முன்னுரை
விதைப்பந்து என்பது விதைகளோடு கலந்து மண் மற்றும் உரங்கள் சேர்க்கபட்ட ஒரு களிமண் உருண்டை.
இந்த உருண்டைகள் நிலங்களில் வீசப்படுகிறது. ஒரு பெரும் விருட்சமாகும் என்ற நம்பிகையோடு!
அதே நம்பிக்கைதான் இந்த விதைப்பந்து கட்டுரையின் பிரதான நோக்கமும் கூட.
அந்த நம்பிக்கை மண் மீது கொண்ட நம்பிக்கை. எங்கள் நம்பிக்கை மனங்களின் மீது கொண்ட நம்பிக்கை!
பூமியின் மீது நாம் வீசும் குப்பைகளும் கழிவுகளும் மண்ணோடு மண்ணாக மட்கிவிட, விதைகள் மட்டும் அவ்விதம் மட்கிவிடுவதில்லை.
அவைகள் வேர் விட்டு வளர்ந்து விருட்சங்களாக மாறுகின்றன.
விந்தையான இந்த செயல்தான் நம் பூமியை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது.
அதே போல மனித மனங்களை உயிர்ப்போடு வைத்திருக்க முனையும் ஒரு சிறு முயற்சியாகவே இந்த விதைப்பந்து கட்டுரை!
அப்படி மனித மனங்களை உயிர்ப்போடு வைத்திருப்பதும், மனித சிந்தனைகளை மட்கிபோகவிடாமல் அதனை மேம்படுத்தி கொண்டிருப்பதும் எது என்று கேட்டால் அன்றும் இன்றும் என்றும் அது புத்தக வாசிப்பு மட்டும்தான்.
அதுவும் இன்றைய காலகட்டத்தில் வேகம் வேகம் என்று அதிவேகமாக நம் பார்வைக்கே தென்படாத ஒரு இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு இரவு பகல் பேதம் கூட இல்லாமல் போய்விட்டது.
சூரியனின் ஒளியை கூட மிஞ்சும் மின்விளக்குகள் இரவுகளையும் பகலாக்கிக் கொண்டிருக்க, அமெரிக்க நேரத்திற்கும் லண்டன் நேரத்திற்கும் வேலைசெய்து பகல் எது இரவு எது என மறந்து ஓடிக்கொண்டிருக்கிறோம்.
பசிக்காக உண்ணாமல் கிடைத்த நேரத்தில் உண்டு, நினைத்த நேரத்தில் உறங்கி எப்படியோ நம் காலம் ஓடிக்கொண்டிருக்கிறது.
பொழுதுபோக்கு அம்சங்கள் கூட முற்றிலுமாக மாறிப்போய் கைப்பேசியே கதியாய் கிடக்கிறோம்.
பிறக்க ஒரு இடம் உழைக்க ஒரு இடமென மாகாணம் கடந்து மாவட்டம் கடந்து நாடு கடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இன்றைய சூழலில் நம் மனம் முழு திருப்தியை உணர்கிறதா என்று கேட்டால் பட்டென்று ஆம் என்றோ இல்லை என்றோ பதில் சொல்ல இயலுமா நம்மால்?
விட்டால் இதற்கு பதில் சொல்லக் கூட கூகுளின் தயவை தேடுவோம் நாம்!
இதுவல்லாது நம்மை மாய வலையில் சிக்க வைக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் விளம்பரங்களும், நம்மை கடன்காரர்களாக மாற்றிக் கொண்டிருக்கும் இணையதள வர்த்தகமும் நம்மை முற்றிலுமாக ஏதோ ஒரு சூழலுக்கு அடிமையாக்கி கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை.
இதையெல்லாம் தாண்டி நமக்காக நாம் வாழ ஒரு இடம் வேண்டாமா?!!
அந்த இடம்தான் புத்தகம். தரமான வாசிப்புகள் மட்டுமே நம் மனதிற்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையும் கொடுக்கும். அத்தகைய வாசிப்பை நோக்கிய பயணம்தான் இந்த விதைப்பந்து.
இந்த நீண்ட நெடிய பயணத்தில் வாசகார்களாகிய உங்களை சலிப்படைய விடாமல் பார்த்து கொள்வது மிக பெரிய சாவலென்று எங்களுக்கு தெரிந்த போதும் அந்த சாவலை நாங்கள் ஏற்று செய்ய இருக்கிறோம்.
ஆனால் வாசகர்களாகிய உங்களின் ஆதரவின்றி அது சாத்தியப்படாது.
இந்த கட்டுரை பல்வேறு தலைப்புகளில் வாரம் ஒரு முறை உங்களை தேடி வரும்.
உங்களின் ஆதரவை உங்கள் கருத்துக்கள் மூலமாக எங்கள் தளத்தில் அல்லது முகநூலில் தெரிவியுங்கள்.
POST YOUR COMMENTS HERE...
Comments