மூன்று முடிச்சு
முடிச்சு 26
“என்னங்க, அவ சின்ன பொண்ணு! விவாகரத்து அது இதுன்னு பெரிய பேச்செல்லாம் பேசுறா, நீங்க செய்யறேன்னு வாக்கு தர்றீங்க?” பதட்டமாக சுபா இடையிட்டதும்,
“ஸ்வீட்டி…” லேசாய் பல்லை கடித்து அழைத்தவள், முறைப்பாக… “நான் மொதல்ல உங்களுக்கு தான் வேப்பிலை அடிக்கணும்!” என்றவளின் த்வனியில் சத்யா தாத்தாவும், பிரபாவும் ஹா ஹாவென சிரித்து விட்டனர் எனில் டி.எஸ்.பி, வழமை போல டென்ஷனாகி போனான்.
சட்டென கோதாவில் இறங்கி, “விதூ… சுபிமாட்ட சாரி கேளு!” அவளை போலவே இவனும் பல்லிடுக்கில் வார்த்தைகளை துப்பிட… முறை மாமனை முறைத்தவளின் பதிலடி என்னமோ பெரியவர்களை நோக்கி இருந்தது.
“மிஸ்டர் அண்ட் மிஸர்ஸ் பிரபாகர் அவர்களே, இதே போல உங்க தலையாட்டி பொம்மை பையன்கிட்ட சொல்லி வைங்க. உங்களை திட்டுவேன், ஏன் சட்டையை புடிச்சு கேள்வி கேட்பேன். நமக்கிடையே குறுக்க வர அவர் யார்? இன்னொரு வாட்டி இப்படி மூக்கை நுழைச்சா… அப்புறம் நடக்கறதுக்கு நான் பொறுப்பில்ல!”
அசராமல் மிரட்டல் விடுத்த சின்னவள் என்ன தான் தன் பேரை, மரியாதையாக விளித்தாலும் பிரபா அதிர்ந்து விழிக்க, பேத்தியின் குணம் தெரிந்த சுபா, முழிக்கும் கணவனின் பாவனையில் சிரிப்பை அடக்க முயன்றார். மகனின் முகம் சுருங்குவதை கண்டு, “ஹே வாலு, அவரையே பேர் சொல்லுற அளவுக்கு வந்துட்டியா?” லேசாய் காதை திருகி, பேச்சை இலகுவாக்கும் முயற்சியில் இறங்கினார்.
“கூப்பிட தானே பேரு!” என்றவளின் கூற்றில் இப்போது பிரபாவும் வாய் விட்டு சிரித்து விட்டார்.
பெரியவர்கள் மூவருமே ஒன்று போல எதிர்வினையாற்ற, திவாவின் முகம் மட்டும் அதிருப்தியை குத்தகைக்கு எடுத்து உர்ரென இருப்பதை பார்த்து, கேலி குரலில் “என் மகன் கொஞ்சம் அப்பிராணி… அவனை பதமா பார்த்துக்கோடா செல்லக் குட்டி,” விண்ணப்பம் போல வேண்டும் குரலில் பிரபா மொழிய,
“நானும் பதமா இருக்க தான் முயற்சி செய்யறேன் தாத்தூ. ஆனா… விபரீத பதார்த்தமா அதை மாத்துறது, உங்க பையன் தான். எப்போவும், இதே போல அமைதியா பேச மாட்டா விதுன்னு புத்தி சொல்லி, கட்டி வைங்க.”
“ஆமா, இப்போ ரொம்ப… ரொம்ப அமைதியா தான் பேசினே!” ரொம்பவில் அழுத்தம் கொடுத்த பிரபா, மகனின் தோளை தட்டி… “கேட்டுக்கோ திவா… எவ்வளவு அடிச்சாலும், வலிக்காத மாதிரியே முகத்தை வெச்சுக்க பிராக்டிஸ் செஞ்சு பழகு!” என்று விட்டு பேத்தியை பார்த்து, “சரியா செல்லக்குட்டி?” ஒப்புதல் கேட்டார்.
“அது என் தாத்தூவுக்கு அழகு!” இளையவளும் ஓத்தூத, அவர்கள் இருவரும் வார்த்தைகளால் தன்னை காமெடி பீஸாக உருட்டுவதை கண்டு கொதித்து நின்றான் திவாகர் சத்ய பிரபாகர்.
“உன் செல்ல பையன், கண்ணை கசக்கிட்டு வந்து நிக்கறப்ப, என்ன செய்யன்னு இப்போவே பேத்திகிட்ட எதுக்கும் கேட்டு வெச்சுக்கோ சுபா. பின்னால உபயோகப்படும்.” தொடர்ந்த கணவனின் இலகுவான கூற்றில், யார் மனமும் புண்படுவதை விரும்பாத சுபா, தன் பிள்ளை வாடி நிற்பதை பொறுப்பாரா?
“எல்லாம் சும்மா உதார் விடுறா! மனசு பூரா மாம்ஸ் மேல கொள்ளை லவ் வெச்சுருக்கா உங்க அராத்து பேத்தி,” என துவங்கவும், “நோ ஸ்வீட்டி…” விது குறுக்கே வர, அதை பொருட்படுத்தாமல் அன்றொரு நாள் கற்பகமும், விவேக்கும் சொன்னதை போட்டுடைத்தார். கூடவே தானும் அவர்கள் இருவர் முட்டி கொள்வதை சகியாது, விடுத்த மிரட்டலையும் சேர்த்து சொன்னதும்,
தன் குட்டு வெளிப்பட்டதில் “எப்படியும் நான் சொல் பேச்சு கேட்டுக்க போறதில்லன்னு உங்க எல்லாருக்கும் இப்போ நல்லா தெளிவாகிடுச்சு இல்ல? அப்புறம் என்ன? உங்க பொண்ணுக்கு செஞ்சது போல, உங்க செல்ல பையனுக்கும்… சில பல உருப்படற அட்வைஸ் கொடுத்து, கல்யாணத்துக்கு முன்ன ஆளை நான் நில்லுன்னா நிக்கவும், உட்காருன்னா உட்காரவும் பக்காவா ரெடி பண்ணீடுங்க. ப்ராபளம் சால்வ்ட்!” கெத்து குறையாமல் தோளை அசட்டையாக குலுக்கியவளை கண்ட பெரியவர்கள் மூவரும் ஆச்சரியத்தில் ஆவென வாய் பிளந்தனர்.
“குட்டி சாத்தான்…” திவா சத்தமிட…
“இப்படி வகையா சிக்கிட்டியே திவா!” மூவரும் ஒன்றாக குரல் தர, அந்த கேலியில் இளையவன் முகம் சிவக்க,
“என்கிட்டே மோதாதே நான் சூராதி சூரியடி” சத்தமாக பாடி கொண்டே அங்கிருந்து ஓட்டமெடுத்தவளை துரத்தி கொண்டு போனவன், அவன் நெருங்கும் முன் அறையை மூடி விட்டாள்.
வித்யாவின் அறை கதவை தட்டி, “பிசாசே… வெளிய வா. என்ன பேச்சு பேசுற நீ! கல்யாணம் முடியட்டும்… வெச்சுக்கறேன் கச்சேரியை!” என்று கத்தினான்.
கதவை திறவாமல், சத்தமாக
போடா போடா
புண்ணாக்கு போடாத
தப்பு கணக்கு போடா
போடா புண்ணாக்கு
போடாத தப்பு கணக்கு
பாடலை விது ஒலிக்க விட, இதில் மேலும் கடுப்புற்றவன், காலை ஓங்கி தரையில் மிதித்தான்.
இதற்குள் எதிர்பக்க அறையில் இருந்து, “என்ன தம்பா, நீ ஏன் இங்க இருக்க?” என்ற மதியின் குரல் கேட்க,
“அது ஒண்ணுமில்ல மதிக்கா…” சற்று திணறி… “அப்பா, ஒரு வேலையா வர சொன்னார். பிரவீன் இருக்கான் அங்க…” இப்போது விதுவின் அறை கதவு திறந்ததும் இருவரும் அங்கே பார்க்க,
எங்கே மாமன் போட்டு கொடுத்திடுவானோ என “தூங்காம ஏன் முழிச்சுட்டு இருக்க மூன்? போ… நான் ஹாஸ்பிட்டல் கிளம்பிட்டேன். உன் தம்பா என்னை விட்டுட்டு ஏதோ மீட்டிங்குக்கு போறார்.” அவளாகவே படபடத்தாள்.
“ஓ… இந்த ரவுடி பேபிக்கு செக் என் அக்காவா?” மெல்ல திவா முணுமுணுத்தது காதில் விழ, விது கண்களை உருட்டினாள்.
இருவரின் உடல்மொழியில் ஏதோ சரி இல்லை என்பதை உணர்ந்து, “என்னாச்சு? ஆமா, நான் தடுத்தும் கேளாம அப்பாகிட்ட பேச போன இல்ல! என்ன செஞ்சு வெச்சுருக்க விது? உனக்கு கோபம் வந்தா பட்டாசா பொறிஞ்சுடுவியே!” மதி படபடக்க,
“கேளு மதிக்கா…! எனக்கு பதில் தராம ரூமுக்குள்ள ஓடிட்டா!” சும்மாவே அக்காவை ஏற்றி விட்டு, “நல்லா மாட்டுனியா?” என இவளுக்கு கேட்கும் படி முணுமுணுத்த மாமனை, முறைத்தவள்,
“விஷயம் தெரியணும்னா உங்கப்பாவை கேட்டுக்கோ சாந்த்!” அசராமல் பந்தடித்தவளை பார்த்து திவா வாய் பிளக்க, அந்த இடைவெளியில் படி இறங்கி ஓடி விட்டாள்.
“அப்பாகிட்ட கேட்குறதா?” என்ற மதி, “நீ எப்போ வந்த தம்பா? உனக்கும் எதுவும் விவரம் தெரியாதா? முளைச்சு மூணு இலை விடலை, இவ நம்ம அப்பாவை கேள்வி கேக்க கிளம்பிட்டா!”
இத்தனைக்கு பின்னும், தந்தை மேல் துளி வருத்தம் கூட காட்டாத அக்காவை அன்பாகவும் கனிவாகவும் பார்த்தவன், “என்ன பெருசா பேசியிருக்க போறாங்க? விடுக்கா… கத்திரிக்கா முத்தினா கடை தெருவுக்கு வந்து தான் ஆகணும்! அப்போ நாமளும் தெரிஞ்சுப்போம்.” விதுவின் பேச்சில் காயப்பட்டிருந்தாலும், பெரிதும் அவதிப்பட்டது மதி என்பதால், அந்த விஷயத்தை அதற்கு மேல் கிளற இப்போது திவா விரும்பவில்லை.
உடன் பிறந்தவனின் கூற்றில் கவனம் திசை மாற, “என்னடா தம்பா… விது மேல மேட்லி இன் லவ்வா? அவ சப்ஜெக்ட்டை வெச்சு வியாக்கியானம் பேசுற?” அக்கா ஆச்சரியம் மேலோங்க இப்படி கேட்க கூடும் என எண்ணியிராதவன், திகைத்து…
“ம்ம்ம்…” வெட்கப்பட்டவன், “போ மதிக்கா…” அங்கிருந்து அறைக்குள் ஓடிட, சந்திரமதியின் முகம் உள்ளார்ந்த சந்தோஷத்தில் பொன்னாக ஜொலித்தது.
“நீ ஹாஸ்பிடல் போகணும் தம்பா, முகத்தை நல்லா தொடைச்சுட்டு, அப்புறம் போ… நான் தூங்க போறேன்.” மதி உரக்க சொல்லி விட்டு போக…
“குட்டி சாத்தான்… எல்லோர்கிட்டையும் என் மானத்தை கப்பலேத்துறா!” புலம்பி விட்டு, கீழே இறங்கி போவதற்குள்ளாக, ட்ரைவரோடு கிளம்பி இருந்தாள் வித்யா என்பதை அறிந்து,
“ஓடு… நிச்சயம் என்கிட்டே தனியா சிக்குறப்ப இருக்கு தியா” கொஞ்சலாக முணுமுணுத்தவன், வேலைக்கு கிளம்பினான்.
*********************************
மூன்று வார ஐ.சி.யூ வாசத்துக்கு பின் ரூமுக்கு மாற்றப்பட்ட நாராயணனுக்கு இப்போது நடைப்பயிற்சியும், ஃபிசியோதெரபியும் வழங்கப்பட்டது. தினமும் சில மணி நேரங்கள் மகனோடு தங்கும் ருக்மிணி அம்மாள், ஓயாது அதையும் இதையும் புலம்பலாக தெரிவிப்பார்.
பல வருடங்களாக அவர்கள் வீட்டில் பணிபுரிந்த டிரைவரின் மரண செய்தியும், மரணத்தின் வாசல் வரை சென்று வந்த அவரின் நேரடி அனுபவமும் சேர்ந்து, சற்று ஆடி போயிருந்தார் நாராயணன் என்பதே உண்மை. கிட்டத்தட்ட மறுஜென்மம் அல்லவா?
மூன்று வாரம் தாண்டியும் விபத்தின் தாக்கம் அவரிடம் இன்னும் குறையவில்லை. கார் மோதிய அந்த நொடியும், தான் பயத்தில் அலறியதும்... அடிபட்ட வலியும், மெல்ல நினைவு தப்ப ஆரம்பித்த அந்த க்ஷணம், மரண பயம் பீடிக்க தவித்த நினைவும் கண்களை விட்டு அகலவில்லை. படமாக திரும்ப திரும்ப மனதில் தோன்றி, அவரை இம்சித்தது.
இப்போது கூடவே உடல் பலகீனம் மற்றும் மற்ற காயங்களினால் இன்னும் இருந்த வலியும், ஃபிசியோ பயிற்சிகள் செய்வதால் அழுத்திய சோர்வும், சேர்ந்து ஏற்கனவே ஓய்ந்து இருந்தவரை மொத்தமாக புரட்டி போட்டிருந்ததில், அம்மாவின் பேச்சுக்கு மட்டுமல்ல யாரிடமுமே பேசும் எண்ணமோ, அதற்கான தெம்போ இல்லாததால், அமைதியாகவே படுத்து இருப்பார்.
“அந்த கழுதை… என்னை பார்த்து என்ன பேச்சு பேசிட்டா தெரியுமா? கவிதா முன்ன என் மானமே போயிடுச்சு. நீ குணமாகி வா நானா… அவளை வெட்டி போடு.” ஆங்காரமாக பேச ஆரம்பித்தவர், பேத்தியை குற்றவாளி ஆக்கி விட துடித்து, வித்யாவின் ஆவேச பேச்சை அப்படியே வார்த்தை தப்பாமல் மகனிடம் ஒப்பித்தார்.
“அவளுக்கு துளிர் விட்டு போச்சு. எல்லாம் அந்த சண்டாளி கொடுக்கற செல்லம். உன்னை எப்போடா பார்ப்பேன்னு ஆகிடுச்சு நானா…” இப்படி அதையும் இதையும் ருக்மிணி உளற,...
ஏற்கனவே மரண பயத்தில் சில விஷயங்களை மனதில் அலசிக் கொண்டிருந்த நாராயணனுக்கு பெற்றவளின் வாயிலாக செவியில் விழுந்த மகளின் அனல் பேச்சு, மூளையில் சேர்ந்து, கலங்கரை விளக்காக வெளிச்சம் தந்து சரியான வழியை காட்டியது.
‘ஜாதியின் பேரில் எத்தனை ஆட்டம் போட்டார்! வழியில் ஒரு முறை விபத்தை பார்த்த போது கூட, ‘மீட்டிங்குக்கு நேரமாகி விட்டது, முக்கிய டீல்…’ என்று நிற்காமல், உதவாமல் சென்றிருக்கிறார். பணக் கணக்கு பார்த்தாரே ஒழிய, அங்கே துடிப்பது ஒரு உயிர்! ‘யாருடைய மகனோ… யாருக்கு அப்பாவோ…’ என்றெல்லாம் அப்போது மனிதாபிமானத்தோடு நினைத்தது இல்லையே’ என்ற நிஜம் உரைக்க, தன்னை நினைத்தே வெட்கினார்.
அதுவரை மனதை நிறைத்திருந்த அழுக்குகள், காட்டாற்று வெள்ளமென அடித்து சென்று விட, முதல் முறையாக தெளிந்த உள்ளத்தோடு, அடுத்தவர்களின் தன்னலமில்லா உதவியை உணர்ந்து பாராட்டியது மட்டுமில்லாமல், கடவுளுக்கும், அவருக்கு உதவிய அந்த முகம் தெரியாதவர்களுக்கும் மானசீகமாக நன்றி உரைத்தவரிடம் வந்திருக்கும் எண்ண மாற்றத்தை மற்ற யாருமே உணரவில்லை.
உள்ளே சார்ட்டில் குறிக்க வந்த செவிலி, கண் மூடி படுத்திருந்த நாராயணன் உறங்கி விட்டதாக எண்ணி, “பெரியம்மா, அவர் தூங்கறார். இப்போ, பேசி தொந்தரவு செய்யாம வெளிய போய் உட்காருங்க.” ருக்குவை அங்கிருந்து வெளியேற்றி விட, கோபமாக ஏதோ முணுமுணுத்து கொண்டே போனவரை,
“வீட்டுக்கு கிளம்புங்க அத்தை…” என்று மதி கூறவும்,
ருக்கு மறுத்து பேச வாய் திறப்பதற்குள் மருத்துவர் ஒருவர், “மிஸர்ஸ் நாராயணன்” என்று மதியை அழைக்க…
“டிரைவர் காத்திருக்கார் கிளம்புங்க அத்தை…” என்று டாக்டரை பின் தொடர்ந்து விட்டார்.
******************************************************
“மேனேஜரை கொஞ்சம் வர சொல்லு மதி.”
“காலையில இருந்து ஜுரம், இன்னைக்கு ஃபிசியோ கூட பண்ண முடியாம கஷ்டப்பட்டீங்க. இப்போ எதுக்கு மேனேஜரை கூப்பிடறீங்க? பிசினெசை அப்பா, பார்த்துக்கறார். நீங்க கவலைப்படாம ரெஸ்ட் எடுங்க.”
“என்ன?” அதிர்ச்சியில் தன் படுக்கையை விட்டு எழ முயற்சித்தார் நானா.
கணவருக்கு பயந்து, “அது இல்லைங்க, உங்களுக்கு இப்படியா இருக்கவும், எனக்கும் வியாபார விஷயம் எதுவும் தெரியாது. மேனேஜர், ‘முக்கியமா ஏதோ கையெழுத்து போடணும்’னு சில ஃபைல்ஸ் நீட்டினப்ப, அப்பா தான், ‘நான் பார்த்துக்கறேன் மதி’ன்னு, இந்த நாலு வாரமா எல்லாத்தையும் கவனிச்சுக்கறார்.” மென்று முழுங்கி விஷயத்தை கூறி,
கணவரின் முகம் பார்த்தவருக்கு, அதில் இருந்து ஒன்றும் படிக்க முடியாமல், “நான் தம்பாவை வரச் சொல்லறேன், அவனுக்கு தெரியும்.”
பதில் தராமல் நாராயணன் கண்களை மூட, ‘அயர்ச்சியில் உறங்கி விட்டாரா? இல்லை கோபமா?’ கணவனையே பார்த்துக் கொண்டு மதி இருக்க,...
“தம்… உன் தம்பியை வரச் சொல்லு, முக்கியமா பேசணும்.” அவ்வளவு தான் என்பதாக கண்களை மீண்டும் மூடிக் கொண்டார். அப்போது செக்கப் செய்ய டாக்டர் வந்ததால், உடனே திவாவை அழைக்கவில்லை சுபா.
“இப்போ எப்படி இருக்கீங்க?” விசாரித்த மருத்துவர், நர்ஸ் தந்த சார்ட்டை பார்த்து விட்டு,...
“கொஞ்சம் போன் (எலும்பு) இன்ஃபெக்க்ஷன் ஆகியிருக்கு. ஆக்சிடென்ட் கேஸ்ல... கண்டாமிநேடட் வூன்ட் (contaminated wound) வேற, மெட்டல் ப்ளேட், பின்னும் இருக்கு. இதெல்லாம் எதிர்பார்த்தது தான். பயப்படாதீங்க… ஆன்டிபையாட்டிக் ஆரம்பிச்சுடலாம்.”
நர்சிடம் திரும்பி, “ஐ.வி. (ரத்த நாளம் மூலம் மருந்து செலுத்துதல்) ஸ்டார்ட் பண்ணிடுங்க.” மருந்தை எழுதித் தந்தவர், மேலும் சில நிமிடங்கள் நின்று மதியின் சந்தேகங்களுக்கு பொறுமையாக விளக்கம் தந்து விட்டு சென்றார்.
அதன் பின் நர்ஸ் வந்து மருந்தை செலுத்தி விட்டு செல்ல,...
“அவனை வரச் சொல்லிட்டியா?”
“இல்லைங்க… நீங்க டையர்டா…”
“ப்ச்…” அலுத்தவருக்கு, ‘தான் கஷ்டப்பட்டு உருவாக்கிய வியாபாரம் இந்த நான்கு வாரங்களில் என்னவாயிற்றோ?’ என்ற கவலை அதிகரிக்க, “சொன்னதை செய் மதி. முக்கியமா பேசணும்.” சிடுசிடுத்தார்.
“சரிங்க…” உடனே திவாகரை அழைத்தவர், “தம்பா… பிசியா இருக்கியா?”
“இல்ல, சொல்லுக்கா. மாமா எப்படி இருக்கார்? டாக்டர் வந்து பார்த்தாரா?”
“ம்ம்… நீ இங்க வர முடியுமா? அவர் ஏதோ பிசினெஸ் விஷயமா பேசணுமாம்.”
“சரிக்கா… மதியம் லஞ்ச் டைம்ல வரேன்.” என்ற திவா, அங்கே வருவதற்கு இரண்டு மணி போல ஆகி விட்டது.
வரும் போதே “என்ன ஆச்சுக்கா, மாமாவுக்கு டையரியான்னு, வெளிய நர்ஸ் சொன்னாங்க!” கவலையாக விசாரித்தவனிடம்,
காலையில் மருத்துவர் சொன்னதை சொல்லி, “அவங்க கொடுத்த மருந்து இவருக்கு ஒத்துக்கலை. ரெண்டு வாட்டி வயத்தை கலக்கிடுச்சு. ஏற்கனவே வீக்கான உடம்பு, ரொம்ப ஓஞ்சு போயிட்டார்.”
அவர்கள் பேச்சுக் குரலில் முழித்தவரை, அன்பாகவே திவா விசாரிக்க, வெறும் தலையசைப்பை தந்தார்.
“நீ வீட்டுக்கு போயிட்டு சாயங்காலம் வா மதிக்கா.”
உடல் ஓய்வுக்கு கெஞ்சினாலும், ‘தம்பியையும், கணவனையும் தனியே விடுவதா’ என்ற பயத்தை காண்பிக்காமல், “வேணாம் திவா… இவருக்கு இன்னைக்கு கொஞ்சம் முடியலை. நான் இங்கேயே இருக்கேன்.”
“நேத்து நைட்டும் நீ இங்க தான் இருந்த. போ… கொஞ்சம் ரெஸ்ட் எடு. அதான் நான் இருக்கேன்ல… மெல்ல வா க்கா.”
நானாவை கட்டிலில் இருந்து எழுப்ப, குளிக்க வைக்க, உடற்பயிற்சியின் போது ஆதரவாக பிடித்து உதவ, மதிக்கு துணையாக ஒரு ப்ரைவேட் நர்சையும் ஏற்பாடு செய்திருந்தான் திவா.
அவரின் “சார்…” என்ற அழைப்பில், ‘என்ன’ என்பதாக பார்த்த திவாகரிடம்,....
“மேடம் இன்னும் லஞ்ச் சாப்பிடலை.” அக்கறையாக தெரிவித்தவருக்கு நன்றி சொன்னவன்,...
“இன்னும் சாப்பிடாம என்ன பண்ணிட்டு இருந்த?” எழுந்து சென்று கூடையில் இருந்த சாப்பாட்டுக் கேரியரை திறந்தான். கொடுத்தனுப்பிய உணவு அப்படியே இருக்க…
“என்ன மதிக்கா? நீ இப்படி இருந்தா, உன்னையும் அட்மிட் பண்ண வேண்டியது தான். முதல்ல நீ கிளம்பு, நர்ஸ் இருக்காங்க. கொஞ்ச நேரத்துல விது வந்துடுவா. நாங்க மேனேஜ் பண்ணிக்கறோம்.” டிரைவரை அறைக்கு வர சொல்லி, கட்டாயப்படுத்தி அக்காவை அவரோடு வீட்டுக்கு அனுப்பி வைத்தான்.
முக்கிய பிசினெஸ் விவரங்கள் என்பதால், வெளி நபரான அந்த ப்ரைவேட் நர்சையும் ‘நான் கூப்பிடறப்ப வந்தா போதும்’ என்று வெளியே அனுப்பி விட்டு, ஃபேக்டரி விஷயங்களை நாராயணனோடு அலச ஆரம்பித்தான்.
நான்கு வார எக்ஸ்போர்ட் விவரங்கள், மூலப் பொருள் கொள்முதல் பட்டியல், பணப் பட்டுவாடா… நிலுவையில் இருந்து கைக்கு வந்து விட்ட பண வரத்து, புதிதாக கையெப்பமாக இருந்த ஆர்டர்களின் நிலவரம், வந்த ஒன்றிரெண்டு கம்ப்ளெயிண்ட், வெளிநாட்டு ஆர்டர் குறித்த நேரத்தில் சென்று சேர்ந்தது முதலியன குறித்து லேப்டாப்பில் இருந்த விவரங்கள் கொண்டும், பதில் தெரியாதவற்றுக்கு ஆஃபீசில் இருந்த மேனேஜரை அழைத்து விசாரித்தும், நானாவின் அனைத்துக் கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் தந்தான் திவாகர்.
பேசிக் கொண்டிருந்த நானாவின் முகம் திடீரென்று மாற, “என்ன ஆச்சு?” இதமாக கேட்டவனிடம்,...
பதில் தர சங்கடப்பட்டு, “அந்த நர்சை கூப்பிடு…” என்றவர், ஒரு மாதிரி நெளிய, நர்சுக்கு அழைப்பு விடுத்தான்.
“டீ குடிக்க போயிட்டாராம், இப்போ வந்துடுவார். என்ன பண்ணுது? இங்க உள்ள நர்ஸை வர சொல்லறேன்?”
“சீக்கிரம்… வேற யாரையும் வர சொல்லு!” அவருக்கு என்ன உபாதை என புரியாமல் அவசரத்துக்கு அழைக்கும் மணியை இரு முறை அழுத்தினான்.
சமாளிக்க முயன்று, தோற்றவராக… இனி முடியாது என்ற நிலையில் தயக்கமாக, “திவா… என… எனக்கு… பெட்… பெட்பான் வேணுமே. ரொம்ப அவசரம்” என்றவர் முகத்தில், ‘ப்ளீஸ்’ என்ற கெஞ்சுதலோடு, அவஸ்தையும் கண் கூடாக தெரிய, சற்றும் தயங்காமல், டக்கென தன் சட்டை ச்லீவை மடக்கி விட்டு, டையை கழட்டி எறிந்தவன், பெட்பானை தானே கொண்டு வந்தான்.
கேட்டு விட்டாரே ஒழிய, கூச்சம் தடுத்ததில், நாராயணன் தயங்க, “நான் தானே மாமா! பரவாயில்ல.” திவா கனிவாய் சொல்லவும் அவன் பெட்பான் வைக்க ஒத்துழைப்பு கொடுத்தார். அவருக்கு தனிமை கொடுத்து நகர்ந்தவனை,...
“தி...தி… வா… வா...” மீண்டும் திக்கி அழைத்தவரின், குழறிய பேச்சு புரியாமல் “என்ன செய்யுது?” என்று அவன் குனிய,...
அவன் முகத்தை தவிர்ப்பதற்காக, வலியையும் பொருட்படுத்தாது முயன்று நகர்ந்த நாராயணன், திடீரென்று வாந்தி எடுத்ததில், திவாவின் சட்டை மற்றும் கைகளின் மேல் அது பட்டு தெறித்தது.
“சாரி…” என்றவர் கண்களில் இப்போது கண்ணீர் துளிர்த்து விட்டது.
“பரவாயில்ல மாமா…” எனும் போது உள்ளே நுழைந்த நர்ஸ், அவசரமாக திவாவை நோக்கி வர, “முதல்ல மாமாவை பாருங்க… நான் ஓகே…” என்று அவர் நீட்டிய டிஷ்யூவால் துடைத்துக் கொண்டு ரெஸ்ட்ரூம் சென்றான்.
திவா ரெஸ்ட் ரூமில் இருந்து வருவதற்குள் மறுபடியும் ஒரு முறை நானா வாயில் எடுத்து இருக்க, மேலும் ஒரு நர்ஸ் வந்து உதவி செய்ய, அவரை ஒரு வழியாக சுத்தப்படுத்தி, வேறு உடை, மற்றும் படுக்கை விரிப்புகளை மாற்றி, மீண்டும் படுக்கையில் கிடத்தினர்.
இதற்குள் வேறொரு நர்ஸ், தியேட்டரில் உடுத்தும் ஸ்க்ரப் உடையை கொண்டு வந்து திவா அணிவதற்கு கொடுத்தார். அந்த சட்டைக்கு மாறியவன், வீட்டுக்கு அழைத்து டிரைவரிடம் தனக்கு மாற்று உடுப்பு கொடுத்து விடும் படி சுபாம்மாவிடம் தெரிவித்து, அவர் கேள்விகளுக்கு பதிலளித்து வைத்தான்.
அசதியில் கண் மூடி படுத்திருந்த நாராயணனின் கண்களில், கண்ணீர் அவர் கட்டுப்பாட்டையும் மீறி வடிந்தது. ஒரு மனைவியாக மதி அவருக்கு பணிவிடை செய்வது பெரிய விஷயமில்லை. ஆனால், சிறிதும் தயங்காமல் திவா உதவியது, உள்ளுக்குள் ஏதோ ஒன்று சுக்கு நூறாக உடைந்தது.
அவர் குற்றவுணர்ச்சியை கூட்டுவது போல, அவர் கண்ணீரை கண்ட திவா, “ரொம்ப வலிக்குதா மாமா?” நெற்றியை தொட்டு ஜுரம் எப்படி இருக்கிறது என்று பார்த்து, “டாக்டரை கூப்பிடட்டா?” கனிவாக கேட்டான்.
வேண்டாம் என்று நானா தலையசைக்க, “அக்காவை, இல்ல உங்க அம்மாவை வர சொல்லட்டா? எதாவது குடிக்கறீங்களா?” பதட்டமும் அக்கறையுமாக அவன் கேட்டதில், மேலும் குறுகியவர்... “எதுவும் வேணாம் திவா… தேங்க்ஸ்…” என்று விட்டு, அவனை சந்திக்கும் தைரியம் இல்லாமல் கண்களை இறுக மூடிக் கொண்டார்.
நாராயணனின் மேல், வார்த்தைகளில் வடிக்க முடியாத கோபம் திவாவுக்கும் உண்டு தான். ஆனால், அதை காண்பிக்கும் நேரமும், இடமும் இதுவல்ல என்ற பக்குவம் இருப்பவன். எல்லாவற்றையும் தாண்டி அவன் அக்காவின் கணவர் அவர் என்ற பாசமும், விதுவின் அப்பா என்கிற அக்கறையுமே அவனின் செயல்களுக்கு காரணம்.
நர்சை துணைக்கு இருக்கும் படி சொன்னவன், “நான் டாக்டரை பார்த்துட்டு வந்துடறேன். நீங்க ரெஸ்ட் எடுங்க.” என்று விட்டு அறையை விட்டு வெளியே வந்தான்.
காரிடாரில் அவன் நடக்க ஆரம்பிக்க, எதிர்பட்ட விது, அவன் உடையைக் கண்டு ஆச்சரியப்பட்டவள், “ஹே மாம்ஸ், இது என்ன புது அவதாரம்? எந்த கடையில் டாக்டர் டிகிரி வாங்குனீங்க?” கிண்டலாக அவனை மேலும் கீழும் பார்த்தாள்.
அவள் விளையாட்டை கண்டுக் கொள்ளாமல், “மாமாவுக்கு உடம்பு முடியலை. நீ அவர் கூட இரு. நான் டாக்டர்கிட்ட பேசிட்டு வரேன்.”
“என்ன ஆச்சு? நல்லாத் தானே இருந்தார். அம்மா, எங்க?” விதுவின் குரலில் பதட்டம் குடியேறியது.
சுருக்கமாக நடந்ததை சொன்னவனுக்கு, எல்லோரையும் தன் இஷ்டத்துக்கு அரட்டிக் கொண்டிருந்தவருக்கு, இன்று தன் சிறு தேவையை பூர்த்தி செய்ய கூட, அடுத்தவரின் தயவில் இருப்பதால் தான், மனம் சோர்ந்து இருக்கிறார் என்ற அவரின் நிலை புரிந்ததால்... பரிவும் கூடி, அவரின் மகளிடமே, நானாவுக்கு சிபாரிசாக பேசினான்.
இத்தனை நாட்களில் அவள் நடத்தையை வைத்தே ஏதோ கடமைக்கு செய்கிறாள் என்று அவனுக்குமே புரிந்து தான் இருந்தது. “கொஞ்சம் அப்செட்டா இருக்கார் போல. அவர்கிட்ட கொஞ்சமாவது இதமா பேசு தியா.” என்றவனை முறைத்து விட்டு விது நகர,...
“தியா ம்மா, யாருக்காகவும் வேணாம். அக்காவுக்காகடா… நீ இப்படி பீஃஹேவ் பண்றது பார்த்து, அக்கா ரொம்ப ஃபீல் பண்றாங்க. ப்ளீஸ்!”
கண்களில் லேசாக கண்ணீர் துளிர்த்து விட, “நீ ரொம்ப நல்ல பையன் மாம்ஸ். நான்லாம் உன்னளவுக்கு இல்லைப்பா, வெரி பேட் கேர்ள்! உன் அக்காவுக்கு பார்த்து தான், இத்தனையும் பல்லைக் கடிச்சுட்டு செய்யறேன். இல்லேன்னா அவர் இருக்கற திசை பக்கம் தலை வெச்சு கூட படுக்க மாட்டேன்.” விழுந்த வார்த்தைகளில் அத்தனை வெறுப்பு நிறைந்து இருந்தது.
“இத்தனை வருஷம் அவர், என்னை நடத்தின விதத்தை பத்தி நான் என்னைக்குமே வருத்தப்பட்டதில்ல. ஆனா, அன்னைக்கு நித்யா விஷயத்துல நடந்துக்கிட்ட முறை… ப்ச், என் மேல துளி நம்பிக்கை இல்லாம போச்சு இல்ல.”
“தியா… அதுக்கும் உனக்கும் சம்மந்தம் இல்லடா, எங்க மேல இருக்க…”
“அவருக்கு சப்போர்ட் செஞ்சு பேசாதீங்க மாம்ஸ்…” கண்களில் இருந்து உருண்ட கண்ணீரை துடைத்தவளை, தன்னோடு சேர்த்து அணைவாக பிடித்தவன், மெதுவே ஓர் ஓரமாக அவளை அழைத்து சென்றான்.
“அன்னைக்கு எத்தனை கஷ்டப்பட்டேன்னு உங்களுக்கு புரியாது. தப்பு செய்யாம, பெத்தவரே என்னை நம்பலைங்கற அதிர்ச்சி ஒரு பக்கம், இந்த அம்மாவும்... யாருன்னு தெரியாத உங்களோட என்னை அனுப்பிச்சது. திடீர்னு இதம் மாறி நீங்க காண்பிச்ச கோபம்… உங்க அனலான பேச்சு, அப்புறம் ஹாஸ்டல்ல, காலேஜ்ல எல்லாரும் தப்பா பேசினது! எத்தனை கேள்விகள்… போறவங்க வர்றவங்க எல்லாம் அட்வைஸ் செஞ்சாங்க தெரியுமா! எவ்வளவு அசிங்கம்… அவமானம் தப்பே பண்ணாம அனுபவிச்சேன்!”
அவள் மனவலிக்கு தானுமே ஒரு முக்கிய காரணம் அல்லவா! அவள் பக்கத்து உணர்வுகளை புரிந்தவனாக, அவள் வயதுக்கு, நடந்ததை அவள் கையாண்ட விதத்தை எண்ணி பெருமைப்பட்டவனாக, “என் தியா கெட்ட பொண்ணுன்னாலும், ரொம்ப மெட்சூர்டான ஆளாச்சே. அவளுக்கு எப்போ, யாரை, எப்படி ஹாண்டில் பண்ணனும்னு நல்லா தெரியுமே!” பாராட்டு பத்திரம் வாசித்தான்.
“இல்லை…” என்பதாக தலையசைத்தவள், அவன் சட்டையின் மீதே தன் கண்ணீரை துடைத்து, ஆதரவுக்கு அவன் மீதே ஒண்டிக் கொண்டு நின்றாள்.
“உடல் அளவிலும், மனசளவிலும் அவர், இப்போ ரொம்ப பலகீனமா இருக்கார்ல தியாம்மா. இந்த சமயத்துல கோபத்தை இழுத்து பிடிக்காம, ‘நீங்க கெட்டவன்னாலும், உங்களை எப்படியோ போன்னு விட மாட்டேன்’னு, உன்னோட நடத்தையால நீ காட்டுவியாம். இதை விட வேற என்ன தண்டனை வேணும் அவருக்கு சொல்லு? நீ என் தியான்னா, நான் சொல்றதை கேட்பியாம்.” சிறு குழந்தையாக அந்த வளர்ந்த குமரியை பாவித்து பொறுமையாக எடுத்து கூறினான்.
திவா, தெரிந்து சொன்னானோ, இல்லை விதுவை சமாதானப்படுத்த வாயில் வந்ததை பேசினானோ! ஆனால், அப்படி ஒரு சிறு செய்கையால் தான், இதயம் என்ற ஒன்றே இல்லாத நாராயணனையே சற்று முன்பு குன்ற செய்து, இரக்கமில்லா அந்த மலையையும் அசைத்து விட்டான் என்று கூட உணராமல் இருந்தான்.
இது தான் திவா! அவன் அப்பா மீது அவனுக்கு இருக்கும் கண்மூடித்தனமான பாசத்தை புரிந்துக் கொள்வது மிகவும் கஷ்டம். சுபாவின் வளர்ப்போ, இல்லை பிரபாவின் வழிகாட்டுதலாலோ என்னமோ ஒன்று… அவனால், பெரியவர்களுக்கு தரும் மரியாதையில் என்றும் குறை வைக்க முடியாது.
மற்றவர்களிடம் எப்படியோ, பெரியவர்களிடம், கோபமாக இருந்தால் பதில் பேசாமல் போவானே ஒழிய, ஒரு போதும் ஆத்திரத்தில் அவமரியாதையாக கத்த மாட்டான். அவன் இயல்பு அது. இடையே கொஞ்சம் அம்மாவிடமும், தாத்தாவிடமும் முரண்டவனின் செய்கை அவன் இயல்புக்கு மாறிய நடத்தை என்பதால் தான் அவர்கள் எதையும் பெரிதுபடுத்தவில்லை.
“மாமா கூட இரு. அவரை பார்த்துக்கோ,” விதுவை அனுப்பியவன், டாக்டரிடம் சென்று பேசி விட்டு வந்தான்.
****************************
அடுத்து வந்த பத்து நாட்களும் சிறு ஏற்ற இறக்கங்களுடன் சென்ற நானாவின் ஹாஸ்பிடல் வாசம், ஒரு வழியாக முடிவுக்கு வர, பொள்ளாச்சி வீட்டுக்கு வந்து சேர்ந்தார். ‘அங்கே செல்லவே மாட்டேன்’ என மறுத்த விதுவை பேசியே கரைத்தான் திவா.
சுபாவின் முந்தைய அதிரடி பேச்சுக்கு ஏற்கனவே சரியான விளைவு கிட்டி இருந்தது. ஆம்… இருவர் மனதிலும் ஒரு மாற்றம் அவர்கள் அறியாமலேயே வந்திருந்தது. அதன் பலனாக மேற்கொண்டு எந்த விவாதங்களும் அவர்களிடையே எழவில்லை. தினமும் கைபேசியில் இருவருமே இயல்பாக பேசினர். ஆதியோடு செல்ல சண்டைகளும், சுபாவிடம் தொலைபேசியில் கொஞ்சல்களும், விதுவுக்கு எப்போதும் போல தொடர்ந்தது.
பொள்ளாச்சியில்…
ஹாஸ்பிடலில் தான் அமைதியாக இருந்தார் என்றால், வீட்டுக்கு வந்து சில நாட்கள் ஆகியும் கணவர் சாந்த சொருபியாக இருப்பதை கண்ட மதிக்கு, நம்பவே முடியவில்லை.
“மூன்… சாந்த்!” ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தவரை உலுக்கினாள் விது.
‘ஹான்…’ பேந்த முழித்தவரிடம்... “என்னம்மா, கண்ணை திறந்துட்டே தூங்கறீங்களா?”
“இல்ல விது… என்னடா?”
“நீங்க வேணா கொஞ்சம் தூங்கி எழும்புங்கம்மா. ஆதி வந்தப்புறம், அவனுக்கு டிஃபன் கொடுத்து, நான் ஹோம்வர்க் பண்ண வெக்கறேன்.” பொறுப்பான மகளாக பேசியவளை பார்த்து பெருமிதப்பட்டவர்,...
“சாரி, நீ கூப்பிட்டதை கவனிக்கலை விது. என்ன விஷயம், சொல்லுடா.”
“நான் புதன்கிழமையில் இருந்து வேலைக்கு போகலாம்னு இருக்கேன். போகட்டா? நீ தனியா சமாளிப்பியா மூன்?”
மகளின் பேச்சை கவனியாமல், தனக்கு முளைத்திருக்கும் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளும் ஆர்வத்தில், “அப்பாவை கவனிச்சியா விது?” மொட்டையான கேள்வியை எழுப்பினார்.
அம்மாவின் மனதை எதுவோ குடைவது புரிந்தவளாக, “என்ன கவனிக்கணும் மூன்?” அவளும் கேள்வியாகவே பதிலளித்தாள்.
“இல்ல… எனக்கொரு சந்தேகம், இந்த ரத்தம் கொடுத்தாங்கல்ல! அதுல மாறிட்டாரோ!”
“அம்மா…” அலறியவள், “புரியற மாதிரி பேசுங்க,” எரிச்சலாக கத்தினாள்.
“இல்ல விது. அப்பாவுக்கு இப்போ அத்தனையா கோபமே வரதில்ல. உடம்பு வலி, அப்புறம் வீட்லயே இருக்கறதால சலிப்பாகி கொஞ்சம் எரிஞ்சு விழறார் தான், மத்த படி இது உங்க அப்பாவான்னே எனக்கு சந்தேகமா இருக்கு!”
இது என்னடா இவங்க இப்படி பேசறாங்க என்ற ரியாக்க்ஷனை கொடுத்து, “சொல்லுங்க… சொல்லுங்க…” அம்மாவை ஊக்கினாள்.
“ஒரு வேளை அடிப்பட்டதுல, உடம்புல இருந்த கெட்ட ரத்தம் எல்லாம் வெளிய போயிடுச்சோ? இப்போ புது ரத்தம் ஓடுறதால வந்த மாற்றமா இது?”
‘ஹாங்… அப்படியும் இருக்குமோ?’ சில நிமிடங்கள் யோசனையில் ஆழ்ந்த விதுவும், ‘ச்சேச்சே… இந்த அம்மா நம்மையும் சேர்த்து குழப்பறாங்க.’ நினைத்தவளாக,...
அம்மாவின் முகத்தை தன் புறம் திருப்பியவள், “வரிக்குதிரை தன் வரிகளை என்னைக்கும் மாத்திக்கறதில்ல! இதெல்லாம் உங்க மனப்ராந்தி… போங்கம்மா.”
“சிறுத்தை தானே புள்ளிகளை மாத்தாதுன்னு சொல்லுவாங்க. நீ என்ன புதுசா சொல்லுற?”
“ஹுக்கும்… ரொம்ப அவசியம் இப்போ! முக்கியமானதுல கோட்டை விட்டுட்டு, இதுல எல்லாம் விவரமா இருங்க. எத்தனை நாள் தான் அதே மாதிரி சொல்லுறது? அதான் மாத்தி சொன்னேன். ஸ்வீட்டிகிட்ட பேசப் போறேன்… பை…”
அறைக்குள் செல்லும் மகளை பார்த்து, “ஹ்ம்ம்… அதென்னவோ சரி தான். இந்த சின்னவளுக்கு இருக்க தெளிவு, நமக்கு என்னைக்கு தான் வருமோ!” அலுத்தவராக வேலைகளை செய்ய ஆரம்பித்தார்.
அந்த வாரம், ஒரு நல்ல நாள் பார்த்து பிரபாவின் தலைமையில் மொத்த உறவும், விதுவை பெண் கேட்க, ஒரு படையாக சீர்வரிசைகளோடு திடீரென்று மதியின் வீட்டுக்கு சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி வந்தனர்.
அவர்களைக் கண்டு ருக்கு தையா தக்க என்று குதித்தார். அம்மாவை தனியே அழைத்து சென்ற நானா, “என்னை வக்கத்தவன்னு நினைக்கறீங்களா?”
“ஐயோ என்ன வார்த்தை சொல்லிட்ட நானா?”
“அப்படி தான் ம்மா, ஊர்ல பேசிக்கறானுங்க. பொண்ணை முறையா கட்டிக் கொடுக்கலைன்னு அசிங்கப்படுத்தறாங்க. முன்ன எப்படியோ, இனியும் என்னால அப்படி ஒரு சொல்லை தாங்க முடியாது. அந்த பயலுக்கே கட்டி வெச்சுடுவோம்.” அம்மாவிடம் எப்படி சொன்னால் காரியம் ஆகும் என்று தெரிந்தே நாராயணன் அப்படி பேசினார். மற்றும் படி புதிதாக பிறந்த ஞானம் இன்னும் அவர் தலையை சுற்றி பிரகாசமாக வட்டமிட்டுக் கொண்டு தான் இருந்தது.
மகனுக்கு ஒரு அவமானம் என்றால் பொறுக்கமட்டாத ருக்குவும் அந்த குழியில் விழுந்தார். ‘எப்படியோ போகட்டும்…’ என்று மகன் சொல்லுக்கு கட்டுப்பட்டு, ஒதுங்கிக் கொண்டார். அவர் வாய் மட்டும் விடாமல் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
‘அப்பாவை அவர்கள் ஏதேனும் அவமரியாதையாக பேசிடுவரோ,’ என டென்ஷனாக அமர்ந்திருந்தான் திவா.
“வித்யாலக்ஷ்மியை கல்யாணம் செஞ்சு கொடுக்க எங்களுக்கு சம்மதம்.” முத்தை நாராயணன் உதிர்க்க, கணவன் அத்தனை சுலபத்தில் ஒப்புக் கொண்டதை மதியால் நம்பவே முடியவில்லை. அனைவருமே நிம்மதி பெருமூச்சை விட்டனர்.
சத்யா தாத்தா கேட்டுக் கொண்டதற்கு இணங்க, மற்ற கல்யாண ஏற்பாடுகள் பற்றி நாராயணனிடம் பேசும் பொறுப்பை நந்துவின் அப்பா எடுத்துக் கொண்டார். அனைவரும் பரம சந்தோஷமாக பொள்ளாச்சியில் இருந்து கிளம்பினர்.
திருமணத்திற்கு நல்ல நாள் பார்த்துக் கொண்டிருந்த போது, “சுபி… சுபி…” அம்மாவை விடாமல் நச்சரித்துக் கொண்டிருந்தான் திவா.
“கல்யாணத்துக்கு முன்ன ரிசெப்ஷன் வெக்க முடியாது. நான் சொன்னது சொன்னது தான்.” மகனின் கோரிக்கையை சுபா மறுக்க,...
“அப்போ, ஒரு நாலு நாள் கழிச்சு வைங்க சுபி. ப்ளீஸ் சுபி… இல்ல… எனக்கு ரிசெப்ஷனே வேணாம்.”
அப்போது அங்கே வந்த பிரபா அவர்களின் சம்பாஷணையை கேட்டு விட்டார். என்னவென்று விசாரித்தவரிடம், மகனின் கோரிக்கையை முன் வைத்தார் சுபா.
“அவ்வளோ தானே… நாலு நாள் கழிச்சே ரிசெப்ஷன் வெச்சுடலாம்.”
“அதுக்கில்லைங்க, வீணா ரெண்டு செலவு… காசை கரியாக்குவானேன்.”
“இருக்கட்டும் சுபா, ரொம்ப வருஷம் கழிச்சு வந்திருக்க முத விசேஷம். திவா, ஆசைப் படியே எல்லாம் செய்வோம். ஓகேவா கண்ணா…” மகனின் கன்னம் தட்டியவரை, அணைத்தவன்… “தேங்க்ஸ் ப்பா…” என்று விட்டு,... “பை லவ் பர்ட்ஸ்… நான் நைட் வர லேட் ஆகும்…” சந்தோஷமாக விசில் அடித்துக் கொண்டு செல்லும் மகனை பார்த்து மகிழ்ந்தனர் பெற்றவர்கள்.
அங்கே விவேக்கின் பண்ணையில் இளையவர்கள் அனைவரும் ஒன்று கூடி இருந்தனர்.
“டூ பேட் அண்ணி, உங்க மொத்த குடும்பத்துக்கும் நீங்க ஒத்த பொண்ணுன்னு சொல்லி, என் சின்ன ஹார்ட்ல கல்லை தூக்கி போட்டுடீங்களே.” சந்து பாவம் போல ராதியிடம் சொல்ல,...
“விட்றா… விட்றா… டி.எஸ்.பி. கல்யாணத்துல சைட் அடிக்கறது தான் நமக்கு மெயின் வேலையே. அங்க பார்த்துக்கலாம்.” ஆறுதல் சொன்னான் விஜி.
இவர்கள் பேச்சை கேட்ட விது, “இந்த பேட் பாய்ஸ் கூட சேராதீங்கன்னு சொன்னா, என் பேச்சை கேட்கறீங்களா நீங்க?” விவேக்கை பார்த்து குறை பட,
“யாரு… நாங்க பேட்…” விவேக்கின் முகத்தை அப்படியும், இப்படியும் திருப்பி, “இவன் குட்!” என்ற சந்துவின் கேள்விக்கு,...
“ம்ம்… அந்த பால் வடியும் முகத்தை பார்த்தா தெரியலை!” விதுவின் பேச்சில் விவேக்குக்கு புரையேற, மற்ற இருவரும் காண்டானார்கள்.
“ஆல் அவர் டைம்ஸ் மச்சி. ஒரு ஃபிகரை தேத்த வழியில்லாத நாம கெட்டவங்க. அந்த ஷ்ரவந்தியை பார்கறதுக்குன்னே, மால்ல புதுசா பேருக்கு ஒரு கடையை போட்டுட்டு, வியாபாரத்தை கவனிக்கறேன்னு, கடலை வறுக்கறான். இந்த குட்டிசாத்தானும், இவனை நல்லவன்னு வேதம் ஓதுது.” விஜய் புலம்ப,...
“போதும் ப்ரோ… ரொம்ப தீயுது. உங்களுக்கும் காலம் வரும்.” விவேக்கின் பேச்சில் டென்ஷனான சந்து,...
“டேய்… வேணாம்… அம்மா, அண்ணி இருக்காங்கன்னு பார்க்க மாட்டேன்…”
“ரொம்ப சூடாகிடுச்சோ, கூல் பண்ணிக்க இளநி குடிக்கறீங்களா? ஆர்கானிக் இளநி ப்ரோ!”
“உன்னை…” மரங்களை சுற்றி அவர்கள் ஓட, “ஷப்பா… மூணு குரங்குல ஒண்ணு பிச்சிகுச்சுன்னு சந்தோஷப்பட்டேன். விவேக் வந்து சேர்ந்து, இவங்க பேக் டு ஃபுல் ஹவுஸ். இவனுங்க மொக்கையை தாங்க முடியலையே சாமி” திவா அலுக்க, அவன் கூற்றில், நித்யாவின் நினைவு வர,...
“இப்போவாவது சொல்லுங்க, நித்யா எப்படி இருக்கா?”
“எல்லாம் நல்லா இருக்காங்க.”
“எங்க இருக்காங்க? உங்க ஃபிரெண்ட் வீட்ல இன்னுமா அவங்களை ஏத்துக்கலை?”
“அதெல்லாம் கிட்டத்தட்ட பாண்டியன் அங்கிளை கரைச்சுட்டேன். பார்க்கலாம்… எல்லாம் என் ப்ளான் படி போனா, நம்ம கல்யாணத்துக்கு வருவாங்க.”
“வாவ், அப்படியா! எப்படி மாம்ஸ்?” சந்தோஷத்தில் துள்ளியவளை சுற்றி விவேக் ஓட, “அவனை பிடி திவா…” விஜய் மூச்சு வாங்க கத்தினான்.
“நோ ப்ரோ…” அலறிய விவேக், “என்னை காப்பாத்து பிரின்செஸ்” என்றதில் கடுப்பான திவா, வேகமாக எட்டி விவேக்கை பிடித்தான்.
“தேங்க்ஸ் ப்ரோ, ஒரு வாரமா சரியா எக்சர்சைஸ் பண்ணலை. உங்க புண்ணியத்துல இன்னைக்கு ஓடியோடி கணக்கு சரியா போச்சு.” என்றவனை கொலைவெறியாக மூவரும் நோக்க,...
“உன்னை எப்படிடா வீட்ல சமாளிக்கறாங்க?” சந்து அலுக்க…
“மூணு பேரும் கொஞ்ச நேரம் சும்மா இருங்க. நீங்க சொல்லுங்க… நித்தி எங்க இருக்கா?”
“உன் ஃபிரெண்ட் குடியும் குடித்தனமுமா சௌக்கியமா இருக்கா. இப்போ ஜுனியர் வர போற சந்தோஷத்துல, மொக்கையை பிடிக்கவே முடியலை.” விஜய் வெளியிட்ட தகவலில் குதூகலித்த விதுவின் முகம் சட்டென வாடி, “ப்ச்… அந்த நித்தி எருமை குடும்பம் தான் பாவம்…” என்று கலங்கி விடவும்,
“ஹே விது, உன் மாம்சை என்னென்னு நினைச்ச? யாரும் சொல்லாமலேயே நித்யா சிஸ் குடும்பத்தை இத்தனை மாசமா பாதுகாப்பா பார்த்துக்கிட்டு, அவங்களுக்கானதை சத்தமில்லாம செஞ்சுக்கிட்டிருக்கான் எங்க ஃப்ரெண்ட். அப்படியே இன்னொரு பக்கம், மோகன் அம்மாகிட்ட அதை இதை பேசி, அவங்களை எமோஷனலா வளைச்சு போட்டு, இப்போ தான் இறங்கி வராங்க. லவ் பிடிக்காதுன்னு சொல்லிட்டு… லவ் அண்ட் லவ் ஒன்லின்னு காதலுக்கு கொடி பிடிச்சு சுத்திட்டு இருக்கான் எங்க டி.எஸ்.பி.”
நண்பனின் பேச்சில், திவாவுக்கு லேசாக வெட்கம் எட்டி பார்க்க, அவனை ஓட்டி தள்ளி ஒரு வழியாக்கினர்.
**********************************
அடுத்து வந்த நாட்களில், வார நாட்களில் விவேக்கின் பண்ணையில் வேலை செய்து கொண்டும், வாரக்கடைசியில் இங்கே அங்கே என்று கோவை, மற்றும் பொள்ளாச்சியில் மாற்றி மாற்றி தங்கி, கல்யாணத்துக்கு வேண்டிய உடை, நகைகளை தேர்வு செய்வதில் விதுவின் நேரம் பறந்தது.
ஒவ்வொரு வாரமும் இளையவர்கள் அனைவரும் ஒன்றாக சந்தித்தனர். அன்று மாலை சந்துவின் வீட்டில் கூடி இருந்த போது, மோகனும் நித்யாவும் வர… சட்டென இடமே கொண்டாட்டமாகி விட்டது.
நித்யா, மேடிட்ட வயிற்றோடு நெருங்கி வர, கோபமாக முகம் திருப்பி நகர போன வித்யாவின் கரத்தை பற்றி நகராமல் நிறுத்தி வைத்தான் திவா.
“விடுங்க மாம்ஸ்…”
“தியா… நாம ஒரே ஊர்ல இருந்தாலும் சந்திக்கற வாய்ப்பே இல்லாம இருந்தோம். மோகன், நித்யா மூலமா நாம பார்க்கணும், பிரிஞ்சு போன சொந்தம் ஒண்ணு கூடணும்னு இருந்திருக்கு. ப்ளீஸ்… பிள்ளை உண்டாகியிருக்க பொண்ணு மனசை கஷ்டப்படுத்தாதே…” சுற்றிலும் எல்லோரும் இருக்க, யாரை பற்றியும் கண்டுகொள்ளாமல், விதுவின் கரம் பற்றி, மென்மையாக தன்மையாக கெஞ்சலாக பேசியவனை நண்பர் குழாம் ‘நம்ம டி.எஸ்.பியா?’ என விழி விரித்து வாய் பிளந்து பார்த்து நின்றனர்.
“சாரி டீ… விது,” நித்யாவும் நா தழுதழுக்க கெஞ்சலாக கேட்க, மனைவியின் கசங்கிய பொறுக்காத மோகனோ, நித்து பட்டு… என அவளின் தோள் பற்றிட, கணவனின் நெஞ்சில் சாய்ந்தாள்.
இக்காட்சிகளை இரு அப்பிராணி ஜீவன்களான சந்துவும், விஜியும் பேவென பார்த்து முழிக்க, “உங்களுக்கும் காலம் வரும் ப்ரோஸ்” என நம் விவேக் ஆறுதலாக இருவர் தோளையும் தட்ட, கொலை காண்டானார்கள் நண்பர்கள்.
இதற்குள் விது சமன்பட்டு விட, “கங்கிராட்ஸ் நித்தி” என வாழ்த்தியவள், தோழியிடம் நலன் விசாரித்தவாறு நகர, பெண்கள் இருவரும் சற்று தொலைவு போனதும்,
“டேய்… எங்க கூடவே தானே சுத்திட்டு இருந்தீங்க? எப்போ, எப்படிடா இப்படி லவ்வர் பாயா மாறினீங்க?” சந்து துவங்க,
“மாப்பி… கடைசில நீயும் நானும் தான்டா காலி பெருங்காய டப்பாவா ஒத்தையா நிக்கறோம்” என்றிட…
“அச்சோ சோ சேட் ப்ரோஸ்…” விவேக் சோகம் போல சொல்ல,
“டேய்…” மற்ற நால்வரும் குரல் எழுப்பினர்.
“அடுத்து உங்க கல்யாணம் தான், எங்க மெயின் ப்ராஜக்ட்” என்ற மோகனுக்கு, விவேக்கை அறிமுகம் செய்து வைக்க… அதன் பின் அங்கே ஒரே கேலியும் மகிழ்ச்சி ஆர்ப்பரிப்பு மட்டுமே.
******************************************
இரண்டு மாதங்கள் கழித்து, பொள்ளாச்சி வீட்டில் சிறிய அளவில் நெருங்கிய உறவினர் மட்டும் பங்கு கொள்ள நிச்சயம் வைத்தனர்.
நிச்சயத்தன்று, அனைவரும் ஒன்று கூடி இருக்க… நாராயணன் மட்டும் சபையில் இல்லை. ‘எங்க போயிட்டார் இவர்?’ கணவரை தேடி அறைக்குள் வந்த மதியின் காதில் ‘ரத்தம்’ என்ற வார்த்தை விழ, என்னவோ ஏதோவென பதறி, கணவரின் தோளை பற்றினார்.
“சரி, அப்புறம் பேசுவோம்.” கைபேசியை அணைத்து விட்டு, “முக்கியமான கால், அதான்… போலாம் வா,...”
“யாருக்கு என்னங்க? ரத்தம்னு ஏதோ சொல்லிட்டு இருந்தீங்க?”
“அது ஒண்ணுமில்ல.” மனைவியின் முகத்தில் கலவரம் குடியேறியதைக் கண்டு, “எல்லாம் நல்ல விஷயம் தான் மதி. கல்யாணத்துக்கு என்னென்னவோ செலவு பண்றோம். நம்ம பிள்ளைங்க பேருல அடுத்தவங்களுக்கு உதவுற மாதிரி எதாவது செய்யனும்னு தோணுச்சு. அதான், ஒரு இரத்த தான முகாம் நடத்த, ஏற்பாடு பண்ணி இருக்கேன்.”
கணவனின் கூற்றில், முற்றிலும் மதி அதிர்ந்து விட்டார். ‘என்னாச்சு இவருக்கு?’ கணவரை நம்பாமல் ஏறிட்டார். நாராயணனோ, தன் அம்மாவை நிச்சய இடத்தில் நடுநாயகமாக அமர வைத்துக் கொண்டிருந்தார்.
‘இவராவது அடுத்தவருக்கு உதவுவதாவது? இவரிடம் ஏதோ மாற்றம் வந்திருக்கிறது. சரி, எல்லாம் நல்லதுக்கே’ கடவுளுக்கு நன்றியை சொல்லி, வந்திருந்தவர்களை கவனிக்க ஆரம்பித்தார் சந்திரமதி.
தன் அம்மா விஷயத்தில் இன்னும் அவர் அதே பழைய நானா தான். ஆனாலும் முன்பு போல் முழுதும் அம்மாவின் இஷ்டத்துக்கே ஆடாமல், கொஞ்சம் சொந்த புத்தியையும் உபயோகிக்க ஆரம்பித்து இருந்தார்.
அடுத்த நாள், புது பண்ணை வீட்டில்… இயற்கை எழில் கொஞ்சும் பின்னணியில் கல்யாண நலுங்கை சிறப்பாக நடத்தி முடித்தனர். அன்றிரவு, பண்ணை வீட்டின் பின் தோட்டத்தில், விதுவின் வருகைக்கு ஆவலாக காத்திருந்தான் திவா. விடிந்தால் அவர்களுக்கு கல்யாணம். மனம் சிறகில்லாமல் பறந்தது.
சிணுங்களாக “எதுக்கு வர சொன்னீங்க மாம்ஸ். சீக்கிரம் சொல்லுங்க. நான் போய் தூங்கணும்.” அலங்காரம் ஏதும் இல்லாவிட்டாலும், சந்தோஷம் தந்த மெருகில் ஜொலித்தவளை தன்னோடு அணைத்தவனை, தள்ள முயன்று தோற்றவள்,
“மாதுரி அக்கா, சீக்கிரம் வர சொன்னாங்க. ப்ளீஸ் விடுங்க. காலையில சீக்கிரம் முழிக்கணும்.” மெல்லிய குரலில் விது கிறக்கமாக சொல்ல,...
“ஹே தியா, நாளைக்கு நமக்கு கல்யாணம். தியா வெட்ஸ் திவா… டி.டி” சிலாகித்தவனிடம்,...
“ஆமா மாம்ஸ், அதென்ன தியா? நானும் கேக்கணும்னு நினைச்சு மறந்து மறந்து போறேன். நான் சின்னு இல்லையா?”
“எனக்கு இனி நீ தியா தான். எங்க எல்லார் வாழ்க்கையிலும் ஒளி ஏற்றி வெச்ச தியா (விளக்கு) நீ தான். நீ வந்ததுக்கபுறம் தான், எல்லாமே சரி ஆச்சு. சோ யூ ஆர் மை லைட்… மை லவ்… மை லைஃப்.”
“நீங்க இப்படி எல்லாம் பேச மாட்டீங்களே, எங்க மாம்ஸ் இந்த டையலாக்லாம் புடிச்சீங்க?” அவளின் நக்கலில்...
“மனுஷன் ஃபீல் பண்ணிஉருகினா, கிண்டலா பண்ற… வரவர உனக்கு வாய் நீளம் ஜாஸ்தி ஆகுது. ஆர்கானிக் பால் குடிச்சு கொழுப்பும் கூடி போச்சு. இரு, இனி எல்லாத்தையும் குறைச்சுடறேன்.”
“ஹ ஹா ஹா… கனவுல கூட உங்களால அதெல்லாம் முடியாது.”
“அதையும் பார்க்கலாம்.” விளையாட்டாக “ஹே தியா, நாம ஓடி போலாமா? மூணு தடியனுங்க இருக்காங்க. எனக்காக உயிரையும் கொடுப்பாங்க. என்ன சொல்ற?” கிசுகிசுப்பாக திவா கேட்டவுடன்,...
சட்டென்று அவனை தள்ளி விட்டவள், “உங்களுக்கு என்னை கல்யாணம் செஞ்சுக்கற எண்ணம் இருக்கா இல்லையா?” காளி அவதாரம் எடுத்தாள்.
அப்போது, சமயம் தெரியாமல் அந்த மூன்று தடியன்களும் அங்கே ஆஜராகி அவளிடம் வாங்கிக் கட்டிக் கொண்டனர்.
“ஹே… அவனுங்க வந்துட்டாங்க. மெதுவா பேசு தியா. நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்.” அவசரமாக திவா சமாதானப்படுத்த முயல,...
மூவரையும் பார்த்து விட்ட விது... “முறட்டு, முட்டா, மொக்க பீஸான… இவங்களை நம்பி ஓடி போகலாமான்னு கேட்ட உங்களை என்ன செய்யலாம்? எம். பி. கியூப்!” அவள் பேச்சை கேட்டு வெகுண்ட மோகன்,...
“அசிங்கப்படுத்திட்டாடா மச்சி… நம்மளை அசிங்கப்படுத்திட்டா. எட்றா காரை, தூக்குடா பொண்ணை!” என்று குரல் கொடுக்க…
“அடச்சீ… விடிஞ்சா டி.எஸ்.பி., தாலி கட்ட போறான். இப்போ சும்மா வெட்டி சீன் போட்டுட்டு. எங்க கல்யாணத்தை நடத்துங்கடான்னா, அதுக்கு ஒரு வழியை சொல்லாம...” விஜய் எரிச்சலாக சொல்ல,...
கலகலவென்று சிரித்த விது... “வாட் டு டூ ப்ரே, உங்க சேர்க்கை சரியில்ல. உங்களை கழட்டி விட்டுட்டு இவங்க மட்டும் செட்டில் ஆகிட்டாங்க. வாட் அ பிட்டி…” கிண்டல் செய்ய, அப்போது அந்தப் பக்கமாக ஒரு சிறுமியோடு ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டே ஆதி வர,...
“இந்த பொடி பயலை பாருடா, ராத்திரி பத்து மணிக்கு ஜோடி போட்டுட்டு, ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக்கிட்டு திரியறான். டேய் தம்பி… இங்க வா…” சந்து அழைக்க,...
“ஆமா பாப்பா யாரு?” அந்த சிறுமியை பார்த்து சிரித்த ஆதி, “மை கேர்ள் ஃபிரெண்ட் மாமா.” என்றவுடன் கொதித்து விட்டான் விஜய்.
“நீ போ பாப்பா…” அந்த சிறுமியை போகச் சொல்ல, உடன் நடக்கவிருந்த ஆதியை நிறுத்தி வைத்தவன்… “என்னடா தம்பி, என்ன நடக்குது?” என…
“விஜி ண்ணா… நோ… அவன் சின்ன பையன். விட்டுடுங்க...” அதட்டிய விது, “எல்லோருக்கும் குட் நைட்…” திவாவை பார்த்து சிரிப்பை உதிர்த்து விட்டு, ஆதியோடு நடக்க ஆரம்பித்தாள்.
“அவனா சின்னப் பய? இவளுக்கு எங்க ரெண்டு பேரை தவிர மொத்த உலகமும் நல்லவங்க.”
“சின்ன பையன்கிட்ட என்ன பேச்சு விஜி?”
“டேய் டி.எஸ்.பி, அந்த வார்த்தையை மட்டும் சொல்லாதே. அவன் என்னெல்லாம் கேக்கறான் தெரியுமா? என்னை பார்த்து, ஃபர்ஸ்ட் நைட்ல என்ன நடக்கும்னு கேட்டுட்டான்டா.”
“அதானே உன்னை பார்த்து ஏண்டா அந்தக் கேள்வியை கேட்டான்?” மோகன் நக்கலடிக்க,...
அவனை முறைத்தவன், “எனக்கு தெரியாதுடான்னா, ‘இவ்வளோ பிக் பாயா இருக்கீங்க, இது தெரியாதா’ன்னு அடுத்த கேள்வியை கேக்கறான். டேய் தம்பி, அதெல்லாம் கல்யாணம் ஆனா தான் தெரியும். எனக்கு தான் கல்யாணம் ஆகலைலன்னு சொன்னப்புறம், ‘ஆமா… உங்களுக்கு ஏன் இன்னும் கல்யாணம் ஆகலை’ன்னு என் நொந்த மனசை இன்னும் புண்ணாக்கி டார்ச்சர் பண்ணிட்டான். இந்த பொடியன் எல்லாம் டேமேஜ் பண்ணற அளவுக்கு, என் நிலைமை பப்பி ஷேமா இருக்கே.” அழுது விடுவது போல விஜய் விவரிக்க, மற்ற மூவரும் கொல்லென்று சிரித்தனர்.
இப்படி சிரிப்பும் கும்மாளமுமாக அந்த இரவு சடுதியில் கழிய, மறுநாள் அழகிய விடியலாக இருந்தது திவாகர் மற்றும் வித்யாவுக்கு.
விவேக்கின் பண்ணையை சுற்றிய இடத்தில் தான் திருமண மேடையை அமைத்து பலவிதமான வண்ண மலர்களால் அலங்கரித்து, இந்திரலோகமாக மாற்றி இருந்தனர்.
வாசலில் செண்டை மேளம் ஜோராக முழங்க… பூ பல்லக்கில் உடன்பிறவா அண்ணன்கள் மணமகள் வித்யாலக்ஷ்மியை சுமந்து வர, பிரபாவே டிரைவராக மாறி, திவாகரை ஒரு விண்டேஜ் காரில் ஊர்வலமாக அழைத்து வந்து இறக்கினார்.
இயற்கை எழில் நிறைந்த சூழலில் சுற்றமும், நட்பும் மனம் நிறைந்து, சந்தோஷமாக வாழ்த்த, தன் தியாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு, அவளின் சரி பாதியாக, பதியாகினான் திவாகர் சத்யா பிரபாகர்.
எல்லா திருமண சடங்குகளும் இனிதே முடிந்த பின்னர், இளையவர்களின் செல்ல விளையாட்டுக்களுடன், புகைப்படம் எடுக்கும் படலம் களை கட்டியது.
அப்போது ஷ்ரவந்தியின் அப்பா தன் தொண்டர் படையுடன் அங்கே வர, விவேக் அலார்ட் ஆறுமுகமாக நல்லப் பிள்ளையாக போஸ் கொடுத்தான்.
விவேக்கை அருகே வருமாறு சைகை செய்த பிரபாகர், அவன் தோளில் உரிமையாக கையை போட்டு, அவன் வருங்கால மாமனாரிடம், “விவேக், எனக்கு வளர்ப்பு மகன் போல! நம்ம ஷ்ரவந்திக்கு ரொம்ப பொருத்தமான மாப்பிள்ளை. இவங்க கல்யாணத்துக்கு நீங்க ஒத்துக்கணும்.” புகழாரம் சூட்டி, தன் வேண்டுதலை முன் வைத்தார்.
“நீங்க சொன்னப்புறம் மறுத்து சொல்வேனா பிரபா? வர முஹூர்த்தத்துல பண்ணிடலாம்.” எம்.பி. ஒத்து பாடியதில், ஆனானப்பட்ட விவேக்கே மயங்கி விழும் நிலைக்கு அதிர்ச்சியானான்.
இருக்காதா பின்னே! ‘இதற்கு முன் அவனை அத்தனை துச்சமாக நடத்தியவர், இன்று இப்படி பேசினால்?’ நம்ப முடியாமல் திகைத்து நின்றவன், சுதாரித்து பிரபாவை அணைத்து, “தேங்க்ஸ் அங்கிள்…” சந்தோஷ செய்தியை மற்றவர்களிடம் தெரிவிக்க ஓடினான்.
உணவு வேளையும் ஒருவரை மற்றவர் சீண்டி, கிண்டலடித்து என்று கலகலவென்று நேரம் விரைய, அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர்.
வீட்டில் ஆளுக்கொரு திசையில் உறவுக் கூட்டம் பேச்சும், பாட்டுமாக இருக்க, “சுபி…” என்று வந்து நின்ற மகனிடம், “சொல்லு கண்ணா” என்றார்.
“நீங்க வாங்க…” அம்மாவை தனியே அழைத்து சென்றவன்... “நானும், தியாவும் இப்போவே கிளம்பறோம்.”
“கிளம்பறீங்களா! எங்க திவா?”
“நாங்க குன்னூர் போக போறோம். அதுவும் இப்போவே…”
“என்ன கண்ணா சொல்றே? பாரு, எல்லாரும் இங்க இருக்காங்க. இப்போ எப்படி கிளம்புவே? நல்லா இருக்காது ராஜா.”
“எனக்கு அதெல்லாம் தெரியாது சுபி. இதுக்காக தான், நான் இன்னைக்கு சாயங்காலம் ரிசெப்ஷன் கூட வேணாம்னு சொன்னேன்.”
மகனின் பேச்சில் ஒரு நொடி வாயை பிளந்தவர், “தேறிட்ட திவா… ஓகே ஒகே, நீங்க கிளம்புங்க. நான் வேலுவையும், பார்வதியையும் கிளம்ப சொல்லறேன்.”
“நான் ஏற்கனவே அவங்களை அனுப்பிச்சுட்டேன் சுபி.” தலையை சொறிந்தவாறே, ஒரு அசட்டு சிரிப்பை திவா உதிர்க்க,...
“எப்போ இருந்து இந்த முன்னேற்றம் திவா? எங்க அம்மாவை பாரு?” மகனை கேலி செய்த சுபா, கணவன், மற்றும் மகளிடம் விஷயத்தை சொல்லி சிரிக்க,...
“அவங்களா தனியா எப்படிம்மா? அதெல்லாம் வேணாம்.” மதி மறுக்கவும்,
“அட என்ன மதி நீ வேற, அவன் என்ன சந்திர மண்டலத்துக்கா அழைச்சுட்டு போறான்! இங்க இருக்க குன்னூரு. என் பேரன் அதிசயமா, ஒரு உருப்படியான காரியம் பண்ணியிருக்கான். அவன் காட்டற வேகத்துக்கு அநேகமா என் பிறந்த நாளுக்கு ஒரு எள்ளு/கொள்ளு பேத்தியோ, இல்ல பேரனோ வந்துடுவான் போல.” சத்யா தாத்தா சிரிக்க, அவர்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப வந்த விது வெட்கத்தில் நெளிந்தாள்.
“வரோம் ம்மா… ஸ்வீட்… தாத்ஸ்” என்று சிரிப்பினூடே விடைப் பெற்ற மகளிடம் பேச வந்த மதியை தடுத்த சுபா, “அதெல்லாம் என் பேத்தி விவரமான பொண்ணு. சும்மா அவளை டென்ஷன் பண்ணாத மதி.”
புது மணமக்களை அனைவரும் வாசல் வரை வழி அனுப்ப வர, அவர்களுக்கு முன்பாக காரின் அருகே நின்றிருந்த நண்பர்களை பார்த்து “நீங்க எங்கடா வரீங்க?” திவா பல்லை கடிக்க,...
“பார்த்தியாடா இவன் பேசுறதை? பொண்டாட்டி வந்தவுடனே நம்மை கழட்டி விட்டுட்டான்.” விஜய் ஆரம்பிக்க,...
“அவன் தான் எப்போவோ மெல்ட்டாகி கிடக்கானே…” சந்து ஓத்தூத…
“போட்டேன்னா… ஒழுங்கு மரியாதையா வழியை விடுங்கடா. உங்களையும் கூட கூட்டிட்டு போனா, அப்புறம் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி கதை ஆகிடும். ஒரு நாலு நாளுக்கு நீங்கல்லாம் யாருன்னே எனக்கு தெரியாது.” நண்பர்களுக்கு மட்டும் கேட்கும் படி முணுமுணுத்தான்.
“அடப்பாவி…” இப்போது மீண்டும் சந்து ஆரம்பிக்க,...
“பை மச்சி, நைஸ் நோயிங் யூ.” என்று காரில் தன் காதல் மனைவியுடன் கிளம்பினான் திவா.
“மானமே போச்சு. ஏன் இப்படி செஞ்சீங்க? எல்லாரும் இருக்கும் போது இப்படியா பீஃஹேவ் பண்ணுவாங்க.”
“ம்ம்… மூச்… இனி நோ பேச்சு. இந்தா… எலுமிச்சை பழம்! படுத்து தூங்கி ரெஸ்ட் எடு, நைட் நமக்கு நிறைய வேலை இருக்கு. என்னை நம்பி தாத்தா பெரிய பொறுப்பை குடுத்து இருக்கார்.” கண் சிமிட்டிய கணவனின் பேச்சில் முகம் சிவந்தவள், அப்படியே கண்ணுறங்கினாள்.
முன்பு கோபத்தில் பந்தயத்தில் ஓட்டுவது போல காரை தாறுமாறாக ஓட்டியவன், இப்போதோ புது பொண்டாட்டிக்கு எந்த சிரமமும் ஏற்படாதவாறு அலுங்காமல் குலுங்காமல் வண்டியை பதமாய் செலுத்தினான்.
குன்னூர் வீடு வந்த திவா காரை பார்க் செய்து விட்டு, உறங்கும் வித்யாவை மெல்ல எழுப்பினான்.
கண் திறந்தவளுக்கு, முன்பு நடந்தவை படமாக விரிய, அப்படியே அமைதியாக அமர்ந்து இருந்தாள். அவள் மனநிலை புரிந்த திவா, தொந்தரவு செய்யாமல், காரில் இருந்து தங்கள் பெட்டிகளை இறக்கி வைக்க, வேலு அவற்றை உள்ளே எடுத்து சென்றார்.
“ஹே அராத்து… நீ மட்டும் நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்துட்டு, இன்னமும் ஜம்முன்னு அசையாம உட்கார்ந்து இருக்க. என்னடா, நம்ம மாமன் கார் ஓட்டி டையர்டா இருப்பாரே… இறங்கி, அவரை கவனிப்போம்னு அக்கறை இருக்கா உனக்கு?”
“அட… என்ன மாம்ஸ் அவ்ளோ தானா உங்க தம்! நான் என்னமோ, பூ போல என்னை உள்ள அலேக்கா தூக்கிட்டு போவீங்க நீங்கன்னு பார்த்தேன்.” நக்கலாக விது பேசியதில் அயர்ந்தவன்,...
“உனக்கு நக்கல் கூடி போச்சு. இருக்கு… எல்லாத்துக்கும் ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் இருக்கு. இப்போ மாமனுக்கு முடியாது. இறங்கு… வா… உள்ள போகலாம்.” அவன் பேச்சை கேட்டு விது இறங்க, அப்போது… சர்ரென்று அருகே இன்னொரு கார் வந்து நின்றது.
அதிலிருந்து விவேக், நந்து, மாதுரி, விஜய், சந்து, மோகன், நித்தி இறங்க, இப்போது திவா அழுது விடுவேன் என்பது போல விதுவை மலங்க பார்த்து முழித்தான்.
“மாம்ஸ், நீங்க சரி வர மாட்டீங்கன்னு நான் முன்னாடியே சொன்னேன். அது, சரியா போச்சு. ஃபிரெண்ட்ஸ தான் மாத்த முடியாது. அட்லீஸ்ட் ஹனிமூன் லொக்கேஷனையாவது மாத்தி இருக்கலாம்ல. இப்போ திருதிருன்னு முழிச்சு என்ன பிரயோஜனம்?”
“ஹே டி.எஸ்.பி., நாங்க பக்கத்து எஸ்டேட்டுக்கு வெக்கேஷன் வந்து இருக்கோம். தப்பித் தவறி எங்களை தொந்தரவு பண்ணிடாதேன்னு வார்ன் பண்ணிட்டு போக வந்தோம்.” ஒன்றாக கத்தியவர்கள், “ஹாப்பி மாரிட் லைஃப் மச்சான். டேக் கேர் விது… தங்கச்சி.” உரக்க கத்தி விட்டு, வந்த வேகத்தில் கிளம்பினர்.
“அவங்களை சொல்லி தப்பில்லை. பக்கத்து எஸ்டேட்டை வாங்கி போட்ட இந்த அப்பாவை சொல்லணும்.” புலம்பிய கணவனின் பேச்சில் கலகலவென்று சிரித்தவளின் அழகில் சொக்கி நின்றான் தியாவின் காதல் கள்வன்.
முதன் முதலில் விதுவை கண்டு மயங்கிய அதே வாடாமல்லி நிறத்தில், இலைப் பச்சை கரையிட்ட பட்டு புடவையில் தேவலோக சுந்தரியாக காட்சியளித்த, மனையாளின் தளிர் கரங்களை பற்றிய திவா, அவர்கள் முதல் முதல் சந்தித்த இல்லத்தில், இருவரும் ஒன்றாக கால் பதித்து, தங்கள் திருமண வாழ்க்கையின் முதல் அடிகளை வெற்றிகரமாக எடுத்து வைத்தனர்.
பல வருடங்களுக்கு முன்பு பிரபாகர் போட்ட மூன்று முடிச்சினால், ஒரு புது பந்தம் உருவானதென்றால், சந்திரமதியின் கழுத்தில் விழுந்த மூன்று முடிச்சு, அவர்களை பிணைத்திருந்த உறவென்னும் ஜீவ நாடியை நெரிக்கும் பாசக்கயிராக மாறியது. இன்று திவா, போட்ட முன்று முடிச்சு, பிரிந்த உறவுகளை, ஒன்றாக பிணைக்கும் பாச முடிச்சாக இறுகி இருக்கிறது. மனக் கசப்புகள் களைந்து பந்தமும், சொந்தமும் இந்த புது முடிச்சினால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தம்பதியரை வாழ்த்தி, நாம் விடை பெறுவோம்.
……………...முற்றும்…………….
A big Thank You to all the readers who have supported us throughout this journey. Thanks for the likes clicked and your comments.
Moondru mudichu is not a romantic story… It is a family drama. That is what we wanted this story to be. It may have disappointed some but it takes a lot of effort to churn romantic novels. ;) You gotta Believe us... And there is no epilogue. Do let us know if the conclusion has come out well… That’s a kind request.
Madhivadhani…..
Super story sis