30. உள்ளுணர்வு
“யாருடா அந்த மரகதவல்லி? ரோபோ மாதிரி அலஞ்சிட்டு இருக்கற உன்னையே திரும்பிப் பார்க்க வச்சிருக்கா! எனக்கே அவள பார்க்கணும் போல இருக்கே!” என சசி ஆதியை பகடி செய்துகொண்டிருந்தான்.
வினோதினி வேறு, “அண்ணா அவதான் என்னோட வருங்கால அண்ணியா!” என்று கேட்டு அவனைத் தடுமாற வைத்தாள்.
“சும்மா இருக்கப்போறிங்களா இல்லையா ரெண்டுபேரும். அவ ரொம்ப சின்ன பொண்ணு வினோ. இப்பதான் செகண்ட் இயர் படிக்கறாளாம். நம்ம கம்பெனில வேலை கொடுக்கலாம்னு மட்டும்தான் நினைச்சேன். வேற ஏதும் இல்லை. நீங்களே எதையாவது கற்பனை பண்ணாதீங்க!” என்று அவர்களை அடக்கினான் ஆதி.
அன்று சசி-வினோதினி திருமண நாள் என்பதால் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தவனைத்தான் உண்டு இல்லை என்று செய்துகொண்டிருந்தார்கள் இருவரும்.
சசி ஆதிக்கு உதவியாக அவனது வியாபார நிர்வாகத்தில் பங்கெடுத்துக் கொண்டிருந்தான். கட்டுமானப் பணிகள் முடிவடையும் நிலையில் இருக்கும் 'ராயல் அமிர்தாஸின்' தொடக்கவிழா பற்றிய ஆலோசனையில் நண்பர்கள் இருவரும் இறங்கிவிட, “போச்சுடா! ஆரம்பிச்சிட்டாங்க இவங்க போர்ட் மீட்டிங்க!” என்று அலுத்துக்கொண்டே சமையலை கவனிக்கச்சென்றாள் வினோ.
சரவணன் விடுதியில் தங்கி மருத்துவம் படித்துக்கொண்டிருந்ததால் அவன் அங்கே இல்லை. அதன் பின்பு வந்த நாட்களில் 'ராயல் அமிர்தாஸ்' திறப்புவிழா கோலாகலமாக நடைபெற்றது.


