top of page

விதைப்பந்து - 10

Updated: Jan 15, 2023



விதைப்பந்து


10-புனிதம்


விதை பந்தின் இந்த அத்தியாயத்திற்கு ஏன் இந்த தலைப்பு மற்றும் முகப்பு படம் என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம்! அதன் காரணத்தை இந்த பகுதியின் இறுதியில் தெரிந்துகொள்வீர்கள்.


சரி...


கதைக்கு வருவோம்!


சோமாலியா- கிழக்கு ஆப்பிரிக்கால இருக்கற ஒரு குட்டி நாடுதான் அது. சோமாலியான்னு சொன்னாலே பஞ்சம் பசி பட்டினி இதெல்லாம்தான நமக்கு நினைவுக்கு வரும்? ஆனா இனிமேல் இந்த கதையும் உங்க நினைவுக்கு வரும்.


அந்த நாட்டுல ஒரு குட்டி பொண்ணு இருந்தா. அவ ஒரு (ஆப்பிரிக்க) பழகுடியினத்த சேர்ந்தவ.


கொடுமையான வறண்ட பாலைவன காட்டுப் பகுதியிலதான் அவங்களோட வாழ்க்கை. ஒட்டகம் மேய்க்கறதுதான் அவங்களோட முக்கியமான வேலை.


அவங்க வளர்க்கிற கால்நடைகளுக்கு உணவும் தண்ணியும் எங்க கிடைக்குதோ அந்த இடத்தை தேடி போயிட்டே இருக்கவேண்டிய கட்டாயத்தால அவங்க ஒரே இடத்துல அதிக நாள் குடியிருக்க மாட்டாங்களாம்.


ஈஸியா கட்டி தூக்கிட்டு போக வசதியா புற்கள் குச்சிகள் கொண்டு வேயப்பட்ட குடிசைலதான் வசிப்பாங்க.


அந்த குட்டி பொன்னும் அப்படி ஒரு குடிசைலதான் வசிச்சிட்டு இருந்தா.


சிக்கங்களோட கர்ஜனைக்கு கூட அவ பயந்ததில்ல. ஒட்டகசிவிங்கி கூடவும் நரிகள் கூடவும் ஓடி விளையாட அவளுக்கு அவ்வளவு பிடிக்குமாம்.


தான் வாழும் அந்த எளிமையான வாழ்க்கைமுறைல கூட அவ சந்தோஷமாதான் இருந்தா அப்படி ஒரு சடங்கு அவளுக்கு நடக்கற வரைக்கும்.


ஒரு நாள் விடியகாலைல அவ அசந்து தூங்கிட்டு இருக்கும்போது அரக்கப்பரக்க அவளை எழுப்பி வேக வேகமா அவளை தயார் செஞ்சு அவளோட அம்மா அவளை ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போனாங்க.


தூக்க கலக்கத்துல அவளுக்கு என்ன ஏதுன்னு ஒண்ணுமே புரியல.


அவங்க வந்து சேர்ந்தது அந்த பொட்டல்காட்டுல இருக்கற ஒரு இடம்தான். அங்க ஒரு பெரிய பாறை இருந்தது.


அதுல காய்ஞ்சு உறைஞ்சுபோயிருந்த ரத்தத்தை பார்த்ததும் அவளுக்கு என்ன நடக்க போகுதுன்னு நல்லாவே புரிஞ்சுபோச்சு. ஏன்னா கொஞ்ச நாளைக்கு முன்னால அவளோட அக்காவுக்கும் அவ கூட விளையாடி திரிஞ்ச இன்னும் ஒரு பெண்ணுக்கும் அதுதான் நடந்தது.


தூக்கம் மொத்தம் தூர போக பயத்துல அவளுக்கு உதறல் எடுக்க, 'எனக்கு இது வேணாம். என்னை விட்டுடு அம்மா' ன்னு சொல்லி ஓன்னு கத்தி அழ ஆரம்பிச்சா அவ.


'அது எப்படி விட முடியும்? இதை நீ செஞ்சுக்கலன்னா நீ காம வெறி பிடிச்ச கேடு கெட்ட பெண்ணா ஆகிடுவ. நீ புனிதமிழந்தவளா கருதப்படுவ. நம்ம சமூகம் உன்னை ஒதுக்கி தள்ளும்! உனக்கு கல்யாணம் நடக்காது' என அவளுடைய வயதுக்கு மீறிய விஷயங்களை அவளுக்குப் புரியவைக்க முயன்றவாறு பலவந்தமா அவளை அந்த பாறை மேல படுக்க வெச்சாங்க அவளோட அம்மா. இன்னும் சில பொண்ணுங்க அவளோட கையையும் காலையும் அழுத்தமா பிடிச்சுக்க, அவங்க குலத்துல இருக்கும் மருத்துவச்சி மாதிரியான ஒரு மூத்த பெண்மணி அவங்க கையில வெச்சிருந்த ஒரு துருபிடிச்ச பிளேடால அவளோட பெண் உறுப்பை அறுக்க ஆரம்பிச்சாங்க. ரத்தம் பீறிட்டு கிளம்ப வலியால துடிச்சு அலறினா அந்த குட்டி பொண்ணு. ஆனா யாருமே அவளுக்கு இரக்கம் காண்பிக்க தயாரா இல்ல.


அதோட நிறுத்தல அவங்க. அவ சிறு நீர் கழிக்க மட்டும் ஒரு மிளகு அளவுக்கு ஒரு குட்டி ஓட்டைய விட்டு வெச்சுட்டு கருவேல மர முள் மாதிரி ஒரு முள்ளால ஓட்டை போட்டு நூல் வெச்சு தைச்சு அப்பறம்தான் அவளை விட்டாங்க.


அதுக்கு பிறகு அவள் அனுபவிச்ச நரக வேதனைய வார்த்தையால விவரிக்க முடியாது. அந்த காயம் ஆறவே பல வாரங்கள் பிடிச்சது. அதுக்கு பிறகு ஒவொரு சொட்டு சிறுநீர் கழிக்கும்போதும் வலி உயிர்போச்சு.


இன்னும் சொல்லனும்னா அந்த பெண்ணுறுப்பு சிதைப்பு சடங்கு நடந்து முடிஞ்சதுக்கு பிறகு அது சீழ் பிடிச்சு செப்டிக் ஆகி பல சிறுமிகள் இறந்தே போயிருக்காங்க.


நல்லவேளையா அவ கொஞ்சம் கொஞ்சமா குணமாகி அந்த கொடுமையோடவே வாழ பழகி கொஞ்சமாவது நிம்மதியா இருந்தா. ஆனா அவளோட பதிமூணாவது வயசு வரைக்கும்தான் அந்த நிம்மதியும் நீடிச்சது.


அஞ்சு ஒட்டகம் தரேன்னு சொன்ன ஒரே காரணத்துக்காக பதிமூணே வயசான அந்த சிறுமியை ஒரு அறுபது வயசு கிழவனுக்கு கல்யாணம் செய்துவைக்க முடிவுசெஞ்சார் அவளோட அப்பா.


அந்த கெடுதல்லயும் ஒரு நல்லதா, அவ அம்மா அவளுக்கு உதவி செய்ய வீட்டை விட்டே ஓடினா அந்த குட்டி பொண்ணு.


காட்டு வழிப் பாதைல பல மயில் தூரத்தை சாப்பாடு தண்ணி இல்லாம நடந்தே கடந்து ஒரு சிங்கத்துக்கிட்ட இருந்து தப்பி பல மனித மிருகங்கள் கிட்டயிருந்து தப்பி கிட்டத்தட்ட முன்னூறு மயில் தள்ளி இருந்த அவளோட சித்தி வீட்டுக்கு ஒரு வழியா வந்து சேர்ந்தா.


அங்க வேற ஒரு உறவினரை சந்திக்கிற வாய்ப்பு அவளுக்கு கிடைக்க, அவர் லண்டன்ல இருக்கற சோமாலிய தூதரகத்துல வேலை செய்யறது தெரிஞ்சது. லண்டன்ல வீட்டு வேலை செய்ய ஆள் தேவையா இருக்கவும் அவர் கிட்ட கெஞ்சி கூத்தாடி அவரோட அங்க போனா.


அங்க ஒரு நாலு வருஷம் வீட்டு வேலை பார்க்க, மறுபடியும் தாய்நாடு திரும்பும் நிர்பந்தம் ஏற்பட்டது. ஆனா மறுபடியும் அங்க திரும்பி வர விரும்பாம பாஸ்போர்ட் தொலைஞ்சு போனதா பொய் சொல்லி பல தில்லாங்கடி வேலை செஞ்சு எப்படியோ சூழ்நிலையை சமாளிச்சா.


அப்பறம் ஒரு ஃப்ரெண்ட் மூலமா மெக்டொனால்ட்ல வேலைக்கு சேர்ந்தா. பாத்திரம் கழுவறது தரை துடைப்பது மாதிரி வேலை அவளுக்கு கிடைச்சது.


அந்த சந்தர்பத்துலதான் டெரஸ் டோனோவன் என்ற புகைப்பட கலைஞனின் கண்கள்ல பட அவ வாழ்க்கைல அப்படி ஒரு அற்புதம் நடந்தது.


அவர் மூலமா அவ மாடலிங் செய்ய ஆரம்பிச்சா.


ஆனாலும் அவளுக்கு நடந்த பெண்ணுறுப்பு சிதைப்பு காரணமா வலியை அவ தொடர்ந்து அனுபவிச்சபடியே இருந்தா. அதுவும் மாதவிடாய் சமயத்துல அப்படி ஒரு வேதனையை அனுபவிச்சா.


ஒரு சந்தர்ப்பத்துல அது அவளோட லண்டன் தோழிக்கு தெரியவர, இப்படியெல்லாம் கூட சடங்குகள் இருக்குமா அப்படின்னு நம்ப முடியாத அதிர்ச்சி ஏற்பட்டது அந்த தோழிக்கு. அந்த இரண்டுபேருக்குள்ளேயும் நடந்த பலவிதமான வாக்குவாதங்களுக்குப் பிறகு அவளோட உதவியோட மருத்துவ பரிசோதனைக்கு போனா அந்த பெண். அறுவை சிகிச்சை செஞ்சா மட்டுமே தீர்வுன்னு தெரிய வந்தது. என்ன இருந்தாலும் அது ஒரு பண்பாட்டு விரோத செயல் இல்லையா? துணிச்சு அதையும் செஞ்சா.


ஒரு வழியாக வருடக்கணக்கில் அந்த பெண் அனுபவித்து வந்த சித்ரவதை முடிவுக்கு வர அதன் பிறகு அவர் வாழ்க்கையில் அடைந்த உயரம் இதுவரை யாரும் தொடாதது.


அந்தப் பெண் யார் தெரியுமா?




வெள்ளை நிற தோலும் அடர்ந்த கருத்த/பொன்னிற கூந்தலும் செதுக்கிய முகமும் பவளம் போன்ற கீற்றான உதடுகளும்தான் பெண்களின் அழகு என அனைவராலும் நம்பப்படும் வரையறைகளை அதுவும் மாடலிங் உலகில் துகள்களாக நொறுக்கிய கறுப்பின அழகி, பற்பல விருதுகளை அள்ளிக்குவித்த ‘செவாலியே – வாரிஸ் டைரி’தான் அவர்.


முன்னனி மாடல் அதன்பின் நடிகை, எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர். 1997இல் இருந்து 2003வரை ஐக்கிய நாடுகள் சபையின் நல்லெண்ணத் தூதராக பணியாற்றிய பெருமை பெற்றவர்.


தான் வளர்ந்தாயிற்று உலகப் புகழ் பெற்றாயிற்று என அத்துடன் நின்றுவிடாமல் தான் சார்ந்திருக்கும் சமூகம் முன்னேற, தான் அடைந்த இழி துயர் மற்ற பெண் குழந்தைகள் அனுபவிக்காமல் இருக்க சீரிய நோக்கத்துடன் ‘டெசர்ட் ஃப்ளவர் ஃபவுண்டேஷன்’ என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் சூடான், எத்தியோப்பியா, கென்யா, சோமாலியா, பெர்லின், நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து போன்ற ஏராளமான நாடுகளில் பெண் உறுப்புச் சிதைப்பைத் தடுக்கும் பணியை இன்றுவரை செவ்வனே செய்துவருகிறார். ஏற்கெனவே பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சையளித்து மறுவாழ்வு கொடுக்கிறார். விழிப்புணர்வு ஏற்படுத்தி எண்ணற்ற பெண் குழந்தைகளைக் காப்பாற்றி அவர்களுக்குக் கல்வி

அளிக்கிறார்.



‘அறுவை சிகிச்சை முடிந்த சில நாட்களில் என்னால் ஒரு மிகப் பெரிய காரியம் செய்ய முடிந்தது. அது என்னவென்றால் என்னால் நிம்மதியாக சிறுநீர் கழிக்க முடிந்தது. நான் வாழ்க்கையில் பரவசமடைந்த நாள் எதுவென்றால் அது அந்த நாள் தான். ஒரு நிமிடத்திற்குள் செய்யவேண்டிய அந்த காரியத்தை இவ்வளவு வருடமாக நான் அரைமணிநேரம் செய்து கொண்டிருப்பேன், சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறுவதை வலியுடனும், வேதனையுடனும், பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருப்பேன். இவ்வளவு நாள் அந்த சிறுநீர் கழிப்பது என்பது எனக்கு அவ்வளவு பெரிய காரியம்.’ என குறிப்பிடுகிறார் வாரிஸ் டைரி. எவ்வளவு வலி நிறைந்த வார்த்தைகள் இவை.


‘எனது சிறுவயதில் எனக்கு என்ன நடந்தது என்று எனது நெருங்கிய நண்பர்களுக்குக் கூட தெரியாது, சோமாலியாவில் நெடுங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு தனிப்பட்டக் கலாச்சாரம் பல கோடி முகமறியாதவர்களின் அந்தரங்கத்தை பற்றி பேசியிருக்கிறேன். நான் என்னிடமுள்ள மிக முக்கியமான ரகசியம் ஒன்றை உங்களிடம் சொல்லியிருக்கிறேன்’ என அவர் ஒரு பிரபல தொலைக்காட்சி பேட்டியில் தன் கதை முழுவதையும் சொல்லி முடிக்க அவருக்கு எதிரே அமர்ந்திருந்த நிருபர் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தார்.


‘ஐந்து வயதில் நிகழ்த்தப்பட்ட அந்த வன்முறையின் பாதிப்பு உயிர் உள்ள வரை போகாது. ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும் உயிர் போய்விடும். மாதவிடாய் நேரத்திலும் மிகுந்த துன்பம். உறுப்புச் சிதைக்கப்பட்ட நான்கு குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் நோய்த் தொற்றால் மரணத்தைச் சந்தித்துவிடுகின்றன. இதனால் வாரிசின் சகோதரி கூட மரணம் அடைந்தார். கன்னித் தன்மையைப் பாதுகாப்பதற்காக மதத்தின் பெயரால் இந்த வன்முறை நிகழ்த்தப்படுகிறது. திருமணத்தின்போதுதான் தையலை வெட்டிவிடுவார்கள். குடும்பம் நடத்துவதும் குழந்தை பிறப்பும் கஷ்டம்.


தாயும் குழந்தையும் இறந்துவிடும் அபாயம் அதிகம். ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் வசிப்பவர்கள் மட்டுமில்லை. அங்கிருந்து வந்து ஐரோப்பாவில் வசிப்பவர்கள்கூட எவ்வளவு படித்திருந்தாலும் தங்கள் பெண் குழந்தைகளுக்கு இதைச் செய்யாமல் விடுவதில்லை. மதம் என்று வந்துவிட்டால் அங்கே கேள்விக்கே இடமளிப்பதில்லை’ என்கிறார் வாரிஸ்.


பெண் பிறப்புறுப்பு சிதைப்பு ஆப்பிரிக்காவிலுள்ள இருபத்தெட்டு நாடுகளில் பெருவாரியாக நடந்து வருகிறது. என் கதையின் மூலமாக இனி இப்படியொரு கொடுமை எந்த பெண்ணுக்கும் நடக்கவில்லை என்றால் எனக்கு அதுவே போதும் என்கிறார் அவர்.


ஆண்-பெண் சமத்துவம், பெண்ணுரிமை, பெண் கல்வி, பெண் ஆரோக்கியம், மனித உரிமைகள் போன்றவற்றுக்காகப் போராடும் வாரிஸ் டைரி நம் சமகால சாதனைப்பெண்மணி என்பதில் நாம் பெருமை கொள்ளவேண்டும்.


***




ஆமாம், அது என்ன பெண்ணுறுப்பு சிதைப்பு?


இதற்கான பதிலாக விக்கிபிடியாவிலிருந்து எடுத்த தகவல்கள்.


பெண் உறுப்பு சிதைப்பு (ஆங்கிலம்: Female genital mutilation) என்பது பெண்ணின் நரம்புகள் குவிந்த கந்து முனையை வெட்டி அகற்றுவதாகும். இது உகாண்டா, சோமாலியா உள்ளிட்ட ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களிடையே சிறுமிகளுக்கு நடைபெறும் ஒரு சடங்கு ஆகும். இது வழமையான அகற்றுவோரால் கத்தியைக் கொண்டு மயக்க மருந்து கொடுத்தோ, கொடுக்காமலோ செய்யப்படுகின்றது. ஆப்பிரிக்காவின் 27 நாடுகளிலும் இந்தோனேசியா, ஈராகி குர்திசுத்தான், யேமன் நாடுகளிலும் இது செறிவாக உள்ளது; ஆசியா, நடு கிழக்கு, மற்றும் உலகின் பிற பகுதிகளில் இவ்வினத்தோர் வாழுமிடங்களில் இது நடைபெறுகின்றது.


கந்து அகற்றம் நடத்தப்பட்ட ஒரு பெண், வாழ்வில் ஒருபோதும் கலவி இன்பத்தை அனுபவிக்கவே முடியாது. அவள் கலவிக்குத் தகுதியானவளாக இருந்தாலும் அப்பெண்ணால் புணர்ச்சிப் பரவசநிலையை (Orgasm) அடைய முடியாது. இந்த வழக்கத்தால் கந்து அகற்றப்பட்ட சிறுமிகளுக்கு உடல் மற்றும் மன ரீதியான பல பிரச்சினைகள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.


ஆப்பிரிக்காவில் 28 நாடுகளில் இந்த வழக்கம் தற்போதும் பின்பற்றப்படுகிறது. 13 கோடி பெண்களுக்குக் கந்து அகற்றல் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது. மேலும் நாளொன்று 6000 பெண்கள் இதற்கு ஆட்படுவதாகச் சொல்கிறது. பிளேடு, கத்தி, உடைந்த கண்ணாடிச் சில்லுகள் மூலம்தான் கந்து அகற்றப்படுகிறது.


சேதப்படுத்தும் முறை இனக்குழுக்களைப் பொறுத்து மாறுபடுகின்றது. பெண்குறித்தலை மற்றும் பெண்குறிக் காம்பு நீக்கம், உட்புற சிற்றுதடுகள் நீக்கம், வெளிப்புற பேருதடுகள் நீக்கம் மற்றும் பெண்குறி மூடுதல் என பல்வேறு நிலைகளில் சேதப்படுத்தப்படுகின்றன. கடைசி முறையில் பெண்ணின் சிறுநீர்/விடாய் பாய்மம் செல்ல சிறுதுளை மட்டுமே விடப்படுகின்றது; பாலுறவிற்காகவும் குழந்தைப் பிறப்பிற்காகவும் யோனி தேவையானயளவிற்கு திறக்கப்படுகின்றது. செய்முறைக்கேற்ப உடல்நலம் பாதிக்கப்படுகின்றது. அடிக்கடி நேரும் தொற்றுகள், நீங்கா வலி, கட்டிகள், குழந்தைப் பேறின்மை, குழந்தைப் பிறப்பின்போது சிக்கல்கள், உயிராபத்தான குருதிப்போக்கு என்பவை சிலவாம்.[7] இதனால் எந்தவொரு உடல்நலச் சீரும் இல்லை.


பாலினச் சமனிலையின்மை, மகளிர் பாலுணர்வைக் கட்டுப்படுத்துதல், கற்பு, தூய்மை, அழகியல் பொன்ற கருத்தியல்கள் இதன் பின்னணியாக உள்ளன. இது பொதுவாக தாய்மார்களால் செய்யப்படுகின்றது. தங்கள் மகள்களுக்கும் பேத்திகளுக்கும் சேதப்படுத்தாவிட்டால் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்படுவார்களோ என்ற அச்சமும் செய்தமையால் பெருமையும் இதற்கு தூண்டுதலாக உள்ளது. நிலவரப்படி கிட்டத்தட்ட 30 நாடுகளில் குறைந்தது 200 மில்லியன் பெண்களும் சிறுமியரும் இதற்கு ஆளாகியுள்ளனர்.[3] ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியத்தின் 2010ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி பாதிக்கப்பட்ட பெண்களில் 20% வரை பெண்குறி அடைக்கப்பட்டுள்ளனர்; இது வடகிழக்கு ஆப்பிரிக்காவில் குறிப்பாக சீபூத்தீ, எரித்திரியா, எதியோப்பியா, சோமாலியா மற்றும் வடக்கு சூடான் நாடுகளில் கடைபிடிக்கப்படுகின்றது.


பெண்ணுறுப்புச் சிதைப்பு இது கடைபிடிக்கப்படும் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது அல்லது மட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும் இச்சட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்படுவதில்லை. 1970களிலிருந்து இதை கைவிடத் தூண்டி பன்னாட்டு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன; ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, 2012இல் பெண்ணுறுப்புச் சேதம் மானித உரிமை மீறலாக அறிவித்து இதற்கெதிரான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது.]


ஆமாம் நாம்தான் ஒரு முன்னேறிய சமுதாயத்தில் பாதுகாப்பாக இருக்கிறோமே! இதைப் பற்றி எல்லாம் இப்பொழுது விவாதிக்க வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி வாசகர்களுக்கு எழலாம்.


ஆனால் இந்த கேள்வியை கேட்பதற்கு முன்பாக ஒரு விஷயத்தை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.


இருக்கும் அத்தனை கண்டங்களிலும், அத்தனை நாடுகளிலும், எல்லா மதங்களிலும், இது போல ஏதோ ஒரு சடங்கு என்கிற பெயரில் பெண்களுக்கு அநீதியை இழைத்துக்கொண்டே இருக்கிறார்களே என்ன காரணம்?


பெண்களுக்கு அவர்கள் உடல் மீதான உரிமை - சுதந்திரம் இருக்கவே கூடாது என்பதைத் தவிர அந்த காரணம் வேறு என்னவாக இருக்க முடியும்?


ஆனால் ஏன்?


ஏனென்றால்...


ஆறறிவு படைத்த மனிதன் என்கிற பெருமையில், ஒருவன் பிறந்தது முதல் இறக்கும் தருவாய் வரை அவனுக்கென்று ஏகபட்ட கடமைகளை இந்த சமுதாயம் கற்பித்துவைத்திருந்தாலும் இந்த உலகத்தில் ஜனிக்கும் ஒவ்வொரு உயிருக்கும் இயற்கை விதித்திருக்கும் உண்மையான ஒரே ஒரு கடமை என்பது தனது மரபணுவை இந்த உலகம் இருக்கும் வரை இந்த மண்ணில் தக்க வைத்துக் கொள்வது என்பது மட்டுமே


இப்பொழுது இந்த உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா என்கிற மிக ஆபத்தான கிருமி தன்னை தகவமைத்துக் கொள்வதற்கு எப்படி மனித உடலை தேர்ந்தெடுக்கிறதோ அது போலத்தான் ஆண்களும்.


கருப்பை என்ற ஒன்று இல்லாத காரணத்தால் அவர்களுக்கு அவர்களது மரபணுவை வளர்க்க ஒரு பெண்ணின் உடல் தேவைப்படுகிறது. (பிள்ளை பெறுவதற்காக தன கணவனுக்கு வேறு திருமணம் செய்துவைத்த பெண்களின் கதைகள் ஏராளம் உண்டிங்கே. அறிவியல் வளர்ச்சியடைந்த இந்த காலத்தில் தன் உயிரை உருக்கி Fertility treatment செய்துகொள்ளும் பெண்களை ஆயிரக்கணக்கில் பார்க்கிறோம். வாடகைத்தாய் மூலம் பிள்ளை பெற்றுக்கொள்வதைக் கூட பெண்கள் சுலபமாக ஏற்றுக்கொண்டு விடுவார்கள். ஆனால் வேறு ஒரு ஆணின் விந்தணு மூலம் தன் மனைவி பிள்ளை பெறுவதை நம் சமூகத்தில் அவ்வளவு சுலபமாக எந்த ஆணும் ஏற்பதில்லை)


அடிப்படையிலேயே கர்ப்பப்பையை தன் உடலுக்குள் வைத்திருப்பதால் தன்னுடைய மரபணுவை இந்த உலகம் உள்ளவரை தக்கவைத்துக் கொள்வதற்கு ஒரு பெண்ணுக்கு வேறு ஒரு உடல் தேவைப்படுவதில்லை. அவள் கருவில் சுமந்து பெற்றெடுக்கும் பிள்ளை அவளுடையதா இல்லையா என்பதில் அவளுக்கு ஊசி முனை அளவு சந்தேகம் எழுவதற்குக் கூட வாய்ப்பே இல்லை. எனவே எந்த ஒரு பெண்ணும் தன் வாரிசை குறித்து கவலைப்பட வேண்டிய நிலையில் இல்லை.


ஆனால் தன் வாரிசு குறித்த அப்படிப்பட்ட கவலை பயம் பாதுகாப்பின்மை ஒரு ஆணுக்கு கட்டாயம் இருக்கிறது.


மற்ற உயிரினங்களில் பலம் பொருந்தாத உயிரிகளாள் தங்கள் மரபணுவை தக்கவைத்துக்கொள்ள நிச்சயம் முடியாது.


இதை புரிந்து கொண்டதால் ஒரு ஆண் தன் மரபணுவை தக்கவைத்துக்கொள்ள ஒரு பெண்ணை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு அடிமைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான்.


அந்த ஒரே ஒரு காரணத்தினால்தான் பெண்கள் அவர்கள் உடல் மீது இருக்கும் அவர்களது சுதந்திரத்தை இழக்கிறார்கள்.


அந்த சுதந்திரத்தை இழப்பதற்கான ஒரு குறியீடுதான் இதுபோன்ற சடங்குகளும் சம்பிரதாயங்களும். சில இடங்களில் உடல் ரீதியாக செய்யப்படுகிறதென்றால் சில இடங்களில் மனோதத்துவ ரீதியாக கட்டுப்படுத்தப்படுகின்றது!


பெண்களின் மனதை மதம் இனம் கடவுள் புனிதம் இது போன்ற வார்த்தைகளால் கட்டுப்படுத்தி வைத்தால் மட்டுமே ஒரு ஆண் தன்னுடைய மரபணுவை வளர்த்துக் கொள்ள முடியும் என நம்பியதால் ஏற்படுத்தப்பட்ட கொடுஞ்செயல்கள் தான் இவையெல்லாம்.


நமது சமுதாயத்தில் பெண்களுக்கு மட்டும் மறுமணம் மறுக்கப்பட்டு, உடன் கட்டை ஏறுதல், விதவை என்ற பெயரில் பெண்களை மொட்டையடித்து மூலையில் உட்கார வைத்தது போன்றவை இத்தகைய கட்டுப்பாடுகளின் வெவ்வேறு வடிவமே.


இன்றளவும் நம் சமுதாயத்தில் எல்லாமே முற்றிலுமாக அழிந்து போய்விட்டது என்றெல்லாம் சொல்வதற்கு இல்லை. வேறு ஏதோ புதிய வடிவத்தில் புழக்கத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆணவக் கொலைகள் போன்றவையெல்லாம் இதன் ஒரு பகுதிதான்.


இதையெல்லாம் ஒவ்வொரு பெண்ணும் குறைந்தபட்சம் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். நம் அடுத்த தலைமுறை ஆண்களையாவது சரியான படி வழி நடத்த இது உதவுமே!


மற்றபடி நாம் நம் சமூகத்தை மீறி நமது கற்புநெறிகளை மீறி புனிதத்தை கெடுத்து நடந்து கொள்ள வேண்டும் என்று இதற்கு அர்த்தம் இல்லை. இதெல்லாம் அவரவர் விருப்பம், சமயங்களில் சமூகம் வகுத்திருக்கும் இந்த டெம்ப்ளேட்களை உடைத்து முன்னேறி போகும் பெண்களை கேவலமாக பார்ப்பது என்பதையைவது குறைந்தபட்சம் நாம் நிறுத்தலாம் அல்லவா?


சிந்திப்போம்...

விதைப்போம் நற்சிந்தனைகளை!

(KPN Episode)

Recent Posts

See All
நிலமங்கை - 3

விதை பந்து – 3 வால் போய் கத்தி வந்த கதை! ஒரு ஊருல ஒரு குரங்கு இருந்துதாம்! ம்... இந்த மரத்துக்கும் அந்த மரத்துக்கும் தாவித் தாவி...

 
 
 
விதைப்பந்து - 2

விதை பந்து - 2 கதை பிறந்த கதை! பாரத தேசத்தோட தென் பகுதில 'மகிலாரோப்பொயம்' அப்படின்னு ஒரு நகரம் இருந்தது. அதை 'அமரசக்தி'ன்னு ஒரு ராஜா...

 
 
 

Comentarios

Obtuvo 0 de 5 estrellas.
Aún no hay calificaciones

Agrega una calificación
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page