வாழ்க்கை வளர்பிறைதான்!
வெயில் தன் உக்கிர நிலையை அடையாத ஜனவரி மாதம், மயக்கும் மாலை மயங்கி, மெல்லிய இருள் பரவ தொடங்கியிருந்தது.
எலியட்ஸ் பீச், அதற்கே உரித்தான ஆரவாரத்துடன் ஆர்பரித்திருக்க, பலரும் உட்கார்ந்து, நின்று நடந்து எனக் கடற்கரை காற்றை அனுபவித்துக் கொண்டிருந்தனர்.
அங்கே மணலில் வீடு கட்டி, விளையாடிக் கொண்டிருக்கும் தம் மக்கள் இருவரையும் கண்களில் நிறைத்தவாறு, மணலில் உட்கார்ந்திருந்தவளைக் கலைத்தது, அந்த குரல். "ஹை நிலா! ஐ ஆம் சூர்யா!"
'ச்ச! எதனை வருடங்கள் கடந்தாலும் காதுக்குள் குளவி கொட்டும் வலி வருதே!' என எண்ணியவாறு திரும்ப, அங்கே நின்றிருந்தாள் சூர்யா. தன் இயல்பாக அவளைப் பார்த்துப் புன்னகைத்தவளாக, எழுந்தவள், "ஹை சூர்யா! எப்படி இருக்க?" என கேட்கவும்,
"ஹா! எனக்கு என்ன! ஐம் ஆல்வேஸ் பைன்! ஆனா நீ இன்னும் உயிரோட இருப்பேன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல! உண்மையிலேயே நீ ரொம்ப ஸ்ட்ராங்தான்!" என்றாள் சூர்யா கொஞ்சமும் குறையாத அகந்தையுடன்.
"இந்த உலகம் ரொம்ப கருணை நிறைஞ்சது சூர்யா! அதுல உனக்கு எனக்கு எல்லாருக்குமே இடம் நிறையவே இருக்கு! நான் ஏன் சாகனும்!' என்றாள் நிலா தன்மையாகவே.
"டென் இயர்ஸ் இருக்குமா! லாஸ்ட் செமஸ்டர் எக்ஸாம்ஸ்க்கு முன்னால, நம்ம காலேஜ் கான்டீன்ல வெச்சு பார்த்தது இல்ல? அதோட இப்பதான் பாக்கறோம்" என்றாள் சூர்யா.
சூர்யாவை அருகில் வைத்துக்கொண்டே, 'உன்னைக் கல்யாணம் பண்ணிக்க எங்க வீட்டுல சம்மதிக்க மாட்டாங்க! நான் இப்ப சூர்யாவைத்தான் லவ் பண்றேன்! அவளை மேரேஜ் பண்ணிக்க ரெண்டுபேர் வீட்டுலையும் சம்மதிச்சுட்டாங்க! என்னை மறந்திடு' என்று ஆகாஷ் சொன்ன அந்த நாளை வாழ்க்கையில் என்றேனும் தன்னால் மறக்கமுடியுமா.
அவர்கள் அங்கிருந்து சென்ற பிறகும், கண்களில் கணீர் வழிய அவள் உட்கார்ந்திருக்க, அனைத்தையும் பார்த்துவிட்டு, ப்ரித்வி அவளை நெருங்கி வந்து பேசிய அந்த நாளை அவளால் என்றுமே மறக்கவே முடியாதுதான். எண்ணியவாறே நிலா சற்று தள்ளி இருந்த கடையை நோக்க, அனிச்சை செயலாக சூர்யாவும் அந்த திசையில் திரும்ப, அங்கே எதோ உணவு பண்டங்களை வாங்கியவாறு நின்றிருந்தவனைப் பார்த்து, சில நொடிகளில் அவன் யார் என்பதையும் உணர்ந்துகொண்டாள் அவள்.
"ஓஹ்! கடைசியா உன் தகுதிக்கு பொருத்தமானவனாதான் பிடிச்சிருக்க போல இருக்கே!"
என நக்கலாகக் கேட்டவள், "மெரிட்ல சீட் வாங்கி எனக்குச் சமமா, அந்த காலேஜ்ல வந்த இல்ல. படிப்பு கல்ச்சுரல்ஸ் எல்லாத்துலயும் என்னை பின்னால தள்ளிட்டு, கடைசியா காலேஜ்ல எல்லா பொண்ணுங்களும் ட்ரீம் பாய்ன்னு பார்த்து ஏங்கினவன, உன் பின்னால சுத்த வெச்சியே! இப்ப என்ன ஆச்சு பார்த்தியா!
கான்டீன்ல வேலை செய்துட்டு இருந்தவனைத்தானே கல்யாணம் பண்ணியிருக்க!" என நக்கல் குறையாமல் அவள் கேட்டுக்கொண்டே போக, அதுவரை அமைதியாக இருந்தவள், "ஆமாம்! ஒரு சின்ன பெண்ணோட மனசை காதல்னு சொல்லி ஏமாத்தி, சுக்கு நூறா உடைச்சிட்டு போனவனை மறந்துட்டு, உடைந்த துகள்களை அழகா சேர்த்து சிற்பமா, தன்னுடைய வார்தைகளால மாற்ற தெரிஞ்ச ஒருத்தரை, மொத்தமா மனம் சிதைந்து போய் நின்ற ஒரு பெண்ணை, அவள் நிமிர்ந்து நிற்கும் அளவுக்கு அவளுக்கு தன்னம்பிக்கை கொடுக்க தெரிஞ்ச ஒருத்தரை, பிற உயிர்களை மதிக்க தெரிஞ்ச ஒருத்தரைத்தான் நான் கல்யாணம் பண்ணிட்டு இருக்கேன்.
நான் ஒன்னும் குறைந்து போயிடல! நீயும் நல்லபடியா இருக்கணும்னு கடவுளை வேண்டிக்கறேன் சூர்யா! பை!"
என்று சொல்லிவிட்டு அவள் அங்கிருந்து செல்ல எத்தனிக்க, "இப்ப எங்க வேலை பார்த்துட்டு இருக்க?" தெரிந்துகொள்ளும் அவலில் கேட்டாள் சூர்யா.
"நிலா ப்ரித்விராஜன் அப்படினு கூகுள் பண்ணி பாரு சூர்யா உனக்கே தெரியும்!" என்று நிமிர்வுடன் சொல்லிவிட்டு, அழகிய மலர்களைப் போன்றிருக்கும் பிள்ளைகளை இரண்டு கைகளிலும் பிடித்துக்கொண்டு கணவனை நோக்கிப் போனாள் நிலா!
கட்டுமானத்துறையில் கொடி கட்டி பறக்கும் 'காலக்சி பில்டர்ஸ் அண்ட் ப்ரோமோட்டர்ஸ் லிமிடெட்' சேர் பர்ஸன் நிலா ப்ரித்விராஜனா?' அதிர்ந்துபோய் நின்றாள் சூர்யா.
vமுற்றும்v
Comments