35. அம்மு எனும் அரண்
தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட நிலையில், தான் எங்கே இருக்கிறோம் என்பதே புரியவில்லை மல்லிக்கு. அவளின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. அவளை நோக்கி ஓடிய சுமாயா, “மேம் என்னாச்சு” என்றவாறு அவளது கைகளை பிடித்துக்கொண்டாள்.
அம்முவின் நிலையும் ஆதி மருத்துவமனையில், அந்த அறையில் உணர்வின்றி படுத்திருப்பது போல் கனவில் அவள் கண்ட கட்சிகளும் மட்டுமே மனதில் இருக்க, அவளைப் பார்த்து மேலும் பதறிப்போனாள்.
அம்மு… மாம்ஸ்… என்று மறுபடி மறுபடி சொல்லிக்கொண்டே கதறி அழத் தொடங்கினாள் மல்லி. அவளைச் சமாதானம் செய்யமுடியாமல் சுமாயா திகைத்துப்போய் நிற்க, கைப்பேசியில் ஆதியிடமிருந்து அழைப்பு வந்தது. அவனிடம் மல்லியின் நிலையைச் சொன்னாள்.
“ஒண்ணுமில்ல சுமா, கனவு கண்டிருக்கா. நீங்க போன ஸ்பீக்கர்ல போட்டு அவகிட்ட கொடுத்துட்டு கீழ போய் அவளுக்குக் குடிக்க ஏதாவது எடுத்துட்டு வாங்க” என்றான். அவன் சொன்னது போலவே கைப்பேசியை அவளிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றாள் சுமாயா.
“மல்லி! எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லப்பா. இன்னும் கொஞ்ச நேரத்துல நான் அங்க வந்துடுவேன், கவலப்படாத” என ஆதி சொல்லவும், அவனது குரலில் கொஞ்சம் உணர்வுக்கு வந்தவள் சுற்றும் முற்றும் பார்க்க அப்பொழுதுதான் மல்லிக்கு நிலைமை புரிந்தது.
அதற்குள் சுமாயா பழரசத்தை அவளிடம் நீட்டவும், இவள் ஏன் இங்கே இருக்கிறாள் என்று புரியாமல் அவளது முகத்தைப் பார்த்துக்கொண்டே அதை வாங்கிப் பருகினாள் மல்லி.


