top of page

Kaattumalli - 10

Updated: Jan 1

Hi Friends,


எப்படியாவது இந்தக் கதையை சீக்கிரமாக எழுதி முடிக்க வேண்டும் என்கிற உந்துதலில்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். உங்கள் கமெண்ட்ஸ் கொடுக்கும் ஊக்கம்தான் இப்படி எழுதவே தூண்டுகிறது. நன்றிகள் பல. இந்தப் பதிவை பற்றிய உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.


My Special Thanks to Selvarani Amma for the Lyrical Video...


மடல் - 10


பள்ளிப் பையைத் தோளில் மாட்டிக் கொண்டு முகத்தை உர்ரென வைத்தபடி தட தடவென நடந்து வந்து கொண்டிருந்த மல்லிகாவைப் பார்த்து, "என்னடி மல்லி, எங்கேயோ எண்ண மழ பெஞ்சுதாங்கற கணக்கா, இழுத்துச் சொருகாம பப்பரப்பன்னு முந்தானைய பறக்க விட்டுட்டு, ஆடி அசஞ்சி நடந்து வர. மூஞ்சி வேற அறுந்து தொங்குது. பள்ளிக்கூடத்துல எவ கூட, என்ன சண்ட? இல்ல மாச பரீட்சைல மார்க் கொறஞ்சு போச்சா? உங்கம்மா காரி வேற என் பொண்ணாட்டம் உண்டான்னு தல மேல தூக்கி வச்சுட்டு ஆடிட்டு இருக்கா. மார்க் கீர்க்கு கொறஞ்சா விளக்குமாத்தால வச்சு வாங்க மாட்டா உன்ன? அந்தப் பயமா" என வம்புக்கு வாகாக வாயிற் திண்ணையில் அமர்ந்திருந்த பக்கத்து வீட்டு கோகிலா அவளது வாயைப் பிடுங்க,


ஒரு நொடி துணுக்குற்றவள், முந்தானையை இழுத்து சொருகியபடி, "அதெல்லாம் ஒண்ணுமில்ல அத்த, நீயா எதையாவது கத கட்டாத" என்று கடுப்புடன் பதில் கொடுக்க,


"ஆமான்டியம்மா அப்படியே நான் கத கட்டிட்டாலும்" என நொடித்தவள், "நான் ஒரு நிஜம் சொல்றேன் கேட்டுக்கோ, அப்புறம் உன் மூஞ்சி எப்படி போகுதுன்னு நானும் பாக்குறேன்" என அவளை மேலும் சீண்டி விட,


"வீட்டுக்குள்ள நுழைஞ்ச உடனே வெஞ்சு வாயில போட்டுக்க என் பாட்டி தயாரா இருக்கும். நீ வேற படுத்தாத அத்த, ஏற்கனவே கொல பசில இருக்கேன்" என மல்லி சலிப்புறவும்,


"போ… போ… உன்ன அப்படி வெஞ்சி வாயில போட்டுக்க பாக்கியம் கிழவி ஒண்ணும் வீட்டுல இல்ல" எனக் கோகிலா சொல்லவும் வியப்புடன் கேள்வியாக அவளை ஏறிட,


"என்னோட மாமியாக்காரியும், உங்க வீட்டுக் கெழவியும் உன் தம்பிங்க மூணுத்தையும் கூட இழுத்துக்கிட்டுப் பக்கத்து ஊரு சினிமா கொட்டாயில படம் பார்க்க போயிருக்குதுங்க. நீ போய் சோத்த தின்னுட்டு ராத்திரி அதுங்க வர வரைக்கும் நிம்மதியா கெட" என அவள் ஏற்கனவே எரிகிற தீயில் எண்ணெயை ஊற்ற, புசுபுசு எனப் பெருமூச்சு எழுந்தது மல்லிக்கு. மேற்கொண்டு எதுவும் பேசாமல் வேகமாக அங்கிருந்து அகன்றாள்.


சுரத்தே இல்லாமல்தான் காலை கிளம்பி பள்ளிக்குச் சென்றிருந்தாள். கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்த வம்புக்கார பெண்கள் எல்லாம் பாடத்தைக் கூட கவனிக்காமல் முந்தைய இரவு ஒளிபரப்பான விடாது கருப்பைப் பற்றியே குசுகுசுவெனப் பேசிக் கொண்டிருக்க, அடிவயிற்றில் அமிலம் சுறந்தது மல்லிக்கு.


முந்தைய தினம் அவள் திட்டமிட்டபடி எல்லாம் சரியாக நடந்திருந்தால் இன்றைக்கு இவளும் பெருமை பீற்றிக் கொண்டிருந்திருக்கலாம். அதற்குத்தான் வழி இல்லாமல் போய்விட்டதே! அங்கே நிம்மதியாக உட்கார்ந்து அந்தத் தொடரைப் பார்த்துக் கொண்டிருந்த தம்பிகளையும் கோகிலாவின் மாமியாரையும் மனதிற்குள் கொண்டு வந்து ஆயிரம் வார்த்தைகளால் திட்டித் தீர்த்தாள். அதுவும் இவளைக் கழற்றி விட்டுவிட்டு அவர்கள் மட்டும் தனியாகப் படத்தைப் பார்க்கச் சென்றிருக்க ஆற்றாமை தாங்கவில்லை அவளுக்கு.


'சாமி, கோவிலுன்னு இல்லாம இந்த வயசுல இந்தக் கெழவிங்களுக்கு சினிமா ஒண்ணுதான் கேடு! என்னையும் கூட கூட்டிட்டுப் போன்னு சொன்னா பொம்பள பிள்ளைகளுக்கு என்னடி சினிமா ஷோக்கு வேண்டி கிடக்கு, அத்தையும் இத்தையும் பார்த்துப் புத்திக் கெட்டுப் போறதுக்கா? ஏற்கனவே இப்படி மினிகிட்டு திரியுறன்னு நாக்குல நரம்பே இல்லாம பேசும். இவ்வளவு ஓரவஞ்சன புத்தி இந்தக் கிழவியை விட்டு எப்பதான் போகுமோ. நானும் ஆம்பள புள்ளையா பொறந்து தொலைச்சிருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்.


இந்தக் கிழவிக்கும் அப்பாவுக்கும் என்ன ரொம்ப புடிச்சிருக்கும். தம்பிங்கள தல மேல தூக்கி வச்சு ஆடுற மாதிரிதான என்னையும் தூக்கி வச்சு ஆடி இருப்பாங்க. இங்க நிக்காத அங்க உக்காராதன்னு பொழுதன்னைக்கும் நம்மளை ஏதாவது சொல்லிட்டே இருந்திருக்க மாட்டாங்கல்ல. நெனச்சா யார் வீட்டுக்குள்ள வேணாலும் போய் உக்காந்து டிவி பார்க்கலாம். இதோ இப்படி சினிமாவுக்கு எல்லாம் கூட்டிட்டு போவாங்க! பாரு, நம்மளுக்கு வீட்டுக்குள்ளேயும் நிம்மதி இல்ல வெளியிலயும் நிம்மதி இல்ல.


பக்கத்தூரு சினிமா கொட்டாயில சூரியவம்சம் படம் போட்டிருக்கான்னு பொதுக்குழாயடில தண்ணிப் பிடிக்கும் போது பேசிக்கிட்டாங்களே. புது படம். பாட்டெல்லாம் கூட ரொம்ப நல்லா இருக்கு. அதான் டவுன் பஸ்ல தெனமும் போடுறாங்களே. இலவச பஸ் பாஸ்ல போறதால, ட்ரேவல்ஸ் பஸ்ல கூட தெனமும் போக முடியாது. இன்னும் சொல்லபோனா, இந்த ஃப்ரீ பஸ் பாஸ் மட்டும் இல்லனா நம்மள பள்ளிக்கூடத்துக்கே அனுப்பாதுங்க, அஆங்.


இதெல்லாம் அனுபவிக்கனும்னு சொன்னா கூட ஒரு கொடுப்பன வேணும், ஆம்பள புள்ளையா பொறக்குற கொடுப்பன' என மனதிற்குள் புலம்பிய படி வீட்டிற்குள் நுழைந்தவள் பாட்டி மேல் இருந்த கோபத்தில் காலில் அணிந்திருந்த செருப்பை இரு வேறு திசையில் விசிறி அடித்தாள்.


வழக்கத்திற்கு மாறாக, உள்ளுக்குள்ளே வானொலி பெட்டியிலிருந்து மெலிதாக கசிந்து வந்த பாடல் ஒன்று அவளது ஆத்திரத்தைச் சற்றுத் தணிக்க, பையைத் திண்ணையில் வைத்து விட்டு, தாவணி முந்தானையால் முகத்தைத் துடைத்தபடி உள்ளே சென்றாள்.


நிறம் மங்கிப்போன வாயில் புடவையை உடுத்தி அதற்குக் கொஞ்சம் கூட பொருத்தமே இல்லாத ஒரு ரவிக்கையை அணிந்திருந்தாலும், முகம் கழுவிப் பொட்டு வைத்து, அழகாகத் தலையை வாரி பின்னல் போட்டு, ஒரு இலகுவான தோற்றத்தில், கூடத்துத் தூணில் சாய்தமர்ந்தபடி வானொலியுடன் கூட சேர்ந்து அந்தப் பாட்டைத் தானும் முணுமுணுத்துக் கொண்டிருந்தாள் ராஜம்.


உறக்கம் இல்லாமல்

அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்.

இரக்கமில்லாமல்

என்னை நீ வாட்டலாமொ நாளும்?


வாடைக்காலமும்

நீ வந்தால் வசந்தமாகலாம்.

கொதித்திருக்கும் கோடைக்காலமும்

நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்.


எந்நாளும்

தனிமையே எனது

நிலைமையா தந்த

கவிதையா கதையா…


இரு கண்ணும்

என் நெஞ்சும்

இரு கண்ணும்

நெஞ்சும் நீரிலாடுமோ…


மயங்கினேன்

சொல்லத் தயங்கினேன்

உன்னை விரும்பினேன்

உயிரே!


இப்படி அத்திப் பூத்தார் போல கிழவி வீட்டில் இல்லாத சமயங்களில் மட்டும் தனக்கு மிகவும் பிடித்தமான செயலான, ரேடியோவில் பாட்டுக் கேட்பதெல்லாம் செய்வாள் அம்மா. அழகாகத் தலை சீவிப் பொலிவானத் தோற்றத்துடன் நிம்மதியாக உட்கார்ந்திருப்பதெல்லாம் கூட இப்படிப்பட்ட தருணங்களில் மட்டுமே அவளுக்குச் சாத்தியம். பாட்டி வீட்டில் இருந்தால் ஏதாவது ஒரு வேலை சொல்லி அவளை ஏவிக் கொண்டே இருப்பார். அடர்ந்த நீண்ட கூந்தலைச் சிக்கெடுத்து நிம்மதியாகத் தலை சீவக் கூட அம்மாவுக்கு நேரம் இருக்காது.


மூத்தப் பெண் என்பதால் தாயின் வலிகளையும் ஏக்கங்களையும் மல்லியால் நன்றாகவே உணர முடிந்தது. இப்படி அவளைப் பார்க்கவும் மனதிற்குள் ஏதோ ஒரு இனம் புரியாத வலிப் பரவியது.


என்ன மிஞ்சி மிஞ்சிப் போனால் இன்றைக்கெல்லாம் முப்பத்தைந்து வயதுதான் இருக்கும் அவளுக்கு. இதுபோல் நன்றாக உடை அணிந்து என்றாவது அவளுடன் வெளியில் செல்ல நேர்ந்தால், புதிதாகப் பார்ப்பவர்கள் அக்காவா என்று கூட இவளிடம் கேட்டதுண்டு. இப்பொழுது வரை ஹீரோயினாக சினிமாவில் நடிக்கும் ஸ்ரீதேவி, ராதிகா, பானுப்ரியா போன்றவர்களுக்குக் கூட. முப்பது சொச்சம் வயதுதானாமே!


பொதுவாகவே அவளுடைய அம்மாவுக்குப் பிடித்தப் பாட்டெல்லாம் இவளுக்கும் பிடிக்கும். அம்மாவுக்குப் பிடித்தமான ஒவ்வொரு பாட்டுக்குப் பின்னாலும் ஒரு ஏக்கம் நிறைந்த கதை இருக்கும். அதுவும் இந்தப் பாட்டின் வரிகள் அம்மாவின் சோகமான மனநிலையை விளக்குவது போல் அவளுக்குத் தோன்ற, இப்படிப்பட்ட பூப் போன்ற அம்மாவை நல்லபடியாக வைத்துக் குடும்பம் நடத்த அப்பாவுக்குத் தெரியவில்லையே என குணாவின் மேல் கோபம் வந்தது.


அப்பா அம்மாவின் திருமண வாழ்க்கையைப் பற்றி மனதிற்குள் அலசிக்கொண்டிருக்கும் பொழுது சம்பந்தமே இல்லாமல் வல்லரசுவின் நினைவும் அவளுக்கு வந்து தொலைத்தது. முந்தைய தினம் ஆர்வமாக அவன் அவளைப் பார்த்தப் பார்வை வேறு அவளுடைய மனதில் எதையோ கிளரி விட்டிருந்தது.


வீட்டிற்கு வந்து மூலையில் படுத்தப் பிறகும் கூட உடல் தடதடத்துக் கொண்டே இருக்க மனம் அமைதியற்று தவித்து உறக்கம் கூடப் பறிப்போனது.


எண்ண ஓட்டங்களின் வேகத்தில் அவள் அப்படியே மலைத்து நிற்க அதை உணர்ந்து அவளைத் திரும்பிப் பார்த்த ராஜத்தின் முகம் பூவாய் மலர்ந்தது.


தானும் புன்னகைத்தபடி ஓடிப்போய் அவளை அணைத்தவள், "பிரியா எங்கம்மா போயிட்டா? ஆளையே காணோம்" எனக் கேட்க,


"பள்ளத்தெரு செல்வி அக்கா வீட்டில பால் காசு வாங்கணும், அத போய் வாங்கிட்டு வரச் சொல்லி உங்க பாட்டி அனுப்பி வச்சாங்க. கிளம்பிப் போயி முக்கா மணிநேரமாச்சு. இன்னும் வீடு வந்து சேரல. எங்கயானா வாய பாத்துட்டு நின்னுட்டு இருக்கும்" எனப் பதில் கொடுத்தவள்,


"கரி அடுப்பு மேல டீ போட்டு வச்சிருக்கேன். பக்கத்திலேயே காராமணி சுட்டு வச்சிருக்கேன். எடுத்துட்டு வந்து உட்கார்ந்து சாப்பிடு" என மகளின் பசியறிந்து அவளை அங்கிருந்து கிளப்பி விட்டு அடுத்ததாக வந்த பாட்டோடு கலந்தாள் ராஜம்.


அவள் தயார் செய்து வைத்திருந்த தேநீரையும் சுட்டு வைத்திருந்த காரமணியையும் எடுத்துக்கொண்டு புழக்கடைக்குச் சென்றவள் கிணற்று மேடை மேல் அமர்ந்தவாறு ஒவ்வொன்றாக தோலை உரித்து காராமணிப் பயிரை வாயில் போட்டு மென்ற படியே, காலை தோழிகள் சொன்ன கதையை மனதிற்குள் அசைப் போட்டுக் கொண்டிருந்தாள்.


இந்த ஒட்டு மொத்தக் கூட்டத்தின் கண்களில் மண்ணைத் தூவி, வடிவத்தை வீட்டிற்குப் போய் இந்தத் தொடர் நாடகத்தின் அடுத்தப் பாகத்தை எப்பாடுபட்டாவது பார்த்து விட வேண்டும் என்ற வெறியே அவளுக்குள் உண்டானது.


எப்படி… எப்படி.. என்று பலவாறாக யோசிக்க, அவர்கள் வீட்டின் சுற்றுச் சுவரை ஒட்டி இருக்கும் மாடிப்படியின் பக்கவாட்டில் அமைந்திருக்கும் ஒரு சிறு சந்து போன்ற பகுதி அவளது நினைவில் வந்தது. அதன் வழியே உள்ளே போனால் அங்கிருக்கும் சுவரில் தாமரைப்பூ வடிவிலான ஒரு சிறிய சிமெண்ட் ஜாலி பதிக்கப்பட்டிருக்கும். அந்த ஓட்டையில் கண்ணைப் பதித்துப் பார்க்கும் பொழுது அவர்கள் வீட்டுத் தொலைக்காட்சித் தெளிவாகத் தெரியும்.


பொதுவாக அந்தச் சந்துக்குள் யாருமே நுழைய மாட்டார்கள் என்பதால் அவள் மாட்டிக் கொள்ள வாய்ப்பே இல்லை. என்ன, திருட்டுத்தனமாக அவர்கள் வீட்டின் இடுப்புயர சுற்றுச் சுவரை எகிறிக் குதித்துத் தாண்ட வேண்டி வரும். எப்படியுமே இருட்டும் நேரம் என்பதால் வீட்டு மனிதர்கள் யார் கண்ணிலும் பட வாய்ப்பில்லை. அந்த மாடிப்படிக்கட்டும் மொட்டை மாடிக்குச் செல்வதால் அந்த நேரத்தில் யாரும் அதைப் பயன்படுத்த மாட்டார்கள். அடுத்த முறை கட்டாயம் இதை முயற்சி செய்து பார்த்துவிட வேண்டும் என உறுதி எடுத்துக் கொண்டாள். அதன் பின்புதான் அவளுடைய மனமே சற்று ஆசுவாசப்பட்டது.


'காதலா காதலா காதலில் சாரலா', எனக் குதூகலத்துடன் சத்தமாகப் பாடிக்கொண்டே தேநீரையும் குடித்து முடித்துவிட்டு அங்கிருந்து அகலும் நேரம், தோட்டத்துச் செடியில் பூத்திருந்த செவ்வந்திப்பூ அவளது கண்களில் பட்டது. நேராகப் போய், செடிக்கே வலிக்காமல் அந்தப் பூவைப் பறித்தவள் அப்படியே அதை எடுத்து வந்து, "அதிசயமா தல சீவி இருக்க… ஒரு ஹேர் பின் வெச்சு இத தலைல சொருகிக்கம்மா, உனக்கு அழகா இருக்கும்" என்று ராஜத்திடம் நீட்ட, ஒரு மலர்ந்த புன்னகையுடன் அவளது கன்னத்தை வழித்து முத்தம் வைத்தவள் பிறகு அதை வாங்கி தலையில் சூடிக் கொண்டாள். அம்மாவுடைய அந்தப் புன்னகை அவளுக்கு அப்படி ஒரு நிறைவைக் கொடுத்தது.


மனம் முழுக்க வெள்ளை ஒயர் டிவியே வியாபித்திருந்ததால் படிப்பில் சற்றுக் கூட கவனம் செலுத்தவில்லை அவள். இடைப்பட்ட அந்த இரண்டு நாட்களும் அந்தத் தொடரைப் பார்த்துவிடும் வெறியில் சரியான உறக்கம் கூட அவளுக்கு வரவில்லை.


***


அப்படி இப்படி என்று அந்த நாளும் வந்து சேர்ந்தது. 'கொக்குக்கு ஒன்றே மதி' என்பது போல அதே நினைப்பில் கிடந்தவளுக்கு உடம்பே சற்று அனற்றலாக இருந்தது.


காலையே ஏதாவது சாக்குச் சொல்லி பள்ளிக்கு மட்டம் போட்டு விடலாமா என்கிற எண்ணம் கூட தோன்றியது. ‘லீவு’ என்கிற வார்த்தையை மட்டும் சொன்னால் அவ்வளவுதான், அம்மா உக்கிர காளியாக மாறிவிடுவாள். பெரிதாகச் சண்டை வந்து முட்டிக் கொள்ளும். அதனால் நாள் முழுதும் அம்மாவின் கவனம் இவள் மீதே விழுந்து அவள் தீட்டி இருக்கும் திட்டம் பாழாய் போகும் என்பதால் வேண்டாத வெறுப்பாக பள்ளிக்குக் கிளம்பிச் சென்றாள்.


எப்பொழுதடா மாலை மணி அடிக்கும் எனக் காத்திருந்து, கூடவே சிறப்பு வகுப்புகளையும் ஒரு வழியாக முடித்து அறக்கப் பறக்க ஓடி வந்து பேருந்து நிறுத்தத்தில் நிற்க, அரசுப் பேருந்து ஒன்று கூட வரவில்லை. தனியார் பேருந்துகள் மட்டுமே ஒன்றன்பின் ஒன்றாகப் படையெடுத்துக் கொண்டிருந்தன. ஜாமென்ட்ரி பாக்ஸை எடுத்து திறந்து பார்க்க வெறும் எட்டணா மட்டுமே அதில் இருந்தது. அதை வைத்து டிக்கெட் வாங்க முடியாது என்பதால் பல்லைக் கடித்துக் கொண்டு நின்றிருந்தாள். நீண்ட நேரம் காக்க வைத்து அவளுக்கான பேருந்து வந்து சேரவும், முண்டியடித்து ஏறி ஒரு வழியாக ஊர் வந்து சேர்ந்தவள் ஓட்டமும் நடையுமாக வீட்டிற்கு வந்தாள்.


வாயிற் திண்ணையிலேயே உட்கார்ந்திருந்த பாக்கியம் வழக்கம் போல அவளை நாலு வார்த்தை திட்டி அதன் பின் அவள் உள்ளே சென்று பள்ளிப் பையைக் கடாசிவிட்டு, முகம் கழுவி, துணி மாற்றி, அம்மா போட்டு கொடுத்த தேனீரைப் பருகிவிட்டு நல்ல பிள்ளை போல புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு உட்கார்ந்து விட்டாள்.


பார்வை என்னவோ புத்தகத்தில்தான், ஆனால் ஒரு வார்த்தை கூட அவள் மூளைக்குள் செல்லவில்லை.


அதே நேரம் வீட்டைக் கூட்டிப் பெருக்கிக் கொண்டிருந்த பிரியாவுக்கோ அவ்வளவு எரிச்சல். "பத்தாவது படிக்கிற, ஸ்பெஷல் கிளாஸ் அது இதுன்னு சொல்லிட்டு நீ பாட்டுக்கு வீட்டு வேலைல இருந்து தப்பிச்சிக்கிற. நாந்தான் இந்தக் கிழவி கிட்ட மாட்டிக்கறேன். இருடீ இரு, அடுத்த வருஷம் உன்ன ஒரு கைப் பார்க்கல என் பேர் பிரியா இல்லடீ" எனப் பொரிந்து தள்ள, பெரியவளுக்குப் பரிந்து ராஜம் அவளை அதட்டி ஏதோ சொல்ல அவை எதுவும் இவளுடைய காதுக்குள்ளேயே நுழையவில்லை.


கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தவள், சென்ற முறை செய்தது போலவே, ராஜத்தைப் பசி… பசி… எனப் பிடுங்கி, வெந்ததும் வேகாததுமாக எதையோ சாப்பிட்டு விட்டு வந்து படுத்துவிட்டாள். அன்றைக்கென்று பார்த்து சின்னவன் ஜீவாவும் தொணதொணவெனப் பேசியபடி உறங்காமல் அவளைப் படுத்தி எடுக்க, கடுப்பாகிப் போய் பட்டென்று அவனது முதுகில் ஒரு அடி வைத்து வலியில் அவன் அழத்தொடங்கவும், அவனை சமாதானம் செய்து கெஞ்சிக் கொஞ்சித் தட்டிக் கொடுத்து எப்படியோ உறங்க வைத்துவிட்டு, அன்று போலவே படுக்கையைத் தயார் செய்து வைத்து எப்படியோ தப்பித்து வடிவாம்பாள் வீடு வரை வந்து விட்டாள்.


பக்கத்துக் காலி மனை வழியாக உள்ளே நுழைந்து சுற்றுச்சுவர் வரை வந்துவிட்டாலும் கொஞ்சம் உதறல் எடுக்கத்தான் செய்தது. பயத்தை ஆசை வென்று விட அசராமல் சுவர் ஏறி உள்பக்கம் குதித்தவள் பார்வையை நாலாபுறமும் சூழலவிட்டபடி அந்தச் சந்தின் வழியாக நுழைந்து சுவரில் ஒட்டியபடி நின்றவாறு அங்கிருந்த சிமெண்ட் ஜாலியின் சின்ன சின்ன ஓட்டைகளில் விழிகளைப் பதித்து உள்ளே பார்த்தாள். தொலைக்காட்சித் திரை சற்றுப் பெரியது என்பதால் காட்சிகள் நன்றாகவே தெரிந்தது. முழு சத்தத்தில் தொலைக்காட்சியை வைத்திருக்கவே வசனங்களும் காதில் நன்றாகவே விழுந்தது. நல்ல வேளையாக அப்பொழுதுதான் அந்த நாடகமும் தொடங்கியிருந்தது.


'ஐயோ… நாம இந்த நாடகத்த பார்த்துட்டோமே?!' என்கிற பரவசமும் கூடவே எச்சரிக்கை உணர்வும் லேசான பதற்றமும் கலந்து அவள் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கத் தொடங்க, தொடரில் இருந்த சுவாரஸ்யம் அவளை தன் உள்ளே இழுத்துக் கொண்டது.


நிமிடங்கள் செல்லச் செல்ல சுற்றுப்புறம் மறந்து தொலைக்காட்சிக்குள்ளேயே சென்று விட்டாள் மல்லி.


எவ்வளவு நேரம் கடந்திருந்தது என்கிற நினைப்பெல்லாம் இல்லாமல், விளம்பரங்கள் வரும் சமயத்தில் கூட அப்படி இப்படி திரும்பாமல் அவள் பாட்டிற்குத் தொலைக்காட்சியிலேயே ஐக்கியமாகி இருக்க திடீரென்று மாடிப்படிகளில் இருந்து கேட்ட சத்தத்தில் ஒரு நொடி சுதாரித்து அவள் திரும்புவதற்குள், ஒரு ஆடவனின் முரட்டு கரங்களுக்குள் பிடிபட்டிருந்தாள்.


பின்னாலிருந்து இருக்கியபடி அவனது ஒரு கரம் அவள் குரல் எழுப்ப முடியாத வண்ணம் அவளது வாயை அழுத்தப் பொத்தியிருக்க, மற்றொரு கரம், அவள் கொஞ்சம் கூட அசைய முடியாதபடிக்கு அவளுடைய கைகளுடன் சேர்த்து அவளை மொத்தமாக இறுக வளைத்திருந்தது.


யாரோ ஒரு அந்நிய ஆடவனின் தீண்டலில் உடல் மொத்தம் தூக்கி வாரி போட, சக்தி மொத்தம் வடிந்தாற் போன்று பீதியில் அவள் குரல் எழுப்ப, "ஐயோ, பொண்ணா" என அந்த நொடிதான் அவள் பெண் என்பதையே அவனது கரங்களும் அறிவும் உணர்ந்தாற் போன்று பட்டென அவளை விடுவித்தான் வல்லரசு.


பயத்தில் வெலவெலத்துப் போய், அவளது உடல் பாட்டிற்கு தன் கட்டுப்பாடின்றி தடதடவென்று ஆட்டம் கண்டிருக்க, மருண்ட படி செயலற்று அவள் நிற்கவும் அவளுடைய நிலையை உணர்ந்தாற்போல அவளது கையைப் பற்றி மெதுவாக இழுத்து வந்து அங்கிருந்த மாடிப்படியில் அமர வைத்தவன், கையில் வைத்திருந்த டார்ச் லைட்டை அவளது முகத்துக்கு நேராக அடிக்க, விழிகள் கூசிக் கண்களை மூடிக்கொண்டாள்.


"ஏய், குணா மாமா பொண்ணுதான நீ? ரெண்டு மூணு நாளைக்கு முன்னால கூட உன்னை நான் இங்கப் பார்த்தனே! என்ன இது? இப்படி திருடி மாதிரி இங்க வந்து நின்னுட்டு இருக்க? ஏதோ உன்னோட நல்ல காலம் தப்பிச்ச இல்லன்னா மொதல்லேயே வெச்சு சாத்திக் கை, கால முறிச்சிருப்பேன்" என அவன் கண்டனமாகப் பேசிக்கொண்டே போக அவளது கண்களில் இருந்து கரகரவெனக் கண்ணீர் வழிந்தது.


"நான் கேட்டுட்டே இருக்கேன். செய்யறதையும் செஞ்சிட்டு நீ பாட்டுக்குப் பதில் சொல்லாம அழுதுட்டு இருக்க" என அவன் தொடர்ந்து மிரட்ட, "ட்ட்ட்ட்டீவி" என வார்த்தை தந்தி அடிக்கத் தொண்டை அடைத்து அதற்கு மேல் அவளால் எதையுமே பேச முடியவில்லை.


அவளது தவிப்பைப் புரிந்துகொண்ட பாவத்தில், "ப்ச்… ரிலாக்ஸ்… நான் ஒண்ணும் சிங்கமோ புலியோ கிடையாது. உன்ன கடிச்சு தின்னுட மாட்டேன், சரியா? பயப்படாம என்ன ஏதுன்னு புரியற மாதிரி சொல்லு" என்று அவன் சற்றுத் தணிந்து வர,


எச்சிலைக் கூட்டி விளங்கியவள் தொண்டை அடைக்க, "நான் டிவில அந்த மர்மதேசம் டிராமாவைப் பார்த்துட்டு இருந்தேன்" என வேறு வழி இல்லாமல் ஒருவாறு சொல்லி முடித்தாள்.


அதைக் கேட்டு அவன் பக்கெனச் சிரிக்கவும் அவளுக்கே ஒரு மாதிரியாகிப் போனது. "ஏதோ ஒரு ஆசைல இந்த மாதிரி பண்ணிட்டேன், தயவு செஞ்சு யார்கிட்டயும் சொல்லி என்ன மாட்டி விட்டுடாதீங்க ப்ளீஸ்" என்று அவள் கெஞ்சலாகக் கேட்க,


"டிவிதான பார்க்க வந்த, அதுதான் இந்த ஊரே வீட்டுக்குள்ள வந்து உட்கார்ந்திருக்கு இல்ல. மத்த ஆளுங்களும் வாசப் பக்கம் இருக்கற ஜன்னல் வழியா பார்க்கறாங்கதான. நீ மட்டும் ஏன் இங்க வந்து தனியா திருட்டுத்தனமா நின்னுட்டு இருக்க, பேசாம உள்ள வந்து பார்க்கலாம் இல்ல" என்று அவன் இயல்பாகப் பேசத் தொடங்க,


"ஐயோ" எனது நெஞ்சின் மீது கை வைத்தவள், "ஊரே வந்து இங்க உக்காந்து இருக்கு, ஆனா யாராவது வயசு பிள்ளைங்க வந்திருக்காங்களா? பார்த்தீங்களா? இதெல்லாம் நம்ம ஊர்ல பெரிய தப்புங்க. இங்க வந்து இப்படி பார்க்கணும்னு சொன்னாலே போதும், கொழாயடில நின்னுட்டு கண்டவளும் கண்ட படி பேசுவாளுங்க. அப்பறம் எங்க வீட்டு விளக்குமாறுதான் பிஞ்சிப் போகும். அதனாலதான் யாருக்கும் தெரியாம நான் இங்க வந்து திருட்டுத்தனமா பாத்துட்டு இருக்கேன். தயவு செஞ்சு இதைப் பெரிசு படுத்தாதீங்க" என அவள் குரல் நடுங்கச் சொல்லவும்,


"ஓ அப்படியா? அதான் இதுல இவ்ளோ சிக்கல் இருக்குன்னு தெரியுது இல்ல? ஆப்டர் ஆல் ஒரு டிவி சீரியல்தானே, போயும் போயும் இத பார்க்க நீ இவ்வளவு ரிஸ்க் எடுப்பியா?" என்று அவன் பேச்சை வளர்க்க,


"ஆஃப்டர் ஆல் டிவி சீரியலா? என்ன அவ்வளவு லேசா சொல்லிட்டீங்க! இந்த டிராமா பத்தி ஊரே எவ்ளோ வியப்பா பேசிக்குது தெரியுமா? பள்ளிக்கூடத்துல படிக்கிற பொண்ணுங்க எல்லாம் தெனந்தெனம் இத பத்தியே பேசிட்டு இருக்காளுங்க? எனக்கு ஒண்ணுமே தெரியாததால கிளாஸ்ல எவ்வளவு அசிங்கமா இருக்குத் தெரியுமா? அதுவும் ஒருத்தி எப்ப பாரு என்ன மட்டம் தட்டிட்டு இருக்கா, அவளோட மூக்கை நான் உடைக்க வேணாமா?" என மூக்கு சிவக்க அவள் ரோஷமாகச் சொல்ல, அவளுடைய பாவத்தில் அப்படி ஒரு சிரிப்பு வந்தது அவனுக்கு.


"ஒரு நாள் ரெண்டு நாள் நீ இப்படி செய்யலாம். ஆனா இத தொடர்ந்து செய்ய முடியுமா? ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் நீ வீட்டுல மாட்டிக்கிட்டு உங்க வீட்டு விளக்கு மாத்துக்கு வேலை கொடுப்ப, சரிதான நான் சொல்றது" என்று அவன் அவளது முகத்தைப் பார்த்துக் கேட்க,


ஒரு நீண்ட யோசனைக்கு பின் 'ஆமாம்' என்பதாகத் தலையசைத்தாள்.


"தோ பாரு" என ஏதோ சொல்ல வந்தவன் அதை நிறுத்திவிட்டு, "ஆமாம் உன் பேர் என்ன?" எனக் கேட்டான் தீவிரமாக. இந்த சில நிமிட பேச்சுவார்த்தைக்குள்ளேயே ஒரு இலகுவான நிலைக்கு அவள் வந்திருக்க, "மல்லிகா" என்றாள்.


"தோ பாரு மல்லிகா, உனக்கே தெரியுது இது நல்லதுக்கு இல்லைன்னு. அதனால இந்தச் சில்லறை தனமான வேலை எல்லாம் விட்டுட்டு, இந்த வம்பளக்கற பொண்ணுங்களோட சேர்க்கையெல்லாம் கட் பண்ணிட்டு, நல்லா படிக்கிறவங்க கூட சேர்ந்து ஒழுங்கா படிக்கிற வழிய பாரு. ரொம்ப சின்ன பொண்ணா இருக்க, லூசுத்தனமா இது மாதிரி எதையாவது செஞ்சு தேவையில்லாத வம்புல எல்லாம் மாட்டிக்காத" என, அந்த வயது பிள்ளைகளுக்கே பிடிக்காத வகையில் அவன் அவளுக்குப் புத்திமதி சொல்லத் தொடங்க,


தன்னைப் பார்த்து 'சின்ன பொண்ணு' என்று சொல்லிவிட்டானே என்கிற அவமானம் வேறு சேர்ந்து கொள்ள, மேற்கொண்டு பேசாமல் அப்படியே மடியில் முகத்தைப் புதைத்தபடி அமர்ந்திருந்தாள்.


அவளது அந்த வருத்தம் அவனைப் பாதிக்கிறது என்பதைப் பிரகடனப்படுத்த, "உனக்கு இந்த சீரியல பார்த்தே ஆகணுமா, இல்ல ஸ்கூல்ல போயி மத்த பொண்ணுங்க கிட்ட கதை டிஸ்கஸ் பண்ணா போதுமா?" என இறங்கி வந்து அவன் கேள்வி கேட்க,


வெடுக்கெனத் தலைநிமிர்ந்தவள், "இந்த டிராமா பாக்கணும்னு ஆசைதான், ஆனா பாக்காட்டிக் கூட பரவாயில்ல, கதை மட்டும் தெரிஞ்சா போதும், அத வச்சு அவளுகள ஒரு வழிச் செஞ்சிருவேன்" என்று அவள் ஒரு ஆர்வத்துடன் பதில் கொடுக்க,


“என்ன, கதை தெரிஞ்சா அதை வெச்சு எல்லாரையும் மேனேஜ் பண்ணிடுவியா?” என வியப்பாகக் கேட்டான்.


“அமா, இப்படித்தான் நிறைய புதுப் படக் கதையெல்லாம், உள்ள உட்கார்ந்து இருக்குதே எங்க பக்கத்துக்கு வீடு ஆயா, அது கிட்ட கேட்டுட்டு ஸ்கூல்ல போய் அடிச்சு விடுவேன். எல்லா எருமைங்களும் நம்பிடும்” என்றாள் அசட்டுச் சிரிப்புடன். அதைக் கேட்டு ரசித்து அழகாகச் சிரித்தவன், மௌனமாக ஓரிரு நிமிடம் யோசித்தபடி, "பள்ளிக்கூடத்துக்கு பஸ்லதான போவ?" என்று பூடகமாகக் கேள்வி கேட்க,


'ஆம்' எனத் தலையசைத்தாள்.


"நல்லதா போச்சு, அப்படின்னா நான் சொல்ற மாதிரி செய்" என அவன் சொல்ல வருவதைக் கவனமாகக் கேட்கத் தொடங்கினாள்.


"இன்னும் ஒரு அஞ்சாறு மாசம் நான் இங்கதான் இருப்பேன். அதனால வாரவாரம் இந்த சீரியல் டெலிகாஸ்ட் ஆகுறத்துக்கு அடுத்த நாள், காலைல ஒரு பத்து நிமிஷம் முன்னால கிளம்பி நம்ம நல்ல தண்ணிக் குளத்துக்கா வந்துரு, நான் இதைப் பாத்துட்டுக் கதைய அப்படியே உன்கிட்ட சொல்றேன். நீ அதை வெச்சு மேனேஜ் பண்ணிக்கோ" என்று அவன் சொன்னதும் பகீரென்று அவளுக்கு.


"ஐயோ… இதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை… காலைல அந்த நேரத்துல ஊரு சனம் மொத்தம் பஸ் ஸ்டாப் கிட்டதான் இருக்கும். தங்கச்சி வேற எங்கூடவே வருவா, மாட்டினா உசுரே போயிரும்" என அவள் அதிர்ச்சியடைய,


"நீ இப்ப செஞ்சிட்டு இருக்குற வேலையை விட அது ரிஸ்க் கிடையாது தெரிஞ்சுக்கோ. யாராவது கேட்டா அரச மரத்தடி பிள்ளையாருக்கு வேண்டிக்கிட்டு இருக்கேன் சாமி கும்பிட போறேன்னு சொல்லிட்டு வா. நான் உனக்கு கதை சொல்றேன். இல்லன்னா எப்படியோ போ" என்று அவன் அவளுக்குத் தைரியம் கொடுக்க,


அரைகுறை மனதுடன் தலையசைத்து விட்டு, "நான் இப்ப இங்க இருந்து போகட்டுமா" எனச் சங்கடமாகக் கேட்க,


"சரி இப்ப கெளம்பு, அடுத்த புதன்கிழமை காலைல நல்ல தண்ணிக் குளத்துக் கிட்ட வந்துரு. நான் உனக்காக அங்க வெயிட் பண்ணிட்டு இருப்பேன்" என்று சொல்ல ஆமோதிப்பாகத் தலையசைத்துவிட்டு, முன்பு செய்தது போலவே சுவர் ஏறிக் குதித்து அவள் அங்கிருந்து சென்று மறைய, கண்கள் முழுவதும் மயக்கத்துடன் அவள் சென்ற திசையையே பார்த்திருந்தான் வல்லரசு.


'வருவாளா? அவள் வருவாளா?


உடைந்து போன நெஞ்சை ஒட்ட வைக்க அவள் வருவாளா?' என அவனது நெஞ்சுக்குள் பாடல் இசைத்தது. ‘நிச்சயம் அவள் வருவாள்!’ என அதற்கான பதிலையும் அதுவே அடித்துச் சொன்னது!


கேட்பாரற்று மலிந்து, முறையாகப் படராமல் புதராக மண்டிக் கிடக்கும் தனித்துவமான வாசமற்றக் காட்டுமல்லிக் கொடிக்கெல்லாம் காவல் காக்கும் வேலி எங்காவது உண்டா?


0 comments

Comments

Rated 0 out of 5 stars.
Couldn’t Load Comments
It looks like there was a technical problem. Try reconnecting or refreshing the page.
© KPN NOVELS COPY PROTECT
bottom of page