top of page

மூன்று முடிச்சு 6

மூன்று முடிச்சு


முடிச்சு - 6


என்னவளே அடி என்னவளே

எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

எந்த இடம் அது தொலைந்த இடம்

அந்த இரண்டையும் மறந்து விட்டேன் - உந்தன்

கால் கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன்

காலடி தேடி வந்தேன்


தொடர்ந்து காதில் பாடல் ஒலிக்கவும் ஐப்பாடை நிறுத்திய திவா, ஹெட்போனை எடுத்து விட்டு, ‘யாரு இந்தப் பொண்ணு! அதுவும், நம்ம வீட்ல தனியா இந்நேரத்துக்கு, இங்க ஏன் நிக்கறா?’ யோசனையோடே, “ஹலோ… ஏஞ்சல்…’’ என்று குரல் கொடுத்தான்.


“முதல்ல என்னை கொண்டு போய் விடுங்க, இல்ல… பிரச்சனையாகிடும் சொல்லிட்டேன்.” என்றவாறே, குரல் வந்த திசைக்கு திரும்பி நிமிர்ந்து பார்த்தவள், புதியவன் ஒருவனை அங்கு பார்த்ததும், ஏதேதோ நினைத்து அதிர்ந்தாள்.


அவள் கண்களின் மிரட்சியை கண்ட திவாவோ குழம்பிட, திடீரென அங்கே அறிமுகமில்லாத புதியவனை கண்ட வித்யாவோ, அவனிடம் இருந்து விலகி தன்னை காத்துக் கொள்ளும் எண்ணத்தோடு, நித்தி இருந்த அறையை நோக்கி எட்டுக்களை வைத்தவள், “ஏய் நித்தி, வெளியே வா… ப்ளீஸ் கதவைத் திறடீ… நித்தி…” பயத்தில் விடாது தடதடவென வேகமாக கதவைத் தட்டினாள்.


“ஏய்... யாரு நீ, இங்க எப்படி வந்த? கெஸ்ட் ரூம் கதவை ஏன் தட்டுற? ஆமா, யாரது நித்தி?” விடாது கேள்விகளை தொடுத்தவாறே திவா, இப்போது அவளுக்கு அருகே வந்து விட்டான்.


இதற்குள் ஹாலில் பேச்சுக் குரல் கேட்டு சமையலறையில் இருந்து, “கிளம்பியாச்சாடா…” என்று வெளியே வந்த சந்தோஷ், அங்கே ஜாகிங் செல்ல தயாராக நின்றிருந்த திவாவை பார்த்தவுடன், பேயை கண்டது போல அதிர்ந்து, கையில் பிடித்திருந்த டீ அடங்கிய ட்ரேயை நழுவ விடாது கெட்டியாக பிடித்தான்.


“டேய் டி.எஸ்.பி! நீ இங்க... எப்… எப்போ வந்தடா?” கேட்ட படி, அருகே இருந்த மேஜையின் மேல் அந்த ட்ரேயை வைத்தான். அதே சமயம் தயாரான மோகனும், விஜய்யும் படி இறங்கி வர, அவர்களுக்கும் நண்பனைப் அந்நேரத்தில் அங்கே பார்த்தது அதிர்ச்சி தான்.


எல்லாமே நொடி நேரம் தான். இதற்குள் “யாரு சந்து, இந்த பொண்ணு?” வினவ ஆரம்பித்த திவாவுக்கு, பட்டு வேட்டி சட்டை சகிதம் இறங்கி வரும் மோகனைக் கண்டவுடன், சட்டென்று விஷயம் விளங்கியது.


‘இந்த பொண்ணையா?’ ஒரு நொடி இருவரையும் மாறி மாறி பார்த்த திவா, “இவங்க நீ கல்யாணம் செஞ்சுக்க போற பொண்ணாடா மொக்கை?” என்று ஆராய்ச்சியாக அவன் விழிகள் விதுவை எடைப் போட,...


“நோ…” என்று அலறியது, நம் வித்யாவே தான்.


“ஷ்… விது! சும்மா சும்மா கத்தாதே” என்று அவளை அதட்டிய மோகன்,…


“கல்யாணம் தான் மச்சான். நல்ல வேளை பொண்ணு இவ இல்ல” என்று பதில் கொடுத்து விட்டு,...


“நித்து…” என்று அழைத்தவன், அவளை அங்கே காணாது, “நித்து எங்க விது?” என்றவனுக்கு,


“சிஸ்டர் அப்போவே உள்ள போனாங்க மொக்கை” என்று மூடியிருந்த அறையை சுட்டிக் காட்டிய சந்தோஷ், அதட்டலுக்கு விது பயந்ததை அதிசயமாக பார்த்தான்.


“நித்து… நித்து... கதவை திற,...” இப்போது மோகன் அறையின் கதவை விடாமல் தட்ட துவங்க, மற்ற இரு நண்பர்களையும் ஓரம் கட்டி, விசாரணையில் இறங்கினான் திவாகர்.


தனித்து விடப்பட்ட விதுவோ, சற்று தள்ளி நின்று நண்பர்களை கேள்வியம்புகளால் துளைத்து கொண்டிருந்த திவாவை கண்டு, “ஆஹா, போலீசை கூட்டாளியாக்கி வெச்சுக்கிட்ட தைரியத்துல தான், பொண்ணை தூக்கினாங்களா?” முணுமுணுத்தவளுக்கு, இப்போது மிரட்சி கூடியதால் தான், இந்த சில நிமிடங்களாக மௌனியாக இருக்கிறாள். இது அறியாமல் சந்தோஷ் அதிசயித்து விட்டான்.


எல்லா விஷயத்தையும் சந்துவும், விஜய்யும் கோர்வையாகத் துரிதகதியில் துப்ப, மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்த திவா, விதுவை பற்றி அவர்கள் சொல்லும் போதே, அவளை தான் திரும்பி மீண்டும் அளவிடும் விதமாகப் பார்த்தான்.


கலவரம் படிந்த மாசற்ற முகமும், தவிப்பான அவளின் அச்ச பார்வையையும் கண்டவன், “இடியட்ஸ், ஒரு வேலையை ஒழுங்கா பண்ண மாட்டீங்களா? இந்த பொண்ணை ஏண்டா கூட்டிட்டு வந்தீங்க? வீண் பிரச்சனை ஆகுமே. அவ முகத்தை பாருங்க… பாவம்டா.” தேவையில்லாமல் சிக்கி கொண்டாளே என்ற பரிதாபம் எழ, அவள் புறம் திவாகர் கைக் காட்ட,


“முகத்தை பார்த்து தப்பா எடை போடாத மச்சி. பேபி ஃபேஸுக்குள்ள, ஒளிஞ்சுருக்க ராட்சஸிடா இவ. வாயா அது! அம்மாடியோவ், ஒரே திட்டு மழை தான். என் அம்மா கூட என்னை இவ்ளோ மட்டமா டோஸ் விட்டிருக்க மாட்டாங்க” சந்தோஷும், விஜய்யும் ஒரு சேர எகிற,...


“ஆமாம்டா, நீங்க பண்ணுன காரியத்துக்கு, உங்களைத் திட்டாம, மாலை போட்டு மரியாதையா பண்ணுவா? ஏதோ அடிக்காம சும்மா விட்டாளேன்னு சந்தோஷப்பட்டுக்கோங்கடா.”


“டேய்… நீயே அவளுக்கு எடுத்துக் கொடுப்ப போல!” திவாவிடம் இப்படி குறைப்பட்டு, “அப்போவே நான் கார்ல சொன்னது தான்டா சந்து! இந்த பொண்ணுக்கும், இவனுக்கும் தான் ஒத்த சிந்தனை! பாரு, இவன் பேச்சால நிரூபிக்கறான்.” என்ற விஜய்யிடம்,


“டேய், இவன் கொள்ளிக்கட்டை கொள்கை நமக்கு தெரிஞ்சது தானே!” கடுப்பாய் உரைத்த சந்து, “எங்களை என்ன பண்ண சொல்ற டி.எஸ்.பி! நாங்களே நேத்து போட்ட ப்ளான், கடைசி நிமிஷத்துல மாறி போகவும், செம டென்ஷனாகிட்டோம்.”


“போறாததுக்கு வழி தவறி போய், அவசரமா எல்லாம் செஞ்சுட்டு இருக்கோம். இந்த பொண்ணு விடாம கத்துறா. மழை வேற கொட்ட ஆரம்பிச்சுடுச்சு. அந்த குழப்பத்துல, இவளைத் தெரியாத்தனமா காரில் ஏத்திட்டோம்டா சாமி. இவ என்னடான்னா, நித்யா சிஸ்க்கு ஒரே அட்வைஸ் மழை பொழியறா. தொணதொணன்னு பேசியே மனுஷனைக் கொல்றா!” அவர்கள் தரப்பை சந்து நியாயபடுத்த முயல, நண்பர்கள் இருவரையும் திவா முறைத்தான்.


அப்போது அழுது வடிந்த முகமாக அறையை விட்டு நித்தி வெளியே வந்தாள். “ஹேய் நித்தும்மா, என்ன ஆச்சுடா?” கரிசனையாக கேட்டு, அவளை தோளோடு அணைத்து மோகன் ஆறுதல் படுத்தினான்.


“எனக்கு பயமாயிருக்குங்க…” அவன் மீது சாய்ந்துக் கொண்டு அழுதவளை கண்டு, பொறுக்காமல்…


“எல்லாம் உன்னால தான் லூசு. நீ தான், நல்லா இருந்த சிஸ்டரை பயமுறுத்திட்டே” சந்தோஷ் கத்தவும்,...


இப்போது வெறுமே முறைத்தவள், “நித்து… வேணாம்டீ. உங்க வீட்டை ஒரு முறை நினைச்சு பாரு. பாவம்டி அவங்க, துடிச்சு போய்டுவாங்கடி. இப்போ கூட ஒண்ணும் கெட்டு போகலை. எதுவும் நடக்காத மாதிரி, இங்கேயிருந்து போய்டலாம் வாடீ” தொண்டைக்கு சற்றே ஓய்வு கொடுத்ததில், தன் தேய்ந்த பல்லவியை வித்யா மீண்டும் துவக்கினாள்.


“டேய் மோகன், ஏற்கனவே லேட்டு! இப்போவே கிளம்புவோம் வாடா. இங்க இருந்தா இந்த பொண்ணு இன்னும் டேமேஜ் செஞ்சுடும்.” விஜய் அவசரப்பட,...


“முதல்ல என்னை கொண்டு போய் விடுங்க. என்னை காணோம்னு தெரிஞ்சா, ஐயோ... என் அப்பாவும், பாட்டியும் என் தோலை மட்டும் இல்ல… கார் வெச்சு தூக்கின உங்களையும் உரிச்சு, உப்புக் கண்டம் போட்டு, காக்காய்க்கு வெச்சுடுவாங்க!” இதை கேட்டு மற்றவர்கள் மிரள, திவாகரோ, பக்கென்று சிரிக்க ஆரம்பித்தான்.


டென்ஷனாக இருந்த மற்றவர்கள், வெறுமே முறைக்க, பொறுக்காமல், “கற்பனையில நல்லா குளுகுளுன்னு இருக்காடா டி.எஸ்.பி? இப்படி சிரிக்குரியே, எங்க ஃபிரெண்டா நீ?” அழுது விடுவான் போல சந்து பார்க்க,...


“ப்ளீஸ் நித்தி…” விது மீண்டும் கெஞ்சத் துவங்கினாள்.


“இப்படி ஒரு மொக்கைப் ப்ளானை உன்னால தான்டா மோகன் போட முடியும். பேசாம அலைபாயுதே ஸ்டைல்ல காதும் காதும் வெச்ச மாதிரி ஒரு ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துட்டு, எப்போவும் போல அவங்கவுங்க வீட்ல இருந்திருக்கலாம். கமுக்கமா செஞ்சுட்டு, சைலென்ட்டா வேற ஏற்பாடு செஞ்சுருக்கலாம்! அதை விட்டு, யார் வீட்டு விசேஷத்துக்கோ வந்த இடத்துல பொண்ணுங்களை காணோம்னா, பிரச்சனை பெருசா வெடிக்காது? ஊர் பார்டர் தாண்டும் முன்ன, உங்கப்பா இங்க வந்து நிப்பார்!”


“டேய்… நான் சொன்னேன் தானே, இவன் கண்டதையும் பேசி, டென்சன் ஆக்கிடுவான் என்னை.” மோகன் கடுப்பாக,


“சரி விடு டி.எஸ்.பி, ஏதோ எங்களுக்கு தெரிஞ்ச ப்ளான் போட்டோம்.” விஜய் சமாதானத்தில் இறங்கினான்.


“ஓகே மச்சி, கல்யாணங்கற உன் முடிவில் மாற்றம் இல்லையே?” நண்பனை பார்த்து அழுத்தமாக கேட்ட திவாவிடம்.


“என்னவானாலும் சரிடா, எங்க கல்யாணம் இப்போவே நடந்தாகணும்” மோகன் ஒரு வித பிடிவாத தொனியில் சொல்ல,...


அனைவரையும் ஒரு முறை பார்த்த திவா “சரி விஜய், இவனை கோவிலுக்கு கூட்டிட்டு நீங்க கிளம்புங்க. அவ சொல்ற இடத்தில, நான் இந்தப் பொண்ணை விட்டுடறேன்” என்றான்.


“ப்ளீஸ் அண்ணா, என் துணைக்கு அவ வரட்டும்” குரலே எழும்பாமல் நித்தி மெதுவே கெஞ்சினாள்.


“இங்க பாருமா, இவன் மட்டும் போதும்னு தானே, சொந்த பந்தத்தை கை கழுவிட்டு கிளம்பி வந்த? அப்புறம் என்ன டாஷுக்கு உனக்கு துணைக்கு ஒரு ஆளு தேவை?”


“திவா…” கோபமாக மோகன் கத்த,


அசராமல், “இவன் தான் உன் எதிர்க்காலம்னு நீ கிளம்பினது சரி, நடுவுல உன் ஃபிரெண்ட் எதுக்கு? அவங்க வீட்ல பிரச்சனை ஆகறதுக்குள்ள, அவளை கொண்டு போய் பத்திரமா விட்டுடறேன்” என்ற திவாகரின் பேச்சில் வெகுவாக கவரப்பட்டு,


“நித்தி… வேணாம்டீ. இவர் நல்லவரா தெரியறார். எங்க கூட நீயும் வந்துடு. நாம இங்கிருந்து போயிடலாம்.”


அவனையும், நண்பர்களுக்கு உதவும், அவன் குணத்தையும் பற்றி தெரியாமல் புது தெம்போடு பேச ஆரம்பித்த விதுவை, முறைத்த திவா, “ஓய் லவுட் ஸ்பீக்கர், நீ ஒழுங்கா வீட்டுக்கு போகணும் தானே?” சற்றே அதட்டலாக கேட்டதும்,


“ஆங்… ஆமா…” வேகமாக விது தலையை அசைக்க,


வாயை மூடும் படி சைகை செய்தவன், “நான் சொன்ன பேச்சை கேட்டா, உன்னை பத்திரமா கொண்டு போய் விடுவேன்” மிரட்டல் த்வனியில் மொழிந்த திவாவின் கண்களின் உருட்டலில், அரண்ட விதுவின் அனுமதியின்றியே அவள் தலை ஒப்புதலாக எல்லா பக்கமும் ஆடியது.


“என் கல்யாணத்துக்கு நீ வரமாட்டியா டி.எஸ்.பி?” குரலில் என்ன இருந்தது என்று பிரித்தறிய முடியா வகையில் மோகன் கேட்க,...


“நான் இல்லாம பண்ணிக்கலாம்னு தானே, நீ முடிவு செஞ்சுருந்த!” பட்டென்ற திவாவின் கேள்வி சுட,...


“அது இல்ல மச்சான், வந்து...” மோகன் தடுமாற ஆரம்பிக்கவும்,..


“டேய்… சும்மா பேசி டைம் வேஸ்ட் பண்ணாத. என்னை விடு, இப்போ நான் வர்றது முக்கியமில்ல. முதல்ல, உடனே உங்க கல்யாணம் நல்லபடியா நடக்கணும். உங்க ப்ளான் படி நீங்க கிளம்புங்க. இடையில வந்த குழப்பத்தை நடுவுல நுழைஞ்ச நான் டீல் பண்ணிக்குறேன். நேரமாகுது… கமான்… க்விக்...” என்ற திவாகரை ஆரத் தழுவினான் மோகன்.


“பெஸ்ட் விஷஸ் மச்சி. விஷ் யூ அ ஹாப்பி மாரிட் லைஃப்டா” மோகனுக்கு மனமார வாழ்த்துச் சொன்னவன், அவர்கள் கிளம்பி செல்லும் வரை உடன் இருந்தான்.


நடந்த அனைத்தையும் விழி விரித்து அதிர்வோடு பார்த்துக் கொண்டிருந்த விதுவிடம், “ஒரு ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணு, வந்துடறேன்.” என்ற திவாகரிடம்,


“ஹே எங்க போற?” அவள் பேச்சைக் கேட்டு திவா முறைக்கவும், “இல்லைங்க டி.எஸ்.பி. சார், ஏற்கனவே நேரமாச்சுங்க. இப்போவே கிளம்புங்க. என்னை தேடுவாங்க டி.எஸ்.பி சார்” வார்த்தைக்கு ஒரு ‘ங்க’ போட்ட விது அவனை அவசரப்படுத்த முயல,


“நான் இன்னும் குளிக்கல. ரெண்டே நிமிஷம், குளிச்சுட்டு கிளம்பி வரேன்.”


“அந்த ரெண்டு நிமிஷத்துல நீ குளிக்கற, காக்கா குளியலுக்கு, அப்படியே அழுக்காவே வந்துக் காரை எடு. நான் அட்ஜெஸ்ட் பண்ணிக்குவேன்.” மரியாதையை காற்றில் பறக்க விட்டு கோபத்தோடு அதிகாரமாக விது கட்டளையிட,


நீ சொல்வதை சொல்லிக் கொள் என்பது போல் சட்டை செய்யாமல் மேலே ஏறிச் சென்ற திவாவை கண்டு, “ஐய்யையோ... போறாங்களே! “ப்ளீஸ் சார் ங்க…” என்று கெஞ்சி பிரயோஜனமில்லை.


ஆள் இல்லா அறையில், “தனியா புலம்ப விட்டுட்டாங்களே! ஐயோ சாந்த்… உன் க்ரீன் சாண்டுக்கு வந்த சோதனையை பார்த்தியா? நியாயம் பேசுனாரே டி.எஸ்.பி சார்… புத்தி சொல்வார்னு பார்த்தா, எங்கிருந்தாலும் வாழ்கன்னு அனுப்பி வெச்சுட்டாரே!” முணுமுணுவென அரற்றி, வாய்க்குள் ஏதோ முனகி, ஓரிடத்தில் நிற்க முடியாது, அந்த ஹாலின் நீள அகலத்தை டென்ஷனாக அளந்திட, முழுதாக பத்து நிமிடங்களுக்கும் மேலே கடந்த பின், நிதானமாக இறங்கி வந்த திவா, குளித்து வேறு உடை மாற்றி இருந்தது, கண்கூடாக புலப்பட்டது.


காரை நோக்கி வேகமாக நடந்தவனுக்கு சுபா அம்மாவிடம் இருந்து போன் கால் வரவும், இப்போது அவரிடம் பேசத் தோன்றாமல், அழைப்பை ஏற்காமல், துண்டித்து விட்டு, போனையும் சைலென்ட்டில் போட்டு விட்டான்.


மழை முன்பை விட வலுத்திருக்க, காற்றும் சேர்ந்து வீசியதில் விது நடுங்க ஆரம்பித்தாள். காரில் ஏறியவன், ஹீட்டரை போட்டு விட்டு, வண்டியை ஸ்டார்ட் செய்தான்.


தோகை இள மயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ

கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ

தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்

காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ


மெலிதாக பின்னணியில் இசையை ஒலிக்க விட, டென்ஷனாக இருந்த விது, அனிச்சையாக சி.டி. ப்ளேயரை ஆஃப் செய்தாள்.


அவளை முறைத்தவனை விடுத்து, புடவையை இழுத்து போர்த்திக் கொண்டவளின் வாய், தன் பாட்டில் எதையோ முனகியது.


மகனுக்கு சில முறை அழைத்துப் பார்த்த சுபா, வழக்கத்துக்கு மாறாக பதில் இல்லாமல் போகவும், பங்களாவின் லேண்ட்லைனுக்கு அழைத்தார்.


அதுவரை அங்கே நடந்த குழப்பங்களை, தங்கள் அறை வாயிலின் உட்புறம் நின்று, தேமே என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வேலு, பார்வதி தம்பதியினர் நிசப்தமாக இருந்த ஹாலுக்கு விரைந்து வந்தனர்.


ஃபேமிலி ரூமில் இருந்த லேண்ட்லைன் தொலைபேசி அழைப்பை எடுத்த வேலு, படபடவென சுபாவிடம் உளறிக் கொட்ட, விவரங்களை உள்வாங்கியவருக்கு, தோட்டக்காரன் பகிர்ந்த விஷயம் உவப்பானதாக இல்லை. கணவரிடம் எதையும் மறைத்தறியாதவர், வேலு சொன்னதை அவரிடம் வரி விடாமல் ஒப்பித்தார்.


மீண்டும் மகனுக்கு கைப்பேசியில் சுபா அழைக்க, பதில் இல்லை என்றவுடன், என்ன நடக்கிறது என்று கணவனும் மனைவியும் குழம்பிக் கொண்டிருந்தனர்.


************************************************


இங்கே குன்னூரில்


தன் காரை ஓரமாக நிறுத்தி விட்டு விதுவின் புறம் திவாகர் திரும்பிப் பார்க்க,


“ஹேய்... வண்டியை ஏன் நிறுத்தின… னீங்க ஸாஆர்ர்ர்...” என்று கேட்ட விதுவின் கண்கள், தாங்கள் ஆள் அரவம் இல்லா ஒரு இடத்தில் இருப்பதை கணக்கில் கொண்டது.


“சும்மா என்ன முனகுற? ஏதோ போனாப் போகுது, சின்ன பொண்ணுக்கு பிரச்சனை ஆகக் கூடாதுன்னு, என் பெஸ்ட் ஃபிரெண்ட் கல்யாணத்தை மிஸ் பண்ணிட்டு, உன்னை கொண்டு விடறேன்! நீ என்னடான்னா ஏறினதில் இருந்து என்னை திட்டிட்டே வர!”


“ஐயோடா…” என்று தன் தலையில் அடித்துக் கொண்ட விது, “உன்னை… சாரி... நான் உங்களை திட்டலை டி.எஸ்.பி சார். என்னையே தான் திட்டிக்கறேன்” என்றவளை நம்பாமல் திவாகர், கண்களை சுருக்கி பார்க்க,


“ப்ராமிஸ்…” என்று தன் கழுத்தில் கை வைத்தவள், “சாதாரணமா, கோயம்புத்தூர் க்ளைமேட்டுக்கே என்னால காலங்கார்த்தால எழுந்துக்க முடியாது. இந்த ஊட்டிக் குளிர்ல, இன்னைக்குன்னு பார்த்து ஏனோ ரொம்ப சீக்கிரம் முழிச்சுட்டேன். முழிச்சுட்டேனா…!”


“நானாவா முழிச்சேன்? இல்லையே...” ஆட்காட்டி விரலை கன்னத்தில் தட்டி கொண்டு சத்தமாக யோசித்தவளுக்கு, அப்போது தான், காலையில் காதில் விழுந்த வண்டு துளைக்கும் சத்தம் ‘ஒரு வேளை, நித்யாவுக்கு வந்த தொலைபேசி அழைப்போ’ என்ற சந்தேகம் வந்தது.


‘அதனால் தானே முழிச்சேன்?’ என்று நினைத்தவளை, “காலையில எழுந்ததுக்கு, இப்போ பாதிப் பேச்சுல தூக்கமா?” திவாவின் நக்கல் குரல் நடப்புக்கு இழுத்து வர,...


ஆங்… திருதிருவென முழிப்பவளை பார்த்து, “என்னை திட்டினதும் இல்லாம, இப்போ என் காதுல பூ சுத்த வேற பார்க்கறியா?”


“ஐயோ... இல்ல டி.எஸ்.பி சார். நிஜமா நடந்ததை சொல்றேன். கல்யாண வீட்ல சொன்னாங்கன்னு உடனே கிளம்பி, சத்திரத்துக்கும் போயிட்டேனா! எப்போவும் கடைசி ஆளா அவசரவசரமா கிளம்புற லூசி, இன்னைக்கு ஏண்டி ஊருக்கு முன்னக் கிளம்பி, இப்படி வந்து மாட்டிக்கிட்டன்னு தான்... நான் என்னையே, என்னை மட்டுமே திட்டிக்கிட்டேன். ப்ராமிஸ் சார்.” விரலை தன் பக்கமாக திருப்பி, குரலில் ஏற்ற இறக்கத்தோடு விது விவரித்த விதத்தில் வாய் விட்டு சிரித்தான்.


“நடுவுல டி.எஸ்.பின்னு என் பேரைக் கடிச்சு துப்பினியே! அதை பத்தி சொல்லு, அப்போ தான் வண்டியை எடுப்பேன்,” இப்போது கைகளை தலைக்கு மேல், சீட்டை சுற்றி பிடித்துக் கொண்டு கதை கேட்டும் விதமாக அமர்ந்தான்.


“ஆங்… அதுவா… இல்ல… அது வந்து, ஒரு டி.எஸ்.பி., சட்டம், ஒழுங்கை காப்பாத்த வேண்டியவரு, கடமையை மறந்து இப்படி தப்பு பண்ணலாமான்னு! சும்மா தான்… உங்களைத் திட்டலாம் செய்யவே இல்ல. ஜஸ்ட், கேள்வி மட்டும் சத்தமா தோணுச்சு.”


“ஹ ஹா… யாரு? நான் டி.எஸ்.பி!” அடக்க மாட்டாமல் சிரித்தவன், “அட, இது கூட நல்லா இருக்கே! திவாகர் சத்ய பிரபாகர்…”


ஆவென புரியாத பாவனையில் விழித்தவளின் முகம் பார்த்து இன்னமும் சிரிப்பு மலர், “என் முழு பேரைத் தான், அவங்க அப்படி சுருக்கி கூப்பிடறாங்க. நான் போலீஸ் இல்ல.” வாய் விட்டு சிரித்தான்.


“ஓ… ஆண்டவா… இதுலயும் சொதப்பிட்டியா விது? இன்னைக்கு உனக்கு ராசி பலன்ல, சொதப்பல்னு போட்டிருக்கோ?” கண்ணை விரித்தவளிடம்,...


“இரு… என்னோட அம்மா கால் பண்ணிட்டே இருக்காங்க. அவங்களுக்கு ஒரே ஒரு மெசேஜ் அனுப்பிடறேன்” என்று சுபாம்மாவுக்கு,...


“மஃப்ளர், ஸ்வெட்டர் போட்டுக் கொண்டு, ஜாகிங் சென்றுக் கொண்டிருப்பதாக…” வழக்கமாக அனுப்பும் மெசேஜை அனுப்பி விட்டு, காரை ஸ்டார்ட் செய்தான்.


********************************


குன்னூரில் திவா தனியே தங்க நேரும் போது, காலையில் அவன் ஜாகிங் கிளம்பும் முன், வழக்கமாக சுபாம்மா அழைத்து சலிக்காமல் கூறும் அதே ஆதர பழைய அறிவுரை - ‘குல்லா, ஸ்வெட்டர் போட்டுக் கொள்.’ என்பதாகும்.


எப்போதும் அம்மாவின் முதல் தொலைபேசி அழைப்பு இதற்காக மட்டுமே என்பதால், வழக்கமாக பெற்றவளுக்கு கொடுக்கும் அதே பதிலை இன்றும் எஸ்.எம்.எஸ்ஸாக அனுப்பிய திவாவுக்கு பாவம், வேலு அரைகுறையாக விஷயத்தை உளறிக் கொட்டியது தெரியாது.


மகனிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியை பார்த்த சுபா குழம்பி, கணவரிடம் அதைக் காட்டினார். எதுவோ சரியில்லை என்று புரிந்துக் கொண்ட பிரபாகரிடம், “நாமே குன்னூருக்கு போகலாம்,” என்ற சுபாவின் பேச்சை தட்டாது, அவரும் எழுந்தார். அவர்கள் இருவரும் அவசரமாக மகனுக்காக ப்ரயாணப்பட்டனர்.


************************************


சாலையில் மெதுவே சென்றுக் கொண்டிருந்தவனிடம், “கொஞ்சம் வேகமா போங்க…” என்று விது அவசரப்படுத்தினாள்.


“ரோட் சரியில்லை… விசிபிளிட்டி கம்மியா இருக்குங்கறது பார்த்தா தெரியுது இல்ல!” என்ற திவா சாலை மீது கவனத்தை வைத்தான். ட்ராஃபிக்கும் சேர்ந்துக் கொள்ள, ஒரு கட்டத்தில் மெதுவே தான் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.


நேரமாவதைக் கண்டு கலங்கியவள், “கிழவி வாயை திறந்தப்பவே கொஞ்சம் சுதாரிப்பா இருந்து இருக்கக் கூடாது. அப்போ லூசுல விட்டோம், இப்போப் பாரு… டப்பா டான்ஸ் ஆட போகுது.”


அவள் ஏதேதோ புலம்புவதைக் கேட்டு, “உன்னை பார்த்து என் ஃபிரெண்ட்ஸ் அரண்டு மிரளுறாங்க! நீ என்னடான்னா, உன் பாட்டிக்கு இவ்ளோ பயப்படறேங்கறது, நம்ப முடியலையே!”


“ம்ம்… உங்களுக்கு அந்தக் கிழவியைப் பத்தித் தெரியாது. ஈரைப், பேனாக்கி… பேனை பெருமாளாக்கிடும்.” படபடத்தவள், உடனே அதிர்ந்து... அவன் முகத்தை பார்த்து முழித்து விட்டு, “ஐயோ தப்புத்தப்பு… பாட்டியை, நான் அப்படிச் சொல்லலை. ப்ளீஸ்… இதை யார்கிட்டயும் சொல்லிடாதீங்க” என்று கெஞ்சுதலாக பார்த்தாள்.


பயத்தில் உளரும் அவளை பார்க்க பாவமாக இருந்தாலும், அவள் பேச்சில் சிரிக்காமலும் இருக்க முடியவில்லை. “ஸ்கவுட் ப்ராமிஸ்… நான் யாருக்கும் சொல்ல மாட்டேன்” என்று அவன் வாக்குக் கொடுக்கவும்,...


ஒரு நொடி நிம்மதியானவள், “ஐயோ…” என்று அலறினாள்.


“ஏய்… எதுக்கு கத்தற? இப்போ என்ன ஆச்சு?”


“இந்த நித்தி எருமை பண்ண கலாட்டால, சுதாவோட அக்கா கல்யாணத்தைப் பத்தி மறந்தே போயிட்டேன். அங்க எந்தப் பிரச்சனையும் ஆகியிருக்காதே?”


அப்போது தான் திவாவுக்கும், அந்த கவலை வந்தது. இந்த மோகன் ஒருவன் சரியாக யோசிக்காமல் செய்த வேலையால், ‘கடவுளே… கல்யாண வீட்டில் எதுவும் குழப்பம் நடந்து இருக்குமோ?’ என்று நினைத்தவன்,...


“உன் ஃபிரெண்ட்ஸ்க்கு போன் பண்ணி, எதையாவது சொல்லி சமாளி. அங்க என்ன நிலவரம்னு கேட்டு தெரிஞ்சுக்கோ.”


“ஞே” என்று முழித்தவள், “அதான் சொன்னேனே சொதப்பல் நாள்னு. என் மொபைலை மறந்து அங்க சுதா வீட்ல விட்டுட்டேன். யாரோட நம்பரும் எனக்கு மனப்பாடமா தெரியாதே.”


இடம் பார்த்து திவா காரை ஓரம் கட்ட, “இப்போ ஏன் நிறுத்தறீங்க?”


“ஷுஷ்… எந்தச் சத்திரம்? பேர் சொல்லு” என்றவனுக்கு, லவ்டேல்லில் இருக்கும் கல்யாண மண்டபப் பெயரும், அது இருந்த சாலையின் பெயரையும் நினைவுக் கூர்ந்தாள்.


குன்னூர் எஸ்டேட் மேனேஜருக்கு கைப்பேசியில் அழைத்துப் பார்த்தான். அவர் அழைப்பை ஏற்கவில்லை. அவனுடைய போனில் இண்டர்நெட்டு சிக்னலும் இல்லை என்பதால், சத்திரத்தின் எண்ணை அவனால் ப்ரவுஸ் செய்ய முடியவில்லை. ‘சரி... இன்னும் கொஞ்ச நேரத்தில் ட்ரை பண்ணலாம்’ என்று முடிவு செய்தவன், மீண்டும் காரை ஸ்டார்ட் செய்து, சாலையில் கவனம் வைக்க,...


“எருமை… எருமை… எருமை…”


“எருமை உங்க ஃபேமிலி ஃபிரெண்டா?” என்றவனை, முறைத்த விது,...


“எவ்ளோ பெரிய காரியம் பண்ணியிருக்கா. காலையில அவ முகத்துல கொஞ்சம் கூட பயமே இல்லை தெரியுமா! அத்தனை சாதாரணமா இருந்தா. என்னால இன்னும் கூட நம்ப முடியலை. இவளால, எனக்கும் இப்போ கெட்டப் பேரு. என்னை எல்லாரும் திட்டப் போறாங்க.”


“ஹேய்… கூல் விது. எதுக்கு உனக்கு இவ்ளோ கோபம் வருது? உனக்கேன் கெட்டப் பேராகும்? உனக்கு தான் எதுவும் தெரியாதே?” திவா யோசியாமல் கேட்க,...


“ம்ம்… திருட்டுக் கல்யாணத்துக்கு, அவளுக்கு நான் துணைப் போனது மாதிரி பேசுவாங்க. எனக்கு இதெல்லாம் தேவையா?”


“நீ என்ன பெரிய உண்மை விளிம்பியா பேசுற! ‘யாரோ வந்தாங்க… எங்க ரெண்டு பேரையும் கார்ல வலுக்கட்டாயமா ஏத்தினாங்க. போற வழியில என்னை இறக்கிட்டாங்க. நித்யாவை மட்டும் கூட்டிட்டு போயிட்டாங்க. நான் வழியில போற காரை நிறுத்தி, இவர் ஹெல்போட வந்து சேர்ந்தேன்’னு சொல்லுவியா. அதை விட்டுட்டு…”


“ஐயோடா… இத்தனை பொய்யா! என்னால முடியாது சாமி, ஆளை விடுங்க…”


பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்.


“நீ ஸ்கூல்ல திருக்குறள் படிச்சதில்ல…”


“ஆங்… அது சரி! நீங்கல்லாம் இப்படி கண்டதுக்கும் அவர் குறளை உபயோகிப்பீங்கன்னு தெரிஞ்சுருந்தா, அந்த மனுஷர் இதை எழுதியே இருக்க மாட்டார்.”


“அப்போ, இன்னும் நல்லதா போயிருக்கும்.”


“எப்படி?”


“ஸ்கூல்ல ஒரு மனப்பாட செய்யுள் கம்மியாகிடும்ல! எப்புடி?” என்று அவளைப் பார்த்து, புருவம் உயர்த்தியவனை, கண்டு எரிமலையானவள்,...


“அய்யோ… சாமி, இப்படி ஒரு மொக்கையோட என்னை ட்ராவல் பண்ண விட்டதுக்கே, அந்த நித்தியை வெட்டிப் போடணும். ஆக மொத்தம் இன்னைக்கு என் நேரம் சரியில்ல.”


“மொக்கை மோகன் தான்!” என்ற திவாவை பார்த்து, “உதவுற ஆளாச்சேன்னு பாக்க மாட்டேன். பிராண்டி விட்டுடுவேன்!” என்று பத்து விரல்களையும் அவன் புறம் மடித்து காட்ட….


“நல்லாத் தானே போயிட்டு இருந்துச்சு. இப்போ ஏன் இந்தக் கோபம்?” என்ற திவாவிடம்,


“பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும். என்னை இறக்கி விட்டுட்டாங்கன்னு சொன்னா, நம்புற மாதிரியா இருக்கு?”


“சிம்பிள்… அழகான பொண்ணைக் கடத்திட்டாங்க, என்னை விட்டுட்டாங்கன்னு சொல்லு.”


“அப்போ... நான் அழகில்லைன்னு சொல்றீங்களா?”


அவள் அப்படி ஒன்றும் அழகி இல்லை…” கேலியாக திவா பாட ஆரம்பிக்க,...


“உங்களை…” என்று அவன் கழுத்தை நெரிப்பது போல் விது கைகளை கொண்டு வர, உற்சாகமாக சீட்டி அடித்த திவாவுக்கு, அவளோடு மேலும் வம்பு வளர்க்க ஆசையாக இருந்தாலும், சாலையில் ட்ராபிக் குறையவும், சற்று வேகமெடுத்து காரை ஓட்ட ஆரம்பித்தான்.


ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தவாறு வந்தவளுக்கோ, ‘பேசாம மூனுக்கு போன் போட்டு நடந்ததை சொல்லிடலாமா? இந்த அம்மா பயந்து டென்ஷானாகிடுவாங்களே!’ புது யோசனையை செயல்படுத்தலாமா என்று விது தீவிர சிந்தனையில் ஆழ்ந்த போது படீரென்ற வெடிச் சத்தத்தை தொடர்ந்து, கார் கண்ட்ரோல் இல்லாமல் சாலையில் தாறுமாறாக வழுக்கியது.



முடிச்சு இறுகுமா?


© KPN NOVELS COPY PROTECT
bottom of page