top of page

Nilamangai 19

Writer's picture: Krishnapriya NarayanKrishnapriya Narayan

Updated: Mar 16, 2024

19. அங்கீகரிப்பு


நிதரிசனத்தில்...


திருச்சானூரில் உள்ள ஒரு பிரம்மாண்டமான திருமண மாளிகையில் வெகு ஆடம்பரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது வனமலரின் திருமணம்.


அங்கேயே இருக்கும் நட்சத்திர விடுதி ஒன்றில் மங்கைக்கு, செல்வத்தின் குடும்பத்துக்கு மற்றும் பாதுகாவலர்கள் நான்குபேருக்கும் என தனித் தனி அறைகள் முன் பதிவு செய்யப்பட்டிருக்க, நேராக அங்கே வந்து பயணப் பொதிகளை வைத்துவிட்டு குளித்துத் தயாராகி திருமண மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர்.


சென்னையிலேயே மிகப் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களைப் பணிக்கு அமர்த்தியிருக்க, இவர்களுக்குப் பெரிதாக எந்த வேலையும் இல்லை.


நிலமங்கைக்கு தெலுங்கு பேசும் மாப்பிள்ளை வீட்டுக்காரர்களைப் பார்த்ததும் ஆரம்பத்தில் சற்று வியப்பாகவும், அவர்கள் முறை திருமண சடங்குகளைப் பார்த்து  சுவாரஸ்யமாகவும்தான் இருந்தது.


இரண்டு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டி, பேண்ட் வாத்தியம், ஜண்டை மேளம், ஃபோட்டோ ஷூட் என மாலை, மாப்பிள்ளை அழைப்பில் தொடங்கி, ஒவ்வொரு நிலையிலும் அந்தத் திருமணத்தில் அவள் உணர்ந்த ஆடம்பரம், நேரம் செல்லச் செல்ல அவளைச் சற்று எரிச்சலைடையச் செய்தது.


இது ஒரு காதல் திருமணம் என்பதால்  இவர்கள் வழக்கத்திற்கு மாறாக, பெண் வீட்டினரால் நடத்தப்படும் திருமணம் என்று தெரியும். மாப்பிளையின் பாட்டி செய்துகொண்ட வேண்டுதலுக்காக, நேர்த்திக் கடன் எனத் திருமணத்தைத் திருச்சானூரில் வைத்துக் கொண்டிருகிறார்கள் என்பது வரையிலும் கூடத் தெரியும்! ஆனால் இந்த ஆடம்பரம், அவர்கள் குடும்பத்துக்குச் சற்றும் பொருந்தாதது.


கண்மண் தெரியாமல் பணத்தை வாரி இறைத்திருக்க, இதெல்லாம் எங்கிருந்து வந்த பணம் என்பது புரிந்ததால் வனாவின் மேல் அப்படி ஒரு கோபம் மூண்டது. இதையெல்லாம் எப்படி அனுமதித்தார் என அவளுடைய தாத்தாவின் மீதும் எரிச்சல் உண்டானது. ஆனாலும் எதையும் வெளிக்காண்பிக்க இயலாமல் உள்ளுக்குள்ளே பொருமிக் கொண்டிருந்தாள்.


மேடையில் என்னடாவென்றால் பெண் வீட்டின் சார்பாக வேலுமணியின் பெரியப்பாவும் பெரியம்மாவும் தம்பதி சமேதராக உட்கார்ந்து சடங்குகள் செய்துகொண்டிருக்க, சந்தானம் எதிலும் பட்டும் படாமல் ஒரு ஓரமாக அமர்ந்து பூங்காவனத்துடன் பேசிக்கொண்டிருந்தார். எல்லமே மாப்பிளை வீட்டாரின் நிர்பந்தம் என்பது புரிந்தது.


இதோடில்லாமல், அவர்கள் செய்யும் பந்தாவையும், மிகவும் தழைந்து போய் மகேஸ்வரியும் கேசவனும் அவர்கள் கொட்டுக்கு ஆடிக் கொண்டிருப்பதையும் பார்த்து அவளுக்கு அவ்வளவு அசூயையாக இருந்தது.


இரவு உணவு முடிந்ததும் நேராக அவர்கள் தங்கி இருக்கும் விடுதிக்கு வந்துவிட, பிள்ளைகளைக் கணவன் மற்றும் பூங்காவனத்தம்மாவின் பாதுகாப்பில் விட்டுவிட்டு இவளுக்குத் துணையாக இவளது அறையிலேயே வந்து படுத்துக் கொண்டாள் தேவி.


இருவரும் இயல்பாக ஏதேதோ வளவளத்துக் கொண்டிருக்க, அங்கு சுற்றி அங்கு சுற்றிப் பேச்சு வனமலரின் திருமண ஏற்பாட்டில் வந்து நின்றது.


"ஏன் தேவி, நலங்குக்கெல்லாம் நீதான வனாவுக்கு மேக்கப் போட்ட, ரொம்ப நல்லா இருந்துச்சே! இப்ப ஏன் வேற யாரையோ வெச்சிட்டாங்க" என யதார்த்தமாகக் கேட்டாள் மங்கை.


"நான் என்னவோ நம்ம உள்ளூர்ல, சும்மா சின்ன சின்ன ஃபங்ஷனுக்கெல்லாம் மேக்கப் போட்டுட்டு இருக்கேன். அதெல்லாம் இந்த மாதிரி ஃபோட்டோ ஷூட்டு அது இதுன்னு தீம் வச்சு செய்யற கல்யாணத்துக்கு செட் ஆகாதில்ல? அதனால மேக்கப் போட பெரிய ஏஜென்சில இருந்து  பிரஃபஷனலா ஆளுங்கள இட்னு வந்திருக்காங்க. அதோட இல்ல மங்க, அவங்க போடற ட்ரெஸ்ஸுக்கு மேட்சா பூ மாலைங்க, தலை அலங்காரம் செய்ய நகைங்க, தலைல வெக்கற பூவு மொதுக்கொண்டு எல்லாமே அவங்களே எடுத்தாந்துருவாங்க! அதெல்லாம் நம்மால ஆகாது" என்று பதில் கொடுத்தாள் தேவி.


என்னதான் தன் மனதை மறைத்துக் கொண்டு பேசினாலும், 'தனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லையே' என்பதான ஏக்கம் அவளது குரலில் வெளிப்பட்டுவிட, மங்கைக்கு வருத்தமாகப் போய்விட்டது.


 “என்ன தேவி இதெல்லாம்…எதுக்கும் ஒரு அளவு இல்ல? ரொம்பவே ஓவரா போயிட்டு இருக்காங்க? வெளி நாட்டுல… ப்ராப்பர் கம்யூனிகேஷன் கூட இல்லாத காட்டுக்குள்ள சுத்திட்டு இருந்தா கூட, எவ்வளவு கிலோ மீட்டர் தண்டி வந்தாவது ஃபோன் போட்டு இங்க இருக்கறவங்க நல்லபடியா இருக்கங்களான்னு கேட்டு தெரிஞ்சிக்குவேன். ஆனா இதுங்க எங்கிட்ட எந்த தகவலும் சொல்லவே இல்ல! வனா கல்யாணம், வந்துடு! அவ்ளோதான் தகவல். அதுக்கு மேல என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு எனக்கு ஒன்னியும் தெரியல! இங்க வந்து பார்த்தாக்க, கேப்பாரில்லாம எல்லாமே மொத்தமா முத்திப் போய் கெடக்கு” என தேவியிடம் புலம்பிவிட்டாள்.


மங்கை சொல்வதில் பொதிந்திருக்கும் நியாயம் புரிய அவளுக்கு மிகவும் வருத்தமாகப் போய்விட்டது.


வனா வேலை செய்யும் பெங்களூரு நிறுவனத்தில், சந்தோஷ் அவளது மேலதிகாரி. கண்டதும் காதல் பற்றிக்கொண்டது.


அதை இவள் வீட்டில் வந்து சொன்னபோது, சந்தானம் முதற்கொண்டு ஒவ்வொருவரும் ஆடித்தான் போனார்கள். இதில் ஒருவருக்கும் உடன்பாடில்லை. எல்லோருமாக அவளை வேலையை விட்டுவிடும்படி நிர்பந்திக்க, தாமோதரனின் உதவியை நாடினாள்.


அவள் தன்னை நம்பி வந்து உதவி கேட்டதே அவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க, அவனுக்கு இதொன்றும் பெரிய குற்றமாகத் தோன்றவில்லை. அவரவர் வாழ்க்கையை அவரவர் விருப்பபடி வாழ்வதுதான் சரி என்ற எண்ணத்தில் அவளுக்கு உதவ முன் வந்தான்.


முதலில் இங்கிருபவர்களைப் பேசிப் பேசியே சரிகட்டி, அதன்பின் சந்தோஷின் குடும்பத்தைத் தொடர்புகொண்டு பேசினான்.


சந்தோஷ் ரெட்டி அக்கேம், ஆந்திரா நெல்லூரைச் சேர்ந்த தெலுங்கு பேசும் பெரும்பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவன். ஜாதி என்று பார்க்கும்போது வேறு, இவர்களை விட சில படிகள் மேலே உள்ளவர்கள் என்பதால் அவர்கள் வீட்டிலும் இந்தத் திருமணத்திற்குச் சுலபத்தில் சம்மதிக்கவில்லை.


தாமு யார் என்பதும், இவனுடைய அரசியல் செல்வாக்கும் தெரிந்த பின், அதுவும் சதோஷும் பிடிவாதமாக நிற்க, வேறு வழி இல்லாமல் சம்மதித்தார்கள்.


அதுவும், நூறு பவுன் நகை, கார், வரதட்சணையாகப் பல லட்சம் ரொக்கம் எல்லாம் கொடுப்பதாக முடிவான பிறகுதான் இந்தத் திருமணமே முடிவானது என நடந்தவை அனைத்தையும் அவளிடம் சொன்னாள் தேவி.


 “ஏன் தேவி, எந்த உரிமைல இதுங்க தாமுவாண்ட துட்ட வாங்கி இப்புடி தண்ணியா செலவு செஞ்சிருக்குங்க, எனகென்னவோ என்ன அடமனாம் வெச்சி துட்டு வாங்கின மாதிரி அசிங்கமா இருக்கு” என அருவருத்தாள்.


ஒரு நொடி கூட பொறுக்காமல், "ச்சீ... என்ன பேச்சு பேசற, மங்க? தாமு அண்ண உம்மேல எந்தளவுக்கு உசுரையே வெச்சிருக்குன்னு தெரியுமாடீ ஒனக்கு? இன்னும் பழைய கதைய நெனச்சிட்டு, நீயும் கஷ்டப்பட்டுட்டு அதையும் கஷ்டப் படுத்தாத! நீ ஊருல இல்லாத இந்த ஏழு எட்டு வருசத்துல அது எப்படி ஒரு சந்நியாசி மாதிரி வாழ்ந்துட்டு இருக்குன்னு ஒனக்குத் தெரியாது. என் வூட்டுக்காரு சொல்லி அத பத்தி எனக்கு ஏதோ கொஞ்சம் தெரியும். அதனால சொல்றேன், நீ இப்படி பேசினது கண்டி அதுக்குத் தெரிஞ்சிச்சு, மனசே வெறுத்துப்புடும் தெரிஞ்சிக்க" என்று அவள் மீது பாய்ந்தேவிட்டாள் தேவி.


அதில் அவள் முகம் மேலும் கசங்கவும், சற்றுத் தணிந்தவளாக, "விடு மங்க, எல்லாம் இந்த வனாவோட புடிவாதத்தால வந்துச்சு. உன் சித்திக்கு இன்னாடான்னா இவ்வளவு பெரிய புளியங்கொம்பா புடிச்ச பெரும. அதான்  தானும் ஆடி, கேசவனையும் ஆட்டி வெக்குது” என்றவள், “இந்த பணமெல்லாம் தாமு அண்ணனுக்கு ஒரு மேட்டரே இல்ல! சில்லற செலவு மாதிரி செஞ்சிட்டு இருக்கு, அவ்வளவுதான். மத்தபடி இங்க அதோட தல கண்டி தெரியட்டும், இந்த மொத்தக் கூட்டமும் என்ன பம்மு பம்முதுன்னு அப்பால பாரு” என்று தேவி இதமாகச் சொல்லி முடிக்க, ஒரு நீண்ட பெருமூச்சு எழுந்தது மங்கைக்கு.


"எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியல தேவி! இந்த உலகத்துல நாம செய்ய வேண்டிய முக்கியமான வேல எவ்வளவோ இருக்க, பணம் நேரம் எல்லாத்தையும் விரயம் செஞ்சு, இப்புடி கூட்டத்தக் கூட்டிக் கல்யாணம் செஞ்சாதான் ஒரு ஆண் பெண்ணுக்கு நடுவுல இருக்கற தாம்பத்தியத்த இந்த உலகம் அங்கீகரிக்குமா? இல்ல, இப்படியெல்லாம் செஞ்சாதான் அந்த அங்கீகாரம் கெடைக்கும்னு சொன்னாக்க, அப்படி ஒண்ணு நமக்குத் தேவையா?" என்று கேட்டாள்.


"அடி போடி, சமூக அங்கீகாரமாம் மண்ணாங்கட்டியாம்! எங்கப்பன் போய் சேந்தப்ப செல்வம் எங்க குடும்பத்துக்கு சப்போர்ட்டா அடிகடி வரப்போக இருந்துச்சு இல்ல? அத பாத்துட்டு இந்த ஊரு அசிங்கசிங்கமா என்னலாம் பேசிச்சு தெரியுமா?”


”அப்புடி எவனோ பேசின பேச்ச காதால கேட்டுபுட்டு பொறுக்க முடியாம அவன்கூட சண்ட வலிச்சினு அதே கோவத்தோட எங்கூட்டுக்கு வந்துச்சு. என்ன ஏதுன்னு ஒரு வார்த்த கூட சொல்லாம,  என்கைய புடிச்சி தரதரன்னு இஸ்த்துகினு போயி நம்ம எட்டியம்மன் கோயில்ல நிருத்தி, அங்கேயே அப்பவே பூசாரி ஒரு ஆளு முன்னால வெச்சி வெறும் மஞ்ச கயித்த கட்டிச்சு. அவ்ளோதான், அதோட எங்க கல்யாணம் முடிஞ்சுச்சு!


ஒனக்கு… அது கூட கிடையாது! நான் புள்ள குட்டிப் பெத்துட்டு சந்தோஷமா குடும்பம் நடத்தலயா? இல்ல நீயும் தாமு அண்ணனும் புருஷன் பொண்டாட்டி இல்லன்னு யாராவது சொல்லிடுவாங்களா? இதெல்லாம் இதுங்க கொழுப்பெடுத்து செய்யுதுங்க அவ்வளவுதான்!" என்றாள் காட்டமாக.


உண்மைதான்! இவளுக்கும் தாமுவுக்குமான உறவு, இங்கே எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.  அதைத் தாண்டி எந்தக் கேள்வியும் கேட்கும் துணிவு யாருக்கும் இல்லை என்பதே உண்மை. இதையெல்லாம் நினைக்கும் போதே அவளது மனம் அமைதி கொண்டது.


பேசிக்கொண்டே இருந்த தேவி அப்படியே உறங்கிப் போக, முந்தைய தினம் போல மங்கைக்குதான் உறக்கம் பிடிபடவில்லை. தாமுவின் அருகாமைக்காக மனம் கண்டபடி ஏங்க, அவன் முகங்காண அடுத்த நாள் விடியலுக்காக காத்திருக்கத் தொடங்கினாள்.


***


அடுத்த நாள் அதிகாலை, சரியாக முகூர்த்த நேரத்திற்கு தன் அம்மா அப்பாவுடன் தாமு அங்கே வர, தேவி சொன்னதுபோலதான் எல்லாமே நடந்தது. அவனைப் பார்த்துவிட்டு மாப்பிளை வீட்டினர் ஒவ்வொருவரும் கூழைக்கும்பிடு போட, அதைக் கவனித்தபடியேதான் அவனை நோக்கி வந்தாள் மங்கை.


"வா அத்த, வாங்க மாமா" என அவர்களை வரவேற்று, அவள் தாமுவின் அருகில் வந்து நிற்க, "என்னையெல்லாம் வான்னு கூப்புட மாட்டியா?" என்றபடி அவளைத் தோளுடன் வளைத்துத் தன்னுடன் நெருக்கிக் கொண்டான்.


அவனுடைய திமிர் பிடித்த செயல் அவளுக்குச் சங்கடத்தைக் கொடுத்தாலும், அவனை விட்டு உதறி விலக மனம் வராமல் முகம் சிவந்து நின்றாள்.


வேறுபக்கம் பார்வையைத் திருப்பி, ஜனா இங்கிதமாக அங்கிருந்து அகன்றுவிட, அதிர்ச்சியில் 'ஆ' என வாயைப் பிளந்தபடி, மனம் நிறைந்த பூரிப்புடன் நெட்டி முறித்து இருவருக்கும் திருஷ்டி கழித்தாள் புஷ்பா.


அதில் தானாகவே அவன் அவளை விட்டு விலக, "இல்லல்ல, நீ உம்பொண்டாட்டி தோள்ல கைப் போட்டுக்க, நான் போயி மகேச பார்த்துட்டு வரேன்" அங்கிருந்து மகேஸ்வரியைத் தேடிச் சென்றாள்.


தாமு அங்கே வந்த பிறகு எல்லோர் பார்வையும் அவன் மீதே இருக்க, அதற்கு மேல் அவனை நெருங்க சங்கடமாக இருந்ததால், "தாத்தா உன்னைத்தான் கேட்டுட்டே இருந்துது, வா தாமு, அதாண்ட போய் உக்காரலாம்" என்றபடி நடக்கத் தொடங்க, அவளுடன் இணைத்து நடந்தபடி, அவளுடைய தாத்தாவுக்கு அருகில் போய் அமர்ந்தான்.


அவர் ஏதோ கேட்க, இவன் ஏதோ பதில் சொல்ல, நேரம் செல்லவும், முகூர்த்தநேரம் நெருங்க, தாத்தாவை மேடைக்கு அழைத்துப்போனான் கேசவன்.


அவர் விடாப்பிடியாக தாமுவையும் மங்கையையும் இழுத்துப் போய் மேடையில் நிறுத்த, நல்லபடியாக திருமணம் நடந்து முடிந்தது.


சந்தோஷ் வனாவின் கழுத்தில் தாலி கட்டிய அடுத்த நொடி, நேராகப் போய் சாப்பிட்டுவிட்டு, உடனே கிளம்பிவிட்டான் தாமோதரன்.


அவர்கள் மூவருக்கும் தாம்பூலப்பையைக் கொடுத்து, வழியனுப்ப வாயில் வரை வந்த மங்கையிடம், "முகூர்த்தம் முடிஞ்சதும் சாமி கும்புடனும் பேர்வழியேன்னு சொல்லி அவங்க கோயில் கோயிலா ஏறி எறங்கிட்டு இருப்பாங்க! நீ அவங்க கூடவே சேர்ந்து சுத்த வேண்டிய அவசியம் இல்ல புரிஞ்சுதா”


”நீ போவணும்னு சொன்னா, நான் உன் சேஃப்டிய பாக்கணும், அதனால நம்ம செக்யூரிட்டி ஆளுங்க கூட்டத்தையே உன் பின்னால அனுப்ப வேண்டியதா போகும். அதெல்லாம் மத்தவங்களுக்குத் தேவையில்லாத தொல்லதான், ஓகேவா!” 


”பேசாம ரூம்ல போய் ரெஸ்ட் எடு! இராத்திரி பதினொன்னோ பன்னண்டோ எந்நேரம் ஆனாலும் சரி, நாளைக்கு ரிசப்ஷன் முடிஞ்ச கையோட கெளம்பி நம்மூருக்கு வந்தாகணும், எந்த சாக்குப் போக்கும் சொல்லக் கூடாது, நான் உனக்காகக் காத்துட்டு இருப்பேன், நெனப்புல வெச்சுக்க" என்றான் திட்டவட்டமாக.


அவனது அதிகாரத்தில் சட்டென ஆத்திரம் மூள, "நீ இழுக்கற இழுப்புக்கெல்லாம் வரேன்னு சொல்லி, உன் புத்திய காமிக்கற பாத்தியா, ஏன் தாமு, உனக்கே இதெல்லாம் ஓவரா தெரியல" எனக் கடுகடுத்தாள்.


அவளது பாவனையில் கோபம் வருவதற்கு பதிலாக மோகம் உண்டாகிப்போக, வேண்டுமென்றே அவளைத் தன்னிடம் இழுத்தவன், "ஓவராலாம் தெரியலடி, நான் இழுக்கிற இழுக்குபுக்கு வர ஒனக்கு இஷ்டம் இல்லன்னா சொல்லு, உன் இழுப்புக்கு நான் வந்துட்டுப் போறேன். இதுல என்ன இருக்கு! இப்ப கூட ஒரு வார்த்த சொல்லு, நான் இங்கயே உங்க கூடவே இருந்துடவா?" என அவளது காதருகில் கிசுகிசுத்தான்.


"ஐயோ, வம்பா... வேதனையா... ஆள வுடு தெய்வமே... நீ கெளம்பு... நீ சொன்னபடியே நான் நாளைக்கு வரேன்" என அவள் பதற,


"அப்படியே பயப்படற மாதிரியே நடிக்கற பாரு, உன் ஆக்டிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மங்க, லவ் யூடீ" என்றபடி முகம் மலர தன் வாகனத்தை நோக்கிப் போனான் தாமு.


இப்படி முகம் மலர அங்கிருந்து சென்றவன்தான், அடுத்த நாள் அவள் அவனை மீண்டும் சந்தித்தபோது, "என்கிட்டயிருந்தே உன்னோட ஒரிஜினல் ஐடென்டிடிய மறச்சிட்டு, சாமானியப்பட்டவ மாதிரி நடமாடிட்டு இருக்கல்ல? உண்மைய சொல்லு, இப்ப நீ என்ன செஞ்சுட்டு இருக்க?" எனக் கேட்டு நின்றான், அக்கினிப் பிழம்பாக மாறி அவளைச் சுட்டெரிக்கத் தயாராக!


***


முகூர்த்தம் அதைத் தொடர்ந்து சடங்குகள் எல்லாம் முடிந்த கையுடன் மணமக்களை அழைத்துக் போய் திருச்சானூரில் தாயாரையும் திருப்பதியில் பெருமாளையும் தரிசனம் செய்துவிட்டு வந்தனர். இவர்கள் வீட்டு சார்பாக மகேஸ்வரியம் கேசவனும் தாத்தாவும் உடன் செல்ல, இவளையும் வரச்சொல்லி அழைத்தனர்.


தாமு எச்சரித்து சொல்லிவிட்டுப் போயிருக்க, இவள் கூட செல்வதால் அவர்களுக்கு ஏதேனும் ஆபத்து வரலாம் என்கிற எண்ணமும் அவள் மனதைச் சூழ உடல்நிலை சரியில்லை என்று சொல்லி, நாசுக்காக மறுத்து விட்டாள். அதற்கு மேல் யாரும் அவளை வற்புறுத்தவும் இல்லை. எல்லாம் முடிந்து அவர்கள் திரும்பி வரவே இரவாகிவிட்டது.


அன்றைய நாள் முழுவதும் தேவியின் பிள்ளைகளுடன் மங்கைக்கு இனிமையாகவே கழிந்தது.


எல்லோரும் திரும்பி வந்த பிறகு தகவல் சொல்லச் சொல்லி கேசவனிடம் சொல்லி வைத்திருந்தாள். அதேபோல அவர்கள் வந்தவுடன் அவன் தகவல் கொடுக்க, கிளம்பிச் சென்று எல்லோரையும் பார்த்துவிட்டு மறுபடியும் விடுதிக்கே திரும்பி வந்துவிட்டாள்.


இரவு உணவைச் சாப்பிட்டு முடித்து அறைக்குத் திரும்பிய பிறகுதான் அவளை தாமு ஒரு முறை கூட அழைத்துப் பேசவில்லை என்பதே அவளுக்கு உரைத்தது. எதுவாக இருந்தாலும் நேரில் பேசுவதுடன் சரி, அவளைத் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொள்ள அவன் முயற்சி செய்யவே இல்லை என்பது விளங்க தன் வார்த்தைக்கு அவன் எவ்வளவு மதிப்புக் கொடுக்கிறான் என்பது புரிந்து நெகிழ்ந்தே போனாள்.


அந்தக் கணமே அவனிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் தோன்ற, "ஏன் தேவி, தாமு நம்பர் உன் ஃபோன்ல சேவ் பண்ணி வச்சிருக்க?" என்று கேட்க,


"ஐய, இது என்னாடி இது…? உன் வூட்டுக்காரு நம்பர கூட பதிஞ்சு வெச்சுக்காம என்கிட்ட கேக்கற" என முகம் சுளித்தாள்.


"ஏய் அதில்லடி, ஆப்பிரிக்கால யூஸ் பண்ண நம்பர்தான் இருக்கு, இங்க வந்து இன்னும் புது நம்பர் போடல" என மழுப்பியவள், "இந்தக் கேள்வி எல்லாம் கேக்காம ஒழுங்கா அதோட நம்பர் இருந்தா எனக்குப் போட்டுக் குடு, எனக்குப் பேசியே ஆகணும்" என்றாள் அதிகாரமாக.


"இதெல்லாம் எனக்குத் தேவதான், உன் ஃபிரண்டா இருக்கறதுக்கு, நீ இதுவும் சொல்லுவ இதுக்கு மேலயும் சொல்லுவடி" என நொடித்தாலும் தன் கைப்பேசியில் அவனது எண்ணை அழுத்தி அவளிடம் கொடுத்துவிட்டு, அவளுக்குத் தனிமை கொடுத்து தன் அறைக்குத் திரும்பச் சென்று விட்டாள்.


"சொல்லு மங்க" என்றுதான் அந்த அழைப்பை ஏற்றான் தாமோதரன்.


மனமொத்த புரிதலினால் சில நேரங்களில் சில கேள்விகளுக்கு அவசியமே இல்லாமல் போகும்! அது போன்ற ஒரு தருணம்தான் மங்கைக்கு. என்னதான் தேவியின் கைப்பேசியில் இருந்து அழைத்திருந்தாலும், இவளுக்காகத்தான் அந்த அழைப்பு என்பது புரிந்து அவன் கொடுத்த பதில் பேருவகையளிக்க, "லவ் யூ, தாமு" எனத் தழுதழுத்தாள்.


"இத சொல்லத்தான் எனக்கு கால் பண்ணியா மங்க" எனக் கேட்டு சிரித்தான் தாமோதரன்.


"இது மட்டும் இல்ல, தாமு. உங்கூட இன்னும் நிறைய பேசணும் போல இருக்கு. ஆனா அதுக்கான சந்தர்ப்பம் இது இல்ல" எனப் பதில் கொடுத்தாள்.


"எங்க என் பேச்சைக் கேக்க மாட்டியோன்னு நெனச்சேன். பரவால்ல, நான் சொன்னதுக்காக ஹோட்டல் ரூம்லயே அடஞ்சு கிடக்கிற இல்ல? முக்கியமான வேலைல சிக்கிக்கிட்டேன். இல்லனா நானும் உன் கூடவே இருந்திருப்பேன். டைம் நல்லா யூஸ்ஃபுல்லா போயிருக்கும்" என்றான் விஷமமாக.


"உண்மைதான் தாமு, நமக்கான நேரம் ரொம்ப கம்மியாதான் இருக்கு" என்றாள் ஒரு மரத்தத் தொனியில்.


ஏன் மறுபடியும் ரிசர்ச் பண்ண போறேன்னு சொல்லி ஏதாவது காடு காடா சுத்தப் போறியா?" என்று அடுத்த நொடியே அவனது குரல் உயர்ந்தது.


கோபப்படவோ உணர்ச்சிவசப்படவோ இல்லை நிலமங்கை, ஆனாலும் அவனுடைய இந்தத் தீவிரம் மனதைப் பாதிக்கவே செய்தது.


"ஏன், அப்படி நான் போகணும்னு சொன்னா என்ன செய்வ? என்ன பத்தி உனக்கு நல்லாவே தெரியும்தான? என்ன ஒரு இடத்துல கட்டி வைக்க ட்ரை பண்ணாத, அது நம்ம ரெண்டு பேருக்குமே நல்லதில்ல, தாமு" என்று பதில் கொடுத்தாள் இலகுவாகவே.


அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேசாமல் அழைப்பைப் பட்டென்று துண்டித்துவிட்டான். அதிலேயே அவனது கோபத்தின் அளவு புரிந்தது.


எந்த விதத்திலும் அவனைச் சீண்டுவது போல் பேசக்கூடாது என்று நினைத்தாலும் கூடத் தன்னையும் மீறி வந்து விட்ட வார்த்தைகளை அவளால் தடுத்து நிறுத்த இயலவில்லை. ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் அன்பையும் காதலையும் காரணம் காட்டி மற்றவரைக் கட்டுப்படுத்தக் கூடாது, பணிந்து போகவும் கூடாது என்கிற எண்ணம் வலுப்பெற, மீண்டும் அழைத்து அவனை சமாதானப்படுத்தவும் அவளுக்கு மனம் வரவில்லை. அதன் பிறகு அவனும் அவளை அழைக்கவில்லை. மனம் முழுவதும் ஏதோ ஒரு வெறுமை சூழ அன்றைய நாள் முடிந்தது.


***


அடுத்த நாள் நிதானமாக விழித்தெழுந்து குளித்துத் தயாராகித் திருமண மண்டபத்திற்கு வந்தனர். மறுவிருந்து, விட்ட குறை தொட்ட குறைக்கு ஃபோட்டோ சூட் என அன்றைய பகல் பொழுது ஒரு விதமாக நகர, மாலையில் வரவேற்பிற்காக எல்லோருமாக தடபுடலாகத் தயாராகத் தொடங்கினர்.


அதோ இதோ என அலங்காரம் எல்லாம் முடிந்து வனா மேடைக்கு வருவதற்கே எட்டு மணி ஆகிவிட்டது. ஒரு பக்கம்… காஃபி, டீ, கூல்ட்ரிங்ஸ், பஞ்சுமிட்டாய், மெஹந்தி, என அமர்க்களப் பட்டுக்கொண்டிருக்க, மறுப்பக்கம் டிஜே இசை காதைக் கிழித்தது. இது முடியும் வரை இங்கேயே இருந்தால் தலைவலி வருவது நிச்சயம் என்பதை உணர்ந்தவள், பேசாமல் நேரத்தோடு சாப்பிட்டுவிட்டு ஊருக்குக் கிளம்பி விடலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டாள். முந்தைய இரவுக்குப் பிறகு தாமு அவளிடம் பேசவே இல்லை என்பது வேறு உள்ளுக்குள்ளே குடைந்து கொண்டே இருந்தது.


ஏற்கனவே ஹோட்டல் அறையைக் காலி செய்து, பயணப் பொதிகளை காரில் ஏற்றியாகிவிட்டது. எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்ப வேண்டும் அவ்வளவுதான்.


இப்படியாக அவள் முடிவு செய்து வைத்திருக்க, அவசரமாக அங்கே வந்த செல்வம், “தேவி, ஒடனே கிளம்பி வரச் சொல்லி தாமுண்ண ஃபோன் செஞ்சுடுச்சு. புள்ளைங்கள ரெடி பண்ணு" என்று மனைவியிடம் சொல்லிவிட்டு, "நீயும் யார் யாராண்ட சொல்லணுமோ சொல்லிக்கினு சீக்கிரம் கிளம்பி வாம்மா" என்றான் மங்கையிடம்.


அவனைப் பார்க்கும்போதே அதீத பரபரப்புடன் இருக்கிறான் என்பது புரிய, தாத்தாவிடமும் கேசவனிடமும் சொல்லிக்கொண்டு, மேடை ஏறிச் சென்று வனாவிடமும் சந்தோஷிடமும் சொல்லிவிட்டு வனாவின் மாமனார் மாமியாரிடமும் விடைபெற்றுக் கிளம்பி வந்தாள்.


எல்லோருமாக மண்டபத்தை விட்டு வெளியில் வந்து தயாராக நின்ற வாகனத்தில் ஏறவும், அடுத்த நொடி பரபரவென அவர்களைச் சூழ்ந்து கொண்ட கான்வாயைப் பார்த்து அதிர்ந்தே போனாள்.


தாமு தன்னுடைய மொத்த பாதுகாப்பு படையையும் அங்கே குவித்திருக்க, "ஐயோ… செல்வண்ணே, என்ன இதெல்லாம்?" என்று பதறிப் போய் கேட்டாள்.


"எங்கிட்டயும் எந்தத் தகவலும் சொல்லலம்மா. ஆனா பிரச்சன ஏதோ பெருசுன்னு புரியுது. தாமுண்ண ஃபோன்ல பேசும் போது அதோட குரலே கிலிய கிளப்பிச்சு. அதுக்கு மேல அது கிட்ட எந்தக் கேள்வியும் கேக்க பயமா இருந்துச்சு. அதான் நான் எதுவும் கேட்டுக்கல. கெளம்புனு சொன்னதும் டக்குனு கிளம்ப சொல்லிட்டேன்" என்றான் தகவலாக.


அவர்கள் ஊருக்கு வெளியிலேயே இருக்கும் விருந்தினர் மாளிகையின் வாயிலில் அவர்களது வாகனம் நிற்க அங்கேயே தன் இரு சக்கர வாகனத்தில் அவளுக்காகக் காத்திருந்தான் தாமோதரன்.


அவனது முகம் இறுகிக் கடினப்பட்டுப் போயிருக்க ஒரு வார்த்தை பேசக்கூட அவளுக்கு அச்சமாக இருந்தது. பிள்ளைகளைக் கொஞ்சி முத்தமிட்டு, தேவியிடமும் கிழவியிடமும் சொல்லிக்கொண்டு, அமைதியாக போய் அவனுக்குப் பின்னால் அமர்ந்தாள். வீடு வந்து சேரும் வரையில் கூட அவன் ஒரு வார்த்தை பேசவில்லை. அவனது அந்த அமைதி ஒரு பெரும் புயலுக்கான அறிகுறியாகத் தோன்றியது நிலமங்கைக்கு.


இந்த இடைப்பட்ட நேரத்திற்குள் ஏதோ நடந்திருக்கிறது என்பது புரிய, தன்னைப் பற்றி ஏதோ ஒரு தகவல் அவனுக்குக் கிடைத்துவிட்டதோ என்கிற பயம் மனதில் தோன்றி அலைக்கழித்தது.


பல வருடங்களுக்கு முன் நடந்த அசம்பாவிதங்கள் எல்லாம் நினைவில் வர, மீண்டும் தாமோதரனின் அகங்காரம் தலைத் தூக்கினால் அவனை எப்படி கையாளுவது என்பது புரியாமல் தவித்துப் போனாள்.


0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page