15. சமரசம்
நிதரிசனத்தில்...
இவ்வளவு மோசமான ஒரு விபத்து நடந்த அந்தச் செய்தி பற்றி மங்கை, தாமு இருவரின் குடும்பத்தினருக்குமே தற்சமயம் ஏதும் தெரிய வேண்டாம் என்று முடிவு செய்தவர்கள், திரும்ப வந்த சுவடே தெரியாமல் நேராக மாடிக்குக் சென்று விட்டனர்.
கதவைத் திறந்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தவன் முதல் காரியமாக தன் கைகளில் ஒட்டப்பட்டிருந்த பிளாஸ்டர்களை ஒவ்வொன்றாக பிய்த்து எடுத்தான்.
அதைப் பார்த்துவிட்டு, "ஐயோ நீ இன்னா பண்ற தாமு, இத போய் இப்படி வெடுக்கு வெடுக்குன்னு பிக்கற. நோவெடுக்கப் போவுது" என்று மங்கை பதற,
"இதோட போயி உன் அத்தைக்கு முன்னால நின்னன்ணு வை, அழுது ஊர கூட்டிப்புடும். வேர்த்து ஒழுவற வேர்வைல இதெல்லாம் ஏற்கனவே பாதி பிச்சுகுனு தொங்குது, அதனால தொட்ட உடனே கையோட வந்துருச்சு பாரு. நோவலாம் செய்யல நீ கவலப்படாத" என்று சொல்லிக்கொண்டே தான் அணிந்திருந்த டி ஷர்ட்டைக் கழற்றி சோஃபாவில் எறிந்தான்.
ஆணோ பெண்ணோ விருந்தாளி போல வந்து போவோர்கள் எதிரில் வேண்டுமானால் நாகரிக சாயத்தைப் பூசிக்கொள்ளத் தோன்றுமே தவிர, பிறந்தது முதலில் இதே வீட்டிலேயே வளர்ந்து இவர்கள் வாழ்க்கையில் அங்கமாகிப்போன மங்கையிடம் என்றுமே அவன் நாசூக்காக நடந்து கொண்டதில்லை.
மேல் சட்டை அணியாமல் இடுப்பில் ஒரு லுங்கியையோ வேட்டியையோ சுற்றிக்கொண்டு அவன் வீட்டில் வளைய வரும் சமயங்களில் எவ்வளவோ நாள் மங்கை அங்கேயேதான் இருந்திருக்கிறாள். கிராமத்து விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு இதெல்லாம் சங்கடமான விஷயம் ஒன்றும் கிடையாது.
ஆனாலும்…
நாள் தவறாமல் செய்யும் உடற்பயிற்சியுடன் சேர்ந்து உழைப்பின் உரம் ஏறிய அவனது திரண்ட தோள்களும், திண்ணிய மார்பும், வற்றிய வயிறும், களையான முகத்தை இன்னும் கவர்ச்சியாகக் காட்டும் அவனது அடர்ந்த மீசையும் என ஒவ்வொன்றும் அவனது ஆண்மையின் கம்பீரத்தை அவனுடைய மங்கையின் கருத்துக்கு விருந்தாக்க, சில நொடிகள் அவனிடமிருந்து தன் பார்வையைத் திருப்ப முடியாமல் திண்டாடிப் போனவள் கண்கள் கூசியது போல இமைகளைத் தழைத்துக் கொண்டாள்.
அவள் தன்னையே பார்ப்பதை கவனித்து விட்டு 'என்ன?' என்பது போல் அவன் புருவத்தை உயர்த்த, நொடி நேரத்தில் நடந்துபோன இந்தச் சம்பவத்தில் அவளுடைய முகம் சூடாகி சிவந்து போனது.
அவன் இருந்த மனநிலையில் முதலில் இதைக் கவனிக்காமல் போனாலும் அவளிடம் ஏற்பட்ட மாறுதலை உணர்ந்த பிறகு சிறகில்லாமல் வானத்தில் பறந்தான் தாமோதரன்.
அவனுடைய விரிந்த புன்னகை அவன் உணர்ந்த செய்தியை அவளுக்கு உணர்த்த, அதற்கு மேல் அந்த இடத்தில் நிற்கக் கூட முடியாதவளாக வேகமாக அறைக்குள் போனவள், குளியல் அறைக்குள் புகுந்து கதவைத் தாளிட்டுக் கொண்டாள்.
எதிர்பாராத நேரத்தில் திடீரென்று உண்டான அந்த மாயவலை சொற்ப நேரத்துக்குள் அறுபட்டுப் போனதில் பாவம் தாமோதரனுக்குதான் சற்று ஏமாற்றமாகவும், ‘இந்த ஆயுள் முடியும் வரை இவள் தன்னை நெருங்கவே மாட்டாளா?’ என அதிக ஆயாசமகவும் இருக்க, ஒரு நீண்ட பெருமூச்சு எழுந்தது.
கதவைத் தள்ளிக்கொண்டு தங்கள் அறைக்குள் நுழைந்தவன் சலிப்புடன் அப்படியே கட்டிலில் சரிந்தான். அவனது ஒவ்வொரு அணுவும் நிலமகையின் ஆலிங்கனத்துக்காக ஏங்கித் தவித்தது.
அவள் முகம் கழுவி வெளியில் வரவும், அதற்குள் தன்னை மீட்டுக் கொண்டவன் எழுந்துபோய் வார்ட்ரோபைத் திறந்து ஒரு முழுக்கைச் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு பட்டனைப் போட்டபடி, "பெயின் கில்லர் இன்ஜெக்ஷன் போட்டுருக்காங்க, டிரவுசியா இருக்கும். அதனால அலட்டிக்காம, கம்முனு படுத்துட்டு இரு. நான் கீழ போயிட்டு தோ வந்துடறேன்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.
சில நிமிடங்களில் இருவருக்குமான உணவு தட்டுகளுடன் அங்கே வந்தவன் வரவேற்பறையில் இருந்தே "மங்க" எனக் குரல் கொடுக்க, அவள் அங்கே வரவும், கொண்டு வந்த தட்டை உணவு மேசை மேல் வைத்து விட்டு, "கீழப் போனா, புள்ளன்ற நெனப்பு கூட இல்லாம எங்கம்மா என்ன வுட்டுடுச்சு, மங்க… மங்கன்னு ஒன்ன பத்தி தான் கேட்டுட்டே இருக்கு. அலுப்பா இருக்குன்னு ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கன்னு சொல்லி வெச்சிருக்கேன். ஏதோ கைவேலையா இருக்கு. இல்லனா என் பின்னாலயே இங்க வந்தருக்கும்" என்றபடி உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினான்.
"ஐயோ, நீயானா முழுக்கை சட்ட போட்டு உன் காயத்தை எல்லாம் மறைச்சுட்ட, எனக்கு பாரு நெத்தி பொடைச்சுட்டு கிடக்கு. இத வந்து பார்த்தா உங்கம்மா என்ன ஆயிரம் கேள்வி கேக்கும். நான் என்ன சொல்லி சமாளிக்க?" என்று அங்கலாத்தாள்.
"உன் புள்ள கூட முட்டிக்கறத விட கருங்கல்லு செவுத்துல முட்டிக்கலாம்னு போய் முட்டிக்கிட்டேன், அதுதான் மண்ட வீங்கி கிடக்குதுன்னு சொல்லு, அதுக்கு முன்னால சோத்த துன்னு" என்று அவன் கிண்டலாகச் சொல்ல, "ஆமா நீயே நல்லா கருங்கல்லு செவுரு மாதிரிதான் கிடக்கிற, இதுல நான் போய் தனியா வேற கருங்கல்ல தேடி முட்டிக்கனுமா" என்று அவசரமாக வார்த்தையை விட்டாள்.
"அப்ப என் மேலேயே முட்டிக்கினேன்னு சொல்ல போறியா மங்க?" என்று கேட்டு விஷமமாக அவன் பார்த்த பார்வையில், 'ஐயோ என்ன சொல்லி தொலச்சிருக்கோம்' என அசடு வழிந்தவள், "ஆயிரம் சொன்னாலும் தாமு, மீன் கொழம்பு வெக்கறதுல புஷ்பாத்தைய அடிச்சுக்க ஆளே கிடையாது" என்று சாதுர்யமாகப் பேச்சை மாற்ற, அதற்கெல்லாம் அசராமல் தன் பார்வையை மாற்றாமல் அவளையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தான்.
அதற்குள் தடதடவென்று கேட்ட சத்தத்தில் கலைந்தவன், "நான் சொல்லல, தோ வந்துடுச்சு பாரு உங்கத்த" என்று புன்னகையுடனே சொல்ல, அவளைப் பார்த்துவிட்டு, "அய்யய்யோ என்னாச்சு மங்க" எனப் பதறினார் அங்கே வந்த புஷ்பா.
"ஐயோ… அத்த பதறாத… காலைல தூக்க கலக்கத்துல பாத்ரூம் கதவ தொறக்கும்போது இடிச்சிகினேன், வேற ஒண்ணியும் இல்ல. வெளிய போயிட்டு வர சொல்ல தாமுதான் டாக்டர் கிட்ட இட்னு போச்சு" என்று அவருக்குப் பதில் கொடுத்தாள்.
அதிலெல்லாம் திருப்தி ஏற்படாமல் அருகில் வந்து அவளது காயத்தை மென்மையாகத் தொட்டுப் பார்த்தபடி "ஐயோ நல்லா இரத்தம் கட்டிக்கினு கன்னிப்போய் பொடைச்சிட்டுருக்கு மங்க… பாத்து போவ கூடாது" என்று கரிசனமாக அவர் சொன்னதில் அவளுடைய கண்களே கலங்கிப் போனது.
"யம்மா… ஊர்ல இருக்கிற மாமியாரெல்லாம் குத்தல் பேச்சு பேசி மருமவளுங்கள அழவுட்டா, நீ இன்னாடான்னா பாசத்த பொழிஞ்சே உன் மருமவள கண்கலங்க வெக்கிற… நீ வேஸ்ட்டு போ" என்று அவரை வாற, "இன்னிக்குப் பொழுதுக்கு ஒனக்கு வேற பொழப்பே இல்லையா? தேவல்லாம என் வாய புடுங்கிகினு கெடக்கற" என்று நொடித்தவள் மங்கையின் அருகில் வந்து உட்கார்ந்தாள்.
"அத்த நீ சோறு துன்னியா?" என்று மங்கை கேட்க, "காலைல இட்லி ஊத்தி, சாம்பார் வெச்சிருந்தேன். உஞ்சித்தியும் தாத்தாவும் வந்துருந்தாங்களா, பேசிக்கினு இருந்ததுல, அதத் துண்ணவே பத்து மணி ஆயிடுச்சு. காலைலயும் இல்லாம மதியத்துலயும் இல்லாம இப்படி வந்து ரெண்டுங்கெட்டான் நேரத்துல சோத்த துண்ணுட்டு என்ன கேள்வி கேக்கறியா?" என்று அவளைக் கடிந்து கொண்டாள்.
"இப்பதான் ஒசத்தியா சொன்னேன்… அதுக்குள்ள மாமியார் மாதிரி பேச ஆரமிச்சுட்ட பாரு" என்று இடை புகுந்து, "யம்மா, வெளிய தெருவுல போனா முன்ன பின்ன ஆவத்தான் செய்யும். இதுக்கெல்லாம் குத்தங்கண்டு பிடிக்காத" என்றான் காட்டமாக.
வழக்கமாக அவனிடம் கேட்கும் கேள்வியை இன்று ஆள்மாற்றி அவர் மங்கையிடம் கேட்டிருக்க, அவன் இப்படி பேசியதெல்லாம் இவர்களுக்குள் இயல்பாக நடக்கும் பேச்சு வார்த்தைதான் என்பது புரியாமல் மங்கை அவனைப் பார்த்து முறைத்து வைக்க, முன்னம் அவள் பேசியதை நினைவுப்படுத்தி உதடு சுழித்துச் சிரித்தான்.
அதில் நாணி அவள் தன் பார்வையைத் தழைத்துக் கொள்ள, இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த புஷ்பாவுக்கு மனம் குளிர்ந்தே போனது.
"இன்னைக்கு சாயங்காலம் நம்ம வனாவுக்கு நலங்கு வெக்க போறாங்கல்ல, சந்தானம் அத்தானும், மகேசும் நேர்ல வந்து அழைச்சிட்டுப் போனாங்க. நானும் ஆயாவும் போவலாம்னு இருக்கோம். உன் வசதி எப்படி" என்று கேட்டாள்.
"நான் இன்னாத்துக்கு அங்கல்லாம். நீ போவும் போது மங்கைய இட்னு போம்மா" என்று அவன் சொல்லிவிட, "இல்லல்ல, அத்தையும் ஆயாவும் சாயங்காலம், நேரத்துக்கு வந்தா போதும். நான் அப்போன்னச்சே போய் நின்னா நல்லா இருக்காது. பாவம் வனாவும் மனசு கஷ்டப்படும். அதனால கொஞ்சம் முன்னாலயே போகலாம்னு இருக்கேன்" என்றாள் மங்கை.
"அதோட இல்ல தாமு, தாய் மாமன் மொற செய்ய நீ வந்தாத்தான் நல்லா இருக்கும். அதுவும் இப்ப அவங்கூட்டு மூத்த மாப்பள நீ" என்று புஷ்பா வேறு இடைவிடாமல் தான் நினைத்ததைச் சொல்லி முடித்தாள்.
மங்கை அங்கே செல்கிறேன் என்று சொன்னதில் அவனுக்குக் கொஞ்சம் கூட உடன்பாடில்லை. ‘போகதே’ என அவளிடம் சொன்னால் நிச்சயமாக காது கொடுத்துக் கேட்க மாட்டாள் என்கிற எரிச்சல் மண்டியது.
அதற்குள் புஷ்பா வேறு இப்படி பேசவும் காண்டாகிப் போனவன், "யம்மா, அவங்களுக்கு நான் ஒண்ணு செய்றேன்னு சொன்னா அது அவங்க வூட்டு மாப்பிள்ளையாவோ, என் ஒண்ணு விட்ட பெரியப்பனுக்காவோ மாமனுக்காவோ அக்காவுக்காவோ இல்ல.”
”எம்மங்க எடத்துல இருந்து, அவ என்ன செய்ய நெனைப்பாளோ அத நான் செஞ்சிட்டு இருக்கேன் அவளதான். மத்தபடி மங்கைக்கும் எனக்கும் இருக்கற ஒறவு வேற. அந்தக் குடும்பத்துக்கும் எனக்கும் இருக்கிற ஒறவே வேற. அதனால என்ன தேவையில்லாம எல்லாத்துலயும் இழுத்து வுடாத" என்று காட்டமாகச் சொல்ல, முகமே கூம்பிப் போய்விட்டது புஷ்பாவுக்கு.
சங்கடத்துடன் அவள் மங்கையை ஏறிட, முந்தைய தின நிகழ்வுடன் சம்பந்தப்படுத்தி, அவன் சொல்ல வருவதை நன்றாக புரிந்துகொண்டதால் அவன் பேசிய எதையுமே எதிர்மறையாக அவள் எடுத்துக் கொள்ளவில்லை. அவளுடைய முகம் இயல்பாக இருக்கவே சற்று ஆசுவாசமடைந்தாள்.
தான் முன்னமே அங்கே செல்கிறேன் என்று சொன்னது அவனுக்குப் பிடிக்கவில்லை என்பதையும் உணர்ந்தாலும் தன் முடிவை மங்கையும் மாற்றிக் கொள்ளவில்லை.
அதற்கு மேல் தேவையில்லாமல் அவனிடம் ஏதாவது வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ள பயந்து புஷ்பா அங்கிருந்து அகன்றுவிட, அதற்குள் இருவருமே சாப்பிட்டு முடித்திருந்தனர்.
அதன் பிறகு அவன் தன் மடிக்கணினியை விரித்து வைத்துக்கொண்டு வரவேற்பறையிலேயே அமர்ந்துவிட்டான்.
அவன் சொன்னது போல வலி நிவாரணிகள் செய்த வேலையில் அவளுக்குக் கண்ணைச் சுழற்றிக் கொண்டு வர, ஒரு சிறு தூக்கம் போட்டு விட்டுப் பிறகு அங்கே செல்லலாம் என்ற எண்ணத்தில் அங்கிருந்த சோஃபாவிலேயே சுருண்டு விட்டாள்.
***
அவளைச் சுற்றி மெல்லியதாகப் பரவத்தொடங்கிய மலர்களின் மணத்தில் புதையுண்டு போனாள்!
ஏதோ ஒரு அடர்ந்த வனத்திற்குள் திட்டான புல்தரையில், தூரத்து வானத்தில் படரவிட்டிருக்கும் சீரியல் செட்டை போல குட்டிக் குட்டியாக ஜொலித்த நட்சத்திரங்களின் ஒளியில் தன்னை மறந்து அமர்ந்திருந்தாள்.
பஞ்சுப்பொதி போன்றிருந்த அழகான பெண் குழந்தை ஒன்று தூரத்தில் தெரிய 'வா… வா…' என்று கையசைத்து வாஞ்சையுடன் அழைத்தாள்.
மதி மயக்கும் குறுஞ்சிரிப்புடன் ஆ… ஊ… என்று ஆர்ப்பரித்தபடி அவளை நோக்கி தவழ்ந்து வந்த அந்தக் குழந்தை உரிமையுடன் அவள் மடி மீதேறி வசதியாக படுத்துக்கொள்ள, குனிந்து அப்படியே அதைத் தழுவிக் கொண்டவள் அதன் குண்டு குண்டு கன்னத்தில் ஆசையாக இதழ் பதித்தாள்.
நினைவுகள் முன்னும் பின்னும் உழன்றபடி மனதிற்குள் ஏதோ குழப்பம் பரவ, அவளாக இருந்த உருவம் அவளுடைய அம்மா இராஜேஸ்வரியாக மாறிப் போயிருக்க, தன்னையே அந்தக் குழந்தையாக உணர்ந்தவள், மடியில் இருந்து தாவி ஏறி தன் தாயின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.
ஆதுரமாக அணைத்த அவளது தாயின் கரம் அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டு மென்மையாகத் தட்டிக் கொடுக்க, மற்றொரு கரமோ அவளது கூந்தலை வருடியது. அன்னையின் ஸ்பரிசம் தந்த கிறக்கத்தில் கண்கள் சொருகி உறக்கம் அவளை மொத்தமாக ஆட்கொண்டது.
நொடிகள் நிமிடங்களாகி நிமிடங்கள் மணிக்கணக்கில்லாமல் நீண்டு கொண்டே போனது.
"அக்கா, இன்னிக்கு எனக்கு மேக்கப் செய்ய தேவி வரேன்னு சொல்லிருக்குது. நீயும் என் கூடவே இருக்கா" என்ற வனாவில் குரல் அழுத்தமாகச் செவிகளில் ஒலித்தாலும், எத்தனை முயன்றும் விழிகளைத் திறக்கவே முடியவில்லை.
'அய்யய்யோ நம்ம பாட்டுக்குத் தூங்கிட்டே இருக்கோமே, அங்க ஃபங்க்ஷன் ஆரம்பிச்சுடுவாங்களே… நாம லேட்டா போனா நல்லா இருக்காதே' என்று மனதுக்குள் பதைப்பதைத்தாலும் விழிகளைத் திறக்கவே முடியவில்லை.
நேரம் பார்த்தால் மாலை நான்கு ஐந்து என்பது போய் நடுநிசி ஆகிவிட்டது போல மனதிற்குத் தோன்றியது.
"எல்லாரும் உனக்காகக் காத்துட்டு இருக்காங்க, பொறுப்பில்லாம நீ பாட்டுக்கு இங்க தூங்கினு கிடக்கிற" என்ற மகேஸ்வரியின் குரல் வேறு அதிகாரமாக ஒலித்தது.
ம்ஹும், என்ன முயன்றும் விழிகளைத் திறக்கவே முடியவில்லை! 'சச்ச… இதெல்லாம் நிஜமில்ல! நாம கனவுதான் கண்டுட்டு இருக்கோம், டக்குனு முழிச்சிட்டா வனாவுக்கு நலங்கு வெக்க, நேரத்துக்குப் போயிடலாம்' என்று அதையும் அவளது அறிவு எடுத்துக் கொடுத்தாலும், அவளுடைய அம்மாவின் அணைப்பிலிருந்து விலக கொஞ்சம் கூட விருப்பம் வரவில்லை.
அப்பொழுதென்று வேகமாக வந்த கன்டெய்னர் லாரி ஒன்று அவர்களை மோதி விட்டு நிற்காமல் சென்று விட தாயிடமிருந்து பிரித்து வீசப்பட்டாள்.
உச்சபட்ச அதிர்ச்சியுடன் விழிகள் தாயைத் தேட, அவளிருந்த இடத்தில் நின்றிருந்தான் தாமோதரன், இரண்டு கைகளிலும் குருதி வழிய.
'தாமு… தாமு… இதெல்லாம் என்னாலதான… என்னாலதான' என்று அவளது மனம் அனற்றத் தொடங்க, சுற்றிலும் பனிமூட்டம் படர்ந்து உடல் முழுவதும் குளிர் ஊசியாகக் குத்தியது.
அதற்கு மேலும் மனதின் இருக்கம் தாள முடியாமல் போக மிக முயன்று விழிகளைத் திறந்த நிலமங்கை கண்களைக் கசக்கியபடி பார்வையைச் சுழற்ற, தாமோதரனின் அறைக்குள் இருந்த கட்டிலில் அவள் படுத்திருப்பது தெரிந்தது. தடித்த திரைச்சீலைகளைப் போர்த்தியபடி ஜன்னல்கள் எல்லாம் அடைக்கப்பட்டிருக்க, ஏசியின் ஆதிக்கத்தில் குளிர்ந்து போயிருந்த அந்த அறை முழுவதும் இருள் சூழ்ந்திருந்தது.
நெஞ்சம் தடதடக்க தனதருகில் பார்க்க, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் தாமோதரன்.
உண்மை போல உயிர் வரை பாதித்த நிகழ்வுகள் எல்லாமே கனவு என்று புரிந்து ஆசுவாசமடைந்தாள் மங்கை.
கைப்பேசியை எடுத்துப் பார்க்க நேரம் மாலை நான்காகியிருந்தது. 'ச்ச… என்னவோ அப்பவே கிளம்பி நம்ம வூட்டுக்குப் போற மாதிரி வாய்ச்சவடாலா பேசி வெச்சோம். அவன் தூக்கிட்டு வந்து பெட்ல படுக்க வெச்சது கூட ஒரைக்காத அளவுக்கு எப்படி தூங்கித் தொலைச்சிருக்கோம் பாரு!' என்று தன்னைத் தானே நொந்து கொண்டு, தாமோதரனின் உறக்கத்தைக் கெடுக்காவண்ணம் அலுங்காமல் நலுங்காமல் மெதுவாக எழுந்து குளியல் அறைக்குள் சென்றவள் சில நிமிடங்களில் திரும்ப வந்து பார்க்க, அதுவரையிலும் கூட உறக்கம் கலையாமல் துயில் கொண்டிருந்தான் அவன்.
சத்தம் எழுப்பாமல் அறையின் கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்தவள் நேராகக் கீழே செல்ல, புஷ்பா, வரலட்சுமி, ஜனா மூவரும் ஒன்றாகக் கூடத்தில் அமர்ந்து பேசியபடி தேநீரை அருந்திக் கொண்டிருந்தனர்.
அவளைப் பார்த்ததும், "வாடியம்மா" என்று வரலட்சுமி அழைக்க அவருக்கு அருகில் வந்து உட்கார்ந்தவள், அங்கே சொம்பில் இருந்த தேநீரை ஒரு குவளையில் ஊற்றி ஒரு மிடறு பருகினாள்.
“இது இன்னாடீ இது! ஏதோ அடி பட்டுக்கினன்னு சொல்லிச்சென்னு பாத்தாக்க, திஷ்டி பரிகாரம் மாதிரி இம்மாம்பெருசா பொடச்சுப்போய் கெடக்கு? இன்னைக்கு விசேஷத்துல எல்லாரும் இத பாத்துட்டு கேள்வி மேல கேள்வி கேக்கப் போறாங்க பாரு!” என ஆதங்கமாகக் கேட்க, “ஐஸ் வெச்சா சரியாப் பூடும் ஆயா, பெருசா தெரியாது, வுடு” என்று பதில் கொடுத்தாள்.
"அப்பவே உங்கூட்டுக்குப் போவப்போறேன்னு சொன்னியே, இம்மாநேரம் ஆகியும் கீழ எறங்கி வரலியே, என்னன்னு கண்டுட்டு போவலாம்னு கொஞ்சம் முன்னால மேல வந்தேன். நீங்க இன்னடான்னா" என்று வெகுளியாக வாயை விட்டாள் புஷ்பா.
அவளுக்குப் பக்கென்று புரையேறி சங்கடமாக அவளை நோக்கவும்தான், தான் செய்த அபத்தத்தை உணர்ந்து, "நல்லா தூங்கிட்ட போல, அதான் தொந்தரவு செய்ய வேணாம்னு திரும்ப வந்துட்டேன்" என்ன மென்று விழுங்கி சொல்லி முடித்தாள்.
பாட்டி வேறு சிரிப்பை அடக்கியபடி குறுகுறுவென்று அவளைப் பார்க்க, ஜனாவோ எதையும் கண்டும் காணாத பாவத்தில் அமைதியாக அமர்ந்திருந்தார்.
"காலைல, நோவில்லாம இருக்க ஊசி போட்டாங்கத்த… அது ஒரு மாதிரி மந்தமா ஆக்கி வுட்டுடுச்சு. அதான் இவ்வளவு நேரம் தூங்கிட்டேன்" என்று ஒருவாறு அவருக்குப் பதில் கொடுத்துவிட்டுக் கையில் வைத்திருந்த டீயை வேகமாகத் தொண்டைக்குள் கவிழ்த்துக்கொண்டவள், தாமுவுக்கு ஒரு கோப்பை தேநீரைச் சுட வைத்து எடுத்துக்கொண்டு மறுபடியும் மாடிக்குச் சென்றாள்.
அதற்குள் அவன் விழித்தெழுந்து வரவேற்பறை சோஃபாவில் வந்து அமர்ந்திருக்க அதை அவனிடம் கொடுத்து விட்டு அறைக்குள் சென்றவள் குளித்து, அவன் முன்னமே வாங்கி வைத்திருந்த புடவையை உடுத்தி நகை நட்டுகளை அணிந்து தயாரானாள்.
ஐஸ் பேக் வைத்து ஒத்தடம் கொடுத்திருக்க, நெற்றியின் வீக்கம் நன்றாகவே வடிந்திருந்தது. முன் உச்சி முடியைத் தழைத்து வாரிவிட்டு, கண்ணாடியில் பார்க்க, காயத்தை நன்றாகவே மறைத்திருந்தது.
‘ஷ் அப்பாடா, யாரும் எந்தக் கேள்வியும் கேக்க மாட்டாங்க’ என ஆசுவாசம் அடைந்தாள்.
ஒருவழியாகக் கிளம்பி வெளியில் வர, தாமு அங்கே இல்லாமல் போகவும் நேராகக் கீழே வந்தாள். புஷ்பாவும் வரலட்சுமியும் தயாராகிக் கொண்டிருந்தனர்.
நலங்கு வைக்க இன்னும் நேரம் இருக்க, அவர்கள் இருவரும் பின்னர் வருவதாக சொல்லிவிட, தான் மட்டுமாக வெளியில் வந்தாள்.
'சுத்த மஞ்சள் பட்டுசேல கட்டதான் வேணும்…
முத்து முத்தா மல்லிகை பூ சூடத்தான் வேணும்…
முல்லை வெள்ளி போல பொண்ணு மின்னதான் வேணும்…
நம்ம வீட்டு கல்யாணம்… இது நம்ம வீட்டு கல்யாணம்…'
என ஒலிபெருக்கி பாடலை அதிர விட்டுக் கொண்டிருந்தது.
'அம்மாடி… எத்தன வருஷம் ஆனாலும் மைக் செட் காரங்க இந்தப் பாட்ட மட்டும் மாத்தவே மாட்டாங்க' என்று எண்ணியபடியே அவர்கள் வீட்டை நோக்கிப் போனாள்.
ஒவ்வொருவருமே பரபரப்பாக இங்கு அங்கும் ஓடிக் கொண்டிருக்க ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது.
வாடகைக்கு எடுத்து வந்த நாற்காலிகளில் பிரித்துப் போட்டபடியே அவளைப் பார்த்த கேசவன், "நல்ல வேள, வந்துட்டக்கா… சின்னக்கா ஒன்னதான் கேட்டுட்டே இருந்துச்சு" என்றான்.
"சரிடா நான் போய் பாக்கறேன்" என்று சொல்லிவிட்டு தங்கையைத் தேடிப் போனாள்.
கூடத்தை ஒட்டி இருந்த அறையில் தேவி அவளுக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தாள்.
நல்ல விலை உயர்ந்த பட்டுப்புடவை, உடல் முழுவதும் அலங்கரித்த தங்க நகைகள் என ஜொலித்தாள் வனமலர். இவள் நெருங்கி வந்ததும் மகிழ்ச்சியுடன் அணைத்துக் கொண்டாள்.
இவளைப் பார்த்த தேவியோ, "பரவால்ல மங்க, அவசர அடியில தெச்சிருக்கோமே எப்படி இருக்குமோன்னு கவலப்பட்டேன். ரவிக்கை உனக்கு நல்லாவே பொருந்தி இருக்கு" என்று சொல்லிவிட்டு முகத்தைக் கோணியபடி, "இன்னாடி இது, பொடவைய இப்படி ஏடாகூடமா சுத்தி வச்சிருக்க" என்று குறைப்பட்டுக் கொண்டாள்.
"அடி போடி இவளே, அகலமும் நீளமுமா இந்தப் புடவை எம்மாம்பெருசா இருக்குத் தெரியுமா. கொசுவம் வெச்சு கட்டறதுக்குள்ள, கையே வுட்டுப் போச்சு. போறாத குறைக்கு இந்த நெக்லஸும் செயினும் கழுத்தப் புடுங்குது. இந்த அழகுல கல்லு வெச்ச தோடு வேற காத புடிச்சி இழுக்குது" என்று அவள் புலம்பித் தள்ள,
"ஒவ்வொன்னையும் தாமு அண்ண உனக்காக பாத்து பாத்து வாங்கி வச்சிருக்கு, நீ என்னடா இந்தப் பொலம்பல் பொலம்புற. மவளே கொன்றுவேன்" என அவளை மிரட்டியவள் அவளுடைய கொசுவத்தைப் பிடித்து இழுத்து உருவ,
"த…ச்சீ எரும" என்று சங்கோஜத்துடன் பின்னால் நகர்ந்தாள் மங்கை.
"அட எவடி இவ, நான் என்னவோ செய்யக்கூடாத காரியத்த செஞ்சுட்ட மாதிரி குதிக்கிற… மெய்யாலுமே தாமு அண்ண நெலம படு மோசம்தான் போலருக்கு" எனக் கிண்டல் செய்தபடி அவளை இழுத்துப் புடவையை திருத்தமாக உடுத்தி விட்டாள். அதன் பின் நகைகளையும் சரி செய்து தலையில் லேசாக ஜெல் தடவி அழகாக சீவி விட, "யக்கா, செம கெத்தா இருக்கக்கா நீயி… தாமுத்தான் கண்டி ஒன்ன இப்படி பாத்துச்சுன்னு வெய்யி ரொமான்ஸு சீனுதான் போ" என்று கிண்டல் இழையோட புகழ்ந்து தள்ளினாள் வனமலர்.
திரும்பத் திரும்ப இவர்கள் இருவரும் இப்படியே பேசிக் கொண்டிருக்கவும் அவளுக்கே ஒரு மாதிரியாகிப் போனது. அந்த நேரம் பார்த்து அங்கே வந்த மகேஸ்வரி, "ஓ வந்துட்டியா மங்க" என்று சொல்லிவிட்டு, "என்ன தேவி இந்தப் பொண்ணு ரெடியா? நலங்கு வெக்க இட்னு வர சொல்றாங்க" என்று கேட்க,
"ரெடிதான் அத்த, வா இட்னு போய் ஒக்கார வெக்கலாம்" என்று சொல்ல எல்லோரும் வெளியில் வந்தனர்.
அங்கே தயாராக இருந்த அலங்கார இருக்கையில் அவளை உட்கார வைத்துவிட்டு, தேவியும் மங்கையும் அவளுக்கு அருகில் நின்று கொண்டனர்.
உறவினர்கள் எல்லாம் அவரவர் எடுத்து வந்த வரிசைத் தட்டுகளைக் கொண்டு வந்து அடுக்க, புஷ்பாவும் ஒரு தட்டைக் கொண்டு வந்து வைத்தாள். இயல்பாக மங்கையின் பார்வை அதில் பட, பெரிய கரைப் போட்டப் பட்டுப் புடவையும் பிரபல நகைக்கடையில் வாங்கி வந்திருந்த நகைப் பெட்டி ஒன்றும் அதில் இருந்தது.
அவர்கள் குடும்பத்து மூத்த சுமங்கலி பெண்ணான வேலுமணியின் ஒன்றுவிட்ட பெரியம்மாவை அழைத்து முதலாவதாக நலங்கு வைக்கச் சொன்னார் சந்தானம்.
அவர் முடித்துவிட்டு அகன்றதும் புஷ்பாவை அழைக்க அவளும் நலங்கு வைத்துவிட்டு, நகைப் பெட்டியில் இருந்த பெரிய ஹாரத்தை எடுத்து அவள் கழுத்தில் அணிவித்துவிட்டு வந்து மாமியாருக்கு அருகில் அமர்ந்தாள்.
அதைப் பார்த்த கணம் நடந்து முடிந்த பழைய நினைவுகள் எல்லாம் மனதிற்குள் அலைமோத உண்மையிலேயே சங்கடப்பட்டு போனாள் நிலமங்கை.
தூரத்து உறவினர்கள் எல்லாம் ஒவ்வொருவராக வந்து நலங்கு வைத்துவிட்டுப் போக, தாமோதரன் மீதிருந்த பயத்தில் மங்கையைக் கூப்பிட்டு சடங்குகளை செய்யச் சொல்ல வேண்டும் என்று மனதில் நினைத்தாலும் சட்டென மகேஸ்வரியால் அதைச் செயல் படுத்த முடியவில்லை.
எல்லோரும் முடித்துவிட்டுக் கடைசியாக தான் நலங்கு வைப்பதற்கு முன்பாக மங்கையை வைக்கச் சொல்லலாம் என அவள் தள்ளிப் போட்டுக் கொண்டே செல்ல அந்த நேரமும் வந்துவிட்டது.
வேறு வழி இல்லாமல் அவள் மங்கையை அழைக்க, "என்ன மகேசு, உனக்குப் புத்தி புத்தி கெட்டுப் போச்சா. இந்தப் பொண்ணுக்கு நல்லபடியா கல்யாணமும் நடக்கல, உருப்படியா புருஷன் கூட சேர்ந்து குடுத்தனமும் நடத்தல. இத கூப்பிட்டு உன் பொண்ணுக்கு நலங்கு வெக்க சொல்ற. போற இடத்துல இந்தப் பெண்ணாவது நல்லபடியா வாழணுமா வேணாமா?" என்று தன் பத்தாம் பசலி புத்தியைக் காண்பித்தார் வேலுமணியின் பெரியம்மா.
அவளோ விக்கித்துப் போக, தன் மனைவி, மைத்துனன்/மருமகன் வழி மூத்த உறவாயிற்றே என்று இவரை அழைத்ததுத் தப்போ என வருந்தினார் சந்தானம்.
"இன்னா அத்த, நீ உன் வயசுக்கு இந்த மாதிரி பேசற" என்று அவர் கடுப்புடன் கேள்வி கேட்க, அதுவரை அமைதியாக உட்கார்ந்து அந்த நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்த வரலட்சுமிக்குச் சுறுசுறுவென்று ஏறிவிட்டது.
"இன்னா சந்தானம் நீ, இதுங்கூடலாம் சரிக்குச் சரி பேசிக்கினு கிடக்கிற? நக்கற நாய்க்குச் செக்கும் ஒண்ணுதான் சிவலிங்கமும் ஒண்ணுதான். இவல்லாம் நாக்கு மேல பல்ல போட்டுப் பேசுற இடத்துலயா இருக்கு என் பேரன் பொண்டாட்டி? இவ படிச்சிட்டு வந்துக்கற படிப்புக்கும், என் பேரன் இவளுக்குக் கொடுத்து வச்சிருக்கற எடத்துக்கும், எவளாவது இவளுக்குச் சரிக்கு சமமா ஆவ முடியுமா? மொறைய பத்தி பேச வந்துட்டா மொறகெட்டவ? என் பேரன் பொண்டாட்டி வெச்சது வெளங்கும். தொட்டது தொலங்கும். இவ அதிஷ்டம்தான் என் பேரன் இராசாவுக்கே இராசாவா இருக்கான்!" எனச் சரவெடியாய் வெடித்தவர், "நீ போய் நலங்கு வெய்டி… எவளாவது வாயத் தொறந்து ஒரு வார்த்த பேசினா கிழிச்சிடுவேன் கிழிச்சு" என்று மங்கையைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து முன் நிறுத்தினார்.
வரலட்சுமி பேசிய பேச்சுக்குப் பதில் பேச இயலாமல் வாயடைத்துப் போய்விட்டார் அந்தப் பெண்மணி.
அதற்கு மேல் அங்கே ஏதும் இரசாபாசம் நடக்கக்கூடாது என்கிற எண்ணத்தில் வேக வேகமாக செய்ய வேண்டியதைச் செய்து முடித்துவிட்டு அமைதியாகப் போய் தகப்பனுடைய அறையில் அமர்ந்துவிட்டாள் நிலமங்கை.
என்னதான் பெண்கள் படித்து, உயர்ந்து சந்திர மண்டலத்துக்கே சென்று திருப்பினால் கூட இந்த உலகம் அவளை ஒரு குறுகிய வட்டத்திற்குள் ஏன்தான் வைத்து வேடிக்கை பார்க்கிறதோ என ஆயாசமாக இருந்தது.
வேலு மணிக்கு எதிரே இருந்த டிவியில் கூடத்தில் நடக்கும் விசேஷம் அப்படியே நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க மகளைப் பார்த்ததும் அவரது கண்களில் கண்ணீர் வழியத் தொடங்கியது.
அவரருகில் சென்று கண்ணீரைத் துடைத்தவள், "இவங்க பேசற அளவுக்கு எல்லாம் எதுவும் இல்லப்பா! தாமுவோட ஆயா பேசினத கேட்ட இல்ல. அதுதான் உண்மையும் கூட. நீ கவலையே படாத" என்று தந்தைக்கு அவள் ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க, அங்கே வந்து நின்றான் தாமோதரன்.
உடற்பயிற்சி செய்தபடி அவனுமே லைவில் இங்கே நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்ததால் கோபம் கரையுடைக்கத்தான் அங்கே வந்தான். ஆனால் மங்கை பேசிய பேச்சைக் கேட்ட பின் பொங்கி வந்த பாலில் தண்ணீர் தெளித்தது போல அவனுடைய கோபம் வடிந்து விட, "மாமா, பொறாமையில கண்ட நாயும் கண்டபடி கொலைக்கத்தான் செய்யும், இதையெல்லாம் நெனச்சு மனச அலட்டிக்கக் கூடாது" என்று இலகுவாகச் சொன்னவன், "உன் பொண்ணுங்க ரெண்டு பேரையும் பார்த்தியா, சும்மா மகாராணி கணக்கா எப்படி இருக்காளுங்க. அத பாத்து சந்தோஷப்படுவியா அதை வுட்டுட்டு" என்று மங்கையைக் கண்களால் அளந்தபடி சொல்ல, ஷார்ட்சும் டி-ஷர்ட்டும் அணிந்து வியக்க விறுவிறுக்க அவன் அங்கே வந்திருந்த கோலம் பார்த்து அடிவயிற்றில் சற்றே கலக்கம் உண்டானாலும் அவன் பேசிய பேச்சைக் கேட்ட பின் நிம்மதியாக உணர்ந்தாள்.
"நீ சொல்றது தான் சரி தாமு. எப்பவுமே என் பெரியம்மாவுக்கு எங்களக் கண்டாலே எளக்காரம்தான். சொந்தம் வுட்டுப் போவக் கூடாதுன்னு எம்பெரியப்பா மொகத்துக்காக அழைச்சு முன்ன நிறுத்தினா, இப்படி புத்திய காமிக்குது" என்றான் வேலுமணி. அவன் பேசிய அந்தக் குளறல் பேச்சு மங்கைக்குக் கூட புரியவில்லை, ஆனால் தாமு விளங்கிக் கொண்டான்.
மங்கையைத் தேடிக் கொண்டு அவன் வந்த வேகத்தைப் பார்த்துவிட்டு அங்கே வந்த கேசவனும் சந்தானமும் வேறு அவனை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்க, இயல்பாக அவர்களுடன் பேசி முடித்துவிட்டு, "மொத பந்திலயே சாப்டுட்டு நேரத்தோட வூடு வந்து சேரு" என்று அழுத்தமாக அவளிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான் தாமு.
கேசவனும் விடாப்பிடியாக அவளை அழைத்துப் போய் புஷ்பா மற்றும் வரலட்சுமியுடன் சேர்த்து அமர வைத்து முதல் பந்தியிலேயே சாப்பிட வைத்து, அதற்கு மேல் ஒரு நொடி கூட நிற்கவிடாமல் வீடு வரை கொண்டு வந்து விட்டு விட்டுச் சென்றான்.
அதுவரை அமைதியாக வந்த வரலட்சுமியோ, "இதுக்குதான்டி, நடக்க வேண்டியதெல்லாம் முறையா நடக்கணும்னு தலபாடா அடிச்சிக்கிறேன். இந்த இராங்கிகாரிக்கு எதுனா புரியுதா?" என்று ஒரு கொத்துக் கொத்தியே அங்கிருந்து அவளை மாடிக்குப் போக விட்டார்.
"நான் மட்டும் இன்னா பண்ண முடியும்? நல்ல விதமா சொல்றவங்க சொல்லும்போதே கேட்டுக்கணும். இல்லன்னா இப்படி நாலு பேர் கிட்ட வாங்கித்தான் கட்டிக்கணும்" என ஆற்றாமையுடன் புஷ்பா புலம்புவதும் அவள் காதல் விழுந்தது.
நடந்து முடிந்த இந்த அற்பமான விஷயங்களை எல்லாம் உதறித் தள்ளினாலும், காலை நடந்த கொலை முயற்சியால் உண்டான அதிர்வும், அன்றைய பகல் தூக்கத்தில் அவள் கண்ட கனவின் தாக்கமும் மங்கையை விட்டு அகலவே இல்லை.
அதே நினைப்புடனே கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைய, கைகளில் ஏற்பட்டிருந்த காயத்திற்கு மருந்து தடவிக் கொண்டிருந்தான் தாமோதரன்.
வேகமாக போய் அதை தன் கையில் வாங்கிக் கொண்டவள் ஒவ்வொரு காயத்திலும் பார்த்துப் பார்த்து அந்த மருந்தை மென்மையாகத் தடவ, "இந்த மாதிரி அதிசயமெல்லாம் நடக்கும்னா, நான் தெனிக்கும் இப்படி காயம்பட்டுக்க ரெடி" என்று கிறக்கமாகச் சொல்ல, பட்டென அவன் தோளிலேயே அடித்தவள், "சீ என்ன வாயி தாமு உன் வாயி… இப்ப பட்ட காயமே என் மனசுல வலிக்குது" என்றாள் வருத்தம் மேலோங்க.
"ச்சீ லூசு, சும்மா வெளையாட்டுக்குச் சொன்னா, இதெல்லாம் மெய்யாலுமே பலிக்கப் போகுதாங்காட்டியும்" என்று அவளைத் தேற்றும் விதமாகச் சொல்ல,
"வேணாம் தாமு, இன்னைக்கு நடந்ததே ஆயுசுக்கும் போதும். எனக்கு உயிர் போய் உயிர் வந்துச்சு" என்றவளின் விழிகளில் நீர் கோர்த்து விட, அப்படியே அவன் தோளில் தலை சாய்ந்தாள். மருந்து தடவப்படாமல் இருந்த மற்றொரு கையால் அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான் தாமோதரன்.
மேலும் மேலும் அவனுக்குள்ளே புதைந்தவளுக்கு மதியம் தான் கண்ட கனவில் தனது அன்னையின் தோள் கொடுத்த கதகதப்பு நினைவில் வர, “கருங்கல்லு செவரு மாதிரியா இருக்கேன் மங்க?” என்று அவன் வேறு கிசுகிசுக்கவும்,
'ஐயோ, அப்படின்னா தூக்கத்துல இவன?! இவனதான்?! இல்ல இவந்தான்?! யம்மாடி, அப்படின்னா இவன் தூங்கற மாதிரி பாசாங்கு பண்ணிகினு கிடந்தானா?!' என்று எண்ணியவள் விதிர்விதிர்த்துப் போனாள்.
அதே நினைவில் அனிச்சையாக அவனிடமிருந்து விலக முயன்றாலும் அவனுடைய இரும்பு பிடியிலிருந்து அவளால் அசையக் கூட முடியவில்லை.
சில நிமிடங்கள் கடந்த பின்பும் கூட அவனது பிடி தளராமல் போக, "தாமு, பிளீஸ்… என்ன வுடு, நான் போய் டிரஸ் மாத்தினு வரேன்" என்று சொன்னவளின் வார்த்தைகள் தந்தியடித்தன.
"ஏன், இந்த டிரஸ்ஸுக்கு என்ன கொறச்சல், இதுல நீ எவ்வளவு அழகா இருக்கக் தெரியுமா" என்று அவளுக்குப் பதில் சொன்னாலும் அவனுடைய பிடி தளரவே இல்லை.
பேசியபடியே மெல்ல மெல்ல அவனுடைய இதழ்கள் அவளுடைய கழுத்தில் ஊர்வலம் போக, அவளது ஒரு மனம் அவனிடமிருந்து விலகிவிடு என்று சொல்ல, மற்றொரு மனமோ, 'வேண்டாம் அவனை வஞ்சிக்காதே!' என்று அவனுக்கு வக்காலத்து வாங்கியது.
அவள் தன் மனதிற்குள்ளேயே பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கும் நேரத்தை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டவனின் இதழ்கள் அவளுடைய இதழைத் தேடி அழுத்தமாக மையம் கொள்ள, “எனக்கு நானே உருவாக்கி விட்டுட்ட விஷக்கன்னி நீ… ஒரே ஒரு நாளானாலும் உன் கூட வாழ்ந்து உசுர விட்டுட்டா கூட எனக்கு போதும் மங்க, அந்த அளவுக்கு நீ என்ன முழுசா மோகினி பிசாசு மாதிரி பிடிச்சி ஆட்டிட்டு இருக்க” என்று அவன் சொன்ன வார்த்தைகள் மட்டுமே நினைவில் தேங்கி நிற்க, அந்த நொடி, இந்த மொத்த உலகமுமே அவளுக்கு மறந்து போனது! தாமோதரன் என்பவன் மட்டுமே அவளுடைய மொத்த உலகமுமாக மாறிப்போக, இந்த நொடியை வாழ்ந்துப் பார்த்துவிடும் துடிப்பு உண்டாக, தன் பிடிவாதம் அனைத்தையும் விட்டொழித்துத் தன்னையே அவனிடம் விட்டுக் கொடுத்தாள் நிலமங்கை, அவன் மீது கொண்ட காதலினால்.
இஷ்டப்பட்டு அவள் விட்டுக் கொடுத்ததைக் கஷ்டமே இல்லாமல் தட்டிப் பறித்தவனோ,
'அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு'
இத்திருக்குறளின் பொருளை நேரடியாக உணர்ந்துகொண்டிருந்தான்.
வணக்கம் அன்புத் தோழமைகளே!
Thanks for all your support!
கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு ஒன்றாக சேர்ந்தால் இன்றைய பதிவு!
இந்த Soft Romance, எப்படி இருக்கிறது என்று கமெண்டில் வந்து சொல்லுங்கள் மக்களே!
Awesome epi....taking the story line very nicely