் எல்லாம் போய் அடகு கடையில் உட்கார்ந்ததே ஒழிய எதுவும் திரும்பி வந்ததாக சரித்திரமே இல்லை. ஏதோ அப்படி ஒன்று நடக்கும் வரையிலாவது இந்தப் பிள்ளைகள் அதை அணிந்து அனுபவிக்கட்டுமே என்கிற எண்ணம்தான் அவளுக்கு.


இந்த நிலைமை எல்லாம் பிரியாவுக்குக் கூட புரியாது ஆனால் மல்லிக்கு நிச்சயம் புரியும். இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறாளே என்கிற ஆதங்கம் மட்டுமே நெஞ்சம்முட்டும் இருந்தது ராஜத்துக்கு. கண்மண் தெரியாமல் அவளை அடித்து விட்டாளே தவிர அடுத்த நொடியே சக்தியெல்லாம் வடிந்து போய் அப்படியே மடிந்து உட்கார்ந்து முந்தானையால் வாயைப் பொத்திக்கொண்டு அழத் தொடங்கி விட்டாள்.


அவள் அடித்த அடியில் முதுகிலும் கையிலும் நன்றாக காயம் பட்டுத் தடித்துப்போய், வலி உயிர் போனது. கட்டுப்படுத்த முடியாமல் அழுகை வந்தது. கொஞ்சம் கூட யோசிக்காமல் இப்படி முரட்டுத்தனமாக நடந்து கொண்ட அம்மாவின் மேல் அப்படி ஒரு கோபம் எழுந்தாலும் அவளுடைய இந்த அழுகைத் துக்கத்தையும் கொடுத்தது மல்லிக்கு. இந்தச் சூழ்நிலையை எப்படி கையாளுவது என்பது கூட அவளுக்குப் புரியவே இல்லை.


குணாவின் கைதான் அடிக்கடி நீளுமே தவிர ராஜம் பிள்ளைகளை அடிக்கவே மாட்டாள். இதுபோல் எப்பொழுதாவது அரிதாகத்தான் நடக்கும். அதுவும் பெண்கள் வயது ஏற ஏற குணா கூட இப்படி கை வைப்பதை நிறுத்தி விட்டிருந்தான். ஆனாலும் கூட அப்பாவிடம் பெண்களுக்கு எந்தச் சலுகைகளும் கிடையாது.


அப்பா அடித்தால் அம்மாவின் மடியில் இதம் கிடைத்துவிடும். ஆனால் அம்மா அடித்தால் அப்பாவிடம் போய் ஒன்ற முடியாது. பாட்டி என்று இருப்பவளும் கருணையற்ற அரக்கியாக இருக்கிறாள். யாரிடம் போய் சொல்லுவாள் தன் குறையை. சிறு பிள்ளையாக இருந்தாலும் கூட அடித்த அம்மாவையே போய் கட்டிக் கொள்ளும். ஆனால் இரண்டும் கெட்டான் வயதில் இருக்கும் இந்த வளர்ந்த குழந்தைக்கோ ரோஷம் பொத்துக் கொண்டு வர, தாயை நாடிச் செல்ல மனம் வரவில்லை.


ஆனால், தன் கவலைகளைச் சொல்லி சாய்ந்து கொண்டு அழுது தீர்க்க ஒரு தோள் மட்டும் தேடி அவளது மனம் ஏங்கித் தவித்தது.


உண்ணவில்லை உறங்கவில்லை சமாதானம் பேசி முகம் பார்த்து நின்ற தாயையும் திரும்பிப் பார்க்கவில்லை. பெரும் துக்கத்துடன் முடிந்து போனது அன்றைய நாள்.


அடுத்த நாள் திங்கள் என்பதால் வழக்கம் போல சீக்கிரமே கிளம்பி குளத்தங்கரை நோக்கி வந்து விட்டாள்.


அவளுக்கு முன்னதாகவே அங்கே வந்து காத்திருந்தான் வல்லரசு. அவளைப் பார்த்ததும் மலர்ந்த புன்னகையுடன் தன் சட்டைப் பைக்குள் கைவிட்டு அவளது ஒற்றைக் கொலுசை எடுத்து அவன் தொங்க விட அப்படி ஒரு துக்கம் பீறிட அவனை நோக்கி வேகமாக வந்தவள் தன் கட்டுப்பாடுகளை இழந்து அவனை அணைத்துக் கொண்டு கதறித் தீர்த்தாள் மல்லிகா.


Recent Posts

See All
Kaattumalli - 14

மடல் - 14 முதல் திருப்புதல் தேர்வில் அவள் வாங்கியிருந்த மதிப்பெண்கள் ஒன்றும் அப்படி சொல்லிக் கொள்ளும்படியாக இல்லாமல் போக நாளுக்கு நாள்...

 
 
 

2 Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Guest
Jul 08, 2023
Rated 5 out of 5 stars.

Going good

Like

Sumathi Siva
Sumathi Siva
Jul 08, 2023
Rated 5 out of 5 stars.

Wow awesome

Like
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page