Aalangatti Mazhai - 1
Updated: Aug 23, 2022
ஆலங்கட்டி மழை
௧ – ஆலி
(உடலோ உடையோ நனையாமல் ஆங்கங்கே விழும் ஒற்றை மழைத்துளிக்கு ஆலி என்று பெயர்)
ஆசை முகம் மறந்து போச்சே -இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம் – எனில்
நினைவு முகமறக்க லாமோ?
தேனை மறந்திருக்கும் வண்டும் -ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் -இந்த
வைய முழுதுமில்லை தோழி!
கண்ணன் முகமறந்து போனால் -இந்தக்
கண்க ளிருந்துபய னுண்டோ?
வண்ணப் படமுமில்லை கண்டாய் -இனி
வாழும் வழியென்னடி தோழி?
பாரதியின் பாடல் கர்நாடிக் ஃப்யூஷனாக கசிந்துகொண்டிருந்தது. வேலைக்குச் சேர்ந்து இரண்டு வருடங்கள் பொறுத்திருந்து, ஒரு வழியாக அப்பாவின் சம்மதம் கிடைக்கப் பெற்று பேங்க் லோன் ஈ.எம்.ஐ என்று போய் ஒரு வழியாக அவள் வாங்கியிருக்கும் அவளது கனவு காரை செலுத்திக் கொண்டிருந்தாள் அமிர்தவர்ஷிணி.
பார்வை அனிச்சையாகப் பக்கத்துக்கு இருக்கைக்குச் சென்றது. அங்கே இங்கே அசைய முடியாமல் ஒன்றை ஒன்று நெட்டித் தள்ளியபடி துள்ளிக் கொண்டிருந்தன சீட் பெல்ட் மூலம் பிணைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு ரோஜாப் பந்துகள்.
அவர்களைப் பார்த்ததும் அவளது இதழ்களில் புன்னகை அரும்பியது.
“பாஸ்ட்டா போ வரூ” என்றாள் ஒருத்தி அதிகாரமாக. “எஸ் வரூ, பாஸ்டா போ! அப்பதான் ஸ்விங்ல வேற கிட்ஸ் இருக்க மாட்டாங்க” என ஒத்து ஊதினாள் மற்றவள்.
“நிறைய ட்ராபிக்கா இருக்கில்ல. இந்த ரோட்ல இதை விட பாஸ்டா போக முடியாது குஜிலீஸ். என்ன என்ன செய்ய சொல்றீங்க” எனச் சலிப்பாக அவர்களுக்குப் பதில் கொடுத்தவள் சாலையில் கவனத்தைப் பதித்தாள்.
“ரொம்ப லேட் ஆகிடாத வர்ஷி! இவங்க அப்பா மட்டும்னா பரவாயில்ல. இன்னைக்கு கிருஷ்ணாவும் வரப்போறாரு. கூடுமான வரைக்கும் அஞ்சரை மணிக்குள்ள திரும்பவரப் பாரு” என அரை மனதாகத்தான் பிள்ளைகளை அவளுடன் அனுப்பிவைத்தாள் அவளுடைய அக்கா சிவரஞ்சனி.
“ஏன்க்கா, பிள்ளைங்க மேல அப்படியே பாசம் பொங்கி வழியுதாமா உன் புகுந்த வீட்டு மனுஷங்களுக்கு. அமெரிக்கால இருந்து வரவன் உன் பிள்ளைகளை பார்க்க நேரா இங்கதான் வரப்போறானா? பகல் கனவு காணாதக்கா! அப்படியே வந்தாலும் அவங்க கொஞ்ச நேரம் வெயிட் பண்ணட்டும், பரவாயில்ல? குட்டிங்க கூட ஸ்பென்ட் பண்ண எனக்கே எப்பவாதுதான் நேரம் கிடைக்குது. அதையும் பங்கு போட்டுட்டு” எனக் கடுப்படிக்க, ரஞ்சனியின் முகம் சற்று கருத்துதான் போனது.
“அவன் இவன்னு மரியாத இல்லாம என்ன பேச்சு இது வர்ஷி” என அவளுடைய அம்மா சித்ரா ஒரு பதட்டத்துடன் மகளிடம் எகிற, “சாரி, சீக்கிரம் வர ட்ரை பண்றேன்” என இறங்கிவந்தவள், இந்த வாண்டுகள் இரண்டையும் காருக்குள் திணித்து வாகனத்தைக் கிளப்பினாள்.
மூன்றாவதாக ஒருத்தியும் இங்கே இருக்கிறாள். ஆழ்ந்த நித்திரையில் இருக்க, நல்ல வேளையாக அவள் வரவில்லை. மூன்று போரையும் ஒரே நேரத்தில் இவள் ஒருத்தியால் சமாளிக்க இயலாது. கூட வரச்சொல்லி அம்மாவைக் கெஞ்ச வேண்டும். கை வலி கால் வலி என் சாக்கு சொல்லித் தவிர்க்கவே பார்ப்பார் சித்ரா. ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து களைத்துப்போயிருக்கும் ரஞ்சனியும் கூட வரமாட்டாள்.
போதாத குறைக்கு வீட்டு மாப்பிள்ளையும் அவருடைய தம்பியும் வேறு வரப் போகிறார்கள். இவளுடைய அம்மாவுக்கும் அக்காவுக்கும் அவர்கள் இருவரையும் உபசரிக்கவே நேரம் சரியாக இருக்கும். அப்பாவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அமேசான் காட்டிலிருந்து திரும்ப வந்திருக்கும் அறிய வகை உயிரினத்தைப் பார்த்த பின் அவருக்குத் தலையும் புரியாது காலும் புரியாது.
ஒரு உஷ்ண மூச்சு எழுந்தது அவளுக்கு.
அந்த கிருஷ்ணாவை அவளுடைய அக்காவின் திருமணத்தின் போது பார்த்ததுதான். அதன் பின் அமெரிக்கா சென்றுவிட்டான். இடையில் ஓரிரு முறை இங்கே வந்து சென்றிருக்கக் கூடும், இவள் வெளி மாநிலத்தில் தங்கிப் படித்துக் கொண்டிருந்ததால் அவனைச் சந்திக்கவேயில்லை.