top of page

மூன்று முடிச்சு 7

மூன்று முடிச்சு


முடிச்சு - ஏழு


பேச்சு சுவாரஸ்யத்தில், சற்று இலகுவாக ஸ்டியரிங்கை கையாண்டுக் கொண்டிருந்த திவாவின் கட்டுப்பாட்டை மீறி கார் தார்ச்சாலையில் தடுமாறவும், பயத்தில் விது அலறியதில் மேலும் கவனம் சிதையவும், ஊசி வளைவு சாலையின் சரிவை நோக்கி கார் செல்ல ஆரம்பிக்க, வண்டியை ஒரு வழியாக கட்டுப்பாட்டில் கொண்டு வந்தும், எதிரே சற்றே விசாலமாக இருந்த பகுதியில் ஓரமாக நின்றிருந்த லாரியில் முட்டித் தான், அவனால் காரை முற்றிலும் நிறுத்த முடிந்தது.


வண்டி நின்ற வேகத்தில், சீட் பெல்ட் அணியாததால் தன் இருக்கையில் இருந்து விது தூக்கி எறியப் பட, லாரியில் நீட்டிக் கொண்டிருந்த இரும்பு கம்பி துளைத்ததால் உடைந்த காரின் முன் கண்ணாடி வழியாக அவள் தூக்கி வீசப்படாமல் இருக்கும் பொருட்டு, வேகமாக தன் ஒரு கையை நீட்டி திவாகர் தடுக்க முயல, அதற்குள் ஏர் பேக் ஆக்டிவேட்டாகி, விதுவின் முகத்தில் லேசாக அடித்ததில் அடிபட்டு, தன் இருக்கையில் திரும்ப விழுந்தவள், மயங்கி விட்டாள்.


சீட் பெல்ட் போட்டிருந்த திவாவோ, தன் கையை அவள் புறம் அவசரமாக நீட்டியதால் ஏற்பட்ட தசைப் பிடிப்பில், தோள் பட்டையில் சுரீரென்று தோன்றிய வலியையும் பொருட்படுத்தாமல், “ஹேய் விது… விது…” என்று தோளைத் தட்ட, பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தாள்.


அதற்குள் எதிர்புறம் வந்த இன்னொரு காரில் இருந்தவர்களும், இயற்கை அழைப்பிற்காக லாரியை நிறுத்தி விட்டு ஒதுங்கி இருந்த அதன் டிரைவரும், கிளீனரும், இவர்களுக்கு உதவ விரைந்து வந்தார்கள்.


சீட் பெல்டை கழட்டிய திவா, தன் தோள் பட்டையில் மின்சாரத்தை பாய்ச்சியதை போல் ‘வின் வின்’ என்று தோன்றிய வலியை ஒதுக்கி விட்டு, மெதுவே கதவை திறந்து இறங்கினான்.


காரின் முன் டயர் பஞ்சராகி, வேகமாக போய்க் கொண்டிருந்த போது திடீரென டயர் வெடித்ததில், வண்டி கட்டுப்பாட்டை இழந்ததனால் ஏற்பட்ட விபத்து என்று புரிந்தது.


நல்ல வேளையாக சரிவில் கவிழ்ந்து, பெரும் விபத்தாகாமல் தடுத்திருந்தவனுக்கு அந்த குளிரிலும் வேர்த்து விட்டது.


அவன் நிலை புரிந்தவர்களாக “நீங்க ஓகேவா சார்?” அக்கறையாக விசாரித்தவர்களிடம்,


“எனக்கு அடி எதுவும் இல்லை… தேங்க்ஸ்” என்றவன், வித்யாவின் புறம் விரைந்து, மெதுவே “விது, விது…” என்று தோளைத் தட்டினான். இதற்குள் உதவிக்கு வந்தவர்கள் அவள் முகத்தில் நீரை தெளித்தனர். சிரமப்பட்டு கண்ணை திறந்தவளின், நெற்றியின் ஒரு புறம் புடைத்து லேசாக வீங்கி இருந்தது.


மலங்க முழித்தவளிடம், “சின்ன ஆக்சிடென்ட் விது,” என்று திவாகர் கூறுவதற்குள்ளாக மீண்டும் மயங்கி விட்டாள்.


“திரும்ப மயக்கமாகிட்டாங்களே! தலையில வேற லேசா அடிப்பட்டிருக்கு. எதுக்கும் பக்கத்துல யாராவது டாக்டர்கிட்ட காமிச்சுடுங்க சார்” உதவிக்கரம் நீட்ட வந்த அந்த பெண் அறிவுறுத்தவும்,


“சரிங்க…” என்றவன், தன் கார் மோதியதில், லாரிக்கு என்ன சேதாரம் என்று ஆராய்ச்சியாக பார்த்தான்.


“அது பெருசா ஒண்ணுமில்ல தம்பி” என்று தலை சொறிந்த லாரி டிரைவரின் கையில் ஐந்து ஆயிரம் ரூபாயை திணித்தான்.


இதற்குள்ளாக ஊட்டி நோக்கி செல்லும் ஒரு டாக்சியை கை காட்டி மற்றவர் நிறுத்தி இருக்க, மயங்கியிருந்த வித்யாவை மெல்ல தூக்கி அந்த காரில் கிடத்தி, “ரொம்ப தேங்க்ஸ் மேடம்” உதவிய அப்பெண்மணிக்கு நன்றி பகிர்ந்தவன், டாக்சி ஓட்டுனரிடம், அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு விரைந்து செல்லும் படி கேட்டுக் கொண்டான்.


மயங்கி கிடந்தவளை கவலையாக பார்த்தவாறே, கைப்பேசியில் பங்களாவிற்கு அழைத்து, வேலுவிடம் கார் பங்க்சர் தகவலோடு, சில கட்டளைகளை பிறப்பித்து, வண்டி நின்றிருந்த இடத்தை பற்றித் தெரிவித்தான்.


மீண்டும் தங்கள் எஸ்டேட் மேனேஜருக்கு முயன்ற திவா, அழைப்பு செல்லவும் நிம்மதியடைந்தான். அவரிடம் கல்யாண சத்திரத்தின் பெயரை கொடுத்து, அவர்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது லவ்டேலில் இருந்தால், உடனே அங்கே சென்று, விவரம் அறிந்து வருமாறு சொல்லி, அப்படியே தாங்கள் செல்லும் ஹாஸ்பிட்டலுக்கு உடனே, வரும் படி பணித்தான்.


திவா ‘சின்ன ஆக்சிடென்ட் தான்’ என்றிருந்தாலும், மேனேஜர் உடனே பிரபாகருக்கு அழைத்து தகவலை ஒப்பித்து விட்டார்.


ஏற்கனவே குன்னூருக்கு கிளம்பியிருந்த பிரபாகர், மருத்துவமனையின் பெயரை கேட்டு தெரிந்துக் கொண்டு, நேரே அங்கே வந்து விடுவதாக கூறி, “சின்னவரோட இருந்து தேவையான உதவியை பண்ணுங்க…” என்று ஆணையிட்டார்.


மருத்துவனையில் இறங்கும் போது லேசாய் விழிப்பு வந்த விது, வாந்தி எடுக்க, அவள் தலையை திவா ஆதரவாக தாங்கினான். மீண்டும் விது மயங்கி விட, தாமதிக்காமல் அவளை உடனே அட்மிட் செய்து விட்டான்.


பெற்றோருக்கு விவரம் தெரியும் என்று அறியாத திவா, விதுவை செக் செய்ய டாக்டர் ஆரம்பிக்கவும், தான் அறையின் வெளியே வந்து நின்றுக் கொண்டான்.


“பயப்பட ஒண்ணும் இல்ல சார்… ஜஸ்ட் அதிர்ச்சி தான். ட்ரிப்ஸ் ஏத்திட்டு இருக்கோம், கொஞ்ச நேரத்தில் கண் முழிச்சுடுவாங்க” டாக்டர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,...


“ஸ்ஸ்ஸ்….” என்று திவாகர் முகம் சுருக்கவும், “உங்களுக்கு எதுவும் அடியா?” விசாரித்தவரிடம், தோள் பட்டை வலியை பற்றி தெரிவித்தான்.


“விப்லாஷா இருக்கலாம்.” என்று அவனையும் பரிசோதித்தவர், அவனுக்கு வலி நிவாரணி எழுதிக் கொடுத்தார்.


எஸ்டேட் மேனேஜர் வரவும், “சத்திரத்துக்கு யார் போயிருக்கா மார்த்தாண்டம் சார்?” கேள்வியாக நோக்கினான்.


“மெக்கானிக் ரவியை அனுப்பி இருக்கேன் சார். அதானே அவனோட சொந்த ஊர், அவன் பார்த்துப்பான்.”


“ஓகே சார்…” என்ற திவாவின் முகத்தின் சுணக்கம் பார்த்து, “குடிக்க ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா சார்?” என்றவரிடம், தேவையானதை சொல்லி, வலி மாத்திரையையும் வாங்கி வரும் படி அனுப்பினான்.


திவாவும், விதுவும் அறியாதது, காலையில் ராதாவின் கல்யாணம் எந்த வித பிரச்சனையும் இன்றி நல்ல படியாக நடந்து முடிந்து விட்டது. சுதாவின் மற்ற தோழிகள் நேரம் கழித்துக் கிளம்பியதால், தாலிக் கட்டும் நேரத்தில் தான் அவர்கள் சத்திரத்துக்கு வந்து சேர்ந்தனர்.


முன் கூட்டியே வந்து விட்ட சுதா, திருமண வேலையில் பிசியாகி போனதில், விது, நித்தி அங்கே இல்லை என்பதை அவளும் கவனிக்கவில்லை. திருமணம் முடிந்த உடன் தான், இரு பெண்களையும் காணவில்லை என்று மற்றவர்கள் உணர்ந்தனர். அவர்கள் காலையில் மண்டபம் வந்தது வரை ஊர்ஜிதம். அதன் பின் என்னவாயிற்று என்று தெரியாமல் குழம்பினர்.


காணாமல் போனது விது என்று தெரிந்தவுடன், அவர்களின் ஃபேக்டரி மேனேஜர், உடனே நாராயணனுக்கு அழைத்து விஷயத்தை ஒலிபரப்பி விட, அந்த இடமே ரணக்களமாகியது.


ஒன்றுக்கு, இரு வயதுப் பெண்களைக் காணோம் என்றவுடன், ‘யாரோ கடத்தியிருப்பார்கள்’ என்று சந்தேகித்து, அனைவரும் பதட்டமாகினர். அந்த பயத்தில் உடனே போலீஸ் கம்ப்ளெயின்ட் கொடுக்க, அவர்கள் வந்து விசாரித்தனர். வாணி, சுதா, மற்றும் பெண்களை போலீஸ் கேள்விகளால் துளைத்தனர். கல்யாண வீட்டின் தோற்றமே மாறி விட்டது.


***************************************************************


பொள்ளாச்சியில்…


வித்யாவைக் காணோம் என்று மேனேஜர் தகவல் கொடுத்ததில் இருந்து நாராயணனுக்கு, புத்தி கோணலாகத் தான் வேலை செய்தது.


“ஐயோ... நாராயணா! லவ்டேல் அனுப்பாதேன்னேன்னே, என் பேச்சை இங்க யாரும் மதிக்கலையே! இப்போ இந்த வீட்டு மானத்தை கப்பலேத்திட்டாளே… ஓடுகாலி.” ருக்கு பாட்டி வாயில் அடித்துக் கொண்டு கத்தினார்.


நாராயணனோ, கோபம் மேலிட கூண்டுப் புலியாக, அறையில் நடைப் போட்டுக் கொண்டிருந்தார்.


சந்திரா ஓர் மூலையில் ‘மகளுக்கு என்னவாயிற்றோ?’ என்ற கலக்கத்தோடு முடங்கிக் கிடந்தார்.


“பொண்ணையாடீ வளர்த்து வெச்சுருக்க, தினவெடுத்தவ!” ருக்கு பாட்டி வசைப் பாட,...


“அத்தை… இப்படி அசிங்கமா பேசாதீங்க. நித்யாவையும் காணோம். ரெண்டு பொண்ணுங்களுக்கும் என்ன ஆச்சோன்னு பெத்த வயிறு பதறுது” சந்திரா அழ,...


“அதனால தாண்டி சொல்லுறேன், ரெண்டும் ஒரே ரூமு தானே! எல்லாம் ஒரே குட்டையில ஊறின சாக்கடைங்க” விடாமல் ருக்கு அபாண்டமாக அவதூறாக பேச,...


“அவ உங்க பேத்தி அத்தை! எப்படி உங்களால இப்படி கேவலமா பேச முடியுது?” என்று கேட்ட மனைவியை முறைத்த நாராயணன்,...


“அம்மா சொல்றதுல என்ன தப்பு? ஹாஸ்டல்ல இருக்கப்ப, எவனோட ஊர் மேஞ்சாளோ!”


“கடவுளே! அவங்க தான் புரியாம நம்ம பொண்ணை பத்தித் தப்பா பேசறாங்கன்னா, நீங்களுமா! நீங்க அவ அப்பாங்க!” கதறிய சந்திராவை விடுத்து,...


“நல்லா கேட்டுக்கோடீ, எவனையோ நம்பி ஏமாந்து, அவனும் ஆசை தீர்ந்ததுக்கு அப்புறம், கருவேப்பில்லையா இவளை துரத்தி விடப் போறான். வயத்துல சுமையை வாங்கிட்டு, ‘ஐயோ.. அம்மா’ன்னு இங்க வந்து பிச்சை எடுக்க போறா!” தன் விஷ நாக்கை சுழற்றினார் ருக்மிணி பாட்டி.


“அத்தை… என் பொண்ணு ஒரு நாளும் எந்த தப்பையும் செய்ய மாட்டா. அவ நல்லபடியா எந்த ஆபத்தும் இல்லாம என்கிட்ட வந்துடுவா.”


“உன்கிட்ட வருவாளா? அந்த நம்பிக்கை வேற உனக்கு இருக்கா? நீ என்ன வேணா சொல்லிக்கோ, அந்த மானங்கெட்ட கழுதைக்கும் இந்த வீட்டுக்கும் இனி எந்தச் சம்மந்தமும் இல்ல!” பெற்ற மகளின் மேல் நம்பிக்கை இல்லாமல், மனசாட்சியின்றி அமில வார்த்தைகளை வீசினார் நாராயணன்.


கணவரின் பேச்சில், நெஞ்சு துடிக்க, அவர்கள் இருவரையும் காணப் பிடிக்காமல் பூஜை அறையில் சென்று முடங்கிய சந்திரா, ‘விது செல்லம்… எங்கடா போயிட்ட? கடவுளே… என் குழந்தைக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாது’ என்று மகளுக்காக வேண்ட ஆரம்பித்தவருக்கோ, உடனே லவ்டேல் பறந்து சென்று, தன் மகளை தானே தேட வேண்டும் என்று உந்துதல்.


ஏற்கனவே விதுவை பற்றி தப்பாக ஒரு முடிவுக்கு வந்து விட்டபடியால், லவ்டேல் செல்வதற்கு நாராயணன் மறுப்பு சொல்லி இருந்ததால், அவர் பேச்சை மீறி நடந்தறியாதவராக, மகளின் நலனை பற்றி நினைத்து தவிக்க ஆரம்பித்தார்.


****************************************************


மருத்துவமனையில்


மெல்ல மயக்கம் தெளிந்த விது, அவள் அருகே திவாகர் கண் மூடி அமர்ந்து இருப்பதைக் கண்டாள்.


“நான் இன்னும் உயிரோட இருக்கேனா?” ஹீனமாக ஒலித்த குரலைக் கேட்டு, கண் திறந்து அவளை பார்த்தவன், ‘ஹப்பா…” என்று நிம்மதி மூச்சை வெளியிட்டான்.


“ஹ ஹா… ‘நான் யாரு, எங்க இருக்கேன், நீங்க எனக்கு சொந்தமா’ன்னு கேட்பேன்னு பார்த்தா, இப்படி கேட்டுட்டியே விது” என்று சிரித்தவனின் முகத்தை பார்த்தவளின் மதிவதனம், சோர்ந்து வாடி களையிழந்து இருக்க, விளையாட்டை கை விட்டவனாக, “ஆர் யூ ஓகே விது?” என்று கனிவாக பார்த்தான்.


ம்ம்… என்றவள் எழ முயல, தலை ரங்கராட்டினம் போல சுற்றி, ஆளை தள்ளிட, மீண்டும் கட்டிலில் சாய்ந்துக் கொண்டாள்.


“பேசாம படு விது, நீ ஏற்கனவே வீக்கா இருந்து இருப்ப, அதான் சின்ன அதிர்ச்சியை கூட உன்னால தாங்க முடியலை. இந்த பாட்டில் ட்ரிப்ஸ் முடிய இன்னும் கொஞ்ச நேரமாகும்.”


“ஐயோ… இப்போ என்ன டைம்? இன்னும் கொஞ்ச நேரமா!” என்று அதிர்ந்தவள், “எனக்கு ஒண்ணுமில்ல, ப்ளீஸ்... எங்க வீட்ல என்னைத் தேடுவாங்க. நாம இப்போவே போகலாம்…” என்று பரபரக்க,...


“நத்திங் டூயிங், அந்த கல்யாண வீட்டுக்கு ஆள் அனுப்பியிருக்கேன். உனக்கு ஆக்சிடென்ட் ஆகிட்டதா தகவலும் கொடுத்துட்டோம். இனி அந்த விஷயத்தை பத்தி கவலைப்படாதே. முதல்ல இதை சாப்பிடு.”


முன்பே மேனேஜரிடம் சொல்லி வாங்கி வைத்திருந்த இட்லியை அவளிடம் நீட்டினான்.


“இல்ல வேணாம்…” என்று மறுத்தவளை முறைத்தவன், “சாப்பிட்டா, தெம்பாகிடுவ, இங்க இருந்து கிளம்பிடலாம்” என்றிட, ஒரு கையில் ட்ரிப்ஸ் ஏறியதால், தானே சாப்பிட முடியாமல் திணறியவளுக்கு, திவாகரே ஊட்டி விட்டான்.


“சாரி டி.எஸ்.பி. சார், என்னால உங்களுக்கு தொந்தரவு” வருந்தியவளிடம், “தட்ஸ் ஓகே விது…” என்ற திவா புன்னகைத்தான்.


அப்பாவையும், பாட்டியையும் நினைத்தவளுக்கு பயப் பந்து தொண்டையை அழுத்தியது. ஓய்வாக இல்லாமல் கட்டிலில் புரண்டு புரண்டு நகர்ந்தவளை பார்த்த திவா, “கொஞ்ச நேரம் சும்மா படுத்து ரெஸ்ட் எடு…” என்று கண்டித்தான்.


“இந்நேரம் ‘நான் காணோம்’னு எங்க வீட்டுக்கு நிச்சயம் நியூஸ் போயிருக்கும். நித்தி பண்ண குளறுபடிக்கு, இப்போ நான் தான் கஷ்டப்பட்டுட்டு இருக்கேன். இந்த நித்தி இப்படி செய்வான்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல. மூன்றரை வருஷ பழக்கம். என்கிட்ட மறைச்சது கூட பரவாயில்ல. அவங்க வீட்டு ஆளுங்களுக்கும் எவ்வளோ தலைக் குனிவு” விது பழைய படி புலம்ப ஆரம்பிக்க,...


“விது, அவளுக்கு பிடிக்காதவனோட கல்யாணம் செஞ்சு வெச்சா, அவ வாழ்க்கை எப்படி இருக்கும்னு கொஞ்சம் நினைச்சு பாரு, All is fair in love.”


“உங்க ஃபிரெண்டை சப்போர்ட் செஞ்சு தானே நீங்க பேசுவீங்க” குறைப்பட்டவளிடம்,...


“அப்படியில்ல விது, இப்படி பண்ணட்டுமான்னு கேட்டா, நாம எதாவது ஆலோசனை சொல்லலாம். அவங்களா ஒரு முடிவை தீர்மானமா எடுத்து, அதன்படி நடக்க ஆரம்பிச்சுட்டாங்க. இனி நாம என்ன சொன்னாலும் அவங்களுக்கு உரைக்காது.”


“ஃபிரெண்ட்ஸ் தப்பு பண்ணும் போது, அவங்களுக்கு நல்லது சொல்றது தான், நல்ல நட்புக்கு அழகு.”


“அதே ஃபிரெண்ட்சோட பர்சனல் விஷயத்தில் தேவைக்கு அதிகமா மூக்கை நுழைக்கறதும் தப்பு. ஏதோ யோசிக்காம செஞ்சுட்டான். விடுவிடு… இனி பேசி எதுவும் ஆக போறதில்லை.”


ம்ம்ம்… யோசனைக்கு பின், 'சத்திரத்துக்கு உடல்நலமில்லை என்றளவில் சேதி சொல்லியிருந்தால், மேனேஜர் அதையும் அப்பாவிடம் கூறியிருப்பார் தானே!' என்ற எண்ணம் எழவும், “எங்க வீட்டுக்கு போன் பண்ணிக் கொடுங்க” என்று கேட்கும் போதே விதுவின் குரல் கமற, தன் கைப்பேசியை கொடுத்தான்.


சந்திரா அம்மாவுக்கு அழைக்க, அழைப்பு ஏற்கப்படவில்லை. வீட்டு எண்ணுக்கு அழைத்தால், அங்கேயும் இதே நிலை. ‘கண்டிப்பா அப்பாவுக்கு விஷயம் தெரியும்! ஆனா, வீட்ல போனை எடுக்க மாட்டேங்கறாங்களே! என்ன நடக்குதோ வீட்ல? ஐயோ… அம்மா… கடவுளே!’ மீண்டும்மீண்டும் முயன்றவளுக்கு எதிர் பக்கம் பதில் தான் இல்லை!


முகம் வாடியிருந்தவளிடம், “கவலைப்படாதே விது, உங்க வீட்லயே நானே கொண்டு போய் விடறேன். நடந்ததை அவங்களுக்கு தெளிவா விளக்கி, உனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு, நான் அவங்களுக்கு புரிய வைக்கறேன். நீ பேசாம படுத்து ரெஸ்ட் எடு.”


“என் பாட்டியைப் பத்தி உங்களுக்கு தெரியாது. அவங்களை நினைச்சா எனக்கு பயமாயிருக்கு” என்று விது நடுங்கிக் கொண்டு சொல்ல,...


“நான் பார்த்துக்கறேன்னு சொல்றேன்ல!” என்றவன் சேரில் இருந்து எழ,...


“நீங்க இப்போ எங்க போறீங்க?” பதற்றமாக கேட்டவளிடம்,,...


“அட ராமா… ரெஸ்ட் ரூம் போறேன்” என்று சிரித்துக் கொண்டே திவா சொல்ல, “அச்சோ…” என்று அசடு வழிந்தாள்.


“பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி! இந்த அம்மா அப்போவே ‘எந்த வம்புக்கும் போகாதே விது’ன்னு சொன்னாங்க. சொல் பேச்சு கேட்டியா? தேவையா உனக்கு? உனக்கு தான் இருட்டுன்னா பயமாச்சே, மண்டபத்துக்கு வெளியில இருட்டா இருந்த இடத்துக்கு தனியா போவியா? எவளா இருந்தா, எனக்கென்னன்னு இருக்காம, ஏழரையை கூட்டி விட்டுட்டியே! மட்டி… லூசு விது!”


தன்னைத் தானே உரக்க திட்டிக் கொண்டு இருந்தவளை பார்த்து வாய் விட்டு சிரித்த திவா, “நீ ஹரிச்சந்திரனுக்கு கசின் சிஸ்டரா? இப்படி வாய் திறந்தா, உன்னைப் பத்தி உண்மை... உண்மையை தவிர வேறில்லைன்னு அருவியா கொட்டற” கிண்டலடித்தவனை பார்த்து “ஈஈஈ…” என்று சமாளிப்பாக இளித்தவள்,...


“நான் தான் இப்போ நல்லா இருக்கேனே, ப்ளீஸ்… இந்த ட்ரிப்சை நிறுத்த சொல்லிட்டு, கிளம்புவோமே” மீண்டும் கெஞ்சுதலாக கண்ணை சுருக்கி பார்த்தாள்.


“இரு... நர்ஸ்கிட்ட கேட்கறேன்” என்று திவா அறை வாயிலுக்குப் போக, அப்போது நர்ஸ் அறைக்கு உள்ளே வந்தார்.


“சாரி சார்… உங்க வைஃப்புக்கு சாதாரண பித்த வாந்தி தான். அவங்க ப்ரெக்னன்ட்டா இல்லை” அந்த நர்ஸ் திருவாய் மலர,...


அதைக் கேட்ட விதுவோ, “பேப் பேப் பே…” என்று அரண்டு முழிக்க, “வாட் நான்சென்ஸ் சிஸ்டர்?” திவா எரிச்சலாக எகிறினான்.


“டென்ஷனாகாதீங்க சார், கண்டிப்பா உங்களுக்கு குழந்தை பிறக்கும். மனசைத் தளர விடாதீங்க” ஆறுதல் தரும் நோக்கில் நர்ஸ் மேலும் பேச,


“சிஸ்டர்… உளறாதீங்க! எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலை. இவ என்னோட ஃபிரெண்ட்!” கடுமையான குரலில் அழுத்தி சொன்னவனை கண்டு முழிப்பது இப்போது நர்சின் முறை.


அவசரமாக தன் கையில் இருந்த ஏட்டை பார்த்து, “மிசர்ஸ். விது திவாகர்?” என்று அவர்கள் இருவரையும் குறுகுறுவென பார்த்தார்.


“விது தான்…” என்ற திவா, தலையை தட்டி கொண்டு ஏதோ முனகினான்.


“இல்ல… அது, அட்மிஷன் ஃபார்ம்ல வைஃப்னு போட்டிருக்கே! மேடம் வரும் போதே வாந்தி எடுத்து, மயங்கி வேற விழுந்தாங்க. வயசு பொண்ணு… பட்டுப் புடவை எல்லாம் கட்டியிருக்கவும், நாங்க வழக்கமா எடுக்கற மாதிரி, பிளட் டெஸ்ட் எடுத்துட்டோம்.” நர்ஸ் விளக்கம் தந்தார்.


ஸ்ஸ்… என்று மீண்டும் தலையை தட்டியவன், “நாங்க உடனே கிளம்பணும். ட்ரிப்ஸ் போதும், ரிமூவ் பண்ணுங்க.” என்றான் எரிச்சலாக.


“இருங்க, நான் டாக்டரை வர சொல்றேன் சார்.” விட்டால் போதுமென அந்த நர்ஸ் வெளியே ஓடி விட்டார்.


விதுவின் கண்களில் கண்ணீர் நிறைவதைக் கண்டவன், “சாரி, ஆக்சிடென்ட் கேஸ்னு சொன்னப்ப அட்மிஷன் போட அவங்க தயங்கவும், சட்டுன்னு என் வைஃப்னு, ஆபத்துக்கு பாவமில்லைனு பொய் சொல்லிட்டேன். அதை வெச்சு அவங்க ஏதோ தெரியாம, ஃபார்ம் நிரப்பி, டெஸ்ட் எல்லாம் எடுத்துட்டாங்க போல!” மெதுவே ஆரம்பித்தவன், “இதுக்கெல்லாம் சும்மா ஏன் அழற?” சற்று அதட்டலாக முடிக்கவும், கண்ணீரை துடைத்துக் கொண்டு, கண் மூடி அமர்ந்தாள்.


அப்போது உள்ளே வந்த டாக்டரை பார்த்து, “நாங்க கிளம்பலாமா சார்?” என்ற திவாகரை, ஏற இறங்க பார்த்தவர்,


“அப்போ பொய் சொல்லி இவங்களை அட்மிட் பண்ணியிருக்கீங்களா மிஸ்டர்?” கேள்வியாக உறுத்தவரிடம்,


“திவாகர்…” என்று தன் பெயரை அவரிடம் தெரிவித்து, “சாரி டாக்டர்…” மன்னிப்பும் வேண்டினான்.


அவர்கள் பேச்சு குரலில் கண் முழித்த விதுவிடம், “இப்போ எப்படி இருக்கும்மா?” விசாரித்த மருத்துவருக்கு, நலம் என்பதாக தலையசைத்தாள்.


"ஒரு ரெண்டு நிமிஷம் வெளிய நில்லுங்க சார்…" திவாவை அனுப்பியவர், விதுவிடம், அவளின் மயக்கத்துக்கான காரணத்தை ஆராயும் பொருட்டு, மேலும் சில கேள்விகளைக் கேட்டு, தக்க பதில் பெற்ற பின்னர், அவரே திவாவை சென்று உள்ளே வருமாறு அழைத்தார்.


“நீங்க ரொம்ப அனீமிக்கா இருக்கீங்கன்னு உங்க பிளட் ரிப்போர்ட் சொல்லுது. சில டானிக் மாத்திரை எழுதிக் கொடுக்கறேன். விடாம தொடர்ந்து சாப்பிடணும்.”


“ஓகே டாக்டர். அப்புறம் நாங்க அவசரமா கிளம்பணும், இந்த ட்ரிப்ஸ்ஸை நிறுத்திடலாமே” என்ற விதுவிடம்,...


“ஆக்சுவலி, அதை பத்தித் தான் உங்கக்கிட்ட சொல்ல, நானே வந்துட்டு இருந்தேன். லவ்டேல் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, உங்கக்கிட்ட ஏதோ முக்கியமா விசாரிக்கணும். உங்களை இங்கயே இருக்க சொல்லி எங்களுக்கு இப்ப தான் தகவல் வந்துச்சு.”


“ஓ அப்படியா டாக்டர்…” என்ற திவாவிடம்,


“எப்படியும் அவங்க வந்து பேசி முடிக்க ஆகிற நேரம் வரை, ட்ரிப்ஸ் ஏறட்டும். டிஸ்சார்ஜ் அப்போ மறக்காம ப்ரிஸ்கிரிப்ஷன் வாங்கிட்டு போங்க.” என்று விதுவிடம் சொன்னவர்,...


“மிஸ்டர்.திவாகர், உங்க தோள் வலி ரெண்டொரு நாள்ல சரியாகலைன்னா, டாக்டரிடம் கண்டிப்பா நீங்க காமிக்கணும். டேக் கேர்” என்று வெளியேறினார்.


இருவருக்குமே ‘இது என்னடா புது பிரச்சனை’ என்று தான் தோன்றியது.


தன் மேனேஜரை விவரம் கேட்போம் என்று அவரை அழைத்து, “ரூமுக்கு வாங்க மார்த்தாண்டம் சார்” என்றவன், அறைக்குள் வந்தவரிடம், “போலீஸ் வராங்களாம்…” என்று ஆரம்பிக்க,...


“ஆமா சார், ரெண்டு வயசு பொண்ணுங்களை காணோம்னு பயந்து, கல்யாண பொண்ணு வீட்ல, போலீஸ்ல புகார் கொடுத்துட்டாங்க. இவங்க இங்க அட்மிட்டாகி இருக்கற விஷயத்தை போலீஸ்கிட்ட தெரிவிச்சுட்டதா, இப்போ தான் நாம அனுப்பிச்ச ரவி, போன்ல எனக்கு சொன்னார். டாக்டர் உள்ள இருக்கவும், நான் வரலை” என்று திவாவை சங்கடமாக பார்த்தார்.


ஏற்கனவே சோர்ந்து வெளிறி இருந்த விதுவின் முகத்தில், இப்போது அப்பட்டமான பயம் வெளிப்படையாக தெரிந்தது.


“யாரு வராங்க? இன்ஸ்பெக்டர் பேரு என்ன ஏதுன்னு கொஞ்சம் விசாரிச்சு சொல்லுங்க சார்” என்று அவரை வெளியே அனுப்பி விட்டான்.


மேனேஜரோ, உடனே பிரபாகருக்கு அழைத்து புது தகவலை ஒளிபரப்பி விட்டார்.


“போச்சு போச்சு… போலீஸ் ஸ்டேஷன் வேற போகணுமா? ஐயோ… பாட்டி இனி என்னை பிச்சுபிச்சு, காக்காவுக்கு போட்டுடுவாங்க. அப்பா, என்னை வெட்டி போடப் போறார்.”


“ஹே விது, ஷ்... காம் டவுன். ஒரு பிரச்சனையும் இல்ல, வரவங்கக்கிட்ட நான் பேசிக்கறேன்.”


“நித்தி எங்கன்னு கேப்பாங்களே… நான் என்ன சொல்வேன்?”


“நான் சொல்லறதையே நீயும் சொன்னாப் போதும். சமாளிச்சுடலாம். உண்மையை சொல்றேன்னு, எதுவும் உளறி வைக்காதே தாயே! ப்ளீஸ்… எப்படியும் அவங்க கல்யாணம் இந்நேரம் முடிஞ்சு இருக்கும். அதுக்காக தானே யோசிக்காம இவ்ளோ தூரம் குழப்பம் செஞ்சாங்க. அட்லீஸ்ட் கொஞ்ச நேரமாவது மோகனும், நித்யாவும் நிம்மதியா இருக்கட்டுமே.” நண்பனை நினைத்து, விதுவிடம் கெஞ்சினான் திவாகர்.


“ஆங்…” என்று முழித்தவள், “என்னை எப்படியும் கேள்வி கேப்பாங்க. எனக்கு பயமா இருக்கு” அழும் குரலில் சொல்ல,...


“போலீஸ் வரும் போது, உன் உடல்நிலையை காரணம் காட்டி, எப்படியாவது உன்கிட்ட அவங்க அதிகம் பேசாம நான் பார்த்துக்கறேன். ஓகேவா? நீ கவலைப்படாம, இப்போ கொஞ்ச நேரம் கண் மூடிப் படு” என்றவனுக்கு தலையாட்டியவள், வரட்டுமா என்று கண்களில் நிறைந்த கண்ணீரை அடக்க முயன்றாள்.


விதுவை பார்த்தவனுக்கு, ‘இது சரியான அப்பிராணி…’ என்று தோன்ற, இப்போது அவனுக்கு நித்யா, மற்றும் மோகன் மேல் கட்டுக்கடங்காமல் கோபம் பொங்கியது.


‘தேவையில்லாமல் இவளை பிரச்சனையில் மாட்டி விட்டுட்டாங்களே. ஏதோ சமயத்துக்கு நான் வந்ததால், பரவாயில்லை. இல்லாட்டா, அவங்க கல்யாணம் முடிஞ்ச பின்ன தான், இவளை வீட்டுக்கு அழைச்சுட்டு போயிருப்பாங்க. அதுக்குள்ள என்னவெல்லாம் குழப்பமாகி இருக்குமோ?’ என்று நினைத்தவன்,...


“விது,... நீ ரெஸ்ட் எடு. ஒரு போன் கால் பண்ணிட்டு வந்துடறேன்.”


அவனை இப்போது மலையளவு நம்பியவளாக, “இங்கேயே பேசுங்களேன். நான் வேணா, என் காதை மூடிக்கறேன். எதுவும் கேட்கலை.” என்றவளின் பாவனையில் சிரித்தவன்,..


“பேசலாம்… தப்பே இல்லை. ஆனா, மோகனுக்கு பண்ண போறேன். இதுவரை உனக்கு சம்பந்தம் இல்லாத விஷயத்தில் நீ, மாட்டிக்கிட்டு முழிக்கறதே போதும். டூ மினிட்ஸ்… வந்துடறேன்” என்று வெளியே வந்து, சந்தோஷுக்கு அழைத்தான்.


“கல்யாணம் நல்லபடியா ஆச்சாடா, இப்போ எங்க மச்சி இருக்கீங்க?”


“கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுதுடா. நீ தான் இல்லை. நாங்க திரும்ப கோவைக்கு போயிட்டு இருக்கோம்” என்றவன், மோகனிடம் ஃபோனை கொடுத்தான்.


“கங்ராட்ஸ்டா மாப்ஸ்… பெஸ்ட் விஷஸ். பெரிய ட்ரீட் ஒண்ணு பாக்கி இருக்கு. பத்திரமா இருங்கடா” என்றவன்,...


“போலீஸ் கம்ப்ளைன்ட் ஆகிடுச்சு மொக்கை. மொதல்ல உங்க ரெண்டு பேர் சிம் கார்டையும் தூக்கிப் போடு. அடுத்து உன் அப்பா பிரச்சனை பண்ணுவார். அவரை வேற சமாளிக்கணும்.”


“போலீஸ் எல்லாம் ஒரு மேட்டர் இல்லை டி.எஸ்.பி., என் அப்பா தான் டேஞ்சர். உனக்கு எதுவும் தெரியாத மாதிரியே இருடா மச்சான்.”


“ம்ம்ம்… இப்போ சொல்லு மொக்கை! சரி சரி… எதுக்கும், நீ ஒரு பத்து நாளைக்கு எங்களோட காண்டாக்டில் இருக்காதடா. புது மாப்பிள்ளை, இதை பத்தியெல்லாம் கவலைப்படாம ஹனிமூனை நல்ல என்ஜாய் பண்ணு மச்சி. தாத்தா நம்பர் தெரியும்ல? அவசர அவசியத்துக்கு, அதுல எனக்கு மெஸ்சேஜ் அனுப்பு. இங்க நிலைமை கொஞ்சம் சரியானதுக்கு அப்புறம், நானே உன்னை காண்டாக்ட் பண்றேன்” என்ற திவா, மேலும் சில அறிவுரைகளை நண்பனுக்கு தந்து, மற்ற இருவருக்கும் சில அட்வைஸ்களை சொல்லி, அவர்களை ஜாக்கிரதையாக இருக்கும் படி அறிவுறுத்தி விட்டு பேசியை வைத்தான்.


இது தான் திவாகர்! நட்பை மதிக்கத் தெரிந்தவன், தனக்கு பிடிக்காத போதும், நண்பர்கள் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவிக் கரம் நீட்டுவான்.


உள்ளே நுழைந்தவனை, பார்த்தவளின் பார்வை அவன் தலைக்கு பின் எதிலோ நிலைப்பதைக் கண்டு திரும்பி பார்த்தான். ‘சுவர் கடிகாரத்தை பார்க்கிறாள்’ என்று புரிந்து, “டூ மினிட்ஸ்னா அப்படியே கணக்கு வெப்பியா?”


“ஏழு நிமிசம் இருபத்தி ரெண்டு செகண்ட் ஆச்சு!”


“தெய்வமே… என்னை விட்டுடு” என்று கையை குவித்தவன், இரு காதுகளையும் தோப்புக்கரணம் போடுவது போல் பிடித்தான்.


அவன் பாவனையில் சிரித்த விது, “அது…” என்று மிரட்டலாக ஆட்காட்டி விரலை காண்பித்தாள்.


இதற்குள் அறைக்கு வெளியே மேனேஜரின் உரத்த பேச்சுக் குரலும், அதை அடுத்து சளசளப்பும் கேட்க, திவாவை பார்த்தவளின் கண்களில் பயமும், முகத்தில் கலவரமும் அப்பட்டமாக தெரிந்தது.


முடிச்சு இறுகுமா?

© KPN NOVELS COPY PROTECT
bottom of page