AAlangattimazhai 18
- Krishnapriya Narayan

- Jun 10
- 4 min read
Updated: Jun 11
18. கொண்டல் மாமழை
//கொண்டல் மாமழை என்பது கீழ்க்காற்றுடன் (கிழக்கு திசையிலிருந்து வீசும் காற்று) கூடிவரும் பெரிய மேகக்கூட்டத்தையும், அதனால் பெய்யும் பெருமழையையும் குறிக்கும்.//
"எனக்கு மோட்டிவேஷனல் கோட்ஸ் எல்லாம் சொல்ற, அதிருக்கட்டும். உன்னோட ஃபியூச்சர் பிளான் என்ன?" என்று கேட்டான் கிருஷ்ணா.
எதையாவது சொல்லப்போக ,'கேரியர் கைடன்ஸ்' என்கிற பெயரில் அவன் ஏதாவது அறிவுரை மழையைப் பொழிந்தால் அதை வேறு பொறுமையாகக் கேட்க வேண்டுமே என்கிற அலுப்பு உண்டானது வர்ஷிணிக்கு. "அதையெல்லாம் நோடீஸ் அடிச்சு ஓட்டுவாங்களா? கோ வித் த ஃப்ளோன்னு போயிட்டே இருக்கணும்" என்று நழுவப் பார்த்தாள்.
“அவ்ளோ தன்னடக்கம் ம்… ஏதோ பாஸ் ஆயிடுவேன்னு பப்ளிக்கா சொல்லிட்டு ஸ்டேட் ரேங்க் வாங்கினியே அந்த மாதிரியா?” என்று கேட்டுச் சிரித்தான்
“ம்ம்… " நயன் பாயிண்ட் ஃபைவ் ஸீஜிபிஏ வெச்சிருக்கேன். மே மாசம் ஃபைனல் செமெஸ்டர் எக்ஸ்சாம்ஸ் ஸ்டார்ட் ஆகுது. அதையும் நல்லபடியா முடிச்சுட்டா போதும் பாஸ். இப்போதைக்கு வேறெதுவும் தேவையில்லை" என்று சொல்லிவிட்டு, "தூக்கம் வருது... குட் நைட்... பை..." என்று அங்கிருந்து பறந்தாள்.
இந்த வீட்டிலிருந்து எப்பொழுதடா பிய்த்துக்கொண்டு ஓடலாம் என்கிற மனநிலையில் இருப்பவளை எண்ணி 'இன்னும் கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தாத்தான் என்ன வந்துதாம் இவளுக்கு?' என்கிற ஏக்கம் வந்தது அவனுக்கு.
இந்த மொட்டைமாடி சந்திப்பு அன்றுடன் நிற்கவில்லை. அவ்வப்பொழுது தொடர்ந்தது. அவளுடன் பேசிக்கொண்டிருக்கும் வெகு சொற்ப நிமிடங்கள் கிருஷ்ணாவுக்குள் பெரும் மகிழ்ச்சியையும் கிளர்ச்சியையும் கொண்டுவந்து நிரப்பின. அவள் அவனை நீங்கிப்போகும்போதெல்லாம் பலமடங்குத் தனிமையை உணர்ந்தான்.
'உன்னைப் பிடித்திருக்கிறது, காதலிக்கிறேன், திருமணம் செய்துகொள்ளலாமா?' என்று கேட்டுவிடலாமா என்று துடித்தாலும், நிச்சயம் அவள் பக்கெனச் சிரித்துவிடுவாள் என்பது அப்பட்டமாகப் புரிந்தது. நாளுக்கு நாள் அவனுடைய தவிப்பு அதிகரித்துக்கொண்டே போனது. ஒரு கட்டத்தில் சுற்றி வளைத்து ஜாடை மாடையாகவாவது கேட்டுப்பார்க்கலாம் என முடிவு செய்து சரியான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தான்.
ஆனால் தொடர்ந்து இரு தினங்களாக வர்ஷிணி அவனுடைய கண்களிலேயே படவில்லை. ஆனால் இன்னும் அவள் வீட்டிற்குத் திரும்பச் செல்லவில்லை இங்கேதான் இருக்கிறாள் என்பது மட்டும் அவனுக்குத் தெரியும்.
அவள் இங்கே வந்த இந்த இருபது நாட்களில் இப்படி நிகழ்ந்ததே இல்லை. காலை மற்றும் மாலை நேரங்களில் சமையற்கட்டில் எதையாவது உருட்டிக்கொண்டிருப்பாள். மற்ற பகல் பொழுதுகளில், ஒன்று புத்தகப் புழுவாக மாறி அவனுடைய அம்மாவின் அறைக்குள் அடைந்து கிடப்பாள், இல்லை ரஞ்சனியின் அறையில் அவளுடன் எதையாவது வம்பளத்துச் சிரித்துக் கொண்டிருப்பாள். இதுபோல அவளின் இருப்பே தெரியாத அளவுக்கு இருந்ததில்லை.
அதுபோல, மொட்டை மாடியில் சந்தித்து இருவரும் பேசிக் கொள்வது ஸ்ரீதருக்கோ ரஞ்சனிக்கோ தெரிந்தது போல அவனுக்குத் தோன்றவில்லை. மறைக்கும் எண்ணம் அவனுக்கில்லை. அவளுக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் இருவருமே அவர்களிடம் சொல்லிக் கொள்ளவில்லை அவ்வளவுதான்.
இத்தனை நாளில் அவளுடைய கைப்பேசி எண்ணைக் கூட அவன் பெறவில்லை. இப்பொழுது அவளைப் பற்றி ஸ்ரீதரிடமோ ரஞ்சனிடமோ கேட்கத் தயக்கமாக இருந்தது. ஏதாவது தவறாகப் புரிந்து கொண்டால் என்ன செய்வது?
அது ஒரு மாலை நேரம். மொட்டை மாடியில் நின்றபடி வர்ஷிணி பற்றிய தீவிர யோசனையுடன் புகைத்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணா.
கொடியில் காயப் போட்டிருந்த துணிகளை எடுப்பதற்காக அங்கே வந்தாள் ரஞ்சனி. அவளைப் பார்த்ததும் அவசரமாக கையில் இருந்த சிகரெட்டைத் தூக்கி எரிந்தான்.
“இன்னும் வெயில் குறையவே இல்லையே, இங்க என்ன செஞ்சுட்டு இருக்கீங்க?” என்று கேட்டுக் கொண்டே துணிகளை எடுத்து மடிக்கத் தொடங்கினாள் ரஞ்சனி.
“ஒரு கால் வந்துச்சு, கீழ சிக்னல் சரியில்ல. அதனால வந்தேன்” என்று சமாளித்தான்.
“இல்ல, உங்களுக்கு காஃபி கொடுக்கலாம்னு தேடினேன். நீங்க ரூம்ல இல்லன்னதும் துணி எடுக்க வந்துட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க அண்ணன் வந்துருவாரு. ரெண்டு பேருக்கும் சேர்த்து கலந்து தரட்டுமா?” என்று கேட்டாள்.
“ஐயோ, ஒன்னும் பிரச்சனை இல்ல, இதுக்கு போய் நீங்க ஏன் இவ்வளவு விளக்கம் கொடுக்குறீங்க?” என்று அவளுக்குப் பதில் சொன்னவனுக்கு வர்ஷணியை பற்றி கேட்க இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று தோன்றியது.
“ஆமாம், நீங்க அதிகம் ஸ்ட்ரெயின் பண்ண வேண்டாம்னு சொல்லிதான உங்க தங்க ஹெல்ப்புக்கு வந்தாங்காங்க. அவங்க எங்க ஆளையே காணும்?” என்று கேட்டான்
“அவளுக்கு தெரிஞ்சவங்க ஒருத்தங்க ரீசண்டா இறந்துட்டாங்க. அவங்களுக்கு மூணு பிள்ளைங்க. மூணு பேருமே பிசிகலி சேலஞ்டு. அந்தப் பிள்ளைகளை ஏதோ ஹோம்ல சேர்க்கணும்னு சொல்லிட்டு ரெண்டு நாளா அலைஞ்சிட்டு இருக்கா” என்றாள் ரஞ்சனி.
“மொத்தமா மூணுபேரா? இது ஒன்னும் அவ்வளவு ஈஸி பிராசஸ் இல்லையே” என்றான் கிருஷ்ணா.
“உனக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத வேலையெல்லாம்? அந்த பிள்ளைகளுக்கு சொந்தக்காரங்க யாராவது பார்த்துக்க மாட்டாங்களான்னு நாம சொன்னா எங்க கேக்கறா? உடம்புக்குள்ள ஏதோ பேய் புகுந்த மாதிரி வெறித்தனமா அலஞ்சிட்டு இருக்கா” என அவன் மனதிற்குள் தோன்றியதையே கூடக் குறையச் சொன்னாள் ரஞ்சனி.
இருந்தாலும் ஏதாவது பதில் சொல்ல வேண்டுமே என்பதற்காக, “என்.ஜி.ஓஸ் யாரையாவது தெரிஞ்சு வச்சிருப்பாங்க. அதனாலதான் இறங்கி செய்யறாங்க” என்றான்.
“அப்படி யாரை இவளுக்கு இங்க தெரியும்? இவ ஒரு பியூட்டி பார்லர்ல பார்ட் டைமா வேலை செஞ்சுட்டு இருக்கால்ல. அத நடத்துறவங்க இவ பிரண்டோட அம்மா. அவங்க தான் இவளுக்கு காண்டாக்ட்ஸ் எல்லாம் கொடுக்கிறாங்க. அவங்க சொல்றதை கேட்டுட்டு இவளும் ஆடிட்டு இருக்கா” என குறைப்பட்டுக் கொண்டாள் ரஞ்சனி.
‘ஹெல்ப்புக்குன்னு வந்துட்டு இவங்கள வேல செய்ய வெச்சுட்டா இல்ல அதான் இவங்க இவ்வளவு கடுப்பாகுறாங்க?’ என்றுதான் கிருஷ்ணாவுக்குத் தோன்றியது. அவனும் ஸ்ரீதரும் இரவு உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதுதான் வர்ஷிணி வீட்டிற்குள்ளே நுழைந்தாள்.
அவளை நேரில் பார்த்த பிறகு ரஞ்சனியின் அக்கறை புரிந்தது. உண்மையிலேயே பேய் பிடித்தவள் போலத்தான் அவள் காட்சியளித்தாள். இரண்டே நாட்களுக்குள் ஒருத்தி இவ்வளவு உருமாறுவாளா என்றுதான் அவனுக்குத் தோன்றியது. கண்கள் எல்லாம் உள்ளே சென்று சிவந்து போய் உடல் தளர்ந்துபோயிருக்க அப்பட்டமாக அவளின் உடல் சோர்வு பார்வைக்குப் புலப்பட்டது.
“என்னடி, இன்னைக்காவது வேலை முடிஞ்சுதா, இல்ல இழுத்துட்டே போகுதா? இப்படியே போனா நீ பரிட்சைக்கு எப்பதான் படிப்ப?” என்று அவளைப் பிடித்துக் கொண்டாள் ரஞ்சனி.
“எக்ஸாம பத்தி எல்லாம் நீ ஏங்க்கா கவலைப்படற? அது என் பாடு. ஆனா அந்த பசங்க ரொம்ப பாவம்கா. அவங்க மூணு பேரையும் ஒரு சேஃபான இடத்துல சேர்த்துட்டேன். எனக்கு இப்போதைக்கு அது போதும்” என பதில் கொடுத்தாள்.
கிருஷ்ணா ஒரு பார்வையாளராக இருவரையும் பார்த்திருக்க, “வீட்டுக்கு வந்ததும் வராததுமா அவளை ஏன் பிச்சு புடுங்குற, ரஞ்சி? முதல்ல ரெப்ரஷ் ஆயிட்டு வந்து சாப்பிட சொல்லு” என அவளுக்குப் பரிந்து வந்தான் ஸ்ரீதர். அவனை வாஞ்சையுடன் நோக்கினாள் வர்ஷிணி.
“போய் அப்படியே உட்கார்ந்துடாத, சட்டுபுட்டுன்னு ரெஃப்ரெஷ் பண்ணிட்டு சாப்பிட வா” என அவளை விரட்டினாள் ரஞ்சனி.
இதுவே அவர்கள் வீடாக இருந்திருந்தால் ரஞ்சனிக்கு பதிலுக்குப் பதில் பேசிக் கொண்டிருப்பாள். ஆனால் இந்தச் சூழ்நிலையில் வாயைத் திறக்க முடியாமல் அமைதியாகப் போய் முகம் கழுவி உடைமாற்றி வந்து சாப்பிட அமர்ந்தாள்.
ஸ்ரீதர் சாப்பிட்டு சென்றிருக்க கிருஷ்ணா வாஷ்பேஷனில் கை கழுவிக் கொண்டிருந்தான். ரஞ்சனி எதையோ எடுக்கச் சமையல் அறைக்குள் நுழைய, நயன் தர்ட்டிக்கா மாடிக்கு வா என வர்ஷிணியிடம் ஜாடை செய்துவிட்டு அங்கிருந்து அகன்றான் கிருஷ்ணா
‘இவன் என்ன இப்படி ஸ்ட்ரேன்ஜா பிஹேவ் பண்றான். இப்ப எதுக்கு நம்மள கூப்பிடறான்’ என உள்ளுக்குள்ளே நெருடியது. ஆனாலும் அவன் கூப்பிட்டதற்காக அவன் சொன்ன நேரத்திற்கு அங்கே சென்றாள்.

தோழி ஒருத்தியுடன் சேட் செய்தபடியே மாடி ஏறி வந்தவளின் கைப்பேசியைப் பறித்து அதில் தன்னுடைய நம்பரைத் தட்டி டயல் செய்தான். பின்பு தன் பெயரை அதில் பதிவு செய்து அவளிடம் நீட்டினான்.
நியாயத்திற்கு அவளுக்குக் கோபம்தான் வந்திருக்க வேண்டும். அவளுடலில் செரோடோனின் சமநிலையிலும் ஆக்சிடாக்சின் உச்சத்திலும் இருக்கும் நாளாக இருக்கப் போகவே, டோபமைன் ஊற்றெடுக்க கோபத்துக்கு பதிலாக அவன்மீதிருந்த ஈர்ப்பு ஆதிக்கம் செலுத்தித் தொலைந்தது. முறைத்துக்கொண்டே சிரித்தாள்.
"இவ்வளவு நாளாச்சு, என் நம்பர நீயும் கேக்கல. எனக்கும் உன் நம்பர கேக்கத் தோணல"
"இது வரைக்கும் அதுக்கு அவசியம் வரல, இப்ப உங்களுக்கு ஏதோ அவசியம் வந்திருக்கு"
"ஒரு அவசியமும் வரல. ரெண்டு நாளைக்கு ஒருவாட்டியாவது இங்க வந்து பேசிட்டு இருப்ப. எனக்கும் ஒரு கம்பெனியா இருந்துது. இப்ப நாலு நாளா சுத்தமா கட் அடிச்சா, நான் என்னன்னு நினைக்கறது? அத தெரிஞ்சுக்கதான்"
"கம்பனிக்கு இங்க உங்க ஃபிரெண்ட்ஸ் யாரும் இல்ல. உங்களுக்கு கடல வறுக்க யாரவது வேணும். மொதல்ல சுப்ரியா இருந்தாங்க. அவங்க போனதுக்கு அப்பறம் இப்ப நானா? இவ்ளோலாம் என்ன தேடாதீங்க. நான் அதுக்கெல்லாம் செட் ஆக மாட்டேன்" என்று சட்டென வார்த்தையை விட்டுவிட்டு, அடுத்த நொடியே உணர்ந்து, அவன் ஏதாவது வருந்துவானோ எனச் சங்கடமாக அவனை நோக்கினாள்.
'சுப்ரியாவுக்கு பதில் நீயா? சான்ஸே இல்ல, நீ மட்டும் எனக்கு ஓகே சொன்னா, என் உலகமே நீயாதான் இருப்ப' என எண்ணியவன், அதை சொல்லாமல் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான்.
அவனுடைய விழிகள் அங்கே இங்கே திரும்பாமல் அவளின் முகத்திலேயே நிலைத்திருக்க, "சாரி, நான் அப்படி பேசி இருக்கக் கூடாது. ஒரு ஃப்ளோல வந்துடுச்சு" எனப் பதற்றத்துடன் மொழிந்தாள்.
அதில் கலைந்தவன், "ச்சச்ச... அதெல்லாம் ஒண்ணுமில்ல, நான் அதுக்கெல்லாம் செட் ஆக மாட்டேன்னு சொன்னியே அத பத்தி யோசிச்சிட்டு இருந்தேன்" என்றான்.
"அது ஒண்ணுமில்ல பாஸ், நான் எங்கக்கா மாதிரி ஒரு பர்ஃபெக்ட் குடும்பஸ்திரீ மெடீரியலெல்லாம் கிடையது. என்னால கனவு கண்டு, காதல் கொண்டு கல்யாணமெல்லாம் செஞ்சுட்டு விதவிதமா பொங்கிப் போட முடியாது. அதத்தான் மீன் பண்ணேன்" என்று அவள் சொல்லவும் அவனுடைய முகம் அஷ்டக் கோணலாக மாறியது.
உண்மையில் இவளுடைய எதிர்கால இலட்சியங்கள் குறித்த புரிதல் கொஞ்சம் கூட இல்லாமல், ‘சுப்ரியாவும் இதையேதான் சொன்னாள். இவளும் இதைத்தான் சொல்கிறாள். இன்றைய பெண்களுக்குப் பொறுப்புகளை ஏற்கவே மனமில்லை. சொகுசாக வாழ மட்டுமே ஆசைப் படுகிறார்கள்’ என்று குதர்க்கமாக எண்ணினான். சுற்றுலா முடிந்து இன்னும் இரண்டு நாட்களில் இங்கே திரும்ப வரப்போகும் அவனுடைய அம்மாவை எண்ணிப்பார்த்தான். வந்ததும் வராததுமாக இவனுடைய கல்யாணத்தைப் பற்றிப் புலம்பிப் புலம்பியே உயிரை எடுத்துவிடுவார். நினைக்கும்போதே இருபது நாட்களில் அவனிடம் குடிகொண்டிருந்த நல்ல மனநிலை நலிந்து கலங்கிப்போனது. நீண்டுகொண்டே போன அவனுடைய மௌனம் புரியாமல் அவனைக் குழப்பத்துடன் ஏறிட்டாள் அமிர்தவர்ஷிணி.
Episode Song



Comments