8. பிடிவாதம்
“ரோட் ஆக்சிடென்டாம்?! ஒரு டிப்பர் லாரி மோதிடுச்சு” என தீபன் சொன்ன செய்தி என்னவென்று புரியவே சில நொடிகள் பிடித்தது மல்லிக்கு, “எ.. ன்.. ன.. டா! தீ.. பா! சொல்ற?” மூச்சு முட்டிக் குரலே வெளிவரவில்லை.
“ஒண்ணும் இல்லக்கா. பயப்படாத! அன்னைக்கு அந்த ஆள் உங்கிட்ட சண்டை போட்டாரே, அப்ப எனக்கு எவ்வளவு கோபம் வந்துது தெரியுமா? ஆனாலும் அவர் இப்படி செத்துப் போகணும்னுல்லாம் நினைக்கலக்கா. அந்தப் பொண்ண ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு போனாங்க. ரொம்ப அழுதுச்சுக்கா”
“ப்ச்... பாவமில்ல...டா” என வருந்தியவளிடம், “என்ன செய்ய முடியும், விடுக்கா. மத்தத, வீட்டுக்கு வா பேசிக்கலாம்” என்றான்.
“சரிடா பை” என்று அழைப்பைத் துண்டித்தாள் மல்லி.
அவளுடைய முகத்தில் தோன்றிய கலவரத்தையும் அவள் குரலில் ஏற்பட்ட அதிர்ச்சியையும் கவனித்த தேவா, “என்ன மல்லி, இப்படி ஷாக் ஆகற அளவுக்கு உன் தம்பி என்ன சொன்னான்?” என்று கேட்டான்.
ஓர் ஆழ்ந்த மூச்சை எடுத்தவள், “அந்த வனிதாவோட அப்பா இறந்துட்டாராம்!” என்றாள்.


