கதைகள்
‘கதைகள்’ இதுதான் இந்த கட்டுரையின் முதல் அத்தியாயம்.
கதை படிப்பது அவசியமா? அது தேவையா? அதனால் என்ன உபயோகம்? நேரம் விரயம் இப்படி நிறைய கருத்துக்களும் கேள்விகளும் நம்மிடையே உலவி வருகின்றன.
முக்கியமாக கதைகள் படிப்பவர்களை பார்த்து நாம் கேட்கிற கேள்விகள் அல்லது நம்மை நோக்கி வர கேள்விகள் அலட்சிய பார்வைகள் நிறைய!
‘இதெல்லாம் படிக்கிற நேத்துல் பாட புத்தகத்தை படிச்சா நீ உருபுடுவ? இதெல்லாம் ஒரு டைம் பாஸா? இந்த மாதிரி கதை படிச்சு நீ என்ன கிழிக்க போற?
இப்படி பல பெற்றோர்கள், நண்பர்கள் நம்மை நோக்கி கேட்க கூடும். அதற்கான பதில்களை தேடிய ஒரு சிறிய பயணம் இது.
ஆனால் ஒன்று. கதைகள் பற்றிய விரிவான அலசல் அல்ல இது. கதைகள் என்ற தலைப்பை மையமாக கொண்டு இலக்கை நோக்கி எய்யப்படும் அம்பு போல அவற்றின் முக்கிய மைய கருத்தை மட்டுமே விளக்குகிறது. அது குறித்து இன்னும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் உடையவர்கள் அவற்றை குறித்த உங்கள் தேடலை நீங்களே விரிவாக்கம் செய்யலாம்.
இங்கே விதைபந்து தூவ மட்டுமே படுகிறது, அது துளிர் விட்டு வளர்வதும் மண்ணோடு மட்கி போவதும் அந்த மண்ணின் (மனதின்) வளமையை பொருத்தது.
சரி… வாருங்கள்… விதைப்போம்…
விதைப்பந்து – 1
கதைகள்
கதைகள் – அதுதான் நம்முடைய நற்சிந்தனைகளுக்கான ஆதி விதைகள்!
ஆம்! அந்த ஆதி விதைகள்தான் இந்த இணைய காலகட்டத்திலும் நம் எல்லோரையும் ஒன்றிணைத்து இணைப்போடும் உயிர்போடும் வைத்திருக்கும் ஒரு முக்கிய கருவியும் கூட!
இந்த கதைகள் என்ற ஒன்று எங்கே எப்போது மனித பயணத்தோடு இணைந்தது என என்றாவது நாம் கணக்கிட்டு பார்த்தது உண்டா? அப்படி யோசித்தோமேயானால் நமக்கு மலைப்புகள்தான் மிச்சமாக இருக்கும்.
இந்த கதை என்ற கருவியை வைத்துதான் மனிதன் தன் சிந்தனைகளை, வாழ்வியலை, சடங்குகளை என்று எல்லாவற்றையும் அடுத்த சந்ததிக்கு கடத்தியிருக்கிறான்.
காரண காரியமே தெரியாமல் இன்றும் நாம் பின்பற்றி கொண்டிருக்கும் பல சடங்குகளுக்கு பின்னணியில் நிறைய நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற கதைகள் உண்டு. அதன் பின்னணியில் ஆழமான ஆன்மிகம் சார்ந்த பல அறிவியல் கருத்துக்கள் பொதிந்திருக்கின்றன. இதெல்லாம் தெரிந்த விஷயங்கள்தானே என்று தோன்றலாம். ஆனால் இந்த விஷயங்களின் ஆணிவேராக நம் முன்னோர்கள் பயன்படுத்திய கருவி எது என்ற கேட்டால் அதுதான் கதைகள்.
பல நூற்றாண்டுளான நூற்றாண்டுகள் தாண்டிய கால இடைவெளிகளை கடந்து நம்மோடு பயணித்து வந்திருக்கும் இந்த கதை என்ற கருவி உண்மையிலேயே வியப்பின் உச்சம்தான்.
இப்படி நம் முன்னோர்கள் நமக்கு நன்னெறிகளை பயக்க சின்ன சின்னதாக சொல்லப்பட்ட கதைகள்தான் ஒரு காலகட்டத்தில் விஸ்வரூபம் தரித்து வரலாறுகளாகவும் புராணங்களாகவும் உருபெற்றன. பின் அதுவே கூத்துக்களாகவும் மேடை நாடகங்களாகவும் உயிர் பெற்றன.
சிறுவயதில் நாம் கேட்கும் கதைகளின் தாக்கமானது நம் வாழ்நாள் முழுக்கவும் இருக்கும். அதற்கு உதாரணம்தான் நம்முடைய தேச தந்தை. அவர் மனித குலத்தின் பெரும் மகாத்மாவாக மாறியதற்கு பின்னணியில் அரிச்சந்திரன் என்ற ஒரு கதை இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
நாம் கேட்கப்படும் கதைகளின் சக்தியானது நமக்குள் உயிர் பெற்று உரு பெற்று நம் கற்பனை திறனுக்கு வேலை கொடுத்து நம் சிந்தனை திறனை பலவிதமாக ஊக்குவித்து உரமேற்றுகிறது.
கதைகளில் இருந்து பெறப்படும் நேர்மறையான சக்திகள் பல நேரங்களில் நம்முடைய பிரச்சனைகளுக்கும் குழப்பங்களுக்கு விடை காண உதவுகிறது என்று சொன்னால் அது மிகையல்ல.
கதை படிப்பது என்பது ஒரு பொழுது போக்கு அம்சமாக மட்டுமே இல்லை. அது ஒரு பாஸிட்டிவ் எனர்ஜி. நமக்கே தெரியாமல் நமக்குள் ஒரு விதமான நம்பிக்கை உணர்வை தோற்றுவிக்கவல்லது. வயது முதிர்ந்து பழுத்த பழமாக மாறிய பின்னும் நம் நினைவுகளுக்குள் பசுமையாக வாழும் வல்லமை கதைகளுக்கு உண்டு.
திருவள்ளுவரே கூட கற்றலை விட கேட்டல் சிறந்தது என்று கூறுகிறார்.
‘செல்வத்துள் செல்வஞ் செவிச்செல்வம அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை.’
என்று கேட்டல் அறிவை மற்ற ஏனைய அனைத்து செல்வங்களை விட சிறந்த செல்வமாக உயர்த்தி பேசுகிறார்.
இதற்கு ஓர் நல்ல உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் அர்ஜுனன் மகன் அபிமன்யுதான். அவனின் வீரமும் போர் அறிவையும் என்னதான் சிறப்பாக பாராட்டினாலும் அவன் சக்கர வியூகத்திற்குள் நுழைந்த வித்தைதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
அந்த வித்தை அவன் தன் அம்மாவின் கருவில் சிசுவாக இருக்கும் போது கதையாக விழுந்த விதை. மண்ணுக்குள் இருக்கும் விதை போல சிறு வயதுகளில் நமக்கு சொல்லப்படும் இந்த கதைகள் யாவும் மனதிற்குள் விதையாக விழுந்து விடுகின்றன.
அது சரியான சமயம் பார்த்து துளிர்விடுகின்றன.
அதனால்தான் கற்றலை விடவும் கேட்டல் நம் அறிவு திறனை யோசிக்கும் திறனை கற்பனை திறனை வளப்படுத்துகிறது. நற்சிந்தனைகளுக்கு வித்திடுகிறது.
திண்ணைகளில் அமர்ந்து கொண்டு பாட்டிகள் சொன்ன கதைகள் கேட்டு வளர்ந்த பேரன்களும் பேத்திகளும் நிச்சயம் சைக்கோ கொலைகாரர்களாக அல்லது காம கொடூரர்களாக மாற மாட்டார்கள்.
நல்லெண்ணமும்… உயிர்கள் மீது இரக்கமும்… தவறு செய்தால் நிச்சயம் தண்டனை கிடைக்கும்… என்று பாட்டிகள் சொன்ன கதைகளில் கேட்டு வளர்ந்த மனங்களில் வக்கிரங்களும் வன்மங்களும் வேர்விட்டு வளராது.
அது அந்த மனங்களுக்குள் கதைகள் மூலமாக தூவப்பட்ட நல்ல விதைகள்.
கதைகள் என்பது அது மனித மனங்களை தன் பால் ஈர்க்கும் மகா மாய சக்தி. அந்த மாய சக்திதான் கதைகளின் வழியாக நாடகங்களாக உருமாறி படிப்பறிவில்லா பாமர மக்களுக்குள்ளும் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியது. அடிமையாக வாழ்வதை விட மடிவதே மேல் என்ற உயர்ந்த தர்மத்தை மக்களிடத்தில் போதித்தது. போராட்ட குணத்தை தோற்றுவித்தது. இன்று நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க நமக்கு வழிவகுத்திருக்கிறது.
வரலாறுகளுக்கும் வாழ்வியலுக்கும் பெரும் அரசியல் மாற்றங்களுக்கும் கூட வித்தாக அமைந்த இந்த கதையென்ற கருவியின் இன்றைய நிலைமை என்ன?
திண்ணைகளும் திண்ணையில் அமர்ந்திருந்த பாட்டிகளும் வழக்கொழிந்து போய்விட்ட நிலையில் நம்முடைய கதை சொல்லும் வழக்கமும் அதனை கேட்கும் வழக்கமும் இன்றும் மாறிவிடவில்லை. ஆனால் அது சென்று சேரும் விதம் மாறியிருந்தது.
நாவல்கள்(புதினங்கள்) மற்றும் சீரியல்கள் சினிமாக்கள் என்று பல்வேறு பரிணாமத்திற்கு மாறியிருந்தது. இந்த சீரியல்களும் சினிமாக்களும் நல்ல விஷயங்களை விடவும் சுவாரசியம் என்ற ஒரே நோக்கத்திற்காக எதிர்மறையான விஷயங்களுக்கு மேல்பூச்சு பூசி நம்மிடையே அலங்காரமாக கொண்டு வந்து சேர்க்கப்படுகிறது. நல்லதை கற்பிக்க வேண்டுமென்ற கதைகளின் முக்கிய நோக்கமே அங்கே அடிப்பட்டு போகிறது.
ஆனால் புத்தகங்கள் அப்படியில்லை. அது ஒருவனின் சிந்தனையிலிருந்து படைக்கப்படுகிறது. அது படிக்கப்படும் ஒவ்வொருவன் சிந்தனைக்குள்ளும் வெவ்வேறு விதமாக விதைக்கப்படுகிறது.
எழுத்தாளனின் எழுத்து வழியாக எங்கேயோ தொடர்பில்லாத வாசகனிடம் செவி வழியாக அல்லாமல் கண்கள் வழியாக சொல்லப்பட்டு சிந்தைக்குள் ஊடுருவி அவனவன் எண்ணங்களுக்கு ஏற்ப உயிரும் உருவமும் பெறுகிறது. ஆதலால் மற்ற ஏனைய கதை சொல்லும் கருவிகளை விட புத்தகம் வழியே சொல்லப்படும் கதைகள் உருவாக்கும் தாக்கம் அளப்பரியது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
மீண்டும் அது நம் பாட்டிகளிடம் கதை கேட்கும் உணர்வை நமக்குள் தோற்றுவிக்க முயல்கிறது. ஆனால் அது பாட்டியை போல் அல்லாது இன்னும் நிறைய நிறைய விஷயங்களை வாசகனிடம் விட்டு செல்கிறது.
கேட்டல் பார்த்தல் என்பதை விட படித்தல் அவனுக்குள் ஆழமான தாக்கத்தை உருவாக்குகிறது. அந்த கதை நாயகன் நாயகியின் கஷ்ட நஷ்டங்களை தனக்கே நேர்வது போல அவனுக்குள் உணர வைக்கிறது.
அத்தகைய புதினங்கள் பல வரலாறுகளை சொல்லி கொடுக்கிறது. அறிவியலை கற்று கொடுக்கிறது. வாழ்க்கையின் அனுபவ பாடங்களை அறிய வைக்கிறது. கண்ணியத்தையும் காதலையும் போதிக்கிறது.
அப்படியிருக்கையில் நாவல்கள் படிப்பதை ஒரு தவறான பழக்கமாகவும் அது அறிவற்றவர்கள் செய்யும் மூடசெயலாகவும் இன்னும் கேட்டால் வெறும் நேரத்தை கடக்க உதவும் பொழுது போக்கு அம்சமாகவும் பார்ப்பது எந்தவிதத்தில் நியாயம் அல்ல.
அது மனிதனை இன்னும் மனிதத்தோடு வைத்திருக்கும் ஓர் அரிய பொக்கிஷம். மண்ணிற்குள் காலங்களை தாண்டி புதைந்து கிடக்கும் பொக்கிஷம் போல கதைகள் மனிதனின் மனங்களில் காலங்கள் தாண்டி புதைந்து கிடக்கிறது. நிறைய அரிய வரலாறுகளை அழிய விடாமல் செவி வழியாகவும் எழுத்து வழியாகவும் பல வித பரிணாமத்தில் ஓயாமல் தன் பயணத்தை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
ஆனால் சில குப்பையான படைப்புகளாலும் தவறான கண்ணோடங்களாலும் வளர்ந்து வரும் சந்ததிகளுக்கு ஏன் தற்போதுள்ள சந்ததிகளுக்கும் கூட கதை படிக்கும் பழக்கம் நலிந்து கொண்டே வருகிறது. ஆனால் அத்தகைய தரமில்லா படைப்புக்களை இனம் காண கற்று கொள்ள வேண்டுமே ஒழிய படித்தல் என்ற பழக்கத்தை ஒருநாளும் நாம் கைவிட்டு விட கூடாது.
இந்த கதைகள் படிக்கும் பழக்கமே நாளை கட்டுரைகள் கவிதைகள் போன்ற படைப்புகளை படிக்கும் உந்துதலை தருகிறது. பெரிய அறிஞர்களும் தங்களின் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஒரு கதையின் மூலமாகவே தொடங்கியிருப்பார்கள்.
அதுவே அவன் அல்லது அவளுக்குள் நிறைய படித்தலுக்கான விதையாக விழுந்திருக்கும். அந்த விதை கற்றலையும் தேடலையும் விரிவாக்கம் செய்து நம்முடைய அறிவை பெரும் விருட்சமாக வளர செய்கிறது.
ஆதலால் கதைகள்தான் நற்சிந்தனைகளின் ஆணிவேர். அது கைபேசியில் கேம் விளையாடும் பொழுது போக்கு போல் நேரத்தை விரயம் செய்வதில்லை.
வாழ்க்கையில் பெரிய கனவுகளோடு இருக்கும் பெரிய லட்சியவாதிகளுக்கும் கூட புத்தகங்களில் உள்ள ஏதாவது ஒரு வரி அல்லது ஒரு வார்த்தை விதையாக மாறி அவன் வாழ்க்கையின் வளர்ச்சிக்கு வித்திட கூடும்.
இனி நாவல் படிக்கும் பழக்கத்தை யாரேனும் தவறான கண்ணோட்டத்தில் பார்த்தாலோ பேசினாலோ திடமாக நீங்கள் அவர்களிடம் உங்கள் பழக்கம் தவறில்லை என்று வாதாடுங்கள். ஆனால் அதற்கு முன்னதாக உங்கள் கையிலிருக்கும் நாவல் அதற்கு தகுதியானதா என்ற சுயலசலை மேற்கொள்வது மிக மிக அவசியம். ஆதலால் படியுங்கள். நிறைய நிறைய படிப்பதை விட சரியானதை தரமானதை தேர்ந்தெடுத்து படியுங்கள்.
நமக்கு பிறகு வரும் சந்ததிகளுக்கு தவறாமல் கதைகள் படிக்கும் பழக்கத்தை ஊக்குவியுங்கள். அதுவே அவனுக்கு அல்லது அவளுக்கு வாழ்க்கையை போதிக்கும்.
Comments