top of page

மூன்று முடிச்சு 9

மூன்று முடிச்சு


முடிச்சு - ஒன்பது


“இவங்க டி.எஸ்.பி. சார். ஹான்… இவங்க போலீஸ் எல்லாம் இல்ல. அவங்க பேர் அது. இவர் தான் காலையில இருந்து எனக்கு உதவறாரு. ஆக்சிடென்ட்டுக்கு அப்புறம் என்னை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போய் வைத்தியம் எல்லாம் பார்த்தார். அவரோட அப்பா, அம்மாவும் கூட வந்திருக்காங்க. அவங்களை முதல்ல உள்ளே கூப்பிடுங்க ம்மா.” படபடவென ஒரு சிறு அறிமுகம் கொடுத்தவள்,


“என் மேல எந்த தப்பும் இல்லைன்னு, அம்மாகிட்ட தயவு செஞ்சு சொல்லுங்க டி.எஸ்.பி., சார். என்ன நடந்தததுன்னு நீங்க சொன்னா, இவங்களுக்கு புரியும்.” ஆதரவுக்கு அவனை ஆவலாக வித்யா பார்க்க,...


திவாவோ ‘யார் நீ?’ என்பதான ஒரு அன்னியத்தனமான ரியாக்க்ஷனை கொடுத்ததும், அப்பார்வையில் குழம்பிய விது, யாரும் எதுவும் பேசாமல் இருப்பதையும், குறிப்பாக தன் அம்மாவின் மௌனத்தையும் அப்போது தான் கவனித்தாள்.


வெளித்திண்ணைக்கும், வீட்டின் உள் வரவேற்பறைக்கும் இடைப்பட்ட நுழைவு பகுதியில் இவர்கள் அனைவரும் நின்றிருக்க, ஹாலின் வாசலுக்கு உட்புறமிருந்து வந்த ருக்கு பாட்டி “எங்கடி வந்த ஓடுகாலி நாயே?” ஆங்காரமாக கத்தவும், சர்வமும் நடுங்கிய விது அப்புறமாக திரும்பினாள்.


“போயும் போயும் இவன் தானா கல்யாணம் செஞ்சுக்க உனக்கு கிடைச்சான்? அதானே, இந்த அசிங்கமெல்லாம் ரத்தத்துல ஊறின சமாச்சாரமில்ல!” இகழ்ச்சியாக இரைந்த மூத்தவளை,


“அத்தை…” நடுங்கும் குரலில் அதட்டலாக அழைத்த சந்திரா, பயத்தோடு பிரபாகரை பார்த்ததை கவனிக்காத வித்யா, அன்னையின் கரத்தை கெட்டியாக பிடித்து கொண்டாள்.


ருக்குவின் வாக்கியத்தில் கல்யாண பகுதி மட்டுமே மனதில் பதிந்ததால், மற்றவரின் மௌனமோ, அங்கு நிலவிய அசாதாரணமான சூழல் கருத்தில் பட்டாலும், ‘போச்சு… கிழவி ஆரம்பிச்சுடுச்சு…’ பல மணி நேரமாக அவள் அஞ்சிய கணம் வந்து விட்டதில், மற்ற எல்லாம் பின்னுக்கு போனது.


மகனின் கையை ஆதரவுக்கு பற்றிய சுபா, “வாங்க, நாம இங்கிருந்து போகலாம்” என்றிட,


ருக்மிணியோ, “அவன் கூட பொண்ணை நீயே அனுப்பி வச்சுட்டு, ‘அவ காணோம்னு’ சும்மா நீலிக் கண்ணீர் வடிச்சு நாடகமா ஆடுற?” மேலும் விடாது பேச,...


“போதும் அத்தை, இப்படி அசிங்கமா பேசுறதை, நீங்க என்னைக்கு நிறுத்த போறீங்க? என்ன, நான் அனுப்பினேனா? இத்தனை நேரம், என் பொண்ணு உசுரோட இருக்காளா இல்லையான்னு கூட தெரியாம, ஓரோர் நிமிஷமும் உள்ளுக்குள்ள பயந்து செத்துட்டு இருந்த வலி அந்த ஆண்டவனுக்கு தெரியும்.” சந்திரா அழவும்,...


“ம்மா… உனக்கு காலையில இருந்து போன் பண்றேன். நீங்க யாருமே ஏன் போனை எடுக்கலை? உங்களுக்கு மெசேஜ் கூட அனுப்பிச்சேன் ம்மா! நீங்க எஸ்.எம்.எஸ் பார்க்கலியா?” விதுவின் கேள்வியில் சரேலென மகளின் முகத்தை பார்த்தார் சந்திரா.


“இவனை கட்டி வெச்சு, முறிஞ்ச உறவை புதுப்பிக்கலாம்னு நினைச்சியா?” மனைவியை முறைத்த நாராயணன்,...


“பண்றதையும் பண்ணிட்டு, எங்கடி வந்த? இனி ஒரு நிமிஷம் கூட, நீ என் வீட்டுல நிக்கக் கூடாது. வெளியே போடி.” கையை நீட்டி வாசலை காட்டினார் பெற்ற மகளுக்கு. இதில் அம்மாவும் மகளும் அதிர்வுற்று எதிர்வினையாற்ற கூட தோன்றாமல் நிற்க, இதுவரையான வரம்பில்லா பேச்சுக்கு மகுடம் வைத்தது போல…


“கண்ட நாயிங்க கால் பட்ட இடத்தை கழுவித் தள்ள சொல்லுங்கம்மா.” நாராயணன் அமில வார்த்தைகளை உமிழவும், விறுவிறுவென பிரபாகர் அங்கிருந்து நடக்க ஆரம்பிக்க, தன் பார்வையாலேயே நாராயணனை எரித்து விடும் உக்கிரத்தோடு கோபமாக முறைத்த திவா, தன் தந்தையை பின் தொடர்ந்தான்.


மெல்ல உயிர் பெற்ற சிலையாக நடப்புக்கு வந்த சந்திரா… “விது, ஃபோன் செஞ்சாளா? உங்களுக்கு முன்னையே விது கிடைச்ச விஷயம் தெரியுமா?” படபடவென கேட்டவருக்கு, கணவனின் முகத்தில் தெரிந்த ஏளன பாவனையே விடையை உறுதிப்படுத்த,


“திவா தான் அவளுக்கு உதவினதுன்னு கூட உங்களுக்கு தெரியும் தானே!” என்ற மனைவியை கண்டுக் கொள்ளாமல் உள்ளே செல்ல ஆரம்பித்த நாராயணின் முன் தடுப்பாக போய் நின்றார் சந்திரமதி.


“என்னது உதவியா? ஓ… இவ கழுத்துல திருட்டுத்தனமா தாலி கட்டினது, உனக்கு பண்ண உதவி தானே?” எக்காளமாக வார்த்தைகளை துப்பினார் நாராயணன்.


“திவா… விது… தாலி…” தடுமாறி, அவசரமாக மகளின் கழுத்தை நோட்டமிட்டார் சந்திரா. அம்மா மகள் இருவருக்குமே வெவ்வேறு காரணங்களால், விது திரும்பியது முதலான பேச்சுக்களில் சில விஷயங்கள் அத்தனையாக மூளையில் பதியாமல் போனது அல்லது அதுவரையிலுமான ஸ்ட்ரெஸினால் பெரிதாக பிற விஷயங்கள் கருத்தை கவரவில்லை என்றும் சொல்லலாம்.


அதில், “அய்யோ ம்மா! யாரும் எனக்கு தாலி எல்லாம் கட்டலை. அந்த நித்யாவால வந்த பிரச்சனை. அவ தான் யாருக்கும் தெரியாம கல்யாணம் செஞ்சுக்கிட்டா. விவரமா உனக்கு மெசேஜ் பண்ணேன். டி.எஸ்.பி. சார் நல்லவர். அவருக்கும் கூட இந்த பிரச்சனையில் எந்த சம்பந்தமும் இல்ல!" அனாவசியமாக திவாவையும், அவன் குடும்பத்தாரையும் ஏன் பாட்டியும் அப்பாவும் இத்தனை அவமானப்படுத்தினார்கள் என்ற குழப்பம் மேலிட, திவாகருக்கு நற்சான்றிதழ் வழங்கினாள்.


மகளின் கூற்றை உள்வாங்கிய சந்திரா, “ச்சீ… விதுகிட்டயிருந்து தகவல் வந்தும், இவ்ளோ நேரம் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம, நான் பயந்து துடிச்சுட்டு இருந்ததை வேடிக்கை பார்த்த, நீங்க எல்லாம் ஒரு மனுஷனா!”


சந்திராவின் பேச்சைக் கண்டுக் கொள்ளாமல், “இப்போ உள்ள போறியா? இல்ல அவக் கூடவே நீயும் வெளியே போறியா?” என்ற நாராயணனிடம்,...


“இங்க வீடு வரைக்கும் வர வெச்சு, இவங்களை அசிங்கப்படுத்தணுங்கற ஒரே நோக்கத்தோட தானே, இவ்வளோ நேரமும் ஒண்ணும் தெரியாததை போல நடிச்சீங்க! இப்படிப்பட்ட நீச்ச புத்தி இருக்க நீங்களும், உங்க அம்மாவும், உசந்த சாதியா? ச்சீ… எத்தனை பணம் வந்தாலும், இவ்வளோ அழுகின குணம் இருக்குற நீங்க, என்னைக்கும் அவங்க உசரத்துக்கு கண்டிப்பா வரவே முடியாது.” சந்திரா முடிக்கும் முன், இடியென நாராயணன் அறைந்தார்.


“ம… தீ… ம்மா!” வெளிவாசலுக்கு சென்று விட்ட சுபா அதிர்ந்து நிற்க,


“அப்பா…” என்று அலறிய விதுவை பார்த்தவர், “நீ பொறந்த அன்னைக்கே, ‘உன்னால தான் இந்த குடிக்கு கேடு வரும்னு’ ஆருடம் சொன்ன அம்மாவோட தெய்வ வாக்கு இன்னைக்கு உண்மையாகிடுச்சு. இனியும் உன் அம்மாவுக்கு நான் வாழ்க்கை தரணும்னா, இந்த வீட்ல என் பொண்டாட்டியா அவ இருக்கணும்னா, ஒரு நிமிஷம் கூட நீ இங்க இருக்கக் கூடாது. வெளிய போ…” நிர்தாட்க்ஷண்யமாக உரைத்தவர் வீட்டுக்குள் சென்று விட்டார்.


“ஐயோ… கடவுளே! அவ தான் கல்யாணம் ஆகலைன்னு சொல்றாளே, இப்படி வயசுக்கு வந்த பிள்ளையை வீட்டை விட்டு அனுப்பறீங்களே, இது நல்லாயிருக்கா?” என்று கதறிய சந்திரா, இதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு கதவுக்கு அருகே நின்றிருந்த பன்னிரண்டு வயது மகனை பார்த்து, ‘மகளா? மகனா?’ என்று தடுமாறி, செய்வதறியாது திகைத்தவராக, வீட்டினுள் செல்லும் கணவனின் முதுகை வெறிக்க,...


“கழுத்துல தாலி வாங்காம, வயத்துல வாங்கிட்டு வந்து நிக்கற சண்டாளியே. உனக்காக அந்த வீட்டு வாசலை மிதிச்சு, என் பிள்ளை அவமானப்படணும்னு தானே, அவனுங்க போட்ட திட்டத்துக்கு ஒத்து ஊதி… இப்படி ஒரு அசிங்கத்தை பண்ண துணிஞ்ச! கேடு கெட்டவளே... இப்போ சொல்றேன் கேட்டுக்கடீ, அவன் வர மாட்டான். என் பிள்ளையோட கவுரவத்தை அழிக்கறதுக்குன்னே பொறந்தவளே, போடி வெளியே.” காதால் கேட்டதை உண்மையாக வரித்து கொண்டு ருக்மிணி அம்மாளும் நாராசமாக கத்தி விட்டு, பேரனை தரதரவென இழுத்துக் கொண்டு உள்ளே போனார்.


அதுவரை அங்கே பேசப்பட்ட, நடந்த அனைத்தையும், வெளிக் கதவின் அருகே நின்று, காதுகள் கூச, கண்களில் கண்ணீரோடு, ஊமையாக பார்த்துக் கொண்டிருந்த சுபா, “இங்க வா விதும்மா” என்று தன் கரத்தை அவள் புறம் நீட்டினார்.


அவரை பார்த்தவள், தன் அம்மாவின் புறம் திரும்பி, “ம்மா, நான் எந்த தப்பும் பண்ணலம்மா. எல்லாம் அந்த நித்யா எருமையால வந்த வினை. ஐயோ… இந்த பாட்டி பேசின அசிங்கமெல்லாம்… உவ்வே… அந்த மாதிரி நான் இல்லம்மா. அப்பாவும், பாட்டியும் என்னன்னமோ தப்புத்தப்பா கேவலமா பேசறாங்க. எனக்கு எதுவும் புரியலை, ஒரு சின்ன ஆக்சிடென்ட் ஆகிடுச்சு. என்னை ஹாஸ்பிட்டல்ல சேர்த்ததால, அப்போவே வீட்டுக்கு வர முடியலை. நீங்களாவது என்னை நம்புங்க ம்மா!” அன்னையின் கரம் பற்றி கதறினாள்.


அதுவரை மூளையில் பதியாத விதுவின் விபத்து, கருத்தில் பட்டவுடன், “என்ன ஆக்சிடென்டா?” என்று அதிர்ந்த சந்திரா, மகளை மீண்டும், தடவி பார்த்தார்.


“அடி எதுவும் இல்லைம்மா. பயத்தில மயங்கிட்டேன். சாதா பஸ் டிராவலுக்கே வாந்தி எடுப்பேன். மலையில, எடுக்க மாட்டேனா? காலையில இருந்து நித்தியால நடந்த களேபரத்துல வெறும் வயத்துல கார் டிராவல்ல… முடியலை ம்மா… வாந்தி எடுத்து தொலைச்சேன். எனக்கு இந்த பிரச்சனை உள்ளது என்ன புதுசா? உங்களுக்கு மட்டுமில்ல, வீட்ல எல்லாருக்கும் போன் செஞ்சு செஞ்சு ஓஞ்சுட்டேன். என்னை நம்பலைன்னா, நீங்களே அந்த ஹாஸ்பிட்டலுக்கு போன் செஞ்சு கேளுங்க.”


ஒரே மூச்சில் அவள் தரப்பை கொட்டிய மகளின் வாதத்தை காதில் வாங்கிய சந்திரா, கண்களில் வழிந்த கண்ணீரை ஒரு முடிவுடன் துடைத்தார்.


விதுவின் கையைப் பற்றி தரதரவென சுபாவிடம் இழுத்து வந்தார். “ம்மா… என்ன பண்றீங்க… அப்பா, உள்ள இருக்கார்… அங்க போய் பேசாம…”


சுஷ்… ஆட்காட்டி விரலை உதட்டில் வைத்து மகளை அமைதியாக இருக்குமாறு சைகை செய்த சந்திரா, தொண்டை அடைக்க, “இனிமே இவ உங்க பொறுப்பு! அவளுக்கு உதவி செஞ்ச உங்களை போய்…” வீட்டினுள் பார்வையை செலுத்தியவர், “என்னை மன்னிச்சுக்கோங்க சுப்பு…” கண்ணீரை கூட துடைக்காமல் கையெடுத்துக் கும்பிட்டு,...


“போதும்… என்னால, இதுவரை நீங்க பட்ட அவமானம் எல்லாம் போதும்! என் பொண்ணு, இனி நல்லா இருப்பா. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. போ விதும்மா, இனி இவங்க தான் உனக்கு எல்லாமே!” என்றவரின் பேச்சைக் கேட்டு,


“அம்… ம்மா…!” என்று அதிர்ந்த விதுவை, சுபாவின் கையில் பிடித்து கொடுத்தவர், “உன் அம்மா என்னைக்கும் உனக்கு நல்லது மட்டும் தான் நினைப்பேன், செய்வேன். போ கண்ணம்மா… நீ சந்தோஷமா இருப்ப செல்லம்.”


நடப்பதை நம்ப முடியாமல், அதிர்ச்சியில் விது உறைய, “வா விதும்மா…” என்ற சுபா, கையை பற்றி அவளை இழுக்க…”ம்மா… நோ… நான் தப்பு செய்யலை…” நகர மறுத்திட, வீட்டின் பக்கம் கண்ணை திருப்பிய சந்திரா… “மன்னிச்சுடு விதும்மா, உன்னை கொஞ்சம் தெளிவான ஆளா வளர்த்து விட்டுட்டேன். ஆதி… சின்னவன், எனக்கு இங்க கடமை பாக்கி இருக்கு. தயவு பண்ணி கிளம்பு.” இப்போது மகளை கையெடுத்து கும்பிட… “அம்…ம்மா…” அதிர்ந்தவளின் நிலை தளர, சட்டென அவளை கெட்டியாக பிடித்து கொண்டு விறுவிறுவென அங்கிருந்து நடந்தார் சுபா.


காரில் ஏற்கனவே ஏறியிருந்த பிரபாகரின் முகம் கோபத்தில் சிவந்து இருந்தது. உள்ளமோ அணுகலனாக கொதித்துக் கொண்டிருந்தது. திவாவோ, நடந்ததை நம்ப முடியாமல், தலையில் கை வைத்தான். முடியை பிய்த்துக் கொள்ளும் வெறியில் இருந்தவன், தன் தந்தையின் முகத்தை காண பயந்து தலை குனிந்து பின்னிருக்கையில் அமர்ந்து இருந்தான்.


“ஏறு கண்ணு…” என்ற சுபாவின் குரலில், நிமிர்ந்த திவா, சட்டென இறங்கி, “இவ எங்க வரா?” என்று கோபமாக கேட்க, அவனுக்கு பதில் சொல்லாமல், “ஏறு விது…” என்று சுபா மீண்டும் சொல்ல,


“ஏய்… நீ எங்க வர? நல்லவ மாதிரி நாடகம் ஆடி, என் கழுத்தை அறுத்துட்டல்ல! போ…” என்று கோபமாக விதுவின் புறம் வர,...


“திவா…” என்று அவனைத் தடுக்கும் விதமாக நடுவில் வந்த சுபா... “இவ, இப்போ என் கூட, நம்ம வீட்டுக்கு வரா...” அழுத்தமாக சொல்லி விட்டு, கணவரை ஒரு தீர்க்கமான பார்வை பார்த்தார்.


கதவை திறந்து ஜடமாக ஸ்தம்பித்து இருந்த விதுவையும் உள்ளே தள்ளி, தானும் ஏறிஅமர்ந்தார். டிரைவர் ரவி கதவை சாற்றினார்.


“வண்டியை எடு ரவி,” என்று பிரபாகர் கர்ஜிக்க, அவசரமாக பின் இருக்கையில் அம்மாவின் மறுபுறம் ஏறி அமர்ந்த திவா, நெற்றியை அழுத்தி கொண்டான்.


அன்று காலை அறிமுகமாகிய அத்தனை பரிச்சயம் இல்லாதவர்களோடு, தன்னை சந்திராம்மா அனுப்பி விட்டாரா? இவர்களை அவருக்கு அறிமுகம் உண்டு! நான் சொல்லாமலேயே இந்த ஆன்டியோட பேரை கூட சொன்னாங்க! ஆனா? நான்… நான் முக்கியமில்லையா? அப்பாகிட்ட எனக்காக இந்த அம்மா ஏன் மேல பேசலை! கெழவி ஏன் அனாவசியமா இவங்களை பேசுச்சு? அது சரி, ஒருத்தரை வசை பாட அதுக்கு காரணமா தேவை! அடுத்தடுத்து எண்ணங்கள் எழும்பியதில், ஏன் இப்படி நடந்தது என்று விளங்காத நிலையில், அந்நியரிடம் அடைக்கலமான அவலத்தை ஏற்க முடியாது, திக்கு தெரியா காட்டில் சிக்கிய மானின் நிலையில் இருந்த விதுவின் மெல்லிய விசும்பல் மட்டும் தொடர்ந்து கேட்க, அவளுக்கு மெதுவே ஆறுதல் சொல்லிக் கொண்டே வந்த சுபாவோ, சத்யா தாத்தாவுக்கு அடுத்தடுத்து மெசேஜ்களை அனுப்பினார்.


ஒரே நாளில் விதுவுக்கு விருப்பம் இல்லாமல் நடக்கும் இரண்டாம் கார் பயணம். இரண்டிற்கும் பெரிதும் வித்தியாசமில்லை. பயமும், குழப்பமும் மட்டுமே இரண்டிலும் துணையாக உடன் வந்தது.


விதுவின் தேம்பலினூடே “ப்பா… சத்தியமா எனக்கு…” என்று திவா ஆரம்பிக்கவும், நிறுத்து என்று கரத்தை உயர்த்தி வெறுமே சைகை செய்தார் பிரபாகர். அவர் இந்த நொடி வரை வாய் திறந்து அதிகம் பேசவில்லை என்பது உறைக்க, நடந்த அதிர்வை ஏற்க முடியாமல் வீடு வந்து சேர்ந்தான் திவாகர்.


கார் நின்ற நொடி, ஆண்கள் இருவரும் இறங்கி, ஆளுக்கு ஒரு திசையாக விரைய, “இறங்கு கண்ணம்மா…” என்ற சுபாவை பார்த்தவள், மாட்டேன் என்று தலையை அசைத்தாள்.


“உன் அம்மாவை மதிக்கறதா இருந்தா, இப்போ என் கூட உள்ள வா. உனக்கு எல்லாம் புரிய வரும்.”


இன்னுமே தன் அம்மா இப்படி ஒரு மூன்றாம் மனிதரிடம் தன்னை ஒப்படைத்தார் என்பதை ஜீரணிக்க முடியாமல் பரிதவித்திருந்தவள், சுபாவை மலங்க கலங்கிய விழிகளால் பார்க்க, “இறங்கு கண்ணு…” என்று அவர் சொல்லும் போதே,...


“குட்டிம்மா… இந்த தாத்தாவை பார்க்க வந்துட்டீங்களா! என் தங்கம்!” என்ற நடுங்கும் குரல் காதில் விழுந்தது. கார் கதவை பிடித்து கொண்டு ஆவலோடு நிற்கும் முதியவர் கண்ணில் பட்டார்.


“என்ன தாத்தாவா?” என்று முழித்தவளுக்கு, நடப்பது எதுவும் புரியவில்லை.


“வித்யா லக்ஷ்மி! எங்க சின்னு, செல்லக் குட்டி! வா கண்ணு...” கருணையே வடிவானவர் அன்பொழுக வரவேற்று, இரு கரம் விரித்தார்.


‘தன் முழு பெயர் இவருக்கு எப்படி தெரியும்? யார் இவர்?’ என்று மீண்டும் அவரை பார்த்து முழித்தாள்.


“பேத்திக்கும் அப்படியே அவ தாத்தாவை போலவே பிடிவாதம் மாமா. சொன்ன பேச்சை கேக்கவே மாட்டேங்கறா” என்ற சுபா, சோகம் இழையோட சிரிக்க, அவர் கண்களோ கண்ணீரால் நிறைந்தது.


“வா… கண்ணம்மா…” என்று அவள் விரல்களை வாஞ்சையாக பற்றிய சத்தியமூர்த்தி தாத்தா, மெதுவே நடக்க ஆரம்பிக்க, விதுவும் கனவில் மிதப்பது போல் அவருடன் நடந்தாள்.


படிகளில் ஏறி, வீட்டு வாசலுக்கு வர, பணிப்பெண் ஒருவர் ஆரத்தி தட்டோடு வந்தார். அதனை வாங்கிய சுபா, தன் கையாலேயே ஆரத்தி சுற்றினார். “இதை கொண்டு கொட்டு பங்கஜம்.” என்றவர், விதுவின் மறுகையைப் பற்றினார்.


“வலது கால் எடுத்து வெச்சு, உள்ள வா குட்டிம்மா. இத்தனை வருஷம் கழிச்சு இன்னைக்கு தான் உன் பாதம் இங்க பட்டு இருக்கு. லச்சு, நம்ம செல்லக் குட்டி வந்துட்டா.” தன் பாட்டில் பெரியவர் பேச, மூளைக்கும், உடலுக்கும் சம்பந்தமே இல்லாமல் இரண்டும் தனி தனியே விடுபட்டது போன்ற மனநிலையில் இருந்த விது, செய்த ஒரே காரியம் மலங்க முழிப்பது மட்டுமே.


“ரைட் லெக் டா குட்டிம்மா” என்ற தாத்தாவை புரியாமல் பார்த்தாள்.


வலது காலை எடுத்து வீட்டின் உள் வைத்தவளின் மேனியில் ஒரு மெல்லிய சிலிர்ப்பு ஓடியது. தன் இரு கைகளையும் பற்றி இருந்தவர்களை மாறி மாறி பார்த்தவள், “நீங்க? இது?” என்று சத்யா தாத்தாவையும், வீட்டையும் மாறி மாறி பார்க்க,...


“உன் அம்மாவோட பொறந்த வீடு இது கண்ணு!" என்று அவர் பெருமையாக சொல்ல, விதுவோ தெளிவாக அதிர்வை வெளிப்படுத்தினாள்.


இரு பெரியவர்களும் அவளை தானே பார்தி நின்றனர். அவளின் முகபாவம் கண்டு அவர்களுக்கும் கேள்விகள் எழுந்தாலும், மெல்ல கேட்டு தெளிவோம் என அப்போதைக்கு விட்டனர்.


‘அம்மாவின் பிறந்த வீடா? அதனால் தான் சிறிதும் தயங்காமல், இவர்களோடு தைரியமாக என்னை அனுப்பினார்களா? ஆனால், இத்தனை ஆண்டுகள் இல்லாத சொந்தம், இப்போது எங்கிருந்து முளைத்தது?’ கேள்விகள் வரிசையாக தோன்றிய வேகத்திலேயே, ருக்மிணி பாட்டியின் பேச்சு அரைகுறையாக ஞாபகத்துக்கு வர,...


‘இந்த கூனி கிழவி தான் ஏதோ செஞ்சு குடும்பத்தை பிரிச்சு இருக்கும்’ என்று எண்ணும் போதே, அவரின் அநாகரிக பேச்சும் நினைவுக்கு வர, கண்களில் குளம் கட்டியது.


பேத்தியின் கரத்தை பற்றி தன் கண்களில் ஒற்றி, “என் கண்ணை மூடறதுக்குள்ள, ‘உன்னை ஒரு தடவையாவது பார்க்க சந்தர்ப்பம் கொடு பெருமாளே’ன்னு நித்தம் நான் செஞ்ச பூஜை வீண் போகலை ராஜாத்தி. உன்னை எங்கக்கிட்ட கொண்டு வந்து சேர்த்துட்டான். இதை பார்க்க லச்சு உசுரோட இல்லையே!” உடைந்த குரலில் அரற்றிய புது தாத்தாவை மௌனமாக பார்த்தாள்.


லிவிங் ரூம் கடிகாரம் எட்டு முறை அடித்து ஓய, “நேரமாச்சே மாமா... நீங்க சாப்பிடணும். அப்புறம் பேசுவீங்க" என்ற சுபா, “வா குட்டிமா… வந்து ஃபிரெஷ் பண்ணிக்கோ. குமாரி, குட்டிமாவோட பையை மேலே ரூமுக்கு கொண்டு வா, பாகி டின்னரை டேபிள்ல அடுக்கு, இதோ வந்துடறேன்,” வேலையாட்களுக்கு கட்டளையிட்டவாறே முன்னே நடக்க ஆரம்பித்தார்.


சுபா திறந்து விட்ட அறைக்குள் நுழைந்தவளுக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்ட நிலை. பெப்பேப்பே என்று அவள் சுற்றும் பார்க்க, “ஏற்கனவே கெய்சர் போட்டு வெச்சுருக்கு. போய் குளிச்சுட்டு வா செல்லம். மாத்திக்க ட்ரெஸ் இருக்கா?” என்றவரிடம், ‘இருக்கு’ என்பதாக வெறுமே தலையசைத்தாள்.


அவளுக்கு தேவைப்படும் என்று டவல், சோப், முதலியன கொடுத்தவர், “நீ என்ன சோப் போடுவேன்னு சொல்லு குட்டி, அதையே வாங்கிக்கலாம். உன் ட்ரெஸ் எதுவும் துவைக்க இருந்தா எடுத்து கொடு. காலையில நீ முழிக்கும் போது, எல்லாம் க்ளீனா நீ போட்டுக்க தயாரா இருக்கும். தேவைப்பட்டா நாளைக்கு கடைக்கு போய் புதுசு வாங்கிடலாம்” சுபா தன் பாட்டில் பேச,...


மீண்டும் அழுகை முட்டிக் கொண்டு வர, “நான் எந்த தப்பும் பண்ணல. ப்ளீஸ்… அப்பாவுக்கும், பாட்டிக்கும் புரியற மாதிரி கொஞ்சம் சொல்லி, என்னை எங்க வீட்ல விட்டுடுங்க” என்று கெஞ்சினாள்.


ஹ்ம்ம்… என்று பெருமூச்சை விட்ட சுபா, “அவங்க ரெண்டு பேருக்கும் புரிய வெக்க பண்ற முயற்சி, அது இந்த ஜென்மத்துக்கும் நடக்கற காரியம் இல்ல குட்டிமா. போடாச் செல்லம்… மாமா, சாப்பிட்டுட்டு தான் மாத்திரை போடணும். உனக்காகவே அவர் இத்தனை நேரம் காத்திருக்கார்.” என்று சொல்லவும்,


“அப்போ… நிஜமாவே, இங்க தான் தங்க போறேனா?” விடை தெரிந்தே கேள்வியெழுப்பியவளின், கரத்தை பற்றி… குளியலறை பக்கம் அவளை திருப்ப… அதற்கு மேல் மறுப்பு சொல்ல வழியின்றி, குளிக்க சென்றாள்.


மளமளவென தன் அறைக்குள் நுழைந்த சுபா, விளக்கை கூட போடாமல், இருட்டில் அமர்ந்து இருந்த கணவனை நெஞ்சு நிறைய வேதனையோடு பார்த்தார்.


லைட்டை போட்டவரை பிரபாகர் முறைக்க, அவர் முன் மண்டியிட்டு அமர்ந்து அவர் கையை கெஞ்சுதலாக பிடித்த சுபா, “ப்ளீஸ்ங்க… எனக்காக! இல்ல மாமாவுக்காக! அவங்க பேசினது தப்பு தான். நம்மளை அசிங்கப்படுத்தவே அப்படி நடந்துக்கிட்டாங்க. எல்லாத்தையும் விட்டுடுங்க, மனசுல எதுவும் வெச்சு மருகாதீங்க. நம்ம மதிக்காக” என்று தன் தலையை அவர் கைகளில் சாய்த்து அழுதார்.


கணவரிடம் இருந்து பதில் வராமல் போக, அவரை யாசிக்கும் பாவனையில் நிமிர்ந்து பார்த்தார் சுபா. மண்டியிட்டு இருக்கும் மனைவியை ஆழ்ந்து பார்த்த பிரபாகர், நெடிய பெருமூச்சை விட்டார்.


“கொஞ்ச நாள் என்னை விட்டுடு சுபா, எதுவும் மறக்க முடியலை, முடியவும் முடியாது! நான் தோட்டத்தில் நடந்துட்டு வரேன்” என்று எழ,...


“சாப்பிட்டுட்டு…” என்று சுபா முடிக்கும் முன், “வயிறு நிறைஞ்சு போயிருக்கு” என்று கணவர் சொன்ன விதத்தில், அவர் மனம் அடைந்து இருக்கும் காயமும், அவரின் வேதனையும் புரிய, இந்த மட்டும் அவர் அமைதியாக இருப்பதே பெரிய விஷயம் என்று அவர் போக்கில் விட்டு விட்டார்.


வேகமாக குளித்து உடை மாற்றிக் கொண்டு, விதுவின் அறைக் கதவை தட்டிய சுபா, “வா குட்டிமா… சாப்பிடுவ” என்று அவளை உணவு மேஜைக்கு அழைத்து சென்றார்.


அங்கே தாத்தா மட்டும் தனியாக அமர்ந்து இருக்க, “சாரி மாமா லேட் ஆகிடுச்சு” என்று சொல்லிக் கொண்டே அவருக்கு இரவு டிஃபனை எடுத்து வைத்தார்.


“திவா எங்க? அவனை, கூப்பிடலையா மாமா?”


“உன் மகன் கன்னாப்பின்னா கோபத்துல இருக்கான். நீயே போனா கூட, இறங்கி வரது சந்தேகம் சுபா.”


“ஹும்…” பெருமூச்சை விட்டு, மாடியிலும் ஒரு கண்ணை வைத்தவாறே, விதுவுக்கு, தேவையானதை கேட்டுப் பரிமாறினார்.


“நீயும் எங்களோட உட்கார்ந்து சாப்பிடு சுபா”


“அவங்க ரெண்டு பேரும் பட்டினி இருக்கப்ப, நான் மட்டும் சாப்பிடுவேனா மாமா?”


“பேத்தி வந்த சந்தோஷத்தை கொண்டாட நீ ஸ்வீட்டோட சாப்பிட்டே ஆகணும்” என்ற மாமனாரை பார்த்து சோகையாக சிரித்தவர், உணவை அளைந்துக் கொண்டு அமர்ந்து இருந்த விதுவை, அதட்டி, உருட்டி ஒரு வழியாக சாப்பிட வைத்தார்.


“மாமா, நீங்க பேசிட்டு இருங்க. நான், அப்பாவையும், பிள்ளையையும் வழிக்கு கொண்டு வரேன்.”


“சென்று, வென்று வா… என் மருமகளே” என்று சத்யா தாத்தா சிரித்துக் கொண்டு சொல்ல,...


“ரெண்டு பேரையும் எப்படி சமாளிக்க போறேனோ” முனகிக் கொண்டே திவாவின் அறைக்கு சென்றார். அப்போது சந்தோஷும், விஜய்யும் வீட்டினுள் நுழைந்தவர்கள், வரவேற்பறையில் யாருமில்லை என்பதை கவனித்து சத்தமில்லாமல் மாடியில் திவாவின் அறைக்கு வந்து சேர்ந்தனர்.


உள்ளே இருந்த சுபாவை கண்டு, “ஹாய் ஆன்ட்டி…” வணக்கம் சொன்னவர்களுக்கு, அவரும் ஏதும் அறியாதவரை போலவே சாதாரணமாக பதில் கொடுத்து, வீட்டினரின் நலனை விசாரித்து தெரிந்துக் கொண்டார்.


“நேரமாச்சு, மூணு பேரும் முதல்ல சாப்பிட வாங்க திவா, அப்புறம் பேசுங்க.”


“இதோ வந்துட்டோம் ஆன்ட்டி” ஆர்வமாக பதிலளித்த நண்பர்களை முறைத்த திவா,...


“இந்த எருமைங்க பண்ணி வெச்சுருக்க வில்லங்க வேலைக்கு, இந்த டாஷுங்களுக்கு இப்போ சாப்பாடு தான் ரொம்ப முக்கியம்” கோபமாக கத்தினான்.


“ஒய் நண்பா… ஒய் திஸ் கோபம்?” என்ற விஜய்யை, சுட்டெரிக்கும் பார்வை பார்த்தான்.


“திவா, இதென்ன மரியாதையில்லாத பேச்சு?” மகனை கடிந்தவர், “நடந்ததை பத்தி பேசி எதுவும் ஆகப் போறதில்லை. இன்னும் அஞ்சு நிமிஷம் உங்களுக்கு டைம் தரேன். நீ சாப்பிட இறங்கி வர” என்று அங்கிருந்து நகர்ந்தார்.


“என்னடா மச்சி! என்ன ஆச்சுன்னு இவ்ளோ கோபம்?” என்ற சந்தோஷை மொத்தியவன், மறக்காமல் மோகனைப் பற்றி கேட்டு தெரிந்துக் கொண்டான். சந்தோஷிடமும், விஜய்யிடமும் சில விஷயங்களை விவாதித்தவன், அவன் சிக்கியிருந்த விஷயத்தை குறித்து மூச்சு விடவில்லை.


அதற்குள் “திவா, இறங்கி வா.” என்று சுபா குரல் கொடுக்க,...


“அந்த மொக்க பயலோட அப்பாவை நினைச்சு சோறென்ன, தண்ணி கூட தொண்டைக்குள்ள இறங்க மாட்டேங்குதுடா மச்சி. டென்ஷனா இருந்ததால தான், இங்க கிளம்பி வந்தோம். இப்போவாவது ஏதாவது வயித்துக்கு போட்டுக்கறேன்” என்று விஜய் சொல்ல,...


“இப்போ பேசுடா, அவன் தான் யோசிக்காம ஐடியா சொன்னா, ஒரு வார்த்தை என்கிட்டே சொல்றதுக்கு என்ன? நீங்க முட்டாள்தனமா போட்ட ப்ளானால, போலீசுக்கு பதில் சொல்லி, போறாததுக்கு எனக்கும் அனாவசிய தலைவலியை கொடுத்து!” என்று கடித்து துப்பிய நண்பனை, புரியாமல் பார்த்தனர் மற்ற இருவரும்.


“திவா… விஜி,... சந்து…” என்று மீண்டும் அவர்களை, இந்த முறை தாத்தா அழைக்கும் குரல் கேட்டு, வேகமாக கிழே இறங்கி வந்தனர்.


அங்கே தாத்தாவுடன் சோபாவில் அமர்ந்து இருந்த விதுவை பார்த்து, மற்ற இருவரும் வாய் பிளந்தனர்.


“டேய், இந்த குட்டிச் சாத்தான் எங்கடா இங்க வந்தா?” என்ற விஜய்யின் காலை நச்சென்று மிதித்தான் திவா.


“அச்சோ… அம்மா…” என்று அவன் கத்தவும், நிமிர்ந்த விது... அவர்களை பார்த்த எரிச்சலான பார்வையில்…,


“நமக்கு இன்னிக்கு கட்டம் சரியில்ல சந்து. எல்லா பக்கமும் அடி பலமா இருக்கு” என்று விஜய்யை, வாயை மூடும் படி திவா சைகை செய்தான்.


“அப்பா சாப்பிட்டாரா சுபிம்மா?” என்ற திவாவிடம், இல்லை என்று சுபா தலையை அசைக்க, “ம்மா, இவங்களுக்கும் இன்னைக்கு ரொம்ப அலைச்சல்… பார்த்து கவனிக்கறீங்களா?”


“எனக்கு தெரியும்டா பெரிய மனுஷா… நீ உட்காரு…”


“இல்லம்மா… அப்பாவை நான் கூட்டிட்டு வரேன்…” பிரபாவை தேடி மேலே செல்ல இருந்த மகனிடம், “அப்பா, தோட்டத்துல இருக்கார்” என்ற சுபாவின் பதிலில், தந்தையை காண தோட்டத்துக்கு சென்றான்.


விதுவை பற்றி சுபாவிடம் கேட்க ஆரம்பித்தான் விஜய்.


*******************************************


தோட்டத்து பெஞ்சில், வானத்தை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தவரிடம் வந்து, “எனக்கு நிஜமா அவ யாருன்னு தெரியாதுப்பா.”


“தெரிஞ்சுருந்தா எப்படியோ போன்னு விட்டுட்டு வந்து இருப்பியா திவா?” என்ற பிரபாவுக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல், தலையைக் கோதினான்.


“என்னை கொஞ்ச நேரம் தனியா விடு” என்று பிரபா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, முன் வாசலில் எதுவோ கசமுசா என்று பெரிய சத்தம் கேட்டது. அப்போது திவாவின் கைப்பேசிக்கு வாயிலில் இருந்த கூர்க்கா அழைத்து விவரம் சொல்ல, இருவரும் அங்கே விரைந்தனர்.


மோகனின் அப்பா பாண்டியன், தன் பட்டாளத்தோடு வந்து இறங்கி இருந்தார். பாண்டியன் அரசியல் பலம் வாய்ந்தவர். அடியாட்கள் சகிதம் அவரை தங்கள் வீட்டு வாயிலில் கண்டவுடன், “இப்போ பார்… இந்த மனுஷனை வேற சமாளிக்கணும். இந்த வம்பெல்லாம் நமக்கு தேவையா?” மகனிடம் மெல்ல பிரபாகர் முனக,


“நான் பேசி பார்க்கறேன். நீங்க அவசரப்பட்டு தலையிடாதீங்க” என்றவன், பாண்டியனை நோக்கி நடந்தான். அவர் உடன் இருந்தோர் கையில் அரிவாள், பட்டாக்கத்தி, என்று பெரிய ஆயுதங்களை வைத்து இருந்ததை கவனித்த திவா கொஞ்சமே திகிலடைந்தான் என்றால் மிகையல்ல.


அவனை கண்டவுடன், “எங்கடா என் மகன்?” என்று ஆவேசமாக பாண்டியன் வந்த வேகத்தில், திவா பயந்து, சற்று பின் வாங்கினான்.

முடிச்சு அவிழுமா?


© KPN NOVELS COPY PROTECT
bottom of page