top of page

Are You Okay Baby?! 5

நிலா-முகிலன் 5


கார்முகிலனிடம் பேச்சைத் தொடர்ந்தார் நிலமங்கையின் அன்னை. "நாங்க அவளை மங்கைனு கூப்பிடுவோம். ஆனா காலேஜ்ல, ஃப்ரண்ஸ், எல்லாரும் நிலான்னுதான் கூப்பிடுவாங்க போல.


ஃபைனல் இயர் படிக்கும் போதே, யாரோ ஒருத்தனை காதலிக்கறேன்னு வந்து நின்னுச்சு.


வேற சாதில, அதுவும் பெத்தவங்க கூட இல்லாத ஒருத்தனுக்கு கட்டி கொடுக்க நாங்க சம்மதிக்கல.


எங்களுக்கு தெரியாம அவனையே ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டு வந்து எங்க சனங்க முகத்துல முழிக்க முடியாம செஞ்சுடிச்சு பாவி மக. அதோட அவளைத் தலை முழுகி விலக்கி வெச்சுட்டோம்.


எங்க மூத்த மகள இங்கனையே பக்கத்து ஊருல கட்டி கொடுத்திருக்கோம். இவ செஞ்ச வேலையால அவ குடும்பத்து ஆளுங்க அவளை எங்க வீட்டுக்கே வர விடல.


மூணு மாசத்துக்கு முன்னால, இங்க ஒரு நாள் புயலும் மழையுமா இருந்துச்சே, அன்னைக்கு மங்கை இங்க வந்துச்சு! என் புருஷனை கொஞ்ச நாளா காணும்! மனசு கஷ்டத்துல இருக்கேன்! உங்களை எல்லாம் பார்க்கணும்னு தோணிச்சு! அதுதான் இங்க வந்திருக்கேன்னு!' சொல்லிச்சு.


உங்க ஆசி இல்லாம கல்யாணம் செஞ்சுகிட்டதாலதான இப்படி கஷ்டப்படுறேன். எங்களை மன்னிச்சிடுங்கன்னு கதறிச்சு.


அவங்க அப்பா அவளை வீட்டுக்குள்ளேயே நுழைய விடல.


'அவனோட சோலி முடிஞ்சதும் உன்னை கை கழுவி விட்டுட்டான். இனிமேல் திரும்ப வர மாட்டான். உன்னால போன மானம் மரியாதைய மீட்டெடுக்க போராடிட்டு இருக்கோம். பெரியவ வீட்டுல இப்பதான் கொஞ்சம் இறங்கி வராங்க. உன்னை மறுபடியும் சேர்த்துக்கிட்டா உங்க அக்கா நெலம மோசமா போகும்.


உனக்கு நல்ல படிப்பு வேலை எல்லாமே அமைஞ்சிருக்கு. எப்படியோ பிழைச்சு போ.


இங்க வந்து எங்க நிம்மதியைக் கெடுக்காத'ன்னு ஆத்திரமா பேசி கதவை அடைச்சிட்டாங்க. அவங்களுக்குப் பயந்துகிட்டு நானும் அப்படியே இருந்துட்டேன்.


ஒரு லெவலுக்குமேல் கெஞ்சிகிட்டு இருக்க விரும்பல போல, முகத்தை துடைச்சிகிட்டு அதே கார்லயே திரும்பி போயிடிச்சு என் மக. அப்ப மணி ராத்திரி ஏழு இருக்கும்.


பத்து மணி வாக்குல கவர்மென்ட் ஹாஸ்பிடல்ல இருந்து ஒருத்தங்க போன் பண்ணி மங்கைக்கு ஆக்சிடண்ட் ஆயிடிச்சு, தலையில அடி பட்டிருக்கு. உடனே ஆப்பரேஷன் செய்யணும். அதுக்கு முன்னால உஙகளை ஒரு முறை பார்க்கணும்னு உங்க மக ஆசை படறாங்க. தயவு செஞ்சு வந்து பாருங்கன்னு' சொன்னாங்க.


ஆனா அவளை போய் பார்க்க அவங்க அப்பா விருப்பப்படல.


என்னையும் போக அனுமதிக்கல" என்று சொல்லிவிட்டு, முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டு அழத் தொடங்கினார் அந்த பெண்மணி.


அவரது கணவரின் முகம் அவமானத்திலும் வேதனையிலும் இறுகிப் போய் இருந்தது.


முகத்தில் எந்த வித உணர்வையும் வெளிக்காட்டாமல் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தான் முகிலன்.


தொடர்ந்தார் அந்த பெண்மணி.


"அடுத்த நாள் காலையில, இவங்க வேலைக்கு கிளம்பிட்டு இருக்கும் போது இங்க ஒரு பொண்ணு வந்துச்சு.