Hi Friends,
அடுத்த பதிவுடன் வந்துவிட்டேன். கதை பிடித்திருக்கிறதா? நிறைகள் மட்டும் இல்லை உங்கள் மனதில் தோன்றுக குறைகளையும் தயக்கமின்றி சுட்டிக்காட்டுங்கள். உங்கள் கருத்துக்களை comment மூலம் சொல்லுங்கள் மக்களே.
அடுத்த பதிவு புதன் அல்லது வியாழன் அன்று பதிவிடப்படும்.
நட்புடன்,
KPN
பிறை-3
உழைப்பாளர் நீதி கட்சி...
மக்கள் சேவை, சமுதாய சிந்தனை போன்ற உன்னத நோக்கத்துடனோ அல்லது பதவி வெறி, ஆட்சி அதிகார போதை போன்ற இன்றைய எதார்த்த அரசியல் நோக்கத்திற்காகவோ ஆரம்பிக்கப்பட்ட கட்சி இல்லை இது.
நிதி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், கல்யாண மண்டபங்கள், மதுபான தொழிற்சாலை என தன் வாழ்நாளில் பாதியை இழந்து செய்யத்தகாத செயலெல்லாம் செய்து உருவாக்கிய தொழில் சாம்ராஜ்ஜியத்தை மற்ற அரசியல்வாதிகளிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள செந்தமிழ்வேந்தன் என்பவரால் கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட கட்சி அது.
அவர் சார்ந்திருக்கும் சாதி மக்கள் சிலரை உடன் சேர்த்துக்கொண்டு அந்த கட்சியைத் தொடங்கினார் அவர்.
ஆரம்பத்தில் அவரிடம் கணக்கராகச் சேர்ந்து பின் படிப்படியாக வேந்தனின் நம்பிக்கையைப் பெற்று அவருடைய நிதி நிறுவனத்தில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்து பின் அந்த கட்சி தொடங்கிய நாள் முதலே அதன் வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் அவருக்குத் துணையாக அவருடன் இருந்துவந்தவர்தான் தயாளன்.
அவர்களுக்குக் கீழே கூலிப்படையைப் போல இயங்கி வந்தவர்களிலிருந்து, வேந்தனுடைய நம்பிக்கையைப் பெற்று மேலே வந்தவர்கள் தனசேகர் மற்றும் ராஜாமணி இருவரும்.
தயாளன் ஆரம்பத்திலிருந்தே அந்த கட்சியில் இருக்க அந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டு பதினைந்து வருடங்களுக்கு பிறகுதான் அந்த கட்சியில் இணைந்தனர் மற்ற இருவரும்.
ஆனால் அவர்களுடைய தீவிர செயல்பாடுகளால் மக்கள் மத்தியில் அவர்கள் இரண்டு பேருக்கும் ஏற்பட்டிருந்த திடீர் செல்வாக்கு காரணமாக கட்சியில் அவர்களுடைய கை ஓங்கத் தொடங்கியது.
சொல்லப்போனால் கட்சி உறுப்பினர்களின் முழு ஆதரவும் தனசேகருக்கும் அவரது நிழல் போலவே மாறிப்போன ராஜாமணிக்கும் முழுமையாக இருக்க அந்த கட்சியைத் தொடங்கிய வேந்தனை விடக்கூட ஒரு படி மேலே இருந்தனர் இருவரும். கூடவே உடல் உபாதைகள் வேறு சேர்ந்துகொள்ள, நாசூக்காக ஒதுங்கிக்கொண்டர் அவர். அவருடைய ஒரே மகனான இளவேந்தன் கூட தொழில்களில் காட்டும் முனைப்பைக் கட்சியில் காட்டாமல் போக அது மிகவும் வசதியாகிப்போனது தனசேகர் மற்றும் ராஜாமணி இருவருக்கும்.
பிரபல முன்னணி கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு முந்தைய தேர்தலில் இவர்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட மற்ற நான்கு பேரில் இவர்கள் இரண்டுபேர் மட்டும் அவரவர் தொகுதிகளில் வெற்றி பெற, தனசேகருக்கு மந்திரி பதவி கிடைத்தது.
அந்த தேர்தலில் தயாளன் படுதோல்வி அடைந்தார்.
கட்சிக்காக இரவு பகல் பார்க்காமல் தங்கள் உழைப்பைக் கொடுத்த மூன்று பேரில் ஒருவருக்கு மட்டுமே வெற்றிவாய்ப்பும் பதவியும் தேடி வர, இன்னும் ஒருவருக்கு வெற்றி கிட்டவில்லை. மற்றொருவருக்கோ வெற்றி கிட்டிய போதும் பதவி கிட்டவில்லை. ஆக அனைவருக்குள்ளேயும் பகைமை உணர்ச்சியின் படிமம் படியத்தொடங்கியது.
அதுவரையிலும் கொஞ்சம் சுமுகமாக இருந்த நிலை மாறி உட்கட்சி பூசல்கள் அதிகமாகவே, மூத்தவரான செந்தமிழ்வேந்தனின் ஆதரவுக் கரம் வெற்றிபெற்ற இருவரை நோக்கி நீள, அந்த கட்சியிலிருந்து வெளியேறி வேறொரு கட்சியில் இணைத்தார் தயாளன்.
அடுத்த தேர்தலில் அவர்கள் கூட்டணி வைத்திருக்கும் கட்சியுடன் சேர்ந்து இவர்கள் கட்சியும் தோல்வியைத் தழுவியது. பதவியின் ருசி கண்டவர்களால் அது இல்லாமல் வாழவே இயலவில்லை.
ஆனால் தயாளன் அவர் இணைந்த கட்சியின் சார்பில் நின்று வெற்றி பெற்றாலும் அது எதிர்க்கட்சி கூட இல்லை என்ற நிலையில் அவருடைய சட்டமன்ற உறுப்பினர் பதவி ஒரு குறுகிய எல்லைக்குள்ளேயே இருந்தது. அதை வைத்துக்கொண்டு உருப்படியாக ஒன்றும் செய்ய இயலவில்லை அவரால்!
அடுத்த தேர்தலுக்காகக் காத்திருந்த நிலையில் உழைப்பாளர் நீதி கட்சி சார்பில் தேர்ந்தெடுத்த வேட்பாளர் பட்டியலில் பல புதியவர்கள் இடம்பெற்றிருக்க தனசேகருக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப் பட்டிருந்தது.
அந்த பட்டியலில் ராஜாமணியின் பெயர் இல்லை.
அது சம்பந்தமாக ராஜாமணிக்கும் செந்தமிழ்வேந்தனுக்கு பிரச்சனை மூண்டிருக்க, இரண்டு மாதத்திற்கு முன் ராஜாமணி கூலிப்படையினரால் கொலைசெய்யப்பட்டார்.
அந்த கொலையில் ஈடுபட்ட கூலிப்படையினர் அடையாளம் காணப்பட்டு காவல்துறையால் கைதுசெய்யப்பட, அவர்கள் தயாளனை நோக்கி கை காட்டவும் அவர் கைது செய்யப்பட்டார்.
அதன் பிறகு நீதி மன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு அவர் நிபந்தனை ஜாமீனில் வெளி வந்து சில தினங்கள் மட்டுமே ஆகியிருந்தது.
இந்த நிலையில் தனசேகருடைய படுகொலைக்குப் பிறகு நடந்த காவல்துறை விசாரணையின் பொழுது, "உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?" என கலைச்செல்வனிடம் கேட்கப்பட, கொஞ்சமும் யோசிக்காமல், "தயாளன் அங்கிள் மேலதான் எனக்கு சந்தேகம்" என்று சொல்லிவிட்டான் அவன்.
"அதுக்கு மோட்டிவேஷன் என்னவா இருக்கும்?" என்ற தொடர்ச்சியான கேள்விக்கு,
"நிறைய இருக்கு. வேந்தன் டிஸ்டில்லரீஸ் அண்ட் பிவரேஜஸ் லிமிடெட்... அதாவது எங்க லிக்கர் கம்பெனி இருக்கில்ல? அதோட ஷேர்ஸ் சம்பந்தமான பிரச்சனை எங்களுக்குள்ள அஞ்சு வருஷத்துக்கும் மேல போயிட்டு இருக்கு.
மோர் ஓவர் அப்பாவுக்கு அலாட் பண்ணி இருக்கற தொகுதிலதான் அவரும் போட்டியிடப் போறாரு. அது எங்க நேட்டிவ் வேற, அதனால அப்பாவை வேற தொகுதில நிக்க சொல்லி அவர் மிரட்டினதாக அப்பா சொன்னாங்க. ஆனா அப்பா அதுக்கு சம்மதிக்கல! அதனால இருக்கலாம்! இவங்களுக்குள்ள இருக்கற முன் விரோதமும் ஒரு காரணமா இருக்கலாம். ஏன்னா இப்பதான் ராஜாமணி அங்கிள் கொலை கேஸ்ல இருந்து அவர் ஜாமீன்ல வந்திருக்கார்.
அவரை தவிர அப்பாவை கொலை செய்யற அளவுக்கு வேற யாருக்கும் மோட்டிவேஷன் இல்ல" என அவன் தன் யூகத்தைச் சொல்ல, அதை நிரூபிப்பதுபோல், அவர்கள் வீட்டுக் கண்காணிப்பு 'கேமரா'வில் பதிவாகியிருந்த காணொலியின் துணையுடன் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்ட கூலிப்படையைச் சேர்ந்தவனும், தயாளன்தான் பணம் கொடுத்து அந்த கொலையைச் செய்யச்சொன்னார் என வாக்குமூலம் கொடுக்க, அவரை மீண்டும் கைது செய்தது காவல்துறை. அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த ஜாமீனும் ரத்து செய்யப்பட்டிருந்தது.
பூமிகா இந்தியா வருவதற்கு முன்பே, அவளிடம் இது பற்றி ஒரு வார்த்தை கூட கலக்காமல், உணர்ச்சியின் பிடியிலிருந்த கலைச்செல்வன் அவசரப்பட்டு அனைத்தையும் சொல்லி முடித்துவிட்டான்.
அவள் மட்டுமே இங்கே இருந்திருந்தாள் என்றால், தயாளனைப் பற்றி தவறாக ஒரு வார்த்தை கூட பேசியிருக்க இயலாது கலையால்.
***
இந்த நிலையில்தான் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி சிறைக்குள்ளிருந்தே கைப்பேசி மூலம் தன் நண்பனைத் தொடர்புகொண்ட தயாளன், அவரிடம் சத்தம்போட்டுக்கொண்டிருந்தார்.
"புரிஞ்சிக்கோ தாயா! உன்னை வந்து பார்க்க அவனுக்கு அபிஷியல் பெர்மிஷன் கிடைக்கல! கிடைக்கலங்கறத விட கிடைக்கவிடாம யாரோ தடுக்கறாங்க! இந்த பிரச்சனைக்கு பின்னால யார் இருக்காங்கன்னே கண்டுபிடிக்க முடியல! கொஞ்சம் பொறுத்துக்கோ! பாவம் ஆகாஷ்! உன் விஷயமாத்தான் என்னென்னவோ செஞ்சிட்டு இருக்கான்! நீ புரிஞ்சுக்காம கோப படற! இப்படி நீ ஜெயில் குள்ள செல் போன் யூஸ் பண்றது தெரிஞ்சா அது பெரிய இஷ்யூ ஆகும்! அடிக்கடி போன் பண்ணாத!” என அவரிடம் பொறுமையாக எடுத்துச்சொன்னார் எதிர் முனையிலிருந்தவர்.
"என்ன இருந்தாலும் நீங்க எல்லாரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணுதான! அதான் அந்த பையன் லூசுத்தனமா என் பேரை மீடியால சொல்றத பார்த்துட்டு சும்மா இருந்துட்டு நீ எனக்கு அட்வைஸ் பண்ற!" என தயாளன் வருத்தத்துடன் சொல்ல, அதில் கொஞ்சம் கோபம் வந்துவிடவே, "ப்ச்.. நீ என்ன வேணா நினைச்சிக்கோ! அதைப்பத்தி எனக்கு கவலை இல்ல. நீ சொல்ற மாதிரி உன்னை விட பானுமதியும் என் மாப்பிள்ளையும்தான் எனக்கு முக்கியம். அதே அளவுக்குச் சாரதாவும் ஆகாஷும் கூட எனக்கு முக்கியம்தான். அதை ஞாபகத்துல வெச்சுக்கோ! இப்ப கூட நான் உனக்காக எதுவும் செய்யல! என் கூட பிறக்காத தங்கைக்காகவும், உன் மேல அவ்வளவு அன்பும் மரியாதையும் வெச்சிருக்கானே ஆகாஷ் அவனுக்காகவும்தான் செய்யறேன்! அவன் கண் முன்னால நீ கீழ இறங்கி போனா… அந்த ஏமாற்றத்தை அவனால தாங்க முடியாது! அதுக்காக செய்யறேன்!" என்று வேகமாகச் சொல்லவிட்டு அழைப்பைத் துண்டித்தார் எதிர்முனையிலிருந்த ஜெயராமன்.
மறுபடியும் அவரது கைப்பேசி விடாமல் ஒலிக்கவும், "சொன்னா கேக்க மாட்டேங்கறியே தயா!" எனச் சலிப்பாகச் சொன்னார் ஜெயராமன்.
"ராம்! ப்ளீஸ் ராம்! என்னை நம்பு! நான் இந்த கொலையெல்லாம் செய்யல! செய்யாத தப்புக்கு இப்படி ஜெயில்ல வந்து உக்காந்துட்டு இருக்கேன்! ஒரு தடவ ஆகாஷை நேர்ல பார்த்து நான் இதை சொல்லணும்!" என தயாளன் புலம்ப, "கடவுள் ரொம்ப கறார் பேர்வழி தாயா! யாரை எப்ப எப்படி தண்டிக்கணும்ன்னு அவர் ஒரு கணக்குப் போட்டு வெச்சிருப்பார்! அவர் அப்படி ஒரு தண்டனையை நமக்கு கொடுக்கும்போது நம்மால அதைத் தாங்க முடியாது. அதை உங்க மூணு பேர் விஷயத்துலையும் நான் கண்கூடா பார்த்துட்டேன்" என்று சொன்னவர், "நாளைக்கு முடிஞ்சா பர்மிஷன் வாங்கிட்டு ஆகாஷை வந்து பார்க்க சொல்றேன்" என தகைந்த குரலில் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தார் அவரால் ராம் என அழைக்கப்பட்ட ஜெயராமன்!
***
அந்த சிறைச்சாலைக்குள்ளே அடி எடுத்து வைப்பதற்கே அருவறுப்பாக இருந்தது அவனுக்கு.
அவனுடைய தந்தை இந்த இடத்தில்தான் எதோ ஒரு மூலையில் முடங்கிக் கிடக்கிறார் என்ற எண்ணமே அவனுக்கு வலியைக் கொடுத்தது.
அவனுடைய அந்த அசூயை அவன் முகத்தில் பிரதிபலிக்காவண்ணம் மிக முயன்று தன்னை கட்டுப்படுத்தியவாறு அதன் உள்ளே நுழைந்து தன் கையில் வைத்திருந்த காகிதத்தை அங்கே காவலிலிருந்த ஒருவரிடம் நீட்டினான் அவன்... ஆகாஷ்.
அவனைப் பார்த்ததும் அந்த காவலருடைய முகத்தில் தெரிந்த மிரட்சியின் காரணம் புரியாமல் அவன் நிற்க, அதை எடுத்துக்கொண்டு அங்கே இருந்த அலுவலக அரை நோக்கிச் சென்று சில நிமிடங்களில் திரும்பிய அந்த காவலர், "வாங்க சார்!" என்று சொல்லிவிட்டு முன்னே நடந்தார்.
அவன் அவரை பின் தொடர்ந்து செல்ல, "உங்கள பார்த்ததும் யாரோ புதுசா வந்திருக்கிற ஆபீஸர்னு நினைச்சேன் சார்! உங்க ஹேர் ஸ்டைல் வேற அப்படி இருக்கா" என அவர் எதார்த்தமாக சொல்ல, அவர் மிரண்டுபோய் பார்த்த பார்வைக்கு அர்த்தம் புரிந்தது அவனுக்கு.
அவன் யாரைப் பார்க்க வந்திருக்கிறான் என்பதையெல்லாம் அவர் அறியவில்லை போலும், “வெகு சகஜமாகப் பேசிக்கொண்டே அங்கே இருந்த சிறிய அறைக்குள் புகுந்தவர், "இங்க வெயிட் பண்ணுங்க சார்! நீங்க பார்க்க வந்திருக்கிற கைதியை கூட்டிட்டு வர ஆள் போயிருக்காங்க" என்று சொல்லிவிட்டு அவர் அங்கிருந்து சென்றுவிட, அவர் 'கைதி' என்று சொன்ன வார்த்தையில் ஆத்திரம் பொங்கினாலும் ஒரு இயலாமையுடன் அதை உள்ளே போட்டுப் புதைத்தான் ஆகாஷ்.
சரியான காற்றோட்டம் வெளிச்சம் எதுவுமே இல்லாமல் புழுக்கத்துடன் இருந்தது அந்த அறை.
பெயருக்கு ஒரு மின்விசிறி கர்ணகடூரமாகச் சப்தம் எழுப்பியவாறு சுழன்று கொண்டிருந்தது.
பகல் நேரத்திலும் ஒளிர்ந்துகொண்டிருந்த ஒரு குழல்விளக்கு அந்த அறைக்கு வெளிச்சம் கொடுத்துக்கொண்டிருந்தது.
‘இந்த ரூமே இப்படி இருக்கே, அப்பா இருக்கற ப்ரிசன் எப்படி இருக்கும்?' என்ற எண்ணம் தோன்றி அவனை இம்சித்தது.
அனல் மேல் நிற்பதைப் போன்று அவன் அங்கே நின்று கொண்டிருக்க சில நிமிட காத்திருப்புக்குப் பிறகு ஒரு காவலர் உடன் வரத் தளர்ந்த நடையுடன் அங்கே வந்தார் தயாளன்.
அவரது நிலை மனதை உருக்க இயலாமையுடன் அவரை பார்த்த ஆகாஷ் அவரிடம் என்ன பேசுவது என்று புரியாமல் மௌனமாய் நிற்க மகனைப் பார்த்ததும் அவரது கண்கள் கலங்கின.
உடனே தன்னை மீட்டுக்கொண்டு, "அப்பா! என்னை பார்க்கணும்னு உடனே வர சொன்னீங்களாமே! ஜெயராமன் மாமா சொன்னாங்க!" என்றான் அவன் அந்த இருக்கமான சூழ்நிலையினின்று வெளிவர முயன்று.
தவிப்புடன் மகனை ஏறிட்ட தயாளன் சிறு தடுமாற்றத்துடன், "கண்ணா! இந்த கொலைகளை நான்தான் பண்ணியிருப்பேன்னு நீ நம்பறியா?" என்று கேட்க நினைத்ததை நேரடியாகக் கேட்க, "ப்ச்.. இல்ல பா! நீங்க செஞ்சிருக்க மாடீங்கன்னு தெரியும்! ஆனா ஏன் பா! தனா அங்கிளை த்ரெடன் பண்ணீங்க?" எனக் கேட்டான் ஆகாஷ் கவலை வழிந்தோடும் குரலில்.
"நான் அவன் கிட்ட அப்படி கேட்டிருக்கக் இருக்க கூடாது. என்னோட புத்தி மழுங்கி போச்சு!" என்றவர், "அது நம்ம ஜாதி மக்கள் அதிகம் இருக்கற தொகுதி! நம்ம சொந்த ஊரும் அந்த தொகுதியிலதான இருக்கு. அங்க அவன் நின்னா அவன் நிச்சயம் ஜெயிப்பான்! ஆனா நம்ம மக்களுக்கு எந்த நன்மையையும் செய்ய மாட்டான். ஆனா அவன் அங்க நிக்கலன்னா நான் ஜெயிக்க வாய்ப்பிருக்கு. நான் மட்டும் அங்க நின்னு ஜெயிச்சுட்டா, இந்த தடவ எனக்கு நிச்சயம் மினிஸ்டர் போஸ்ட் கொடுக்கிறதா சொல்லியிருக்காங்க.
நான் தெரிஞ்சே நிறைய தப்பு பண்ணியிருக்கேன் ஆகாஷ்! ஆனா தெரியாம நான் பண்ண ஒரு பாவத்துக்கு பிராயச்சித்தம் செய்யணும்னு நினைச்சேன்! அதுக்கு ஒரு பதவி கிடைச்சா நல்லா இருக்கும்னு தோணிச்சு! அதனாலதான் அவன் கிட்ட அப்படிச் சொன்னேன்! ஆனா அது மிரட்டல் இல்ல கண்ணா! ஒரு சாதாரண பேச்சுவார்த்தை அவ்வளவுதான். அது இவ்வளவு விபரீதத்துல என்னை கொண்டு வந்து நிறுத்தும்னு நான் நினைக்கவே இல்ல!" என்று முடித்தார் பெரியவர்.
"சரி விடுங்க! உங்களை சீக்கிரம் வெளியில எடுக்க நான் என்னால ஆன எல்லா முயற்சியும் செய்யறேன்!" என்றான் மகன்.
"உன்னை நேர்ல பார்த்து என் நிலைமையை சொல்லணும்னு நினைச்சேன்! நீ ஒருத்தன் என்னை நம்பினா போதும்! வேற யாரை பத்தியும் எனக்கு கவலை இல்ல" எனத் தயாளன் சொல்ல, "ஏன் ப்பா! அம்மா உங்களைத் தவறா நினைச்சா உங்களுக்கு பரவாயில்லையா" என அவன் அவரை ஆழமாகப் பார்த்துக்கொண்டே கேட்க, மறுபடியும் கலங்கிய கண்களுடன், "அவளோட நம்பிக்கையை நான் உடைச்சு பதினஞ்சு வருஷம் ஆச்சு! என்னால அதை திரும்ப பெற முடியுமான்னு தெரியல" என்றவர், "நீ கிளம்பு! உன்னையும் அம்மாவையும் துன்ப படுத்திட்டேங்கற வேதனையை விட எனக்கு இந்த ஜெயில் ஒண்ணும் அவ்வளவு துன்பமா இல்ல!" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று அவனுடைய கண்பார்வையிலிருந்து மறைந்தார் அவர்.
"சார்! இதுல ஒரு கையெழுத்து போடுங்க" என்று முதலில் உடன் வந்த காவலர் ஒரு பதிவேட்டை அவனிடம் நீட்ட அதில் கையெழுத்துப் போட்டுவிட்டு, வெகுவாக கனத்து போன மனதுடன், அங்கிருந்து சென்றான் ஆகாஷ்.
***
Commentaires