top of page

என் இனிய இன்பனே 17

என் இனிய இன்பனே 17

"எப்படி இரண்டாவதா ஒரு காதல் உன் மேல எனக்கு வந்துச்சுனு தெரியாம தவிச்சிட்டு இருந்தேன், உன்கிட்ட உண்மை சொல்லாம உன்னை நெருங்கவும் முடியாம நெருங்கினதை ஏத்துக்கவும் முடியாம மனதோடும் உடலோடும் போராடிட்டு இருந்தேன்!"


"அப்படி ஏன் தவிச்சிட்டு இருக்கனும். உண்மையைச் சொல்லிருக்கலாமே" எனக் கேட்டாள் சிந்து.


"சொல்லிருக்கலாம் தான். உண்மையைச் சொன்ன பிறகு நீ என்னை வெறுத்துட்டீனா? என்னை விட்டு விலகி போக நினைச்சீனா அதைத் தாங்குற மனவலிமை என்கிட்ட இல்லை சிந்து" கைகள் விடாது அவளின் தலையைக் கோதிய வண்ணமிருக்க, உருகியது அவனது குரல்.


'அப்பவே அவ்ளோ காதலா என் மேல' என விழி விரிய ஆச்சரியத்தில் அவனை அவள் பார்த்திருக்க, மேலும் தொடர்ந்து பேசினான் அவன்.


"ஊர் உலகத்துல எல்லாருமே என்னைக் கெட்டவன்னு சொல்லிட்டு இருந்த போது, என்னை நல்லவன்னு நம்பினவ நீ மட்டும் தான் சிந்து! அந்த நம்பிக்கையை எனக்கும் கொடுத்துவ நீ! அப்படிப்பட்ட நீ என்னை வெறுப்பா பார்த்தா நான் எப்படித் தாங்குவேன் சொல்லு இல்ல என்னைப் பிடிக்காத பார்வை பார்த்தா நான் என்ன ஆவேன் சொல்லு! மனசுல அப்படி ஒரு பயம் அப்ப இருந்துச்சு. அது என்னை உன்கிட்ட உண்மையைச் சொல்ல விடாம தடுத்துச்சு" மென்மையான குரலில் அன்றைய தனது நிலையை உரைத்திருந்தவனை வியப்புடன் பார்த்திருந்தாள் சிந்து.


"கெட்டவரா? நீங்களா? ஏன் எல்லாரும் அப்படி நினைக்கனும்?" என்று கேட்கும் போதே சிந்துவின் மூளையில் காலை நடைபெற்ற நிகழ்வு எட்டிப்பார்க்க,


"ஆமா காலைல நங்கை அப்பாகிட்ட பாவ மன்னிப்புக் கேட்டீங்களே! அந்த விஷயத்தை வச்சி தான் கெட்டவன்னு சொல்றீங்களா? நிஜமாவே நங்கையை நீங்க அப்படிப் பேசினீங்களாப்பா?" ஆற்றாமையுடன் தான் கேட்டிருந்தாள்.


நினைக்கவே நெஞ்சம் நடுங்கியது சிந்துவிற்கு. அந்நிலையில் அந்தப் பெண்ணின் மனம் என்ன பாடு பட்டிருக்கும்.


தனது கணவன் ஒரு பெண்ணை இவ்வாறு இழிவாகப் பேசினான் என்பதையே ஏற்றுக் கொள்ள இயலவில்லை அவளால்.


ஆமென அவன் தலையசைக்க,


அச்சோவெனத் தனது வாயின் மீது கை வைத்து மூடியவளாய் எழுந்து அமர்ந்தவள், "எவ்ளோ பெரிய வார்த்தையைச் சொல்லிருக்கீங்க? உங்களுக்கு அப்படிலாம் பேச தெரியுமா?" அதிர்ச்சியுடன் கேட்டிருந்தாள்.


"பாவம் நங்கை! எவ்ளோ மனசொடஞ்சி போய்ருப்பாங்க! நீங்க செஞ்ச காரியத்துக்கு உங்களைக் கெட்டவன்னு சொல்லாம நல்லவன்னு கொண்டாடுவாங்களா? நல்லவேளை வாய்ப்பேச்சோட உதைக்காம விட்டாங்களேனு சந்தோஷப்பட்டுக்கனும்" என்று கோபத்துடன் முறைத்தாள் சிந்து.


"இல்ல அடியும் வாங்கினான். நங்கையோட க்ளோஸ் ஃப்ரண்ட் சுந்தர் என்னை அறைஞ்சாரு" என்றான் இன்பா.


"என்னது அடி வாங்குனீங்களா?" என்றவாறு என்னவோ இப்பொழுது தான் அவன் அடி வாங்கியது போல் அவனது கன்னத்தைத் தடவினாள்.


செய்தது தவறென்றாலும் அச்சூழலில் அனைவரின் நிந்தனைகளுக்கும் உள்ளாகி தனியாளாய் தவித்து நின்றிருப்பானே என அவனுக்காகப் பரிதவித்தது அவளின் மனது இப்பொழுது.


"எல்லார் முன்னாடியும் அடிச்சாரா?" பாவமாய் அவனைப் பார்த்தவாறு கேட்டாள்.


ஆமென அவன் தலையசைக்க, "உங்களுக்கு ரொம்ப அவமானமா போயிருக்கும்ல!" அவளின் மனசாட்சியோ, 'உன் புருஷன் செஞ்ச வேலைக்கு அந்தப் பொண்ணுக்கு எவ்ளோ அவமானமா இருந்திருக்கும்' என்று இவளுக்கு அறிவுறுத்த,


"நான் நங்கையைப் பேசினதுலேயே என் மானம் மரியாதைலாம் போய்டுச்சு சிந்து. இதுல அவர் அடிச்சதுலாம் பெரிய அவமானம் கிடையாது! அவர் இன்னும் என்னை நாலு அடி அடிச்சிருந்தா கூட வாங்கியிருப்பேன்" அமைதியாக உரைத்திருந்தவனை அன்புடன் நோக்கியிருந்தாள் சிந்து.


'எல்லாம் அவங்க அம்மானால தானே! ஒரு சூழ்நிலையைச் சமாளிக்க முடியாம என்ன வேலை செஞ்சி வச்சிருக்காரு! மாமா மட்டும் நல்லா இருந்திருந்தாருனா இவரைச் சரியாக வழி நடத்திருப்பாரு. மாமா சொல்றா மாதிரி இவரோட அண்ணன் அளவுக்கு இவருக்கு விவரம் பத்தலை தான்' அவளின் எண்ணங்கள் எங்கெங்கோ சென்றாலும் அனைத்தும் கணவனைக் குற்றவாளியாக்காமல், அவனுக்குச் சாதகமாக அமையாத சூழலையும் மனிதர்களையும் சாடியது கணவன் மீது காதல் கொண்ட அவளின் மனது.


அடி வாங்கியதை விடத் தானே தனது பேச்சின் மூலம் தன்னுடைய மரியாதையைக் குறைத்துக் கொண்டேன் என்று வாக்குமூலம் அளிப்பவன் திருந்தியவனாகத் தானே இருக்க வேண்டும்.


கணவன் அவ்வாறு பேசியதாய்க் கேட்டது கோபத்தை அளித்திருந்த போதிலும், திருந்தியிருப்பவனைக் குற்றம் சாட்டிப் பேசுவது தவறு என்பதால் கனிவுடன் அவனைப் பார்த்திருந்தாள்.


'உன்னை எனக்குப் புரிகிறது' என்பதான பார்வை அது.


சிந்துவை இழுத்து அணைத்துக் கொண்டவன், "இப்ப கூட என்னை வெறுப்பா பார்க்க மாட்டேங்கிற! குற்றம் சுமத்தி திட்ட மாட்டேங்கிற! என் நிலையைப் புரிஞ்சிக்க முயற்சி செய்ற பார்த்தியா! இது தான் என் சிந்து! இதை விடப் பெரிசா என்னை யாரு நேசிச்சிட முடியும் சிந்து" என்றவனாய் அவளின் உச்சியில் முத்தமிட்டவன் தன் மார்போடு அவளது முகத்தை அழுத்திக் கொண்டான்.


அதன் பிறகு தனது வாழ்வில் தான் அடைந்த துன்பத்தையும், சிந்து அவளறியாமலேயே இவனின் காதல் தோல்வியிலிருந்து வெளி வர உதவியிருந்ததையும் விளக்கினான் இன்பா.


"நானா? என்னால உங்க காதல் தோல்வியை விட்டு வெளில வந்தீங்களா?" ஆச்சரியப் பாவனையில் சிந்து கேட்க, ஆமென்றவன் அன்றைய நிகழ்வுகளையும் அவை அவனுக்கு அளித்திருந்த ஆறுதலையும் அவளுக்கு விளக்கியிருந்தான்.


"அப்புறம் ஏன் ஆறு மாசம் என்னைத் தவியாய்த் தவிக்க விட்டீங்க? உங்களுக்கு என்னைப் பிடிக்கலைனு நினைச்சு எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா? உங்களுக்கு என் மேல எப்ப காதல் வந்துச்சோ தெரியாது ஆனா உங்களைப் பார்த்த நாள்லருந்து ஒருவிதமான ஈர்ப்பு உங்க மேல எனக்கு இருந்துச்சு. எனக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும். அதான் அண்ணனோ பெயர் சொல்லியோ உங்களை நான் கூப்பிட்டதே இல்லை. இப்பலாம் சொல்றாங்களே க்ரஷ்னு அந்த மாதிரி அப்ப எனக்கு நீங்க இருந்தீங்க. நீங்களே கணவரா வர போறீங்கனு தெரிஞ்சதும் நான் அடைஞ்ச சந்தோஷத்துக்கும் அளவே இல்லை. ஆனா அந்தச் சந்தோஷத்துக்குலாம் சேர்த்து வச்சி அடுத்த ஆறு மாசம் என்னை அழ விட்டுட்டீங்க. முதலிரவு அன்னிக்கு மயக்கம் போட்டதால் இப்படி என்னை விட்டு விலகிட்டீங்களோ-னுலாம் நினைச்சுக் கலங்கியிருக்கேன் தெரியுமா! முத்தம் கொடுத்தப்போ நடுங்கினதுல எனக்கு உங்களைப் பிடிக்கலைனு நினைச்சு விலகி போய்ட்டீங்களோனு நினைச்சு வருத்தப்பட்டிருக்கேன். காரணமே சொல்லாம ஒருத்தரை விலக்கி வைக்கிறது அவங்களை எவ்ளோ காயப்படுத்தும் தெரியுமா? ஏன் அப்படிச் செஞ்சீங்க?"


அவனின் சட்டையைப் பிடித்து உலுக்கியவாறு இத்தனை நாட்களாய் மனத்திற்குள் அமிழ்ந்திருந்த அந்நாட்களின் மனவலிகளை எல்லாம் இன்று அவனிடம் கொட்டியிருந்தாள் சிந்து.


கண்களில் துளிர்த்த நீருடன் கோபமாய்க் கேட்டிருந்தவளின் கண்ணீரைத் துடைத்தவனாய், "நீ இவ்ளோ காயப்பட்டிருப்பனு தெரியாது சிந்து‌! அப்பவும் தவறான முடிவைத் தான் நான் எடுத்திருக்கேன்னு இப்ப புரியுது. ஆனாலும் உன்னைக் கஷ்டப்படுத்த விரும்பாம தான் நான் விலகியிருந்தேன்" என்றவன்,


"கல்யாணம் முடிஞ்சி அஞ்சு நாள் உன் கூட இருந்தேனே ஞாபகம் இருக்கா சிந்து?" எனக் கேட்டான்.


"இருக்கு! அதெப்படி மறக்க முடியும். என் வாழ்க்கைல நான் ரொம்ப ரொம்பச் சந்தோஷமா இருந்த நாட்கள் அது" என்றவள் சொன்னதும் இன்பமாய் அதிர்ந்து தான் போனான் இன்பா.


அந்நாட்களின் நினைவிற்குள் பயணமானார்கள் இருவரும்.


அன்று முதலிரவின் முத்தப்பொழுதில் அவளின் உடலில் அவன் உணர்ந்த நடுக்கத்தில் தன்னிலை அடைந்து விலகி சென்று நின்றவனின் மனசாட்சியோ அவனைக் கழுவி ஊற்றியது.


'உன்னோட முன் காதலை சொல்லாம வாழ்க்கையை ஆரம்பிக்க மாட்டேன்னு சொன்னியே! இப்ப என்ன செஞ்சிட்டு இருக்க நீ?' என்று மனசாட்சி கேள்வி எழுப்பிய பொழுதினில் தான் தனக்குச் சிந்துவின் மீது காதல் துளிர்த்திருந்ததை உணர்ந்தான் இன்பா.


ஆம் திருமணத்திற்கு முன்பு அவளின் நற்குணங்களையும் தன் மீதான அவளின் அன்பினையும் வைத்துத் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்திருந்தவன், திருமணத்திற்குப் பின்பு தான் அவளின் மீதான தனது காதலை உணர்ந்திருந்தான்.


பால்கனியில் நின்றிருந்தவனின் முதுகை கட்டிலில் அமர்ந்தவாறு பார்த்திருந்தவளுக்கு, 'ஏன் முத்தம் கொடுத்தாரு? ஏன் பாதிலேயே விட்டுட்டு போய்ட்டாரு' என்ற கேள்வி தான் எழுந்தது.


அப்படியே கட்டிலில் சாய்ந்து அவள் உறங்கி விட, அடுத்த அரை மணி நேரம் கழித்து அறைக்குள் நுழைந்தவன் உறங்கும் சிந்துவின் அருகிலமர்ந்து அவளின் முகத்தைக் காதலாய்ப் பார்த்திருந்தான்.


"என் மேல நிறையக் காதல் வச்சிருக்க என் கணவன்! அன்பும் பாசமும் கொட்டி வளர்க்க பிள்ளைங்க! இத்தனை வருஷ தனிமையையும் வெறுமையையும் போக்க எனக்கே எனக்குனு இப்படி ஒரு குடும்பம் வேணும்ங்க. அது போதும். நான் நிம்மதியா இருப்பேன்"


அன்று தனது ஆசையாகச் சிந்து சொன்னது இன்று இவனது காதில் ரீங்காரமிட, "நிச்சயமா உன்னோட ஆசையை நான் நிறைவேத்துவேன் சிந்துமா" உறங்குபவளின் கையைப்பிடித்து உறுதிமொழி அளித்தவனாய் கைகளைப் பற்றியவாறே அருகில் படுத்துக் கொண்டான்.


இரவு தாமதமாக உறங்கியதில் காலை தாமதமாகவே அவனுக்கு விழிப்பு வர, அருகில் சிந்து இல்லாமல் இருப்பதைப் பார்த்தவன் நேரத்தைப் பார்த்தான். காலை ஒன்பது மணியாகியிருப்பதைக் கண்டு திடுக்கிட்டவனாய் எழுந்தவன், "சிந்து" என்று கூவினான்.


"இதோ வரேன்ங்க" என்று அவசரமாக மேலறைக்கு வந்தவளின் கொலுசொலி அவனின் காதினை நிறைக்க, மென்னகை புரிந்தான்.


"எழுந்துட்டீங்களா? காபி எடுத்துட்டு வரவா?" எனக் கேட்டவளிடம் வேண்டாமெனத் தலையசைத்தவனாய், "என்னை எழுப்பிருக்கலாம்ல! நீ எத்தனை மணிக்கு எழுந்திருச்ச?" எனக் கேட்டான்.


"நான் எப்பவும் போல ஆறு மணிக்கே கீழே சமையல் வேலை பார்க்க போய்ட்டேன்" என்றவள் கூறியதும் நெற்றிச் சுருங்க, "நீ வேலை பார்த்தியா? ஏன்? வீட்டு வேலைக்கு ஆள் வைக்கச் சொல்லிருந்தேனே" சற்று கோபமாகவே கேட்டான்.


அவனின் அதட்டலான பேச்சில், "இல்ல அவங்க இன்னிக்கு லீவ்னு அத்தை சொன்னாங்க. அதான்" எனச் சற்று திணறலாகவே அவள் கூற,


எரிப்பது போல் அவளைப் பார்த்தவாறு கட கடவெனப் படிக்கட்டில் இருந்து கீழே இறங்கியவன், "அப்பா அப்பாஆஆஆ" என நடுக்கூடத்தில் நின்று அழைத்திருந்தான்.


அவனின் அழைப்பில் அவனது தாய், தந்தை, அண்ணன், அண்ணி என அனைவரும் அங்கே வந்திருந்தனர். பின்னே முதலிரவு முடிந்து மறுநாள் காலை மணமகன் கூவிக்கொண்டு வந்து நின்றால் பதறும் தானே அனைவருக்கும்.


கலைந்த தலைமுடியும் உறங்கிச் சோர்ந்த விழியுமாய் நடுக்கூடத்தில் நிற்பவனைக் கேள்வியாய் நோக்கினர் அனைவரும்.


அவனது அண்ணியும் அம்மாவும் சமையலறை பக்கமே செல்லவில்லை என்பது அவர்களின் நலுங்காத உடையும் புத்துணர்வான முகமுமே பறைசாற்ற, மேலும் கோபமேறியது அவனுக்கு.


மனதில் நடுக்கத்துடன் கைகளைப் பிசைந்தவாறு கணவனின் அருகில் நின்றிருந்தாள் சிந்து.


"அப்பா வீட்டு வேலைக்கு ஆள் வைக்கலையா நீங்க?" எனக் கேட்டான்.


"வச்சிருக்கோம்ப்பா! இன்னிக்கு ஏதோ லீவ்னு காலைல தான் உங்கம்மா என்கிட்ட சொன்னா! நேத்து கல்யாண வேலைக்குலாம் கூட மாட இருந்தாங்கல! அதான் இன்னிக்கு ரெஸ்ட் எடுக்க லீவ் போல" என்றவர் சொன்னதும்,


"வீட்டு வேலைக்காரங்க லீவ்னா! என் பொண்டாட்டியை வேலைக்காரியா நடத்துவீங்களா நீங்க?" எனக் கேட்டவாறு தாயையும் அண்ணியையும் தீக்கனலாய்ப் பார்த்திருந்தான்.


சிந்துவிற்கு நெஞ்சில் பனிமழை சாரல்! முதன் முதலாகத் தனக்காகப் பரிந்து வந்து மற்றவரிடத்தில் சண்டையிடும் உறவை காண்கிறாள்! அனைத்திற்கும் கலங்கி பயந்து நின்ற காலங்கள் ஓடிவிட்டது. இனி தனக்காகக் கணவன் இருக்கின்றான் என்கின்ற மனத்தைரியத்தை ஆசுவாசத்தை அந்நொடி அவளுக்கு அளித்திருந்தான் அவன்! பூரிப்பில் நெகிழ்ந்து கலங்கிய கண்களுடன் அவனைப் பார்த்திருந்தாள் சிந்து.


"என்னடா நீ இப்படிப் பேசுற! அவங்க அவங்க வீட்டுல சமைச்சா வேலைக்காரினு அர்த்தமா! அப்ப இத்தனை நாளா உங்களுக்கு நான் தானே சமைச்சிப் போட்டு வளர்த்தேன்! அப்ப நான் இங்கே வேலைக்காரியா இருந்தேன்னு அர்த்தமா என்ன?" எனக் கேட்டார் பூர்ணம்.


"என் பொண்டாட்டி உங்களை மாதிரி முன்னாடி மகாராணியா இருந்துட்டுக் கல்யாணம் முடிஞ்சி வந்து வேலை செஞ்சிருந்தா எனக்கு அப்படித் தோணிருக்காது. ஆனா நீங்க கல்யாணத்துக்கு முன்னாடியே அவளை அப்படித் தானே நடத்துனீங்க! இப்ப என்ன நினைச்சி அவளை வேலை வாங்குறீங்கனு தான் கேட்குறேன். அவளை மட்டும் சமைக்க விட்டுட்டு உங்களுக்குத் தேவையான வேலைலாம் வாங்கிட்டு இப்படி இரண்டு மகராசிகளும் வந்து நிக்கிறீங்களே அதுக்குப் பேரு தான் வேலைக்காரியா நடத்துறதுனு சொல்றேன்" என்று சூடாகத் திருப்பிக் கொடுத்தவன்,


"இனி என் பொண்டாட்டி தனியா கிடந்துலாம் இந்த வீட்டுல ஒன்னும் சமைக்க மாட்டா! அதையும் மீறி வேலைக்காரி மாதிரி நடத்துனீங்கனு தெரிஞ்சிது இனி இந்த வீட்டு பக்கமே வர மாட்டேன். நானும் என் மனைவியும் மட்டும் தான் குடும்பம்னு சென்னைலயே இருந்துடுவேன் சொல்லிட்டேன்" என்று எச்சரித்தவனாய் மாடிப்படி ஏறியவன் நின்று சிந்துவை பார்த்து முறைத்ததில் அவனுடன் படியேறி இருந்தாள் சிந்து.


"இவளோட மாமா இவளை ஆள் மயக்கினு சொன்னது சரி தான் போல! ஒரே நாள்ல எப்படி என் பையனை மயக்கி வச்சிருக்கா! நமக்குனு வரதுலாம் இப்படி இருக்கே! நான் வேண்டாம் வேண்டாம்னு தலையால அடிச்சிக்கிட்டேன்! கேட்டீங்களா" என்று பூர்ணம் அவர்களின் அறையில் அமர்ந்து புலம்பிக் கொண்டிருக்க, என் காது கேட்காது என்பது போலவே எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல் அமர்ந்திருந்தார் கந்தசாமி. மகனின் செயலில் பரிபூரண நிம்மதியுடன் இருந்தார் பூர்ணத்தின் கணவர்.


"உங்க தம்பிக்கு ஓவர் கொழுப்பாகிப் போச்சு. அவளுக்குச் சமைக்கப் பிடிக்கலைனா அவளே வந்து சமைக்க முடியாதுனு சொல்ல வேண்டியது தானே. இந்த வீட்டுல எனக்கு வேணும் வேண்டாம்ங்கிறதை நானே தானே சொல்லுறேன். இந்தப் பொண்ணுக்கு என்ன உங்க தம்பி மௌத் பீஸா" என்று கணவனிடத்தில் புலம்பினாள் திவ்யா.


இன்பாவின் அறையில் அவன் முன் தவறு செய்த பிள்ளை போல் தலை கவிழ்ந்து நின்றிருந்தாள் சிந்து.


"இங்க பாரு சிந்து! நீ இந்த வீட்டு மருமக! என் பொண்டாட்டி! வேலைக்காரி கிடையாது! அவங்க தான் சொன்னாங்கனா செய்ய முடியாதுனு சொல்ல வேண்டியது தானே! உனக்காக நீ தான் பேசனும் சிந்து! எப்பவும் நானே வந்து பேசிட்டு இருக்க முடியாது‌" என்றவனைப் பார்த்தவள்,


"இன்னிக்கு ஒரு நாள் நான் சமைக்கிறேனே! இல்லைனா ஹோட்டல்ல ஆர்டர் செஞ்சி தான் சாப்பிடுவாங்க எல்லாரும். நாளைக்குத் தான் வேலைக்காரங்க வந்துடுவாங்கல" என்று கூறவும் கோபம் தலைக்கேற, 'இதற்கு மேல் இருந்தால் அவளைத் திட்டி விடுவோமோ' என்று அஞ்சியவனாய் அவளிடம் ஏதும் பேசாது குளியலறைக்குள் புகுந்து கொண்டான் இன்பா.


அவன் ஒப்புதல் கொடுக்காது சென்றதில் அவள் சமையலறை பக்கமே செல்லவில்லை என்றாலும், தான் அவ்வளவு கூறியும் அவள் இவ்வாறு கேட்டது அவனது கோபத்தைத் தூண்டிவிட்டிருக்க, அடுத்து வந்த நாட்களில் அவளிடம் பேசாமல் முறைப்புடனேயே சுற்றிக் கொண்டிருந்தான் அவன்.


அதனால் தான் இந்த நாட்களைத் தனது வாழ்வின் சந்தோஷமான நாட்களாய் சிந்து கூறியதில் இன்ப அதிர்ச்சிக்குள்ளானான் இன்பா.


தினமும் அவளை எங்கேனும் அழைத்துச் சென்றான். ஓரிரு வார்த்தைகள் தேவைக்கேற்ப பேசினானேயன்றி அதைத் தவிர்த்து ஏதும் பேசவில்லை இன்பா. ஆனால் அவனுக்கும் சேர்த்து வைத்து பேசினாள் அவள். தனக்குப் பிடித்தவற்றை அவனிடம் கேட்டு வாங்கிச் சாப்பிட்டாள். தனக்குப் பிடித்தமானது வேண்டியது, வேண்டாதது, தனது வாழ்வில் நிகழ்ந்தது என நிறையப் பேசினாள். அவனுக்காகத் தினமும் ஒரு பதார்த்தத்தையாவது தனது கையினாலேயே சமைத்துக் கொடுத்தாள்‌. அதனை முறைத்தவாறே வாங்கிக் கொண்டாலும் உச்சிக்கொட்டி உண்டிருந்தான் இன்பா.


நாள் முழுக்க அவனுடனேயே இருப்பவளின் கண்கள் ரசனைப்பார்வையாக மட்டுமே தான் அவனைப் பார்த்திருக்கும். அவனது உடை அதை உடுத்தும் நேர்த்தி, கைபேசியைப் பிடித்திருக்கும் பாங்கு, மீசையைச் சரி செய்து தலையைக் கோதும் விரல்கள், கூர்மையான கண்கள், மென்மையான உதடுகள் என அணு அணுவாக அவனை ரசித்து உள்வாங்கியிருந்தவளின் ரசனைப் பார்வையை உணர்ந்து பெரும்பாலும் வெட்கப்புன்னகையுடன் பூரித்த மனநிலையில் தான் அவளுடன் நாட்களைக் கடத்தியிருந்தான் இன்பா.


ஐந்தாம் நாள் மாலை, "சிந்து" என்று அறையிலிருந்து அழைத்தவனின் முன்பு வந்து நின்றவளின் கண்களில் தெரிந்த துள்ளலையும் பூரிப்பையும் பார்த்துக் குறுஞ்சிரிப்பை உதிர்த்தவனின் இதழ்களைப் பார்த்திருந்தாள் அவள்.


அவளின் பார்வையை நோக்கியவனின் இதழ்கள் மேலும் விரிய, கைகள் தலையைக் கோத, வெட்கத்தை மறைக்கக் கண்கள் அறையெங்கிலும் அலைபாய்ந்தன.


தொண்டையைச் செருமி தன்னிலை வந்து அவளைக் கலைத்தவனாய், "நான் நாளைக்குச் சென்னைக்குப் போறேன் சிந்து. அங்க நமக்காக வீடு பார்த்துட்டு வந்து உன்னைக் கூட்டிட்டுப் போறேன்" என்றவனைத் துள்ளல் பூரிப்பெல்லாம் மறைந்து அலைகழித்த விழிகளிடம் சோகமாகப் பார்த்தாள் சிந்துஜா.


"எவ்ளோ நாள் ஆகும்?" எனக் கேட்டாள்.


"ஹ்ம்ம் ஒரு பத்து நாள் ஆகும். நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே வீடு பார்க்க புரோக்கர்கிட்டலாம் சொல்லி வச்சிருந்தேன் தான். ஆனாலும் எதுவும் சரியா கிடைக்கலை. இப்ப போய்ப் பார்த்துட்டு ரெடியானதும் வரேன்" என்றவன் சொன்னதும்,


"அத்தை இன்னும் நிறையச் சாங்கியம்லாம் இருக்குக் கோவிலுக்குலாம் போகனும்னு சொன்னாங்களே" என்று கேள்வியாய் அவனை அவள் பார்க்க,


"அதுலாம் எங்கேயும் நீ போக வேண்டாம். உங்க அத்தை வீட்டுலருந்து யாரு வந்தாலும் போய் மதிச்சு கூடப் பேசாத! உன்னை மதிக்காதவங்களை நீ மதிக்கனும்னு அவசியமில்லை. பெரிய இடமா கட்டி கொடுத்திருக்கோம்னு பெருமை பேசிட்டு வருவாங்க‌. நீ அவங்க பக்கம் கூடப் போகாதே! நான் அப்பாகிட்ட சொல்றேன். அவங்க முன்னாடிலாம் நீ நிக்க வேண்டிய அவசியமே இல்லை" என்றவனைப் பார்த்துச் சரியெனத் தலையசைத்தவள்,


"நான் உங்க அம்மாவை அத்தைனு சொன்னேன். குலத்தெய்வ கோவிலுக்கு கூட இன்னும் போகலைனு சொல்லிட்டு இருந்தாங்க. எங்கே கூப்டாலும் நீங்க வர முடியாதுனு சொல்லிட்டதா சொல்லி வருத்தப்பட்டாங்க" என்றாள்.


தனது உறவுகளை அவளது உளவுகளாய் ஏற்றுக்கொண்டு பேசியதில் மனம் கனிந்தவனாய், "நம்ம வீடு பார்த்து செட்டில் ஆகிட்டு அடுத்து அம்மா சொல்ற எல்லா இடத்துக்கும் போய்ட்டு வந்துடலாம் சரியா" என்றவனை சோகச்சித்திரம் போல் பார்த்திருந்தாள் சிந்துஜா.


அவளது கலங்கிய விழிகளைப் பார்த்து கைகளை நீட்டி தன்னருகே வருமாறு அழைத்தான்.


அவனின் கைப்பற்றி அருகே வந்து நின்றவளின் முகத்தினைப் பற்றியவன், "உனக்கு என்னைப் பிடிக்குமா சிந்து?" கண்களைப் பார்த்தவாறு கேட்டான்.


சிறிதும் யோசிக்காது, "ரொம்ப ரொம்பப் பிடிக்கும்" என்றாள்.


"எனக்காகக் கொஞ்சம் பொறுத்துக்கோ! சீக்கிரம் உன்னை என்கூடவே கூட்டிட்டு போய்டுறேன்" என்றவனின் விழிகளை விட்டு இதழ்களையே அவள் பார்க்க,


"சிந்து யூ ஆர் டெம்ப்டிங் மீ" என்றவனாய் அவளை இறுக அணைத்திருந்தான். ஒரு நிமிடம் உறைந்து நின்றவளின் கரங்கள் மறுநிமிடம் அவனைச் சுற்றி வளைத்திருந்தன.


சில நிமிடங்கள் இருவரும் மற்றவரின் அணைப்பையும் கதகதப்பையும் தனக்குள் சிலிர்ப்புடன் வாங்கிக் கொண்டவர்களாய் அமைதியாக நின்றிருந்தனர்.


சிந்துவின் தோளில் தாடையைப் பதித்தவனாய், "சிந்து ஐ நீட் சம் டைம்! உன்கிட்ட நிறையா பேசனும். ஹ்ம்ம் சொல்லனும். நமக்குனு நான் பார்க்கிற வீட்டுல நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் சிந்து. நீ ஆசைப்பட்ட மாதிரியான வாழ்க்கையை உனக்குக் கொடுக்க வேண்டியது என்னோட பொறுப்பு" என்றவன் நிமிர்ந்து அவளைப் பார்க்க, நாணத்துடன் சரியெனத் தலையசைத்தாள்.


வருவான் என்ற நம்பிக்கையுடன் மறுநாள் ஏக்கமும் தவிப்புமாய் அவனுக்கு விடைக்கொடுத்து அனுப்பிய சிந்துவை அடுத்த ஆறு மாதங்கள் அவன் பார்க்கவே வரவில்லை.

© KPN NOVELS COPY PROTECT
bottom of page