Aalangattimazhai - 21
- Krishnapriya Narayan

- Jul 9
- 5 min read
21. மழைத்தாரை
(மழைத்தாரை என்பது விடாது பொழியும் பேய்மழை அல்லது இடைவிடாமல் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரைக் குறிக்கும்)
சில தினங்களாகவே வர்ஷிணியின் வீட்டின் விடியல்கள் சோர்வடைந்துதான் போயிருக்கிறது. அதுவும் அன்றைய விடியல் கொஞ்சங்கூட இயல்பாக இல்லை. எல்லோரின் முகத்திலும் சோகம் அப்பி கிடக்க ஒருவர் முகத்தை மற்றொருவர் நிமிர்ந்து பார்க்கும் நிலையிலேயே இல்லை.
அந்த இறுக்கத்தைத் தாங்க முடியாமல், வர்ஷிணி சீக்கிரமே கிளம்பி வைசாலியையும் சௌமியாவையும் பார்த்துவிட்டு வருகிறேன் என அவர்கள் வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.
சில நிமிடங்களிலெல்லாம் அழைப்பு மணி ஒலித்தது.
வாசல் கதவைத் திறந்த சித்ராவுக்கு தனம், சம்பத் இருவரின் வருகை எதிர்பாராத அதிர்ச்சியைக் கொடுத்தது.
"வாங்க சம்மந்தி..." என்று தயக்கத்துடன் உள்ளே அழைத்தார்.
"ம்ம்'' என்றபடி உள்ளே நுழைந்த தனத்தின் முகத்தில் இளக்கமே இல்லை. "ரஞ்சனி எங்க?" என்றார் நேரடியாக. அவருடைய குரலில் இருந்த இறுக்கம் சித்ராவை பதற வைத்தது.
"உள்ள ரூம்ல இருக்கா... அவளுக்கு பீப்பி இன்னும் நார்மல் ஆகல" என்றார் அவசரமாக.
தனத்திடமிருந்து, "பரவால்ல, கூப்பிடுங்க" என்ற கட்டளை மட்டுமே பிறந்தது.
“கூப்பிடறேன், அதுக்கு முன்னால காப்பி எடுத்துட்டு வறேன், உக்காருங்க” என அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே எங்கோ வெளியில் சென்றிருந்த வரதன் உள்ளே நுழைந்தார். இவர்களைப் பார்த்ததும் உண்டான திடுக்கிடலுடன், “வாங்க சம்மந்தி” என்று வரவேற்றார்.
சம்பத் மட்டும் சங்கடமாகத் தலையசைக்க, “ம்ம்… காப்பிலாம் வேணாம், இப்பதான் டிபன் சாப்டுட்டுதான் வறோம். நீங்க ரஞ்சனியை கூப்பிடுங்க, போதும்” என அவசரப்படுத்தினார்.
“ரஞ்சு, கொஞ்சம் வாம்மா, உன் அத்த மாமா வந்திருக்காங்க” என கதவைத் தட்டி அவளை அழைத்தார் சித்ரா. வெளியே வந்தாள் ரஞ்சனி.
“வாங்கத்த, வாங்க மாமா” என அவர்களை வரவேற்றவளின் முகம் வீங்கி இருந்தது. விழிகள் சிவந்திருந்தன. நியாயத்துக்கு இப்படி அவளைப் பார்த்ததும் தனம் சற்றேனும் மென்மையுற்றிருக்க வேண்டும். ஆனால் அது அவரின் மாமியார் பதவிக்குத்தான் இழுக்காயிற்றே!

"உக்காரு, உங்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்றார் சுற்றி வளைக்காமல். ரஞ்சனியும் மெதுவாக அமர்ந்தாள். அறையில் இருந்த காற்றே அவளின் மனதைப் போல கனத்தது. சித்ராவோ வரதனைப் பதற்றமாகப் பார்த்தார்.
"சம்மந்தி..." என்று ஆரம்பிக்க, "நான் பேசிட்டு முடிக்கற வரைக்கும் யாரும் குறுக்க பேசாதீங்க" என்ற தனம் ரஞ்சனியை நேராகப் பார்த்தார்.
"நான் கேக்கற கேள்விக்கு உண்மையான பதில் சொல்லு. இந்த வைத்தியத்துக்கு இன்னும் எவ்வளவு காலம் புடிக்கும்?"
"தெரியல அத்தை, ஆனா கண்டிப்பா சக்ஸஸ் ஆகும்ணு மிரு அக்கா சொல்றாங்க"
“இதையேதான் அவ வருஷக்கணக்கா சொல்லிட்டு இருக்கா. அத நம்பி நான் இன்னும் எவ்வளவு காலம்தான் காத்திட்டு இக்கணும்?"
"அத்தை... லாஸ்ட்டா இன்னும் ஒரு தடவ..." என்ற ரஞ்சனியின் உதடுகள் நடுங்கின.
"எத்தனை தடவ? போதும் ரஞ்சனி, உடம்பு வருத்திக்கிட்டது போதும். பணத்தை செலவு பண்ணது போதும். அழுதது போதும். இப்ப எதார்த்தத்த யோசிக்கணும்" என்ற அவரின் வார்த்தைகளில் சித்ராவுக்கே கோபம் வந்தது. "சம்மந்தி..." என ஆவேசமானார்.
"நான் பேசுறது என் மகனோட வாழ்க்கையைப் பத்தி." என்றார் வெடுக்கென. "உங்க பொண்ணை எனக்கு பிடிக்காம பேசல. ஆனா என் மகனுக்கும் வாழ்க்கை இருக்கில்ல?" எனவும், ரஞ்சனி விசும்பத் தொடங்கினாள்.
சம்பத் சங்கடமாக, "விடு தனம்..." என்று சொல்ல, "நீங்க பேசாதீங்க, ஒரு அம்மாவா என் மகன வாழ்க்கையதான் நான் முதல்ல பார்க்க வேண்டியிருக்கு" என அதட்டி அவரை அடக்கிவிட்டு, “"ரஞ்சனி, நான் ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்காத, தயவு செஞ்சு ஸ்ரீதருக்கு நீயே டைவர்ஸ் கொடுத்துடு" என்றார்.
"அத்தை!" என்று அலறினாள் ரஞ்சனி. அந்த வார்த்தையைக் கேட்டதும் சித்ரா வாயைப் பொத்திக்கொண்டார். வரதனின் தலையில் இடி இறங்கியதுபோல கலங்கிப்போனார்.
மற்றவரின் நிலையைக் கருத்திலேயே கொள்ளாமல், “பிரச்சன உங்கிட்டதான இருக்கு. உங்கூட சேர்ந்த்து அவன் எதுக்கு கஷ்டபடணும்?” எனத் தன் கருத்தை அழுத்தமாக முன்வைத்தார்.
வரதன் தன்னை சமாளித்துக்கொண்டு, "எதுக்கும்மா இவ்வளவு பெரிய முடிவுக்குப் போகணும். இதுக்குதான் ட்ரீட்மென்ட் இருக்கே. ஐ.வி.எஃப் பண்ணலாம். செலவ நானே பார்த்துக்கறேன். குழந்தைக்காக ரஞ்சனி என்ன வேணாலும் செய்வா" எனச் சொல்லிப் பார்த்தார்.
“செலவ நீங்க பார்த்துப்பீங்க, எக் டொனேஷனுக்கு யார புடிப்பீங்க?" எனக் கேட்டு நின்றார் தனம்.
“அத டாக்டர் பார்த்துப்பாங்க, கண்டிப்பா கிடைக்கும்” என்றார் சித்ரா.
"அப்படி வேற ஒருத்தியோட கருமுட்டை வாங்கி பிறக்கற குழந்தய பார்த்தா எனக்கு என் பேரன்னு தோணுமா?" என தனம் கேட்டதற்கு, “கருமுட்டை டொனேஷனுக்கு போனாலும் அது உங்க மகனோட குழந்தையாதான பொறக்கும்? அப்பரம் ஏன் இப்படி கேக்கறீங்க?” என அந்தக் கேள்வியில் திடுக்கிட்டுக் குழம்பினார் சித்ரா.
"எந்த ஜாதி, கொலம், வம்சம்னே தெரியாத யாரோ ஒருத்தியோட ரத்தம் எப்படி என் பேரனா பொறக்கும். எங்க ஆளுங்கள பார்த்திருக்கீங்க இல்ல. அப்பரம் எப்படி உங்களால இந்த மாதிரி பேச முடியுது. கொற உங்க பொண்ணுகிட்ட இருக்கவே போயி, இத ரொம்ப சகஜமா எடுத்துக்கிட்டீங்க, அப்படித்தான?” என ஈட்டியாய் எறிந்தார் வார்த்தைகளை.
“உங்களால முடிஞ்சாலும், என்னால் இத ஏத்துக்கவே முடியாது” என்று சொல்லிவிட்டு, “அதனால தயவு செஞ்சு ஶ்ரீதர விட்டுடு. அவனும் சந்தோஷமா இருப்பான். நீயும் நிம்மதியா இருக்கலாம். மேற்கொண்டு ஏதாவது படி இல்ல வேலைக்கு போ. எதுக்கு உன்னையும் வருத்திக்கிட்டு, வயசான காலத்துல எங்க நிம்மதியையும் கெடுத்துகிட்டு” என்று ரஞ்சனியிடம் சொல்லிவிட்டு, “கிளம்புங்க போகலாம்” என எழுந்து வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டார் தனம். விடைபெறும் விதமாக சங்கடத்துடன் தலையசைத்தபடி அவரைத் தொடர்ந்து போனார் சம்பத்.
கெஞ்சிக்கொண்டு அவர்கள் பின்னோடே ஓட ரஞ்சனியின் தன்மானம் தடுத்தது. ஶ்ரீதர் இல்லாத வாழ்கையைக் கற்பனை செய்துகூடப் பார்க்க அவளால் இயலவில்லை. கண்களை இருட்டிக்கொண்டு சரிய இருந்தவளை சித்ரா வந்து அணைத்துக்கொண்டார். வரதனால் தன் மகளை ஏறிட்டும் பார்க்க முடியவில்லை. கூனிக்குறுகிப்போனார்.
ஆனால் சோர்ந்து அமர அவர்களுக்கு நேரமில்லை. அருகில் இருக்கும் ஒரு கிளினிக்குக்கு ரஞ்சனியை அழைத்துப் போய் டிரிப்ஸ் ஏற்றி அழைத்து வந்தனர்.
மதியத்துக்குமேல் வீடு திரும்பிய வர்ஷிணி அனைத்தையும் கேள்விப்பட்டுக் கொதித்துப்போனாள். “அவங்கள பெசவிட்டுட்டு எப்படி நீங்க ரெண்டு பேரும் வேடிக்கை பார்த்துட்டு இருந்த்தீங்க” என அம்மா அப்பாவிடம் எகிறினாள். இருவருமே பதில் சொல்லும் நிலையில் இல்லை. பொறுக்கமுடியாமல், அங்கேயே போய் நியாயம் கேட்கிறேன் எனக் கைப்பையை மாட்டிக்கொண்டு கிளம்பியவளை, “அத்தான் அந்தளவுக்கு விடமாட்டாங்க வர்ஷிணி, பிளீஸ், நீ பிரச்சனைய இன்னும் இழுத்துவிட்டுடாத. ஒருவேள சுமுகமா இது முடியலன்னா நீதான் எனக்காக பேசணும், இப்போதைக்கு தயவு செஞ்சு இதுல தலையிடாம ஒதுங்கி இரு” என ரஞ்சனி அவளிடம் கெஞ்சிக்கேட்டதால், தானும் தன் பங்கிற்கு அவளை நோகடிக்க வேண்டாம் எனத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டாள்.
வர்ஷிணி மூலம் இதெல்லாம் ஸ்ரீதருக்கு தெரியவரவே மாலையாகிவிட்டது. அவனுடைய அம்மா செய்து வைத்த குளறுபடியைச் சரி செய்ய, ரஞ்சனியை நேரில் பார்த்து ஆற்றுப்படுத்த அடித்துக்கட்டிக்கொண்டு அவர்கள் வீட்டிற்கு ஓடி வந்தான்.
கொஞ்சம் தெளிந்து ஹால் சோபாவில்தான் அமர்ந்திருந்தாள் ரஞ்சனி. அவளின் அருகில் வந்தமர்ந்து அவளின் கையை தன் கைக்குள் பொத்தியபடி, “இப்ப எப்படி இருக்க, பரவாயில்லையா?” என விசாரித்தான். ‘ஆம்’ என்பதாகத் தலையசைத்தாள்.
குரல் கேட்டு அங்கே வந்த வரதன், “வாங்க, மாப்பிள” என அவனை வரவேற்று விட்டு சித்ரா காபி எடுத்துட்டு வா" எனக் குரல் கொடுத்தார். சித்ரா எடுத்து வந்த காபியை அவன் பருகி முடிக்கும் வரை அங்கே ஓர் இறுக்கமான மௌனம் குடிகொண்டது. அதன் பின் தொண்டையை செருமி, “அம்மா ரொம்ப அப்செட் ஆகி பொறுமையை இழந்துட்டாங்க, மாமா. அவங்க பேசுனதெல்லாம் வச்சு நீங்க எதுவும் தப்பா நினைக்காதீங்க என்றான். என்ன பதில் சொல்வது எனப் புரியாமல் தலையசைத்தார் வரதன்.
"அவங்க ஏதோ மன உளைச்சல்ல இப்படியெல்லாம் பேசியிருக்காங்க. ஆனா என்னோட பார்ட்ல இருந்து நான் சொல்ல வேண்டியதை சொல்லிடறேன். ரஞ்சனி இல்லாத ஒரு வாழ்க்கைய என்னால நினைச்சு கூட பார்க்க முடியாது. குழந்தைக்குட்டி எல்லாம் அம்மா அப்பாவுக்காகதான் மத்தபடி நான் ரஞ்சனிய விட்டு எங்கயும் போக மாட்டேன். என்ன ஆனாலும் என் வாழ்க்கை முழுக்க அவ கூடத்தான் இருப்பேன். இப்போதைக்கு இந்தச் சிச்சுவெஷன ஹேண்டில் பண்ண எனக்குக் கொஞ்சம் அவகாசம் தேவை. அதை மட்டும் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க" என தன்நிலையை விளக்கினான்.
அது வரதனை முற்றிலும் நெகிழவைத்தது. எழுந்து வந்து, “தேங்க்ஸ் மாப்பிள, எனக்கு இது போதும்” என ஸ்ரீதரின் கையைப் பற்றிக்கொண்டார். ஸ்ரீதரால் கண்களில் தேங்கிய கண்ணீரை அடக்க முடியவில்லை.
"மாமா, இப்ப நம்ம ஒரே டியூட்டி ரஞ்சனியை நல்லபடியா கவனிச்சு தேத்தனும். அவள நல்லபடியா கவனிச்சுக்கோங்க. அம்மா எக்ஸ்பெக்ட் பண்ற மாதிரி ஒரு டோனர் கிடைக்கிறாங்களா பார்க்கலாம். இல்லனாலும் அம்மா கிட்ட நாங்க பேசி புரிய வெக்கறோம்” என்றான். அதன் பிறகுதான் எல்லோராலும் நிம்மதியாக மூச்சு விடவே முடிந்தது.
ஒருவாறு ரஞ்சனியுடன் சிறிது நேரம் செலவிட்டுவிட்டு ஸ்ரீதர் கிளம்பிச் சென்றான். இரு தினங்களில் வர்ஷிணியின் விடுமுறை முடிந்து, அவள் திருவனந்தபுரத்துக்குச் சென்றாள், சுமக்கவே முடியாத அளவுக்கு மனச்சுமையுடன்.
மருத்துவர் மிருதுளா உறவினராகப்போனதில், தனத்தின் நிபந்தனையை நாசூக்காக ஶ்ரீதரும் கிருஷ்ணாவும் அவரிடம் சொல்லிப் பார்த்தனர். “உங்க கண்டிஷனுக்கு டோனர் கிடைக்கறதுக்கு சான்ஸஸ் ரொம்ப கம்மி, டிரை பண்றேன்” என்று சொல்லிவிட்டார்.
ஆனால், ஒன்று சரியாக இருந்தால் மற்றொன்று சரியில்லாமல் போக, கருமுட்டை தானம் கொடுக்க அப்படி ஒரு பெண் கிடைக்கவேயில்லை. நாட்கள் கடந்தன. பிள்ளை உண்டானால் மட்டுமே ரஞ்சனியை வீட்டிற்கு அழைத்துவரலாம் எனத் தன் பிடியிலேயே நின்றார் தனம். இந்த அளவுக்கு அவரை பொறுமை காக்க வைப்பதற்குள்ளேயே கிருஷ்ணாவுக்கும் ஸ்ரீதருக்கும் போதும் போதும் என்றாகி விட்டது. ஓரளவுக்கு மேல் அவரை கரைக்கவே இயலவில்லை.
ஒரு நிலைக்குமேல் ரஞ்சனியாலும் தாக்குப் பிடிக்க இயலவில்லை. ஒரு நாள் வர்ஷிணியிடம் வீடியோ காலில் பேசும்போது, “பேசாம உங்க மாமாவ வேற கல்யாணம் பண்ணிக்க சொல்லி, டைவர்ஸ் கொடுத்துடலாம்னு தோணுது வர்ஷிணி” என்று மனம் தாங்காமல் சொல்லிவிட்டாள்.
“லூசு மாதிரி பேசாதக்கா, இதுக்கு மாமா ஒத்துப்பாங்களான்னு பாரு மொதல்ல?” என அதட்டினாள்.
“போடி, நீ வேற. ஒன்னு அவங்க அம்மாவ விட்டுட்டு எங்கிட்ட வரணும், இல்லனா என்ன விட்டுடணும். இது ரெண்டுமே நடக்காத காரியம். அதனால டைவர்ஸ்தான் இப்போதைக்கு ஒரே சொல்யுஷன், அவராவது நிம்மதியா இருந்துட்டு போகட்டும்”
“ஏன்க்கா இப்படி பேசற, அப்பறம் உன் நெலம?”
ஜீவனற்ற குரலில், “ஒரேடியா போய் சேருரேன்” என்றாள் ரஞ்சனி.
வர்ஷிணியின் உடல் அதிர்ந்தது. “அக்கா, லூசு மாதிரி உளறாத!” என்று பதறிக் கத்தினாள்.
“விடுடீ, நெருப்புன்னா வாய் வெந்துடவாப் போகுது” எனத் தத்துவம் பேசினாள்.
“சரிக்கா, இப்போதைக்கு மனசுல எதையும் போட்டு குழப்பிக்காத. எதுவா இருந்தாலும் நான் விடமாட்டேன், கட் பண்ணு, அப்பரமா பேசிக்கலாம்” என அழைப்பைத் துண்டித்தாள். அவள் ஏதாவது தவறான முடிவுக்குப் போய்விடுவாளோ என்கிற அச்சம் மட்டுமே மனதை வியாபித்திருந்தது. இதைச் சொல்லி மற்றவரையும் கலவரப்படுத்த மனம் தயங்கியது.
சித்திக்கும் திறனே அழிந்துபோக, விடுப்பு எடுத்துக்கொண்டு ஊருக்குக் கிளம்பிவிட்டாள். கொரோனா அச்சுறுத்தல் வேறு தலை தூக்கத் தொடங்கியிருக்க, விடுப்பெடுக்க எந்தச் சிக்கலும் இல்லாமல் போனது. வீடடைந்து அக்காவை நேரில் பார்த்தபிறகுதான் அவளுக்கு உயிரே வந்தது.
ஆனால் அக்காவின் இந்த மன நிலையை எண்ணி, அவளால் இயல்பாகவே இருக்க முடியவில்லை. தனலட்சுமியின் இப்படிப்பட்ட கூற்றுக்கு ரஞ்சனியை பலியாக விடாமல் தடுத்து அவளின் துயர் துடைக்க, இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண ஒரு விபரீதமான முடிவை எடுத்தாள். இல்லையில்லை ரஞ்சனிக்கு தான் கொடுத்த துயரத்தின் பரிகாரமாக நினைத்து தன்னையே பிணையாகக் கொடுக்கும் சூழலுக்கு உணர்வுரீதியாகத் தள்ளப்பட்டாள் வர்ஷிணி. அது கிருஷ்ணாவுக்கும் சாதகமாக அமைந்துபோனது.



Comments