top of page

மூன்று முடிச்சு 8

முடிச்சு எட்டு


“நீ கண்ணை மூடு” என்று திவா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மேனேஜருடன், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரும், கூடவே ஒரு பெண் கான்ஸ்டபிளும் தடாலென அறைக்குள் நுழையவும், தன் சேரில் இருந்து எழுந்தவனிடம், “உங்க பேரென்ன?” நொடி பொழுது இடைவெளி இல்லாது எஸ்.ஐ., அதிகாரமாக ஆரம்பித்தார்.


“நான் தான் முன்னாடியே எங்க முதலாளி பத்தி சொன்னேனே சார்!” மேனேஜர் மார்த்தாண்டம் குறுக்கே வந்தார்.


“நீ சும்மாயிரு...” என்று அவரை, அதட்டிய எஸ்.ஐயிடம், “சார், என் பேர் திவாகர் சத்ய பிரபாகர். கோவை லக்ஷ்மி அண்ட் சன்சோட எம். டி.”


“ஆமா, நீ தான் இந்த பொண்ணை இங்க சேர்த்தியா? திருட்டுக் கல்யாணம் பண்ணத் தான் மண்டபத்துல இருந்து அந்த ரெண்டு பொண்ணுங்களும் கிளம்பினாங்களா?” தன் கையில் இருந்த தாளை பார்த்துக் கொண்டே, எஸ்.ஐ. பேசவும், அட்மிஷன் ஃபார்மில் மனைவி என்று போட்டதால் எழுந்த கேள்வியென்று திவாவுக்கு புரிந்தது.


“திருட்டுக் கல்யாணம்னு எல்லாம் பேசாதீங்க சார்” மறுக்க ஆரம்பித்த திவாவின் பேச்சை காதில் வாங்காமல்,...


கான்ஸ்டபிள்ளிடம் “மொதல்ல இந்த பொண்ணை எழுப்புங்க” என்று கட்டளையிட்ட எஸ்.ஐ, “இவங்க பேர் விதுன்னு ஃபார்ம்ல இருக்கு. அப்போ, அந்த நித்யா எங்க? அந்த பொண்ணைக் கூப்பிடுங்க.”


“சார், வழியில சின்ன ஆக்ஸிடென்ட் ஆனதுல, விது அதிர்ச்சியில இருக்கா. டாக்டர் அவங்களை அதிகம் பேச வேணாம்னு சொல்லியிருக்கார். எது கேட்கறதா இருந்தாலும் என்னைக் கேளுங்க.”


“இவங்களை உங்களுக்கு எப்படி பழக்கம்? எத்தனை நாளா தெரியும்? இன்னைக்கு காலையில என்ன ஆச்சு? ஆக்சிடென்ட் ஆகி, ஒரு பொண்ணு இங்க படுத்து இருக்காங்க. அப்போ, இன்னொரு பொண்ணு எங்க? அவங்களையும் கூப்பிடுங்க.”


தன் கைக் கடிகாரத்தை ஒரு முறைப் பார்த்தவன், “இன்னைக்கு காலையில ஆறு மணியில இருந்து விதுவை தெரியும்.”


“இதை நான் நம்பணுமா?” என்று முறைத்த எஸ்.ஐ., “ஆமா, புதுசா பழகின பொண்ணு எப்படி உன் பொண்டாட்டியானா? லவ்டேல்ல இருந்தவங்க எப்படி இங்க வந்தாங்க? அந்த இன்னொரு பொண்ணு எங்கன்னு முதல்ல சொல்லு.”


“இப்போ அந்தப் பொண்ணு எங்கன்னு, எனக்கு தெரியாது சார்.”


“என்னடா…” என்று அவர் மரியாதை இல்லாமல் ஆரம்பிக்க,...


“எஸ்.ஐ சார்…” என்று பதிலுக்கு உரக்க கத்திய திவா, “நீங்க எது கேக்கறதா இருந்தாலும் அந்த நித்யாவை பார்க்கும் போது, நேர்லயே கேட்டுக்கோங்க. அந்த பொண்ணு மேஜர்! காதலிச்சவனை கைப்பிடிக்க, அவளா சுயமா முடிவெடுத்து, விரும்பி தான் யார்கிட்டயும் சொல்லிக்காம சத்திரத்துல இருந்து கிளம்பி வந்தா. அதுக்கு நானும், இந்த விதுவும் சாட்சி மட்டும் தான். மத்த எந்த விவரமும் எங்களுக்கு தெரியாது.”


“இப்போ என்ன புது கதை பின்னுற? ‘பொண்ணுங்களை காணோம்... யாரோ கடத்திட்டாங்கன்னு’ எங்களுக்கு கம்ப்ளெயின்ட் வந்துருக்கு. நீயும், இவளும் திருட்டுக் கல்யாணம் செஞ்சுக்க கிளம்பி வரலை. ஆனா, ஃபார்ம்ல பொண்டாட்டின்னு மட்டும் போடுவ! சரி, அந்த நித்யா தான் யாரையோ கல்யாணம் பண்ணிக்க கிளம்பி வந்தான்னா, இப்போ அவங்க ரெண்டு பேரும் எங்க?”


“நித்யாவோட லவ்வர் பேர் மோகன். என் ஃபிரெண்டு தான் அவன். திண்டுக்கல் தான் அவனுக்கு சொந்த ஊர். அங்க பாண்டியன்னு எக்ஸ் எம்.எல்.ஏ இருக்காரே, அவரோட ஒரே பையன்!” இதை கேட்ட எஸ்.ஐ., அதிர்ச்சியாக திவாகரை ஏறிட்டார்.


“மோகன் வீட்ல அவங்க காதலை ஏத்துக்கலை. அதான் வீட்டுக்கு தெரியாம அவங்களே கல்யாணம் பண்ணிக்க முடிவு செஞ்சு, இப்படி ப்ளான் போட்டு இருக்காங்க. எனக்கும், விதுவுக்கும், இதில் எந்த சம்பந்தமும் இல்லை. நீங்க துருவித்துருவி எங்களை விசாரிச்சு ஒரு பிரயோஜனமுமில்லை” என்று திவா சொல்லும் போதே, எஸ். ஐயின் கைப்பேசி அலறியது.


“ஹலோ சார்,” என்ற எஸ்.ஐ... அதன் பின்னர், “எஸ் சார்… ஓகே சார்… அப்படியா சார்… ஆனா சார்… அது வந்து சார்… சரி சார்… சரி சார்… ஓகே சார்… ஓகே சார்… ரைட் சார்… ஆகட்டும் சார்… அப்படியே செஞ்சுடறேன் சார்” என்று வரிசையாக ‘சார்’களை கணக்கில்லாமல் அள்ளி போட்டார்.


பேசியை வைத்தவர், “நீங்க பெரிய வீட்டு பையனா இருக்கலாம் தம்பி. ஆனாலும், நான் என் கடமையை செய்யணும். நீங்க இவங்களை எப்படி, எங்க சந்திச்சீங்க? என்ன ஆச்சு?” இந்த முறை சற்றே நிதானமாக அவர் மேலும் கேள்விகளை எழுப்ப, தனக்கு தெரிந்ததில், மேலும் சில விஷயங்களை கத்தரித்து, அவரிடம் கோர்வையாக திவா கூறி முடித்தான்.


“அந்த மாப்பிள்ளை மோகன், உங்களோட ஃபிரெண்ட்! கல்யாண பொண்ணு நித்யா, இந்த பொண்ணுக்கு தோழின்னு சொல்றீங்க. ஆனா, உங்க ரெண்டு பேருக்கும், அவங்க லவ் பத்தியோ மத்த எந்த விவரமும் தெரியாது! இதை நான் அப்படியே நம்பணும். என்னை பார்த்தா கேனையனா தெரியுதா தம்பி?” ஒரு மாதிரி குரலில் எரிச்சலைக் கட்டுப்படுத்திக் கொண்டு எஸ்.ஐ., கேட்க,...


“சார்…” என்ற விதுவின் குரல் கேட்டு, இருவரும் அவள் புறம் திரும்பினர்.


‘நான் தான் சமாளிச்சுட்டு இருக்கேன்ல, இவ எதுக்கு குறுக்க பேசறா?’ என்ற தினுசில் அவளை முறைத்த திவாவின் பார்வையை தவிர்த்தவளாக,...


“சார், கல்யாண மண்டப வாசல்ல அந்த நித்யா பக்கத்துல திடீர்னு ஒரு கார் வந்து நிக்கவும், நான் பயந்து போயிட்டேன். என்ன ஏதுன்னு கேக்கறதுக்குள்ள அவ என்னை காருக்குள்ள இழுத்துட்டா. அப்புறம் தான், அவ லவ் விஷயத்தை சொல்லி, என்னை துணைக்கு இருக்கும் படி கேட்டா. நான் என்னை திரும்ப அங்க கொண்டு விட சொல்லி அழ கூட செஞ்சேன் சார். ஆனா, ‘கூட இரு’ன்னு நித்யா ரொம்ப கெஞ்சவும் வேற வழியில்லாம, போக வேண்டியதா போச்சு” தன் பங்குக்கு விது நடந்ததை விவரித்தாள்.


விதுவின் பேச்சை நம்பாமல், அவர்கள் இருவரையும் மாறி மாறி எடை போடும் விதமாக பார்த்தார் அந்த எஸ்.ஐ.


அதற்குள் மேனேஜரின் பேசியில் அழைப்பு வர, அதில் பிரபாகரின் எண்ணை பார்த்து விட்டு, ‘எடுக்கலாமா, வேணாமா?’ என்று முழித்தவர், திவாவை வேறு பார்த்து திருதிருவென விழித்தார்.


எஸ்.ஐ. வரும் போது, திவாவுக்கு துணையாக இருக்கும் படி ஆணையிட்ட முதலாளியே இப்போது அழைத்ததும், ‘அறைக்கு வெளியே போவதா வேண்டாமா?’ என்று யோசனையாக பார்த்தவரின் கையில் இருந்து, விடாமல் அடித்துக் கொண்டிருந்த பேசியின் ஒலியில் ஏற்கனவே கடுப்பில் இருந்த எஸ்.ஐ வெகுண்டு, “வெளிய போய் பேசுங்க” என்று கடுத்தார்.


மேனேஜரின் தயக்கத்தில், லேசாய் சந்தேகம் பிறக்க, சட்டென கைப்பேசியை பறித்த திவா, தந்தையின் எண் ஒளிர்வதைக் கண்டு, ‘சொல்லிட்டீங்களா?’ என்பது போல் அவசரமாக அவரைப் பார்க்க, மேனேஜர் ‘ஆம்’ என்று தலையை ஆட்டியதும், பதட்டத்தில் விது என்பவள் பின்னுக்கு போக, “ஹலோ அப்பா…” என்று அறையை விட்டு வெளியே வந்தான் திவாகர்.


அவன் பின்னோடு வால் பிடித்துக் கொண்டு மேனேஜரும் வெளியே வந்து விட்டார். அவருக்கு முதலாளி தானே முக்கியம்! தந்தைக்கு என்ன சொல்லப்பட்டதோ, அவரிடம் தானே பிரச்சனையில்லை என்று சமாதானம் சொல்லும் நோக்கத்தோடு வெளியே வந்த திவாவுக்கு, விதுவை போலீசாரிடம் தனியே விடுகிறோம் என்ற விஷயம் உறைக்கவில்லை.


************************************


“ஏய் பொண்ணு, உன் பேர் என்னன்னு சொல்லு?” அதிகாரமாக கேட்ட எஸ். ஐயிடம்,...


“என். வித்யா லட்சுமி சார்!” சிறு நடுக்கத்தோடு பதிலளிக்க ஆரம்பித்தவளிடம், பெற்றோர், வீட்டு விலாசம், குடும்பம், கல்லூரி, படிப்பு, நித்யாவை பற்றி, ஹாஸ்டல் வாழ்க்கை முதலிய மற்ற விவரங்களை குறித்து எஸ்.ஐ. விசாரணையை தொடர்ந்திட, எல்லாவற்றுக்கும் விது மெதுவே பதில் தர, கான்ஸ்டபிளும் கவனமாக குறிப்பெடுத்து கொண்டார்.


நடந்ததை திவா சொன்னது போலவே ஆனால், அழுதுக் கொண்டே, கண்ணை துடைத்து கொண்டு, மூக்கை உறிஞ்சி… சில இடங்களில் ஒரு கையை அசைத்து ஆக்ஷனோடு விவரித்தவளை பார்த்த எஸ்.ஐ, “அப்போ உன் ஃபிரெண்ட் ஓடி போக இருந்தது பத்தி உனக்கு தெரியாது?”


ம்ம்ஹும்... என்று தலையாட்டியவளிடம்... “தெரியாம, நீ இதுல மாட்டிக்கிட்ட?” ஒரு மாதிரி த்வனியில் அவர் கூர்ந்து அழுத்தமாக பார்த்து கேட்க,


அதற்கும், “ம்ம்… ம்ம்…” என்று தலையசைத்தவளை, சந்தேகம் விலகாமல் சில நொடிகள் பார்த்தவர்.. “சரி, நான் டாக்டர்கிட்ட பேசிட்டு வரேன்” என்று வெளியேறினார். அந்த பார்வையில் வெலவெலத்து போனவளாக, அயர்ச்சியும் சேர, விது மீண்டும் கண்ணை மூடி கொண்டாள்.


எஸ்.ஐயிடம், இங்கே ஹாஸ்பிடல் அறைக்குள் விது பேசிக் கொண்டிருந்த போது, வெளியே தந்தை பிரபாகரிடம், விளக்கம் தந்துக் கொண்டிருந்தான் திவா.


“என்ன திவா, இதெல்லாம்? மோகன் விஷயம் உனக்கு தெரியாதா?”


பட்டும் படாமலும் சில விவரங்களை மட்டும் சொன்னவன், “ப்பா… ஐ கேன் மேனேஜ். கமிஷனரை நீங்க தான் கான்ட்டேக்ட் செஞ்சீங்களா?”


“ஆமா திவா, எஸ்.ஐ.கிட்ட பேசிட்டதா சொன்னார். டோன்ட் வொர்ரி கண்ணா, அப்பா டீல் பண்றேன்.”


“ப்பா… ஐ அம் ஓகே…” என்றவன், அந்தப்புறம் ஹாரன் சத்தம் கேட்டு, “கார்ல போயிட்டு இருக்கீங்களாப்பா? தேங்க் காட், நீங்க வீட்ல இல்ல. நான் சாயங்காலம் வந்துடுவேன் ப்பா. லஞ்சுக்கு போகும் போது அம்மாகிட்ட எதுவும் சொல்லாதீங்க, அப்செட் ஆகிடுவாங்க.”


“இன்னும் ஒரு மணி நேரத்துல அங்க, உன் பக்கத்துல நான் இருப்பேன் மை சன்.”


“ப்பா… நோ, நீங்க எதுக்குப்பா கிளம்பினீங்க?” என்றவன், ‘உங்க வேலையா?’ என்பது போல் மேனேஜரை முறைத்தான்.


“மார்த்தாண்டத்தை திட்டாதே. உன் அம்மாவுக்கு ஏதோ காலையில் இருந்து மனசு சரியில்லைன்னா. அதான், உன்னை உடனே பார்க்கணும்னு சொன்னா, சரின்னு கிளம்பிட்டோம்.”


“அம்மாவுமா! ஓ… நோ… ஏன்… வீண் ஸ்ட்ரெயின்? சரி, அம்மாக்கிட்ட கொடுங்கப்பா.” பேசி கை மாறியதும் “சுபிம்மா!”


மகனின் அழைப்பில் சற்றே ஆசுவாசம் அடைந்தவராக, “உனக்கு அடி எதுவும் படலையே திவா கண்ணா? ஆர் யூ ஓகே ராஜா?” அக்கறையாக பாசம் பொங்க நலன் விசாரித்தார்.


“ஐம் ஃபைன் ம்மா.”


“பிள்ளைக்கிட்ட முதல்ல இதை கேட்காம, மத்த கதை பேச வேண்டியது!” தன்னை விடுத்து, அவர் விருப்பத்துக்கு இசைந்து கொடுத்த அப்பிராணி தந்தையிடம் பொரிந்த தாயை சமாதானம் செய்து, “நீங்க வர வேணாம் சுபிம்மா…” என்றவனிடம்,


“நீ சும்மா இரு…” என்று அடக்கி விட்டு, ஒன்றிரண்டு தகவலை தெரிவித்த பின் பேசியை வைத்தனர்.


மீண்டும் அறைக்குள் திவா நுழைய, கண் மூடிப் படுத்திருந்த விது, “நாம கிளம்பலாமா?” என்று கேட்டாள்.


“அது விது… என்னோட பேரன்ட்ஸுக்கு மேனேஜர் ஆக்சிடென்ட்னு தகவல் தந்ததால, டென்ஷனாகி அவங்க கிளம்பி இங்க வந்துட்டிருக்காங்க. அதனால, நாம உடனே கிளம்ப முடியாது.”


“இதுவரை நீங்க செஞ்ச உதவியே போதும் டி.எஸ்.பி.சார். ஒரு ட்ராவல்ஸ் வண்டியை மட்டும் ஏற்பாடு செஞ்சு கொடுங்க, நானே வீட்டுக்கு போயிடுவேன்.”


“ஹே லூசு! இப்போ தான் திரும்பத்திரும்ப மயங்கி விழுந்த, ஆள் வேற வீக்கா இருக்கன்னு டாக்டரும் பயமுறுத்தறார். நீ என்னடான்னா, ‘தனியா போறே’ன்னு உளறுற” கோபமாக கத்தியவனை கண்டு அரண்டு போனவள், மென் குரலில்…


“இல்ல… ஏற்கனவே உங்களுக்கு நிறைய தொந்தரவு கொடுத்துட்டேன்.” தயக்கத்தோடு கூறி, மெல்ல விழிகளை உயர்த்தி பார்த்தாள்.


சோர்ந்து கிடந்தவளின் முகம் கண்டு இளகியவன், “நத்திங் டூயிங் விது. போலீஸ் அளவுக்கு வந்த பிறகு, உன்னை தனியே விடறது தப்பு. உங்க வீட்ல கொண்டு விட்டு, விளக்கம் சொல்ல வேண்டியது என்னோட பொறுப்பு” திட்டவட்டமாக திவா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வெள்ளையும் சொள்ளையுமாக சிலர் அறைக்குள் அனுமதியின்றி திபுதிபுவென நுழைந்தனர்.


அவர்கள், சுதாவின் நெருங்கிய உறவின ஆண்கள். விடியற்காலையில் அவளோடு காரில் உடன் பயணித்தவர், விதுவின் ட்ராவல் பேக் மற்றும் கைப்பையை தரையில் விசிறி எறிந்தார்.


“இந்தா பொண்ணு, உன் பொருளெல்லாம் கொண்டு வந்து இருக்கோம். மகராசி, நீ பிரச்சனை பண்ண, எங்க வீட்டு கல்யாணம் தான் கிடைச்சுதா?” அவர்கள் பங்குக்கு ஆளாளுக்கு விதுவை திட்ட ஆரம்பிக்கவும், சற்றே நின்றிருந்த கண்ணீர் மீண்டும் பெருகியது.


அப்பேச்சில், காலையில் நடந்த களேபரத்தால் அவர்கள் அடைந்த பதட்டம் வெகுவாக வெளிப்பட்டது. போதாக்குறைக்கு, இவர்கள் அந்த மருத்துவமனைக்குள் நுழைந்த போதே, ‘எங்க அவ’ என்ற தோரணையில் கத்தியதில், டாக்டரிடம் பேசி கொண்டிருந்த எஸ்.ஐ, வெளியே வந்தவர், கமிஷனரிடம் அவர் வாங்கிக் கட்டி கொண்டதை இங்கே இடம் மாற்றி, “நல்லா கேஸ் கொடுத்தீங்க” என வார்த்தையால் கொட்டிவிட்டே மேலே அனுப்பி இருந்தார்.


செயின் ரியாக்ஷன் என்பார்களே… அந்த சங்கிலி தொடரில், போலீஸ்காரரின் ஏச்சில் வெகுண்டவர்கள், எல்லா கோபத்தையும் விதுவின் மேல் இறக்கிட, அனாவசியமாக மாட்டிக் கொண்ட அப்பிராணி பேதையின் நிலை தான் பரிதாபகரமானது.


மேனேஜர் மார்த்தாண்டத்தின் உதவியோடு அவர்களை சமாதானப்படுத்தி அனுப்ப திவா முயன்றுக் கொண்டிருந்த வேளை எஸ்.ஐயும் வந்து விட, சுதாவின் உறவுகளோடு கொடுக்கப்பட்ட புகாரை குறித்து சிறிது நேரம் விவாதம் செய்தார். அதன் பின் விதுவையும், நித்யாவையும் வசை பாடி கொண்டே அவர்கள் கிளம்பி சென்றனர்.


சத்திரத்தில் வாணியிடம் பெறப்பட்ட நித்யாவின் மொபைல் எண்ணுக்கு ஏற்கனவே எஸ்.ஐ. முயன்று ‘சுவிட்ச் ஆஃப்’ என்று வந்திருந்தாலும், இப்போது விதுவின் புறம் திரும்பியவர், “உன் போன்ல இருந்து அந்த பொண்ணுக்கு கால் போடு.” அதிகாரமாக கட்டளையிடவும், கான்ஸ்டபில் கைப்பையை எடுத்து விதுவிடம் கொடுக்க, நித்திக்கு அழைக்க முயன்ற போது, ‘சுவிட்ச் ஆஃப்’ என்ற பதிலே வந்தது.


இதற்குள் மீண்டும் கமிஷனரிடம் இருந்து கால் வர, “சார்... இந்த பொண்ணுங்களை காரில் கூட்டிட்டு போனது நம்ம திண்டுக்கல் எக்ஸ் எம்.எல்.ஏ பாண்டியன் சாரோட பையன். பெரிய இடத்து விவகாரம் சார். பாண்டியன் ஐயா, ‘ஏன் சரியா விசாரிக்கலை’ன்னு என்னையில்ல கேப்பாரு. எனக்கு தான் பிரச்சனையாகும்.” ஒருவித சங்கட த்வனியில் மொழிந்து, இது வரை தான் சேகரித்த விவரங்களை கமிஷனரிடம் ஒன்று விடாமல் தெரிவித்தார்.


மறுபுறம் சொல்லப்பட்டதற்கெல்லாம் மீண்டும் வெறுமே “ஓகே சார்… சரி சார்…” என்ற எஸ்.ஐ., கைப்பேசியை வைத்து விட்டு, திவாவை முறைத்தார்.


“ஓடிப் போறவங்க, ஏதாவது லெட்டர் எழுதி வெச்சுட்டு போறதில்ல. தண்டமா எங்க நேரத்தை வீணடிச்சுக்கிட்டு, கிரகம் பிடிச்சவங்க! அந்த பொண்ணை பெத்த ஏமாளிங்க வேற லவ்டேலுக்கு கிளம்பி இருக்காங்களாம்! நம்பி படிக்க அனுப்பின அப்பாவிங்க, இப்ப அவதிப்படுதுங்க. இனி அவங்களை விசாரிச்சு, சமாளிக்கணும்!” கத்த துவங்கி, இது போல வழக்குகளை சந்தித்த அனுபவத்தில் சற்றே புலம்பலாக முடித்தவர்,


விதுவை ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்து விட்டு, “உன் சிநேகிதி போன் போட்டா, ஒரு முறையானும் பெத்தவங்களுக்கு பேச சொல்லு! புள்ள, நெஜமாவே ஓடி போயிடுச்சா… இல்ல உசுரோட தான் இருக்கா இல்லையான்னு தெரியாம, அது எப்படிப்பட்ட வலி தெரியுமா? உங்களை போல வயசு பிள்ளைங்களுக்கு பெத்தவங்க மனசு எங்க புரிய போகுது!” ஆதங்கமாக அறிவுரையும் தந்து விட்டே அங்கிருந்து வெளியேறினார்.


இந்த கடைசி கூற்றில் உள்ளம் துடித்தாலும், அவர்கள் இடத்தை காலி செய்யவும், “ஹப்பா…” என்று விது நிம்மதி பெருமூச்சு விடத் தான் செய்தாள்.


அவனும் வருத்தப்பட்டாலும், “நான் போய் உன்னை டிஸ்சார்ஜ் பண்றதுக்கு சொல்லிட்டு வரேன்” என்று திவா வெளியே வந்தான்.


நர்ஸ் வந்து ட்ரிப்சை நிறுத்த, அவர் உதவியோடு, தன்னை கொஞ்சம் ஃபிரெஷ் செய்துக் கொண்டு, புடவையை மாற்றி சுடிதார் அணிந்துக் கொண்டாள். எல்லாம் பேக் செய்து முடித்த பின்னர், நர்ஸ் கொடுத்த மருந்து சீட்டையும் வாங்கி தன் பையில் வைத்தாள்.


விடாமல் வீடு, அப்பா, அம்மா, தம்பி, பாட்டி என்று அனைவர் எண்ணுக்கும் அழைத்து பார்த்தும், பதில் இல்லை என்றவுடன், பயம் அதிகரித்தது.


“வீட்டில் யார் என்ன தகவலை தவறாக பரப்பினார்களோ! யாரோ என்ன? இதோ, இப்போ வந்துட்டு போனவங்க சொன்னாங்களே, இதை எல்லாம் கல்யாணத்துக்கு வந்த ஃபாக்டரி மேனேஜரும் இல்ல நேர்ல பார்த்திருப்பார்! இந்நேரம் கண்டிப்பாக அப்பாவிடம், நல்லா பத்த வெச்சுருப்பார் அந்த மனுஷன்.” முணுமுணுத்தவள்,


“பாட்டி…” என்றவளின் சிந்தனை தடைப்பட்டு, ‘இப்படியா அந்தக் கூனிக் கிழவிக்கிட்ட தலையைக் கொடுப்பே விது? இனி கொஞ்ச நாளுக்கு உன்னை திட்டுறதை மட்டுமே மெயின் வேலையா வெச்சுக்குமே!’ என்று மனதில் புலம்பியவளை கைப்பேசி சத்தமிட்டு நடப்புக்கு இட்டு வர… திரையில் நித்யாவின் அம்மாவின் எண்ணை கண்டதும், பேசியை நழுவ விட்டாள்.


என்ன சொல்லுவாள் அவரிடம்? தொலைப்பேசியில் சொல்லி புரிய வைக்க கூடியதா? அடித்து ஓயும் வரை அதையே வெறித்து பார்த்திருந்தாள். அப்போது தான் ஏற்கனவே நித்யாவின் பெற்றோர் இருவரிடமும் இருந்து அழைப்புகள் வந்திருந்ததை கவனித்தாள்.


செயலற்றவளாக, வழிந்த கண்ணீரை துடைத்து அமைதியாக சாய்ந்து கொண்டாள்.


********************************************


இதற்கிடையே சில விஷயங்கள் ஏற்கனவே நடந்தேறி இருந்தது.


திருமண வீட்டில் போலீஸ் விசாரணைக்கு பின், லவ்டேலில் இருந்து பொள்ளாச்சி நோக்கி கிளம்பிய நாராயணனின் மேனேஜரிடம்,விதுவுக்கு ஆக்சிடென்ட் ஆகி விட்டதாக சுதாவின் குடும்பத்தினர் உடனே போனில் தகவல் தந்தனர். அவர்கள் சொன்னதை வைத்து, அப்போதே இந்த நர்சிங் ஹோமுக்கு வந்து விட்ட அந்த மேனேஜருக்கு, விதுவை பற்றி கண்டுப்பிடிப்பது ஒன்றும் அவ்வளவு சிரமமாக இல்லை.


விதுவுடன், ஒரு இளம் வயது ஆண் துணைக்கு இருப்பதும், அதுவும் ‘கணவன்’ என்று அட்மிஷன் ஃபார்மில் அவன் குறிப்பிட்டு இருந்த தகவலையும், தன் முதலாளிக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தி இருந்தார்.


திவாவிடம் திட்டு வாங்கி விட்டு வெளியே வந்திருந்த நர்ஸ் வேறு, அந்த எரிச்சலில் சக நர்ஸிடம், திவாவையும், விதுவையும் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக இட்டு கட்டி புரணி பேசியதை அரைகுறையாக காதில் வாங்கியவர், அந்த தகவலையும் முதலாளிக்கு செவ்வெனே கனகாரியமாக கடத்தி விட்டார்.


தன் அப்பாவோடு போனில் பேசுவதற்காக திவா வெளியே வந்த போது, அவனை மொபைலில் புகைப்படம் எடுத்து, அதையும் வாட்சப்பில் நாராயணனுக்கு அனுப்பி வைத்து இருந்தார் அந்த விசுவாச மேனேஜர்.


இந்த நொடி வரை ஹாஸ்பிடலில் நடக்கும் எல்லாவற்றையும் ஏற்கனவே ஃபேக்டரி மேனேஜர், மறைந்து இருந்து கவனித்து, தகவல் ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார் என்பதும், வீட்டில் உளைக்கலனாக நாராயணன் கொதித்துக் கொண்டிருப்பதும், பாவம் விது அறியாத விஷயம்.


********************************************

காத்திருப்பதை தவிர வேறு செய்ய ஏதும் இல்லாததாலும், வலி மாத்திரை போட்டதாலும், அமர்ந்தவாக்கில் கண் மூடி அமர்ந்திருந்தான் திவா.


விதுவுமே பல்வேறு எண்ணங்கள் முட்டி மோதியதில், அப்பா, பாட்டி குறித்த கிலியில், இனி கல்லூரி தோழிகளின் கேள்விகளை சமாளிக்க வேண்டுமே, வேறு என்னென்ன பிரச்சனைகள் முளைக்குமோ என்கிற கவலையில் விழிகளை மூடி யோசனையில் இருந்தாள்.


கதவு திறக்கப்பட்டு, “திவா கண்ணா…” அன்பான, கனிவான அழைப்பில் இருவரும் கண்ணை திறந்தனர்.


“ஹாய் ம்மா…”


வேகமாக மகனிடம் வந்தவரின் பார்வை முழுதும் அவனிடம் மட்டுமே. “அடி படலை தானே… எங்க கையை காமி…” என்றவர், மகனின் முகம் கை, காலை பார்வையிட்ட பின்பே திருப்தியுற்றார்.


“சுபிம்மா… இவ தான் விது” என்று அவர்களையே கண்ணிமைக்காமல் ஆவென பார்த்திருந்தவளை சுட்டி, அன்னைக்கு அறிமுகப்படுத்தினான் திவா.


அவரை பார்த்து கட்டிலில் இருந்து விது எழ, “இப்போ உடம்புக்கு தேவலையா விதுமா?” சுபா கரிசனையாக கேட்கவும், மளுக்கென்று கண்களில் கண்ணீர் திரண்டு விட, “ம்ம்ம்…” என்று தலையாட்டியவளிடம்,...


“ஹே கண்ணம்மா, அழாதடா... நாங்க வந்துட்டோம்ல! உங்க வீட்ல நாங்க பத்திரமா உன்னை கொண்டு விடறோம். சரியா?” அவள் கண்ணை துடைத்தவர், “அப்பா எல்லாம் சொன்னாங்க கண்ணா. இந்த மோகன் இப்படி பண்ணியிருக்க வேணாம். இந்த பிள்ளை வேற வீணா சிக்கி…” மகனிடம் ஆதங்கப்பட்டவர்,


“கிளம்பலாமா திவா? அப்பா கீழே காத்திருக்கார்” எனவும், விதுவின் பைகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர்.


காருக்கு அருகே வரவும், உள்ளே இருந்து இறங்கி வந்த பிரபாகர், அவளை நலம் விசாரித்தார். மிகவும் சாந்தமாக, புன்னகை தவழும் முகத்தோடு, நட்போடு பேசும் அவர்களை விதுவுக்கு மிகவும் பிடித்து விட்டது.


ஹாஸ்பிடலில் இருந்து கிளம்பியவர்கள், நேரே குன்னூர் பங்களாவுக்கு சென்றனர்.


“இப்போவே நேரமாகிடுச்சு, லஞ்ச் சாப்பிட்டுட்டு கிளம்பலாம்” என்ற பெரியவர்களிடம், ‘பசியில்லை; என்று மறுத்தவளை வற்புறுத்தி உண்ணச் செய்தனர்.


மீண்டும் கோவை நோக்கி வண்டி கிளம்பியது. சிறிது நேரத்தில், “கொஞ்சம் வண்டியை ஓரமா நிறுத்துங்க டிரைவர் அண்ணா” என்று மெதுவே விது தயங்கி சொல்ல,...


“என்ன ஆச்சு கண்ணு?” என்ற சுபாவிடம், வாந்தி என்று அவள் சைகையாக காண்பிக்கவும், உடனே காரை நிறுத்தினர்.


அவள் வாந்தி எடுக்க, அவள் தலையை ஆதரவாக பிடித்து உதவினார் சுபா. “என்னடா... என்ன பண்ணுது?” கரிசணையாக கேட்டவரிடம்,...


“சாரி ஆன்ட்டி, எனக்கு ட்ராவல் சிக்னெஸ் உண்டு. ஹேர்பின் பெண்டுங்கறதால வாந்தி வருது. சாரி...” அழுது விடும் தொனியில் பாவமாக சொன்னவளைப் பார்த்து,...


“ஓ… இதானா! நீ அப்போவும் ஹாஸ்பிடல் முன்ன…” என்று திவா கேள்வியாக நிறுத்த, ஆம் என்று தலையசைத்தாள் வித்யா.


“நீ முன் சீட்ல உக்காருடாம்மா. கண் மூடி தூங்கு….” என்று அவள் முன் புற இருக்கையில் அமர்த்தப்பட்டாள்.


“சாரி ஆன்ட்டி… உங்க எல்லாருக்கும் நிறைய தொந்தரவு கொடுக்கறேன்.”


“உடம்புக்கு முடியலை, அதுக்கு ஏன் சாரி சொல்றே கண்ணம்மா? நீ ரெஸ்ட் எடு. முடியலன்னா சொல்லு கண்ணு.”


“அவசரமில்லை… மெதுவா போ ரவி. ஏதாவது கடை வந்தா, காரை ஓரமா நிறுத்து” என்று டிரைவருக்கு உத்தரவிட்ட சுபா, அதே போல் நிறுத்திய போது, விதுவுக்கு எலுமிச்சை பழமும், புளிப்பு மிட்டாயும் வாங்கி கொடுக்கச் செய்தார்.


நன்றியோடு அவருக்கு புன்னகை சிந்தியவள், அதன் பின் அசதியில் அப்படியே உறங்கி விட்டாள்.


ஏற்கனவே விதுவிடம், அவள் விலாசத்தை வாங்கி இருந்தான் திவாகர். சுபாவும், காலையில் இருந்து டென்ஷனாக இருந்ததில் சோர்ந்து விட, மகன் மேல் சாய்ந்து, உறங்க ஆரம்பித்திருந்தார். அப்பாவும், மகனும் மட்டும் காலை சம்பவங்கள், வியாபார விஷயங்கள் என்று மெதுவே பேசிக் கொண்டே வந்தனர்.


“இந்நேரம் பாண்டியனுக்கு தகவல் போயிருக்கும் திவா.”


“அவர் இப்போ சென்னையில் இருக்கறதா மோகன் சொன்னான் ப்பா. எப்படியும் அவர் இங்க வர நேரமாகும், இன்னைக்கு எனக்கு சிவராத்திரி தான்.” என்ற மகனைப் பார்த்து சிரித்தவர்,...


“பெத்தவரில்லையா திவா, ஒரே பையன் வேற! மனுஷர் கொதிச்சு போயிருப்பார். மோகன் தான் பொறுமையா அவருக்கு புரிய வெச்சுருக்கணும். அவன் செஞ்சது கொஞ்சமும் சரியில்ல தான். ஆனா, நடந்தது நடந்துடுச்சு. இனி இதை எப்படி சரி பண்ணலாம்னு, பாண்டியன்கிட்ட நான் பேசறேன்” என்ற பிரபா, வேறு விஷயங்களுக்கு தாவினார்.


“ரவி அண்ணா, இது தான் விலாசம்,” திவா முன்பே விதுவிடம் கேட்டு மொபைலில் குறித்து வைத்து இருந்ததை காரோட்டியிடம் சொன்னதும், “சரி தம்பி,” என்றவர், பொள்ளாச்சியை நோக்கி வண்டியை செலுத்தினார்.


ஊருக்குள் நுழைந்தவுடன் சாலையில் நின்றிருந்தவர்களிடம் வழி கேட்க, வண்டியை நிறுத்தியதில் சுபா, விது இருவருமே உறக்கம் கலைந்தனர்.


“அண்ணே, அடுத்த லெஃப்ட் எடுங்க, அப்புறம் கடைசியில வர்ற ரைட் எடுங்க” இப்போது விதுவே வழி சொல்ல ஆரம்பித்தாள்.


“இப்போ பரவாயில்லையா கண்ணு?” இன்முகமாக அக்கறையாக விசாரித்த சுபாவிடம்,...


“ம்ம்… ஐ அம் ஓகே ஆன்ட்டி,” என்றவள், “அந்த பெரிய கேட் முன்ன நிறுத்துங்க ண்ணா” டிரைவரிடம் ஆட்காட்டி விரலை நீட்டி சுட்டினாள்.


வாசலில் வாட்ச்மேன் இல்லை என்றவுடன், தானே இறங்கி, கதவை திறந்தவள், “நீங்க போங்க.. கேட் போட்டுட்டு வரேன்,” என்றிட, காரை உள்ளே இருக்கும் போர்டிகோவில் டிரைவர் பார்க் செய்யும் நேரத்தில், நடந்தே விது அங்கே வந்து சேர்ந்து விட்டாள்.


புது காரைப் பார்த்ததும் ‘யாரென்று’ அருகே வந்த அங்கே நின்றிருந்த வாட்ச்மேனும், வேலையாளும் விதுவை கண்டவுடன், “அம்மிணி, நீங்க தானுங்களா? வந்துட்டீங்களா? உமக்கு ஒண்ணுமில்லையே” அவளை ஆராய்ச்சியாக பார்க்க, காரிலிருந்து சுபாவும், திவாவும் இறங்கினர்.


“நான் நல்லா தான் இருக்கேன் வடிவக்கா. இவங்க தான் எனக்கு உதவினவங்க” என்றவள், “வாங்க ஆன்ட்டி, வாங்க டி.எஸ்.பி. சார்…” என அவர்களை வரவேற்றாள்.


பிரபாகர் இறங்காததை பார்த்து, “நீங்களும் உள்ள வாங்க அங்கிள், டீ குடிக்காம போக கூடாது.” என்று அவள் அழைப்பு விடுத்த விதத்தில், மறுக்க மனமில்லாது சரி என்று அவரும் இறங்கினார்.


இதற்குள் வீட்டுக்குள் சென்று வடிவு தகவலை பரப்ப, அதுவரை பூஜையறையே கதியென்று இருந்த சந்திராம்மா, “விது செல்லம், வந்துட்டியா?” என்று அழுகையோடு மகளை காண ஓடி வந்தார். அம்மாவின் அழுக்குரலை கேட்டதும், தானும் வீட்டுக்குள் வேகமாக ஓடினாள்.


“ம்மா…” என்று அவரை அணைக்க, “உனக்கு ஒண்ணுமில்லையே விதுமா?” இறுக அணைத்தவர், மகளை விலக்கி நிறுத்தி உச்சி முதல் பாதம் வரை ஆராய்ந்தார். கண்ணீர் மறைத்த விழி திரையினூடே, தன் மகளை தவிர வேறு எதுவும் அவர் கருத்தில் பதியவில்லை.


உடனே சுதாரித்தவர், மகளை ஓங்கி அறைந்தார். “அம்மா…” என்று விது அதிர,...


“உன்கிட்ட எத்தனை முறை பத்திரமா, ஒழுங்கா இருடீன்னு சொன்னேன். இப்படி அடுத்தவங்க உன்னை தப்பா பேசுற அளவுக்கு நடக்கலாமா?” என்று மீண்டும் தேம்பி அழ ஆரம்பித்தார். காலை முதலான மாமியார் மற்றும் கணவரின் இழி பேச்சு அவரை மிகவும் பாதித்திருந்தது.


விதுவுக்கு அப்போது தான் திவாவின் நினைவு வர, “ம்மா… இவங்க தான் எனக்கு உதவினாங்க” என்று அவர்கள் புறம் திரும்ப, மூவரும் வாசல் நோக்கி சென்றுக் கொண்டிருப்பது கண்ணில் பட்டது.


“அங்கிள், ஆன்ட்டி?” என்று அவர்களை நோக்கி விது வேகமாக போக, மகளுக்கு உதவியவர்கள் என்ற நன்றியில் சந்திராவும், “அவங்களை உள்ள கூப்பிடு விதும்மா” என்று அவர்களை நோக்கி சென்றார்.


தன் அழைப்புக்கு நிற்காமல் சென்றவர்களைக் கண்டு, “ஆன்ட்டி…” என்று சுபாவின் கரத்தை எட்டிப் பிடிக்க, அவர் கண்களில் கண்ணீரைக் கண்டாள்.


“என்ன ஆச்சு ஆன்ட்டி? ப்ளீஸ் உள்ள வாங்க” என்று அவர் கையை கெட்டியாக பிடித்து இழுக்க, தன் வீட்டு என்ட்ரன்ஸ் ஹாலில் நின்றிருந்த மூவரையும் கண்ட சந்திராவோ, ஆயிரம் வாட் மின்சாரம் தாக்கியது போன்ற அதிர்ச்சியில், பேச்சை மறந்து, கற்சிலையாக உறைந்தார்.முடிச்சு சிக்கலானது….

© KPN NOVELS COPY PROTECT
bottom of page