25. எச்சரிக்கை
மருத்துவமனையில், ரோஜாப்பூ குவியலாய் தொட்டிலில் இருந்த தங்கையைவிட்டு எங்கேயும் நகரவில்லை ஆதி.
லட்சுமியின் பிறந்த வீடு ஐயங்கார்குளத்தில் இருக்கவே பிரசவம் முடிந்து அவர் அங்கே சென்றுவிட பள்ளி செல்லவேண்டியிருந்ததால் பேரனை பரமேஸ்வரிதான் கவனித்துக்கொண்டார்.
என்னதான் பார்த்துப் பார்த்து அவர் செய்தாலும் அன்னையை நீங்கி, தங்கையையும் பிரிந்திருந்த ஆதி மிகவும் ஏங்கித்தான் போனான்.
அம்முவை தொட்டில் போடும் தினத்தன்று மகனின் உடல் மெலிவு மனதை வருத்த, சில தினங்களிலேயே சிறுவாக்கம் வந்துவிட்டார் லட்சுமி.
லட்சுமியின் அன்னை மற்றும் அண்ணன் மனைவி நந்தினியும் அவரை கவனித்துக் கொண்ட விதத்தில் நன்கு உடல் தேறி வந்த லட்சுமி, அங்கே வந்த பிறகு கைக்குழந்தையைக் கவனிப்பதுடன் வீட்டுவேலையும் சேர்ந்துகொள்ள மிகவும் சோர்ந்துதான் போனார்.
அது புரிந்ததோ என்னவோ ஆதி வீட்டில் இருக்கும் நேரங்களில் தங்கையின் பொறுப்பு மொத்தமும் எடுத்துக்கொண்டான். நாட்கள் செல்லச்செல்ல அன்னையை விட அண்ணனைத்தான் அதிகம் தேடினாள் அம்மு.


