top of page

மூன்று முடிச்சு 2

Updated: May 12

மூன்று முடிச்சு

முடிச்சு - 2


ஹாஸ்டல் கீழ் தளத்தில் வசிக்கும் தோழி வாணி “ஹே வித்ஸ், உன்னை பார்க்க அம்மா வந்துருக்காங்கடி,” கட்டிடம் அதிர குரல் கொடுத்ததில், ‘அம்மாவா!’ என்றெண்ணி வியந்த வித்யா, அறையில் போட்டது போட்ட படி, வேகமாக படியிறங்கி ஓடி வந்தாள்.


பார்வையாளர் அறையில் காத்திருந்த சந்திராவை கண்டதும் முகம் மலர “ஹாய் ம்மா,” என்றவள், அவருடன் வேறு யாரும் இல்லை என்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டாள்.


“ஹாய் விதும்மா,” என்றவாறே தன் கையில் இருந்த கவரை மகள் கைக்கு அவர் மாற்றி விட, உள்ளே இருந்து வீசிய மணமே அது உணவு என்று உணர்த்தியது.


“இங்க கோவையில ஒரு விசேஷத்துக்கு போற வழியில கொடுத்துட்டு போகலாம்னு உனக்காக ஸ்பெஷலா பிரியாணி பண்ணேன் செல்லம். அப்பா, காரில் இருக்கார் நான் கிளம்பறேன். ஃபிரெண்ட்ஸுக்கும் கொடுத்துட்டு நீயும் சாப்பிடு. ”


பேசிக் கொண்டே வேகமாக நடந்த அம்மாவுடன் கைக் கோர்த்தவளுக்கு, ஹாஸ்டல் வரை வந்த தந்தை, உள்ளே வந்து தன்னை பார்க்காதது சுருக்கென மனதை தைத்தாலும், அதை ஓரங்கட்டி வைத்து விட்டு, “என்ன அதிசயம் மூன், எங்க உன் பாடிகார்டைக் காணோம்?” என்றவளின் பேச்சு புரியாமல் சந்திரா விழித்தார்.


“அதான் என்ற அப்பனை பெத்த ஆத்தா!” விதுவின் கிண்டலில் கோபமுற்றவர்,


“வித்யா, பெரியவங்களை அப்படி சொல்லாதே,” என்று கண்டிக்கும் போதே, சந்திராவைப் பார்த்த வித்யாவின் தோழி “ஹை ஆன்ட்டி,” என்றாள்.


“நல்லாருக்கியா சுதா? அவசரமா கிளம்பறேன், இன்னொரு நாள் பேசறேன் கண்ணு,” என்று கூறி, நடையை எட்டி போட்டார்.


அம்மாவிடம் சலசலத்துக் கொண்டே கார் நிறுத்துமிடத்துக்கு வந்த போது, காரில் பாட்டியும் இருப்பதைக் கண்ட விதுவின் முகம் சுருங்கியது. ‘அதானே பார்த்தேன்! என் அப்பிராணி அம்மாவாவது, அப்பா கூட தனியா எங்கேயாவது வெளியே போறதாவது? அதெல்லாம் எட்டாவது அதிசயமாச்சே! நந்தி இல்லாம எப்படி சிவ பூஜை நடக்கும்?’ என்று மனதில் நினைத்துக் கொண்டிருந்தவளின் காதில்,


“இது என்ன கன்றாவி கோலம்டீ?” என்று கார் ஜன்னலை இறக்கி கத்திய பாட்டியின் கோபக் குரல் கேட்கவும், அதிர்ந்து, தன்னை அவசரமாக குனிந்து பார்த்தாள்.


ஆபாசமாக இல்லையென்றாலும், அவள் உடல் வடிவை எடுப்பாக எடுத்துக் காட்டும் விதமாக ஒரு டைட்டான கேப்ரி லெக்கிங்கும், சற்று இறுக்கமான டீ ஷர்ட்டும் அணிந்திருந்த விது மிரண்டு விட்டாள்.


வண்டியில் இருந்து வேகமாக இறங்கிய ருக்கு பாட்டி, “ஏய் சந்திரா, இது தான் உன் பொண்ணு போடுற உடுப்பா?” என்று கத்திய மாமியாரை பார்த்து, ‘அச்சோ…’ என்று சந்திராவும் தலையில் அடித்துக் கொண்டார்.


அபூர்வமாக அவர் வேண்டுகோளை ஏற்று, மகளுக்கு வீட்டு உணவை கொடுக்க கணவர் ஒப்புக் கொண்டது முதல், சந்திரா தான் சந்தோஷ வானில் மிதந்துக் கொண்டிருக்கிறாரே! கூடவே மகளிடம் பேசும் சுவாரசியத்தில், மாமியார் உடன் வந்திருப்பதை மறந்து விட்டிருந்தார்.


சுடிதார், அல்லது லூசான மேல் சட்டையுடன் தரையில் புரளும் லாங் ஸ்கர்ட், கூடவே கண்டிப்பாக ஒரு துப்பட்டா அணிய வேண்டும் என்பது ருக்கு பாட்டியின் கண்டிப்பான சட்ட திட்டம். மேற்கத்திய உடைகளுக்கு அறவே அனுமதி இல்லை. இதை அப்படியே வீட்டில் கடைபிடிக்கும் வித்யா, பெண்கள் ஹாஸ்டல் தானே என்று சற்று சுதந்திரமாக உடை அணிந்து இருக்க, அம்மாவின் திடீர் வரவால், பெண்ணவளுக்கு மற்றது மறந்து விட்டது.


“பொட்டபுள்ளைக்கு புத்தி இருக்க வேணாம்? இப்படி தான் நாலு பேர் நடமாடுற இடத்துல, அவுத்து போட்டுட்டு திரிவியா?” என்று அவர் நாராசமாக கேட்டதை வாகன நிறுத்துமிடத்தில் இருந்த ஒரு சிலரும் கேட்டு விட்டனர்.


அவமானத்தில் முகம் கன்றி, “இல்ல பாட்டி…” என்று மறுத்து சொல்ல வித்யா ஆரம்பிக்கும் போதே, அவள் பேச்சை தொடர விடாது,


“இதுக்கு தான் நானா, இவளுக்கு இந்த ஹாஸ்டல் படிப்பெல்லாம் வேணாம்னேன். என் பேச்சைக் கேட்டியா?” என்று மகன் புறம் ருக்கு பாட்டி திரும்பினார்.


பெரியவளின் உரத்த பேச்சால், வண்டியை நிறுத்தி விட்டு நகராது அங்கேயே நின்ற அந்த சிலர், தங்களை சுவாரசியமாக வேடிக்கை பார்ப்பதை உணர்ந்த நாராயணன், “ம்மா… இதெல்லாம் நம்ம வீட்ல வெச்சு பாடம் எடுங்க. இங்க ரோட்ல நின்னு கத்தாதீங்க,” சற்றே தாழ்ந்த குரலில் அன்னையை அடக்கியவர், மனைவியை தீப்பார்வை பார்க்க தவறவில்லை.


“ஆமா, உன் பொண்ணு அசிங்கமா உடுத்திட்டு, என்னை பாரு… என் அழகைப் பாருன்னு ரோட்ல நடமாடுறது பெருசில்ல! நான் கத்துறது தான் தப்பு.” வெடுக்கென கழுத்தை நொடித்த பாட்டி, காரில் ஏறினார்.


கார் ‘விருட்டென’ கிளம்பிட, “அய்யோடா! புத்திக் கெட்ட வித்யா, இப்படி கிழவிக்கிட்ட நீயா வகையா மாட்டுவியா? நல்ல நாளுலேயே தோளை உரிச்சு, தோரணம் கட்டும். இப்போ, நீயே அதுக்கு டான்ஸ் ஆட மியூசிக் போட்டுட்டியே செல்லம்! பாவம் அம்மா, சந்தோஷமா வந்தாங்க. இன்னைக்கு என்னால நல்லா திட்டு வாங்க போறாங்க.” தன்னை தானே நொந்துக் கொண்டவள்,


“ருக்கு ருக்கு ருக்கு…

அரே பாட்டி ருக்கு…

ஓ மை பேட் லக்கு…

ஹவ் டூ ஐ டக்கு…


ராகமாக புலம்பிக் கொண்டே தன் அறையை நோக்கி மெதுவே நடந்தாள்.


“என்ன வித்ஸ், பாட்டு பலமா இருக்கு! உங்க பாட்டி வேற ஒரே கொஞ்சல்ஸ் போல,” கீழ் அறை வாணி பல்லு முப்பத்திரெண்டும் தெரியும் படி நக்கலாக சிரிக்க,


ஏற்கனவே கடுப்பாக இருந்தவள், “ம்ம்… அடுத்த வாரம் உங்க வீட்ல இருந்து உன்னை பார்க்க வரப்ப, நீ காலேஜ் கட்டடிச்சுட்டு அடிக்கற கூத்தையும், பண்ற சேட்டையையும் நானும் பத்த வெக்கறேன்,” மிதப்பாக சவடால் குரலில் மொழிய,


“நோ… விது செல்லம், நாமெல்லாம் ஒன் கூட்டு பேர்ட்ஸ். நோ டெல்லிங் செல்ல குட்டி,” கெஞ்ச துவங்கியவளிடம்,


“அது… அந்த பயம் இருக்கட்டும்” என்றவள், “அம்மா பிரியாணி கொண்டு வந்துருக்காங்க. சூடா கொட்டிக்கலாம் வா டீ,” என்று உண்ண அழைப்பு விடுக்கவும் மறக்கவில்லை.


“குக்கிராமத்துல இருந்து வந்தவளும், போன வருஷம் வரை ஜீன்ஸ்னா என்னன்னே தெரியாதவ எல்லாம் ஸ்பெகட்டி டாப்பும், டேங்க் டாப்பும், ஷார்ட்ஸும் போட்டுட்டு காத்து வாங்கிட்டு சுதந்திரமா இந்த ஹாஸ்டலுக்குள்ள பூனை நடை நடக்கறாங்க. இதே டவுன்ல பொறந்து, வளர்ந்த நான், முட்டிக்கு கீழ ஒரு கேப்ரி போட்டது குத்தமா? உன் குத்தமா, என் குத்தமா யாரை நான் சொல்ல!”


சோக கீதம் வாசித்து புலம்பி கொண்டே அறைக்குள் நுழைந்தவள், தன் தோழியும் ரூம்மேட்டுமான நித்யா உம்மென்று இருப்பதை பார்த்து, “என்ன ஆச்சு நித்து? நேத்துல இருந்து உன் முகமே சரியில்லை!” தற்காலிகமாக தன் பிரச்சனையை விடுத்து, தோழியின் வாடிய முகம் காண பொறுக்காது அக்கறையாக கேட்டாள்.


‘இவகிட்ட சொல்லுவோமா?’ என்று கண பொழுது யோசித்தவள், ‘வேணாம்,’ என்று உடனே முடிவு செய்து, “ஒண்ணுமில்ல வித்ஸ், நான் முகம் கழுவிட்டு வரேன்,” என்று எழுந்து சென்றாள்.


அதற்குள் அறைக்கு படை எடுத்து விட்ட தோழிகள் அரட்டை கச்சேரியை ஆரம்பித்தனர். உணவை பகிர்ந்து உண்ட பின்னர், சுதா என்ற தோழி, “என் அக்கா கல்யாணத்துக்கு லவ்டேல் போறதுக்கு இப்போவே ப்ளான் பண்ணலாம்டீ. கல்யாணம் ஞாயிற்றுக்கிழமைல வருது. நாம வெள்ளி மதியமே காலேஜ் கட்டடிச்சுட்டு, கிளம்பிடலாம். யாரெல்லாம் அக்கா கல்யாணத்துக்கு வரீங்கன்னு சொன்னா, நாம அதுக்கு தகுந்த மாதிரி வேன் அரேஞ்ஜ் பண்ணலாம்.”


விதுவை தவிர மற்ற அனைவருமே சந்தோஷமாக “நாங்கள் வருகிறோம்,” என்று உடனே தெரிவித்தனர்.


“வீட்ல விட மாட்டாங்க…” என்று விது கூறியதை ஏற்காது,


“அந்தக் கதை எல்லாம் இங்க செல்லாது. நீயும் கண்டிப்பா வர்ற, லவ்டேல்லை அதிரடிக்கறோம்.”


‘ஹுக்கும்… இப்போ நடந்ததுக்கே கெழவி என்னை பேயோட்டும். இதுல நான் எங்க அதிரடிக்க!’ மனதுக்குள் நொந்து கொண்ட விதுவின் நிலை புரியாது,


“வாடி விது… ஜாலியா இருக்கும்ல!” ஆளாளுக்கு உலுக்கினர்.


“அவ்ளோ தூரம் எல்லாம் தனியா அனுப்ப மாட்டாங்கடீ…”


“அடியேய்… உன்னை அண்டார்டிகாவுக்கு வர சொல்லல. இந்தா இருக்கு லவ்டேல், நாங்க எல்லாம் வாரோம். அப்புறம், என்ன தனியா போறேன்னு கதை?” விடாமல் வாணி வழக்கடிக்க,...


“ச்சே… சான்ஸ் மிஸ் பண்ணிட்டோமே! தெரிஞ்சிருந்தா இன்னைக்கே ஆன்ட்டிகிட்ட பேசியிருக்கலாம்,” என்றவர்களை பார்த்து பெரிய கும்பிடாக அபிநயித்த வித்யா,


“உங்களுக்கு ஏண்டீ இந்தக் கொலை வெறி? நானே, இப்போ நடந்த சம்பவத்துக்கு அப்புறம், இந்த வாரம் கிழவியை எப்படி சமாளிக்கன்னு பயந்துட்டு இருக்கேன்.”


“இதெல்லாம் உனக்கு அல்வா மேட்டர்டீ. நீ சமாளிக்கலைன்னா, அப்புறம் வேற யாரால முடியும்? சும்மா சாட்டு சொல்லாம வர வழியை பாரு,” என்று அவள் பிரச்சனையை தோழிகள் ஊதி தள்ளினர்.


‘ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது விதுன்னு உனக்கு சொன்னப்ப கேட்டியா? இப்போ பாரு நீ ஜாமாக போறது தெரியாம, இவளுங்க பேசுறாளுங்க,’ என்று மனதில் நொந்துக் கொண்டிருந்தவளிடம்,...


“விது வாடி, நீயும் இருந்தா தான் கல்யாணம் களைக் கட்டும்.” அவளிடம் விடாமல் கெஞ்சி, கொஞ்சி, மிரட்டி விட்டு, மற்ற தோழிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.


“ஏய் நித்து, என்ன மேட்டர்னு சொல்லி தொலையேன். நேத்து உங்க வீட்ல இருந்து போன் வந்ததுல இருந்து உன் முகமே சரியில்ல. ஏதாவது பிரச்சனைன்னா என்கிட்டே சொல்லு. நான் என்னால முடிஞ்சா ஹெல்ப் பண்றேன்,” என்றவளின் கரிசனத்தில் கண்ணை கரிக்க,...


“தேங்க்ஸ் விது… நேரம் வரும் போது உன்கிட்ட நானே சொல்றேன்,” என்ற தோழியின் தோளை ஆறுதலாக அழுத்திக் கொடுத்த வித்யா,


‘கிழவியை எப்படி டாக்கில் பண்ண?’ என்று மூளையை உருட்டி, எப்படியும் திட்டு கன்ஃபர்ம். எதுக்கு இப்போவே மண்டை காயற? நீ சமாளிப்பே…’ என்று தனக்கு தானே சமாதானமானாள்.


விது இத்தனை யோசிப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இன்றைய பேச்சை இன்றோடு விட்டால், பரவாயில்லை. ஆனால், ருக்கு பாட்டி… ஒரு விஷயத்தில் ஆரம்பித்து, மறந்து போன பழைய கதையை சாமர்த்தியமாக புது பிரச்சனையோடு கோர்த்து, மொத்தமாக எல்லாவற்றையும் திசை திருப்பி விடும் ஆள். அதனால் எழுந்த கலக்கம் தான்.


********************


கோவையில் பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில்,...


திவாகரின் கசின் ப்ரதர் ஆனந்தின் (stag do) ஸ்டேக் டூ பார்ட்டியில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் களைக்கட்ட, ஒரே கும்மாளமாக இருந்தது.


திவாவை விட ஒரு வயது மூத்தவனான ஆனந்தின் நண்பர்கள், திவாவுக்கும் நண்பர்களே. அதனால், அவர்களோடு சேர்ந்து திவாவும் இசைக்கேற்ப நடனமாடிக் கொண்டிருந்தான்.


“என்ஜாய் மச்சான்ஸ்… ஒருத்தனும் நிதானத்துல இருக்க கூடாது...” என்ற மாப்பிள்ளை ஆனந்தை, ஓஹோ என்று கோஷம் எழுப்பி சூழ்ந்த அவன் நண்பர்கள், மிகவும் ஜாலியாக ஒருவரையொருவர் கலாய்த்து கொண்டிருந்தனர்.


“மச்சி, நீ குடும்பஸ்தன் ஆனப்புறமும் எங்களை எல்லாம் விட்டு பிரிஞ்சுட மாட்டியே?” ஒருவன் சோகம் போல் கேட்டதற்கு,


“டேய் மூழ்காத ஷிப்பே நம்ம ஃபிரெண்ட்ஷிப் தான்டா…” புது மாப்பிள்ளை ஆனந்த், போதை தலைக்கேற, இவ்வாறு உரைக்க, மொத்த கூட்டமும் தள்ளாட்டமும் கட்டை குரலுமாக அப்பாடலை பாடி ஆடினார்கள்.


இது ஒரு பக்கமெனில் இன்னும் நிதானம் இழக்காத மற்றவர்கள், தங்களை முற்றிலும் போதையில் தொலைக்கும் நோக்கோடு மேலும் குடிக்க ஆரம்பித்தனர்.


அவர்கள் பேச்சிலும், ஆட்டத்திலும் கலந்துக் கொண்டாலும், வெறும் ஆரஞ்சு பழச்சாறு பருகிக் கொண்டு அமைதியாக இருந்தான் திவா. டீட்டோடலரான இவனை நம்பி தான் இவர்கள் மது அருந்துவதே. ஏனென்றால் இவன் தான் எப்போதும் அவர்களுக்கு நம்பிக்கையான பார்த்தசாரதி.


ஒரு கட்டத்துக்கு மேல், “நந்து போதும்டா! இன்னொரு பெக் வேணாம், வா எழுந்திரு,” திவா புது மாப்பிள்ளையை தடுக்க, பதிலுக்கு மறுத்தவனின் பேச்சோ, குழறலாக, புரியாத வகையில் இருந்தது.


தன் மற்ற கசின்களுக்கு கண் ஜாடைக் காட்டிய திவா, “பாரை க்ளோஸ் பண்ண சொல்லுங்க பிரவீன் அண்ணா. நீ இவங்களை ரூமுக்கு அழைச்சுட்டு போ ஷரத்,” என்று ஒவ்வொருவருக்கும் ஒரு பணியை கொடுத்தான்.


“வா நந்து,” என்று தன் கசினை தோளோடு சாய்த்து, போதையில் தள்ளாடியவனை கெட்டியாக பிடித்து, அவன் அறையில் கொண்டு வந்து சேர்பித்தவன், “ச்ஷ்… ஷப்பா… எருமை! இப்படியாடா குடிப்பே? சொல்றதை கேக்காம லிமிட் தாண்டி சரக்கடிக்க வேண்டியது. நாளைக்கு ஹேங் ஓவர்னு புலம்பினியோ, அப்போ வைச்சிக்குறேன் கச்சேரி.” கட்டிலில் நிதானமில்லாமல் புரண்டவனை திட்டி விட்டு, மற்றொரு கசினான விகாஷிடம், “பார்த்துக்கோடா…” என்றான்.


ஆனந்தின் நண்பர்கள் சிலர் அன்றிரவு அதே ஹோட்டலில் தான் தங்கவிருந்தனர். அவர்களை மற்ற கசின்களின் உதவியோடு பத்திரமாக அவரவர் அறையில் சேர்ப்பித்து விட்டு, அவர்கள் பொறுப்பை தன் உறவினர்களிடம் விட்டு, வீடு திரும்ப விரும்பிய இன்னும் சிலரை, அவரவர் வீட்டில் இறக்கி விட்டு, திவா வீடு வந்து சேர நடு இரவாகி விட்டது.

உறங்காமல் அவனுக்காக காத்திருந்த சுபாம்மாவை பார்த்து, “நான் தான் வர நேரமாகும்னு சொன்னேன்ல, எதுக்கு இப்படி தூக்கத்தை கெடுத்துக்கிட்டு உக்கார்ந்து இருக்கீங்க?” என்ற மகனை ஆர்வம் மேலிட குறுகுறுவென ஆராய்ச்சியாக பார்த்தார்.


அவர் பார்வையின் பொருள் புரிந்தவன், “உங்களுக்கு வேலையே இல்லையாம்மா?”


“நம்ம நந்துவோட பார்ட்டியாச்சே! அதான்…” என்ற அம்மாவை திவா முறைக்க,


“சரியான சாமியார்டா நீ! உன்னை எல்லாம்… வயசு பையன் போலவா நடந்துக்கற?”


“சுபிம்மா… ஆனாலும், நீங்க பேசறது கொஞ்சமில்ல, ரொம்பவே அசிங்கம். பெத்த பிள்ளை, குடியை கையால தொடலைன்னு பெருமைப்படாம இப்படி, ‘இன்னைக்கு கூடவா குடிக்கல’ன்னு கேட்கற ஒரே அம்மா நீங்களா தான் இருப்பீங்க!”


தன் சுருக் பேச்சிலிருந்த நியாயம் அவரின் நெஞ்சை சுட்டதில், சட்டென முகம் வாடியவரின் கையை பற்றி, “சுபிம்மா… எங்கப்பா செய்யாத எதையும் நான் என்னைக்கும் செய்ய மாட்டேன்.” என்று திவா அழுத்தமாக உரைக்கவும், மகனின் பேச்சில் பெருமிதம் கொண்ட சுபாவுக்கோ, அதே சமயம் ‘ஐயோ கடவுளே!” என்று ஆயாசமாகவும் இருந்தது.


“ஒரு முறை டேஸ்ட் பண்ணிட்டு, ‘எனக்கு அந்த நாத்தம் பிடிக்கலை. அதனால நான் குடிக்கலை ம்மா’ன்னு சொன்னாக் கூட, நான் பொறுத்துப்பேன் திவா. ஆனா, உன் அப்பா குடிக்க மாட்டார்னு, நீயும் இப்படி இருக்கறது!! ‘களவும் கற்று மற…’ எல்லா விஷயத்திலேயும் அப்பாவுக்கு இது பிடிக்கும், பிடிக்காதுங்கறதை மட்டும் பார்க்கறதை விட்டுட்டு, உனக்கு பிடிக்குமா இல்லையான்னு, நீயே அனுபவிச்சு தெரிஞ்சுக்கோ. எதிர்காலத்துல, ‘ச்சே… ஒரு முறையாவது இதை நாம செஞ்சு பார்த்து இருக்கணுமோன்னு காலம் கடந்து தோணும் படி, உன் வாழ்க்கையில் எதுவும் இருக்க கூடாது திவா.”


அம்மாவின் கூற்று புரிந்தாலும், அந்நேரத்தில் அவரோடு மேலும் ஒரு வாக்குவாதம் செய்ய விரும்பாமல், அவர் பேச்சைக் கேளாதவன் போல், “குட்நைட் ம்மா… போய் படுங்க…” வாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க பார்த்தான்.


“நீயும் எல்லா விஷயத்துலயும் அப்பாவை கொண்டு இருக்கணும்னு இல்லை திவா,” என்று இரு பொருள் பட மீண்டும் சற்று சலிப்பும் எரிச்சலுமாக வலியுறுத்த முயன்றார்.


“என் பிள்ளை என்னை போல இருக்கறதுல என்ன தப்பை கண்டுட்ட சுபா?” பின்னால் இருந்து திடீரென குரல் கேட்கவும், கணவனை கண்டு திகைத்த சுபா, சுதாரித்தார்.


“அவனுக்குன்னு ஒரு தனித்தன்மை வேணாமா? எல்லாத்துலயும், உங்களையே பிடிச்சு தொங்கிட்டு இருந்தா நல்லாவா இருக்கு?” என்று சுருதி இறங்கிய குரலில் சமாளிப்பாக தன் நிலைப்பாட்டுக்கு ஒரு விளக்கம் வைத்தார்.


“ஏன் இல்லாம சுபா? அவனுக்கு பிடிச்சதை தான் படிச்சான். குடும்ப தொழிலை விட, அவனா ஆரம்பிச்சதுல தான் அக்கறை காமிக்கறான். நான் நாப்பது வயசுல சாதிச்சதை என் பிள்ளை இப்போவே அசால்டா செய்யறான். அது அவனோட தனி உழைப்பும், திறமையும் தானே?”


மறுக்க முடியுமா கணவரின் கூற்றை? ஆமென்று தலையசைத்த சுபாவிடம், “நீயே சொல்லு, நானா அவனை குடிக்க வேணான்னேன்?” பிரபா கேள்வியாக பார்த்தார்.


இல்லை என்று தலையசைத்த சுபாவுக்கு, மகனின் பதினாறாவது பிறந்த நாள் தினம் தான் அப்போது கண் முன் படமாக விரிந்தது.


“நான் ஆல்கஹால் குடிக்கறது இல்லை திவா. சிகரெட்… யக்... சுத்தமா பிடிக்கவே பிடிக்காது. ஆனா, ஒரு முறை ட்ரை செஞ்சு பார்த்தேன். நாத்தம் தாங்கலை, அப்படியே குமட்டிடுச்சு.”


“உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே! கேள்விப்பட்டு இருக்க தானே கண்ணா? நம்ம மனசையும், உடம்பையும், மூளையையும் நம்ம கட்டுப்பாட்டில் எப்போவும் வெச்சுருக்கணும். இந்த மாதிரி, பழக்க வழக்கம் உடம்புக்கு கெடுதி தான் தரும். அப்படியே உனக்கு ஆசையா இருந்தா, நீ இதெல்லாம் பழகலாம். ஆனா, எதுவும் லிமிட் தாண்டக் கூடாது திவா.”


“இதுக்கெல்லாம் நாம தான் பாஸா இருக்கணும். நமக்கு மது அடிமையா இருக்கணுமே ஒழிய, நாம மதுவுக்கோ, இல்ல மத்த விஷயத்துக்கோ அடிமையா இருக்க கூடாது.” தோளுக்கு மேல் வளர்ந்து விட்ட மகனிடம், சிறு சொற்பொழிவை ஆற்றினார் பிரபாகர்.


அதைக் கேட்டுக் கொண்டிருந்த சுபாவும், சத்யா தாத்தாவும் “ஞே…” என்று முழித்தனர்.


‘நான் அப்பாவை மிஞ்சியவன்.’ என்பதை நிருபிக்கும் வண்ணம், “நீங்க ட்ரை செஞ்சு, உங்களுக்கு பிடிக்கலைன்னா, எனக்கும் கண்டிப்பா பிடிக்காதுப்பா. நான் விளையாட்டுக்கு கூட ட்ரை பண்ண மாட்டேன் ப்பா.” நொடி கூட யோசிக்காமல், தன் அப்பாவுக்கு சிங்கி மட்டும் அடிக்கவில்லை நம் ஹீரோ… இது நாள் வரை அவன் சொன்ன சொல்லில் இருந்து தவறியதும் இல்லை.


பழைய நினைவில் சிரிப்பு வர, “முடியல சாமி… உங்க ரெண்டு பேரையும் பார்த்தா, எனக்கு அப்படியே புல்லரிக்குது.” சுபா கிண்டலடிக்க,...


“ப்பா, கடமை உங்களை அழைக்குது. போங்க…” நக்கலாக அவர்களை பார்த்து சிரித்தான் திவா.


“போக்கிரி, எங்களையா கிண்டல் பண்ற? இருஇரு... உன் பொண்டாட்டிக்கு நீ கூஜா தூக்குறதை, நானும் பார்க்க தானே போறேன்.” சுபா சிரித்துக் கொண்டே சொன்னார்.


“டோன்ட் வொர்ரி சுபிம்மா. நான், அதுக்கும் என்னோட ஸ்வீட் அப்பாக்கிட்ட டிப்ஸ் கேட்டுப்பேன்,” என்று காலரை தூக்கி விட்ட மகனை பார்த்து,


‘கடவுளே… இவனை என்ன செய்யலாம்!’ என்ற தினுசில் சுபா முறைத்தார் எனில்,


“சாரி மை சன், அதெல்லாம் ஒரே ரூல் எல்லாருக்கும் சரி வராது மகனே. ட்ரையல் அண்ட் எரர்ல நீயா கண்டுக்கறது தான்,” கேலி த்வனியில் பிரபா கண்ணடித்தார்.


“ப்பா… சுபிக்கே வர்க்கவுட் ஆகுதுன்னா, கண்டிப்பா அது வின்னிங் ஃபார்முலா தான். அப்படியே இங்க சொல்லிக் கொடுங்க, புலிக் குட்டி ப்பா நான். செமையா கேட்ச் பண்ணிக்குவேன்.”


“அதில்லை திவா…” என்று பிரபா சீரியசான தொனியில் ஆரம்பிக்க,...


“எல்லா விஷயத்துலயும் பேசி பேசி அவனை குழப்பினது போதுமே. இப்போ, கண்டதையும் சொல்லி தரதை விட்டுட்டு, முதல்ல அவனுக்கு ஒரு பொண்ணைப் பாருங்க. அப்புறம் சாவகாசமா டிப்ஸ் கொடுக்கலாம்!”


யோசிக்காமல் ஒரு வேகத்தில் சுபா உளற, அதை உடனே உணர்ந்தாலும், சொன்ன சொல்லை அள்ள முடியாதல்லவா! கணவனின் முகத்தை கலக்கத்தோடு ஏறிட்டு பார்த்தார்.


பிரபாகரோ, “சொல்லு கண்ணா, உனக்கு என்ன மாதிரி பொண்ணு பார்க்கட்டும்?” மகனிடம் மிக தீவிரமாக கேட்டார்.


“ரொம்ப வாயாடி பொண்ணா பாருங்கப்பா. அப்ப தான் அவளுக்கும், அம்மாவுக்கும் டிஷ்யூம்… டிஷ்யூம்… நல்லா முட்டிக்கும். நீங்களும், நானும் ஜாலியா வேடிக்கை பார்க்கலாம்,” சிரித்துக் கொண்டே அவன் பதில் தர,


“திவாகர்!” என்று கத்தி விட்ட சுபா, “எனக்கு யாரோடவும் சண்டை வேணாங்க. என் பையனும், மருமகளும் எந்த சச்சரவும் இல்லாம சந்தோஷமா வாழணும். அது போதும் எனக்கு.” குரல் உடைய கலங்கி விட்டார்.


“ஹே சுபா… கூல் ம்மா, அவன் விளையாட்டுக்கு சொல்றான். நீ என்னடான்னா சீரியஸ் ஆகிட்ட,” மனைவியின் தோளை பிரபா ஆறுதலாக தொட, சுபாவோ சமாதானம் அடையவில்லை.


“மை ஸ்வீட் சுபிம்மா…” அன்னையை அணைத்தவன், “சும்மாடா, என் பட்டு அம்மா தான் சரியான பேக்காச்சே. சண்டை எல்லாம் ஆகாது. ஏன்னா, அதுக்கு முன்ன, நீயே என் பொண்டாட்டிக்கு விட்டுக் கொடுத்துடுவ,” என்ற மகனின் காதை திருகிய பிரபா,...


“கள்ளா… இந்த சாக்குல என் பொண்டாட்டியை என்னடா சொன்ன?”


“விடுங்கப்பா… வலிக்குது. சின்ன பையனுக்காக கலர் கலர் கனவும், தேவதையும் வெய்டிங். நான் போய் தூங்கணும்… இல்லயில்ல டூயட் பாடணும்.” என்றவன், அம்மாவின் கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தத்தை வைத்து விட்டு நகர்ந்தான்.


தங்கள் அறைக்கு வந்தவுடன், “நாளைக்கு நாள் எப்படின்னு பார்த்துட்டு, திவாவோட ஜாதகத்தை எடுக்கலாம் சுபா.” என்ற பிரபா, இரவு வணக்கம் சொல்லி விட்டு உறங்க ஆரம்பித்தார்.


அசதியால் வந்த உறக்கத்தை, அது நேரம் வரை பிரயத்தனப்பட்டு விரட்டி விட்டு, மகனின் வரவுக்காக காத்திருந்த சுபாவுக்கோ, கணவரின் பேச்சு, வயிற்றில் புளியைக் கரைக்க, இப்போது தூக்கம் ‘வருவேனா…’ என்று ஆட்டம் காட்டியது.


முடிச்சு விழும்...

© KPN NOVELS COPY PROTECT
bottom of page