34. இதயத்திலிருந்த உண்மை
மேசையின் மீது சாய்ந்துகொண்டு ராஜவேலுவின் மருத்துவ அறிக்கைகள் அடங்கிய கோப்பை ஆராய்ந்தவாறு, “ஆதின்னா… ஐ மீன் உன்னோட ராஜா அண்ணான்னா, உனக்கு ரொம்ப பிடிக்கும் இல்ல அம்மு” என்று கேட்டான் வினோத்.
“ஏன் அண்ணா அப்படி கேக்கறீங்க? உங்களுக்குத்தான் தெரியுமே ராஜா அண்ணாதான் என்னோட உயிர்!” என்றாள் அம்மு.
“இப்ப உன் அண்ணனோட உயிர் என்னோட கண்ட்ரோல்லதான் இருக்கு, நான் நினைச்சா அவன என்ன வேணாலும் செய்யமுடியும் தெரியுமா?” என்றான் வினோத் மிரட்டலாக.
சற்றே அதிர்ந்தாலும், “என்ன, அண்ணாவால நடக்கமுடியாதுன்னு இப்படி பேசறீங்களா வினோத் அண்ணா! அவங்கள பத்தி உங்களுக்கு நல்லாவே தெரியும். உட்கார்ந்த இடத்துல இருந்தே என்ன வேணாலும் செய்வாங்க. என்ன இப்படி மிரட்டற வேலையெல்லாம் வெச்சுக்காதீங்க. ஜாக்கிரத” எனத் தானும் பதிலுக்கு எகிறினாள்.
“எப்படி... எதாவது செய்யணும்னா அதுக்கு அவன் கொஞ்சமாவது கான்ஷியஸ்ல இருக்கணும் இல்ல? அல்ரெடி அவனுக்கு ஹெவி டோஸ் செடேடிவ் கொடுத்து மயக்கத்துலதான் வச்சிருக்கேன்” என்றவன், அவனது அலைப்பேசியை ஸ்பீக்கரில் போட்டு யாரையோ அழைத்தான். எதிர் முனையில் அழைப்பு ஏற்கப்பட்டதும், “அய்யா நான் டாக்டர் வினோத்” எனக்கூற, “சொல்லுங்க, டாக்டர் தம்பி. ராஜவேலுவுக்கு மாற்று இதயம் கிடைச்சிடுச்சா?” என அதிகாரமாக ஒலித்தது தங்கவேலுவின் குரல்.
“அதுக்குதான் அலைஞ்சிட்டு இருக்கேன், அய்யா. எப்படியும் ஏற்பாடு செஞ்சுருவேன். ஆனா அதுக்கு நீங்க ஒண்ணு செய்யணுமே!”


